ஸ்ரீநிவாஸ் பிரபு
சோவியத் யூனியனின் பெரும் புகழ் பெற்ற படைப்பாளிகளில் முதன்மையானவர் அந்தோன் செகாவ்.
சோவியத் யூனியனின் தென்திசை நகரான தகன்ரோவில் பிறந்த செகாவ் (1860 – 1904), தனது இருபதாவது வயதில் மாஸ்கோ பல்கலைக்கழகத்தில் மருத்துவத் துறையில் பயின்று மருத்துவரானார். 1880களில் சோவியத் ரஷ்யாவில் ஜார் மன்னனின் சர்வாதிகாரம் ஓங்கியிருந்தது. சுதந்திரச் சிந்தனை நசுக்கப்பட்டுக் கிடந்த காலத்தில், செகாவின் கதைகள் மக்களுக்கு பெரிய ஆறுதலாக இருந்தது. அவர் கதைகளில் நகைச்சுவையும், நையாண்டியும், அங்கதமும் நிறம்பியிருந்தது. அதிகார வர்க்கத்தின் படாடோபத்தையும், ஆடம்பரப் பகட்டுகளையும் எள்ளி நகையாடியது. செகாவ் எதையும் பலத்த குரலில் ஓங்கிச் சொல்லவில்லை. உண்மையும், மென்மையும் இழையோடிய உறுதியான குரலில், படிப்பவர் மனதில் தைக்கும் படியான சொல்லாடல்களின் வழியாகவே பேசியவராக இருந்தார்.
தமிழ்ச் சமூகத்தில் செகாவ் நன்கு அறிமுகமானவர். அவரது பல கதைகள் உதாரணங்களாக மேற்கோள் காட்டப் பட்டிருக்கிறது. செகாவ் குறித்து எஸ்.ராமகிருஷ்ணன் ‘செகாவின் மீது பனி பெய்கிறது, செகாவ் வாழ்கிறார்‘ என்று இரண்டு நூல்களை எழுதியிருக்கிறார். ரஷ்ய இலக்கியங்களில் செகாவ் படைத்தளித்த மகத்தான படைப்புகளை தீவிர வாசிப்பில் இருக்கும் யாரும் தவற விட்டிருக்க முடியாது. அடிக்கடி படித்து அசை போடடு நினைவு கூறுவதாகவே இருக்கும்.
செகாவின் வாழ்க்கை அவருடைய கதை மாந்தருடையதைப் போலவே வாழ்வின் சோகம் நிறைந்ததாகவே இருக்கிறது. அதே நேரம், அவரது படைப்பாற்றல் மிளிரும் ஆன்மா,எதிர்வரப்போகும் உலகம் குறித்தான அற்புதக் கனவுகளால் நிரம்பி இருக்கிறது.
அந்தோன் செகாவ் சிறுகதைகளும், குறுநாவல்களும் என்ற நூலை பாரதி புத்தகலாயம் வெளியிட்டிருக்கிறது. இத்தொகுப்பில் செகாவ் எழுதியவற்றிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட சிறுகதைகளும், ‘ஆறாவது வார்டு‘ என்ற குறுநாவலையும் உள்ளடக்கி இருக்கிறது. செகாவின் பெரும்பான்மையான கதைகளை ரா.கிருஷ்ணய்யா மொழி பெயர்த்திருக்கிறார். அவருக்குப் பின் ச.சுப்பாராவ் மொழி பெயர்த்திருக்கிறார். செகாவ் என்ற மகத்தான படைப்பாளிக்கு எளிய அஞ்சலியாக இருக்கிறது இத்தொகுப்பு.
