மயிலம் இளமுருகு
25 ஆண்டுகால அனுபவத்தில் அதிகாரவர்க்கத்தின் இயல்புகள் எளிய மனிதரின் எதிர்பார்ப்புகளைச் சட்டத்தின் துணைகொண்டு முன்னெடுக்கப்பட்ட செயல்கள், சமூகத்தில் தங்களுக்குக் கிடைத்த வெற்றி தோல்விகள் என்பனவற்றை வெளிப்படையாக பேசுகின்ற மாபெரும் சபைதனில் என்ற இந்நூல் கவனத்திற்குரியது. மனசாட்சியுடன் செயல்படும் பல அதிகாரிகளின் போராட்ட வாழ்வு, தான் கடந்து வந்த பாதையில் எதிர்கொண்ட நிகழ்வுகள் ஏராளம் என்னுடைய கேள்விகளுக்கு விடைதேடி மேற்கொண்ட நெடும்பயணம். தொடர் வாசிப்பில் உணர்ந்துகொண்ட புதிய பரிணாமங்கள் எளிய மனிதர்களிடம் கற்றுக்கொண்ட அரிய செய்திகள் என இவை அனைத்தும் அணிவகுத்து நிற்க உருவானதுதான் இந்த மாபெரும் சபைதனில் நூல் என நூலாசிரியரே சொல்லியிருப்பது அவரது பண்பையும் நம்பகத் தன்மையினையும் காட்டுவதாக உள்ளது.
முழுமையான வாசக அனுபவம் கருதியே தன் முன்னத்தி ஏர்களின் அணிந்துரைகளைப் பின்பகுதியில் வைத்திருப்பதாக சொல்லப்பட்டுள்ளது. வெ. இறையன்பு, எஸ். ராமகிருஷ்ணன், அ. முத்துலிங்கம் போன்றோரின் உரைகளும் மற்றும் நூலாசிரியரின் என்னுரை என்பன நூலின் இறுதியில் இடம்பெற்றுள்ளது. இந்நூல் குறித்து வெ. இறையன்பு அவர்கள் பின்வருமாறு குறிப்பிடுகின்றார். உதயச்சந்திரன் வரலாற்றின் முக்கியத்துவம் பொருந்திய மனிதர்களையும் வரலாற்றை உருவாக்க உதவியாக இருந்த கண்ணுக்குத் தெரியாத மனிதர்களையும் பற்றிய, தன்னுடைய அனுபவங்களை விரித்துச் சொல்லும் நூலாக இது அமைந்திருக்கிறது. நிர்வாகத்தில் நேரடியாகத் தொடர்பு கொண்டிருப்பதால் இதில் குறிப்பிடப்பட்டிருக்கும் பல நிகழ்வுகளை நான் அருகிலிருந்து கவனித்த நேர்வுகளுமுண்டு. நிர்வாகத்தில் இருப்பவர்கள் தாங்கள் சந்தித்த சூழல்களையும் மனிதர்களையும் ஆவணப்படுத்துவது எதிர்காலத்தில் இதுபோன்ற பணிகளில் ஈடுபடுகிறவர்களுக்கு கைவிளக்காக இருக்கும் என்கிற வகையில் அவருக்கு அமைந்த இந்த வாய்ப்பை செம்மையாகப் பயன்படுத்தியிருக்கிறார்.
அதிகம் அறியாத பல தகவல்களைப் போகிற போக்கில் சொல்லிக்கொண்டே போவதுடன் அதன் இன்றைய முக்கியத்துவத்தையும் இறுதியாக சுட்டிக்காட்டிவிட்டு அந்தக் கட்டுரை முடிகிறது. உதயச்சந்திரன் ஒவ்வொரு கட்டுரையிலும் பெட்டிச்செய்தி ஒன்றை அளித்திருக்கிறார். அது அரிய தகவல்களின் தொகுப்பாக இருக்கிறது. இக்கருத்தை புதிய பாடநூல்களை உருவாக்கும் பணியில் ஈடுபட்டு இருந்த பாட வல்லுனர்கள் மற்றும் ஆசிரியர் குழுவில் இடம்பெற்றிருந்த அனைவரும் தெரிந்து கொண்டனர்.
ஒரு பாடநூலை மாணவர்களுக்கு எவ்வாறு உருவாக்க வேண்டும் என்ற அந்தப் பணி மிகச்சிறந்ததாக அமைய ஆய்ந்து, பல்வேறு அறிஞர்கள் கூடி மாநாடு செய்து எதைச் சேர்க்கலாம், எதைச் சேர்க்கக் கூடாது என்பதில் கவனமாக இருந்ததோடு, பல நாட்டுக் கல்வி புத்தகங்களைப் படித்து, ஆய்ந்து பிறகு இறுதி வடிவம் கொடுப்பதற்கு ஆணையர் அவர்கள் மேற்கொண்ட அந்த பணியின் முக்கியத்துவத்தையும் அவரது அர்ப்பணிப்பையும் அருகில் இருந்து பார்த்தவர்களுக்குத் தெரியும். குறிப்பாக பாடநூல்களில் கட்டாயமாக பெட்டிச் செய்திகள் இடம் பெற வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். பாடக் கருத்துக்கள் மட்டுமில்லாமல் அதனோடு தொடர்புடைய முக்கியமான செய்திகளையும் தருவது இந்த பெட்டிச்செய்தியின் முக்கிய பணியாக இருக்கும் என்று அவர் அடிக்கடி கூறியிருக்கிறார். இந்த நூலின் கட்டுரையில் முக்கியமான கருத்துகளையும் பலரும் அறிந்திராத செய்திகளைப் பெட்டிசெய்தியாக கொடுத்துள்ளதால் இந்நூல் ஒரு அரிய தகவல் களஞ்சியமாக விளங்குகிறது.
உதயச்சந்திரன் தான் உதவி ஆட்சியராக பணிபுரிந்ததிலிருந்து தற்போது பணியாற்றும் தொல்லியல்துறை வரை மேற்கொண்ட அனுபவங்களையும் அந்த அனுபவங்களை உந்தித் தள்ளிய வரலாற்று நிகழ்வுகளையும் சுவையாக தொகுத்து முடிவில் மனதை நெகிழ வைக்கும்படியான ஒரு சம்பவத்துடன் முடித்திருக்கிறார் என்று வெ. இறையன்பு அவர்கள் தன்னுடைய அணிந்துரையில் ஒரு பகுதியாக கொடுத்திருக்கின்றார். நீதியின் பக்கம் நின்று ஏழை எளிய மக்களின் துயர் துடைக்க பாடுபடுவதே ஆட்சியாளர்களின் முதற்பணி. இந்த எண்ணம்தான் உதயச்சந்திரன் மாவட்ட ஆட்சியராக பணியாற்றிய நாட்களில் பல்வேறு சமூகப் பிரச்சினைகளை ஆராய்ந்து தீர்க்க காரணியாக இருந்திருக்கிறது. ஆட்சியாளர்களுக்கும் மக்களுக்குமான இடைவெளி குறையக் குறைய நல்ல நிர்வாகம் சாத்தியம் என்பதை இந்த நூலில் உள்ள கட்டுரைகள் தெளிவாக அடையாளப்படுத்துகின்றன என்று எஸ். ராமகிருஷ்ணன் அவர்கள் இவரது கட்டுரைகளை குறிப்பிட்டதோடு இவை அழகான சிறுகதைகள் என்றும் கூறியுள்ளார். வரலாறு, பண்பாடு, கல்வி, அறிவியல், சமூகம், நுண்கலைகள், விளையாட்டு, ஆட்சிப்பணி அனுபவங்கள் என்று இந்தத் தொகுப்பில் உள்ள 40 கட்டுரைகளும் உதயச்சந்திரன் அவர்களின் பன்முக ஆளுமையின் அடையாளங்களாக உள்ளன என்றும் குறிப்பிட்டுள்ளமை மிகப் பொருத்தமாக அமைந்துள்ளது. இந்தக் கட்டுரைகளின் தனிச்சிறப்பு நேரில் அவரது அருகில் அமர்ந்து பேசி கேட்பது போன்ற மொழிநடை. பட்டு நெசவு போல தகவலையும் அனுபவத்தையும் அழகாக ஒன்றிணைத்து நெய்யும் லாவகம். அரிய வரலாற்றுத் தகவல்கள், அறிவியல் குறிப்புகள், நுண்கலைகள் மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த விளக்கங்கள் என்று அறிவின் வெளிச்சத்தை இந்தக் கட்டுரையில் காண முடிகின்றது.
