முன்பு போலில்லை இப்பொழுது நான்
இயற்கை வெளிகளிலோ
சூழல் நிகழ்வுகளிலோ
தொலைக்காட்சி திரைப்படங்களிலோ
காட்சிப் படலங்களில்
உணர்ச்சி மேலிட
கண்ணீர் உகுக்கச் செய்கின்றன.
எமது தோழர்கள் சொல்வார்கள்
இரக்கமோ…
அனுதாபமோ…
அநீதி, கொடுமைகள் கண்டு
இளகலோ
கண்ணீர்க்கானதல்ல..!
வெகுண்டெழுதலுக்கும்
போராட்டத்துக்குமானதென்று.
என் வயதொத்தவர்களும்
என் பிள்ளைகளும் சொல்கிறார்கள்
மூப்பொரு காரணமாய்.
ஆம்…
எதுவாக இருப்பினும்
உறவுகளின் பின்னல்களில்
பேரப்பிள்ளைகள் நிகழ்த்திய
செயல்களும் உரையாடல்களும்
திடப்பொருள் அழுத்தத்தால்
ததும்பும் நீரின் வெளியேற்றமாய்
விழிகள் வழிகின்றன.
விடுமுறையில் வந்து ஊர் கிளம்பும் நேரம்
எங்கள்
“ஸ்பார்க்கர் ஹாரியத்”
இளையவனின் மகன் சொன்னான்
இங்கேயே இருப்பதாய்
‘ஆயாவும்… தாத்தாவும்
நன்றாக பார்த்துக்கொள்வார்கள்” – என
வெளிநாடு வாழ் மகனின் மகன்
எங்கள் “அரண்” சொன்னான்
அதுவும்
ஊர் விட்டு வெளிக்கிளம்பும் நேரம்தான்
கட்டில் படுக்கையின் மூலையில்
கால்மேல் காலிட்டு
ஒருக்களித்த மேனியாய்
“அவ்வாவும் தாத்தாவும்
அருமையாய் வைத்துக்கொள்வார்கள்”-என
இங்கிருக்கப் போவதாய்.
ஒவ்வொரு தடவையும்
சென்னையிலிருந்து பாண்டி வரும் நேரம்
மகிழுந்தின் கீழிறங்கி
சாலையிலேயே நிற்பாள் பேத்தி.
அவ்வா வந்து ஆசையாய் தூக்கி
உள் செல்லும் வரை.
தொலைக்காட்சியில்
வங்கியின் விளம்பர நேரம்
‘ஸ்பார்க்கி’ கேட்டான்
லவ்வை – அன்பை
சேமிக்க முடியுமா…? – என
ஆம் என்ற
அவன் அம்மாவின் பதிலுக்குப்பின்
‘அன்பை’ ஆயாவிடம் சேமிக்கப்போவதாய்
அவன் அம்மாவின் முகம் மாறுதலுக்குப்பின்
ஆயாவிடமும், அம்மாவிடமும் சேமிப்பதாய்.
வார்த்தைகள்
உறவுகளையும் நினைவுகளையும்
சுமக்கச் சுமக்க
விழிகளின் நிலை ததும்பி ததும்பி…!
தொடுதிரை செல்பேசிகள் வந்தபின்
வலைதள சேவைகளின்
ஆதிக்கத்தால்
உங்களின்
உங்கள் சிந்தனைகளின்
உங்கள் நோக்கங்களின்
உங்கள் திருட்டுத்தனங்களின்
ஒவ்வொரு சிறு,சிறு
அசைவுகளும் கூட
கண்காணிக்கப்பட்டுக்கொண்டே
இருக்கின்றன.
ஏன்
உங்கள் அடையாள அட்டைகளின்
அங்கப்பதிவுகளாலும் கூடத்தான்.
செல்பேசிகளில்
உங்கள் தொடர்புகளின் இணைப்புகளால்
வந்துக் குவியும் குவியல்களில்
நல்லவைகளை
உண்மையானவைகளை
கிளறி, கிளறி
திட்டமிட்டோ…திட்டமிடாமலோ
சேர்க்கப்பட்டவைகளை
தானியங்களில் கலக்கப்பட்ட
கற்களையும் மணலையும் தூசுகளையும்
பிரித்தெறிவதுபோல்
தள்ளி ஒதுக்குவதற்குள்
உயிர் பிழியப்படுகிறது..
கால விரையங்களில்
படிப்பதை இழக்கும் மூளை.
