வெளியே மழை பெய்து கொண்டுள்ளது. நிவார் புயலுக்கு முதல்நாள் துவங்கிய மழை. இரண்டு நாட்களாக வானம் மேகமூட்டத்துடன் இருள்படிந்து கிடக்கிறது. தெரு இருளின்சாயலினால் சாம்பல்நிறம் படிந்துள்ளது. குளிர்வீட்டினுள் பரவிச் சில்லிடுகிறது. ஒரு தட்டில் பொரியரிசி (பொரித்தஅரிசி)யுடன் நண்பர் பிரேமின் “நந்தன் நடந்த நான்காம்பாதை” வாசிக்கிறேன். அதில் இரண்டாவதுகதை “பொன்னியின்செல்வம்”. அது ஒரு குறுநாவல். 28 பக்கங்கள். ஆனால், பிரபலமான எண்ணற்ற பதிப்புகளும், எண்ணற்ற பதிப்பகங்களும் வெளியிட்ட “பொன்னியின்செல்வன்”
5 பாகங்களையும் போன்று விறுவிறுப்பு குறையாமல் எழுதப்பட்டுள்ளது.
பொன்னியின்செல்வன் நாவலைப் போலவே ஐந்து பாகங்களையும், கதைக்கு வெளியே இருகுறிப்புகளும் கொண்டது. கதையின் முதல் வரி பிரபலமான “பொன்னியின் செல்வனி”ன் ஆடிப்பெருக்கு என்கிற முதல் அத்தியாயத்தின் வரிகளைப்போல எழுதப்பட்டுள்ளது. “ஆதி அந்தமில்லாத காலவெள்ளத்தில் கற்பனை ஓடத்தில் ஏறி எம்முடன் சிறிதுநேரம் பிரயாணம் செய்யுமாறு அன்பரை அழைக்கிறோம். விநாடிக்கு ஒரு ஆண்டுவீதம் எளிதில் கடந்து இன்றைக்கு நாற்பது ஆண்டுகளுக்கு முந்தியகாலத்துக்குச் செல்வோமாக.”
அப்படித்தான் நானும் முதன் முதலாக “பொன்னியன் செல்வன்” படித்த அந்த நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு சென்றுவிட்டேன். இதேபோல் ஒரு மழைக்காலத்தில் எனது கண்மங்கிய தாத்தாவிற்கு “பொன்னியின் செல்வன்” படித்துக்காட்டிய நாட்கள். அப்பொழுது எனக்கு ஒருபன்னிரண்டு அல்லது பதிமூன்று வயது இருக்கலாம். தீவிரமாக எனது வாசிப்பை துவக்கிவைத்தவர் எனது தாத்தாதான். அவருக்காக நூலகம் செல்வது நூற்கள் எடுத்துவந்து வாசிப்பது எனத் தீவிரமாகத் துவங்கியது வாசிப்பு. இக்கதையிலும் அப்படியான ஒரு கதைசொல்லியாக நாயகன் வருகிறான். அவனுக்கும் ஒரு தாத்தா இருக்கிறார். அவனது சிறுவயது வாசிப்பும், வளர்ப்பும் கதையாடப்பட்டுள்ளது. ஆனால், அவனது கதையில் ஒரு ஊடிழைப்பிரதியாக (intertextuality) “பொன்னியின் செல்வன்” வைத்து தைக்கப்பட்டுள்ளது. அதற்குள் ஒரு இயக்கத்தின் துவக்கம் வளர்ச்சி என்பது கதையாடப்பட்டுள்ளது. “பொன்னியின் செல்வன்” என்ற வரலாற்றுப் புனை கதையின் அரசியல் மிகக் காத்திரமாக பேசப்பட்டுள்ளது. ‘மூலப்படி’ என்கிற மூலக்கதையை தேடுதல் என்பதாக அப்பிரதி ஒரு வரலாற்றுப் புனைவைக் கதையாக்குவதன் வழியாக அதையே நிகழ்காலத் தமிழ் வரலாறாக மாற்றும் வித்தையைப் புனைந்துரைக்கிறது. இதைச் சற்று விரிவாகப் புரிந்துகொள்வது அவசியம்.
வரலாறு நிகழ்கால அரசியலால் வாசிக்கப்படும் ஒன்று என்றும் இலக்கியங்கள் வரலாற்றின் இடைவெளிகளை நிரப்பக்கூடியவை என்றும் புது வரலாற்றுவாதம் என்ற நவீன திறனாய்வுக் கோட்பாடு விவரிக்கிறது. பொன்னியின் செல்வன் எழுதப்பட்ட 1950-55 காலத்தில் தஞ்சை சோழர் வரலாறு குறித்த புரிதல் ஆரம்ப நிலையானதாகவே இருந்தது. பொன்னியின் செல்வன் நாவல் ராஜராஜனை ஒரு தமிழின அடையாள பிம்பமாக மாற்றுவதையும், ஆதித்த கரிகாலன் மரணத்தை மர்மமானதாக மாற்றுவதையும் மிகச் சிறப்பாக செய்த ஒரு புனைவு. அவ்வடிப்படைகளை புனைவு வாசிப்புவழி கேள்வி கேட்கிறது பிரேமின் இக்கதை. அதன் தொடர்ச்சியாக ஆதித்த கரிகாலனின் வாரிசுகளை ஆட்சியில் அமர்த்துவது என்ற ஒரு புனைவைக் கட்டமைக்கிறது. ஆதித்தகரிகாலன் புதுச்சேரி பகுதியில் வாழ்ந்த ஒருபெண்ணுடன் கொண்ட உறவால் ஒருவாரிசை உருவாகியது குறித்த ரகசியம் “பொன்னியின் செல்வன்” நாவலின் மூலஏட்டில் இருப்பதான ஒரு ஊகத்தை மர்மப்படுத்தி நகர்கிறது இக்கதை.
