முனைவர் இரா. மோகனா
கதையும் கற்பனையும் மனித சமுதாயத்துடன் ஒன்றி வளர்ந்து வருவதாகும். ஒரு தாய் குழந்தைக்குச் சோறு ஊட்டுகிறபொழுது கற்பனையாக புனைந்து உரைக்கின்ற கதைகள் கணக்கற்றவை ஆகும். பழந்தமிழகத்திலும் கதைகள் அதிக அளவில் நிலவி வந்துள்ளன. தொல்காப்பியர் பொருளோடு புணரா பொய்ம்மொழி என்று கற்பனை செய்து கதையைக் கூறுகிறார்.
ஒரு சிறுகதை மனிதனின் மொத்த வாழ்வின் ஒரு துளியை நமக்கு காட்டும். அதிலிருந்து மனிதனின் மொத்த வாழ்வையும் நாம் புரிந்து கொள்ளலாம். இலக்கியம் என்பது காலத்தைக் காட்டுகின்ற கண்ணாடி அந்தவகையில், அப்பாவுடன் ஒருநாள் என்கின்ற சிறுகதைத் தொகுப்பில் 20 சிறுகதைகள் இடம்பெற்றுள்ளன. இந்தத் தொகுப்பில் இடம்பெற்றுள்ள சிறுகதைகள் எழுதப்பட்ட காலத்தை நாம் கணக்கில் கொண்டால் கால் நூற்றாண்டு சிறுகதைகள் என்று கூறலாம். இதுகுறித்து ஆசிரியர் வடுவூர் சிவ. முரளி கூறுகின்றபொழுது ஏறத்தாழ இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்ட கதை முதல், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்ட கதை வரை இத்தொகுப்பில் கலந்து இருக்கின்றன. சுருக்கமாகச் சொன்னால் கால் நூற்றாண்டு கதைகள் எனினும் மனித உணர்வுகள் எக்காலத்திற்கும் பொதுவானவை என்பதால் இப்போதும் இக்கதைகள் படிக்கக் கூடியனவாக இருக்கின்றன என்பதை அவருடைய என்னுரையில் குறிப்பிட்டு சென்றுள்ளார்.
இருபத்தைந்து ஆண்டுகளில் ஓர் எழுத்தாளரின் எழுத்து நடையில் ஏற்பட்டுள்ள வளர்ச்சி மாற்றத்தை அறிய இதை விட ஒரு சிறந்த புத்தகம் கிடைக்காது. பல இதழ்களில் வெளிவந்து சில பரிசுகளைப் பெற்ற சிறுகதைகளின் அணிவகுப்புதான் இந்த தொகுப்பு என்று பதிப்புரையில் பதிப்பாளர் குறிப்பிட்டு சென்றுள்ளார். கதை எழுதத் துவங்கும் முன் அதற்கான களம் வார்த்தைகள் கைப்பற்றி முன்வந்து இந்நூலாசிரியருக்கு நின்றுவிடுகின்றன. கதைச் சட்டையைக் கச்சிதமாய் தைத்து வாசகனுக்கு அணிவித்து விடுகிறார் என்று ரிஷபன் அவர்கள் மிகச் சிறப்பாக சொல்லிச் சென்றுள்ளார். இச்சிறுகதை தொகுப்பானது 128 பக்கங்களைக் கொண்டுள்ளது. கால மாற்றத்திற்கு ஏற்ப சிறுகதையில் என்னென்ன புதுமைகளை வடுவூர் சிவ. முரளி செய்துள்ளார் என்பதைப் பின்வருமாறு காணலாம்.இச்சிறுகதைத் தொகுப்பில் முதல் சிறுகதையான அப்பாவுடன் ஒருநாள் என்ற இக்கதையில் தன் தந்தையோடு மகிழ்ச்சியாக பேருந்தில் பயணிக்கின்ற மகன் அவரோடு துணிக்கடை, செருப்பு கடை, தின்பண்ட கடை என்று பலவற்றிற்கும் சென்று, செல்கின்ற இடங்களுக்கு எல்லாம் மன மகிழ்ச்சியோடு சென்றுவிட்டு இறுதியில் குடி என்கின்ற போதை தந்தையின் தலைக்கு ஏற அத்தனை நேரம் அவன் பெற்ற அந்த இன்பங்கள் எல்லாம் மண்ணுடன் மண்ணாகிப் போய் இறுதியில் அவன் தந்தை எடுத்த வாந்திக்கு அவன் பேருந்தை விட்டு இறங்கி மண்ணைக் கையில் எடுக்கிறான் என்று படிக்கின்ற ஒவ்வொருவரின் கண்களிலும் நீரைக் கொண்டு வரச் செய்திருக்கிறது அந்த முதல் சிறுகதை.