ஆ. முத்துலிங்கம் அவர்கள் எழுதிய அணிந்துரையில் மனித நாகரிகத்தின் தொடக்கம் எது என்று கேட்கிறார் ஓர் ஆராய்ச்சி மாணவி. மானுடவியல் அறிஞர் 15000 ஆண்டுகளுக்கு முன்னரான ஒரு மனித தொடை எலும்பு என்று சொல்கிறார். அந்த எலும்பு உடைந்து சரி ஆக்கப்பட்டிருக்கிறது. அந்தக் காலங்களில் ஒரு மனிதனுக்கு காயம்பட்டால் அவனை விட்டுவிட்டு குழு நகர்ந்துவிடும். இங்கே காயம்பட்டவரின் எலும்பை இன்னொரு மனிதனோ, குழுவோ குணமாக்கியிருக்கிறது. மனித மனதில் கருணை பிறந்த சமயம். அதுவே மனித நாகரிகம் தொடங்கிய காலம் என்று சொல்லலாம். இந்தப் புத்தகத்தின் சிறப்பு இதன் தொடக்கத்தில் இருந்து கடைசி வரை ஓடும் அன்பு, கருணை, மனிதநேயம்தான் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நூலில் 40 கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. இந்தக் கட்டுரைகள் அனைத்தும் ஆனந்த விகடனில் 40 வாரங்களாகத் தொடர்ந்து வந்தவை. மிகச் சிரத்தையான பார்வையில் சிறந்த கட்டுரைகளாக இவை தோற்றமளிக்கின்றன. ஒரு ஆட்சியர் தனக்கு நேர்ந்துள்ள அனுபவங்களையும் மனிதர்களின் எளிய செயல்பாடுகளுக்காக தன்னால் அரசு இயந்திரத்தோடு போராடி எப்படி மக்களுக்குப் பணி செய்ய முடியும் என்பதை இந்த நூலின் வழியாக வெளிப்படுத்தியுள்ளார். அதோடு மட்டுமன்றி தனக்குப் பிடித்தமான செயல்களையும் ஒவ்வொன்றாக குறிப்பிட்டுள்ளார். மக்களுக்காகத்தான் அரசு. அரசுப்பணியாகிய ஆட்சியர் என்ற பொறுப்பும் இலக்கியத்திறனும் என இரண்டிலும் வெற்றி பெற்றவராக எழுத்தாளர் விளங்குகின்றார். மேலும் இவரது பலதரப்பட்ட ஆளுமையை இந்த கட்டுரைகள் வெளிப்படுத்துகின்றன.
தொடர் வாசிப்பின் மூலமாகவும் இச்சாதனையை அவர் ஏற்படுத்தியுள்ளதாக அவரே இந்த நூலில் குறிப்பிட்டுள்ளார். புத்தகத்தோடு ஏற்பட்ட அனுபவம் என்பது சிறுவயதில் இருந்தே ஆரம்பித்ததை அவர் நினைவுகூர்ந்துள்ளார். பள்ளிக்குச் சென்றபோது தான் பெற்ற அனுபவங்களையும் ஒன்றாம் வகுப்பு முதல் ஏழாம் வகுப்பு வரை முதல் ரேங்க் பெற்ற அந்த செயலையும் பிறகு ஏற்பட்ட மாற்றங்களையும் இந்த நூலின் வழியாக கூறியுள்ளார். கல்லூரியில் படிக்கின்றபோது அவரது அறையில் நண்பர்கள் ஜில்லா கலெக்டர் என்று எழுதி வைத்துள்ளதை நினைவுகூர்ந்து அதை சாத்தியப்படுத்த, எவ்வளவு கடினப்பட்டார் என்பதையும் இந்த நூலின் கட்டுரைகள் உணர்த்துகின்றன.
தன் நண்பர்களோடு இன்றும் இணக்கமாக இருக்கின்ற அந்தச் செயல்பாடுகளைப் பல்வேறு கட்டுரைகள் நமக்கு வெளிப்படுத்துகின்றன..
முதல் கட்டுரையான கலெக்டர் எனும் மந்திரச்சொல் என்பதில் ஏழை எளிய மக்களின் காவலராக விளங்கிய சர் தாமஸ் மன்றோ அவர்களின் கடமை, பொறுப்புணர்வு எனும் பலவற்றை அழகான நடையில் தெளிவாக கூறியுள்ளமை அருமையாக இருக்கின்றது. கலெக்டர் என்பவரின் பணி எப்படிப்பட்டது, எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதை மிகச்சிறப்பாக இக்கட்டுரையில் நூலாசிரியர் விளக்கியுள்ளார். இரண்டாவது கட்டுரையான யார் அந்த பியாதசி என்பதில் அசோகர் குறித்த செயல்பாட்டைப் புதிருக்கான விடையாகக் கூறிய விதம் அருமை. ஷெர்லாக் ஹோம்ஸ் தொடங்கி நம் இந்தியாவில், மேல்நாட்டினர், அதிகாரம் செய்ய வந்தவர்கள் நம் இந்திய பண்பாட்டின் அசைவுகளை ஆழமாக கற்கத் தொடங்கினர். இதன் வளர்ச்சியைப் பல்வேறு அதிகாரிகளின் செயல்பாடு, கருமம் விடாமுயற்சி, பொறுமை என வரிசைக்கிரமமாக இக்கட்டுரை சொல்லுகின்றது. ஒவ்வொன்றைப் பற்றியும் ஆழமாக உள்வாங்கி தொல்காப்பிய நூற்பா தொடங்கி பல்வேறு கருத்துகளையும் நூலாசிரியர் மிகச்சிறப்பாக பதிவு செய்துள்ளார். இதன் மூலமாக இவரது இலக்கிய புரிதல், ஆழ்ந்த அறிவு என்ன என்பதை நாம் தெரிந்து கொள்கின்றோம். மெக்கன்சி கண்டடைந்த சிற்பங்களுள் ஆண் சிற்பங்கள் பலவற்றைக் காட்சிபடுத்தியது புதிய செய்தியாக உள்ளது.
மூன்றாவது கட்டுரையான கீழடி நம் தாய்மடி என்பதில் புளோரிடா, புனேவில் உள்ள டெக்கான் கல்லூரி, இத்தாலியில் உள்ள பைசா பல்கலைக்கழகத்திற்கு அனுப்பப்பட்டவைகள் ஆய்வுக்கு உட்படுத்தியபின் வந்த அதன் ஆய்வறிக்கைகள் குறித்து அடைந்த பெருமிதம் சொல்லப்பட்டுள்ளன. இதன் வழியாக தமிழ், தமிழர் வரலாற்றை மாற்றி அமைத்த செய்தியாக இருந்ததை நாம் தெரிந்து கொள்கின்றோம். கீழடி எதிர்கொண்ட விதம் தொழில்நுட்பத்துறை மீது கொண்ட ஈடுபாடு, ஆர்வம் என்பதில் திமில் கொண்ட காளையில் எலும்புத்துண்டு ஆய்வறிக்கை, சிந்து சமவெளி நாகரிகம் இருந்த அந்த செயல் கீழடி ஆய்வு தோன்ற காரணமாக இருந்தவைகள் எனப் பலவற்றை இக்கட்டுரைவழி அறிந்து கொள்கிறோம். இறுதியில் வைகை நதி நாகரிகம் வாகை சூடும் விதமாக அமைக்கப்பட்டுள்ளது. பட்டத்து யானையும் குட்டி இளவரசனும் என்ற கட்டுரையில் ஆணையர் கூறும் கருத்துகள் உற்று நோக்கதக்கதாகவும் ஏற்றுக்கொள்வதாகவும் இருக்கின்றன. அரசு உயர் அதிகாரிகளைக் கூறிய விதம் அதில் தனக்கு வழங்கப்பட்ட பணியில் கூடுதல் சிரத்தையோடு செய்த அதிகாரிகளைப் பாராட்டும்விதமாக அமைந்துள்ளது. தன்னுடைய பயணத்தில் முழுமனதோடு வேலை செய்து வந்தவர்களான, மாணவர்கள் கல்விக்கடன் பெறுவதற்கு பெரும்முயற்சி செய்த பால்ராஜ் அவர்களைப் பற்றியும் புதிய தமிழ்ப் பாடநூல் உருவாக்கத்திற்கு அதிகாரியாக விளங்கிய அருள்முருகன் அவர்களைப் பற்றியும் மிகச் சிறப்பாக சொல்லப்பட்டுள்ளது. ஒவ்வொரு துறையிலும் சிறப்பாக பணியாற்றுகின்ற அரசு ஊழியர்கள் எப்படிப்பட்டவர் என்றும் எந்தவித அங்கீகாரத்தை எதிர்பார்க்காமலும் விரும்பாமலும் அவர்கள் செய்கின்ற செயல்களைப் பதிவு செய்துள்ளவிதம் நனறு. இப்பதிவு அரசு ஊழியர்களுக்கு முன்மாதிரியாக அமைந்துள்ளதை இக்கட்டுரை நமக்கு எடுத்துக் கூறுகின்றது.
