மயிலம் இளமுருகு
ஒவ்வொருவரும் தன்னுடைய கருத்தினைப் பல்வேறு ஊடகத்தொடர்பு சாதனங்களின் வழியாக வெளிப்படுத்தி வருகின்றனர். சமூகம் குறித்தான தன்னுடைய புரிதல்களையும் முன் எழுதப்பட்டுள்ள படைப்புகளையும் கலைகள் பற்றிய மீளாய்வு என்ற வகையிலும் தற்போது படைப்பாளர்கள் இயங்கிக்கொண்டு வருகின்றனர். குறிப்பிடத்தகுந்த துறையாக இலக்கியம் அமைகின்றது. கவிதை, சிறுகதை, நாவல், கட்டுரை என்பன முக்கிய இடத்தை வகிக்கின்றன. அந்தவகையில் 2016 இல் ஆங்கில மொழியில் சாந்தி சித்ரா எழுதிய நாவல் The Fractals என்பதாகும். இந்நாவல் பிரேம்சந்த் விருதினைப் பெற்றது.
இந்நாவல் குறித்து கவிஞர் சல்மா பின்வருமாறு கூறுகிறார். மிகச்சிறந்த கலைத்திறனுடன் படைக்கப்பட்டிருக்கும் இந்நாவல் நவீனகால வாழ்வின் கடினமான கட்டமைக்கப்பட்ட கருப்புப் பக்கங்களையும் அதைச் சூழ்ந்துள்ள காரணிகளையும் மிக நுணுக்கமாக அலசுகிறது என்கிறார். இந்நாவலாசிரியர் எழுதிய இன்னொரு நாவல் Lonely Marriages (2018) என்பதாகும்.
The Fractals என்ற இந்நாவலை தமிழில் மொழிபெயர்த்துத் தந்திருக்கிறார் பா. ஜெய்கணேஷ். இது இவருடைய முதல் மொழிபெயர்ப்பு நூலாகும். இவர் ஏற்கனவே ஆய்வாளர், கவிஞர் மற்றும் பொதிகை தொலைக்காட்சியின் ழகரம் நிகழ்வின் நெறியாளர் என்றே அறியப்பட்டவர். இம்மொழிபெயர்ப்பு மூலம் மொழிபெயர்ப்பாளர் என்றும் தன்னை நிலைநிறுத்திக் கொண்டுள்ளார். இந்நூலைப் பரிசல் புத்தகம் வெளியிட்டுள்ளது. அட்டைப் படம் தொடங்கி அச்சாக்கம் வரை அருமையாக உள்ளது.
நாவல் அமைப்பு
நாவலை எழுத்தாளர்கள் பல்வேறு வடிவங்களில், எழுத்துமுறையில் தனக்குப் பிடித்தமான வடிவத்தில் எழுதுகின்றனர். கதை சொல்லும்முறை, சொற்கள் என்பன முக்கிய இடம் வகிக்கின்றன. அவ்வகையில் 384 பக்கங்கள் கொண்ட இந்நாவல் ஐந்து பெரும் தலைப்புகளின் ஊடாக சொல்லப்பட்டுள்ளது. அதனுள்ளும்
- மரணப்படுக்கை என்ற தலைப்பில் நான்கு உட்பகுதிகள் கொடுக்கப்பட்டுள்ளன.
- மஞ்சுளா என்ற தலைப்பில் நான்கு உட்பகுதிகள் தரப்பட்டுள்ளன.
- முந்தைய நாட்களில் என்ற தலைப்பில் ஏழு உட்பகுதிகள் தரப்பட்டுள்ளன.
- நிகழ்காலப் பொழுதில் என்ற தலைப்பில் மூன்று உட்தலைப்புகள் கொடுக்கப்பட்டு அதனுள்ளும் உட்தலைப்புகள் கொடுக்கப்பட்டு மேலும் கதை வெளிப்படுத்தப்பட்டுள்ளது 1. உமா -10 உட்பகுதிகள் 2. சரஸ்வதி -7 உட்பகுதிகள் 3. கங்கா – 10 உட்பகுதிகள் 5. நிறைவை நோக்கி என நாவல் கட்டமைக்கப்பட்டுள்ளது.
கதாப்பாத்திரங்கள்
கதைகளுக்கு ஏற்ற கதாபாத்திரங்கள் அமைகின்றன. சிறுகதைகள் எனில் 10 க்குள் கதைமாந்தர்கள் அமைக்கப்பட்டிருப்பர். அதுவே நாவலில் பல கதாபாத்திரங்கள் இடம்பெற்றிருக்கும். அதனுள் முக்கிய கதாப்பாத்திரங்கள், துணைக் கதாப்பாத்திரங்கள் என்பனவற்றைப் படிப்பவர்கள் புரிந்து கொள்வர். அந்தவகையில் இந்நாவலில் 40க்கும் மேற்பட்ட கதாப்பாத்திரங்கள் இடம்பெற்றுள்ளன. நாவலின் இடையிடையே வரும் புராணக்கதைகளின் கதைமாந்தர்களைத் தவிர்த்த எண்ணிக்கைகளே இவையாகும்.
முக்கியமான கதாப்பாத்திரங்கள் - கலியுக்கிழவி – இவர்தான் இந்நாவலின் கதையைச் சொல்பவர்.
- மகமாயி – மஞ்சுளாவின் பெரியம்மா
- மஞ்சுளா – முத்துவின் மகள்
- உமா – மானவ் / ராம் இவர்களின் மனைவி, சிவாவின் காதலி
- சிவா – மஞ்சுளாவின் மகன்
- சரஸ்வதி (சாரா) – மானவ் என்பவரால் பாதிக்கப்பட்டவள்
- மானவ் – உமாவின் கணவன்
- மெர்ஸி – மஞ்சுளாவின் தோழி
- ராம் – உமாவின் இரண்டாவது கணவர்.
- பரேரா – உமாவின் வேலைக்காரர்
- கங்கா – சிவாவைக் காதலிக்கும் பாலியல் தொழிலாளர் இவைத்தவிர ஏனைய கதாபாத்திரங்களாக 29 பேர் உள்ளனர்.