ஆதித்த கரிகாலன் கொலை சோழர்கள் வரலாற்றில் ஒரு அவிழ்க்கப்படாத மர்மமுடிச்சாக உள்ளது. ஆதித்தகரிகாலனை சில பிராமணர்கள் இணைந்து கொன்றதும், அவர்கள் ராஜராஜனின் ஆட்சியில் நாடு கடத்தப்பட்டதும் கல்வெட்டுகளாக உள்ளன. அடுத்து மன்னனாக வரவேண்டிய ஆதித்தகரிகாலன் (பட்டத்து இளவரசன்), பிராமணர்களால் கொல்லப்படுவதும், அவனது தம்பி ராஜராஜன் ஆட்சிக்கு வராமல் தனது சித்தப்பன் உத்தமசோழனுக்கு அரசபதவியை விட்டுத்தந்ததும் வரலாறு என்று சொல்லப்படுகிறது. ஆதித்த கரிகாலன் ஏன் பிராமணர்களால் கொல்லப்படுகிறான் என்பதும், உத்தமசோழனின் ஆட்சியில் அக்கொலையை செய்த பிராமணர்கள் கண்டுபிடித்து தண்டிக்கப்படவில்லை என்பதும், பின்னால் ராஜராஜன் ஆட்சியில் அவர்கள் குடும்பம் மற்றும் உறவினர் பரம்பரைகளுடன் நாடுகடத்தப்படுவதும் கல்வெட்டு ஆதாரங்களாகச் சொல்லப்படுகிறது. ராஜராஜன் ஆட்சியில் அமர்ந்ததும் தனது அண்ணனின் படுகொலைக்கு பழிவாங்குவதைத் தனது முதல் பணியாகச் செய்கிறான்.
இங்கு எழும்கேள்வி, உத்தமசோழன் பதவி ஏறுவதும், அந்த பிராமணர்களை தண்டிக்காததும், அதன்பின் சோழமண்டலம் பிராமணர்கள் ஆதிக்கம் மிக்கதாக மாறுவதும், இந்த வரலாற்றில் ஒரு மர்மமானதாக, நிரப்பப்பட முடியாததாக உள்ளது. காந்தளூர்ச்சாலை எனப்படும் கேரளாவில் உள்ள ஒரு போர்ப்பயிற்சிப் பள்ளியில்தான் இந்தச் சதிகள் திட்டமிடப்பட்டதாகவும் அதில் சேர, பாண்டிய, ஈழமன்னர்கள் பங்குபெற்றதாகவும் ஒருவரலாறு சொல்லப்படுகிறது. ஆனால், கல்கியின் புனைவான பொன்னியின்செல்வனோ ராஜராஜனையும், வந்தியத்தேவனையும் முன்வைத்து ஆதித்தகரிகாலன் கொலையை மர்மமானதாக மாற்றுகிறது.
நாவலின் இடைவெளிகள் வழியாக பிராமணர்களின் அந்தக் கொலை பாதகம் மறைக்கப்படுகிறது. நந்தினி என்கிற பாத்திரத்தின் உடலை நாவலின் மொழியில் குழைத்து வர்ணமெருகேற்றி, வாசிப்பவனின் இன்புறு புனைவாக எழுதப்பட்டதால் அந்த மறைவு மறதியாக மாற்றப்படுகிறது. (பொன்னியின் செல்வன் நாவலை தற்கால சூழலில் வைத்து, அதன் அரசியலை ஆய்வது மற்றொரு பணி, ஆதித்த கரிகாலன் கொலை வழக்கிற்கும் அதன்பின் அரசேறிய அரசர்கள் ராஜராஜசோழன் உட்பட, சோழ சாம்ராஜ்யம் பிராமணர்கள் மேலாண்மையை பிரம்மதேயம், மஹாதானம், இறையிலி என நிறுவியதை பேசலாம், விரிவஞ்சிவிட்டுவிடலாம் இங்கு.) பிரேமின் கதையாடல் ஆதித்த கரிகாலன் வாரிசு என்பதாக ஒரு விளிம்புநிலை மக்கள் வரலாறாக பொன்னியின் செல்வன் நாவலின் அரசியலை தலைகீழாக்கி எடுத்துரைக்க முனைகிறது.
புரட்சிகர இயக்கமும், எதிர்ப்புரட்சிக்கான இயக்கமும் ஒரே நிறுவன வழிகளைப் பின்பற்றுவதையும் இக்கதையாடல் முன்வைக்கிறது. இந்துத்துவ பாசிசசக்திகள் தங்கள் நிறுவன வலைப்பின்னலை இன்று இந்தியாவெங்கும் மதவாத அடிப்படையில் குறுக்குமறுக்காக பின்னியுள்ளன. ஒன்றோடு ஒன்று தொடர்பற்றதாகவும், ஒன்றுமற்றதை நிரப்பிக்கொள்வதாகவும், தேவைப்படும்போது ஒன்றுபட்டு செயல்படுவதாகவும் அமைந்துள்ளது. அதற்காக அது தொன்மங்கள், புராணங்கள், நாட்டார்மரபுகள், பிராந்திய வரலாறுகள் என அனைத்தையும் தனக்கானதாக மாற்றுகிறது. இன்று ராஜராஜசோழனை ஒரு அரசியல் பிம்பமாக மாற்றும் இந்துத்துவ அரசியலிற்கான ஒரு அடிப்படை பொன்னியின் செல்வனில் உள்ளது என்பதை இக்கதையானது தனது புனைவு யதார்த்தப் பொறிவழியாக கண்டுணர்ந்து வெளிப்படுத்தியுள்ளது என்பதே முக்கியம்.
