ஸ்ரீதர் மணியன்
பூமி மனிதனுக்குச் சொந்தமானதல்ல. மனிதன்தான் பூமிக்கு உரியவன். நாமனைவருமே இதனை இவ்வாறாக, தவறாக, எதிர்மாறாகப் புரிந்து கொண்டுள்ளோம். நாம் இதனைச் சரியான புள்ளியில் ஏற்றுக்கொள்ளும்போது அது நமக்கு நிறையத் தரும்.. 1854ஆம் ஆண்டு சியாட்டில் பகுதி செவ்விந்தியப் பழங்குடி இனமக்களின் குழுத்தலைவர் ஒருவர் கூறிய சொற்கள் இவை.
சுற்றுச்சூழலியல் என்னும் சொல் இன்று பரவலாக அனைவராலும் உச்சரிக்கப்படுகிறது. சாதாரண, எளிய மக்களுக்கும் தற்போது அது குறித்த புரிதல் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. உலகின் எல்லையினை உள்ளங்கைக்குள் அடக்கி வைத்திருக்கும் பன்னாட்டு நிறுவனங்களின் உத்தி, தந்திரம், நுகர்வுக் கலாச்சாரத்தினை ஊக்குவித்து புவிப்பந்திற்கே அச்சமுண்டாக்கும் வகையில் கழிவுகளை உற்பத்தி செய்கின்றன. வளர்ந்து பொருளாதாரத்தில் முன்னேற்றம் அடைந்துள்ள நாடுகளே இத்தகைய கழிவுகளைக் கையாள முறையான மனமின்றி மனம் போன போக்கில் பிற நாட்டுக் கடல்களிலும், எல்லைகளிலும் கள்ளத்தனமாக வீசி எறிகின்றன. 97 விழுக்காடு கடலால் சூழப்பட்டுள்ள நமது புவி வாழ் மக்களுக்கான அடிப்படை உணவு இவ்வாறான பெருங்கடல்களிருந்தே பெறப்படுகிறது என்பதனை வசதியாக அவை மறந்துவிடுகின்றன.
சிதம்பரம் ரவிசந்திரன் சற்றேறக்குறைய இருபதிற்கும் மேற்பட்ட தலைப்புகளில் சூழல் சீர்கேடுகள் பற்றிய தனது ஆதங்கத்தினை மட்டும் வெளிப்படுத்தாது நெகிழியின் துவக்கம் குறித்தும் பல தரவுகளை முன்வைக்கிறார். நெகிழி என்னும் பெயருடைய பிளாஸ்டிக் ஆண்டாண்டிற்கும் உயிரோடிருந்து மனித குலத்திற்கும், புவிப்பந்திற்கும் தீமை செய்யக்கூடியது. இதற்கு நெகிழி என்று பெயரிடப்பட்டிருப்பது நகைமுரண். மைக்ரோ பீட்ஸ் என்று வகைப்படுத்தப்படும் நுண்நெகிழித் துகள்கள் எங்கெங்கு, எவ்வாறு அழகு சாதனப் பொருட்களில் கலக்கப்பட்டு, மனிதனுக்கும், பிற்சேர்க்கையாக ஒட்டு மொத்த உயிரினங்களுக்கும் மாற்றே இல்லாத ஒரு கேடாக உருக்கொள்கிறது என்பதனை விரிவாகப் பதிவு செய்கிறார். இப்பகுதி வாசகனை நிச்சயம் பலத்த அதிர்ச்சிக்கும், சிந்தனைக்கும் உள்ளாக்கும்.
ஓர் ஆண்டில் கடலில் கொட்டப்படும் இத்தகைய நெகிழிப் பொருட்களின் தோராயமாக எட்டு லட்சம் டன்கள் என்னும் அளவு மலைக்க வைக்கிறது. அச்சத்தினை உண்டாக்குகிறது. இன்னமும் இறந்து போகாத பூமி என்ற பகுதி கீழ்க்காணும் பல்வேறு சட்டங்கள் குறித்தும் , அவற்றின் பயன்கள் குறித்தும் விவரித்துச் செல்கிறது. எத்தனை சட்டங்கள் இயற்றப்பட்டிருந்தாலும் அவை உரியவாறு நடைமுறைப் படுத்தப்பட்டாலன்றி என்ன பயன்?
