வாசிப்பு என்ன செய்யும். புத்தக வாசிப்புதான் என்னை உருவாக்கியது. என் ஆசிரியர் மீனாட்சி சுந்தரம் பிள்ளை கொடுத்த கொடை என்கிறார் தமிழ் தாத்தா உ.வே.சாமிநாத அய்யர். சங்க இலக்கியத்தின் பிதாமகன் குறிஞ்சிப்பாட்டின் மகுடம், கபிலன் இன்பத்தை நான்காக பிரித்து நூல்களை பயின்று பகுத்து உணர்தல் யாவற்றும் தலை என அகத்திணையில் பாடுகிறான். அமெரிக்க மிச்சிகன் பல்கலைக்கழகத்திலே பொறிக்கப்பட்டுள்ளதே கற்றது கை மண் அளவு; கல்லாதது உலகளவு எனும் ஔவை வாசகம். அது உணர்த்துவதும் வாசிப்பு அல்லவா.
‘கண்மூடி வழக்கமெல்லாம் மண்மூடிப் போக’ செய்வது வாசிப்பே என வள்ளலார் உரைத்ததை மறக்க முடியுமா? ஒன்பதாம் வகுப்போடு பள்ளி வாழ்வை இழந்தும் குறள் முதல் நன்னூல் வரை 164 இலக்கியங்களை நெட்டுருச் செய்து கற்றதால் வேதாசலம், மறைமலை அடிகளாய் மிளிர்ந்ததை வரலாறு மறக்குமா, வறுமையிலும் வளமான நூல்களை நாடிய தேசிய கவி பாரதியும் தன் இறுதி மூச்சுவரை வாசிப்பை நேசித்த பேரறிஞர் அண்ணாவும் இருந்து சுவாசித்த வாசிப்பு எனும் சுவாசிப்பு காற்று வீணாகுமா? வாசிப்பு சாதாரண மனிதர்களை பெரிய போராட்டங்களுக்கு தயார் செய்கிறது என்றான் மாவீரன் பகத்சிங். சுய-கட்டுப்பாடு ஒழுக்கம் மற்றும் மன வலிமை இவை வாசிப்பின் பரிசு என தன் சீடர்களுக்கு எழுதினார் வீரத் துறவி விவேகானந்தர். பிறர் நலம் நாடும் உணர்வை… தன் கண் எதிரே நடக்கும் அவலத்தை தட்டிக் கேட்க ஒருவரை தூண்டுவது நல் வாசிப்பே என ஜெயகாந்தன் முழங்கினார். ‘தேடுதல்’, ‘கனவு காணுதல்’ ‘இலக்கை அடைதல்’ இவையெல்லாம் புத்தக வாசிப்பில் சாத்தியமாகும் என அடுத்த தலைமுறையை அப்துல்கலாம் பதப்படுத்துகிறார். எனவே வாசிப்பை சவாலாக அறிவித்து புத்தாண்டை தொடங்க உங்களை அழைக்கிறோம். 2021ஆம் ஆண்டில் உங்கள் சவால் இலக்கை உருவாக்கிக் கொண்டு அதனை அடைகின்ற வாசிப்பு மாவீரர்களை கவுரவிக்கும் முதல் முயற்சியை பல லட்சம் வாசகர்களிடம் கொண்டு செல்வோம். பள்ளி மாணவர்கள், கல்லூரி மாணவர்கள், பொது என மூன்று பிரிவுகளில் அதற்காக பரிசுகளையும் அறிவித்து இருக்கிறோம். இன்று நோய் தொற்றின் காரணமாக பள்ளிகள் மூடியுள்ளன. கல்லூரிகள் சில மணி நேர ஆன்-லைன் சங்கதியாக மாறியுள்ளன. இந்த சூழலில் வாசிப்பின் மகத்துவத்தை இளைய தலைமுறைக்கு அறிமுகம் செய்ய இதை பிரமாண்ட வாய்ப்பாக நாம் மாற்றுவோம். ‘அற்றம் காக்கும் கருவி’ என்று அறிவை வள்ளுவர் வகைப்படுத்தினார். அறிவு வளமே சமுதாய வளம். ஒரு சமூகத்தின் புத்தக வாசிப்புதான் அறிவு வளத்தை மேம்படுத்தும் புரட்சிகர செயல்பாடாக இருக்கும். அந்த விடியலை நோக்கிய நம் பயணத்தை தொடங்குவோம். 2021ஆம் ஆண்டை வாசிப்பு சாதனை ஆண்டாக வெற்றி கொள்ள வைப்போம். – ஆசிரியர் குழு