மழலைத் தமிழ் பேசிய மகாத்மா என்ற கட்டுரை தமிழ்மொழி, தாய்மொழி குறித்தான பதிவாக இக்கட்டுரை அமைந்துள்ளது. தென் ஆப்பிரிக்காவில் தமிழரின் உரிமைக்காக காந்தியடிகளுக்குத் தோள் கொடுத்தவர்கள் பற்றியும் வ.உ.சி க்கு ராஜாஜி மீது உள்ள அன்பு, ஆதங்கம் போன்றவற்றை விளக்கிய முறை சிறப்பு. சீக்கியர்கள் கொஞ்சும் தமிழில் பேசிய விதம், தில்லையாடி வள்ளியம்மை நாகப்பன் குறித்த வரலாறு, தமிழ் மீது கொண்ட அன்பு, காந்தியடிகளுக்குத் தாய்மொழி, தமிழ்மொழி மீது விமர்சனம் வைக்கும் உரிமை இருந்ததை இக்கட்டுரை மூலமாக நாம் தெரிந்து கொள்கின்றோம். 20 முறை தமிழகம் வந்த காந்தியின் செயல்பாடு எப்படி இருந்தது என்பதையும் நாம் உணர்கின்றோம். இன்று காந்தி உயிரோடு இருந்திருந்தால் கீழடியில் காலடி எடுத்து வைத்திருப்பார் என்று கட்டுரை முடிக்கப்பட்டுள்ளது.
சர்க்கார் உத்தரவு என்ற இந்தக் கட்டுரையில் பாப்பாபட்டி, கீரிப்பட்டி, நாட்டார்மங்கலம் ஊராட்சிகளில் உள்ளாட்சித் தேர்தல் நடத்த எடுத்துக்கொண்ட முயற்சிகளும் அதில் வெற்றிபெற்ற சூழலும் சொல்லப்பட்டுள்ளது. மதுரை கலெக்டராக விளங்கிய பிளாக்பர்ன் மதுரை மாநகர் மற்றும் அங்கிருந்த மக்கள் மீது கொண்ட பரிவு, கடமை போன்றவற்றைக் கட்டுரை விளக்குகின்றது. மதுரை நகரின் விவாக்கப் பணிகளுக்கு அவரது சொந்த பணத்திலிருந்து அவரது பங்காக ரூ 500 கொடுத்த செய்தியும் திட்டத்திற்கு உதவியாக இருந்த அதிகாரி குறித்தும் பெருமாள் மேஸ்திரி குறித்தும் அவர் கொண்ட நம்பிக்கை போன்றவற்றை இப்பகுதி விளக்குகின்றது. தேர்தல் நடத்தியது எப்படி என்றும் மாணிக்கம் என்ற கிராம நிர்வாக அதிகாரி அப்போது இருந்த சிக்கலைக் கூறுகின்றார். குறிப்பிட்ட அந்த ஊர் பெரியவரைச் சரிசெய்தால் நாம் நினைப்பதை முடித்துவிடலாம் என்கிறார். அவரை வரவேற்று அவருக்கு மன மாற்றத்தை ஏற்படுத்தி சொல்லால் எதையும் செய்து முடிக்கலாம் என்பதையும் அன்பால் எதையும் மாற்றிட முடியும் என்பதையும் இக்கட்டுரை அழகாக பதிவு செய்துள்ளது.
தொடர் ஓட்டம் என்ற இந்தக் கட்டுரையில் தமிழ் இலக்கியங்கள் பனை ஓலைகளிலும் அரச கட்டளைகள் கல்வெட்டுகளிலும் வடிக்கப்பட்டுள்ளது என்ற தகவல் கூறப்பட்டுள்ளது. யூனிகோடு சட்டம் இயற்றப்பட்டது என்ற தகவலறிந்து அதற்காக கூடியிருந்த கூட்டத்தில் ஏற்பட்ட மகிழ்ச்சியையும் தமிழ்மொழிக்கான யூனிகோடு சட்டத்திற்கான அந்த வாக்கெடுப்பில் வெற்றி பெற்றதும் பதிவு செய்யப்பட்டுள்ளது. யூனிகோடு அமைப்பின் துணைத் தலைவர் லிசாமூர் என்பவர் தமிழ்மொழி குறித்து விவாதிக்கும் போது கூடுதல் கவனத்தோடு இருப்போம் என்று சொன்னது பெருமையாக இருப்பதாகவும் ஆசிரியர் இங்கே குறிப்பிட்டுள்ளார். (பக்கம் 57-58) கூட்டத்தில் ஒரு லட்சம் நூல்களை மின் பதிப்பாக செய்ய வேண்டுமென்ற என்ற கருத்தும் அதனைச் சாத்தியப்படுத்திய முறைகளும் விளக்கப்பட்டுள்ளன. மேலும் ஐரோப்பாவிற்கு வெளியே அச்சடிக்கப்பட்ட முதல் நூல் தமிழ்தான் என்பது தெரியுமா என்று வினா எழுப்பி பின்பு நூல் தோன்றிய விதத்தையும் மிக அழகாக ஆசிரியர் குறிப்பிட்டுள்ளார். அந்த நூல் கார்த்தில்லா என்பதாகும். பிறகு தமிழில் முதன்முதலில் அச்சடிக்கப்பட்ட நூல் என்ன என்பது குறித்தும் விளக்கம் தரப்பட்டுள்ளது. பழந்தமிழ் இலக்கியங்கள் இன்று நம் கரங்களில் தவழ நாம் பனைமரத்துக்குதான் நன்றி சொல்ல வேண்டும் என்ற தகவலை ஆசிரியர் குறிப்பிட்டுள்ளார்.
அலெக்ஸாண்ட்ரியா வணிக ஒப்பந்தம் குறித்தும் இப்பகுதியில் சொல்லப்பட்டுள்ளது. தொழில்நுட்பத்தின் மூலமே தமிழ்மொழி உயரம் பெற்றது என்பதாகவும் அது நீண்ட பயணம் கொண்டது என்பதையும் இக்கட்டுரை விளக்குகின்றது. கலங்கரை விளக்கம் என்ற கட்டுரையில் கலங்கரை விளக்கமான நல்லாசிரியர் சுப்பிரமணியம், ஓடத்துறை ஊராட்சி தலைவர் சண்முகம் இருவரையும் குறிப்பிடுவதாக இக்கட்டுரை அமைகின்றது. ஓய்வு பெற்றாலும்கூட ஊருக்கு உழைக்கும் அவரைப் பற்றியும் பத்தாம் வகுப்பு முடிக்காதவர் ஆனால் அவர் செய்த சாதனைகளையும் இக்கட்டுரை பறைசாற்றுகின்றது. நல்லவர்களுடன் தொடர்பு இருக்க வேண்டும் என்ற உணர்வை இந்தக் கட்டுரை நமக்கு போதிக்கின்றது. ஊழல் ஒரு சதவீதம் கூட இல்லை என்ற நேர்மையை எளிமையாக விளக்கிய முறை குறிப்பிடத்தக்கது. மேலும் இந்தக் கட்டுரையில் நற்காரியம் செய்யும் சேவைமனம் கொண்டவர்களை நாம் தெரிந்து கொள்கின்றோம். சென்னப் பட்டணத்து எல்லீசன் என்ற கட்டுரை மிகச்சிறப்பான கட்டுரையாக மனம் கவர்ந்த கட்டுரையாக விளங்குகின்றது.
சென்னையில் கலெக்டராக விளங்கிய எல்லீசன் குறித்த வாழ்க்கைச் சித்திரத்தை தருவதாக இக்கட்டுரை அமைந்துள்ளது. தமிழ்மொழி மீது கொண்ட ஆர்வம், புலமை, நூல் எழுதியது எனப் பலவற்றை இந்தக் கட்டுரை விளக்குகிறது. திருக்குறளின் அறத்துப்பாலை ஆங்கில மொழியில் 1812 இல் வெளியிட்டுள்ளமை, பழந்தமிழ் இலக்கியம் மீது கொண்ட ஈடுபாடு என்பனவற்றை இப்பகுதியின் மூலமாக நாம் தெரிந்து கொள்கின்றோம். தமிழ் மேல் காதல் கொண்டவராக உயர்பதவியில் இருக்கும் அதிகாரி அமைந்தால் தமிழ் எத்தகைய வளர்ச்சி பெறும் என்பதை இக்கட்டுரை பேசுகிறது.
இதற்கு எல்லீசன் வாழ்வு மிகச் சிறந்த உதாரணம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இது இந்த நூல் எழுதிய திரு. த. உதயச்சந்திரன் அவர்களுக்கும் பொருத்தமாகவே அமைந்துள்ளது. குறிப்பாக தமிழக அரசின் புதிய தமிழ்ப்பாட நூல்களை உருவாக்கும் பணியில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. இப்பணி உலகம் போற்றும் தரத்திலும் பாடப் பொருண்மையிலும் மிகச் சிறப்பாக அமைந்துள்ள விதம் கவனிக்கத்தக்கது. சென்னையில் குடிநீர் பஞ்சம் ஏற்பட்டதை குறிப்பிட்டு 27 கிணறுகளை வெட்டிய செய்தியையும் அவரது நேர்மையையும் அதே போன்று மூன்று மாதத்திற்கு மேல் ஒரு இடத்தில் பணி செய்ய முடியாத சூழ்நிலையும் அதனால் ஓடிக்கொண்டே இருந்த அந்த தகவலையும் இங்கு நாம் புரிந்து கொள்கின்றோம். தமிழ்த்தாயின் தலைமகன் என்று இக்கட்டுரை முடிக்கப்பட்டுள்ளது.