Inter Governmental Panel on Climate Change, World Glacier Monitoring Services Air prevention & control of Pollution Act 1981, Ozone depleting & substance regulation & control rules 2000, 1974 Water Prevention and control of Pollution Act. இவ்வாறு சுற்றுச்சூழல் குறித்த உலகளாவிய பல்வேறு சட்டப்பிரிவுகள், அவற்றின் உட்பிரிவுகள் என எண்ணற்ற தரவுகளை உள்ளார்ந்த ஈடுபாட்டுடன் சேகரித்து அவற்றை நூலாக்கியிருக்கிறார். நூலில் உள்ள அனைத்து கட்டுரைகளிலுமே இத்தகைய பல்வேறு சட்டப்பிரிவுகளை கட்டுரையின் தன்மைக்கேற்ப சிதம்பரம் ரவிச்சந்திரன் இணைத்திருக்கிறார். பூமி இன்னொரு வெள்ளிக்கோள் ஆகிவிடுமா? என்ற தலைப்பிடப்பட்டுள்ள கட்டுரை குறிப்பிடத்தக்கது. பசுமை இல்ல வாயுக்கள் குறித்தும் கட்டுரை உள்ளது. மருத்துவக் கழிவுகளின் வகைகள், அவற்றினை கையாளும் முறை, அவற்றை அழிக்கும் தொழில்நுட்பங்கள் என இவை பற்றியும் ரவிச்சந்திரன் தனது கட்டுரைகளில் கூறுகிறார்.
காலம் சாட்சி என்ற தலைப்பிடப்பட்ட பகுதி மிக்க சுவாரசியமானது. அதில் பனிப்படிவங்கள் குறித்த பல பயனுள்ள தகவல்களை ரவிச்சந்திரன் பதிவிட்டுள்ளார். உதாரணமாக, பனிப்படிவத்தின் வளையங்கள் வாயிலாக அவற்றின் வயதினை அறிந்து கொள்ளுதல். ஐஸ்கோர்கள் (பனிக்கட்டி மாதிரி) எனப்படும் பனிப்படலங்களின் வழியாக குறிப்பிட்ட காலங்களில் நிலவிய வெப்பநிலை குறித்த தகவல்கள் கிடைக்கின்றன. ஈஸ்டர்ன் டிராபிக்கலில் கிடைத்த இத்தகைய ஐஸ்கோரின் வயது எட்டு லட்சம் வருடங்கள் எனவும், இதுவே புவிப்பந்தின் மிகப்பழமையானது என்ற செய்தியினையும் ரவிச்சந்திரன் பதிவாக்குகிறார். மேலும், இவற்றின் மீது படிந்துள்ள மகரந்தத்தின் படிவுகளின் முலம் கிழக்கு ஆப்ரிக்காவிலிருந்து பெறப்பட்ட மகரந்ததிற்கு வயது மூன்று இலட்ச வருடங்கள் என்று கண்டறியப்பட்டுள்ள தகவலும் இடம் பெற்றுள்ளது.