இரண்டாவது சிறுகதையிலும் தந்தை மகன் உறவு குறித்த ஒரு போராட்டம்தான். இருந்தாலும் இது புதியதொரு பொருண்மையில் எழுதப்பட்டுள்ளது. அரிச்சந்திர மயான காண்டம் முருகேசனின் அப்பாவும் என்ற சிறுகதையில் தந்தையின் மேடை நாடகங்களைப் பார்த்த மகன், அதனை தன் வகுப்பிலும் நடத்திக் காட்ட அதைப் பார்த்த தமிழாசிரியர் ஆண்டு விழாவின்போது அந்த நாடகத்தை அரங்கேற்ற எண்ணுகிறார். மாணவனும் மிகச்சிறப்பாக அந்த நாடகத்தை நடித்து முடிக்கின்றார். தமிழாசிரியர் நினைத்தது போல முதல் பரிசும் அவனுக்கு அறிவிக்கப்படுகிறது. பரிசினை வாங்குவதற்கு மாணவன் ஆவலோடு மேடையில் ஏற அதுவரை நாடகத்தைப் பொறுமையுடன் பார்த்துக் கொண்டிருந்த அந்த மாணவனின் தந்தை முருகேசன் அனைவரும் தன் மகனைப் பாராட்ட இவரோ தன் மகனின் முதுகில் நன்றாக அடித்து விடுகிறார். காரணமும் உடனடியாக சொல்லுகின்றார். உங்கள் மகன் சிறப்பாக தானே நடித்தான் என்று கேட்க, நாடகக் கலைஞர்களுக்கு இப்ப மரியாதையும் கிடையாது வாய்ப்பும் கிடையாது. வீட்டிலே கஞ்சிக்கே திண்டாடுறோம். என் நிலைமை வேண்டாம். அவன் பாட அதைப் பார்த்து கைத்தட்டி பாராட்டி அவனுக்கு புகழ் ஆசையை உண்டாக்கி கெடுக்காதீங்க. கையெடுத்துக் கும்பிட்டு குலுங்கி குலுங்கி அழுத அந்த தந்தையின் வாழ்க்கைப் போராட்டத்தை மிக அழகாக சிறுகதையில் தந்துள்ளார் ஆசிரியர். அங்கீகாரம் என்ற மூன்றாவது சிறுகதையோ யதார்த்தம் பேசுகின்ற நிஜக் கதையாக இருக்கின்றது. அரசியல், சாதி என்று திரிகின்ற மணிகண்டனைப் போன்றோர் இறுதியில் அதனுடைய தாக்கத்தைப் புரிந்து கொள்ள சிறிதுகாலம் எடுக்கிறது. அரசியல்வாதிகளுக்கு உரிய அந்தப் பண்பை அவர்கள் காட்டத்தான் செய்கிறார்கள் என்பதை மிக அழகாக சிறுகதையில் ஆசிரியர் பதிவு செய்துள்ளார். அவன் அப்படித்தான் என்கின்ற நான்காவது கதையிலோ வினோத்தின் சவடால் பேச்சு, அவன் வளர்ந்த பிறகும் தொடர்கிறது. காரியத்தில் ஒன்றுமில்லை. இக்கதை தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டும் என்ற பழமொழிக்குச் சிறந்த சான்றாகிறது.
