சூழல் மாசிற்கு முதன்மைக் காரணமாகக் கருதப்படும் பிளாஸ்டிக் கழிவுகளை பயனுள்ள விதத்தில் பயன்படுத்தமுடியும் என்பதை இளம் மாணவர் உள்ளத்தில் பதியவைக்கும் முயற்சியில் இப்படியும் ஒரு பள்ளிக்கூடம் இந்தியாவில் செயல்பட்டுவருகிறது. சமூக மாற்றத்திற்கான விதைகளை மாணவரிடையில் விதைத்துவரும் இந்தப் பள்ளிக்கூடத்தின் செயல்கள் உலகிற்கே ஒரு முன் உதாரணமாகத் திகழ்கிறது.
வடகிழக்கு இந்தியாவில் அஸ்ஸாம் மாநிலத்தில் இயங்கிவரும் இந்தப் பள்ளிக்கூடம் ஒரு ஊரின் தலையெழுத்தையே மாற்றியமைத்துள்ளது. பமோஹி (Pamohi) என்ற கிராமத்தில் அமைந்துள்ள அக்ஷார் (Akshar school) பள்ளிக்குச் செல்லும் மாணவர்கள் ஒவ்வொருநாள் காலையிலும், தங்களுடன் பிளாஸ்டிக் கழிவுகள் அடங்கிய பையை எடுத்துச்செல்லும் காட்சியை காணலாம். வினோதமான இந்தக் காட்சிக்குப் பின்னால் மகத்தான ஒரு சேவை ஆர்ப்பாட்டங்கள் இல்லாமல் அமைதியாக நடந்துவருகிறது.
இங்கு கல்வி கற்கும் மாணவர் ஒவ்வொருவரும் ஒரு வாரத்திற்கு 20 பிளாஸ்டிக் கழிவுகளை கல்விக் கட்டணத்திற்குப் பதில் கொடுக்கவேண்டும். இக்கழிவுகளை மாணவர்கள் அவர்களின் வீடு மற்றும் சுற்றுவட்டாரப்பகுதியில் இருந்து பள்ளிக்கூடத்திற்குக் கொண்டுவந்து கொடுக்கின்றனர். இவ்வாறு கொண்டு வந்து தரப்படும் பிளாஸ்டிக் கழிவுகளுக்குப் பதில் அவர்களுக்கு கல்வி வழங்கப்படுகிறது.
32 வயதான மாசின் மஹ்டர் (Mazin Mukhtar) மற்றும் 30 வயதான அவரது மனைவி பார்மிட்டா சர்மா (Parmita Sarma) ஆகியோர் இந்தப் பள்ளிக்கூடத்தைத் தோற்றுவித்தனர். இந்தப் பள்ளி இப்போது மாணவர்களை சூழல் காக்கும் போராளிகளாக மாற்றியுள்ளது. உள்ளூர் மக்கள் பிளாஸ்டிக் கழிவுகளை எரிப்பதை இது குறைத்துள்ளது. கிராமத்தினர் பிளாஸ்டிக் கழிவுகளை எரிப்பதை வாடிக்கையாகக் கொண்டிருந்தனர். இதனால், குழந்தைகள் வகுப்பறையில் இருமல், மூச்சிரைப்பு, சுவாசக் கோளாறுகளால் பெரிதும் அவதிப்பட்டனர்.
இந்தக் குழந்தைகளின் பெற்றோரில் பெரும்பாலோரும் உள்ளூரில் இருக்கும் கல் குவாரிகளில் வேலை பார்க்கும் கூலித் தொழிலாளிகள். இவர்களின் ஒரு நாள் வருமானம் வெறும் ரூ.150 மட்டுமே. இந்தக் குவாரிகளில் வேலை பார்த்த வயது வந்த பெரிய மாணவர்கள் கல்வியின் முக்கியத்துவம் உணர்த்தப்பட்டதால், பள்ளிக்கு வரத் தொடங்கினர்.