இடுகைகளையும்
இடுகைகளைப் பகிர்வதையும்
வேலையாய் கொள்பவர்களின்
மூளைகளையும் நாம்
சுமக்கவேண்டியதாகிறது.
எதை இழக்க…?
எதை சேர்க்க..?
நம் சுயங்கள் யாராலோ
வேவு பார்க்கப்பட்டுக் கொண்டே
இருக்கின்றன.
எதுவாகினும்
தேவைகளின் பதிவேற்றங்களை மட்டும்
நமதாக்க
தேடிப்பிடிப்போம்…
பதிவாகும் எல்லா காட்சிகளும்
நின்றாடுவதில்லை
தொண்டையில் சிக்கிக்கொண்ட முள்ளாக
நெஞ்சுறுத்தும் சில கூட
எல்லோரையும் கசிய வைப்பதில்லை.
சந்தடி மிகுந்த அந்த அங்காடி வீதியில்
அவர்கள்
நாய்களோடு போட்டியிலிருந்தார்கள்.
தொட்டியிலிருந்த எச்சில் இலைகள்
வெளியில் விழுந்து கொண்டிருந்தன.
தாடைகளின் அசைவில்
பசியின் கோரம் கொஞ்சம்
குறைந்த வண்ணமிருந்தது.
நாய்களின் உறுமலை காதுகள் நிராகரித்தன.
நெஞ்சில் நெருப்பு தைத்தது…!
அவரவர்களின் அசைவு
அவரவர் தேவைகளின் முனைப்பு.
தேவையின்றி குவிக்கப்பட்ட
காய்கறி குவியல்களில்
தேவையானவைகளைத் தேடிக்கிளறிய கைகள்.
பன்றிகளும்கூட போட்டியிலிருந்தன.
வண்ணங்கள் குழைந்த
ஆடைகள் குவிந்த மேட்டிமைக் கடைகளில்
செல்வக் குழந்தைகளின் தேடுதல் வேட்டையில்
திருப்தியுறா மனங்கள்
வெளியேறிக் கிடந்தன.
நிறைந்து பிதுங்கிய நடைபாதைக் கடைகளில்
நலிந்தோர் வாழ்வு நட்டுக்கிடந்தது
நிறையும் மனங்களால்.
கீழடுக்குத் தொழிலைக் கேவலமாக்கிய
மேலடுக்குக்காரன்
செருப்புத் தொழிலில் செரிமானம் போக
பீடா மென்று கல்லாக் கட்டினான்.
உள் மறுக்கும் கோயில்கள் போலின்றி
கடைகள் அனைத்தும் வேறுபாடின்றி
அனைவரையும் உள் நிறைத்து மகிழ்வில்
கனவுகளைச் சுமந்து
காட்சி மயக்கத்தில் நடையின் பின்னல்.
கடை வீதி என்றாலோ
அம்மாயியின் நினைவு அசைந்து மருங்கும்.
தானியம் விற்று
மொச்சைக்கொட்டை வாங்கி வந்தது,
பொட்டுக்கடலை வெல்லம் வாங்கி வந்தது,
தானியம் விற்றுத்தான்
படிப்புக்கான ஆதாரம் அனைத்தும்.
நிகழ்வில்
உழைப்பின் பலனோ
நிறையும் கடைகளில் நிறைந்து வடிகின்றன.
பாதி பேர் உழைப்போ
பாட்டில்கள் நிறைந்த மதுக்கடைகளில்
உயிர் உண்ண மயங்கிச் சாய்கின்றன.
கடைவீதி மையத்தில்
இருவீதி சந்திப்பில்
அவர்கள்
ஒலிபெருக்கியின் முன்னால்
முழங்கிக்கொண்டும்
பேசிக்கொண்டுமிருந்தார்கள்.
மக்களிடம் வாங்கி
மக்கள் சேவைக்காய் என்றார்கள்.
மக்களிடம் கற்றதை
மக்களிடம் விதைப்பதாய் சொன்னார்கள்.
விலைவாசி, அரசியல், உலகமயம்,
இணைமறுப்பு வெறிக்கொலைகள்
சாதிக்கொடுமைகள், பெண் கொடுமைகள்
மதத்தின் பெயரால் நிகழ்த்தப்படும் வெறிச்செயல்கள்
இறைக்கப்பட்டுக் கொண்டிருந்தன.
மக்கள் நெரிசலோ செவிகளை வீசிச்சென்றது.
அங்கங்கே சிவப்புக்கொடிகள் நடப்பட்டிருந்தன…!