இக்கதையாடலின் மற்றொரு உத்தியாக, ‘டெம்பளார்ஸ்’ எனப்படும் இயேசுகிறிஸ்துவின் வாரிசுகளை காக்கும் கதையாடல் (மக்தலேனாவிற்கும் இயேசுவிற்கும் ஒரு வாரிசு உள்ளதாக மைக்கல் ஆஞ்சலோவின் கடைசி விருந்து ஓவியம் சிதை சங்கேதப்படுத்தப்படும் ஒரு கதையாடல்) போன்று, ஆதித்த கரிகாலனுக்கு ஒரு வாரிசு கதையை இடையில் சொல்லி, அந்த வாரிசிற்கான ஆட்சியதிகாரத்தை உருவாக்குவதான ஒரு கதையாடல் நுட்பமாக பின்னப்பட்டுள்ளது. இன்று நம்மிடம் உள்ள “பொன்னியின் செல்வன்” என்ற பிரதிமூலஏடு அல்ல என்றும் மூலப்பிரதியை தேடும் ஒருகூட்டம் தொடர்ந்து இந்திய குறிப்பாக தமிழகஅரசு அதிகாரத்தை நிர்ணயிக்கும் கூட்டமாக உள்ளது என்பது ஒரு குறியியல் யதார்த்தமாக கதையாடப்பட்டுள்ளது. அந்த மூலக்கதை உருவாக்கம் என்பதே ஒரு புனைவுக் கட்டமைப்பு என்பதும், அந்த “ஆடிப்பேரவை அடியவர் கூட்டம்” ஒரு அரசியல் இயக்கமாக மாறுவதும், அதை துவக்கியவரே தலைமறைவாகப் போவதும் என ஒரு எதிர் புரட்சிகர இயக்க நிகழ்வுகள் போல சித்தரிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசியலில் எம்ஜியார் வருகைகூட இவ்வியக்கம் உருவாக்கியது என்பது எளிமையாக கடந்து சென்று விடக்கூடிய சொற்றொடர் (வாக்கியம்) அல்ல. அதன் பின்னுள்ள தமிழ் விரோத, குரோத மனோநிலை முக்கியமானது. அது ஒரு ரகசிய சங்கமாக இயங்குவதைப் புனைவாக்கி அதன்வழியாக இன்று ரகசிய இயக்கமாக உருவாகி அதிகாரத்தைப் பெற்ற வரலாற்றிற்கான நுட்பத்தைச் சொல்வதாக உள்ளது.
இக்கதையாடல் பின்நவீன உத்திகளில் ஒன்றான ஊடிழைப்பிரதி (intertextuality) அடிப்படையில், தமிழின் பல்வேறு இலக்கியப் பிரதிகளின் வாசகங்கள் இடைக்கிடை பகடியாக எடுத்தாளப்பட்டுள்ளது. அவற்றில் ஒன்றாக “எவற்றின் நடமாடும் நிழல்கள் நாம்” (மௌனி), “பின் தொடரும் நிழலின் குரல்” (ஜெயமோகன்), “ஐம்பது கிலோ தங்கம்” (வைரமுத்து) என்பதை எடுத்துக்காட்டலாம். இவ்வரலாற்றுப் புதினத்தை சினிமாவாக்க முயல்பவர்கள் குறித்த கிண்டல்கள் நன்றாக எழுதப்பட்டுள்ளது. இன்று தமிழக இந்துத்துவ அமைப்புகள் ராஜராஜசோழனை தங்கள் மூதாதையாக்க முனைவதும், பொன்னியின் செல்வன் திரைப்படமாவதும் ஒரு இணைநிகழ்வே. இரண்டுமே இந்துத்துவ அரசியல் நனவிலியால் இயக்கப்படுபவை.
தமிழ் அரசியல் வரலாறு மூவேந்தர் மீட்டெடுப்பின் வழியாக நிகழ்ந்த திராவிட அரசியலும், அதையே உள்வாங்கிச் செரிக்கத்துடிக்கும் இந்துத்துவ அரசியலும் ராஜராஜனை தங்கள் பிம்பமாக மாற்றுவதற்கான ஒருகதையாடலாக எப்படி பொன்னியின் செல்வன் சுமார் 65 ஆண்டுகளுக்கு முன்பே எழுதப்பட்டுள்ளது என்பதை கட்டுடைக்கும் ஒரு நுண்கதையாடலே பிரேமின் “பொன்னியின் செல்வன்”. தமிழகத்தின் குறிப்பாக புதுச்சேரியைக் களமாகக்கொண்டதால், ஏரிகள், நீர்நிலைகள், குளங்கள் எப்படி சூறையாடப்பட்டது என்பதையும் இக்கதை தனது மையக் கதையாடலுடன் இணைத்து செல்கிறது. “ஏரிகள் அழிந்த மண்ணில், ஆறுகள் மறைந்த நிலத்தில், இரவு முழுக்க குடங்களை வைத்துக்கொண்டு ஊர்முழுக்க காத்திருக்கும் ஒரு நாட்டில் வாழ நேர்ந்ததைவிட இவையெல்லாம் என்ன பெருந்துயரம்.” (பக். 50) என்று கதைப்போக்கில் முன்வைத்துச் செல்கிறது.