நேர்கொண்ட பார்வை என்ற கட்டுரையில் சாம் மானெக்ஷாவின் வீரம், நேர்மை, பொறுமை, நகைச்சுவை உணர்வு, அன்பு என்பன விளக்கப்பட்டுள்ளன. தனது வயிற்றில் 9 குண்டுகள் துளைத்தபோதும் நகைச்சுவை உணர்வுகொண்டு பேசியதை இப்பகுதி உணர்த்துகின்றது. (பக்கம்-83) தான்பிறந்த மாவட்டத்தை விட பணிபுரிந்த மாவட்டத்தை அதிகம் நேசிக்கும் அதிகாரிகள் பலரைப் பார்த்திருக்கிறேன் என்று குறிப்பிட்டு அந்த எளிய மக்கள் மீது எப்படி அன்பாக இருக்க வேண்டும் என்ற முறையையும் இப்பகுதி விளக்குகிறது. டி.என்.பி.எஸ்.சி செயலராக இருந்தபோது ஏற்பட்ட சூழலையும் விளக்கி அதன் காரணமாக தகவல் தொழில்நுட்பத்துறையின் துணைகொண்டு இணையவழி விண்ணப்பிக்கும் முறையை அறிமுகப்படுத்தி சாதனை புரிந்ததை இக்கட்டுரை நமக்கு உணர்த்துகின்றது. தூத்துக்குடியில் இருந்த ஆசிரியர் கொடுத்த தகவலின் மூலமாக களநிலத்துக்குச் சென்று ஆய்வு செய்தபோது பெருமிதம் கொண்டதாகவும் தாமிரபரணி நதிக்கரை கருத்துகளை வெளியிட்டமையும் அது பெரும் வாய்ப்பாகவும் அமைந்த செய்திகளும் இக்கட்டுரையில் கூறப்பட்டுள்ளன.
வானவில் தேசம் என்ற கட்டுரையில் தென்னாப்பிரிக்கா ரஃக்பி உலகக்கோப்பையை வென்ற செய்தியைக் குறிப்பிட்டு அதனைத் திரைப்படத்தோடு காட்சிப்படுத்தியது கவனிக்கத்தக்கது. உணர்வுபூர்வமான நெல்சன் மண்டேலாவின் தொலைநோக்கு திட்டத்தை விவரிப்பதாக இந்தக் கட்டுரை அமைந்துள்ளது. வெள்ளையருக்கு எதிரான கருப்பினத்தவரின் எழுச்சி, 2007 இல் வெற்றி பெற்ற வரலாற்றுச் செய்திகள் என்பனவற்றை இதன்மூலம் நாம் தெரிந்து கொள்கிறோம்.
சிந்துவெளிப்புதிர் என்ற இந்தக் கட்டுரையில் ஆர். பாலகிருஷ்ணன் எழுதிய நூல் குறித்தும் அவரது கடின உழைப்புப் பற்றியும் 30 ஆண்டுகளாக அவர் செய்த செயல்களையும் விளக்குவதாக கட்டுரை அமைந்துள்ளது. சிந்துவெளி விட்ட இடமும் சங்கத் இலக்கியம் தொட்ட இடமும் என்ற சொற்றொடரை விளக்கிய விதம் அருமை. இடப்பெயர் ஆய்வு, அவர் எப்படி மேற்கொண்டார் என்றும் பாகிஸ்தானில் 2037 ஊர்ப்பெயர்கள் தமிழோடு தொடர்புடையது என ஒப்பிட்டு விளக்கிய விதம் சிறப்பாக உள்ளது. சங்க இலக்கியங்களைக் கூறி அதனை ஆவணங்களோடு பதிவு செய்துள்ள முறை அவரின் ஆழ்ந்த ஆய்வுத்திறனைக் காட்டுவதாக உள்ளது. (பக்கம்-99) பாலகிருஷ்ணனின் மொத்த ஆராய்ச்சியும் இப்போது உலகத் தரத்திலான ஒரு நூலாக திரண்டிருக்கிறது. நூற்றாண்டுகால சிந்துவெளி புதிருக்கு விடை தேடும் விதமாக அவருடைய நூல் வெளியாகி ஆய்வுலகிற்கு ஒரு விளக்கின் வெளிச்சம் கிடைத்திருப்பதாக இந்நூல் குறித்து ஆசிரியர் விளக்கம் தந்துள்ளார். இந்நூல் தமிழில் வெளிவந்தால் இன்னும் கூடுதல் கவனம் பெறும் என்பதையும் சிந்துவெளிப் புதிரை விளக்கும் முயற்சிகள் மேலோங்கும் என்றும் குறிப்பிட்டு இக்கட்டுரையை முடிந்துள்ளது.
ஆழிப்பேரலை என்ற கட்டுரையில் 2004 டிசம்பர் 26ஆம் தேதி ஏற்பட்ட ஆழிப்பேரலையைக் குறித்தும் தனது நினைவலைகளையும் பதிவு செய்துள்ளார். 1876 தாதுவருடப் பஞ்சத்தில் மக்களின் இழப்பு அதன் இன்னொரு கொடுமையான சயாம் மரண ரயில் பாதையில் ஒரு லட்சம் தமிழர்கள் இறந்த செய்தியையும் இக்கட்டுரையில் சொல்லப்பட்டுள்ளது. உணர்வுபூர்வமான செய்திகளைச் சொல்வதாக இப்பகுதி அமைந்துள்ளது. சுனாமியினால் மக்கள் அடைந்த வேதனையைக் குறிப்பிட்டு, நாகப்பட்டினத்தில் உள்ள கீச்சாங்குப்பம் என்ற ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 81 மாணவர்கள் இறந்த செய்தியும் பிறகு இப்பள்ளி மீண்டெழுந்த வரலாற்றினையும் சாதனை படைத்த அந்த ஆசிரியரையும் ஊராட்சித் தலைவர் மற்றும் மக்களையும் குறிப்பிட்டு அவர்களின் செயலைப் பாராட்டியது நாம் உணர முடிகின்றது.
ரவிவர்மாவின் தூரிகை என்ற இக்கட்டுரையில் ரவிவர்மாவின் ஓவியம் அதன் சிறப்பும், அவரது ஓவியம் அரசர்கள் மற்றும் பொதுமக்களிடத்தில் எப்படிச் சென்றது என்ற கருத்தும் கூறப்பட்டுள்ளது. மேலும் ஜெர்மனியில் இருந்து வரவழைக்கப்பட்ட அச்சு இயந்திரத்தின் மூலமாக தன்னுடைய ஓவியங்களை மக்கள் கைக்கொண்டு சேர்த்த விதமும் சொல்லப்பட்டுள்ளது. மேலும் மாதவன், கொண்டையாராஜூ போன்றோரின் செயல்களால் காலண்டர் வழியே சாமானியர்கள் இல்லங்களுக்கு வருகை புரிந்த கடவுள் உருவங்களையும் குறிப்பிட்டு காலண்டர் தோன்றிய வரலாற்றை உணர்ந்துகொள்வதற்காக இக்கட்டுரை அமைக்கப்பட்டுள்ளது.
நூறு பூக்கள் மலரட்டும் என்ற கட்டுரையில் ஆசிரியர் ஐந்தாவது வயதில் வாசிப்பைத் தொடங்கி இன்று மாநிலத்தில் மாவட்டம் தோறும் புத்தகக் கண்காட்சி நடப்பதற்குத் தானும் ஒரு காரணமாக விளங்கியதைக் கூறுவதாகவும் இக்கட்டுரை அமைந்துள்ளது. புத்தகக் கண்காட்சி உருவாக்கிய முறையை அடுக்கடுக்காக சொல்லியது, தமிழ் இலக்கியத்தின் மீது கொண்ட காதல் எப்படிப்பட்டது என்றும் மதுரையில் ஆட்சியராக இருந்தபோது அங்கே தமுக்கம் மைதானத்தில் புத்தகக் கண்காட்சி நடத்துவதற்கான சூழலையும் அதில் வெற்றிபெற்ற விதத்தையும் இப்பகுதி அழகாக நினைவுகூர்ந்துள்ளது. புத்தகக்காட்சி குறித்த விளம்பரம் அறிவின் பாசறையாக விளங்கிய சூழலையும் இப்பதிவு காட்டுகின்றது. இளவல்களின் செயல்பாடுகளையும் தற்போதுள்ள சூழலையும் குறிப்பிட்டு பெரம்பலூர், ராமநாதபுரம் போன்ற இடங்களில் புத்தகக் கண்காட்சி நடைபெற்று வருவது குறித்தும் சொல்லப்பட்டுள்ளது.
