1968 – டிசம்பர் 25
மனித மாமிசத்தின் தீய்ந்த வாசத்தை
சுமந்தபடியே நகர்ந்துவிட்டது
ஐம்பத்துரெண்டு ஆண்டுகள்…
.
ஆயுள் முழுக்க
ஆண்டைகள் நிலத்தில்
குனிந்து உழைப்பதும்
கும்பிட்டு நிற்பதும்
கைகளையேந்தி கஞ்சி குடிப்பதுமே
வரமென போதிக்கப்பட்டு
சுய சிந்தனை சூல்கொள்ளாதபடி
தீண்டாமை பெரும் பள்ளத்தில்
திணிக்கப்பட்டவர்கள்…
.
ஆதிக்க நிலக்கிழார்களின்
சாதியாணவத்தால் சரிக்கப்பட்டு
ஒழுகும் கண்ணீரும் ஒடுங்கிய வயிறுமாய்
சுவையற்ற சுமைகளை
சூடிக்கொண்டவர்கள்…
இந்தஅப்பாவிக் கூட்டத்தின்
குரலுயர்ந்த நாளொன்றில்
அவர்கள் மேனிகளில்
பண்ணையாதிக்கத்தின் தீ படர்ந்தபோது
பூட்டிய அறைக்குள் அன்று
பீறிட்ட அலறல் சத்தம்
தஞ்சையின் கீழ்வெண்மணி கிராமம் தாண்டி
தீய்ந்த ஓலமாய் திசைகளெங்கும்
மரணத்தின் வாடையை எழுதியது…
அரை வயிற்றுச் கூழுக்காய்
அடுத்த வேளை குத்தித் தின்ன
கைப்பிடி நெல்லும் மிச்சமில்லை…
மூச்சுத்திணற உழைத்தும்
மூன்று வேளை உணவென்பது
ஆயுளுக்கும் வாய்த்ததில்லை
ஆண்டைகளின் தினவுக்கும் திமிருக்கும்
அவர்களை அடிக்கவும் உரிமையுண்டு
அடிமைப் பெண்களை
புணரவும் உரிமையுண்டு
என எழுதி வைத்ததை எதிர்க்கமுடியாமல்
பண்ணைகளின் பலிபீடத்தில்
பேச்சற்று கிடந்த காலமது..
நிலத்தின் குழந்தைகள்
தரித்திரத்தின் புதல்வர்களாய் –
கையை வெட்டிக்கொடு என்றால்
தலை தரவும் தயாராய் இருக்கவேண்டுமென்பதே
அவர்களின் எழுதப்படாத விதி
.
பஞ்ச சீலக்கொள்கைகளோ
பசுமைப்புரட்சிகளோ
சுதந்திரத்தின் வாசனையோ
அவர்களின் கூரைகளுக்குள் எட்டவேயில்லை.
வினோபாவின் பூமிதான இயக்கம்
நடைமுறையில் பூத்துச்சிரிப்பதாய்
பரப்புரை செய்தபோதும்
பண்ணையடிமை முறையே எங்கும்
திண்ணையிட்டமர்ந்திருந்தது…
வயிற்றுப்பசிக்கு
விடைதேடும் விதமாய்
விவசாய அமைப்புகள்
விடியலின் கதவுகளைத் திறந்தது…
மரணத்தின் கொட்டடிக்குள் அடைந்து
வாழ்வை புதைத்தவர்களை மீட்க
செங்கொடிச் சங்கம்
தொட்டுத் தூக்கத் தோள்கொடுத்தது…
சாமானியர் கூட்டம்
வறுமையை வெல்ல
சங்கமாய் இணைந்தனர்…
அத்துக்கூலிகளின் உதட்டில்
முதன்முதலாய் உட்காரத்தொடங்கியது
உரிமையின் முழக்கம்
இருள் விலகிய நம்பிக்கையின் வெளிச்சம்
முகங்களில் முகாமிட்டமர்ந்தது…
கோரிக்கையொன்றை
பரிசீலிக்கும்படி பண்ணையிடம்
பரிவுடன் பகர்ந்தனர்
அறுவடைக் கூலியில்
குத்தினால் கால்பகுதியாய் கரைந்துபோகும்
அரைப்படி நெல்லை உயர்த்தித் தந்தால்
ஆயுளுக்கும் போதுமென்றே
நிலம் கொண்ட ஆண்டைகளிடம்
நீதியின் விண்ணப்பம் …
எதிர் திசையிலோ…..
கோரிக்கைளுக்கெதிராக
கோபங்களே உற்பத்தியானது
பண்ணையாதிக்க ஆணவம்
அடிமைக்குரலுக்கெதிராய்
ஆவேசமாய் கிளர்ந்தது…
உருவிய வாளுடன்
உக்கிரமடைந்தது சாதிக் கெளரவம்…
இழி சாதி நாய்களிடம் எதிர் கேள்வியா…
அதை தலை நிமிர்த்தி
குரலுயர்த்தி கேட்டதைத்
தாங்கிக்கொள்ள முடியவில்லை…
பண்ணைகளின் அதிகாரம்
கூட்டமாய் திரண்டது…
கொடுத்ததை குனிந்து வாங்கி
கும்பிட்ட கூட்டம் எதிர்த்து குரலுயர்த்துவதா…?