“யாரும் எங்களிடமிருந்து தப்பமுடியாது தப்பித்து எங்கும் போய்விட முடியாது. எல்லா இடத்திலும் நாங்கள் இருப்போம். எந்தக் கட்சியிலும், எந்தக் கல்லூரியிலும், திரைப்படத்துறையில், பதிப்பகத்துறையில், ஊடகத்துறையில், மத்திய மாநில அலுவலகங்களிலும் நாங்கள் இருப்போம். நாங்கள் என்றால் நாங்களே அல்ல. அது அனைவருமாக உள்ள ஒரு மந்திரநிலை. அனைவருக்குள்ளும் கூடுபாய்ந்த அதிசயநிலை.” (பக். 40) இதற்கு விளக்கம் தேவையில்லை. இன்று இந்தியாவில் ஆட்சி மாற்றங்கள் நிகழலாம். அரசாங்கங்கள் மாறலாம். ஆனால் அரசாக, அதிகாரமாக மாறிவிட்ட ஆளும்வர்க்கம் மாறுவதில்லை. லெனின் சொன்ன அரசு என்கிற பொறியமைவின் அனைத்து அதிகார எந்திரங்களுடன் (நீதிமன்றம், போலீஸ், இராணுவம், சிறைச்சாலை), ஊடகங்களும் முழுக்க உயர்சாதிகளின் அதிகாரமயமாகி விட்டது. ஒவ்வொரு தனித்த உடலிலும் ஒருமதவாத, சாதிய, இனவாத தன்னிலைகளாக அந்த மந்திரம் உருவமைக்கப்பட்டுள்ளது. அதன் ஒரு விளைவுதான் இன்றைய பாசிச அரசுருவாக்கம். இத்தகைய நுண்ணரசியல், நுண்பாசிசத்தை விரிவாகக் காட்சியாக்கும் கதையாடல்களே இந்தச் சிறுகதைத் தொகுப்பில் உள்ள மற்ற கதைகளும். தமிழ் இலக்கியத்தில் பிரேமின் பங்களிப்பு தனித்துவமானது மட்டுமின்றி, தமிழின் தற்கால நிகழ்வாக இருந்த போக்கை மாற்றியமைத்ததும், புதிதாக வடிவமைத்ததும் குறிப்பிடப்பட வேண்டிய ஒன்று. தமிழில் புதியதொரு மலர்ச்சியை உருவாக்கிய எழுத்துகள் அவை. விளிம்புநிலை, ஒடுக்கப்பட்டவர்கள், பிறழ்ச்சி அடைந்ததாக கருதப்பட்டு ஒதுக்கப்பட்டவர்கள், பேசப்படாததாக ஒதுக்கப்பட்டவை, பேசத் தகுதியற்றதாக மௌனப்படுத்தப்பட்டவை ஆகியவற்றை முன்னுக்கு கொண்டு வந்தவை. தமிழ் நவீனத்துவம் என்று அறியப்பட்ட மேட்டிமையை உடைத்து தமிழ் எழுத்துப் பரப்பை ஜனநாயகப்படுத்தியதில் முக்கியப்பங்கு அவற்றிற்கு உண்டு.
புதிய சிந்தனைகளை, மரபுகளை, புனைவுலகை தமிழுக்கு அறிமுகப்படுத்தியதில் அவர்களின் (பிரேம்-ரமேஷ்) பங்கு குறிப்பிடத் தகுந்தது. தமிழ் இலக்கிய வரலாற்றில் நிகழ்ந்த எண்பதுகளில் தமிழவனின் அமைப்பியல் அறிமுகம் உருவாக்கிய திருப்புமுனையை அதன் உச்சத்திற்கு கொண்டு சென்றவை. கிரணம் இதழ்களின் வழியாக புனைவிலக்கியங்களான கவிதைகள் அவற்றைத் தொடர்ந்து நாடகங்கள், சிறுகதைகள், நாவல்கள், கோட்பாடு சார்ந்த கட்டுரைகள், தமிழ் மரபில் மௌனிக்கப்பட்ட பகுதிகள் குறித்த ஆய்வுகள் எனத்தமிழ் இலக்கியச் சூழலில் ஒரு பேரதிர்ச்சியையும் அதே நேரத்தில் பேரார்வத்தையும் உருவாக்கியவை. ஏற்கனவே புழங்கிய படைப்பாளர் என்கிற இருப்பை, பீடத்தை அசைத்தவை.
குறிப்பாக கிரணம் கவிதைகள் 1984-களில் வெளிவந்தபோது தமிழ் எழுத்துச் சூழல் மட்டுமல்ல, தமிழ்மொழியே ஒரு மீநுண்தளத்தில் நுழைந்தது என்பது மிகைக்கூற்றாகாது. தமிழில் பல சொற்களை உருவாக்கியும், புதுமையான அர்த்தங்களைத் திணித்து அடர்வு கூட்டியும் வெளிவந்த எழுத்துகள். ஆய்வுத்தளத்தில் பாலியல், உடலியல், வரலாறு, சமூகவியல், குற்றவியல் உள்ளிட்டவற்றை மரபான பிரதிகளில் கட்டுடைத்து, அமைப்பியல், பின்அமைப்பியல், பின்காலனியம், பின்நவீனத்துவம், பாலியல் அரசியல், பாசிச உளவியல், உடலரசியல் எனப் பலதளங்களில் விரிவாக எழுதப்பட்டு, தமிழின் ஆய்வுப்புலத்தை அகலித்தவை. தமிழ் இலக்கியப் புலத்தில், அழகியலில் வித்தியாசங்களின் பன்மைத்துவத்தை முன்வைத்ததன் வழியாக ஒரு உலகளாவிய கோட்பாட்டுப் பின்புலத்தை முன்வைத்தவை.
சுருக்கமாகச் சொன்னால், தமிழில் ஒரு புதிய மரபு உருவாக்கம் நிகழ்ந்தது. அம்மரபின் தொடர்ச்சியாக வெளிவந்திருப்பதே இந்த புதிய சிறுகதைத் தொகுப்பு. இதில் உள்ள ஏழு கதைகளும் ஏழு வகையான வடிவங்களில் எழுதிப் பார்க்கப்பட்டுள்ளன. வழக்கமான சிறுகதைப் பாணிகளில் அமையாமல் முற்றிலும் புதியவடிவங்கள், உத்திகள், புனைவுகள் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளன. சிறுகதை என்று புரிந்துகொள்ளப்பட்டுள்ள வழமையான பாணிகளில் எழுதப்படவில்லை இக்கதைகள். சில கதைகளில் கோட்பாடு, அரசியல் பத்திகள் பேச்சாக, ஆவணப்படத்தின் எழுத்தாக, திரைக்கதைக்கான வசனங்களாக பயன்படுத்தப்பட்டுள்ளன. கதைகள் சிறுசிறு தலைப்புகளாகப் பிரிக்கப்பட்டு அதன் ஒருமை ஓர்மையுடன் (பிரக்ஞையுடன்) சிதைக்கப்பட்டுள்ளது.