புத்தகக் கண்காட்சிக்கு வரும் குழந்தைகளின் மனதையும் புரிந்துகொண்டு அவர்கள் விரும்புகின்ற உணவுப்பொருட்களும், கடைகளும் இருக்கவேண்டும் என்ற அவசியத்தை இப்பகுதி வெளிச்சமிட்டுக் காட்டுகின்றது. மழலைக் குழந்தைகளின் மனதை வென்றால் புதிய அத்தியாயம் படைக்கலாம் என்ற கூற்று முக்கியத்துவம் கொண்டது.
ஏறுதழுவுதலைக் கூறுவதாக அடுத்தக் கட்டுரை அமைந்துள்ளது. ஊர் மக்களின் நம்பிக்கை என்று தொடங்கி முனியாண்டி கோயில் முன்தான் ஜல்லிக்கட்டை நடத்த வேண்டும் என்ற விதம் பின்பு அங்கே ஜல்லிக்கட்டு நடந்த விதத்தையும் குறிப்பிட்ட முறை நன்று. மேலும் இதுவரை தோல்வியே அடையாத காளையாக இருந்த கருப்பன் தோற்று விட பின்னர் அது உணவருந்தாமல் இருந்து இறந்த செய்தியையும் அதனால் அதன் உரிமையாளரும் தற்கொலை செய்து கொண்டதையும் குறிப்பிட்டு தமிழர்களின் உணர்வினை விளக்கிய விதம் சிறப்பு.
திமிர் கொண்ட காளையின் சிந்துவெளி முத்திரை எனக் கட்டுரை நகர்ந்து கலித்தொகை பாடல் காட்சியை விளக்கி சங்ககாலநிலை, பெண்களின் உறுதி, வீரம் போன்றவையும் கூறப்பட்டுள்ளன. இறுதியில் தமிழின் தமிழினத்தின் தொன்மையும் தொடர்ச்சியும் என்பதாக கட்டுரை முடிகின்றது. பசுமை வழிப்பயணம் என்ற கட்டுரையில் வேளாண்மை விவசாயிகளின் குறைதீர்க்கும் கூட்டம் குறித்து விளக்கி அங்கே நடைபெற்ற நிகழ்ச்சியை விளக்குவதாக இப்பகுதி அமைந்துள்ளது. ஈரோடு மாவட்டத்தில் விவசாயிகளின் நிலைமையும் அவரின் செயல்பாடும் போன்றன கூறப்பட்டுள்ளன. ஆய்வுப் பயணத்தில் அடைந்த அந்த நிகழ்ச்சிகளோடு விவசாயியின் மனைவி கூறிய விவரங்களைக் கேட்டதோடு அதுவரை செயல்படுத்திய முறையிலிருந்து மாறி ஒற்றை நாற்று நடவு முறை என்பதை 50 ஹெக்டேர்லிருந்து 5000 ஹெக்டேர் என இலக்கு நிர்ணயித்து பிறகு 12000 ஹெக்டேர் அளவில் விரிந்து பரவியதை மிகப்பெரும் வெற்றி என்று குறிப்பிட்டு தன் செயலை இங்கே ஆசிரியர் பதிவு செய்துள்ளார்.
மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் முதியவர் ஒருவரின் குறையைக் கேட்டு சிப்காட் தொழிற்சாலையால் தன்னிடம் மீதமுள்ள ஒரு ஏக்கர் நிலத்தை எடுத்துக் கொண்டால் தன்னுடைய வாழ்வாதாரம் என்னவாகும் என்று கேட்தும் கூறப்பட்டுள்ளது. தான் அப்படி ஈடுபடப் போவதில்லை என்று கூறியபின்னே அவர் மகிழ்ச்சி அடைந்தார். விவசாயிகளின் நிலைமையை உணர்ந்து அவர்களுக்கு நன்மை தரும் விதத்தில் ஆட்சியர் செயல்பட்ட விதம் பாராட்டத்தக்கதாகும். மதிக்கத் தக்கதாகும்.
தகவல் நெடுஞ்சாலை என்ற இந்த 18 ஆவது கட்டுரை பிக் டேட்டா என்ற தொழில்நுட்பம் சார்ந்த பல்வேறு தகவல்களை விளக்குகின்றது. பரமக்குடியில் பேருந்து விரிவாக்க ஆக்கிரமிப்புப் பகுதியை எடுப்பதற்கு ஜேசிபி மூலம் அப்பணியை முடித்தவிதமும் சொல்லப்பட்டுள்ளன. அமேசான் அலெக்ஸா என்ற கருவியின் மூலமாக இன்று சொற்களினால் மகிழ்ச்சியும் பெற முடியும், அவசியமான தகவலையும் பெற முடியும் என்ற செயற்கை நுண்ணறிவு குறித்தும் இக்கட்டுரை விளக்குகின்றது.
பட்டாம்பூச்சி விளைவு என்ற கட்டுரையில் பள்ளியின் மாணவர்கள் பேஸ்புக் மூலமாக சண்டை போட்ட விதத்தையும் குறிப்பிட்டு அந்த மாணவர் தன்னிடம் வந்து கூறிய செய்தியையும் பிறகு தலைமையாசிரியரிடம் பேசி திரும்ப அந்த மாணவரை பள்ளியில் பிளஸ் 2 தேர்வு எழுத செய்த செயலும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் அவரின் பெற்றோர் தன்னிடம் வந்து வருந்திய செயலும் அன்பையும் குறிப்பிட்டு கல்வியின் முக்கியத்துவத்தை ஆட்சியர் விளக்கிய விதம் மிக நன்று. அறச்சீற்றம் கொண்ட ஒரு ஆசிரியரின் செயலையும் இப்பகுதியில் நாம் அறிக்கின்றோம். மேலும் கலெக்டராக உருவானது பற்றியும் பேசி அந்தக் காட்சிகளை விவரித்த விதம் சிறப்பாக உள்ளது. ஆட்சியருக்கு சமூகத்தில் கிடைக்கும் மரியாதை என்ன என்பதை உணர்ந்த காரணத்தினால் தானும் அத்தகைய கலெக்டர் பதவியைப் பெற வேண்டும் என்ற எண்ணமும் விடாமுயற்சியும் கொண்டு வான்மதி என்பவர் ஐ.ஏ.எஸ் தேர்வில் வெற்றிபெற்ற செய்தியையும் இங்கே ஆணையர் குறிப்பிட்டுள்ளார்.
தாய்மை என்ற கட்டுரையில் இவரது எழுத்தின் வர்ணனையை நாம் உணர முடிகின்றது. விளையாட்டு வீரர்களை வெளிச்சமிட்டு காட்டுவதாக இக்கட்டுரை அமைந்துள்ளது. விஸ்வநாதன் ஆனந்த் அவரது தாயார் சுசீலா குறித்தும் தாய்ப்பாசத்தின் மீது கொண்ட அன்பை விளக்குவதாக இக்கட்டுரை அமைகின்றது. வாட்டர்கேட் ஊழல் பற்றியும் தன் அம்மாவுடன் பேசிய செய்தியையும் இக்கட்டுரை நமக்கு விளக்குகின்றது. கதிரவன் மறையாத தமிழ் புலம் என்ற கட்டுரையில் ஆறாம் திணையாக உள்ள அயலகத்தையும் அங்கிருக்கின்ற மனிதர்களின் செயல்பாட்டையும் கூடுதல் சிரத்தையோடு ஆணையர் விளக்கியுள்ளார். நண்பர்களோடு உறவாடிய அந்த செயல்களையும் கல்லூரியில்தான் அடைந்த மகிழ்ச்சியையும் தன்னோடு இருந்த நண்பர்களின் செயல்களும் சொல்லப்பட்டுள்ளன. இப்படி அவர்கள் தமிழ் உணர்வு கொண்டவர்களாக இருப்பது இக்கட்டுரையில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இவர்கள் தமிழகத்தின் மீது அன்பு கொண்டு இருக்கின்ற சூழலையும் இந்த கட்டுரையில் ஆணையர் குறிப்பிட்டுள்ளார். ரௌத்திரம் பழகு என்ற இந்தக் கட்டுரையில் ஆட்சியர் பதவியில் சிறப்பாக பணியாற்றியவர்கள் குறித்தும் இன்றும் செயலாற்றி கொண்டிருக்கின்ற இளைஞர்கள் குறித்தும் கூடுதல் கவனத்தோடு மிகவிரிவானதாக இந்தக் கட்டுரை அமைக்கப்பட்டுள்ளது. தான் ஜில்லா கலெக்டர் ஆவேன் என்பதற்கான அந்த பழைய நினைவு அலைகளையும் குறிப்பிட்டு 10 லட்சம் பேர் பங்கு பெறும்போது தேர்வில் வெற்றி பெற எதுதான் சிறந்த வழி என்பதையும் ஆணையர் குறிப்பிட்டுள்ளார். வீரபாண்டியன், நந்தகுமார், இளம்பகவத், சிவகுரு பிரபாகரன், வான்மதி போன்றோரைக் குறிப்பிட்டு விளக்கிய விதம் பாராட்டத்தக்கது. ஆலமரத்தின் மௌனம் என்ற கட்டுரையில் குமாரசாமி என்ற அவரது ஆசிரியரைப் பற்றி விளக்குகின்றார். வரலாற்றைக் கூறியதால் அவரது வரலாற்றையும் நாம் தெரிந்து கொள்கின்றோம். இதனைத் திறம்பட விவரித்த விதம் பாராட்டத்தக்கது.
