ஸ்ரீநிவாஸ் பிரபு
இந்திய நிலப்பகுதியில் வரலாற்றுக்காலகட்டம் துவங்கி இன்று வரை தொடர்ந்து மக்களின் குடிபெயர்தல் நிகழ்ந்து கொண்டேதான் இருக்கிறது. ஒரு பகுதியிலிருந்து மற்றொரு பகுதிக்கு அனைத்து விதத்திலும் எல்லா இன,மொழி மதத்தைச்சேர்ந்த மக்களும் குடி பெயர்ந்து வாழ்ந்து வருகிறார்கள். குடிபெயர்தல் என்பது திசைகளைக் கடந்து பல ஆயிரம் வருடங்களுக்கு முன்பிருந்தே நடந்தேறிக் கொண்டுதான் வருகிறது. நவீன காலகட்டத்தில், குறிப்பாக கடந்த நூற்றாண்டில் இடப்பெயர்ச்சி பெருமளவில் நிகழ்ந்தது தனி வரலாறு. அப்படியான இடப்பெயர்ச்சி ஒரு பரந்து பட்ட நிலப்பரப்பை இணைத்து ஒரே நிலையாக நீட்டித்துக் காட்ட முடியும் என்ற நடைமுறையைச் சாத்தியமாக்கித் தந்திருக்கிறது. வரலாற்றுக் காலகட்டம் முதல் இந்தியப்பெருநிலத்தை இந்த விரிந்த சமுதாயமே ஒற்றுமையாக்கி ஒற்றைப்பண்பாட்டு வெளியாகப் பார்க்கும் பார்வையையும் தந்திக்கிறது.
சிந்துசமவெளி நாகரீகத்திற்கு முன்பிருந்தே இந்தியா முழுவதுமாகப் பரவி வாழ்ந்த தமிழர்கள், குறிப்பாக திராவிடர்களுக்கு தம் முன்னோர்களைத் தெய்வமாக வழிபடும் வழக்கம் இருந்து வந்திருக்கிறது. தமிழகத்தில் குறிப்பாகத் தென் மாவட்டத்தில், அதிகமாக வாழ்ந்த வாழ்ந்து வரும் மக்கள் அனைவரும் குலதெய்வ வழிபாட்டு முறையைக் கடைபிடிப்பவர்களாகவே இருந்து வந்திருக்கிறார்கள். அந்த வகையில் நாடார் சமூக மக்களிடமும் இன்றளவும் குலதெய்வ வழிபாடு முறை தொடர்ந்து இருந்து கொண்டே இருக்கிறது. அதே நேரம் ஊர் விட்டு ஊர் இடம் பெயரும் வழக்கமும் அந்த சமூக மக்களிடையே இன்றளவும் தொடர்ந்து கொண்டேதான் இருக்கிறது. தாமிரபரணி பாயும் நெல்லை சீமையை விட்டு மதுரை, சென்னை என்று பல இடங்களுக்கு பல்வேறு காரணங்களுக்காக இடம் பெயர்ந்தாலும், குலதெய்வங்களை மறக்காமல் ஆண்டுக்கு ஒரு முறையாவது சென்று வழிபடுவதையும், பிறந்த குழந்தைகளுக்கும், வாரிசுகளுக்கும் தலைமுடி இறக்குதல், காது குத்துதல், திருமணத்திற்கான முதல் அழைப்பிதழை சாமிக்கு வைத்தல் போன்ற சம்பிரதாய சடங்குகளை விடாமல் கடைப்பிடித்தும் வருகிறார்கள்.