எதிரில் நிற்கவே அஞ்சிய கூட்டம்
நிமிர்ந்து பார்ப்பதா…?
ஆதிக்க கூட்டத்தின் மூளைக்குள்
அடிமைகளுக்கெதிராக
ஆலகாலம் பாயத்தொடங்கியது
முன்வைத்த கோரிக்கை
ஆண்டைகளின் மூளையை
மேலும் ஊனமாக்கியது
விடக்கூடாது… விடவே கூடாது….
அரைப் படி நெல்
கூடுதல் கூலி கேட்ட கூட்டத்தை
பண்ணையார் படை
ஆயுதங்கள் கொண்டு துரத்தியது…
வளைக்கப்பட்ட கிராமத்தில்
துப்பாக்கியும் வெட்டறிவாளும்
தூக்கி வருபவர்களின் முன்
என்ன செய்துவிட முடியும்..
ஏதிலிகள் கூட்டம்…
அள்ளிய பிள்ளைகளோடு
அடைக்கலம் தேடிக்
கிடைத்த இடத்தில் பதுங்கிக்கொள்ள
ஓடிய கூட்டம்
அதோ.. ஒரு குடிசை…
ராமையாவின் குடிசை…
தற்காலிகமாய் தற்காத்துக்கொள்ள
அச்சத்தை விழுங்கிக்கொண்டு
மொத்தமாய் அதற்குள் பதுங்கிக்கொண்டது
அபலைக்கூட்டம்…
அந்த ஒற்றைக் குடிசைக்குள்
ஒளிந்துகொண்டவர் மட்டும்
நாற்பத்து நான்கு பேர்…
அடிக்கும் அடியில் இனி எழவே கூடாது
தேடியலையும் கொலைவெறிக்கூட்டம்
அறிந்துகொண்டது
ஒட்டுமொத்தமாய்
ஒரே குடிசைக்குள் ஒளிந்திருப்பதை…
பதுங்கிய கூட்டம் வெளியேற முடியாதபடி
குடிசைக் கதவை வெளித்தாழிட்டு
வேகமாய் மூடியது
குடிசைக்குள்ளிருந்து
குலை நடுங்கும் குரல்களில்
மரணத்தின் அச்சம்…
பதினெட்டு குழந்தைகள்
இறுபது பெண்கள் மிச்சம் ஆண்கள்
சின்னக்குடிசையில் சிக்கிக்கொண்ட.
நாற்பத்து நான்கு மனித உயிர்களையும்
தாழிட்டு அடைத்து.
அதிகாரத் திமிரின் ஆத்திரம் முழுதையும்
தீப்பந்தமாய் கொளுத்தி
குடிசையின் மீது வீசியெறிந்தது…
அதன் பின்.
பற்றியெறியும் குடிசைக்குள்ளிருந்து
மனிதக்குரல்களின் மரண ஓலம்…
நெருப்பின் நாவுகள் உயர உயர
எரியும் குடிசைக்கு வெளியே நின்று
கீழ்ச்சாதித் திமிரை அடக்கி விட்டதாய்
ஆணவத்துடன் ஆண்டைகள் கூட்டம்
ரசித்து மகிழ்ந்தது…
ஒவ்வொரு உடலாய் ஒடிந்து விழ
ஒவ்வொரு உயிராய் சுருண்டு மடிய
குடிசைக்குள்ளிருந்து
வெடிக்கும் மூங்கிலுடன்
தேகங்கள் வெடித்து ஓசைகளின்றி
கருகி அடங்குகிறது…
கீழ்வெண்மணி கிராமத்தின் காற்று அன்று
தன் மேனியெங்கும்
கருகிய பிணங்களின் தீய்ந்த வாசத்தை
தேசத்தின் முகத்தில் வீசியடித்தது.
அதிகாரத்தை நிறுவிவிட்ட நிறைவில்
கருகிய புகை நடுவில்
கம்பீரமாய் நடந்து சென்றது
ஆண்டைகள் கூட்டம்…
1968 ல் அரங்கேறிய அந்த
பச்சைப்படுகொலைக்கெதிராக
ஐந்து ஆண்டுகள் ஆடப்பட்ட வழக்கின் முடிவில்
உலகம் வியக்கும் உன்னதத் தீர்ப்பொன்று
எழுதப்பட்டது.
அதிகாரத்தின் எதிரே
அரைப்படி நெல் கூடுதலாய் கேட்டதற்கு
குழந்தைகளையும் பெண்களையும்
குடிசைக்குள் அடைத்து
கொளுத்திக்கொன்றதாய்
குற்றம் சாட்டப்பட்ட
நூற்றியாறு பேரையும்
குற்றமற்றவர்கள் என்று
நீதியின் துலாக்கோல்
பண்ணையார்கள் பக்கமே
பலமாய் சாய்க்கப்பட்டது…
உழைப்புக்கூலிக்கான உரிமை முழக்கம்
வெறும் சாதி மோதலாய்ச்
சாயம் பூசப்பட்டது…
நீதி பீடம் தனது தீர்ப்பில்
அடுத்ததாய் ஒன்றையும் அறிவித்தது
அது…
அதிக நிலங்களையும்
அதிக சொத்துக்களையும் வைத்திருக்கும்
பெரிய மனிதர்கள்
இந்தக் கொலைகளைச் செய்திருக்க
வாய்ப்பில்லையென்று…