எஸ் வி வேணுகோபாலன்
பள்ளி வாழ்க்கையின் சுவாரசியங்களில் ஒன்று, போட்டிகளில் பங்கேற்பது. அதற்கான வாசிப்பு தனித்துவமானது. பச்சையப்பன் நடுநிலைப் பள்ளியில் எட்டாம் வகுப்பு படிக்கையில், ஆண்டு விழாவில், ‘மாண்டவர் மீண்டது’ என்ற நாடகத்தில், ராணியின் தோழி வேடம். வானொலி நாடகங்களைக் கேட்ட பயிற்சி உதவியது. இது, நூலகங்களில், நாடகங்களைத் தேடி வாசிக்கத் தூண்டியது. பச்சையப்பன் உயர் நிலைப் பள்ளியில், நாடக நடிப்பிற்காக நண்பர்கள் பரிந்துரைத்துக் கொண்டு நிறுத்திய போது, தமிழாசிரியர் துரை ராசாராம் அவர்கள், ‘அவனே சும்மா இருக்கான், அவன் பெயரை நீங்கள் எதற்குச் சொல்லணும்?’ என்றார். சித்ரகுப்தன் வேடத்தில் நடித்தபோது, ஒத்திகை நேரத்தில் நடந்த விவாதங்களை அடுத்து என் மீது மிகவும் நேயம் கொண்ட அந்த அன்புள்ளம், பேச்சுப் போட்டிகளுக்கு வெவ்வேறு பள்ளிகளுக்கும், வெளியே நடக்கும் விழாக்களுக்கும் அனுப்பி வைக்கத் தொடங்கினார்.
அவர் வரச்சொல்லி இருந்தார் என்பதால், அவரைப் பார்க்கக் காலையில் நேரமே புறப்பட்டுப் போய், பச்சையப்பன் உயர்நிலைப் பள்ளி வளாகத்திற்கு நேர் பின்புற வழியில் மிகவும் எளிய குடியிருப்புகள் சூழ்ந்த ஒரு பகுதியில் கஷ்டங்கள் கண்ணுக்குச் சட்டென்று புலப்படுகிற சூழலில் அமர்ந்திருந்த அவர் வீட்டைச் சென்றடைந்தேன். அத்தனை சிரமங்களிலும் அப்படியே அமர்ந்து, நான்கு தாள்கள் எடுத்து, மடமடவென்று எழுதிக் கொடுத்து, அண்ணா அரங்கில் நடைபெறும் போட்டியில் போய்ப் பேசி விட்டு வா என்றார். அப்போதைய ஆசிரிய வாழ்க்கையின் வறுமைக் காட்சி ஒரு சிறுகதை போல், கண்ணீர்த் திரையிட இன்னும் நெஞ்சில் ஓடிக் கொண்டிருக்கிறது. அந்த சமயத்தில்தானா என்று தெரியவில்லை, அப்போதைய திமுக ஆட்சியில் முப்பெரும் விழா காஞ்சி அண்ணா அரங்கத்தில் நடைபெற்றுக் கொண்டிருந்தது. ஸ்தாபன காங்கிரஸ் தொண்டனாக என்னை உணர்ந்திருந்தாலும், கவியரங்கம் என்று சுவரொட்டியில் பார்த்துவிட்டு, ஆர்வத்தோடு சென்றேன். என் அண்ணனின் கல்லூரி பேராசிரியர் மு பி பாலசுப்பிரமணியன் அங்கே மணி வேந்தன் என்ற புனைபெயரில் கவிதை வாசிக்க, வியப்போடு பார்த்துக் கொண்டிருந்தேன். ‘நல்லவன் வாழ்வான் என்ற திரைப்படத்தில், அண்ணன், நல்லவனாய்க் காட்டியவனே இன்று அல்லவனாய் …..’ என்று எம் ஜி ஆருக்கு எதிரான கவிதை அப்போது வீச்சோடு வந்து விழுந்தது. வெறும் தமிழ் மட்டும் தேடிச் சென்ற இடத்தில், கவிதைகளின் அரசியல் பற்றிய அறிமுகம் கிடைத்தது.