- முத்து – மஞ்சுளாவின் அப்பா
- மாரி – முத்துவின் மனைவி, மகமாயின் தங்கை
- முருகேசன் – சிட்டி மருத்துவர்
- பொன்னம்மா
- துரைக்கண்ணு – மகமாயின் கணவர்
- கோபால் – மஞ்சுளாவின் கணவர்
- தயாளன் – மஞ்சுளாவின் கணவர்
- நிரஞ்சன் – மஞ்சுளாவின் காதலர்
- புரபெசர் ராம்
- ஜெயா மோகன பார்த்தசாரதி – பேச்சாளர்
- ரிச்சர்டு – மெர்சியை விரும்பியவர்
- ரமேஷ் – பிரபாவின் கணவர்
- நிலா – ரமேஷ் இவரை இரண்டாவது திருமணம் செய்தவர் (திருநங்கை)
- பிரபா – ரமேஷின் மனைவி
- கல்யாணி மாமி
- ஆனந்தா சாமியார்
- ஜெபாஸ்டின் ஐயா
- லாரன்ஸ் – பரேராவின் கணவர்
- மவுத்கல்யான் – ரிஷி
- நளாயினி – மவுத்கல்யானின் மனைவி
- மாண்டுவியாஸ் – மகரிஷி
- ராஜகோபாலன் – சாராவின் அப்பா
- பானு – சாராவின் அம்மா
- தனம் – சிவாவின் பக்கத்து வீட்டுக்காரர்
- ராணி – கங்காவின் பக்கத்துவீட்டு கர்ப்பினி அக்கா
- ஷங்கு – கங்காவின் ஏஜென்ட்
- முன்னி – கங்காவின் தோழி
- கொற்றவன் – மஞ்சுளா வேலை செய்த வீட்டுக்காரர்
- அம்பா – மகமாயின் தோழி
நாவல் பேசும் கரு
சமூகத்தில் பெண் எப்படி பார்க்கப்படுகிறாள், எப்படி பார்க்கப்பட வேண்டும் என்பதைஇந்நாவல் விளக்குகிறது. மகளிர்களின் வலியை நாவல் பேசுகிறது. சூழலால் பெண்கள் ஏங்குகின்ற குடும்பம், வலி என்பவற்றைக் கூறுவதாகவும் அவர்களின் ஏக்கங்களை எடுத்துரைப்பதாகவும் இந்நாவல் அமைகிறது. பழைய புராணக் கதைகளை மீள்வாசிப்பு செய்வதாகவும் இது அமைந்துள்ளது. கருத்தியல்களை பேசுவதாகவும் பாலியல் தொழிலாளியின் மன ஓட்டங்களை வெளிச்சமிட்டு காட்டுவதாகவும் இந்நூல் விளங்குகிறது. பெண்ணின் மனம், ஆசை, வலி, கனவு, மனைவி கணவனிடம் எதிர்பார்க்கும் எண்ணங்கள், ஆறுதல், பாதுகாப்பு என்பவற்றைப் பல்வேறு கதாப்பாத்திரங்களின் வழி விலகிச்சென்றுள்ளார் நாவலாசிரியர். பெண்களுக்கு ஆண்கள் செய்யும் தகாத செயல்களும் கூறப்பட்டுள்ளன. பல்வேறு இடங்களில் புராணக்கதை, அறிவியல் செய்திகள், பிறமொழிப்படைப்பாளர்கள், வரலாறு, கவிதை, வாய்மொழிப் பாடல்கள், கதைகள் எனப் பலவற்றை இணைத்தே நாவலை ஆசிரியர் நகர்த்திச் சென்றுள்ளார். இவற்றைக் கொஞ்சம் குறைத்திருக்கலாம்.
கதை
மரத்தடியில் குழந்தைகள் ஒளிந்துகொண்டு விளையாடிக் கொண்டிருந்தனர் என்பதாக நாவல் தொடங்குகிறது. அங்கே கலியுகக்கிழவி கதை சொல்லத் தொடங்குகிறார். தங்களைத் தன் அம்மாக்களிடம் கொண்டு சேர்க்குமாறு வழிதவறிய குழந்தைகள் அந்தப் பாட்டியிடம் கேட்கின்றனர். ஆனால் பாட்டியோ தனக்கு வயதாகிறது என்று கூறித் தவிர்க்கிறார். அங்கிருந்த ஒரு குழந்தையைப் பாம்பு கடித்துவிடுகிறது. அதனால் அக்குழந்தை இறந்துவிட மற்ற குழந்தைகள் அழத்தொடங்குகின்றனர். கிழவி தனக்கு நல்லது செய்யமாட்டாளா என்று குழந்தைகள் ஏங்குகின்றனர். மரணப்படுக்கை என்னும் பகுதியில் உயிர், படைப்பு, விளக்கம், நிலையாமை போன்ற செய்திகள் சொல்லப்பட்டுள்ளன.
மஞ்சுளாவின் அப்பா முத்து தன் கிராமத்திலுள்ள ஊர்க்கழிவறையில் காலைகடனைக் கழித்ததினால் அவருக்கு யானைக்கால்நோய் வந்தது. அதனால் அவர் வருந்தினார். அதனால் தன் வீட்டின் பின்புறத்தில் பாராங்கற்களை ஒன்றன்மேல் ஒன்றாக அடுக்கி அதனைக் கழிவறையாகப் பயன்படுத்தி வந்தார். பக்கத்து வீட்டுக்காரரான டாக்டர் முருகேசன் திட்டவே மனமுடைந்த முத்து தூக்குப்போட்டு இறந்துவிடுகின்றார். இப்பகுதியில் மஞ்சுளாவின் தகப்பனான முத்துவின் வறுமை, இயலாமை, பாசம் போன்றவை கூறப்பப்பட்டுள்ளன.
கலியுகக்கிழவி, மகமாயி அவளுடைய கணவன், குடும்பம் மற்றும் அவரின் உறவினர்கள் பற்றிய கதையைச் சொல்கிறார், சாதிமாறி திருமணம் செய்தவர் மஞ்சுளா. இவரின் மகனான சிவா தன் தாத்தாவின் சாவிற்குக் காரணமான முருகேசன் மீது கோபமாக இருந்தான். இப்பகுதியில் கங்கா குறித்து கூறும்போது வந்துள்ள வர்ணனை அருமையாக உள்ளது.