தொகுப்பில் முதலில் இடம் பிடித்திருப்பது வான்கா சிறுகதை. புதைமிதி தயாரிப்பாளரிடம் வேலை பயிலுவதற்காக விடப்பட்ட ஒன்பது வயதுச் சிறுவன் வான்கா ழூக்கவ்வின் பார்வையில் விரியும் கதை. வான்கா தனது அன்பிற்குரிய தாத்தா கனஸ்தன்தீன் மக்காரிச்சிற்கு எழுதும் கடிதத்தின் சாரம் தான் கதை. முதலாளியிடம் வான்கா படும் கஷ்டங்களையும், துயரங்களையும் அவன் பார்வையில் விவரிக்கறான். முதல்நாள் இரவு முதலாளியின் குழந்தையை ஆட்டிக் கொண்டிருக்கையில் உறங்கிப் போனதற்காக முதலாளி அடி நொறுக்கிவிட்டதை வலியும் விவரிக்கிறான் காலையில் ரொட்டியும், மதியத்திற்கு கஞ்சியும், இரவில் மீண்டும் ரொட்டி மட்டுமே தருகிறார்கள். முட்டையோ முட்டைக்கோஸ் சூப்போ எதுவுமே தருவதல்லை என்று விசனப்படுபவன் தன்னை வந்து அழைத்துச் செல்லும் படி எழுதுகிறான். கடிதத்தை உறையிலிட்டு தபால் பெட்டியில் போடுகிறான். கடிதத்தை பெட்டியில் போட்டபின் ஒரு மணிநேரத்திற்கு எல்லாம் அவனுள் இனிய நம்பிக்கைக இதமாய்த் தட்டிக் கொடுத்து அவனைத் தூங்க வைக்கிறது. அவனது கடிதத்தை தாத்தா படிப்பதாக அவனுக்கு கனவு வரிகிறது, செகாவ் இந்தக் கதையை 1886ல எழுதியிருக்கிறார். ஏதுமற்றவர்களின் எளிய செயலும், அது நம்பிக்கை கொள்ளும் விதத்தையும் யதார்த்த அழகுடன் விவரிக்கிறது கதை.
செகாவ் கடைசியாக எழுதிய சிறுகதை – மணமகள் (1903). இதில் நாதியா என்ற பெண்ணின் கதையைச் சொல்கிறார். கதையின் ஆரம்பத்தில் பொழுது புலர்வதற்கு சிறிது நேரம் முன்னதாக நாதியா விழித்திருந்து தோட்த்தினுள் பார்க்கிறாள். ‘அடர்த்தியான வெண்ணிற மூடுபனி செந்நீல மலர்களை முக்காடிட்டு மூட விரும்புவது போல் அவற்றை நோக்கிப் படர்ந்து வந்தது‘ என ரசிப்பவள், கொள்கை, குறிக்கோளற்ற தனது அசமந்த வாழ்க்கை மாறவோ முடிவுறவோ போவதில்லை என எண்ணுகிறாள். அப்போது அடர்த்தியான அதே வெண்ணிற மூடுபனி நாதியாவின் ஆன்மாவை முக்காடிட்டு மூடுவது போல் தோன்றுகிறது நமக்கு. பின் பொழுது புலருகிறது. ‘சன்னலுக்கு அடியிலும் தோட்டத்திலும் புள்ளினங்கள் கூச்சலிட்டன. தோட்டத்திலிருந்து மூடுபனி அகன்றுவிட்டது. சூரியக்கதிரின் பொன் ஒளி சுற்றிலும் பிரகாசிக்க எல்லாம் புன்னகை புரிந்தன‘ என்ற யோசிக்கிறாள். இயற்கைக் காட்சியில் மட்டும் மாற்றம் ஏற்படவில்லை, நாதியாவினது ஆன்மாவில் ஏற்படும் பெரிய மாற்றமாகவும், தனக்குள்ளான பிணைப்புகள் யாவும் முற்றாகவும், முடிவாகவும் துண்டித்துக் கொள்வதென்ற தீர்மானத்துக்கு வந்துவிடுபவளாக இருப்பதையுமே உணர்த்துகிறது. செகாவின் கதையில் தலைவியின் ஆன்மாவில் ஏற்படும் மாற்றம், அவரது கதைகள் அனைத்தையும் ஓரளவுக்கு தீர்மானிப்பதாகச் சொல்லலாம்.