அங்கே வாங்கிப் பார்த்த சிறப்பு மலரா, வேறு எங்கே என்று நினைவில் இல்லை, அப்போதைய முதல்வர் மு கருணாநிதி அவர்களைப் பாராட்டும் கவிதை ஒன்றின் வரிகள் (கவிஞர் கா வேழவேந்தன் என்று நினைவு),
நேந்திரங்காய் வற்றல்களே நிமிர்ந்து பார்க்குமென்றால்
ஆந்திரத்தைக் கலிங்கத்தை அலைகடந்த கடாரத்தைப்
போராடி வென்றவர்கள் பூப்பறிக்கப் போவோமா?’
என்று நிறைவு பெற்றிருந்தன. அந்தக் கால கட்டத்தில், திமுகவில் இருந்து வெளியேற்றப்பட்டிருந்த எம் ஜி ராமச்சந்திரன் அவர்களை மறைமுகமாகத் தாக்கி இருந்த வரிகள், எப்படியெல்லாம் இலாவகமாக சொற்களைத் தேர்வு செய்கின்றனர் என்று பார்க்க வைத்தது. நூலகத்தில், கண்ணதாசன் கவிதைத் தொகுதிகளை எடுத்துப் பார்த்துக் கொண்டிருக்கையில், கால வரிசையில் அவரது அரசியல் கொள்கைகளும் அதில் எதிரொலித்ததை வாசிக்க முடிந்தது. ‘இந்திய மலைகள் தோறும் இந்திரா பேர் கேட்டாயா’ என்று கூட ஒரு வரி நினைவில் இருக்கிறது.
பதினாறு வயதினிலே படம் வந்த போது, ‘ஆட்டுக் குட்டி முட்டையிட்டுக் கோழிக் குஞ்சு வந்ததுன்னு…’ என்று மலேசியா வாசுதேவன் குரலில் அவரது அருமையான திரைப்பாடல் கேட்டபோது, எனக்கு தூக்கிவாரிப் போட்டது. ஏனெனில், திராவிட நாடு குறித்த விமர்சன வரிகளில் கவிஞரது தொகுப்பில் ஏற்கெனவே வாசித்த வரிகள் நினைவிற்கு வந்தன:
குதிரை ஒரு முட்டையிடக்
கோழி அதை அடைகாக்கக்
குட்டி யானை பிறக்கும்
குரங்கு வயிற்றிலிருந்து வரும்
புனுகு ஜவ்வாது – அதில்
குங்குமப் பூ மணக்கும்
கவிதைகளில் காதலும், தேடலும் கூடிக் கொண்டிருந்தது.
பத்தாம் வகுப்பில், வித்துவான் க சம்பந்த முதலியார் அவர்களது வகுப்பில், தமிழறியாதவர் கூடத் தமிழின் காதலராகிப் போகுமளவு மணக்கும் தமிழ். அப்போது, காஞ்சிபுரத்தில், ஒரு சைவத் தமிழ்ப் பற்றாளர் ஏற்படுத்தி வைத்திருந்த நிதியிலிருந்து காஞ்சி மாணவர்களுக்கு ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வந்த போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்தது.