அதிகாரத்தின் நுண்உத்திகள், நாடகங்கள் அதன்வழியாக பாசிச அரசிற்கான கட்டுமான உருவாக்கம், மனித உரிமையாளர்களின் இடையீட்டுக் கதையாடல் என ஒரு புதிய தளத்திலான கதைகள் இவை. தொன்மம், வரலாறு, புராணம், பாணர்களின் பாடல், நாட்டார் கதைமரபு, மாயக்கதைப்புனைவு எனப் பலவடிவங்களில் எழுதப்பட்டுள்ளன. கதையாடப்பட்டுள்ள களங்களும் தமிழில் பேசப்படாத புதிய தளங்களில் இயங்குபவை. அதாவது இந்தியாவின் வெவ்வேறு பகுதிகளில் நிகழ்ந்த நிகழ்வுகள், பழங்குடிகளின் பிரச்சினைகள், புரட்சிகர இயக்கங்களின் நிகழ்வுகள், பத்திரிகைத்துறை, இந்திய அரசியலில் உருவாகியுள்ள புதியபோக்குகள், அரசு வன்முறையின் புதியவடிவங்கள், தற்கால அரசியலே ஒரு குற்றச்செயல்பாடாக (கிரிமினலாக) மாறியுள்ள தன்மை ஆகியவற்றைக் காட்சியாக்கும் கதைகள். தொகுப்பின் முதல்கதை “அல்குல் அடவி என்கிற காதல் கானகம்”. குஜராத்தில் நிகழ்ந்த மதப்படுகொலையால் அனாதையாக்கப்பட்ட பிள்ளைகளின் பெற்றோரை இழந்த கொடுங்கனவுகள் குறித்துப் பேசுகிறது இக்கதை. அதைப் பின்னணியாக்கி, காட்டில் புதையுண்ட ஒரு நாட்டார் இருபாலினக்கடவுள் (கிரேக்க ஹெர்மோபுரோடைட் போன்றது, இந்திய அர்த்தநாரிசுவரர் எனப்படும் மாதொருபாகர் அல்ல, இரண்டும் வேறானவை. ஹெர்மோபுரோடைட் மேல் கீழ்பாதியாக உள்ளது, அர்த்தநாரீஸ்வர் இடம், வலம் பாதியாக உள்ளவை) கண்டெடுக்கப்பட்டு, அதை தனது விடுதியில் வைத்துள்ள நாயகியின் மூன்றாவது காதலனான திருநம்பியொருத்தனுடன் உள்ள உறவும், காவல்துறை அந்த விடுதியை நாசப்படுத்தி, அதன் தலைவியான நாயகியை கைது செய்து, அதன்பின் அங்குள்ள குழந்தைகள் அனைவரும் மாயமாகி, அந்த திருநம்பியை காவல்துறை 3 மாதங்கள் பாலியல் வதைக்கு ஆளாக்கி, இறுதியில் அந்த விடுதித்தலைவியே தனது மூன்றாவது காதலனை கொல்வதாகச் செல்கிறது கதை.
பிரேமின் கதைகளில் பல நுண்விவரங்கள், நுண்தளத்திலான குறியீடுகள் விரவிக்கிடக்கும். ஒவ்வொரு வரிக்குள்ளும் பன்முக அர்த்தங்கள் கொண்டதான மொழிவிகசிப்புத் தன்மை ஒளிர்ந்துகொண்டே இருக்கும். அவற்றில் தற்கால அரசியலின் அதிகாரத்தின் வன்முறையான, குரூரம் நிறைந்த செயல்கள் இருக்கும். இக்கதைகள் எளிமையான மொழியில் ஆழ்ந்த பலதள விகசிப்பைக் கொண்டவை. இக்கதையின் இறுதியில் குழந்தைகள் தங்கியிருந்த விடுதியை ஒரு சாமியாரின் ஆசிரமமாக மாற்றி, மையமண்டபத்தில் பூஜைபுனஸ்காரங்களுடன் அந்த நாட்டார் இருபாலின தெய்வம் அலங்கரிக்கப்பட்டிருக்கும். இப்படியான பல நுண்குறியீடுகளைக் கொண்டதாக இக்கதைத் தளங்கள் அமைக்கப்பட்டுள்ளதே சிறப்பு. ஒரு கதைப்பாடலைப் போல எழுதப்பட்டுள்ள “இரட்டைக்கிளிகள் எழுதிய காவியம்”, இரண்டு வேறுட்ட புலங்களை, மதங்களை, கடவுளை பண்பாட்டை கிளிகள் வழியாக இணைத்துப் பேசுகிறது. இதில்வரும் மதுரையைச் சேர்ந்த குளிர்ந்த நெருப்பாள் கயல் என்ற ஒரு பெண்ணும், தில்லியைச் சேர்ந்த குங்குமச் சிவப்பாள் செம்மலர் என்ற ஒரு பெண்ணும் இருவரும் இரு இளவரசிகள் வளர்க்கும் கிளிகள் வழியாக அவர்களது உள்ளுணர்ச்சியின் பெண்மை வெளிப்படும்விதம் அழகாகச் சொல்லப்பட்டுள்ளது. கதை கிளிகள் பற்றியது, ஆனால், கிளிகள் உணர்த்துவதோ இருவேறு பெண்ணுடலின் வேட்கைகள். மதுரை மீனாட்சியின் கையில் ஒரு கிளி உண்டு என்பதை நினைவுபடுத்தும் இக்கதை, அந்த மீனாட்சி கூடல்நகரைக் காக்கும் ஒருநாட்டார் தேவதை என்பதை உள்ளுரையாகக் கொண்டு கதைவாசிப்பை நகர்த்துகிறது. மீன் என்ற சின்னம் நெய்தல் நில பரதவ மீன் குலத்துக் குமரி என்பதை உட்கிடையாகக் காட்டுகிறது. மதுரையைச் சேர்ந்தவள் தமிழ்நாட்டார் மரபிலும், தில்லியைச் சேர்ந்தவள் முகலாய இஸ்லாமிய மரபிலும் எடுத்துரைக்கப்படுகிறார்கள். இரண்டு கிளிகளும் இடம்மாறி இருவரிடமும் கலவிக் கொள்வதாகச் செல்லும் கதையின் குறியீட்டுமொழி வேறுபல பொருள் கொள்வதற்கான சாத்தியங்களை உருவாக்குகிறது.
