ஊற்றெடுத்து
நதியுடன் கலந்துவிட
பழைய சந்தர்ப்பமொன்று
மீண்டும் வந்துவிடாதா என்று
மலையுச்சிகள்
வானத்தை நோக்குகின்றன…
நன்னீருடன் நனைந்து புரள
நாளொன்று வாய்க்காதா என
வறண்ட படுகைகளை நோக்கி
கடலின் கண்கள்
அலையடித்து அழுகின்றன…
அடையாளமற்று
முகஞ்சிதைந்த தொழு நோயாளியாய்
படுத்துக்கொண்டிருக்கிறது
அந்த ஆறு…
குருதியோட்டம் வற்றி
உதடுகள் உலர்ந்து
பிரக்ஞையற்று கிடக்கும்
வயோதிகன்போல்
மெல்ல மரணித்துக்கொண்டிருக்கும்
அந்த நதியினை
உடல் சிதைத்து
மணற்சதையறுத்து…
குழிகள் பறித்து எலும்புகள் துருத்த
அருங்காட்சியகத்தின்
வெற்றுக்கூடென நிறுத்திய நிலையில்
அதை
நிரந்தரமாய் அடக்கம் செய்ய
ஆணைகள் பிறந்திட
சொற்ப நாட்களில்
நதியின் நடுவே முளைத்தெழக்கூடும்
புதிதாய் சில
கார்ப்பரேட் கட்டிடங்கள்…!
ஆற்று நீருக்கு எப்போதும்
அழுக்கு வண்ணத்தையே
தீட்டுகிறாள்
சலவைத்தொழிலாளியின்
மகள்…
முன்பெல்லாம் தண்ணீரை
சுமந்து சென்றது ஆறு
இப்போது
ஆற்றையே சுமந்து செல்கிறது
லாரிகள்…