தமிழ் மனிதர்களின் பிரச்சினைகளை நிலவியலின் பிரச்சினைகளோடு இணைத்துப் பேசும் சமகால இலக்கியத்தில் சுந்தரராமசாமியின் ஒரு புளிய மரத்தின் கதை, சா.கந்தசாமியின் சாயாவனம், கி.ராஜநாராயணனின் கோபல்ல கிராமம் மூன்றும் முக்கியத்துவம் வாய்ந்தவை. அவை உருவாக்கி வைத்த தடங்களே தமிழ் நாவல் போக்கை மாற்றியிருக்கின்றன என்பார்கள்.. அதன் பின் (இரண்டாயிரமாம் ஆண்டுக்குப்பின்) தமிழின் நிலவியல் பண்பாட்டைக் கவனமாகப் பதிவுசெய்யும் நாவல்கள் ஆண்டுக்கு ஒன்றிரண்டாவது வந்துகொண்டேயிருக்கின்றன. அந்த வகையில் மக்களையும், மனிதர்களையும், நிலவியலையும், அதன் அழகியல் மாறாமல் பதிவு செய்கிறது அமல்ராஜ் எழுதி பாரதி புத்தகாலயம் வெளியிட்டுள்ள தேரிக்காடு.
செம்மண் மேடுகளும் சிறுகுன்றுகளும் கொண்டு நீரை மிகுதியாகத் தக்கவைக்க இயலாமல் வறண்டிருக்கும் நிலப்பகுதியை தேரி என்றும் தேரிக்காடு என்றும் சொல்லப்படுகிறது. தமிழகத்தில் தூத்துக்குடி மாவட்டத்தில் திருச்செந்தூர், சாத்தான்குளம் பகுதிகளிலும், திருநெல்வேலி மாவட்டத்தில் நாங்குநேரி, இராதாபுர வட்டங்களிலும் அமைந்துள்ளது தேரிக்காடுகள். தேரிக்காடான ‘எப்போதும் வென்றான் பகுதியிலிருந்து முப்போகம் விளையும் தேனி-கம்பம் பள்ளத்தாக்கு பகுதிக்கு குடிபெயரும் மக்கள் தொகுதியின் (மூன்று குடும்பம்) கதைதான் தேரிக்காடு. இது மூன்று பாகமாக சொல்லப்படுகிறது.
முதல் பாகம் முத்துமாடன் நாடாரின் மொழியாக சொல்லப்படுகிறது
எப்போதும்வென்றான் ஊரில் மழை பொய்த்துப் போய் காடு கரைகள் எல்லாம் வௌச்சல் இல்லாமல் பசியும் பட்டினியுமாகத் தவித்திருக்கிறது. அதோடு பசிக்கும், பஞ்சத்திற்கும் ஊரில் திருட்டு சம்பவங்கள் அரங்கேற, முத்துமாடன் நாடன், அவரது உறவுச் சகாவான மணியம் நாடார், மாரியப்பன் மூவரும் கலந்து பேசி ஊரில் யாரிடமும் சொல்லிக் கொள்ளாமல் இரவேடு இரவாக ஊரைவிட்டு பஞ்சம் பிழைக்க புறப்படுகிறார்கள். குடும்ப சகிதமாக கால் நடையாகக் கடந்து, உசிலம்பட்டி கணவாய் வழியாக ஆங்காங்கே தங்கி சமைத்து சாப்பிட்டபடி தேனி பகுதிக்கு வருகிறார்கள். சத்திரத்தில் தங்கி, சந்தையில் வியாபாரத்தை துவங்குகிறார்கள். தேவாரம் ஜமீனை சந்திக்கிறார்கள். அவர் தயவால் முத்து மாடன் அவர் சமூகத்திற்கு நாட்டாமையாக நியமிக்கப்படுகிறார். ஜமீன் இடம் தர தேவாரம் வடக்குத் தெருவில் வீடு கட்டிக் குடியேறுகிறார்கள். முத்து மாடனுக்கு மூன்று மகன்கள் பிறக்கிறார்கள். மூவரும் வளர்ந்து பெரியவர்களாகிறார்கள். முத்துமாடன் நாடாரின் வளர்ச்சியைப் பொறுக்க முடியாத மற்ற சமூக மக்களால் ஊரில் (சாதி அடிப்படையில்) கலவரம் வெடிக்கிறது. கலவரத்தின் காரணமாக ஏற்பட்ட பழியிலிருந்து ஒரு பாதிரியார் காக்க, முத்துமாடன் குடும்பம் இந்து மதத்தைவிட்டு ‘வேத‘த்திற்கு மாறுகிறது. அன்றைய காலகட்டத்தில் சாதி ரீதியாக இருந்து வந்த அடக்கு முறையும், பாகுபாடுகளும், ஏற்றத்தாழ்வுகளும் எற்படுத்தும் தாக்கம் மத மாற்றத்திற்கு வழிவகுக்கிறது. ஒரு மனிதனின் தன்மானம், சமூக நிலை தனிமனித மரியாதைக்கு பங்கம் ஏற்படும் போது, அவன் பிறப்பெடுத்த இனத்தின் பெயரால் அவன் இழிவுபடுத்தப்படும்போதுதான் அவன் அதுவரை நம்பி வந்த கடவுளைப் புறந்தள்ள முடிவெடுக்கிறான் என்ற புரிதல் மதமாற்றம் ஏன் நடக்கிறது? எதற்காக நடக்கிறது? ஒருவன் அது வரை நம்பி வந்த கடவுளை விட்டு வேறு ஒரு கடவுளை ஏன் தேர்ந்தெடுக்கிறான் என்பதற்கு விடையாக அமைகிறது.
