முனைவர் இரா. மோகனா
சொந்த ஊரான சிந்தாதரிப்பேட்டையைக் களமாக வைத்து தமிழ்ப்பிரபா பேட்டை என்ற நாவலை எழுதியுள்ளார். இவர் இயற்பெயர் பிரபாகரன் என்பதாகும். விகடனில் பத்திரிக்கையாளராக பணிபுரியும் தமிழ் பிரபாவின் முதல் நாவல் இது. இந்நாவல் நிலப்பரப்பு சார் படைப்புகளுக்கு உரிய ஆதாரமான தன்மைகள் பலவற்றையும் தன்னுள் கொண்டுள்ளது. மனிதர்கள் அவர்கள் பேசும் மொழி, நம்பிக்கை, தொழில், சண்டைகள், ஏமாற்றங்கள், சாதனைகள் எனப் பல்வேறு அம்சங்கள் நாவல் சிறப்பாக எழுதப்பட்டுள்ளது.
சென்னையில் உள்ள விளிம்புநிலை மக்களின் வாழ்வு குறித்த அழுத்தமான சலனங்களை ஏற்படுத்தும் புனைவுகள் நாவலில் அதிகமாக காணப்படுகின்றன.
சிந்தாதிரிப்பேட்டை உருவான வரலாறு
கிழக்கிந்திய கம்பெனியின் பிரதான தொழிலாக பருத்தித் துணி ஏற்றுமதி என்று ஆனதற்குப் பிறகு மதராஸில் நெசவாளர்களுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டது. கலைநேர்த்தியுடன் நெசவு செய்பவர்கள் மிகமிகக் குறைவு என்பதால் மூர்த்தியப்ப நாராயண செட்டியார் ஆங்கில துறையான பிட்டிடம் காஞ்சிபுரத்திலிருந்து நெசவாளர்களை அழைத்து வருவதாகக் கூறி முதலில் 17 நெசவாளர் குடும்பங்களைப் புலம் பெயர்த்து அழைத்துவந்தார். அவர்களை ஊக்குவிக்க கம்பெனி செலவில் கிராமத்தில் வீடுகள் கட்டித் தந்தனர். மேலும் வரி செலுத்த வேண்டியதில்லை என்றும் பிட் ஆணையிட்டார்.
நெசவாளர்களின் வரவு நாளுக்கு நாள் அதிகரித்தது. வருட இறுதியில் விறுவிறு என்று 130 நெசவாளர் குடும்பங்கள் குடியேறினர். அக்கிராமத்தில் சின்னச்சின்ன தறிகள் அமைத்து நெசவு செய்து கொண்டிருந்ததால் அப்பகுதிக்குச் சின்னத்தறிப்பேட்டை எனப் பெயர் வைத்து மக்கள் அழைத்தார்கள். நாளடைவில் அது சிந்தாதரிப்பேட்டை என அழைக்கப்பட்டது. பேட்டையில் குடியமர்ந்த அவர்கள் போக எஞ்சிய 27 குடும்பங்களுக்குச் சாதி அடிப்படையில் இங்கு வாழ தகுதியில்லை எனத் தீர்மானமானது. அவர்களும் கூவம் ஆற்றை ஒட்டி இருக்கும் மரங்களுக்கு இடையில் குடில் அமைத்து சுகமாக வாழ்ந்தனர் .
கூவம் ஆறு
கூவம் ஆற்றின் நீர் தேங்காய் தண்ணீரின் இணைப்பிற்குச் சவால் விடும் வகையில் இருந்துள்ளது. ஊர்மக்கள் நீர் பற்றாக்குறை இன்றி கூவம் ஆற்றிலேயே குடிக்க, சமைக்க, குளிக்க, நீரைப் பயன்படுத்தி ஆனந்தமாக வாழ்ந்தனர். நாட்கள் செல்லச் செல்ல மக்கள்தொகை பெருகியது. பலரும் கூவம் ஆற்றைச் சுற்றி வீடுகளை அமைத்து குடியேறினர். கூவத்தில் சிறிது சிறிதாக கொட்டப்பட்ட நெசவுக் கழிவுகள் காலப்போக்கில் கூவம் ஆற்றின் தூய்மையைக் கெடுத்தது. அதனால் 19ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் கூவம் ஆறு நோய்வாய்ப்பட்டது.
