ஸ்ரீதர் மணியன்
ஒரு பெண்ணாக வாழ்வது
என்றால் என்ன
என்பது பற்றி…
நான் பேச விரும்புகிறேன்
இந்த வாழ்வைப் பற்றி…லிவ் உல்மன்
பெண் அனாதி காலமுதல், அவள் சிந்திக்கத் தொடங்கிய தருணம் முதல் அவள் மனதில் ஓயாது அலையடித்துக் கொண்டிருக்கும், இக்கணம் வரை விடையளிக்கப்படாத, விடை தெரியாத இக்கேள்விகள் லிவ் வில்மனின் இந்த வரிகள் வாயிலாக ஆணினம் என்னும் ஆதிக்க இனத்தின் முன்பாக வைக்கப்படுகின்றன.
கொண்டாடப்படுவோரின் வாழ்க்கை சாதாரண, எளிய மனிதனின் வாழ்வு போன்று இயல்பானதாக இருப்பதில்லை. அவர்களது புறவாழ்வு மிகப்பகட்டாக, ஆடம்பரமிக்கதாக, கொண்டாடப்படுவதாக, கொண்டாட்டமிக்கதாக நம் முன் தோற்றம் கொள்கிறது, இருப்பினும், அவர்களது தனிப்பட்ட வாழ்வு பல தருணங்களில் துயரமிக்கதாக, அவலமானதாக உள்ளதென்பதும் மறுக்கவியலாத கூற்றாக தமிழ்செல்வனின் ‘நான் பேச விரும்புகிறேன்‘ என்ற நூலின் வாயிலாக நாமறியக் காணலாம்.
தமிழ்செல்வன் குறித்து தனித்ததொரு அறிமுகம் அவசியமற்றது. தமிழ் படைப்புத் தளத்தில் தவிர்க்கவியலாததொரு ஆளுமை அவர். தன் வாழ்வின் பல்வேறு தருணங்களில் அவர் பெற்ற அனுபவங்கள் பல்வேறு படைப்புகளாக உருப்பெற்றன. ராணுவப் பணியிலிருந்து திரும்பிய அவர் அறிவொளி இயக்கத்தில் முக்கிய பங்காற்றினார். அவ்வனுபவம் ‘இருளும் ஒளியும்‘ என வடிவம் பெற்றது. அஞ்சல் துறையின் அனுபவம் ‘ஜிந்தாபாத் ஜிந்தாபாத்‘ என்று படைப்பானது. 1984ஆம் ஆண்டு அவரது முதல் சிறுகதைத் தொகுப்பான ‘வெயிலோடு போய்‘ வெளியானது. தமிழ் எழுத்தாளர்களை அரவணைக்கும் அமைப்பான ‘த.மு.எ.க. சங்கத்தின் தலைவராக, செயலராக பல்வேறு பொறுப்புகள் அவரைத் தேடிவந்தன. அதன் விளைவாக அருணனுடன் இணைந்து ‘த.மு.எ.க.சங்க வரலாறு காலத்தின் குரல் பிறந்தது. பெண்ணியம் சார்ந்த கட்டுரைகளாக தமிழ் இந்துவில் வெளியான ‘எசப்பாட்டு‘ வடிவம் கொண்டது. இன்றைய தலைமுறை இளைஞர்களால் அதிகம் வாசிக்கப்பட்டு கொண்டாடப்பட்ட ‘அரசியல் எனக்குப் பிடிக்கும்‘ நூல் அவரது படைப்புகளில் குறிப்பிடப்பட வேண்டியதொன்றாகும். இவ்வாறான பல பரிமாணங்களைக் கொண்ட தமிழ்செல்வன் தன்னுடைய எழுத்தில், பார்வையில் தான் வாசித்து அறிந்து கொண்டவற்றை நூலாக்கித் தந்திருக்கிறார். அவரது எழுத்தாற்றலுக்கு லிவ் வில்மன் மற்றும் இகான் செலி பகுதிகளில் அடங்கியுள்ள செறிவு மிக்க வாக்கியங்களே சான்றாகின்றன. ஒரு எளிய வாசகனுக்கு முதல் வாசிப்பில் பிடிபடாத இவ்வாக்கியங்கள் கனமான சொற்களும், ஆழ்ந்த பொருளும், ஆழமான உளவியல் கூறுகளை உள்ளடக்கியதாகவும் விளங்குகின்றன. அவரது முன்னுரையில் கண்டுள்ளவாறு அவை மொழியாக்கம் செய்யப்பட்டவை அல்ல, ‘நான் வாசித்தவற்றைக் கொண்டு இப்பகுதிகளை உருவாக்கித் தந்துள்ளேன்‘ எனக்கூறியுள்ளார். ஒரு வேளை மொழியாக்கம் செய்யப்பட்டிருப்பின் இத்தகையதொரு சிறப்பான படைப்பு வாசகனுக்கு கிட்டாமல் போயிருக்கக்கூடிய சாத்தியங்கள் உண்டு. இந்நூலில் ஆழ்ந்து தோய்ந்தே அவர் இதனை எழுதியிருக்ககூடும் என்பதனை மனமொன்றி வாசிக்கும் வாசகர் அனைவரும் உணரமுடியும். மேலை நாட்டு திரைப்பிரபலங்கள் என்றாலே ஹாலிவுட்தான் (Hollywood) என்ற மாயை இப்படைப்பில் உடைத்தெறியப்படுவதைக் காணலாம். அதனைக் கடந்து சாதனை படைத்திட்ட மாபெரும் ஐரோப்பிய ஒன்றியக் கலைஞர்கள் ஐவர் இதில் வாசகர்களுக்கு அறிமுகமாகின்றனர்.