ஈரநிலம் என்ற சிறுகதையில் நெஞ்சில் ஈரம் இல்லாத மனிதரை அடையாளம் காட்டுவதாகவும் அதிகாரவர்க்கத்தின் தன்மையும் சிறுகதையில் பதிவுசெய்யப்பட்டுள்ளது. ஒவ்வொருவருக்கும் அவரவர் வேலைகளில் முன்னுரிமை அளிக்கப்படுகிறது. பிறரைப் பற்றி யோசிக்க நேரம் ஒதுக்குவதில்லை என்பதை படிக்கின்ற ஒவ்வொருவரும் உணர்ந்து கொள்கின்ற விதத்தில் கதை எழுதப்பட்டுள்ளது.
நீண்ட நாட்களாக ஒரு வீட்டில் வேலை பார்த்து வருகின்றாள் லட்சுமி. அன்று கீழே விழுந்து கால் உடைந்து போக தன்னுடைய மகளை வேலைக்கு அனுப்புகிறாள். மகளும் பயந்துகொண்டே வேலைக்குச் செல்ல அவள் எண்ணியது போலவே அங்கு நடக்கிறது. தாயிடம் மட்டும் வேலை வாங்குவதற்காக அவளை அன்புடன் நடத்துவது போல பாவனை செய்கிறாள் அந்த வீட்டு எஜமானி அம்மாள். ஆனால் வேலை பார்ப்பவனுக்கு உடல்நிலை சரியில்லை என்பதை அறிந்தவுடன் என்னமோ போ உன்ன வச்சுக்கிட்டு இன்னைக்கு எப்படி தான் சமாளிக்க போறேனோ இப்படி பண்ணிட்டாளே இந்த லட்சுமி என்று அலுத்துக் கொள்கிறாள் அந்த வீட்டு எஜமானி பார்வதியம்மாள். என்று முதலாளித்துவ அதிகாரத்தையும் ஏழைகளின் புலம்பல் அவர்களுடைய காதுகளில் என்றுமே எட்டுவதில்லை என்பதையும் சிறுகதையில் மிக அழகாக ஆசிரியர் பதிவு செய்துள்ளார்.
தன் நிலையை உயர்த்திக் கொள்வதற்காகப் பிறரைக் காக்கா பிடிக்கின்ற நிலையை என்றும் செய்துவிடக்கூடாது என்பதில் உறுதியாக இருந்த ஒருவன், ஜால்ராவாய் சட்டென்று மாறி, தன் இயல்பு தொலைகின்றபொழுது எதிர்பாராத விளைவையும் சந்திக்கிறான் என்பதை ஜால்ராவும் ஜிகினாக் கனவுகளும் என்ற சிறுகதை வழியாக என்றைக்கும் பிறருக்கு ஜால்ரா தட்டுவது உதவாது என்ற கருத்தை இச்சிறுகதையில் பதிவு செய்துள்ளார். பாராட்டு என்ற சிறுகதையில் ஒரு நிகழ்விற்குப் சிறப்பு விருந்தினரை அழைத்தால் அவரை வரவேற்பு செய்பவர்களும் நன்றியுரை கூறுபவர்களும் அவர்களுடைய புகழையையே பாடி அவர்கள் பேச வேண்டிய நேரத்தை எல்லாம் சுரண்டி விடுகின்றனர். அவ்வாறு செய்தல் கூடாது. பேருரையாற்றுபவர்களுக்கு நேரம் ஒதுக்குதல் வேண்டும் என்பதை எடுத்துரைக்கும் விதமாக இச்சிறுகதை அமைந்திருக்கின்றது.