மற்றொரு சுவாரசியமான பகுதி கடலில் கலக்கும் நீர் எல்லாம் வீணானதல்ல என்ற கட்டுரை. ஆழ்கடல்களில் இருக்கும் உப்பின் அடர்த்தி சமநிலையில் இருந்தால் மட்டுமே கடல் வாழ் உயிரினங்களுக்குத் தேவையான உணவு கிடைக்கும் எனக்கூறுகிறது. ஆழ்கடல்களில் நடைபெறும் பல வேதிவினைகளுக்கு பல தனிமங்கள் அவசியம். அவற்றில் ஒன்று சிலிக்கான். மழைப் பொழிவின் ஒரு பகுதியாக நீர் கடலுக்குள் செல்லுமுன் பாறைகள் மற்றும் மண்துகள்களையும் கடலில் சேர்க்கிறது. கடல் நுண்ணுயிரிகளில் ஓர் அங்கமாக இருக்கும் பைட்டோபால்ன்டுகளில் டையாட்டம் என்னும் பொருள் உருவாக இது தேவைப்படுகிறது. இவையே மீன்களின் முக்கிய உணவாகிறது. இவ்வாறு மழைநீர் கடலுக்குள் கலப்பது குறைந்தாலோ, அதன் அளவு மாறுபட்டலோ மீன்வளம் குறைந்து உணவுப் பற்றாக்குறை உருவாகும் சாத்தியக்கூறுகள் உண்டு. எனவே, குறிப்பிட்ட அளவு மழை நீர் கடலுக்குள் சென்று சேர்வது அவசியமானதொன்று என்று இப்பகுதியில் அறிவியல் பூர்வமான தருக்கங்களுடன் பதிவாக்கி உள்ளார் நூலாசிரியர்.
காலநிலையும் வேளாண்மை பாதிப்பும், என்ற கட்டுரையும் குறிப்பிடப்பட வேண்டியதாகும். இயல்பான மரங்களைத் தவிர்த்து, அவற்றை அழித்து வணிகப் பயிர்களான ரப்பர், யூக்லிப்டஸ் போன்றவற்றை பயிராக்குவதால் ஏற்படுவதால் விளையும் கேட்டினை இப்பகுதியில் விளக்குகிறார். பரவலாக நாடு முழுதும் உண்டாயிருக்கும் பயிர் விளைச்சலின் விழுக்காடு 20 சதவீதம் என்ற கவலைதரக் கூடிய தகவலும் இடம் பெறுகிறது. களைநாசினிகளைப் பயன்படுத்துதல் வாயிலாக இரசாயனக் கொல்லிகளின் பயன்பாட்டினைக் குறைத்துக் கொள்ளுதல் குறித்தும் இப்பகுதியில் விவரிக்கப்பட்டுள்ளது. இப்பகுதியில் மரங்களை வளர்ப்பதுதான் இதற்கு சிறந்த தீர்வாகிறது என்பதும், ஆடம்பரமாக அரசியல் நோக்கத்திற்காக விழாக்களை நடத்துவதால் மட்டும் பயனேதுமில்லை என்றும் கூறுகிறார். இத்தகைய மரங்கள் வளர்வது குறித்து முறையான கவனிப்பும், கண்காணிப்பும் அவசியம் என்றும் ரவிச்சந்திரன் பதிவாக்குகிறார்.
கால நிலை பாதிக்கும் மனித வாழ்க்கை என்ற கட்டுரை ஓர் ஐம்பது வருடங்கள் கழித்து நடைபெறும் நிகழ்வினை கற்பனைக் காட்சியாகச் சித்தரிக்கிறது. இவ்வாறு நிகழாது என்பதற்கான எவ்வித உத்தரவாதமும் இல்லை என்றும் அது கூறுகிறது. ஆசிரியரின் கூற்றாக நாம் இயற்கையோடு விளையாடுகிறோம். அதனை நிறுத்திக் கொள்ள வேண்டும். அவ்வாறு செய்யத் தவறும் சூழலில் இயற்கையில் மாற்றங்கள் உருவாகும். அதன் விளைவுகளை நாம் எதிர்கொள்ளத் தயாராக வேண்டும். அது எல்லாவற்றையும் தலைகீழாக மாற்றிவிடும். அது நம் அன்றாட வாழ்வில் குறுக்கிட்டு பலத்த, மோசமான, விரும்பத்தகாத விளைவுகளை ஏற்படுத்துகிறது.