மாய யதார்த்தப் புனைவுபோல எழுதப்பட்டுள்ள “யோகினிக் கோட்டம்” ஒரு உச்ச அழகியலில் திளைப்பதாக எழுதப்பட்டுள்ளது. குலதெய்வ வழிபாடு என்கிற குலக்குடிகளின் வழிபாட்டைக் கொண்ட கதை என்றாலும், அதற்குள் தமிழ்சித்தர்களின் சரித்திரமும், பெண் என்ற வடிவத்தில் ஆண் என்ற இறையை அடைவதாக பக்திமார்க்க = குறிப்பாக வைணவம், சூஃபியிசம் குறித்த புரிதலோடு வாசிப்பை நகர்த்தும் கதை. பெண் ஒரு வேட்கைப் பெருவெளி என்பதை நுண்கதையாடலாக இழைத்துச் செல்கிறது கதை. காடு, உறைதல், உடனழிதல், நாயகிபாவம் கொள்ளல் என்று பானலினமாதல் அரசியல் கதையாக எழுதப்பட்டுள்ளது. சக்தி போதமார்க்கம், சந்ததிப்புராணம் என்ற சொற்கள் வழியாக இக்கதை ஒரு மொழிவிளையாட்டாக மாறுகிறது. அதாவது அடர்ந்த மொழியில் எழுதிக்காட்டப்பட்ட ஒரு ஊடிழைப்பிரதியாக மாறும் நாட்டார்தொன்மக் கதையாடலாக உள்ளது. மொழி விளையாட்டு என்பது ஒருகுறிப்பிட்ட துறைசார்ந்த சொற்களாக, பயன் பாடாக இருப்பில் உள்ள மொழியைக் கொண்டு எழுதப்படுவது எனலாம். ஒவ்வொரு அறிவுத்துறையும், கதையாடலும், கதைத்தலும், எடுத்துரைப்பும் அந்த துறைக்கான தனிச்சிறப்பான குழூஉக்குறித் தன்மை கொண்ட மொழிக் கிடங்கைக் கொண்டிருக்கும். அதே மொழியைப் பயன்படுத்தி, அதற்கு இணையான ஒரு பிரதியை எழுதிக்காட்டுவதே இலக்கியப்பனுவல்களில் மொழிவிளையாட்டு என்பது. அவ்வகையில் இக்கதை ஒரு நாட்டார் கதைப்பாடலாக தொன்மங்களின் மொழிக்கட்டமைப்பில் எழுதிப்பார்க்கப்பட்டுள்ளது.
இதில் வரும் யோகினிக்கோட்டம் ஒருவகையில் தமிழ் ஆதிக்குடிகளின் நிலம் என்ற குறிப்பீட்டைக் கொண்டிருக்கிறது. எல்லா மொழியும் குறிப்பான்களால் ஆனது என்கிறார் லக்கான். இதன் பொருள் அந்தந்த சமூகம் குறிப்பீட்டை அந்த குறிப்பானுடன் இணைத்துப் பொருள் கொண்டுவிடும். இதைத் தெளிவுபடுத்திக்கொள்ள, சங்ககாலக் கவிதைகள் வெறும் சொற்கள்தான், அதாவது குறிப்பான்களே (சொன்மைகளே). அதற்கான குறிப்பீடுகளை (பொருண்மைகளை) உருவாக்கி நிலைநிறுத்துவதே அதன் உரைகள். உரைவழியாக அதன் குறிப்பீடுகள் மாறிக்கொண்டே இருக்கும். அதனால் அதன் பொருள்கொள்தலும் மாறிக்கொண்டே இருக்கும். அதனால்தான் சொற்களை மிதக்கும் குறிப்பான்கள் என்கிறது பின்னமைப்பியல் சிந்தனைகள்.