கவனம் என்ற சிறுகதையிலோ முத்தையா என்ற கதாபாத்திரம் எப்பொழுதும் ஊரில் என்ன நடக்கிறது. யார் யாருடன் ஊரைவிட்டு சென்றார்கள் என்று ஊர்வம்பு பேசுபவராக இருக்கின்றார். ஒருநாள் ஊரை எல்லாம் கவனித்த அவர் தன் வீட்டில் இருக்கின்ற மகள் வேறு ஒருவருடன் ஓடுவது கூடத் தெரியாமல் மற்றவர் கூறுவதைக் கேட்கின்ற ஒரு நிலை ஏற்பட்டது என்பதைச் சிறுகதையில் மிக அழகாக ஆசிரியர் கூறியிருக்கின்றார். ஊரைப் பார்க்க தெரிந்தவன் தன் வீட்டைக் கவனிக்காது விட்டு விட்டான் என்ற மையப்பொருளில் இச்சிறுகதை அமைந்திருக்கிறது. மாற்றம் ஒன்றே மாறாதது என்பதை மாற்றங்கள் என்கின்ற சிறுகதையின் வழியாக மிக அழகாக ஆசிரியர் சொல்லிச் சென்றிருக்கிறார். முன்பொரு காலத்தில் எங்கு பார்த்தாலும் பச்சை பசேல் என்று இருந்த நிலங்கள் எல்லாம் இன்று விளைநிலமாக இல்லாது வீடுகளாக முளைத்திருக்கிறது. சாலைக்கு வலப்புறம் இடப்புறம் இருந்த நிலங்கள் எல்லாம் இன்றோ வெறும் மைதானங்களாக, வீட்டுமனைகளாக காட்சியளிக்கின்றன என்பதை ஆசிரியர் மிக வருத்தத்தோடு சொல்லியிருக்கிறார். பலருக்கு வேலை தந்த கமலம் கால மாற்றத்தின் காரணமாக கூலி வேலைக்குச் செல்ல வேண்டிய ஒரு சூழல் ஏற்படுகிறது. அவருடைய நிலம் முழுவதும் கைமாறிப் போய்விட்டது. இவளைக் காண்பதற்கு அவளுடைய வீட்டில் வேலை பார்த்த மருதன் என்பவர் வர, கூலிவேலைக்குச் செல்வதால் எலும்பும் தோலுமாக இருந்த கமலம் மருதனை அடையாளம் கண்டுகொண்டு எவ்வாறு இருக்கிறீர் என்று கேட்கிறாள்.
தன்னுடைய முதுமைக் காலத்தை இங்கு வந்து அவர்களுக்குப் பணிவிடைகள் செய்து கழிக்கலாம் என்று மிகுந்த நம்பிக்கையோடு மருதன் வர அங்குள்ள சூழலைப் புரிந்துகொண்டு புறப்பட தயாராகிறான். உடனே கமலம் அவனைச் சிறிது நேரம் உட்காரு என்று சொல்லிவிட்டு நீ இங்கே வேலை செய்தபோது கொஞ்சம் கொஞ்சமாக பணம் சேர்த்து ஒரு மோதிரம் செஞ்சு என் கிட்ட கொடுத்து வைத்திருந்த ஞாபகம் இருக்கா?. நீ ஊருக்குப் போகும்போது அதை வாங்காமல் போய்விட்டே. இதை உன்கிட்ட கொடுக்காமல் போயிட்டோம். என் மனசை உறுத்திக்கொண்டே இருந்தது. நல்ல வேலை நீ வந்துட்ட இந்த வாங்கிக்கோ என்று சொல்லி தன்னிடம் இருந்த மருதனின் மோதிரத்தை நேர்மையாக கமலம் தந்துவிட்டார். எதுவேண்டுமானாலும் மாறியிருக்கலாம் ஆனால் கமலத்தின் குணம் மட்டும் மாறாமல் இருக்கின்றது. வறுமையிலும் செம்மை என்பதை இக்கதை அழகாக எடுத்துரைக்கிறது.
மகன் தந்தைக்கு என்கின்ற சிறுகதையும் ஒவ்வொரு தந்தையும் உயிரோடு இருக்கின்றபொழுது அவரைப் பேணிக்காக்காத மகன் அவர் இறந்த பின்பு பிரம்மாண்டமாக சவ ஊர்வலம் நடத்துகின்றனர். அதைப் பார்க்கின்ற ஒவ்வொருவருக்கும் சாட்டையில் அடித்தது போல சிறுகதையில் மிக அழகாக பதிவு செய்திருக்கிறார் ஆசிரியர். இறந்து போன தன் கணவனை இருக்கும் காலத்தில் கஞ்சி ஊற்றாது இறந்த பின்பு பிரமாண்டமாய் எடுத்துச் செல்லுகின்ற மகனைப் பார்த்து ஊரறிய ஒரு தாய் பாடுகின்ற ஒரு பாடலைச் சிறுகதையில் ஆசிரியர் எழுதியிருக்கின்றார்.