இரண்டாம் பாகம் முத்துமாடன் நாடாரின் மூன்றாவது மகனான அய்யம் பெருமாள் என்ற ஆசீர்வாதத்தின் மொழியாக விரிகிறது. முத்துமாடன் நாடாரின் மூன்றாவது மகனான அய்யம் பெருமாள் திருமுழுக்கிற்குப்பின் ஆசீரவாதம் என்ற பெயரில் அறியப்படுகிறார். குடும்பச் சூழ்நிலை காரணமாக, வியாபார நிமித்தம் காரணமாக மலையிலேயே தங்கி வியாபாரத்தைக் கவனித்து தோட்டம், எஸ்டேட்டுகளை வாங்குகிறார். மலையிலுள்ள எஸ்டேட் கடைகளுக்கான சரக்குகளை அவர் அண்ணன் அருளானந்தம் அனுப்புகிறார். தேயிலைத் தோட்ட எஸ்டேட் கடைகளுக்கு பலசரக்குகளை வியாபாரம் செய்கையில் ஒரு கட்டத்தில் பண வரவு நின்று விடுகிறது. அதற்காக கம்பேனி பத்தாயிரம் ரூபாக்கு காசோலை தர, அதை பணமாக மாற்ற மதுரைக்கு எடுத்துச் செல்கிறார்கள். காசோலையை பணமாக மாற்ற இரண்டு நாட்களாகும் என்று சொல்லப்பட, தெரிந்த நபரை மாற்றி எடுத்து வரும் படி சொல்லிவிட்டு திரும்புகிறார். பணத்தை மாற்றிக் கொண்ட மனிதர் ஊர் திரும்பவே இல்லை. அவரையும் காணவில்லை பணத்தையும் காணவில்லை. பெரிய இழப்பைச் சந்திக்கிறார்கள். அதன் பிறகு மற்றொரு சமயம் மலையிலுள்ள எஸ்டேட்டிற்கு சரக்குகளை (கழுதை) கால்நடைகளின் வழியே அனுப்புகிறார்கள். பேய் மழையால் சரக்குகள் கவிழ்ந்து, கால்நடைகள் உயிரிழந்து மற்றொரு பெரிய இழப்பைத் தருகிறது. அந்த இழப்பை சரிசெய்ய இருந்த நிலங்களையும், எஸ்டேட்களையும் விற்று கடனை அடைக்கிறார் ஆசீர்வாதம். குடும்பத்திற்காக வீடு கட்டும் கூலி வேலைக்குச் செல்கிறார். அதில் முன்னேறி பாலம் கட்டும் ஒப்பந்த வேலை பெற்று வளர்கிறார். நான்கு மகள்கள் நான்கு மகன்கள் என்று குடும்பம் பெருகுகிறது. ஊரில் தேவாலயம் கட்டுகிறார். இழந்த சொத்துக்களை சிறிது சிறிதாக மீட்டெடுக்கிறார்.