மஞ்சுளா என்ற தலைப்பிட்டு நான்கு பகுதிகளில் அவரது வாழ்க்கை விவரிக்கப்பட்டுள்ளன. இவர் தயாளனைத் திருமணம் செய்தார். கணவர் குடித்துவிட்டு நடத்தும் வாழ்க்கையை வெறுக்கிறார். இதனால் நிரஞ்சன் என்பவருடன் நெருங்கிப் பழகுகிறாள். இது சிவாவிற்குப் பிடிக்கவில்லை. தயாளன் மஞ்சுளாவைத் திட்ட சிவா அவருடைய கன்னத்தில் அடித்து விடுகிறான். இதைப்பார்த்த மஞ்சுளா இந்நிகழ்வை அடிக்கடி நினைத்து வருந்துகிறார்.
ஜெயா என்பவர் பேசும் பேச்சில் ஈர்ப்பு ஏற்பட்டு அவரைத் தான் பணியாற்றும் இடத்தில் பேச அழைக்கிறார் மஞ்சுளா. ஆனால் அவரது தோழியான மெர்சிக்கு இதில் உடன்பாடு இல்லை. ஜெயாவின் அப்பா என்னைப் பார்த்து நீ ஏன் திருமணம் செய்து கொள்ளக்கூடாது என்று, என்னுடைய தனிப்பட்ட வாழ்க்கைக் குறித்து பேசியதும் ஜெயாவின் வாழ்க்கைமுறை போன்றன பற்றிக்கூறி அவரைப் பேச அழைக்க வேண்டாமென்று கூறுகிறாள். மஞ்சுளாவோ ஜெயாவை பேச அழைப்பதில் தீவிரமாக இருக்கிறார். மகமாயி பாட்டி தன் குடும்பக்கதைகளைக் கூறுகிறாள். முத்து மற்றும் மாரி எனக் கதை நகர்கிறது. முத்துவின் அம்மா தன் கணவரை விட்டு வேறொருவருடன் ஓடினாள் என்றும் பின் அவருடைய மகன் நதியில் மூழ்கி இறந்தபோது அவளும் உயிரிழந்ததாக கதை சொல்லப்பட்டுள்ளது.
மஞ்சுளா தூக்கம், கனவுக் காண்டல், குளித்தல் பிறகு உமா மஞ்சுளாவைச் சந்திக்க கோட்ரஸ் வருதல். இவ்வாறாக கதை விரிவடைகின்றது. மஞ்சுளாவின் காதலன் நிரஞ்சன் வீட்டில் இருப்பானோ என்று எண்ணுகிறாள். தூக்கத்தில் இருந்து மீண்டு மஞ்சுளா பழைய நினைவுகளை அசைபோட்டுப் பார்க்கிறாள். உமாவிடம் பேசுகிறாள். மெர்ஸியா மஞ்சுளாவிடம் பேசுவது, மகன், கணவனை நினைத்து மஞ்சுளா பலவாறு யோசித்துக் கொண்டிருக்கிறாள் என நாவல் விறுவிறுப்படைகிறது.
அடுத்த பகுதியில் மஞ்சுளா, உமாவின் உரையாடல் என நீண்டு செல்கிறது. மேலும் மஞ்சுளா தனக்குள் பேசிக் கொள்கிறார். உமா சிவாவைக் காதலிக்கிறாள். போன் வைத்துக்கொள்ளாத நாடக நடிகரான சிவாவிடம் எப்படி பேசுவது எனத் திகைக்கிறாள் உமா.
முந்தைய நாட்களில் என்னும் பகுதி மகமாயி என்பவரைக் குறித்து விரிவாக விளக்குகிறது. மேலும் இதனுள் அவருடைய கணவர் துரை பற்றியும் அவர் மஞ்சள்காமாலையில் இறந்த தகவலும் கூறப்பட்டுள்ளது. மஞ்சுளா உமாவிடம் தன் பழைய கதைகளைக் கூறுகிறாள். தான் வேலை பார்த்த கொற்றவனுடன் வாழ்க்கை, பிறகு தயாளன், நிரஞ்சன் என அனைத்தையும் விளக்குகிறாள். தான் தன் பாட்டி போன்று வாழ ஆசைப்பட்டேன் என்றும் சொல்கிறாள்.
ஆனால் அதுமுடியாமல் போனது வருத்தம் அளிக்கிறது என்று கூறுகிறாள். பொருள், பெண் சார்ந்த நடப்பு வாழ்வியலை மஞ்சுளா பேசுவதை உமா அமைதியாகக் கேட்டுக் கொண்டிருக்கிறாள். மெர்சி குறித்தும் அவளுடைய கதைகளையும் கூறுகிறாள். கத்தோலிக்கம் பெந்தெகோஸ்து பிறகு தன் காதலனுக்காக கத்தோலிக்க மதத்துக்கு மாறிய தகவலும் கூறப்படுகிறது. மஞ்சுளா தன் வாழ்க்கை சிக்கலானது என்றும் கூறுகிறாள். விரக்தியோடு பேசும் மஞ்சுளாவை ஆறுதலோடு கவனிக்கிறாள் உமா.
மகமாயி கிழவி பலரது கதைகளைக் கூறுகிறாள். புராணக் கதையான ஜமதக்கனி கதையினைக் கூறுகிறாள். பரசுராமனின் செயலும் தன் சகோதரன் தாயை மீட்ட செய்தியும் கூறப்பட்டுள்ளன. மஞ்சுளா தன்னுள் பலவாறு தன் வாழ்க்கையை நினைத்து வருந்துகிறாள். பரசுராமனோடு எதிராக தன் கணவனைச் சிவா அடித்தது தவறு என்று கவலை கொள்கிறாள்.
விதவையான உமா குறித்து தகவல் சொல்லப்பட்டுள்ளது. உமாவின் கணவனான மானவ்வை மஞ்சுளா சந்தித்ததை எண்ணிப் பார்க்கிறாள். அவனுடைய முனைவர்பட்ட வாய்மொழித்தேர்விற்கு மஞ்சுளா செல்கிறாள். அவனைத் தழுவிப் பாராட்டுகிறாள். இவன் தன் மகனாக இருந்திருக்கக் கூடாதா என்று ஏங்குகிறாள். தன்னுடைய வாழ்வில் மறக்க முடியாத நாளாக ஏப்ரல் 11 இருந்துவிட்டதை நினைத்து மகிழ்கிறாள். கணிதத்தையும் வாழ்க்கையும் ஒப்பிட்டு மானவ் அழகுபட விளக்குகிறான்.