இச்சிறுகதை தமிழ்தொன்மங்கள், தமிழ் சித்தர் மரபிலும், ஆதிக்கம் வகிக்கும் சைவ மரபிலும் உள்ள அகத்தியன் (சுனை), திருமூலன் (கிணறு) ஆகியோர்களின் மொழியில் புனைவான ஓர் மாய யதார்த்த உலகை கட்டமைக்கிறது. இந்த சுனையிலும், கிணற்றிலும் எண்ணற்ற பெண்கள் விழுந்து மறைந்ததாகச் சொல்கிறது. இக்கதை இப்படியான பல குறியீட்டு வாசிப்புகள் வழியாக எழுதப்பட்டுள்ளது. கதையை நாம் பிரித்துக்கோர்த்துக் கொள்வதற்கான சாத்தியப்பாட்டைக் கொண்டுள்ளது. புதுமைப்பித்தனின் “கபாடபுர”த்தில் எப்படி தமிழ்மூவேந்தர் வரலாறு ஒரு தொன்மமாக உள்ளேவைத்துத் தைக்கப்பட்டதோ, அப்படியானதொரு முயற்சியை இக்கதையில் காணமுடிகிறது. கதையில் ஆண் பெண்ணாகவும், பெண் ஆணாகவும் ஒருநாள் முழுக்க மாறுதல் என்பதே அந்த யோகினிக்கோட்டத்தின் முக்கியவினை. கதையின் அடுத்த பகுதி மூவரின் பயணத்தை மேற்சொன்ன சடங்குகள் வழியாக நிகழ்த்துகிறது. ஓர் ஆவணப்படத்திற்காக செல்கிறார்கள். சத்தீஸ்கர் போராளிகளுக்கு அடைக்கலம் தந்தார் எனக் கைதுசெய்து 3 ஆண்டுகள் சிறையில் கழித்தாரா, ஆவணப் படம் எடுக்கும் யாழினி மற்றும் கபிலா என்கிற மூவர் புறப்படுகின்றனர். பல அடுக்குகளாகக் கதை விரிந்து செல்கிறது. யோகினிக்கோட்டம் வனத்தையும், அந்தக் கோட்டம் என்கிற வழிபடுதலத்தையும் விவரிக்கும் பகுதிகள் அற்புதமானதொரு உணர்வை ஏற்படுத்தக்கூடியதாக உள்ளது. அங்கு சென்று அந்தக் கோட்டத்தைப் படம்பிடித்த அவர்களது திரைப்படம் ‘யோகினிக்கோட்டம்’ என்ற பெயரில் திரையிடப்படுகிறது. புரிதலுக்கும், தர்க்கத்திற்கும் அப்பால் நிகழும் ஒரு கதை, ஆண்மை, பெண்மை என்பதன் நிகழ்த்து நிலை பாலின (gender performativity) அரசியலாக விரிகிறது.
தொகுப்பில் உள்ள கதைகளில் இந்தியாவில் நிகழும் அனைத்து போராட்டங்களும் ஏதோ ஒருவகையில் இடம்பெற்றுள்ளன என்பதுடன், அப்போராட்டங்கள் குறித்த அரசியலும் உள்ளுரையாகச் சொல்லப்பட்டுவிடுகிறது. “தண்டகாரண்யத்தில் ஒரு ஒற்றையடிப்பாதை” வனவாசிகளின் போராட்டம் குறித்த கதை என்றாலும், அதற்குள் ராமாயணம் என்கிற ஆண்மையவாத, மதவாத, இந்துத்துவ வளர்ச்சி குறித்த அரசியலுக்கு மாற்றாக சீதாயணம் என்று சொல்லக்கூடியவகையில் ஒரு புதிய வனவாசிகளின் சீதளம்மா என்கிறதாய் தெய்வக்கதையாடல் எதிர்க்கதையாடலாக வைக்கப்படுகிறது. ‘300 ராமாயணங்கள்’ என்ற ஏ.கே. ராமானுஜத்தின் கட்டுரையைப் பல்கலைக்கழகப் பாடதிட்டத்தில் இருந்து நீக்கியவர்களின் உளவுத்துறை அரசியல் இதில் நுட்பமாக கதையாடப்படுகிறது. வனம் அழிந்த வரலாறே ராமாயணம், மகாபாரதக் கதைகளின் உள்ளார்ந்துள்ள மனிதார்த்த மானுடவியல் பார்வை என்பதை நிகழ்த்தும் ஒரு கதையாடல் இது. முழு ராமயணக்கதையும் சீதா என்கிற வனதேவதையை மையமாக வைத்து மீளவாசிக்கப்படுகிறது இக்கதையில். நாம் அறிந்த ராமாயணம், கீமாயணம், லங்கேஷ்வரன் உள்ளிட்ட பல கதைகளுக்கு இணையான ஒரு சீதாயணக் கதையாடல் இக்கதையில் உள்ளது.
“விருப்பக்குறிகள்” என்ற கதை தமிழ் சீரிய இலக்கியம் குறித்த ஒருபகடியை பிரான்ஸ் ஃபனான் அவர்களின் வன்முறை குறித்த ஒருவிளக்கஉரையுடன் துவங்குகிறது. இக்கதையை வாசிப்பவர்கள் தமிழ் இலக்கியச் சூழல் எப்படிச் சில பீடங்களை உருவாக்கி அதன்வழியாக இலக்கியரசனை என்ற ஒன்றை உருவாக்கி, அரசதிகாரத்தின் வன்முறைக்கும், படுகொலைக்கும் துணைக்காரணியாக அமைகிறது என்பதை உள்ளுறையாகக்கொண்டு அ-நேர்க்கோட்டுப் பாணியில் பல குரல்களில் எழுதப்பட்டுள்ளது. புதுமைப்பித்தனின் “இலக்கிய மம்மநாயனார் புராணம்” எழுதிப் பல ஆண்டுகள் ஆகியும், தமிழில் இலக்கிய மம்மாக்களின் தொல்லைகள் பெருகியே உள்ளன. புதுமைப்பித்தன் கூறும் “இலக்கிய மம்மா, ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்ற பழைய பண்பாடும், பிறர் பர்ஸ் எமதே என்ற பெரு நோக்கும் நம் சொல் என்றும் பொய்யே என்ற இலட்சியமும் பெற்ற கருவிலே திருவுடைய பெரியார்.” என்ற இலக்கணம் வழுவாத லக்கணம் கண்ட ஒருகூட்டம் தமிழில் “பிறர் பர்ஸ் எமதே”என்ற இலக்கியச் சேவையை ஆற்றிக்கொண்டிருப்பதைப் பகடி செய்வதே இக்கதை. என்றாலும், இக்கதைக்குள்ளும் மனிதவாதை பற்றியும், பெண்கள் மீதான காமத்தை நுகர்வாக்கி விற்கும் வன்முறையை விளக்கும் குறிப்பீடு உள்ளது. கதை முழக்க இலக்கிய மம்மாக்களின் பாணியிலேயே ஊடிழைப்பிரதியாக எழுதப்பட்டுள்ளது என்பதே இதன் நுண்ணரசியல்.