முதன்மை கதாபாத்திரங்கள்
கிளியாம்பா – சிங்கப்பூரானின் மனைவி
குணசீலன் – கிளியாம்பாளின் மகன்
ரெஜினா – குணசீலனின் மனைவி
ரூபன் – குணசீலன் மகன்
லூர்து மேரி – ரெஜினாவின் தாய்
சௌமியன் – லாரன்ஸ் பூங்கொடியின் மகன்
பூபாலன் – சௌமியன் மாமா
பாலு, யூசுப், சௌமியன், அண்டா உருட்டி – ரூபனின் நண்பர்கள்,
நகோமி அம்மா – கிளியாம்பாவின் பக்கத்து வீட்டுப் பெண்
பிலோமினா – பூபாலன் மகள் (பாலுவின் மனைவி)
இவாஞ்சலின் – ரூபனின் மனைவி
இடிமுழக்கம் – பாலுவின் அப்பா
விஷால் – ரூபனின் அதிகாரி
சைலேந்தர், உபாசனா, புவனேஸ்வரி – ரூபன் உடன் பணியாற்றுபவர்கள்.
இதர கதாபாத்திரங்கள்
முத்தமாயா, பூசாரி , ஜெயசீலன், பிரதர், எபினேசர், பாஸ்டர், சரோஜினி சிஸ்டர், ஜோஸ்வா, வைலட்டு, பால் மோசஸ், கனகராஜ், மோசஸ் , காஜா பீர், மாசிலாமணி, பூமி, கிரண்யா, அமலோற்பவம், ஜான்டி, டிக்ரோஸ், மிஷல், அப்பு, இருதயராஜ், மச்சகந்தி, அப்பாதுரைசாமி, ரஜினிசிவா, ஜானா, கோட்டிசா என்பன தவிர இதர கதாபாத்திரங்களும் உள்ளன.
நாவல் சுருக்கம்
சென்னையைப் பூர்வீகமாகவும் பிற இடங்களில் இருந்தும் வந்து குடியேறியதற்கு முன்னர் சேரியாகவும் இன்று ஹவுசிங் போர்டில் வாழும் மக்களின் கதையைப் பேசுவதாக உள்ளது தமிழ் பிரபா எழுதிய பேட்டை எனும் இந்நாவல். சிந்தாதரிப்பேட்டை எப்படி உருவாகியது என்பதில் ஆரம்பித்து பல கதாபாத்திரங்களின் துணையோடு அசுர வேகத்தில் முடிவடைகிறது. இந்நாவல் பல இலக்கிய நாவல்களில் எழுத்தாளர்கள் தங்கள் ஊர்களில் பேசும் வட்டார வழக்குகளைப் புகுத்தியுள்ளது போல இந்நாவலில் சென்னை மக்களின் வழக்குச் சொற்கள் பதிவிடப்பட்டுள்ளன. இலைமறை காய் போல இல்லாமல் உள்ளங்கை நெல்லிக்கனி போல ராவான வசைச்சொற்கள் இடம்பெற்றுள்ளன.
கதை இதுதான் பிட் உருவாக்கிய இந்தப் பேட்டையின் கூவம் நதிக்கரை ஓரத்தில் தலைத் தலைமுறையாக வாழ்ந்து வருகிற மக்களில் கிளியாம்பா குடும்பமும் ஒன்று. அவர்களின் மூத்த மகன் குணசீலன்.
அவனுடைய மனைவி ரெஜினா. இவர்களின் மகன் ரூபன். இந்நாவலின் தொடக்கம் முதல் இறுதி வரை வலம் வருபவர் நகோமியம்மா. ரெஜினா திருமணம் முடிந்து வந்தவுடன் நகோமியம்மா கிளியாம்பாளின் சுய புராணத்தைக் கூறி புற்றுநோயால் அவள் இறந்த செய்தியையும் கூறுகிறாள். அதைக்கேட்ட ரெஜினா தன் மாமியாரின் தைரியத்தை மனதில் நிறுத்தி நாளடைவில் மாமியாரைப் போலவே நடை, உடை, அணிகலன் என தன்னை மாற்றிக்கொண்டாள்.
சாயலில் மட்டும் மாறாது கிளியாம்பாளாகவே தன்னை நினைத்துக் கொண்டாள். அதனால் குணசீலனை அருகில் சேர்ப்பது இல்லை. அவன் அருகில் வந்தாலேயே பேய் பிடித்தவள் போல் நடந்து கொள்வாள். ரெஜினா மூன்று மாதம் கருவுற்றிருந்தாள். இந்நிலையில் இது போன்றதொரு நிகழ்வு சிறிது நாட்களில் குழந்தை பிறக்கும் தருவாயில் இவள் அல்லேலூயாவில் சேர்ந்து இயேசுவின் நாமத்தை ஜெபித்து வந்தாள். ஒருநாள் ஆண் குழந்தையைப் பெற்றெடுத்தாள். அதையும் சபைக்கு தொண்டு செய்யப் பணித்தார் .