முதல் கட்டுரை திரைக் கலைஞரான லிவ் உல்மனின் வாழ்வு குறித்துப் பேசுகிறது. பெண்கள் பெரும் புகழும், செல்வமும் கொண்டவர்களாக இருப்பினும் ஆணினத்தைச் சார்ந்து வாழ வேண்டிய அவலம் லிவ் உல்மனின் சீற்றமாக வெளிப்படுவதைக் காணலாம். திருமணம் செய்து கொள்ளாமல் வாழும் நிலையில் குழந்தை பெற்றெடுத்தல் குறித்த லிவ் உல்மனின் கருத்து கூர்ந்து கவனிக்கத்தக்கது. அச்சூழலில் அதற்கு பெண் மட்டுமே பொறுப்பாளியாக்கப்படுகிறாள். பெண் மட்டுமே சட்ட விரோதமான அக்குழந்தையின் தாயாக, பொறுப்பாளியாக இருந்திட வேண்டியதாகிறது. ஆணின் பிற்சேர்க்கையாக, பின்னிணைப்பாக மட்டுமே பெண் பார்க்கப்படும் நிலையினை அவர் வெறுத்தார். அதுவே போல் அவர் மிகவும் நேசித்த இங்மர் பெர்க்மெனை பிரிய நேர்ந்ததும் இத்தகைய ஓர் உணர்வின் வெளிப்பாடுதான். அது குறித்த அவரது ஆதங்கம் சிந்தனைக்குரியது. எவ்வாறெனில், பெர்க்மென் எங்கு செல்வதாக இருந்தாலும் முதல் நாளே உல்மன் அங்கு சென்று அவருக்கான வீட்டுச்சூழலினை உருவாக்கி வைத்திருக்கவேண்டும். இது எழுதப்படாத விதியாக இருந்தது. இது உல்மனுக்கு சலிப்பினையும், மனச்சோர்வினையும் அளித்தது. எத்தனை காலம் உனக்கு பணிவிடை செய்யும் தாதியாகவே நான் இருக்கமுடியும் என்ற கோபம் ஒரு கட்டத்தில் வெடித்தது.
அதே தருணத்தில், பெண்கள் நேசத்தினை முக்கியமானதாகக் கருதுகிறார்கள். பெண்கள் வீட்டைவிட்டு வெளியேறினால் நிச்சயமாக இப்போது இருப்பதைவிட மகிழ்ச்சியாக, சுதந்திரமாக வாழ இயலும் என்றாலும் அவர்கள் அதைச் செய்வதில்லை. தங்களது தனிப்பட்ட மகிழ்ச்சியைவிட மற்றவற்களுக்கான அன்பும், காதலும் முக்கியமெனக் கருதுகிறார்கள் என்ற பெண்மையின் தார்மீகப் பொறுப்புணர்வினை பதிவாக்கி பெண்மைக்கான சிறப்பளிப்பதுடன், மிகச்சிக்கலானதாகக் கருதப்படும் பெண்களின் ஆழ்மன உணர்வுகளையும் துல்லியமாகக் கூறுகிறார் லிவ் உல்மன். ஐந்து குழந்தைகள், மூன்று திருமணங்கள் என்ற நிலையினைக் கடந்து வாழ்ந்த அவரது வாழ்வு குறித்த பகுதிகள் இதில் விவரிக்கப்படுகிறது. மேலை நாட்டு வாழ்வு தனிமனித சுதந்தரம், உரிமை, நாகரீகம், மேம்பட்ட கல்வியறிவு என்ற பல கூறுகளைக் கொண்டிருந்தாலும் பெண்களுக்கான இருப்பு உல்மனின் வாயிலாக பலத்த கேள்விக்குள்ளாப்படுவதனை இப்பகுதியில் உணரலாம்.