நிறம் மாறிய பூக்கள் என்ற கட்டுரையில் தசைச்சிதைவு நோய் ஐந்து வயதுக்கு மேற்பட்ட குழந்தைகள் அடிக்கடி தடுமாறி விழுவது இந்தக் குறைபாட்டின் முதல் அறிகுறி என்கிறார்கள். படிகளில் பிடிப்பின்றி ஏற முடியாமல் கால்கள் வளைந்து போகும். பத்து முதல் பன்னிரண்டு வயதில் நிற்கவோ நடக்கவோ முடியாது. 12 – 18 வயதில் பிற உறுப்புகளில் நோயின் தாக்கம் தீவிரமடையும். 25 – 30 வயதுக்கு மேல் உயிர் வாழ்வது கடினம் என்ற அவரின் பேச்சை இடைமறித்து நம்பிக்கையான வார்த்தைகளைச் சொல்கிறேன் என்பதான செய்திகளைக் குறிப்பிட்டு தசைச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு எப்படி எல்லாம் தான் உதவ முடியும் என்பதையும் எப்படி செயல்படுத்தினார் என்பதையும் இந்தக் கட்டுரை விளக்குகிறது. ஒவ்வொரு குழந்தைக்கும் தனித்திறன் உண்டு என்பதை உணரும் வகுப்பறைச் சூழல்தான் உன்னதமானது என்றும் வானவன் மாதேவி, இயல் இசை வல்லபி என்ற அழகிய தமிழ்ப் பெயர் கொண்ட சகோதரிகள் குறித்தும் அந்தக் கொடிய நோயின் தன்மையை ஆணையர் குறிப்பிட்டுள்ளார். அவர்களின் நம்பிக்கை இங்கே குறிப்பிடத்தக்கது. சாமானியரின் கரங்கள் என்ற கட்டுரையில் மதுரையில் ஆட்சியராக இருந்தபோது புதிய வாகன ஓட்டுநர் முருகேசன் என்பவரின் புத்தக ஆர்வத்தை அறிந்தமை, சமணம் சார்ந்த செய்திகளையும் ஆனைமலை, கீழவளவு, கழுகுமலை பற்றி எல்லாம் தெரிந்து கொண்ட அந்த நிகழ்வுகளையும் சொல்லி அவரது வாசிப்பை உணர்ந்தமை கூறப்பட்டுள்ளன. சுற்றுலா பயணிகளைக் கீழக்குயில்குடி செல்ல திட்டமிட்டதையும் அங்கேயே நடந்த நிகழ்வுகளையும் விளக்குவதாக இந்த கட்டுரை அமைந்துள்ளது. பேசுகின்ற பேச்சு அது எவ்வளவு சக்தி வாய்ந்தது என்பதை இந்த கட்டுரை உணர்த்துகின்றது. மேலும் தமிழக அரசின் புதிய திட்டமான எலக்ட்ரானிக் தேயிலை ஏல மையம் எப்படி செயல்படப் போகிறது என்பது குறித்து கூறி அங்கே பேசிய அந்தப் பேச்சானாது எப்படி நினைவில் நிறுத்தும், எப்படித் தன்னை வந்தடையும் மக்கள் மனதில் எத்தகைய மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதையும் விளக்கியமை அருமை.
சொற்கள் எப்படி தோன்றியது உறுப்பினர், தலைவர், செயலாளர், பொருளாளர் என்பதற்கான அந்தச் சொற்களின் பயணத்தை அழகாக (பக்கம்-206) விளக்கியுள்ளார். பல்வேறு தகவல்களைச் சொல்வதாக இக்கட்டுரை இருக்கின்றது. இலங்கை வர்ணனையாளர்கள் கே.எல்.ராஜா, அப்துல் ஹமீது போன்றவர்கள் பேசிய அந்தப் பேச்சின் ஆளுமைத்திறனை இக்கட்டுரை விளக்குகின்றது. அவர்கள் செயல்பட்ட விதங்களையும் இங்கு நாம் அறிகின்றோம். மாணவப் பருவத்திலிருந்தே தான் பெற்ற அந்த இன்பங்களை அழகுபட விளக்குவதாக இப்பகுதி இருக்கின்றது. இது நாம் செய்த குழந்தைப் பருவத்தை நினைவு படுத்துவதாகவும் உள்ளது. குழந்தைக்குப் பெயர் வைக்கும் முறையைக் குறிப்பிட்டு அவர் அடைந்த ஆதங்கத்தையும் இக்கட்டுரையின் இறுதியில் சொல்லியிருக்கின்றார். தேடி வந்த நோபல் பரிசு என்ற கட்டுரையில் கீரின் என்ற மருத்துவர் ஆங்கில நூல்களைத் தமிழில் மொழிபெயர்த்து தந்ததையும் விளக்கிய விதம் அருமை. நோபல் பரிசு பெற்ற நிகழ்வுகளையும் வரலாற்றுப் பின்னணியோடு கூறிய விதம் நன்றாக உள்ளது. ஆதி மனிதர்கள் செயல்பட்ட செயல்பாடுகள் வாழ்வின் உச்சம் என்பதை விளக்கியது சிறப்பு.
வறுமையின் நிறம் எனும் கட்டுரை மாணவர்களின் அறிவுத்திறனைத் தொட்டு விளக்குவதாகவும் மாணவர்களின் உணவுத்தேவைகளும் அதனைத் தீர்க்க எடுத்த முயற்சிகளும் சொல்லப்பட்டுள்ளன. இதனுள் கல்வியின் அவசியத்தையும் மாணவர்கள் செய்த செயலையும் குறிப்பிட்டு அவர்களைப் பாராட்டிய விதத்தையும் நாம் தெரிந்து கொள்கின்றோம். குறிப்பாக விருதுநகர் அரசுப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படிக்கும் ஜெயக்குமார், கரூர் அருகே ஒரு மெட்ரிகுலேஷன் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு எழுதி இருக்கும் ரிஃபாத் ஷாருக் போன்றவர்களைக் குறிப்பிட்டு அவரைப் பாராட்டிய விதம், துடிக்கும் மாணவர்கள் சிலரைத் தேர்ந்தெடுத்து வழிகாட்டும் அகரம் அமைப்பு நடத்திய நிகழ்ச்சியில் தான் கூறிய அந்த நினைவலைகளை இந்தக் கட்டுரையின்வழி தெரிந்து கொள்கின்றோம். கனவு தேசம் என்ற கட்டுரையில் லீ குவான் யூ மறைந்த போது அவரின் செயல்பாட்டையும் சிக்கலான நிலையிலிருந்து மீண்டெழுந்து உலகமே வியக்கும் அளவிற்கு இன்று சிங்கப்பூர் எப்படி எல்லாம் வளர்ச்சி பெற்றது என்பது கூறப்பட்டுள்ளது. இதற்குக் காரணமாக இருந்த மக்களின் கடுமையான உழைப்புச்செயல்பாடும் பதிவு செய்யப்பட்டுள்ளது. லீ குவான் யூ அவரது கனவை நினைவாக்க பாடுபட்ட அரசு இயந்திரத்தையும் இந்தப் பகுதியில் ஆசிரியர் விளக்கிக் கூறியுள்ளார்.
அதிவேக மரபணு என்ற கட்டுரையில் மதுரை மாநகரில் ஆட்சியராக இருந்தபோது கிரிக்கெட் தனக்குப் பிடித்தமான விளையாட்டு என்றும் ஸ்டீவ் வாக் உடன் தான் உரையாட இருந்ததாகவும் ஆனால் தவறவிட்ட சூழ்நிலையும் குறிப்பிட்டுள்ளார். நம் தமிழரின், இந்தியரின் கிரிக்கெட் மீதான ஆர்வத்தையும் இப்பகுதியில் நாம் தெரிந்து கொள்கின்றோம். உலகப் போட்டியில் இந்தியா வெளியில் வந்தாலும் கூட மற்ற நாடுகளில் யார் வெற்றி பெற வேண்டும் யார் தோற்க வேண்டும் என்பதையும் நாம் யோசிக்கின்ற சூழலையும் ஆசிரியர் விளக்குகிறார். குறிப்பாக நம் காலனிய எதிர்ப்பு மனநிலையைக் காட்டுவதாக கூறியது ஆழ்ந்த ஆய்வுக்குரிய ஒன்றாகவும் உள்ளது. உசேன் போல்ட் குறித்தும் அவரது செயல்பாட்டையும் விளக்கியுள்ள விதம் நன்று.