முதுமொழி மேல் வைப்பு என்பது அந்த நூலின் பெயர். கடைசி இரண்டு அடிகள் திருக்குறளாக அமைந்திருக்க, அதன் மேல் வைக்கப்படும் இரண்டு அடிகளில் திருக்குறள் சொல்லும் பொருளுக்கேற்ற வகையில் சைவ அடியார்கள், சைவ நெறி குறித்த கருத்துக்கள் புனையப் பட்டிருக்கும். திருக்குறள் என்பதைக் குறிக்கும் சொல், முதுமொழி. அதன் மேல் வைப்பு இந்த நூல். ஒற்றைப் படை ஆண்டானால், அந்த நூலில் வரும் செய்யுள்களில் 1,3,5, என்று ஒற்றைப்படை இலக்கமிட்டிருப்பவை மட்டிலுமே போட்டிக்கு எடுத்துக் கொள்ளப்படும். இரட்டைப் படை ஆண்டென்றால் 2, 4, 6… அவற்றை நன்கு படித்து, அவற்றின் மீதான தேர்வு எழுத வேண்டும். பின்னர் மனப்பாடச் செய்யுள்கள் மீது ஒப்புவித்தல் போட்டி வைப்பார்கள். வேறு ஒரு பள்ளியில் தான் அனைத்துப் பள்ளி மாணவர்களுக்கான அந்தப் போட்டி நடக்க இருந்தது. ஆசிரியர் வித்துவான் சம்பந்தம் அவர்கள், அந்த நூல் குறித்துச் சொன்னார். முதல் பரிசு ஐம்பது ரூபாய், இரண்டாவது 45 ரூபாய், மூன்றாவது 40 ரூபாய்…அப்படியே சில்லறையா மாற்றி எண்ணிக் கொண்டே இருந்தால் எப்படி இருக்கும்…யார் போறீங்க என்று கேட்டார்…எனக்கு சவாலை ஏற்றுக் கொள்ளலாம் போலிருந்தது, காசுக்காக அல்ல, கவிதைக்காக. இருந்தாலும் பம்மி உட்கார்ந்திருந்தேன். விட்டார்களா…சக ,மாணவர்கள் மாட்டி விட்டார்கள். அன்று மாலையே அவர் சொன்ன இடத்துக்குப் போய் அந்த நூலை வாங்கி வந்தேன். நினைவில் இருந்து ஒரு செய்யுள் இங்கே பாருங்கள்:
கண்ணுதலோன் கண்ணோவு கண்டளவில் கண்ணப்பன்
கண்ணினீர் சோரக் கதறுமால் – உண்ணெகிழும் (உள் நெகிழும்)
அன்பிற்கும் உண்டோ அடைக்கும்தாழ் ஆர்வலர்
புன்கணீர் பூசல் தரும்.
போட்டியில் எனக்குப் பரிசு கிடைக்கவில்லை. அதாவது முதல் பரிசு, இரண்டாவது பரிசு கிடைத்தது. அப்போதிலிருந்து, ஆசிரியரின் கூடுதல் அன்புக்குப் பாத்திரமாகி, வகுப்பில் கேள்விகள் கேட்பது அதிகரித்தது.
வெண்பாக்களில் ஏற்பட்ட பெருவிருப்பம், காஞ்சிபுரம் பெருமாள் கோயிலில் குளக்கரையில் இருந்த சக்கரத்தாழ்வார் மீது நூற்றந்தாதி எழுத வைத்தது. அதில் மடக்கணி (ஒரே சொல்லை இரு வேறு விதங்களில் பிரித்து இரு வேறு பொருள் பட எழுதுதல்) பயன்படுத்தி,
வரதன் தன் சன்னதி வாழ் சக்கரமே அங்கு
வர தன்தன் பாவமும் போம்
என்று ஓர் ஈற்றடி நினைவில் நிற்கிறது. ‘ஒருவரின் துடிப்பினிலே விளைவது கவிதையடா’ (‘சின்னச் சின்ன கண்ணனுக்கு’ – வாழ்க்கைப் படகு) என்ற கண்ணதாசன் திரைப்பாடல் வரி எத்தனைக்கெத்தனை உண்மை.