உமா மஞ்சுளாவிடம் பல்வேறு விதமான கேள்விகளைக் கேட்கிறாள். குறிப்பாக காதல் என்றால் என்ன? பிறகு ரமேஷ் நிலாவைத் (திருநங்கையை) திருமணம் செய்துகொள்ள அவருடைய மனைவி பிரபா எப்படி ஒத்துக்கொண்டாள் என வினவுகிறாள். பிறகு நிரஞ்சனும் மஞ்சுளாவும் பேசிக்கொள்ளும் உரையாடல் தரப்பட்டுள்ளது.
உமாவிடம் மஞ்சுளா தனக்கும் நிரஞ்சனுக்குமுள்ள உறவைக் கூறுகிறாள். உமா விவரமான பலக் கேள்விகளைக் கேட்டாள். பெண்கள் செய்வது போன்றும் ஆண்களும் செய்தால் நாம் ஏற்றுக்கொள்வோமா? ஆனால் தன் மனைவியை ஆண் விட்டுக்கொடுக்காத பண்பு எத்தகையது என்றும் விளக்குகிறாள். உமா பேசும் பேச்சுகளால் மஞ்சுளா நிலைதடுமாறுகிறாள். நிரஞ்சனுக்கு வயது 29 மஞ்சுளாவிற்கோ 47 வயது என்று நினைத்து தயாளன் குறித்தும் இப்பகுதியில் கூறப்படுகின்றது. மானவ் உமாமீது வைத்துள்ள காதலும் சொல்லப்படுகிறது. ஆண் எத்தனையோ குழந்தைகளுக்குக் காரணமாக இருக்க முடியும். ஆனால் பெண்களால் 20 குழந்தைகள்தான் பெறமுடியும் என்று இயல்புநிலை கூறப்பட்டுள்ளது.
மஞ்சுளாவை நாவலாசிரியர் காமப்பிசாசு என்கிறார். மகிஷி கதை சொல்லப்படுகிறது. புராணக்கதை இடம்பெறுகிறது. சிலவற்றைக்கூறி சமூகத்தை ஆசிரியர் கேள்வி கேட்கிறார்.
ஒரு பெண் தன் காதலைக் கூறினால் அவளைச் சமூகம் வெறுக்கிறது. அருவருப்பாக பார்க்கிறது. ஆனால் ஓரினச் சேர்க்கையை ஏற்றுக் கொள்கிறது. என்ன இது நியதி என்று நாவலாசிரியர் கேள்வி கேட்கின்றார்.
மஞ்சுளா அதிக புத்திசாலி என்றும் அதேசமயம் முழுமையாக புரிந்து கொண்டவள் இல்லை எனவும் காதலித்ததில்லை எனவும் சொல்லப்பட்டுள்ளது. இப்பகுதியில் இருத்தல் மற்றும் வானியல் போன்ற செய்திகள் சொல்லப்பட்டுள்ளன. மகாபலி சக்கரவர்த்தி கதை கொடுக்கப்பட்டுள்ளது . மேக்பெத் என்ற வேடத்தில் சிவா நடிக்கிறார்.
மஞ்சுளா உமா குறித்த வாழ்க்கையை அவள் அழகைத், திறமையை முன்பின் பருவ வாழ்க்கை எனப் பலவற்றைத் தனக்குள் பேசிக் கொள்கிறாள். இடையே கிரேக்க கதை, அதீனா, பிரமிதீயாஸ் கதை கூறப்படுகிறது. உமாவை அனைவரும் விரும்புவர். அப்படி ஒரு அழகு. அவருடைய வாழ்வில் மானவ் வந்ததையும் மஞ்சுளா நினைக்கிறாள். உமாவிடத்து மானவ் காதலைக் கூறியபின் நான் உன்னை விரும்பவில்லை என்கிறாள். மேலும் நான் உன்னுடன் உடலுறவு வைத்துக் கொள்ள முடியாது என்கிறாள். அதைக் கேட்ட மானவ் நான் அதிகமான பெண்களைப் பார்க்கிறேன். பழகுகிறேன். ஆனால் உன்னுடன் மட்டுமே வாழ ஆசைப்படுகிறேன் என்று சொல்லித் திருமணம் செய்து கொள்கிறார்.
உமாவிற்கு அவளது வேலைக்காரி பரேரா இன்னொரு மஞ்சுளாவாக போதிமரமாக சொல்லப்படுகிறாள். ஒருவர் கொஞ்சும்போதைவிட திட்டும்போதுதான் அவர் நேர்மையாக இருப்பார். ஆனால் அப்படிப்பட்டவரை யாருக்கும் பிடிக்காது. கடவுளை நாம் தேடுகின்ற குருடர்கள் என்றும் பதிவிடப்பட்டுள்ளது. இது ஆசிரியரின் கடவுள் பற்றிய பார்வையாக இருக்கிறது. (பக்கம்- 185.)
தான் படித்த அறிவியல் செய்திகள், ஆங்கிலக் கவிஞர்களின் செய்திகள், சேக்ஸ்பியர், ஓட்ஸ்வெர்த் மற்றும் 0 முதல் 1 வரை எனப் பலச்செய்திகள் கூறப்பட்டுள்ளன. பரேரா தன் எளிய வாழ்க்கையைக் குறித்து மகிழ்ச்சி அடைகிறாள். உமா தனக்கும் மானவிற்கும் இடையே காதல், வாழ்க்கை என இன்ன பலவற்றை நினைத்து ஏங்குகிறாள். உமா கடவுளாக வாழ முயற்சித்தாள் என்றும் குறள், நளாயினி, மழை, மேலும் சூரியன் உதிக்காமல் இருக்க இந்திரன் சென்று நளாயினியிடம் பேசி சாபத்தைத் திரும்பப் பெறுவது என்பன கூறப்பட்டுள்ளன.
மவுத்கல்யான், நளாயினியிடம் வாழ்க்கை நடத்தினான். ஆனால் நளாயினியின் காமம் நிறைவேறவில்லை. இதனால் மகரிஷி கொடுத்த சாபத்தால் பிறகு ஐந்து கணவனுக்கு மனைவியாக, திரெளபதியாக வாழ்வாய் என்று கூறி பிரிந்ததாக கூறப்பட்டுள்ளது. கலியுகக்கிழவி இதனைக் கதைகளாகக்கூற ஓநாய்க் குட்டிகளான மனிதக் குழந்தைகள் கேட்கத் தொடங்கினர்.