ஆரம்பத்தில், மாணவர்களிடம் அவர்களின் வீடுகளில் இருக்கும் பிளாஸ்டிக் கழிவுகளை அவர்களுடன் பள்ளிப்பேருந்தில் கொடுத்தனுப்புமாறு சொல்லப்பட்டது. பெற்றோர் எவரும் அதற்கு செவி கொடுக்கவில்லை. வீட்டிற்கு வெளியில் கொண்டுவந்து கழிவுகளை எரிப்பதை அவர்கள் விரும்பினர். இதற்கு தீர்வு காண விரும்பிய சர்மா அவர்கள் மனதில் உதித்த செயல்திட்டமே இப்போது இந்த ஊரையே மாற்றி அமைத்துள்ளது.
பள்ளியில் படிக்கும் மாணவர் ஒவ்வொருவரும் வார இறுதியில் குறைந்தது 20 பிளாஸ்டிக் கழிவுகளைக் கொண்டுவந்து தந்தால் கல்விக் கட்டணம் எதுவும் வசூலிக்கப்படமாட்டாது என்று அறிவிக்கப்பட்டது. புதுமையான இந்த மாற்றுக் கல்வி கட்டண முறை உடனடியாக ஊர் மக்களின் அமோக வரவேற்பைப் பெற்றது. பெற்றோர் அனைவரும் இனி பிளாஸ்டிக் கழிவுகளை வீட்டில் எரிப்பதில்லை என்ற உறுதியை எடுத்துக்கொண்டனர்.
சமூகத்துடனான நல்லுறவை வளர்க்கும்விதத்தில் இந்தப் பள்ளி, மாணவர்களுக்கு தொழிற்கல்வியையும் வழங்குகிறது. சூரிய மின் பலகைகளைப் பொருத்துவது, தச்சுவேலை, மின்னணுப் பொருட்களைப் பழுது நீக்குவது போன்ற தொழில்களில் மாணவர்களுக்கு பயிற்சிகள் அளிக்கப்படுகிறது. இப்பள்ளியின் தோற்றுநர் மாசின் மஹ்ட்டர் ஒரு ஆப்பிரிக்க அமெரிக்கர். பள்ளிகள் தொடர்பான ஒரு ஆய்விற்காக 2013 ல் நியூயார்க்கில் இருந்து மஹ்ட்டர் அஸ்ஸாம் இந்தியாவிற்கு வந்தார்.
கௌஹாத்தி பல்கலைக்கழகத்தில் சமூக சேவைகள் துறையில் பயின்றுகொண்டிருந்த சர்மாவைச் சந்தித்தார். இருவரும் திருமணம் புரிந்துகொண்டனர். இல்லறவாழ்வில் இணைந்த இந்தத் தம்பதிகள் 2016 ல் அக்ஷார் பள்ளியை இங்கு தொடங்கினர். தொண்டுள்ளம் படைத்த நல்லவர்களிடம் இருந்து நிதி திரட்டி பள்ளியை நடத்திவருகின்றனர். ஆரம்பத்தில் 20 மாணவர்களுடன் தொடங்கப்பட்ட இந்தப் பள்ளிக்கூடம் இப்போது ஏழு ஆசிரியர்களுடன், நான்கு முதல் பதினைந்து வயதுவரை உள்ள 110 மாணவர்களைக்கொண்டு செயல்பட்டுவருகிறது.
சுற்றுவட்டார ஊர்களில் இருந்து இந்தப் பள்ளியில் சேர்வதற்கு மேலும் நூறு மாணவர்கள் காத்திருக்கின்றனர். மாணவர்களின் தனி மனித ஆளுமையை வளர்க்கும் முயற்சியில் பல்வேறு பணிகளைச் செய்துவரும் இந்தப் பள்ளி அவர்களின் சுற்றுப்புறம் பற்றிய விழிப்புணர்வையும் ஏற்படுத்திவருவதாக சர்மா கூறுகிறார். ஒவ்வொரு வார இறுதியிலும் ஒவ்வொரு மாணவரிடம் இருந்தும் 25 பைகள் வரை பிளாஸ்டிக் கழிவுகள் சேகரிக்கப்படுகிறது. ஒவ்வொரு மாதமும் 10,000 கழிவுப்பொருட்கள் இவ்வாறு சேகரிக்கப்படுகிறது.