மூன்றாம் பாகம் முத்துமாடன் நாடாரின் மகனான அய்யம் பெருமாள் என்ற ஆசீர்வாதத்தின் மகனான முத்துபாக்கியத்தின் மொழியாகச் சொல்லப்படுகிறது. முத்து பாக்கியம் தலைமுறையில் கல்வி அவர்கள் குடும்பத்திற்குள் புகுகிறது. அந்தத் தலைமுறையினர் அனைவரும் கல்வியின் முக்கியத்துவத்தை அறிந்தவர்களாக இருக்கிறார்கள். முத்துபாக்கியம் மதுரை சென்று கல்வி கற்கிறார். ஆசிரியர் பயிற்சி முடித்து ஆசிரியராகிறார். இடம் மாற்றம் வாங்கிக் கொண்டு தேனி சரஸ்வதி நாடார் ஆரம்பப்பள்ளியில் சேருகிறார். அதன் பின் தேவாரத்தில் விவேகானந்தா வித்யாலயாவில் தலைமை ஆசிரியராக சேருகிறார். உறவு முறை பெண்களைவிடுத்து வேறு சொந்தத்தில் திருமணம் செய்து கொள்கிறார். காலச்சக்கரத்தின் சுழற்சியில் தனிக்குடித்தனம் வருகிறார். பணி நிமித்தமாக சின்னமனூர் அருகிலுள்ள காமாட்சிபுரம் வருகிறார். புதுப்பணியில் சேர்ந்து, நட்பு வட்டத்தின் வழியாக மார்க்ஸியவாதியாக மாறுகிறார். காமாட்சிபுரம் பள்ளியின் தரத்தை உயர்த்த மாவட்ட ஆட்சியரின் தயவால் முன்னெடுக்கிறார்.அதை உயர் நிலைப் பள்ளியாக உயர்த்துகிறார். நல்லாசிரியர் விருது பெறுகிறார். பணி ஓய்வுக்குப் பின் தேவாரத்தில் தனது பூர்வீக வீட்டிற்கு 37 ஆண்டுகளுக்குப் பின் திரும்புகிறார். தன் தகப்பனார் கட்டிய வீட்டில் சென்று குடியேறியவுடன் அவருக்கு நிம்மதிப் பெருமூச்சு வருவதோடு நிறைகிறது.
தேரிக்காட்டில் உலவத் துவங்கியதுமே இது வாழ்க்கை வரலாற்றை விவரிக்கிறதா, கட்டுரைத் தொடராக விவரிக்கிறதா என்ற ஐயம் ஆரம்பத்தில் ஏற்படவே செய்கிறது. ஆனால் அது மூன்று தலைமுறை மக்களின் வாழ்க்கையும், வாழ்வியல் முறைகளையும், நிலவியல் அமைப்புகளையும் எடுத்துச் சொல்லச் சொல்ல அந்த ஐயப்பாடு கரைந்து காணாமல் போகிறது. கடந்த நூற்றாண்டில் தமிழகத்தில் இருந்த ஊர் நிர்வாக முறை, விவசாய முறை, வீடு கட்டும் முறை, மருத்துவ முறை, போக்கு வரத்து, கால்நடைகள் பராமரிப்பு, நிதி நிர்வாகம், பாகப்பிரிவினை என்று சகல நிலவியல் அமைப்புகளும் துல்லியமாக விவரிக்கப்படுகையில், அந்தக் காலகட்டத்து மண்ணுடனும், மனிதர்களுடனும் ஒரு பயணியாக மாறி பயணிக்கத்துவங்குகிறோம். மூன்று தலைமுறை மனிதர்களை சந்தித்த திருப்தியையும், அவர்கள் வாழ்க்கையை அருகில் இருந்து கண்ட தரிசனத்தையும், மண்ணுடனும், மனிதர்களுடனும் நெருக்கி நின்று நுகர்ந்த நறுமணத்தையும் வீரியம் குறையாமல் அழகாக கமழச் செய்கிறது தேரிக்காடு