பெற்றோர்களின் கண்ணோட்டம் பிள்ளைகளைக் குறித்து எவ்வாறு உள்ளது என ஓவியக் கலைஞரான இகான் செலீயின் வாழ்க்கையினைக் கூறும் பகுதியில் காணலாம். தனது உடன் பிறந்தவளான கெர்ட்டியுடன் ஆழ்ந்த அன்பும், நெருக்கமும் கொண்டவனாக இகான் செலீ வளர்கிறான். அவனது தந்தை இத்தகைய நட்பினை, நெருக்கத்தினை ரசிப்பதில்லை. அவர் இதற்காக அவனைக் கண்டிப்பதுடன் வேறிடத்தில் பள்ளியில் சேர்க்கிறார். ஏன் அவ்வாறு அவர் நடந்து கொள்கிறார்? இதில் நான் என்ன தவறு செய்கிறேன் என்பது அவனது மனதை உறுத்தும் வினாவாக அவனைத் தொடர்ந்த வண்ணமே உள்ளது. தங்களது பிரதியாகவே தங்களது குழந்தைகளும் உருவாக வேண்டும் என்ற பெற்றோர்களின் எதிர்பார்ப்பு உலகெங்கிலும் மாற்றவியலாத, மாறா இயல்பு கொண்டதாக இருப்பதனை இகானின் இளமைக்கால நிகழ்வுகளின் வழி காணலாம்.
பள்ளியிலிருந்து வெளியேறிய இகான் பின்னாட்களில் ஓர் உலகப்புகழ் ஓவியக் கலைஞனாக உருப்பெறுவான் என்பது ஊகித்தறியவியலாததாக இருந்தது. வியன்னாவின் நுண்கலை அகாதெமியில் தனது பதினாறாவது வயதில் சேர்ந்த இகானுக்கு பழமையிலும், அது சார்ந்த மரபான கோட்பாடுகளும், அங்கு நிலவிய பூர்ஷ்வா வர்க்கத்தினரின் ஆதிக்கமும் விரைவில் சலிப்பினை அளித்தன. அத்தருணத்தில் அவனுக்கு பெரும் ஓவியக்கலைஞரான கஸ்டவ் கிளிம்ட்டின் அறிமுகம் கிடைத்தது. பிராய்டின் முன்வைப்புகள் கஸ்டவின் ஓவியங்களுக்கு புதியதொரு பரிமாணத்தை அளித்தன. இகானின் சில ஓவியங்களைப் பார்த்த கஸ்டவ் அவனிடம் மறைந்திருந்த திறமையினை உணர்ந்து கொண்டார். அவரளித்த ஊக்கம் இகானிடம் பெரும் மாற்றத்தினையும், தாக்கத்தினையும் உண்டாக்கியது.
இப்பகுதியில் நூலாசிரியர் தமிழ்செல்வன் நவீன ஓவியக்கலையின் வடிவங்கள் குறித்து பேசுகிறார். ஓவியக்கலையியல் ஆர்வலர்களுக்கும், வாசகர்களுக்கும் இப்பகுதி மிக்க தரவுகள் நிரம்பியதாகக் காட்சியளிக்கிறது. தனது ஆடையற்ற படைப்புகளுக்கு மாடலாக இருந்த வாலியுடன் சேர்ந்து வாழும் அவருக்கு வழமையான சமுதாயம் தனது முகத்தைக் காட்டியது. விளைவாக சிறை வாசமும், மன உளைச்சலும் அவருக்குப் வெகுமதியாகக் கிடைத்தன. அவரது ஓவியப்படைப்புகள் ஊர் மக்களால் அழிக்கப்பட்டன. சிறையிலிருந்த தருணத்தில் அவர் கூறிய வாசகங்கள் ‘நான் தண்டிக்கப்படவில்லை, மாறாக புனிதமாகிக் கொண்டிருக்கிறேன்‘, (I’m not pinished. I’m purified).