இவை சூழலிற்கு நட்புடைய கற்களாக மாற்றப்படுகின்றன. கட்டிட வேலைகளுக்கு இவை பயன்படுத்திக் கொள்ளப்படுகிறது. இதனால், இப்போது இந்த ஊரில் பிளாஸ்டிக்குகளை எரிப்பதால் ஏற்படும் கரும்புகை மேகங்கள் இல்லை. பிளாஸ்டிக் குப்பைகளால் உருவான நச்சுப்புகை இன்றி இந்த சிறிய கிராமம் தூய்மையான காற்று உள்ள இடமாக மாறியுள்ளது. சூழலிற்கு பெரும் நன்மையைச் செய்வதுடன் மக்களின் ஆரோக்கியம் மேம்படவும் இது பெரிதும் உதவியுள்ளது.
குழந்தைத் தொழிலாளர் முறையை ஒழிப்பதற்கான விழிப்புணர்வும் மாணவரிடையில் ஏற்படுத்தப்படுகிறது. பெரிய மாணவர்கள் சிறிய வகுப்புகளில் பயிலும் மாணவர்களுக்குப் பாடம் சொல்லித்தரும் முறையும் நடைமுறைப்படுத்தப்படுகிறது. இதற்கு சம்பளமாக பொம்மை கரன்சி நோட்டுகள் அவர்களுக்கு வழங்கப்படுகின்றன. இந்தக் கரன்சி நோட்டுகளைப் பயன்படுத்தி மாணவர்கள் உள்ளூர் கடைகளில் அவர்களுக்குத் தேவையான தின்பண்டங்கள், ஆடைகள், பொம்மைகள் மற்றும் காலணிகளை வாங்கிக் கொள்கின்றனர்.
இந்த மாணவர்களின் கல்வித் தரம் மேம்படுவதற்கு ஏற்ப அவர்களுக்கு வழங்கப்படும் சம்பளமும் அதிகரிக்கப்படுகிறது. “கற்றல் மூலம் ஈட்டுதல்” (Learn more to earn more) என்ற கொள்கைக்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டாக இந்தத் திட்டம் விளங்குகிறது. பொருளாதாரரீதியில் இந்தத் திட்டம் உள்ளூர் சமூகத்தினரிடம் புதிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த மூன்று ஆண்டுகளில், இங்கு பயிலும் மாணவர் எவரும் இடைநிற்கவில்லை.
பெரிய வகுப்பு மாணவர்கள் அவர்களுக்கு ஒதுக்கப்படும் இந்த சிறப்புப் பாடம் எடுக்கும் முறையின் மூலம் மாதம் ஒன்றிற்கு $60 முதல் 70 வரை சம்பாதிப்பதாக மஹ்ட்டர் கூறியுள்ளார். பல மாணவர்களும் தாங்கள் சம்பாதித்ததைக் கொண்டு மொபைல் போன்களைக்கூட வாங்கி நல்லமுறையில் தங்களை முன்னேற்றிக் கொள்ளப் பயன்படுத்துகின்றனர். இவர்களின் பெற்றோர் பலரிடமும் இன்னும் இது போல ஒன்று இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
கொரோனா தொற்று காலகட்டத்தில் தனிமனிதப் பாதுகாப்புக் கருவிகளுடன் (PPE Personal Protection Equipment) வகுப்புகள் முழுவதும் பள்ளிக்கு வெளியே நடைபெற்றன. பொதுமுடக்கத்தின்போது, பள்ளிக்கூடம் உணவு நிவாரண மையமாக மாற்றப்பட்டது. பெரிய மாணவர்கள் தன்னார்வத்துடன் உணவு சமைத்து, தேவைப்படுவோரை அறிந்து, கௌஹாத்தி பகுதியில் உள்ள சேரி, கிராமங்களில் வாழும் 1500 பேருக்கு உணவு வழங்கினர். சமூக சேவை என்பது வாழ்வின் ஒரு அங்கம் என்பதை மாணவர்கள் இதன் மூலம் உணர்ந்தனர்.
பிளாஸ்டிக் கழிவுகள் உடல்நலத்திற்கு கேடு ஏற்படுத்துவதுடன், சூழலிற்கும் சீர்கேடானது என்பதை இந்தப் பள்ளியில் பயிலும் எல்லா மாணவர்களும் இப்போது புரிந்துகொண்டுள்ளனர். தங்கள் பெற்றோரிடம் பிளாஸ்டிக் கழிவுகளால் ஏற்படும் தீமைகளைப் பற்றி இவர்கள் பேசுகின்றனர். அவர்களிடமும் விழிப்புணர்வை ஏற்படுத்துவதாக, ஆசிரியர் அக்கன்ஷா டுயாரா (Akansha Duarah) கூறுகிறார்.