திரைமொழி என்ற கட்டுரையில் தான் ஐ.ஏ.எஸ் நேர்முகத்தேர்வுக்கு சென்றபோது தனது விண்ணப்பத்தில் பிடித்தமானது என்பதில் பொழுதுபோக்கு பிலிம் அப்பிரேசியேஷன் என்று போட்ட காரணத்தால் அது சார்ந்த புத்தகங்களை ரயிலில் செல்லும்போதே படித்த செய்திகள் கூறப்பட்டுள்ளன. திரைப்படங்கள் … அவரது திரைப் பார்வையையும் இந்தக் கட்டுரையில் விளக்கமாக எழுதியுள்ளார். குறிப்பாக உதிரிப்பூக்கள் குறித்தும் இயக்குனர் மகேந்திரன் பற்றியும் கட்டுரையில் சொல்லப்பட்டுள்ளது. மேலும் இளையராஜா, ஏ.ஆர். ரகுமான் அவர்களின் இசை குறித்த தகவல்களும் கூறப்பட்டுள்ளன. கனவுத் தொழிற்சாலையாக இருக்கின்ற இந்த சினிமாத் துறையை உலக தரத்துக்கு ஒப்பிட்டு காட்டிய விதம் நன்று.
முப்பத்தி இரண்டாவது கட்டுரையான வண்ணக்கனவுகள் என்ற கட்டுரையில் 12 ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் அப்புறம் என்ன தேர்வு இருக்கின்றது என்பதை அறியாமலே இருக்கின்றனர். அச்சூழலை குறிப்பிட்டு அப்படிப்பட்டவர்களுள் ஒருவர் தன்னைச் சந்தித்து மருத்துக் கல்லூரியில் மருத்துவ படிப்புக்கான விண்ணப்பம் அளிக்க வேண்டும் என்று வேண்டுதல் செய்ய, காலம் முடிந்துவிட்டதாக கூறி வருந்துகிறர். அவரது முயற்சியில் பல முறை முயன்றும் அவருக்காக விண்ணப்பிக்க முடியவில்லை. தன்னால் அது முடியாமல் போகவே அதனுடைய வருத்தத்தையும் குறிப்பிட்டுள்ளார். இதன் காரணமாகவே புதிய பாடநூல்கள் எழுதும்போது 11 மற்றும் 12-வது வகுப்புப் பாடநூல்கள் அனைத்திலும் தொழில்நுட்ப படிப்புகள் மட்டுமின்றி ஒவ்வொரு துறையிலும் என்னென்ன உயர் படிப்புகள் உள்ளன என்பதும் எப்படி விண்ணப்பது, கல்வி உதவித்தொகை விவரங்கள் அடங்கிய வழிகாட்டி தகவல்கள் புத்தகங்களில் இடம்பெற்ற செய்தியையும் கட்டுரையில் தந்துள்ளார். தனக்கு நேர்ந்த அந்தச் சிக்கலை எப்படித் தீர்க்க வேண்டும் என்ற அந்த நல்ல வழிகாட்டலை ஆட்சியர் மேற்கொண்டது சிறப்பு. நீர்வழிப் பாதை என்ற கட்டுரையில் ஆர்தர் காட்டன் குறித்தும் கொள்ளிடத்தின் குறுக்கே அவர் கட்டிய மேலணை தஞ்சை டெல்டா பகுதி முழுக்க பாசன நீரைப் பகிர்ந்து அளித்து உதவிய செயலையும் மிக விரிவாக விளக்குவதாக அமைந்துள்ளது. மேலும் 1876 ஆண்டு தாதுவருட பஞ்சம் குறித்தும் மக்கள் இழந்த அந்த செய்திகளையும் அறிந்து கொள்கின்றோம். பத்தாம் நூற்றாண்டின் மாபெரும் பொறியியல் அறிஞரான பென்னிகுயிக் செய்திகள் பலவற்றையும் பக்கம் 270-271-இல் தெரிந்து கொள்கின்றோம். முல்லை பெரியாறு அணையில் வழிந்த நீர் வறண்ட வைகையை உயிர்ப்பித்தது. தென் தமிழகத்தில் 2 லட்சம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெற்றது. அதனால் வறுமை நீங்கியது. வன்முறை மறைந்தது. வளம் பெருகியது. இதைத்தான் காவல்துறை செய்ய முடியாத பணியைப் பொதுப்பணித்துறை செய்ய முடித்தது எனப் பிரிட்டிஷ் கால மதுரைக் கெசெட்டியார் பெருமிதத்துடன் பதிவு செய்தது. பென்னிகுயிக் மதுரை மக்களின் காவல் தெய்வமானார். நீல மலையின் அழுகுரல் என்ற கட்டுரையில் தேயிலை விவசாயிகளின் நிலைகளையும் ஏலகிரியில் அறிமுகமான தேயிலை ஏலமுறை குறித்தும் அதன் வரலாற்றையும் மிக விரிவாக விளக்கியுள்ளார். ஒதகமந்து என்பது உதகமண்டலம் ஆக மாறிய சூழலையும் உதகமண்டலம் எப்படி சுற்றுலாத் தலமாக மாறியது, ஆங்கிலேயர்கள் இங்கு வந்து தங்குவதற்கான காரணங்கள் போன்றன தெளிவாக விளக்கப்பட்டுள்ளன. காட்டில் புலியைக் காண்பது கானுயிர் ஆர்வலர்களின் கனவு என்றும் தான் பார்த்த அந்தச் செய்தியையும் ஆணையர் விரிவாக கூறியுள்ளார். மரபின் அழகியல் என்ற கட்டுரையில் சென்னையில் உள்ள மிக முக்கியமான பகுதிகளைக் குறிப்பிட்டு எழும்பூர், கூவம், கன்னிமரா நூலகம், சென்னை சென்ரல் , அண்ணா சாலையில் உள்ள கட்டிடங்கள் என்பன பதிவு செய்யப்பட்டுள்ளன.
சென்னையில் தனக்குப் பிடித்தமான இடம் எது என்று கேட்டால் அது அண்ணா நூற்றாண்டு நூலகம்தான் என்று கூறிய செய்தியும் அதற்குக்கான காரணமாக அதன் வடிவமைப்பு, நவீன வசதிகள் கூடிய அரங்கங்கள், கலை வண்ணம் கொண்ட மழலைகள் பகுதி, அரிய ஓலைச்சுவடிகள் மட்டுமன்றி தன்னை நிலைநிறுத்திக்கொள்ள நீதிமன்றங்களில் நடந்த போராட்டம் எனப் பலவற்றை ஆசிரியர் கூறியுள்ளார். புனித ஜார்ஜ் கோட்டை உருவான வரலாறு பிப்பிள்ஸ் பார்க், விக்டோரியா பப்ளிக் ஹால் கட்டிடங்கள் எப்படி உருவானது என்பது குறித்தும் மிக விரிவாக விளக்குவதாக அமைந்துள்ளது. ரிப்பன் கட்டிடம், மெட்ராஸ் கிரிக்கெட் கிளப் எனப் பல்வேறு செய்திகளைச் சொல்வதாக இக்கட்டுரை அமைந்துள்ளது. ரயில் பயணங்கள் என்ற கட்டுரை ரஸ்கின் பாண்ட் எழுதிய ஒரு மிகச் சிறந்த சிறுகதையை அவரின் மானசீக அனுமதியோடு திருத்தங்கள் செய்து மொழிபெயர்த்த செயலை நினைவு கூறுவதாக அமைந்துள்ளது. மிக அழகான காதல் கதையாக இச்சிறுகதை அமைந்துள்ளதை நாம் உணர்கின்றோம். தமிழகத்தில் ரயில் எப்படி வந்தது என்றும் ஆங்கிலேயரின் மூலமாக வந்த அந்த ரயிலின் பின்னணியையும் மிக அழகான வரலாற்றை இக் கட்டுரை நமக்கு சொல்வதாக உள்ளது.