எப்பொழுதும் பிரசங்கம் செய்யக்கூடிய குழந்தையாய் இவனை மாற்று என்று பாதிரியார் இறைவனிடம் வேண்டி குழந்தைக்கு ரூபன் எனப் பெயரிட்டார். ரெஜினா ஊழியமே உயிராய் இருக்க, குழந்தை நகோமியம்மாவிடம் வளர்ந்தது. குழந்தை வளரத் துவங்கியுடன் நகோமி அம்மாவுடன் சந்தோஷமாக தன் பொழுதைக் கழித்தான். ஆயா, அம்மா கூறிய அருளுரைகளைத் தெய்வ வாக்காக நம்பி வளர்ந்து வந்தான் ரூபன்.
ரூபன் எட்டாம் வகுப்பு படிக்கும்போது யோசேப், அண்டா உருட்டி, பாலு போன்றோர் நண்பர்களாகினர். ரூபன் முபினா என்ற இஸ்லாம் பெண்ணை மிகவும் விரும்பினார். இறைவனிடம் இது குறித்து கோரிக்கை வைத்து தோற்றான். சிறிது நாட்கள் கழித்து அவர்கள் குடியிருப்பிற்குத் தள்ளி சௌமியன் குடி வந்தான். லாரன்ஸ் தன் மகனிடம் இங்குள்ள சக நண்பர்களிடம் பழகாதே என்று சொல்லி வீடியோ கேம்ஸ், கேரம் எனப் பொருட்களை வாங்கித் தந்து படிப்பில் மட்டும் கவனம் செலுத்தச் சொன்னார்.
நாட்கள் கழிய சௌமியனும் ரூபனும் இணைபிரியா நண்பர்கள் ஆயினர். ரூபனும் சௌமியன் உதவியால் பன்னிரெண்டாம் வகுப்பில் நல்ல மதிப்பெண் பெற்று தேர்ந்தான். ரூபன் பச்சையப்பன் கல்லூரியில் சேர்ந்தான். சௌமியன் எம்.பில் வரை முடித்து அரசு தேர்வுக்காக தன்னைத் தயார்செய்து கொண்டிருந்தான். ரூபன் ஒரு கம்பெனியில் வேலை பார்த்தான்.
சௌமியன் ஒருநாள் நூலகத்திற்குச் செல்லும்போது பூமாவை முதன்முதலில் பார்த்தான். அவள் திருமணமானவள். இருவருக்கும் இடையே கூடாநட்பு உண்டாகி, அது அவள் கணவனுக்குத் தெரிய அவளை அடித்து வேறு ஓர் இடத்தில் குடியமர்த்தினான். சௌமியன் வேலூரில் தன் நண்பன் வீட்டில் போய்த் தங்கினான். இந்நிலையில் ரூபன் தன்னுடன் வேலை பார்க்கும் கிரண்யாவை விரும்பினான்.
சௌமியனுக்குத் திருமணம் செய்ய திட்டமிட்டு பூபாலனும் பூங்கொடியும் தன் தம்பி பாலாவிடம் அவர் பெண் பிலோமினாவைக் கேட்க அவரோ மனைவியைச் சாக்கு சொல்லி தட்டிக் கழிக்கிறார். இதனால் மனம் நொந்த சௌமியன் ஜான்டியுடன் நட்புக் கொண்டு குடிக்கு அடிமையானான். ஒரு கட்டத்தில் குடிக்க பணம் இல்லாமல் இருவரும் தத்தளிக்கும்போது டிக்ரோஸ் எனச் செல்லமாக அழைக்கப்படுபவர் இவர்களுக்கு நண்பரானார். மூவரும் குடித்து கும்மாளம் அடித்தனர். ஒருநாள் டிக்ரோஸ் மாரடைப்பால் இறந்தார்.
சௌமியன் போதைப் பழக்கத்திற்கு அடிமையானான். சௌமியனின் தந்தை உடல்நலமின்றி மருத்துவமனையில் சேர்ந்தார். அதை ரூபனுக்கு தெரிவிக்க, அவன் வந்து மருத்துவச் செலவுகளைப் பார்த்துக்கொண்டு பக்க பலமாக இருந்தான். இச்சமயத்தில் சௌமியன் மாரடைப்பால் இறந்தார். இத்தகைய மன அழுத்தத்திலிருந்து விடுபட ரூபனுக்கு நாட்கள் தேவைப்பட்டன. இம் மனநிலையிலிருந்து மாற ஒரு நாவல் எழுத முடிவு எடுத்தான் ரூபன். இச்செய்தியைப் பேஸ்புக்கிலும் பதிவு செய்தான். சௌமியனின் தந்தையை மருத்துவமனையில் கவனமாகப் பார்த்து வரும்போது இவாஞ்சலின் அறிமுகம் ஆனாள்.