மானவ் திட்டிய வார்த்தையால் பாதிப்படைந்த உமா மருத்துவமனையில் இருக்கிறாள். ராம் நாம் அங்குச்சென்று மானவைத் திட்டுகிறான். பிறகு மானவ் வீட்டிற்குச்சென்று உமாவின் காலில் விழுந்து கெஞ்சுகிறான். பிறகு மன்னிப்பு, அழுகை எனக் கதை நகர்கிறது. பல்கலைக்கழக நேர்முகத் தேர்விற்குச் சென்றுவிட்டு மானவ் வந்தான். வெளியில் சென்று இரண்டு மணி நேரம் ஆகியும் அவன் வரவில்லை. உமா மஞ்சுளாவிடம் போன் செய்து நடந்தவற்றைக் கூறுகிறாள்.
உமா போனை வைத்தவுடன் சிவா அருணகிரிக்குச் செல்ல இருந்தான். அவனிடம் மஞ்சுளா பேசினாள். ஊஞ்சலில் சாய்ந்து கனவு கண்டாள். அதில் கணவன் தயாளன் தன் குரல்வளையை நொறுக்குவதுபோல உணர்ந்தாள். அப்போது உமாவின் போன்கால் கேட்டு எழுந்தாள் மஞ்சுளா. 2.10 க்கு கால் செய்தாள். மானவ் விஷச்சாராயம் குடித்ததால் மருத்துவமனையில் இருக்கிறோம் என்றாள் உமா. மானவ் இறந்து விட்டான். அதனால் உமா வருந்துகின்றார். மானவ் சிறுவயதில் ஒரு பெண்ணைத் தன் பாலியல் இச்சைக்காக பயன்படுத்தினான். அவள்தான் துணைவேந்தரின் மகள் என்று அறிந்து வேதனை அடைந்தேன் என்று மானவ் கூறியதை நினைத்து வருந்தினாள் உமா. தான் மிருகம் என்றும் வாழத்தகுதி அற்றவன் என்றும் அவன் கூறினான் என்பது குறிப்பிடத்தக்கது.
சோகத்திலிருந்து மீண்ட உமா சிவாவைக் காதலித்தாள். மெர்சி வேண்டாம் என்றும் தன் தோழி மஞ்சுளாவை நினைத்து யோசி என்று அறிவுரை கூறினாள். கலியுகக்கிழவி கதை கூற குழந்தை ஓநாய்கள் கேட்க.. எனக் கதை நீள்கிறது. காதல்வலி, ஒருதலைக்காதல், காதல் விளக்கம், தாய்மனம் எனக் கதையாடல் தொடர்ந்து கொண்டே செல்கிறது.
இன்றைக்குப் பெண் ஆணாக மாற வேண்டும் என்ற எதிர்பார்ப்பு இருப்பதாகச் சொல்லப்படுகின்றது. சீதா, திரெளபதி, நாளாயினி போன்றோரின் பண்பினை உடைத்து மாறவேண்டியது அவசியமாகிறது என்ற பதிவு கவனிக்கத்தக்கது. உமா சிவாவை நினைத்து வருந்துகிறாள். சிவாவை நம்பும் உமாவைப் நினைத்து மெர்சி யோசிக்கிறாள். தன் காதலைச் சொன்னவுடன் மகிழ்கிறாள். வரும்வழியில் சாராவுடன் பேசுகிறாள். போகன்வில்லா பூ தொடங்கி உமாவிடம் புத்தகம் கொடுத்து இதனைப் படித்து விட்டுக் கொடுங்கள் என்று சொல்கிறாள் சாரா.
புத்தகத்தைப் படித்துவிட்டு செல்போனில் அழைத்து திட்டினாள் உமா. பிறகு சிவாவுக்குப் போன் போட்டு நடந்ததைக் கூறினாள். உன்னை நான் காப்பாற்ற வேண்டும் என்று சொல்ல அவனோ உமாவை ஏளனமாக பேசித் திட்டினான். தன்னிடம் பேசுவது மானவ் மனைவிதானே என நினைக்கின்ற சூழலையும் ஆசிரியர் பதிவு செய்துள்ளார்.
உமா, ராமிடம் சாராவைப்பற்றி கூறி நீ அவளைக் காதலித்து திருமணம் செய்துகொள் என வழி அமைக்கின்றாள். அவனோ நான் உன்னைத் விரும்புகிறேன் என்கிறான். இப்படியாக சாராவைப்பற்றி கூறி அவரிடம் பேசவைத்து இருவரும் காதலிக்க தொடங்கினர். உமாவின் எண்ணம் சிவா என்ற கலைஞன் சாராவால் அழிந்துவிடக்கூடாது என்பதில் குறியாக இருந்து செயல்பட்டாள். சிவாவும் உமாவும் நாடகம் பார்க்க வேண்டி வரிசையில் நிற்கின்றனர். அப்போது உமா சொல்லும் வார்த்தைகள் சிவாவிற்குக் கோபத்தை வரவழைத்தது. பருத்த ஆட்களை பிடிக்காது என்ற எண்ணத்தைச் சிவா மறுத்து பேசுவதை உமா எதிர்பார்க்கவில்லை. இதனால் வாக்குவாதம் ஏற்பட்டு சிவா கோபமாக உமாவைவிட்டு சென்று விடுகிறான்.