வரலாறு திரும்பும் என்ற கட்டுரையில் உதவி கலெக்டராக பயிற்சி பெற்ற காலத்தில் முதல் 30 நாட்கள் காஞ்சிபுரத்தில் இருப்பதற்கான அந்தச் சூழலை வரலாற்றின் துணைகொண்டு ஆணையர் நமக்கு விளக்கியுள்ளார். கேப்டன் ஜேம்ஸ், கர்னல் ஜார்ஜ் பிரவுன் என்ற ஆங்கிலேய வீரர்கள் ஹைதர் அலியுடன் நடந்த போரில் உயிரிழந்ததால் அவர்களுக்கு புள்ளளூரில் எழுப்பப்பட்ட கூம்பு வடிவில் இருக்கின்ற அந்த நினைவுச் சின்னங்களைக் குறித்தும் கூறப்பட்டுள்ளன. இந்தியாவில் ராபர்ட் கிளைவ், துய்ப்பிளே, வாரன் ஹேஸ்டிங்ஸ் போன்றோர்கள் எப்படி எல்லாம் கொள்ளை அடித்தார்கள் என்றும் இறுதியில் அவர்களின் நிலைமை எப்படிப்பட்டதாக மாறியது என்பதையும் குறிப்பிட்டுள்ள விதம் குறிப்பிடத்தக்கது. புரட்சிப் பூக்கள் என்ற கட்டுரை மகாத்மா காந்தியையும் சேகுவாராவையும் நினைவு படுத்துவதாக அமைந்துள்ளது. மகாத்மா காந்தி அருங்காட்சியகத்திற்குத் தன் குடும்பத்தோடு சென்றதையும் காந்தியடிகள் குறித்த பல்வேறு செய்திகளையும் கூறுவதாக இக்கட்டுரை உள்ளது. மேலும் சேகுவாராவின் வாழ்க்கை வரலாறு மிக எளிமையாகவும் நன்றாகவும் விளக்கப்பட்டுள்ளது. பாரதியின் திரைப்படத்தைப் பார்த்துவிட்டு அந்த பாரதியின் வாழ்க்கை வரலாற்றைக் கூறியது அவரது பார்வையிலான பாரதியை நாம் தெரிந்து கொள்கின்றோம். தமிழ்ச் சமூகத்தில் ஏற்பட்ட இந்த மறக்கமுடியாத நினைவை நாம் வருத்தத்தோடு ஏற்றுக் கொள்கிறோம்.
நினைவுப்பரிசு என்ற இந்த கட்டுரையில் மதுரையைத் தாண்டி செல்லும் தேசிய நெடுஞ்சாலை விரிவாக்க பணிகளால் புதுப்பட்டி என்ற கிராமத்தில் இருக்கின்ற பள்ளிக்கூடம் இடிக்கப்பட்டதும். அதற்காக மாற்று கட்டிடம் வேண்டும் என்றும் ஊராட்சித் தலைவர் வந்து கேட்டுக்கொண்டதற்கிணங்க ஆட்சியரின் சீரிய செயலால் புதிய இடம் தேர்வு செய்யப்பட்டதும் கூறப்பட்டுள்ளது. வள்ளிமயில், முருகேசன் என்பவரைக் குறிப்பிட்டு அவர்களால் அந்தக் பள்ளிக்கூடம் திரும்ப நிர்மாணம் பெற்றதையும் அதற்கு உதவி செய்ததும் குறிப்பிட்டப்பட்டுள்ளது. கால்கோள் விழாவிற்கு ஆட்சியரை அழைத்ததாகவும் ஆனால் தன்னால் கலந்துகொள்ள இயலாத சூழலையும் குறிப்பிட்டாலும் கூட அவர்கள் தொடர்ந்த வற்புறுத்தலின் பேரில் ஆட்சியர் சென்றதும் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதற்கு முன்னதாக இஸ்லாமியரின் மனித நேய நிகழ்வு நடக்க வேண்டும் என்று குறிப்பிட்டதும் , அந்த முகமதிய பெரியவர் ஓதியதையும் பிறகு அங்கே இந்து முறைப்படி பூஜைகளும் நடந்ததைக் குறிப்பிட்டு மத வேறுபாடுகளைச் செயற்கையாக இணைக்க முயன்ற கலெக்டருக்கு, கால்கோள் விழா ஒரு சர்வமத வழிபாடாக மாற்றிக்காட்டிய புதுப்பட்டி கிராம மக்களின் அழகிய செயல்பாட்டை விளக்குவதாக இந்தக் கட்டுரை அமைந்துள்ளது.
மதுரையில் இருந்து மாற்றலாகி விடைபெறும் முன் தான் எதற்காக கண் கலங்கினேன் என்பதையும் குறிப்பிட்டு இது இன்னும் அவரது நினைவில் என்றும் நிழலாடுகின்றது என்பதையும் நாம் அறிந்து கொள்கின்றோம். அஞ்சலட்டை என்ற அந்த இறுதிக் கட்டுரையில் தான் பணியாற்றிய பரமக்குடியில் நடைபெற்ற நிகழ்ச்சியை விளக்குவதாக அமைந்துள்ளது. பேருந்து நிலைய விரிவாக்கத்தின்போது ஆக்கிரமித்த பகுதிகளை மீட்கும் நடவடிக்கையில் ஒருவர் அடைந்த துயரத்தையும் குறிப்பிட்டு அவரின் வாழ்வாதாரம் இழந்தவர் எழுதிய கடிதத்தை வைத்துக் கொண்டு ஆணையர் அடைந்த வருத்தத்தையும் முகவரி இல்லாததால் அவருக்கு உதவ முடியவில்லை என்பதையும் குறிப்பிட்டுள்ளார். இது அவரின் பண்பினைக் காட்டுவதாக இருக்கின்றது
இதன்பிறகு எந்த ஒரு செயலில் இறங்கும்போதும் உரிய தகுதியானவர்களுக்கு உரிய இழப்பீடு கொடுத்துவிட்டு தான் செயல்படவேண்டும் என்ற அந்த அனுபவத்தை பெற்றதாகவும் ஆட்சியர் குறிப்பிட்டுள்ளார். இதன் காரணமாகவே அவர் செய்கின்ற அந்த செயல்களில் பொறுமை இருப்பதாகவும் சிரத்தை இருப்பதாகவும் உணர்வதை அறிகின்றோம். மேலும் புதிய பாடநூல்கள் உருவாக்க பணிகளைக் குறிப்பிட்டு நூல்வடிவம் பெற்ற அந்த அனுபவத்தை கூறிய விதம் நன்றாக உள்ளது. புத்தக வடிமைப்பாளர் இந்தப் பாடநூல்கள் எல்லாம் நான் படிக்கும்போது இருந்திருந்தால் இன்னும் நல்லா படித்திருப்பேன் சார் என்று முடித்தபோது அறையில் இருந்த அனைவரும் நெகிழ்ந்து போனதாக பக்கம்-326 இடம்பெற்றுள்ளது. கொரானோ கால பணியின்போது தனிமைப்படுத்தப்பட்டு இருக்கின்ற சிலரிடம் ஆணையர் பேசி அவரது நலன்களை விசாரித்த செய்திகள் சொல்லப்பட்டுள்ளன. லீலாவதி என்ற அந்த 80 வயதான ஒருவரிடம் பேச முற்பட்டபோது அவரது மகன் பேசியதாகவும் பிறகு அந்த அம்மையாரை நன்றாக கவனித்துக் கொள்ளுங்கள் என்பதாக பேசி முடித்த தகவல்களும் நோய்தொற்று முடிந்தவுடன் நேரில் சந்திக்கலாம் என்று சொன்ன அந்தச் செய்திகளும் தரப்பட்டுள்ளன.
ஆக உண்மையில் இக்கட்டுரை நூலைப் படிப்பவர்களுக்கு உதயச்சந்திரன் அவர்களின் அனுபவங்கள் சிறந்த பாடமாக இருக்கும் என்பது திண்ணம். மிகச்சிறந்த தன்னுடைய வாழ்வின் அனுபவத்தையும் நிர்வாக அனுபவத்தையும் தன் இலக்கியம் சார்ந்த, பண்பு சார்ந்த, புரிதல் சார்ந்த பல்வேறு தகவல்களை விளக்கியுள்ளார் ஆணையர். இப்படிப்பட்ட ஒரு நூலைக் கொடுத்த ஆணையர் தன்னுடைய வாழ்க்கையைச் சுயசரிதையாக எழுதி வருங்கால சந்ததியினருக்குக் கொடுத்தால் அது இளந்தலைமுறையினருக்கு கலங்கரை விளக்காக திகழும் என்பது திண்ணம். நம் எண்ணங்கள் விரைவில் நிறைவேறட்டும். ஆணையர் சிறந்த சொற்பொழிவாளராக விளங்கி தற்போது சிறந்த எழுத்தாளராகவும் பரிமாணம் பெற்றுள்ளார். இந்நூலைச் சிறப்பாக எழுதிய நெஞ்சம் தொட்ட ஆணையர் த. உதயச்சந்திரன் அவர்களுக்கும் மிகச்சிறந்த முறையில் அழகான ஓவியங்களை வரைந்த ஓவியர் மருது அவர்களுக்கும் விகடன் இதழின் பொறுப்பாளர்களுக்கும் பல்வேறு பொருத்தமான புகைப்படங்களோடு பதிப்பித்த ஆனந்த விகடன் பதிப்பகத்தாருக்கும் வாழ்த்துகள்.