செகாவ் எதையும் பலத்த குரலில் பிரகடனம் செய்வதில்லை.படிப்பவருக்கு நேரடியாய் அறிவுறுத்த முற்படுவதும் இல்லை. இருந்தாலும் அவரது கதைகளைப் படிக்கும் வாசகர் தம் காதுகளுக்குள் ஒரு குரல் ஒலித்திருப்பதைக் கேட்க முடியும். ‘மனிதனாய் வாழ அச்சப்படுகிறீர்களே, ஏன் இது? மேல் நிலையில் இருப்பவர் என்றதும் போற்றுகிறீர்கள். கீழ் நிலையில் இருப்பவர் என்றதும் அலட்சியப்படுத்துகிறீர்களே, அழகா இது? உண்மையான இன்பம் பணத்திலும், பட்டம் பதவியிலும் அடங்கியிருப்பதாகவா நினைக்கிறீர்கள்? ஏன் தான் பதவி ஏணியிலே உயர ஏறிக் கொண்டே இருக்க வேண்டுமெனத் துடிக்கிறீர்களோ? என்று மெல்லிய குரலில் அடிப்படை மனிதத்துவத்தை முன்வைத்தபடியே சொல்லிச் செல்கிறார்.
செகாவ் இளைஞராய் இருந்தபோது 1884ல் எழுதிய கதைகளில் பச்சோந்தி சிறுகதை மிகவும் பிரபலம். அதிகார வர்க்கம், மேலிடம் என்றதும் பல்லைக் காட்டி புன்னகைக்கும் தன்மை என்றென்றும் இருக்கக் கூடிய ஒன்று. அந்த மனோபாவத்தை நயம்பட சித்திரிக்கிறார் இந்தக் கதையில். சந்தை வழியே செல்லும் போலீஸ் அதிகாரி, அங்கு ஒரு மனிதரை ஒரு நாய் கடித்துவிடுவதைக் காண்கிறார். கடித்த நாயின் உரிமையாளரை சும்மா விடக்கூடாது என்று கத்துகிறார். பேச்சின் போது, அந்த நாய் ஜெனரலினுடையதாக இருக்கலாம் என்பதை அறிந்ததும் சட்டென்று உடல் நிறம் மாறும் பச்சோந்தியைப் போல் மாறி நாய்க்கடி பட்டவரைப் பார்த்து அது அவரது தவறாகத்தான் இருக்கும், நீதான் நாயிடம் ஏதாவது குறும்பி செய்திருப்பாய் என்று ஏசுகிறார். நாய் ஜெனரலினுடையதாக இருக்க வாய்ப்பில்லை என்பதை அறிந்ததும் உடனே நாயின் உரிமையாளரிடம் திரும்பி தவறு நாயுடையதாகத்தான் இருக்க வேண்டும் என்று பேசுகிறார். சூழ்நிலைக்குத் தக்கபடி மாறி மாறி கூச்சலிட்டபடியே இருக்கிறார். சுற்றி நிற்பவர்கள் பார்த்துச் சிரிக்கிறார்கள். மனித மனதின் நிறங்களையும், அது நிமிடத்திற்கு நிமிடம் மாறும் தன்மையையும் துல்லியமாக படம் பிடித்துக் காட்டுகிறது கதை.