பல்வேறு பூடகமான கருத்துக்கள் நாவலில் கூறப்பட்டுள்ளன. செய்தித்தாளில் 17 வயது சிறுவன் ஒரு பெண்ணின் யோனியில் துருப்பிடித்த இரும்புக்குழாயைத் சொருகினான் என்பதைப் பார்த்து அதிர்ச்சியாகிறாள். இது டெல்லி சம்பவம் என்பது குறிப்பிடத்தக்கது. அவளது எண்ணங்கள் பலவாறு அசைபோடுகின்றன. இடையில் ஹிட்லர் குறித்தும் வால்மீகி குறித்தும் தகவல்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
சாராவிடமிருந்து சிவாவைக் காப்பாற்றி விட்டதாக நினைத்தாள் உமா. சாரா ராமை ஏமாற்றிவிட்டாள். இதனைச் சிவாவிடம் வந்து கூறினாள். அதற்கு சாரா பற்றி நீயும் மானவும் சேர்ந்து அவளை அழித்துவிட்டீர்களே என்று சொன்னான். ஒன்றும் புரியாமல் உமா சிவா கூறுவதைக் கேட்டு சிந்தனை செய்ய ஆரம்பித்தாள். சிவா நான் உன்னைக் காதலித்ததை அசிங்கமாக நினைக்கிறேன் என்று கூறியவுடன் உமா ஏமாற்றம் அடைந்தாள். வெறுத்துப்போன உமா பரிகாரமாக ராமனிடம் சென்று என்னைத் திருமணம் செய்து கொள்வாயா? என்று கேட்கிறாள்.
ராஜகோபால் பானு என்பவரின் மகளே சாரா என்ற சரஸ்வதி ஆவார். இவர்கள் மகளை நன்கு வளர்க்கின்றனர். ஆனால் இவர் இமால்டா என்பவரைக் காதல் செய்கிறாள். அவள் பிரிந்து செல்கிறாள் வருத்தத்தில் மூழ்குகிறாள். முகம்தெரியாத நபரை இணையதளத்தில் நினைத்து வாழ்கிறாள். கஞ்சா, மதுவிற்கு சாரா அடிமையாகிறாள். அந்நபர் கூறும் அனைத்தையும் செய்கிறாள் சாரா. அந்நபரின் சொல்கேட்டு தனது அறைத்தோழிகளை அரைகுறை ஆடைகளுடன் புகைப்படங்களை எடுத்து அனுப்புகிறாள். இது பூதாகரமாகிறது. பள்ளி நிர்வாகம் அவரை நீக்கியது. பிறகு கல்லூரிக்குச் சென்று படிக்கிறாள். அப்போது முழுக்க ஆணாக மாறிய இவள் தன்னைப் போன்ற பெண் ஆணுடன் காதலிக்க தொடங்குகிறாள்.
சிவா திட்டியவுடன் ராமுடன் திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்து அதன் வேலைகளில் இறங்குகிறாள் உமா. சிவா உமா மீது காதல் கொண்டு உமா வீட்டுக்கு வர அங்கு அவள் இல்லாமல் வேலைக்காரி பரேரா.. உமா ராம் சாருடன் வெளியில் சென்றுள்ளார் என்று கூறுகிறார். வீட்டுக்கு வர நேரமாகும் என்று சொல்லி அவள் தன் வீட்டுக்குச் சென்று விடுகிறாள். உமா வீட்டுக்குள் வரும்போது இருளில் ஒரு உருவம் வெளிவருவதை நினைத்து எதிர்த்து அதிர்ச்சி அடைகிறாள். மானவை நான்தான் கொலை செய்தேன் என்று புலம்புவதைக் கேட்ட சிவா அவளை ஆசுவாசப்படுத்துகிறான். சிவா மானவ்தான் சாராவை அழித்த விஷயத்தைக் கூறுகிறான். மானவே குடித்திருந்தபோது என்னிடம் கூறினான் என்று சொல்ல உமா வியப்படைகிறாள். சிவா உமாவிடம் என்னைத் திருமணம் செய்துகொள் என்று கேட்க உமா மறுத்து விட வருந்துகிறான் சிவா.
கல்யாணநாள் நெருங்கியது. ராம் மகிழ்ச்சியில் மிதந்தான். உமா ராமை விரும்பி மணக்கவில்லை. கடமைக்காக, இழப்பீடாகவே மணக்க விரும்பினாள். சிவா துன்பத்தின் உச்சத்திற்குச் சென்றான். தினமும் குடி, கஞ்சா, களவு என வாழ்க்கை நகர்ந்தது. மெர்சி பேசிய பேச்சைக்கேட்டு தறிகெட்டு ஓடினான் சிவா. உடல் பாதிக்கப்பட்டு பின்பு போதையிலிருந்து மீண்டு தன்னைப் பார்த்து மீண்டான். மஞ்சுளா இரண்டும் கெட்ட மனநிலையில் இருந்தாள். திருமணம் செய்துகொண்ட உமா மகிழ்ச்சியாக இருப்பதாக தோழிகள் நினைத்தனர். ஆனால் அவ்வாறு இல்லாமல் உமா உடல்நலம் பாதிக்கப்பட்டாள். சிவாவின் மடியில் சாய சிவாவிடம் அறிவுரை கூறி தன் வீடு திரும்புகிறாள்.
வாழ்க்கையை வெறுத்து சிவா வடநாட்டிலுள்ள வாரணாசிக்குச் செல்கிறான். ரயில்நிலையத்தில் சிவாவிற்கும் பைத்தியக்காரனுக்கும் இடையில் நடக்கும் உரையாடல் சுவாரசியமானது. பெண்களின் ஆசை தீர்வதே இல்லை என நாவல் முழுக்கப் பேசுகிறது.
உமாவின் வீட்டுக்கு மெர்சி வருகிறாள். ராம் அவளை இன்முகத்துடன் வரவேற்றான். உமா தன் சோக வாழ்க்கையைக் கூறினாள். தான் அடைந்த பழைய, புதிய வாழ்வு பழியுடன் தொடர்வதாகவே தெரிவிக்கிறாள். மெர்சியும் அதைக்கேட்டு அழுகிறாள். பிறகு எப்படியாவது ராமைக் காப்பாற்ற வேண்டும் என்று முயற்சியில் ஈடுபடுகிறாள் மெர்சி.
மஞ்சுளா தன் மகன் சிவாவைப் பதினோராம் வகுப்பு படிக்கும்போது பக்கத்துவீட்டு தனம் என்பவரிடம் விட்டுவிட்டு அலுவலகம் சென்றாள். சிவாவிடம் பாலியல் ரீதியாக தனம் செயல்பட்டாள். இவ்வாறே சிவா தன் குழந்தைப் பருவத்தை இழந்தான் என்று கூறப்பட்டுள்ளது.