10 வயதான ஜ்யோதி (Jyoti) மற்றும் 15 வயதான ஜுனாபி (Junafi) என்ற இரு மாணவர்களின் தாயார் சாம்ப்போ பரோ (Sompa Baro) முன்பு குழந்தைகள் படித்துக் கொண்டிருந்த பள்ளியில் கல்விக் கட்டணம் மிக அதிகமாக வசூலிக்கப்பட்டதால், தங்களால் அதைச் செலுத்த முடியவில்லை. இந்தப் பள்ளி கட்டணம் எதுவும் இல்லாமல் தங்கள் குழந்தைகளை ஏற்றுக்கொண்டதுடன், இப்போது இந்தக் கல்விக்கூடம் அவர்கள் வாழ்வில் வழிகாட்டும் கலங்கரைவிளக்கமாகத் திகழ்கிறது என்று கூறுகிறார்.
இங்கு வழங்கப்படும் கல்வி மாணவர்களின் சிந்திக்கும் மனப்போக்கில் பெரும் புரட்சியை ஏற்படுத்தியுள்ளது. வாழ்வில் நேர்மறை எண்ணத்துடன் எல்லாவற்றையும் அணுகும் பக்குவத்தை உருவாக்கியுள்ளது. சமுதாயத்தால் அவமதிக்கப்பட்டு, தவறாகப் பயன்படுத்தப்பட்ட இந்த ஏழைக் குழந்தைகள் இங்கு வந்து சேர்ந்தபோது, அவர்கள் மனம் முழுவதும் கோபம், எதிர்க்கும் மனப்பான்மையுடன் இருந்தனர். புதிய திறன்களைக் கற்கத் தொடங்கியபின், இந்த மாணவர்கள் நம்பிக்கையோடு எதையும் நேர்மறை எண்ணங்களுடன் பார்க்கும் வலிமை மிக்க மனநிலையைப் பெற்றுள்ளனர்.
இது இவர்களின் வாழ்வையே மாற்றி அமைத்துள்ளது. மூன்று ஆண்டுகளுக்கு முன், பேசத் தெரியாமல் இங்கு வந்து சேர்ந்த ஒரு பதின்மூன்று வயது மாணவி இப்போது மிகச் சிறப்பாகக் கல்வி கற்பதுடன், ஓய்வுநேரத்தில் ஊரில் இருக்கும் வேரொரு ஆங்கில பள்ளியில் படிக்கும் இரண்டு குழந்தைகளுக்குப் பாடம் சொல்லித் தருகிறாள். இங்கு சேகரிக்கப்படும் பிளாஸ்டிக் கழிவுகள் குப்பிகளில் அடைக்கப்பட்டு சூழல் நட்புடைய கற்களாக மாற்றப்படுகிறது. இவை இந்தப் பகுதியில் நடைபெறும் கட்டிட நிர்மாண வேலைகளுக்குப் பயன்படுத்தப்படுகிறது.
மஹ்ட்டர், சர்மா ஆகியோரின் இந்த அக்ஷார் செயல்திட்டத்தை கௌஹாத்தியில் உள்ள ஐந்து அரசுப் பள்ளிகளில் விரிவுபடுத்த அஸ்ஸாம் கல்வித்துறை அழைப்பு விடுத்துள்ளது. அம்மாநில அரசின் கல்வித்துறையின் நல்லெண்ணத் தூதுவர்களாக இந்தத் தம்பதியினரை அரசு அங்கீகரித்துள்ளது. சூழலுடன் இணைந்த கல்வித் திட்டத்தின் அற்புதமான வெற்றியை இது எடுத்துக் காட்டுவதாக அமைந்துள்ளது. படிப்படியாக இந்தத் திட்டம் அஸ்ஸாம் மாநில அரசுப் பள்ளிகள் அனைத்திலும் செயல்படுத்தப்பட உள்ளது.