தன் சுயரூப ஓவியங்களின் வழியாகவே இவ்வுலகத்தையும், பிரபஞ்சத்தையும் காணவும், காட்டவும் முயன்றார் இகான் செலீ. ஒவ்வொரு கலைஞனும் மனநோய்க்கூறுகளுடனே வாழ்கிறான். ரெட்டைத் தன்மையுடன் இயங்கும் இச்சமூக மனதைக் கிழித்துக் காட்டி, தானே சமூகமும், சமூகமே தானுமாகி எல்லா குணாதியசங்களுக்குள்ளும் கூடுவிட்டுக் கூடுபாய்கிறவனாக – துக்கங்களையும், உளைச்சல்களையும் தானே அனுபவிப்பவனாகவும் இருப்பதால் மனநோயாளி போல் ஆக நேரிடுகிறது. இவ்வாறு ஒரு கலைஞனின் ஆழ்மன உணர்வினை தன் சொற்களால் பதிவாக்குகிறார் இகான் செலீ. வாழ்வினை ஓவியக்கலைக்கு அர்ப்பணித்த அவர் 1918இல் தன் வாழ்நாளின் இறுதிக்கட்டத்தில் வியன்னா கலைக்குழுமத்தின் தலைவராகத் தெரிவு செய்யப்பட்டார். கவிதைகளால், பாடல்களால் புரட்சியினை ஏற்படுத்தவியலும் என்பது நாமறிந்தது. மற்றுமொரு அடிப்படைக் கலையான ஓவியங்களாலும் விழிப்புணர்வினை, மாற்றத்தினை மக்களிடையே உருவாக்கிட இயலும் என்பதனை ஃபிரைடோ காலோவின் கலைந்த கனவும் கலையாத காதலும் பகுதி நமக்கு உணர்த்துகிறது. மெக்சிகோ நாட்டின் ஓவியக்கலை மேதையான ஃபிரைடோ காலோ தனது துயர் ததும்பிய ஓவியப்படைப்புகளால் மெக்சிகோவின் செல்லமகளாகக் கொண்டாடப்பட்டவர். சுவரோவிய மறுமலர்ச்சிக் கால நாயகனாகக் கொண்டாடப்பட்ட ரிவேராவின் அறிமுகம் காலோவிற்கு ஏற்பட்டது. அது அவரது வாழ்வினை மாற்றியமைத்தது. பெண்களைக் குறித்த ரிவேராவின் கருத்துகள் கலை உலகில் பிரசித்தி பெற்றவையாக இருந்தன. அவர் மனம் திறந்து காலோவைப் பாராட்டி ஊக்கமளித்தார்.
காலோ. பிறந்த நாட்டின் மீது கொண்ட பற்றினால் தான் பிறந்த ஆண்டினையே புரட்சியினால் மாற்றம் ஏற்பட்டு தேர்தல் நடந்த ஆண்டான 1910 எனக் கூறிக்கொண்டார். (அவர் பிறந்த ஆண்ட 1907). காலோவும் தனது சுயரூப (Portrait) படைப்புகளின் வழி புகழடைந்தார். பிரைடோவுடனான தனது நேசம் முறிவடைந்த நிலையில் கம்யூனிஸ்ட் கட்சிப் பணியில் ஈடுபட்டார். அவர் எப்போதும் அரிவாள் சுத்தியல் பொறிக்கப்பட்ட ஒரு துண்டினை போர்த்திக் கொண்டிருந்தது காண்போரை அதிரச் செய்ததாயிருந்தது என்று தமிழ்செல்வன் எழுதுகிறார். ஒப்பனையற்று ஒளிர்ந்தவள் பகுதி ஸ்வீடனின் நட்சத்திரமான இங்க்ரிட் பெர்க்மென் குறித்த கட்டுரை. நூலின் மிக நீண்ட பகுதியான இது சற்றேறக்குறைய 110 பக்கங்கள் கொண்டதாகிறது. திரையுலகு சமரசம் என்னும் சாராம்சத்தினை அடித்தளமாகக் கொண்டது. ஆண் நடிகர்களுக்கே இதுதான் நிலையெனில் ஒரு பெண் தனக்கான இடத்தினை அடைவதும், அதனை உறுதி செய்து கொள்வதற்கான படிகள் எத்தகையதாக இருந்திடும் என ஒரு வாசகன் எளிதில் ஊகித்தறியலாம். ஹாலிவுட்டின் முதல் விதியே ஒப்பந்தமாகும் எந்த நடிகரும் ஏழாண்டு காலம் அந்த நிறுவனம் தயாரிக்கும் படங்களில் அளிக்கப்படும் கதாபாத்திரத்தில் மட்டுமே நடிக்க வேண்டும். வேறு நிறுவனங்களின் படங்களில் நடிக்கக்கூடாது என்பதாக இருந்தது. இவ்வாறான தடைக்கற்களைக் கடந்து எந்த படநிறுவனத்திற்காகவும் தனது தனிப்பட்ட சுதந்தரம், தன்னியல்பினை தளர்த்திக் கொள்ள மறுத்து அதனைத் தகர்த்து வெற்றி கொண்ட பெண் கலைஞர் இங்க்ரிட் பெர்க்மென்.