இந்நாவலில் இந்த இடத்தில் கங்கா அறிமுகம் செய்யப்படுகிறாள். உடலைவிற்று வாழும் கங்காவிற்கும் சிவாவிற்கும் பழக்கம் ஏற்படுகிறது. உலக உணர்வுகளையும் கொண்டவனாக சிவா மாறிப்போகிறான். கங்காவை வண்டியில் வீடுவரை அழைத்துவந்து விட்டுவிட்டுச் செல்கிறான் சிவா. அவன் வராத நாட்களில் போன்செய்து பத்திரமாக இரு என்கிறான். போன்செய்யும்போது கடைக்காரருக்கு மூன்று மடங்கு பணம் கொடுக்கிறாள் கங்கா. பொதுவாக பெண்களின் அழகைச் சொல்லும்போது அவள் அழகை வர்ணிக்க கவிஞனாலும் படைத்த கடவுளாலும்தான் முடியும் என்று பல்வேறு இடங்களில் கூறப்பட்டுள்ளது. அவ்வாறு நாவலில் வரும் பெரும்பாலானோரை அழகாகக் காட்டியுள்ளார் ஆசிரியர். இக்கதைகளை கலியுகக் கிழவி கூற ஓநாய்கள் மனிதக் குழந்தைகளாக மாறிக் கொண்டிருந்த ஓநாய்க் குட்டிகள் என்று பக்கம் 334 இல் கூறப்பட்டுள்ளது.
பெண்களின் ஏக்கம் பல்வேறு இடங்களில் கூறப்படுகிறது. அவை நிராசையாகவே உள்ளதாகவும் பதிவு செய்யப்பட்டுள்ளது. பாராட்டு, பாதுகாப்பு, இன்சொல், ஆறுதல் என்பதற்காக பெண்கள் ஏங்குவதாக சித்தரிக்கப்பட்டுள்ளது. தன் கணவர் வராத சூழலில் பக்கத்துவீட்டு ராணி அவரின் தம்பி மாணிக்கத்திடம் நெருங்கி பழகுகிறாள். நீண்டநாள் கழித்து வந்த தன் கணவனிடம் வெறுப்பைக் காட்டுகிறாள். தன்னை மகாராணியாகவும் மாணிக்கத்தை ராஜாவாகவும் நினைத்து வந்தாள். மாணிக்கத்தின் வருகைக்காக ஏங்குகிறாள். நெருங்கிய பழக்கத்தால் குழந்தைக்கரு உருவாகிவிடுகிறது. எல்லாம் கடந்து மாடியில் ஏறுபவரிடம் ஒருவர் வந்துள்ளார் என ஷங்கி கூற… முடியாது எனக்கூறி பால்கனி சென்று அமர்கிறாள்.
கங்கா 13 வயதிலேயே தன் தாய், அத்தையைப் போன்று இந்தப் பாலியல் தொழிலுக்கு வந்துவிட்டாள். முன்னி என்கிற தோழி இவளிடம் பாசமாக இருக்கிறார். அதே சமயம் தன்னிடம் மற்றவர்கள் வருவதில்லை என்றும் எல்லாரும் உன்னைத்தேடி வருகின்றனர் என்றும் நீ என்ன மந்திரம் செய்தாய் என்று கேட்கிறாள். அதற்கு கங்கா நான் கற்பனைக் கணவனைத்தேடிக் காண்பேன் என்கிறாள். சிவாவை நினைத்து வருந்துகிறாள்.
சிவாவிடம் அன்பாக இருக்கும்போது சிவாவோ உமாவை நினைத்து வருந்துகிறான். மஞ்சுளா சிவாவைப்பற்றி உமாவிடம் கூறுகிறாள். உமா சிவாவைப்பற்றி கிண்டல் அடிக்கிறாள். இதனைக் கலியுகக்கிழவி சொல்ல ஓநாய்கள் கேட்டுக் கொண்டிருந்தன. சிவாவிடம் முன்னி சென்று கங்கா தற்கொலை செய்து கொண்டதுபற்றியும் கூட்ட நெரிசலில் பள்ளிவாசலில் நடிகர் ஒருவர் மதம்மாறிய சூழலில் இறந்துவிட்டாள் என்கிறாள். உன்னிடம் கொடுக்கும்படி கங்கா கடிதம் கொடுக்கச் சொன்னாள் என்றுகூறி சிவாவிடம் கடிதத்தைக் கொடுத்தாள். அதைப் படித்துப் பார்த்து ஆழ்ந்த வருத்தத்துடன் தன் வாழ்க்கைச் சூழல்களையும் மனதையும் காதலையும் நினைத்து நொந்துகொள்கிறான் சிவா.
தான் கங்காவுடன் வாழவில்லையே என்று வருந்துகிறான். முன்பு இருவருக்கும் நடந்த உரையாடலை நினைத்து துன்பப்படுகிறான். உமாவிற்கும் ராமிற்கும் விவாகரத்து வந்துவிட்டதுதானே உடனே நீ அவளைத் திருமணம் செய்துகொள் என்பவற்றை தான் கேள்விப்பட்டு நினைக்கின்றான். முன்பு நடந்தவைகள் மீண்டும் சொல்லப்படுகின்றன. கங்கா வெளியில் செல்கிறாள். மயக்கமுற்று கீழே சாய்கிறாள். அங்கே மூதாட்டி ஒருவர் உதவி செய்கிறார். எத்தனையாவது மாதம் என்று கேட்க மூன்றாவது மாதம் என்கிறாள் கங்கா. உன் கணவனை வரச்சொல் என்று கூறியவுடன் நான் யாரை வரச்சொல்வேன் (எந்தக் கணவரை) என்று சொன்னவுடன் மூதாட்டி வியக்கிறார்.
மகமாயி சொல்லும் அனைத்தையும் குறித்து கேள்விகேட்கிறாள் அம்பா என்ற பேத்தி. ஒரு நாள் கல்லூரி சென்றுவிட்டு வீடு திரும்பி இருக்கிறாள். மகமாயி இயல்புநிலை திரும்பி பின்பு ஒருநாள் சாராவை அழைத்துவந்து இனிமேல் இவருடன்தான் வாழப்போகிறேன் என்கிறாள். அம்பை, சிகண்டி எனக் கதையைத் தொடர்கிறார் ஆசிரியர். கங்கா கங்கையோடு ஒப்பிட்டு சொல்லப்படுகின்றாள். கங்கா வருந்துகின்ற செய்தியும் சொல்லப்பட்டுள்ளது.