ஊர் மக்களின் முழுமையான ஒத்துழைப்பும், ஆதரவும் இந்தத் தம்பதியினருக்கு உள்ளது. குழந்தைகள் இங்கு வரும்போது ஒவ்வொரு நாளும் ஒவ்வொன்றைப் புதிதாகக் கற்கின்றனர். பள்ளிக்கூடம் வருவது அவர்களின் மனதிற்கு மிகப் பிடித்தமான ஒன்றாக உள்ளது. ஞாயிற்றுக்கிழமைகளில் கூட அவர்கள் பள்ளிக்கு வர விரும்புகின்றனர்.
காலநிலை மாற்றம், புவி வெப்பமயமாதல் என்று பெரிதாகப் பேசி, விளம்பரத்திற்காக செய்யப்படும் வெற்று செயல்களுக்கு இடையில், ஒரு சமூகத்தின் மாற்றத்திற்கு உதவிவரும் இந்த அக்ஷார் பள்ளியையும், அதை வழிநடத்திவரும் தம்பதியினரையும் மனதார வாழ்த்துவோம்.
** ** **
அவ்வப்போது
சூரியனுக்கே விளக்கு கொடுப்பது போல, பனிப்பாறைகளின் நாட்டில் பனிப்பாறைகள் மனிதச் செயல்பாடுகளால் ஏற்படும் சூழல் பாதிப்பால் உருகிக் காணாமல் போய்க்கொண்டிருக்கின்றன. அண்டார்க்டிக், ஆர்க்டிக் பனிப்பிரதேசங்களில் ஏற்கெனவே இயற்கைச் சீரழிவால் பனிப்பாறைகள் உருகி, ஓசோன் மண்டலத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு விரிசல்கள் ஏற்பட்டு, உலகை அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது.
இந்நிலையில், பூமியின் வடகோடியில் தன் பெயரிலேயே பனிப்பாறைகளைக் கொண்ட பனிப்பாறைகளின் நாடான ஐஸ்லாந்தில் சூழல் மாசினால் ஏற்பட்டுவரும் சீரழிவைப் பற்றி ஆராய்ந்து விஞ்ஞானிகள் கவலை தெரிவிக்கின்றனர். ஐஸ்லாந்தில் உள்ள பிரேசமெர்க்கர்ஜர்-கல் (Breisamerkurjr-kull) என்ற பனிப்பாறை ஐரோப்பாவிலேயே மிகப் பெரியது.
ஆராய்ச்சியைத் தொடக்கிவைத்த படம்
புகைப்படக்கலைஞர் காலின் பேக்ஸ்ட்டர் (Colin Baxter) 1989ல் ஒரு விடுமுறைச் சுற்றுலாவிற்கு தன் குடும்பத்துடன் சென்றபோது இந்தப் பனிப்பாறையைக் கண்டார். புகைப்படம் எடுத்தார். இதுவே மறக்கப்பட்ட இந்தப் பனிப்பாறையின் அன்றைய நிலையை, இன்றைய கதையை வெளிக்கொணரக் காரணமானது.
முப்பதாண்டுகளுக்கு முன் அவர் இந்தப் பனிப்பாறையை, அதனைச் சுற்றியிருந்த பனி படர்ந்த பகுதிகளை படமெடுத்தார். முப்பதாண்டுகளுக்குப் பிறகு ஒரு நாள் அவரது மகன் 2020 ல் டாக்டர் கிரன் பேக்ஸ்ட்டர் (Dr Kieran Baxter) இதே இடத்திற்குச் சென்றார். 2020ல் கிரன் இந்தப் பனிப்பாறையை படம் எடுத்து ஆய்வு செய்தபோது அதிர்ச்சியுற்றார்.
1989-2020 முப்பதாண்டுகளின் கதை
1989, 2020 ஆகிய ஆண்டுகளில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தீவிரமாக ஆராயப்பட்டன. இதுபற்றி இப்போது அதிர்ச்சியூட்டும் உண்மைகள் வெளிவந்துள்ளன. அச்சமூட்டும்வகையில் இந்தப் பனிப்பாறை உருகியிருப்பது தெரியவந்துள்ளது. இதன் 400 ச.கி.மீ பரப்பு இன்று சூழல் சீர்கேட்டினால் கரைந்து உருகிக் காணாமல் போயுள்ளது.