கஞ்சி கஞ்சின்னு தவிச்சுக்
கைலாசம் போனியே…
சோறு சோறுன்னு தவிச்சு
சொர்க்கலோகம் போனியே…
இந்த வார்த்தைகளில் இருக்கின்ற உண்மை முகத்தில் பளீரென அறைய சவ ஊர்வலத்தில் இருகின்ற ஒவ்வொருவர் முகத்திலும் சோகம் படர்கிறது. கூட்டத்தில் இருப்பவர் அனைவரும் திரும்பிப் பார்த்தனர். இறந்தவரின் மனைவியாகிய கண்ணம்மா கிழவி மட்டும் கணவரின் பாதங்களைப் பற்றியபடி இந்தப் பாடலை மீண்டும் மீண்டும் சொல்லிக் கொண்டே அழுது கொண்டிருக்கிறாள் என்பதாக சிறுகதையை முடித்திருக்கிறார் ஆசிரியர்.
மாறாதது என்ற சிறுகதையில் பூபாலன் தன் வீட்டில் எத்தனையோ பிரச்சனைகள் இருக்க, அவர் வீட்டில் பசுமாடு ஒன்று இறந்து போகின்ற ஒரு நிலை ஏற்படுகிறது. அந்த இக்கட்டான நிலையிலும் நாம் நம்முடைய வேலையைப் பார்ப்போம் என்று இல்லாமல் ஒருவருக்கு ஜாமீன் கையெழுத்து போடுவதற்காக வங்கிக்கு வந்தார். நம்ம மேலத்தெரு காளியப்பன் இவ்வளவு நாளா பொறுப்பில்லாமல் சுத்திக்கிட்டு இருந்தான். இப்பதான் புத்தி வந்து மளிகை கடை வைக்கப் போறான். இந்த பேங்க்ல கடன் கேட்கவும் அவனுக்கு ஜாமீன் கையெழுத்து போடுவதற்காக நான் இங்கு வந்து இருக்கேன். இன்னும் அவனைக் காணோமே என்று தனக்குள்ளேயே முனங்கிகொண்டு சாலையை எட்டிப் பார்த்துக் கொண்டே இருக்கின்றான் என்பதாக கதை முடித்திருக்கிறது. மனித நேயம் எந்த அளவிற்கு பூபாலன் அண்ணனிடம் இருக்கின்றது என்பதை இச்சிறுகதை நமக்குத் தெரிவிக்கின்றது. சித்தி என்றாலே கொடுமை செய்பவள் என்பதைச் சமூகத்தில் புழக்கத்தில் இருக்கின்ற ஒரு வழக்கம். அதை தவிடு பொடியாக்கியது ராசாத்தியின் சித்தி என்ற சிறுகதை. ராசாத்தி பணத்தைத் தொலைத்ததால் சித்தி அடிப்பாள் என்று சொல்லி வீட்டிற்கு வாராது அங்குமிங்கும் அலைந்து விட்டு மெதுவாக வருகிறாள். அவளைப் பார்த்தவுடன் ஒரு அடி அடித்து சித்தி அவளை மார்போடு அணைத்துக் கொள்கிறாள்.
பணம் தொலைந்தால் என்ன என்னிடத்தில் வந்துவிட வேண்டியது தானே பெற்ற பிள்ளையாக இருந்தால் கூட நான் கவலைப்பட மாட்டேன். உனக்கு ஏதாவது ஆச்சுன்னா சித்தி கொடுமைக்காரின்னு ஊர் உலகமே என்னதானே பழிசொல்லும். உங்க அப்பா என்ன வெட்டிக்கொண்டே போட்டுவிடுவான். நான் யாருக்குப் பதில் சொல்ல?. நீ இல்லாமல் எங்குச் சென்றாயோ என்று என் மனம் பதைக்கிறது என்று சொல்லி அவளைத் தன் மார்போடு அணைத்துக் கொண்டாள் என்பதாகக் கதையை முடித்திருக்கிறார் ஆசிரியர். இங்கு சித்தியின் உடைய பாச உணர்வை பகிரங்கமாக தன் சிறுகதையில் எழுதியிருக்கின்றார்.