சென்னையில் கல்லூரிப் படிப்புக்காக வந்து சேர்ந்த காலம் அவசர நிலை அமலில் இருந்த காலம். மிகவும் தற்செயலாக, தாம்பரம் சேலையூரில் ஒரு புதுமனை புகு விழாவில் சந்தித்த அந்த இளம் மனிதர் திரு சி கோபாலன் ஈர்த்தார். கல்லூரி மாணவர், கவிதைகள் எழுதுபவர் என்றெல்லாம் கேட்டறிந்து கொண்டவர், ‘ஆசிரியர்களைக் குறித்துக் கவிதை எழுதித் தர முடியுமா, நாளை மாம்பலத்தில் நீங்கள் தங்கி இருக்கும் உங்கள் மாமா வீட்டில் வந்து வாங்கிக் கொள்கிறேன்’ என்று சொல்லிச் சென்றுவிட்டார். ‘பக்குவம் இல்லாப் பாறைப் படிவமாம் மாணாக்கர்கள்’ என்ற அறுசீர் விருத்தக் கவிதையை மறுநாள் வந்து வாங்கிச் சென்றவர், அடுத்த வாரமே, அது முதல் பக்கத்தில் அச்சாகி இருந்த ‘தியாக பூமி’ எனும் பத்திரிகையைக் கையில் கொண்டு வந்து கொடுத்து அசத்தினார். அதை விட, அந்த ஏட்டின் ஆசிரியர் திரு மகாதேவன் அவர்களிடமிருந்து அடுத்த நாள் வந்த அஞ்சல் அட்டையில், ‘கவிதை நன்று, உண்மை வெறும் புகழ்ச்சி இல்லை’ என்று எழுதப்பட்டிருந்தது. அவரை எப்படியும் நேரில் சந்தித்து விடுவது என்று சிந்தாதிரிப்பேட்டை சுவாமி நாயக்கன் தெருவில் இருந்த அவர்கள் அலுவலகத்திற்குச் சென்றது தனி அனுபவம். ஒரு பத்திரிகை அலுவலகம் எப்படி இயங்குகிறது, எழுத்துகள் எப்படி அச்சேறுகின்றன, அதன் வெவ்வேறு கட்டங்கள் என்னென்ன என்றறியும் ஆர்வத்தோடு இருந்த எனக்கு, பின்னர் அடுத்த கோடை விடுமுறையில் அங்கே ஒரு மாதம் பணியாற்றவும் வாய்ப்பு கிடைத்தது. இதனூடே, மாணவர் இயக்கத்தில் தீவிர ஊழியன் ஆகிவிட்டிருந்தேன். அகில பாரதீய வித்யார்த்தீ பரிஷத் சங்கத்தில்! ஆனால், அது ஆர் எஸ் எஸ் அமைப்போடு இணைந்தது என்று அறியவந்தபின், மெல்ல மெல்லக் கேள்விகள் அதிகரித்துக் கொண்டிருந்தன.
அவர்களது அகில இந்தியத் தலைவர் கலந்து கொண்ட கூட்டத்தில் தொண்டராக இயங்கிய போது, புத்தகங்கள் விற்க நானும் கேட்டுக் கொள்ளப்பட்டேன். அந்தச் சிறு நூலின் தலைப்பு, ‘கட்டுக்கதை தவிடுபொடி’ ! காந்தியைச் சுட்டுக் கொன்ற நாதுராம் விநாயக் கோட்ஸே, அந்தப் படுகொலை நிகழ்ந்த போது ஆர் எஸ் எஸ் அமைப்பைச் சார்ந்தவர் அல்ல என்பது தான் அதன் சாரம் என்று அங்கிருந்த ஒருவர் எனக்கு விளக்கினார். காந்தியின் மீது மிகுந்த அன்பும், மதிப்பும் கொண்டிருந்த எனக்கு, காந்தி மரணம் குறித்த தேடலை அது தூண்டி விட்டது. ஆர் எஸ் எஸ் பற்றியும் கூட! அந்த அமைப்பின் மீது படிப்படியாக என்னுள் ஏற்பட்டு வந்த ஈர்ப்பு அப்போது தவிடுபொடி ஆகி இருந்ததைப் பின்னர் தான் உணர்ந்தேன். ஒரு புத்தகம் எதற்காக எழுதப்பட்டதோ அதற்கு நேரெதிர் வேலை செய்த மாயம் அது.
(தொடரும் ரசனை….)