உருகிய பனிப்பாறை ஐல் ஆப் வொயிட் (Isle of Wight) என்ற பகுதிக்குச் சமமானது என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். பனிப்பாறைப் பகுதிகளை வந்து காண்பது தன் வாழ்வின் ஒரு அங்கமாக இருந்தது என்று டாக்டர் கிரன் கூறுகிறார். சூழலைப் பாதுகாப்பதில் இவை அளவற்ற சேவை செய்வதாக கிரன் கூறுகிறார்.
சத்தமில்லாமல் இந்தப் பாறைகள் பூமியின் வெப்பநிலை, ஓசோன் மண்டலம், நீடித்த நிலையான மனிதகுலத்தின் வளர்ச்சி போன்றவற்றில் முக்கியப்பங்கு வகிப்பதாக டண்டீ (Dundee) பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணிபுரியும் டாக்டர் கிரன் கூறுகிறார். கடந்த சில பத்தாண்டுகளில் இந்த ஒற்றைப் பனிப்பாறைக்கு ஏற்பட்டுள்ள மோசமான நிலை சூழலியல் விஞ்ஞானிகளிடையில் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
பனிப்பாறைகள் சொல்லும் சேதிகள்
மேலோட்டமாக பனிப்பாறைகளின் மேற்பரப்பைப் பார்த்து எந்த மாற்றத்தையும் கண்டறியமுடியாது. ஆனால், உள்ளுக்குள் இவற்றில் ஏற்படும் மாற்றங்கள் ஒட்டுமொத்த உலகையே பாதிக்கக்கூடியவை. உலகளவில் பனிப்பாறைகள் பூமியின் சூழலிற்கு ஏற்பட்டுவரும் மாற்றத்தை அளக்க உதவும் சான்றுகளாக உள்ளன.
புவி வெப்பமடைந்துகொண்டிருக்கிறது என்பதை இவை ஆணித்தரமாக சொல்கின்றன. 1980ல் இருந்து சராசரியாக 24 மில்லியன் டன்கள் அளவிற்கு பனிப்பாறைகள் உருகியுள்ளதாக அமெரிக்க விஞ்ஞானிகள் கூறுகின்றனர். உலகம் முழுவதும் உள்ள பனிப்பாறைகளின் இழப்பைத் துல்லியமாகக் கணக்கிடுவது கடினம் என்று விஞ்ஞானிகள் கருதுகின்றனர். இவை உருகப் பல்வேறு காரணிகள் உள்ளதே இதற்குக் காரணம்.
பனிப்பாறைகளின் அமைவிடம், அவை அமைந்திருக்கும் நிலப்பரப்பின் அமைப்பு, அதன் உயரம், அந்த இடத்தின் தீர்க்கரேகை, பனியின் அடர்வு, கனம், காற்று, சூரிய ஒளி போன்ற காரணிகளின் தாக்கம் போன்றவற்றால் பனிப்பாறைகள் பாதிக்கப்படுகின்றன.
இவற்றின் வயதும் இடத்திற்கு இடம் வேறுபடுகின்றது. சில பனிப்பாறைகள் சில நூற்றாண்டுகளுக்கு முன் தோன்றியவை மட்டுமே. வேறு சில நூற்றுக்கணக்கான ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இந்த பூமியில் இருந்துவருபவை.
இழந்ததும், இழந்துகொண்டிருப்பதும்
இந்தப் பனிப்பாறைகள் உருகுவதால் சூழல் பற்றிய முக்கிய சான்றுகள் அழிவிற்கு உள்ளாகின்றன. கடந்தகாலத்தின் மதிப்புமிக்க காலநிலை குறித்த செய்திகள் இதனால் கிடைக்காமல் போகிறது. ஒப்பீட்டுமுறையில் அன்று இருந்த நிலையுடன் இன்று உள்ள நிலையை ஒப்பிட்டு ஆராய்ச்சி செய்யமுடியாமல் போகிறது.
1989-2020 படங்களில் இருந்து இந்தப் பனிப்பாறையின் நுனி மற்றும் அடிப்பகுதிகள் ஆராயப்பட்டன.
விஞ்ஞானிகள் இந்தப் பாறைகளின் மையப்பகுதி வரை துளையிட்டு பனிக்கட்டித் துகள்களையும் கட்டிகளையும் எடுத்து ஆராய்கின்றனர்.