சண்டை நிறுத்தம் என்ற சிறுகதையில் இன்றைய சமூகத்தின் சிறப்பான உண்மை மிகத் தெளிவாக பதிவு செய்யப்பட்டுள்ளது. கணவன் மனைவிக்கு இடையே என்னதான் பிரச்சனைகள் இருந்தாலும் குழந்தைகள் முன்பு அவர்கள் சண்டை இடுவது கூடாது. அவ்வாறு சண்டை போட்டுக் கொண்டால் அது குழந்தைகளின் மன இயல்பை பாதிப்பு அடையச் செய்கிறது என்ற மூலத்தை சிறுகதையின் கருவாகக் கொண்டிருக்கின்றார். தந்தையானவன் என்ற சிறுகதையில் மனைவி இறந்த கணவன், தன்னுடைய மகன் வீட்டில் படுகின்ற துயரத்தை மிக அழகாக எழுதியுள்ளார். நேரம் கடந்து உணவு உண்ணுதல், தந்தையின் வார்த்தையைக் கேட்காத மகன், எப்பொழுது பார்த்தாலும் எரிந்து விழுகிற மருமகள் இப்படியாகப் பல கதாபாத்திரங்கள் சிறுகதையில் புகுத்தப்பட்டுள்ளன. தன் குழந்தை மோதிரத்தை விழுங்கியதால் அலறியடித்துக்கொண்டு ஹாஸ்பிடலுக்குச் சென்று குழந்தையைக் காப்பாற்றிய தன் மகனை, சிறுவயதில் காசு விழங்கியதற்காக தோளில் போட்டுக்கொண்டு பல மைல் ஓடிக் காப்பாற்றிய அந்தச் செயலைத் தன் மகனிடம் கூறும்பொழுது அவருடைய குரலில் தடுமாற்றம் ஏற்படுகிறது என்பதைப் பாசத்தோடு எடுத்துச் சொல்லியிருக்கிறார் ஆசிரியர். வழி என்கின்ற சிறுகதையிலும் இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண நன்னயம் செய்துவிடல் என்ற குறளின் கருத்து சொல்லப்பட்டிருக்கிறது. தான் எவ்வளவுதான் கஷ்டப்பட்டாலும் தன்னுடைய உரிமைக்காக ஒருவன் போராடும்போதுகூட, எதிரிகளுக்கு நஷ்டம் உண்டாகக் கூடாது என்ற உயர்ந்த போராட்ட நெறியைத் தனது உயிரைக் கொடுத்து தணிகைவேலர் நமக்கெல்லாம் புரிய வைத்திருக்கிறார். அவருடைய தியாகம் கல் மனதையும் கரைய வைத்திருக்கிறது. என்னை ஒரு புது மனிதனாக ஆக்கியிருக்கிறது என்று தன் முதலாளித்துவ தன்மையிலிருந்து மாறி தொழிலாளிகளுக்கு உதவ முன்வந்து இருக்கின்ற செயலை இச்சிறுகதை அழகாக எடுத்துச் சொல்கிறது.