இறுதிக்கதை, “நந்தன் நடந்த நான்காம் பாதை”. ஒரு குறுநாவலைப் போல எழுதப்பட்ட நீண்ட கதை. இந்தியாவில் நடக்கும் மனித உரிமைமீறல், பழங்குடி அழிப்பு, தலித்துகள் மீதான வன்முறை, தேர்தல்களால் அதிகாரம்பெற்ற அச்சமூட்டும் வலதுசாரி பாசிசம், குண்டர் படைகளை உருவாக்கும் பாசிசம் எப்படி விடுதிமாணவர்கள், சிறைக்கைதிகளை பயன்படுத்துகிறது என்பதை எல்லாம் விவரிக்கும் இக்கதை நந்தன் நடக்க வேண்டியது ஏற்கெனவே உள்ள மூன்று பாதைகளில் அல்ல நான்காவதாக ஒரு புதியதொரு அரசியல் பாதை என்பதை முன்வைப்பதாக உள்ளது.
நகர்மயமயாக்கல், வளர்ச்சித் திட்டம் என்பதன் பின்னுள்ள முதலாண்மை அரசியல் இதன் உள்ளுரைத்தலாக உள்ளது. நந்தன் வரலாற்றை இன்றைய புதிய அரசியலுக்குள் வைத்து தலித் ஓர்மையுடன் கதையாடப்பட்டுள்ள கதை. நந்தன் ஆதிக்கத்திற்கு எதிரான தனது உரிமைப் போரை நிகழ்த்திய ஒரு மிதக்கும் குறிப்பானாக வரலாற்றில் பிறந்து அழிக்கப்படும் தொடர் வரலாற்றின் தடம் இதில் உள்மறைந்து, உருமறைந்து வெளிப்படுகிறது. நந்தன்களை எரித்த தீ, ஆண்டைகளை நோக்கித் திரும்பும் காலத்திற்கான அரசியல் பாதையே நந்தன் நடந்த நடக்கின்ற, நடக்கவேண்டிய நான்காம்பாதை.
இத்தொகுப்பின் பெரும்பாலான கதை உருக்கள் (கதைக்காக கட்டமைக்கப்பட்டவர்கள்) தலித்துகள், பழங்குடிகள், இடதுசாரிகள் மற்றும் ஒடுக்கப்பட்டவர்கள், ஒதுக்கப்பட்டவர்கள். கதைக் களனும் முற்றிலும் பழகிய நிலப்பரப்புகள் இல்லாத ஒரு போராட்டவெளி அல்லது போராட்டக்களங்கள், பழங்குடிவாழ்வெளிகள், காடுகள், கல்லூரிவிடுதிகள், தனியர்களாக கூடும் அறைகள். கதைகளுக்குள் வரும் பாத்திரங்கள் அனைத்தும் அறிவுத்துறையாளர்கள், மேட்டிமையாளர்கள், மனித உரிமைப் போராளிகள். அனைவரும் பாசிச எதிர்ப்பரசியல் கொண்டவர்கள். பாசிச உளவுத்துறை மற்றும் பாசிச கருத்தியலை உருவாக்கும் பேராசிரியர்கள். குறிப்பாக உலகமயமாதலுக்குப் பின் உருவானதொரு இளந்தலைமுறையினர். ஆவணப்படம் எடுப்பவர்கள் குறித்தும், திரையாக்கம் குறித்தும் பெரும்பாலான கதைகளில் பேசப்படுகிறது. அதே போல் எல்லாகதைகளும் மனிதஉரிமை, மனித விடுதலைக் குறித்த போராட்டங்களை உள்ளடக்கியதாகஉள்ளது. ஒருவகையான மேட்டிமை’ (எலைட்டிசம்) தன்மை கொண்டதாக இன்றைய அரசியல் எதிர்ப்பியக்கங்கள் உருவாகியுள்ளதை தடம் காட்டுவதாக உள்ளது. உலக மயமாதலில் அரசியல், எதிர்ப்பு, புரட்சி, விடுதலை, உரிமை உள்ளிட்ட அனைத்தும் நுகர்வுப்பண்டங்களாக மாற்றப்பட்டுள்ளதையும், அவற்றை உணர்ந்து ஓர்மையுடன் போராடுபவர்களைக் கொன்றொழிப்பதும், சிறையில் தள்ளுவதும் என்ற அடக்குமுறை அமைப்பாக இன்றைய சூழல் மாற்றப்பட்டிருப்பதை உணர்த்துவதாக இக்கதைகள் உள்ளன. உலகமயமாகிவரும் பாசிச அரசுகளிடம் மனித யத்தனங்கள் என்னவாக அமையமுடியும்? என்ற கேள்வியை இக்கதைகள் முன்வைக்கின்றன.
இன்று நாம் மார்கஸ், அம்பேத்கர், பெரியார் சிந்தனைகளை, கோட்பாடுகளை, கருத்தியலை உள்ளடக்கிய புதியதொரு அரசியல் பாதைநோக்கி நடக்கவேண்டும் என்பதை உணர்த்துவதாக, அதற்கான மொழி அழகியலைக் கொண்டதாக உள்ளன பிரேமின் “நந்தன் நடந்த நான்காம் பாதை” என்ற தொகுப்பில் உள்ள சிறுகதைகள்.
l
previous post