இளம் வயதில் எஸ் நகருக்கு வந்து பணி ஏற்கும் ஒரு டாக்டரின் கதை தான் இயோனிச் (1898) நகரில் கல்வி கேள்விகளில் சிறந்தவராகவும், கலைகளில் கற்றுத் தேர்ந்தவராகவும் கருதப்படும் தூர்க்கின் குடும்பத்துடன் டாக்டருக்கு பரிட்சையம் ஏற்படுகிறது. அதோடு அங்கு வீட்டில் வளரும காத்யா என்ற பெண் மீது காதலும் ஏற்படுகிறது. வாழ்க்கையின் நகர்வில், காதலின் உணர்ச்சித் துடிப்பும், ஊக்கமும், உற்சாகமும் கூடிய டாக்டரின் மணிக்குரலிடன் மத்தியதர நகர வகுப்பினரது வாழ்க்கைக்கே உரித்தான சிடுசிடுப்பான குரலும் ஒலிக்கத்துவங்குகிறது. அந்த இரண்டாவது குரலில் நாளடைவில் பலத்துப் பெறுகி முதலாவது குரலை அமிழ்த்திவிடுகிறது. அற்பமும், பகட்டும், மடமையும் நிறைந்த கொச்சையான சுற்றுப்புற வாழ்க்கையின் வெள்ளச் சுழல் டாக்டரையும் தன்னுள்ளே இழுத்துக் கொள்கிறது. அவரது ஆன்மா ஒளியிழந்து மங்கிப்போகிறது. பணம் சம்பாதிப்பதைத் தவிர வேறு எதிலும் நாட்டமில்லாதவராக மாறிப் போகிறார். உடல் ஊதிப் பருத்துப் போய் சலிப்புற்றுச் சிடுசிடுத்தபடியான மனிதராகிப் போகிறார். இயோனிச்சி கதை மனித ஆன்மா சிறுகச் சிறுக நலமிழந்து மரத்துப் போவதை ஒவ்வொரு கண்ணியாக விவரிக்கிறது. அடர்த்தியான மூடுபனி ஆன்மாவின் எழில் நிறைந்த மலரை மூடுவதைக் காட்டுகிறது.
வித்தியாசமான கோணத்தில் படைக்கப்பட்டது நாய்க்காரச் சீமாட்டி சிறுகதை. இரு மனிதர்கள் குறித்தான சித்தரிப்புதான் கதை. அர்த்தமற்ற வாழ்க்கையில் சலிப்புற்ற கூரொவ்வும், அன்னாவும் ஒரு கோடை நகரத்தில் சந்தித்துக் கொள்கிறார்கள். இருவரும் திருமணமானவர்கள். இருவருமே மணவாழ்வில் நிறைவற்றவர்கள். அவர்களுக்கு நடுவே உண்மையான, ஆழமான காதல் படர்கிறது. ஆனால் அவர்களால் என்றுமே ஒன்றிணைய முடியாது, விவாகரத்து சாத்தியமில்லை. கதையில் இருவருக்கிடையில் காதலின் அழுத்தம் மெதுமெதுவாக அதிகரிப்பதும், அன்னாவைப் பார்க்க கூரொவ் அவள் ஊருக்குப் போகும் காட்சியும் மிகப் பிரமாதமாக சித்தரிக்கிறார் செகாவ்.
கதை பல தளங்களில் பயணிக்க வைக்கிறது. சாரமில்லாத வாழ்க்கையைத் தொடர்வதை விட வாழ்க்கைக்கு பொருள் தரக்கூடியதை என்ன விலை கொடுத்தேனும் பெறுவது சிறந்தது என்பதை சித்தரிக்கிறது. அப்படி பொருள் தரும் விஷயத்தை சமூகம் ஏற்காததாக இருந்தாலும், அதனால் என்ன கேள்வியையும், அப்படிப்பட்ட ஒரு செய்கைக்கு நீங்கள் பெரும்விலை கொடுக்க நேர்ந்தால், அதற்கு நீங்கள் தயாராக இருக்கிறீர்களா என்ற கேள்வியையும் முன்வ்க்கிறார் செகாவ். காதல் என்று இல்லை, இன்னொரு மனிதரோடு ஏற்படும் உண்மையான பந்தம் மனிதர்களை எப்படி மாற்றுகிறது, அது எப்படி மனிதர்களுக்கு வாழ்க்கையை சாரமுள்ளதாக மாற்றுகிறது, அதே நேரம் மனிதர்களின் வாழ்க்கையை எப்படி புரட்டிப் போடுகிறது என்பதையும் கதை அடிக்கோடிட்டு விவரிக்கிறது கதை