மஞ்சுளாவும் உமாவும் பேசிக்கொள்வதாக கதை நகர்கிறது. இந்திரன் – அகல்யா அவர் கணவர் கல்லாக மாறும்படி சபித்தான். ஏன் என்று கேட்கிறாள். சீனாவில் ரேப் ஆப் நான்சிங் ஜப்பானியர் செய்தனர். ஜெர்மன் யூதப்பெண்களையும் ரஷ்யர் ஜெர்மானிய பெண்களையும் கற்பழித்த செய்திகள் விவரிக்கப்பட்டுள்ளன. என இவ்வாறு அரசியலோடு நாவல் பயணிக்கிறது. உமாவின் ஆய்விற்குத் தடை விதிக்கப்படுகிறது. மானவை உமா படுகொலை செய்ததையும் மஞ்சுளாவின் உதவியால் அது தற்கொலை என்று பதிவு செய்யப்பட்டதும் கூறப்பட்டுள்ளது.
உமா, அம்பா, கங்கா, சிவா, மஞ்சுளா என்பவர்கள் குட்டி ஓநாய்களாக இருந்திட வானவில்லின் வண்ணமாக தன்னைத் தொலைத்து தன்னைக் கண்டுபிடிக்க அவர்கள் கதைகளாக மாறினர் என்று கூறப்படுகிறது. மஞ்சுளா சத்யசாகரின் ரிபப்ளிக் ஆப் ரேப் குறித்து மேடையில் பேசியதையும் இந்நிகழ்வு சார்ந்த புகைப்படங்களை ஆர்வத்தோடு முகநூலில் பதிவேற்றம் செய்து கொண்டிருந்தார். சிவா பெல்ஜியம் நாடக மேடையில் சீதையின் அக்னிப் பிரவேசம் என்ற நாடகத்தை அரங்கேற்றம் செய்தான்.
நாவல் நிறைவு
இரவில் கலியுகக் கிழவி கதைச் சொல்ல குழந்தைகள் கதைகளைக் கேட்டனர். எங்கள் நண்பனைக் கொன்ற பாம்பினைக் கொல்வது தவறா? என்று கேட்ட குழந்தைக்குத் தகுந்த பதில் கூறினாள் கலியுகம். பாவம் – புண்ணியம், சொர்க்கம் – நரகம், பாவம் – குற்றம் எனப் பலவற்றைக் கலியுகம் விளக்கினார்.
உமா கலியுகத்தின் புடவையைப் பிடித்து அழுதாள். அவளை வாரி அணைத்து ஆறுதல் தந்தாள். சிவா தனக்கும் கூறும்படி கேட்க ஆண்களுக்கு கூறமாட்டேன் என்றாள் கலியுகம். தாங்கிக் கொள்ளப் பழகு. ஆறுதல் தர பழகு என அறிவுரை கூறினாள். குழந்தைகள் இப்போதும் பலூன்களுக்குப் பின்னால் ஓடிக் கொண்டிருந்தனர். எருது பெரும் துன்பத்திற்குக் காரணம் தன் கொம்பை மறந்ததே ஆகும். பெண்கள் தாம் பெண் என்பதை மறந்து விட்டதே அவர்கள் அடையும் துன்பத்திற்குக் காரணம் என்று சொல்லப்பட்டுள்ளது.
நாவலில் உவமைகள், பெண் சார்ந்து கேட்கின்ற வினாக்கள், புராணக் கதைகளைக் கூறி வினா கேட்டல் எனப் பல இருக்கின்றன. ஆனால் பெண்ணை அழகுப் பொருளாக சித்தரித்து இருப்பதைத் தவிர்த்திருக்கலாம். அதேபோன்று பல்வேறு செய்திகளை இடையிடையே கொடுத்ததினால் ஒரு சில இடங்களில் கட்டுரை படிக்கின்ற மாதிரியான உணர்வு தோன்றுகிறது. புதியதாக உவமைகள், கதைநெறி என்பன நாவலிற்கு வலு சேர்கிறது.
சாதிய எதிர்ப்பு, பெண் விடுதலை, பெண்களின் ஏக்கங்கள், புதிய முற்போக்கு உவமைகள், கவிதைநடை, காதல், மனிதம், கற்பனை, அரசியல், வாசிப்பு, சமூகச்சீர்கேடு, சமூகக்கிளர்ச்சி எனப் பல்வேறு தளங்களில் இந்நாவல் பயணிக்கிறது.உணர்ச்சி மேலிட வைக்கும் எழுத்து, பேச்சு வழக்கு, அறிவுரை, மன அழுத்தம், தாயின் மகத்துவம், இருத்தலைக் கேள்வி கேட்டல், பெண் புலம்பல், பாலியல் பதிவு, இரக்கம், நாசுக்காக கூறல் எனப் பல்வேறு முறையில் பா.ஜெய்கணேஷின் மொழிபெயர்ப்பில் வாசகர்கள் தெரிந்துகொள்ள முடிகிறது. நாவலில் ஒரு சில இடங்களில் எழுத்துப்பிழைகள் உள்ளன. மொழிபெயர்ப்பு ஒரு கலையாகவும் அதேசமயம் விறுவிறுப்பு கொண்டதாகவும் இருக்கவேண்டும். இது இந்நூலில் பொருந்தி வருகின்றது.
மூல ஆசிரியர் எதை உணர்த்திச் சென்றாரோ அதைச் சிறிதளவும் மாறுபடாமல் குறிக்கோள் மொழியில் படைக்க வல்லவரே மொழிபெயர்ப்பாளர் என்பதற்கிணங்க இந்நூல் அமைந்துள்ளது. சிலவிடங்களில் கூறியது கூறல் வந்துள்ளது. அதனைத் தவிர்த்திருக்கலாம். அதைப்போன்று மொழிபெயர்ப்பு, அச்சாக்கம் என்பவற்றில் கவனம் செலுத்தியவர்கள் நூல்கட்டு விடயத்தில் பின்தங்கி இருந்துள்ளனர். மற்றபடி தமிழுக்கு ஒரு நல்வரவே இந்நாவல். தமிழில் தந்த பா. ஜெய்கணேஷ், நூலை எழுதிய ஆசிரியர், வெளியிட்ட பரிசல் பதிப்பகத்தார் ஆகியோருக்கும் வாழ்த்துகள்.
l