மிக்க பிரபலமான நாவலான ஜோன் ஆப் ஆர்க் கதையில் நடித்திட ஒப்பந்தமானார் பெர்க்மென். வாஷிங்டன் நகரில் முதல் காட்சிக்கான தொடக்க விழா நடந்தது. அதில் பங்கேற்க நகரினை வந்தடைந்தார் நாடகத்திற்கான அனைத்து சீட்டுகளும் விற்பனையாயிருந்த நிலையில் கறுப்பினத்தவருக்கான அனுமதி மறுக்கப்பட்டதை அறிந்தார். இத்தகைய பாகுபாட்டினையும், அநீதியையும் கண்ட அவர் நாடகத்தில் நடிக்க மறுத்ததுடன் செய்தியாளர்களிடமும் இப்படி ஒரு அநாகரீகமான செயல் நடந்திருந்தது குறித்து முன்னரே அறிந்திருந்தால் இம்மண்ணில் நான் கால் பதித்திருக்கமாட்டேன் என்று பொங்கி வெடித்தார். இருப்பினும் அவ்வுரிமை கறுப்பின மக்களுக்கு கிடைக்க மேலும் ஏழு ஆண்டுகள் ஆனது. பெர்க்மெனின் சமூக அக்கறை, அனைவருக்குமான சம உரிமையினை உறுதி செய்தல் குறித்த உள்ளக்கிடக்கையினை இது வாஷிங்டன் நகர மக்களுக்கு மட்டுமல்லாது உலக மக்களுக்கும் எடுத்துக்காட்டியது.
மும்முறை ஆஸ்கார் விருதுகளைப் பெற்ற அவரது குழந்தைப் பருவம், இளமைக்கால அனுபவங்கள், திரையுலக சாதனைகளென இப்பகுதி விரிந்து செல்கிறது. எர்னஸ்ட் ஹெமிங்வேயைச் சந்தித்தல், அவருடனான விவாதங்கள் அவருடைய புகழ் பெற்ற நாவலான FOR WHOM THE BELL TONGS படத்தைப் பற்றிய குறிப்புகள் என மிக்க சுவாரசியத்தினை அளிப்பதாக இக்கட்டுரை உள்ளது. நடிப்பினை தனது வாழ்வில் எதனையும்விட அவர் மேலாகக் கருதினார். மேடை நடிப்பு முடிவிற்கு வரக்கூடும். அச்சூழலிலும் என்னால் நடிப்பினை துறக்கவியலாது. தெருக்களில் வேடமிட்டுச் செல்லும் ஒரு சூனியக்கிழவி போன்றாவது நடித்துக் கொண்டு என் பாதையில் நான் தொடர்ந்து சென்று கொண்டிருப்பேன் என்ற அவரது வாக்கியங்களுடன் அவரது கட்டுரைப்பகுதி நிறைவாகிறது. கூடுதலாக, தனியொரு பெண்ணின் இளமைக்கால நிகழ்வுகள், நட்புகள், காதல் உறவுகள் பல்வேறு வாழ்வு நிலைகளை இப்பகுதி முழுவதுமாக விவரிக்கிறது.
இக்கட்டுரை நம்பிக்கையும், விடாமுயற்சியும் எத்தகையதொரு வெற்றியினையும், புகழையும் அடக்கிய வெகுமதியினை அளிக்கும் என்பதனை தெளிவுற வாசகர்களுக்கு காட்டுகிறது. திறமை, நம்பிக்கை, விடாமுயற்சி, அர்ப்பணிப்பு உள்ளிட்ட கூறுகள் ஆண், பெண் பேதமின்றி மனித இனத்திற்குரிய கூறுகளாகின்றன. இவை அளிக்கும் உன்னதமான இருப்பினை பெர்க்மெனின் வாழ்க்கை உணர்த்துகிறது. செறிவும், தரவுகளுமிக்க இந்நூலினை தமிழ்செல்வனின் படைப்பாக வம்சி பதிப்பகம் வெளியிட்டுள்ளது. வாழ்வில் ஏதேனும் ஒரு துறையில் சாதித்திட விழையும் பெண்களுக்கு உத்வேகத்தினை ஊட்டுவதுடன் அவர்களுக்கு சிறந்த வழித்துணையாகவும் இந்நூல் விளங்கும் என்பதும் உறுதி.