தாயின் மடியில் என்னும் பகுதியுடன் இந்நூல் நிறைவடைகிறது. அக்ரிகல்ச்சர் என்னும் பதத்திற்கும், அக்ரி பிசினஸ் என்னும் பதத்திற்கும் இடையேயான வேறுபாட்டினை சிதம்பரம் ரவிச்சற்திரன் அழகாக, ஆழமாக விளக்குகிறார். ஒரு சமுதாயத்தின் ஆத்மாகவும், பூமியினது நாகரீகம் என்று பொருள் கொள்ளப்பட்ட விளைநிலங்கள் பற்றிய தனது வேதனையினை ஆசிரியர் பதிவாக்குகிறார். மனிதனுக்கு அளிக்கப்பட்டுள்ள பகுத்தறிவென்பது எதனையும் அழித்தொழிப்பதற்கு இல்லை. எல்லா வளங்களையும் காக்கும் காவல்காரனாகவே அவன் படைக்கப்பட்டிருக்கிறான். அவசியத்திற்காக மட்டுமே இயற்கையிடம் இருந்து எடுத்துப் பகிர்ந்து கொள்ளவேண்டும்.. அவன் தனது இக்கடமையை பொறுப்புடன் நிறைவேற்றிட வேண்டும். எதிர்வரும் தலைமுறைக்காக இத்தகைய வளங்களும், வனங்களும் காப்பாற்றப்பட வேண்டும். இப்பகுதியில் தேசப்பிதா காந்தியின் இயற்கை குறித்த கருத்தினையும் அவர் மேற்கோடிட்டுக் காட்டியுள்ளார்.
சுற்றுச்சூழல் பாதுகாப்பு என்பது ஒரு மாபெரும் துறை. அது குறித்த அக்கறையும், விழிப்புணர்வும் தனி மனிதனிடமிருந்து தொடங்கப்படவேண்டும். இதற்காக, தொடக்க நிலையிலேயே இளம் சிறார்களிடம் இது குறித்துப் பேசப்படுதலும், விவாதிக்கத் தூண்டுதலுமான அணுகுமுறையினை உருவாக்க வேண்டும். நிச்சயமாக அது போதிக்கப்படக்கூடாது. இது எதிர்மறையான விளைவினை உண்டாக்கிவிடக்கூடும். மாணவர்களிடையே ஆரோக்கியமான விவாதங்களைத் தூண்டும் வகையிலான சூழலினை பள்ளிகளும், ஆசிரியப் பெருமக்களும் உருவாக்கலாம். வளரும் தலைமுறை இது குறித்த பிரக்ஞையுடன் உருவாகிட இது வழிகோலும்.
விழித்திறன் மாற்றுத் திறனாளியான நூலாசிரியர் பல மலையாள படைப்புகளை மொழியாக்கம் செய்துள்ளார். ஏறத்தாழ எட்டு மொழிபெயர்ப்புகளைச் செய்துள்ளார். இவற்றை புதுப்புனல் வெளியிட்டுள்ளது. உள்ளூர் பரமேஸ்வர அய்யர் விருதினை இவர் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. பொருளீட்டும் வணிக நோக்கமேதுமின்றி இத்தகைய படைப்புகளை எழுதும் படைப்பாளிகளுக்கு நாம் செய்யவேண்டிய கைமாறு ஒன்றுண்டு. அது யாதெனில் பள்ளிகளில் மாணாக்கர்களுக்கு இத்தகைய நூல்களை தன்னார்வ நிறுவனங்களும் அறிமுகப்படுத்தலாம். அது ஒரு சிறந்த உத்தியாக அமையும். படைப்பாளிக்கும் அது மனநிறைவினை அளிக்கும். எச்சரிக்கை செய்யும் பூமி என்ற இக்கட்டுரை நூலினை கொங்குப் பகுதி படைப்பாளியும், முக்கிய எழுத்தாளுமையுமான சுப்ரபாரதி மணியனின் கனவு நிறுவனம் பதிப்பித்துள்ளது. இது சுப்ரபாரதி மணியனின் சுற்றுச்சூழல் குறித்த அவதானிப்பினையும், அவரது ஈடுபாட்டினையும் தெளிவாக்குகிறது..
l