பாறையின் மையத்தில் இருந்து எடுக்கப்படும் இந்தப் பகுதிகள் கடந்த பல்வேறு ஆண்டுகளில், பல்வேறு சமயங்களில் அந்த இடத்திலும், ஒட்டுமொத்த பூமியிலும் நிகழ்ந்த காலநிலை மாற்றம் தொடர்பான முக்கிய சம்பவங்களைத் தெளிவாக எடுத்துச்சொல்கின்றன. இவற்றை ஆராய்வதன் மூலம் ஒவ்வொரு ஆண்டிலும் ஏற்பட்ட மாற்றங்களைத் தெளிவாகக் கண்டறியமுடியும்.
இதன் மூலம் பனிக்கட்டியின் உட்பகுதியில் அதனால் பிடித்துவைக்கப்பட்டுள்ள துகளில் நிரம்பியுள்ள காற்றுக்குமிழ்கள் போன்றவற்றைப் பயன்படுத்தி விஞ்ஞானிகள் கடந்தகால வாயு மண்டலத்தின் இயல்புகள், அப்போது காற்றில் கரைந்திருந்த கார்பன் – டை ஆக்சைடின் அளவு, வெப்பநிலையில் காணப்பட்ட வேறுபாடுகள் (temperature variations) மற்றும் அந்தக் காலகட்டத்தில் வளர்ந்த தாவரங்கள் போன்ற பல்வேறு தகவல்களைப் பெறமுடியும்.
இத்தகைய புள்ளிவிவரங்கள் கடந்தகாலத்தில் நிலவிய காலநிலை பற்றிய தெளிவான கருத்தை உருவாக்க விஞ்ஞானிகளுக்கு உதவுகிறது. கடந்தகாலத்தில் இருந்து நிகழ்காலம் வரை காலநிலையில் ஏற்பட்ட மாற்றங்கள், வருங்காலத்தில் அது எவ்வாறு அமையும் என்று அறிய இந்த விவரங்கள் பெரும் துணைபுரிகின்றன. இத்தகைய பனிப்பாறைகளின் இழப்பு மனிதகுலத்தைப் பொறுத்தவரை இரட்டை இழப்பாக அமைவதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
பாறைகள் இருந்த இடங்களில் அவை உருகுவது, குடிநீர் ஆதாரம் அழிவது, வேளாண்மைக்கான நீர்ப்பாசன மூலங்கள் அழிவது, குறிப்பிட்ட அந்த இடத்தில் நிலவிய சூழல் மண்டலத்தின் அழிவு போன்ற இழப்புகளுடன் உலகம் என்றென்றைக்கும் விலைமதிப்பிடமுடியாத காலநிலை மாற்றத்திற்கான அறிவியல் மற்றும் வரலாற்றுரீதியிலான சான்றையும் இழக்கநேரிடுகிறது.
அவ்வப்போது (Now& then)
“அவ்வப்போது நாம் வாழும் கோள்” (Our planet Now & then) என்பது வெப்பமடைந்துவரும் பூமியில் நிகழும் காலநிலை மாற்றம் பற்றிய மாதாந்திர நிகழ்வு. இந்நிகழ்வு 2021 டிசம்பரில் இங்கிலாந்தில் உள்ள கிளாஸ்கோ நகரில் நடைபெறவுள்ள காலநிலை குறித்த உலக உச்சிமாநாட்டை இலட்சியமாகக் கொண்டு நடத்தப்படும் தொடர் ஆய்வுகளின் ஒரு பகுதியாக விளங்குகிறது.
மாற்றம் இல்லாமல் என்றும் நிகழ்வது மாற்றம் மட்டுமே. நேற்றிருந்தது இன்றில்லை. இன்றிருப்பது நாளை இருக்கப்போவதும் இல்லை. ஆனால், என்றும் இருக்கவேண்டிய அன்னை பூமியை, அதன் இயல்பான காலநிலையை மனிதன் தன் செயல்களால் மாற்றமடையச் செய்வது அவனது அழிவிற்கு மட்டுமல்லாமல், பூமியின் அழிவிற்கே வழிவகுத்துவிடும் என்று விஞ்ஞானிகள் அஞ்சுகின்றனர். இந்த அச்சம் நடவாமல் இருக்க, சூழலிற்கு நட்புடையவர்களாக வாழ முயல்வோம்.
l
previous post