தொண்டன் என்ற சிறுகதையில் அதிகார வர்க்கத்தின் மூர்க்கத்தனம், சுந்தரமூர்த்தி எவ்வாறு பாதிக்கப்பட்டார் என்பதும் மிக அழகாக கூறப்பட்டுள்ளது. பாகப்பிரிவினையில் அண்ணன் தம்பி இருவரும் சிறுவயது முதற்கொண்டே அடித்துக்கொண்டும் விளையாடிக்கொண்டும் இருக்கின்றனர். வயது முதிர்ந்த பின்பு பெண்ணின் கல்விக்காக அண்ணன் நிலத்தை கூறுபோட வருகிறான். நிலத்தை மட்டும் கூறுபோட்டு இருந்தால் பரவாயில்லை. தாய் தந்தையரையும் கூறுபோட எண்ணுகிறான். ஆதலால் தந்தை அதனை நினைத்து வருந்தி பித்து பிடித்தவர் போல் ஆகிவிடுகிறார். எனக்கு இருப்பதற்கு சிறிது இடம் இருந்தால் போதும். நான் இங்கேயே இருக்கிறேன். அவளுக்குப் போடுற சாப்பாட்டை ஆளுக்குப் பாதியாக சாப்பிடுகிறோம் என்று உடைந்த குரலில் தந்தை கூறுவதைக் கேட்டு இளையவனும் அவருடைய நிலையைப் புரிந்துகொண்டு அப்பா நீங்க எங்கேயும் போக வேண்டாம். இங்கேயே இருங்கள். உங்கள் சொத்தை எல்லாம் பிரிச்சது போதும். உங்க ரெண்டு பேரையும் பிரிக்க வேண்டாம். கடைசி வரைக்கும் நீங்க ரெண்டு பேரும் என்கூடயே இருங்க. அப்பா நானே உங்களைக் கடைசிவரை பார்த்துக்கிறேன் என்று கதறும் மகனை இறுக அணைத்துக்கொண்டு உச்சி முகர்ந்து முத்தமிட்டார் அப்பா என்பதாக பாசப்பிணைப்பினை இக்கதையின் வழியாக ஆசிரியர் தந்துள்ளார். வீட்ல ஏதும் பிரச்சனையா சார் என்பதைக் கதைத் தலைப்பாக வைத்து கேட்கின்ற ஒரு கதாபாத்திரத்தின் வீட்டில், என்ன பிரச்சனை என்பதை யாருமே கேட்காது போக இறுதியில் தன் மனைவியை இழந்து வருந்துகின்ற கதாபாத்திரத்தை படிக்கின்றபொழுது ஒவ்வொருவரின் கண்களிலும் நீர் பெருக்கெடுக்கிறது. இறுதிக் கதையாகிய கோணகொம்பி என்கின்ற சிறுகதையில் தான் பாசமாக வளர்த்து வந்த பசுமாட்டைத் தன் மகளின் பிரசவத்திற்காக விற்பதற்குச் சென்ற தந்தை மாடுகளை இறைச்சிக்கு விற்க முயன்ற கும்பலிடம் மாட்டி, மாட்டுடன் பரிதாபமாக அமர்ந்து கொண்டிருப்பதைத் தொலைக்காட்சிப் பெட்டியில் பார்த்த அம்மா கதற, நிறைமாத கர்ப்பிணியாக இருக்கிற மகளும் சேர்ந்து வருந்துவதாக கதையை முடித்திருக்கிறார் ஆசிரியர். இத்தொகுப்பில் உள்ள அனைத்து கதைகளையும் வாசிக்கும்போது எதார்த்தமான பதிவுகளாகவே அனைத்துச் சிறுகதைகளும் இருக்கின்றன. தேவையற்ற கருத்துகள் இடம்பெறவில்லை. குதிரைப்பந்தயம் போலவே சிறுகதை இலக்கணத்தோடு அனைத்து சிறுகதைகளும் எழுதப்பட்டிருக்கின்றன. அதனாலேயே இத்தொகுப்பில் உள்ள சில கதைகள் போட்டிகளில் பரிசு பெற்றவையாக அமைந்திருக்கின்றன. இச்சிறுகதைத் தொகுப்பில் அனைத்துச் சிறுகதைகளையும் சிறப்பாக எழுதி இருக்கின்ற வடுவூர் சிவ முரளி அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள். மற்றும் பாராட்டுக்கள். உணர்வுகளையும் பாசத்தையும் வெளிப்படுத்திய ஆசிரியர் மேற்கொண்டு பல்வேறு விதமான களங்களில் பயணிக்க வாழ்த்துவோம். தொகுப்பினை அழகாக பதிப்பித்த எம்.ஜே.பப்ளிகேஷன் அவுஸ் பதிப்பகத்தாருக்கு வாழ்த்துகள்.