செகாவின் கதைகள் படிப்பவர்களைக் கலங்கச் செய்பவை. அதே நேரம் மென்மையானவை. துயரம் தோய்ந்த நிலையிலும் புன்னகையைக் காட்டுபவை. அந்தக்காலத்து ரஷ்ய வாழ்க்கையின் மேட்டிமைத் தன்மை குறித்தும், கொச்சைத்தனம் குறித்தும் விவரித்துச் சொல்பவை. மனிதர்களுக்கு உரிய மாண்புகள், வாழ்வை மலரச் செய்ய வேண்டும் என்ற ஊக்கத்தை ஊட்டுபவையாக இருந்தது. செகாவ் உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறார். அதற்கு முக்கியக்காரணம், செகாவ் தனது அனைத்துப் படைப்புகளிலும் முதலாவதாக உண்மையையே எடுத்துக் காட்டுகிறார். உள்ளதை உள்ளபடி சொல்லி உள்ளத்தை ஒளிபெறச் செய்கிறார். செகாவ் வெளிப்படுத்தும் உண்மையானது மனசாட்சியை விழிப்படையச் செய்வதாகவே இருக்கிறது. மனித வாழ்க்கை வளமும் எழிலும் பெற வேண்டும், அது பெறத்தான் போகிறது என்ற நம்பிக்கையை ஊட்டுகிறது அவ்வுண்மைகள். மனிதனின் நிலையை மனிதனுக்குத தெரியப்டுத்தும் போதுதான் மனிதன் மேம்பட்டவனாகிறான் என்ற கருத்தையே கதைகளின் வழியாக செகாவ் சொல்லிக் கொண்டிருக்கிறார்.
செகாவின் கதைகளை வாசிக்கையில் சோகமான நாளுக்கான உணர்ச்சிகள் ஆட்கொள்கின்றன. காற்று தெளிந்து, இலைகளற்ற கிளைகளை விரித்து நிற்கும் மரங்களது கூர்மையான உருவம் பளிச்சென்று தெரிகிறது. வீடுகள் ஒடுங்கிப் போய், மனிதர்கள் சோர்ந்து போனவர்களாக, தனிமையால் வாட்டமடைந்தவர்களாக, சலனமற்று சக்தியிழந்து எல்லாம் விசித்திரமாய் இருக்கிறது. ஆழமான நீல வானத்து தொலைவுகள் வெறுமையாய் காட்சியளிக்கிறது. வெளிறிய வானத்துடன் கலந்து குளிரில் கொட்டியான சேறு மூடிய நிலத்தின் மீது சோர்வை உண்டாக்கும் குளிர் போர்த்தியிருக்கிறது. அப்படியான நேரத்தில் எதிர்ப்படும் வெய்யிலைப் போல் செகாவின் கதைத் தடங்கள் பதிக்கும் பாதைகள் கோணலான தெருக்கள் மீதும், சேறு படிந்த நெரிசலான வீடுகள் மீதும் தன் பொன் ஒளியை வீசிக் காட்டுகிறது. செகாவின் கதைகள் மணம் கமழும் எளிமையுடன் முழுக்க முழுக்க ரஷ்யக் கதைகளாய் ஒரு தலைமுறையினரது நினைவுகளில் ஆழ்ந்து இருப்பவை. அது அவரவர் எழுதிக் கொள்ளும் கதைகளுக்கு இணையானதாக தங்கிவிடுகிறது- அதனாலேயே செகாவ் என்ற மனிதரை நினைவுபடுத்திக் கொள்கையில் மனதிற்கு இனிமையானாக மாறுகிறது. மனிதனின் நகர்வுக்கு மனிதன் தான் அச்சு. மனிதர்களது அன்புக்காக எல்லோரும் ஏங்குகிறார்கள். பசித்த பொழுதில் அரை வேக்காட்டுடனாக ரொட்டி கூட மிகுந்த சுவையுடனானதாகவே இருக்கும். செகாவ்வின் சிறுகதைகளும், குறுநாவல்களும் மனதில் ஊறும் அன்பின் பசியை போக்கக்கூடியதாகவே இருக்கிறது. l