அவள் மீது ஒரு தலையாக ஏற்பட்ட காதலால் தினம்தோறும் லாரன்சுக்கு இவனே உணவு எடுத்து தந்துவிட்டு அவளைப் பார்த்து வந்தான். அவளுக்கு என்று யாரும் இல்லாததால் அவள் வெகு விரைவில் யாரையும் நம்ப மாட்டாள். நாட்கள் மெதுவாக நகர அவள் மனதிலும் காதல் பூத்தது. அதன் உச்சகட்டமாக அவனிடம் தனக்கென்று தனியாக ஒரு அருவி வாங்கித்தர வேண்டும் என்றாள். ரூபானால் ஏதும் பேச முடியவில்லை.
சிறிது நாட்கள் கழித்து சௌமியனின் மீது கொண்ட பாசத்தால் ரூபன் மிகவும் மன உளைச்சலுக்கு ஆளானான். புத்தி சரியில்லாதவன் போலவும் பேய் பிடித்தவன் போலவும் நடந்து கொண்டதால் அவன் அம்மாவும் ஆயாவும் பூசாரியிடமும் பாதரிடமும் மசூதி எனப் பல இடங்களுக்குச் சென்று மந்திரித்தனர். ஒரு நாள் அவன் கம்பெனி மேனேஜர் சைலேந்தர் வந்து அவன் நலம் விசாரிக்க அவனோ மூர்க்கத்தனமாக பேச சைலேந்தர் அவருடன் வந்த சக ஊழியர்கள் ரெஜினாவிடம் மனநிலை மருத்துவரி டம் ரூபனை அழைத்துச் செல்லும்படி கூறினர்.
இந்நிலையில் இவாஞ்சலின் வந்து மனம் வெதும்பி அழ அதைக்கண்ட ரூபன் இங்கப்பாரு, நான் சொல்றதைப் பொறுமையா கேளு இவங்கல்லாம் நினைக்கிற மாதிரி எனக்கு பேயும் பிடிக்கல, பைத்தியமும் பிடிக்கல. ஒரு நாவல் எழுதனும் என்று எனக்கு ரொம்ப நாளா ஆசை. அந்த நாவல் எழுத வேண்டும் என்பதற்காக நானே இப்படி ஆக்ட் பண்ணினேன் என்கிறான். (பக்கம் – 307) ஒரு வழியாக இவாஞ்சலின் மனம் மகிழ்ந்து தன் இருப்பிடத்திற்கு வருகிறாள்.
ஒருநாள் இவாஞ்சலினைப் பெண் பார்க்க அவள் அத்தை வீட்டிற்குச் சென்று சுமுகமாக நிச்சயம் செய்து திருமணத் தேதியை முடிவு செய்கின்றனர். மருத்துவமனையில் இருந்த லாரன்ஸ் இறந்துவிட, ரூபனின் நண்பன் பாலா பிலோமினாவை விரும்பி மணம் செய்து கொள்கிறான். ரூபனுக்கும் இவாஞ்சலினுக்கும் திருமணம் இனிதே நடக்கிறது. வீட்டிற்கு வந்த இவாஞ்சலின் நாகம்மாவின் மூட்டுவலிக்கு மருந்து தேய்த்துக்கொண்டே ரெஜினாவைப் பற்றியும் போட்டோவில் உள்ள கிளியாம்பாள் பற்றியும் கேட்க, சுவாரசியத்துடன் அதை ஏன் கேக்குற என்று மீண்டும் இருவரின் புராணத்தையும் கூற ஆயத்தமானாள் என நாவல் முடிகிறது.
தனித்தன்மையான ஒவ்வொரு கதாபாத்திரங்களுக்கும் ஒரு கதை இருக்கிறது. நாவலில் யாரையும் கழட்டி விடவில்லை. சிறிய வயதில் காணாமல் போன பாலு கடைசியில் முக்கியமான ஒருவனாக வருகிறான். அனைத்தையும் சிறப்பாக கொண்டு சென்றுள்ள தமிழ்ப்பிரபாவைப் பாராட்டாமல் இருக்க முடியாது. இறுதியில் பேச்சுவழக்குச் சொற்களைத் தந்துள்ள விதம் அருமை. பேட்டை நாவல் பட்டையைக் கிளப்புகிறது எனில் அது மிகையல்ல.நாவலாசிரியருக்கும் இந்நூலை நன்முறையில் பதிப்பித்த காலச்சுவடு பதிப்பகத்திற்கும் வாழ்த்துகள்.
l