இந்தியாவில் கடந்த காலங்களில் ஆதிக்கம் செலுத்தி வந்த கதையாடல்களுக்கு எதிராகச் சவால் விடுக்கப்பட்ட தருணங்களை புகழ்பெற்ற வரலாற்றாசிரியரான ரொமிலா தாப்பரின் புதிய புத்தகமான ‘மாற்றுக்கருத்தின் குரல்கள்’ (வாய்சஸ் ஆஃப் டிஸன்ட்) அலசிப் பார்க்கிறது.
சந்திப்பு: ரோஹன் வெங்கடராமகிருஷ்ணன்
ஸ்க்ரோல் இணைய இதழ்
2020 அக்டோபர் 31
கடந்தகால இந்தியா குறித்த ஆழமான, நுட்பமான பார்வையை நமக்கு அளித்தவர்களில் குறிப்பிடத்தக்கவர் இந்தியாவின் புகழ்பெற்ற வரலாற்றாசிரியர்களில் ஒருவரான ரொமிலா தாப்பர். 1960கள் தொடங்கி தொடர்ச்சியாக இவர் மேற்கொண்டுவரும் சமூக வரலாற்று ஆய்வுகளும் அந்த ஆய்வுகளின் அடிப்படையில் இவர் எழுப்பும் அரசியல் விவாதங்களும் கல்விப்புலம் கடந்து பொதுமக்களிடையிலும் பிரபலமடைந்திருக்கின்றன.
இந்தியாவின் கடந்த காலத்தைப் பற்றிய நமது புரிதலை நுட்பமாக்குவதற்கு 1960களில் தொடங்கி தொடர்ந்து முயன்று வருகின்ற ரொமிலா தாப்பர் இந்தியாவின் மிகவும் புகழ்பெற்ற வரலாற்றாசிரியர்களில் ஒருவர் ஆவார். மதிப்புமிக்க க்ளூஜ் விருதைப் பெற்றிருக்கும் தாப்பர் தன்னுடைய நீண்ட ஆய்வுக் காலத்தின் போது, பண்டைய இந்தியாவின் சமூக வரலாறு குறித்த பல்வேறு பொருட்களை உள்ளடக்கி மேற்கொண்டிருக்கும் அறிவார்ந்த பணிகள் மிகவும் பிரபலமானவை.
இந்தியாவின் கடந்த காலத்தை எளிமைப்படுத்தி மிகவும் எளிமையாக இந்துக்களுக்கும், முஸ்லீம்களுக்கும் இடையிலான நாகரிகப் போர் என்று சித்தரிக்க முனையும் வலதுசாரிகளின் பிரதிகளை ஒரு பொது அறிவுஜீவியாகத் தகுந்த ஆதாரங்களோடு கேள்விக்கு உட்படுத்தி வருபவர். அதிகாரத்துக்கு எதிராக அச்சமின்றி வரலாற்று உண்மையைப் பேசும் காரணத்தால் சர்ச்சைக்குரியவராகவும் இருக்கிறார்.
பிராமணியத்துடன் மாறுபட்ட கருத்துக்களைக் கொண்டிருந்த வேதகாலத்து தசாக்கள்‘தாசர்கள்’, சிரமணர்கள் எனும் பௌத்தர்கள், ஜெயினர்கள் என்ற சமணர்கள், ஆசிவகர்கள், அல்லது பக்தி இயக்கத் துறவிகள், இடைக்காலத்தைச் சார்ந்த சூஃபி குருமார்கள் போன்றோர் கடந்த காலங்களில் இந்தியாவில் ஆதிக்கம் செலுத்தி வந்த கதையாடல்களுக்கு எதிராகச் சவால் விடுத்த தருணங்களை சீகல் புக்ஸ் பதிப்பகத்திலிருந்து வெளியாகி இருக்கும் அவருடைய புதிய புத்தகமான Voices of Dissent ‘மாற்றுக் கருத்தின் குரல்கள்’ அலசி ஆராய்கிறது.
தாப்பர் பின்வருமாறு எழுதியுள்ளார்: (புத்தகத்திலிருந்து சில பகுதிகள்)
இந்து மதம் என்று நம்மால் அழைக்கப்படுகின்ற மதம், நம்பிக்கைகள் மற்றும் அவற்றுடன் அடையாளம் காணக்கூடிய வகையிலான மாற்றங்கள், பிறழ்வுகளை ஏற்படுத்திய வரலாற்று மாற்றங்களுடன் மிகவும் நெருக்கமாகச் செயல்பட்ட மதமாக இருக்கிறது…
சீர்திருத்தங்களுக்கு எதிரான வகையிலே மாற்றுக்கருத்துகளின் பங்களிப்பைப் புறக்கணிப்பது அல்லது தேவையான பிறழ்வுகளை ஊக்குவிப்பதில் தோல்வியுறுவது போன்ற செயல்பாடுகள் இந்தியாவில் மதங்கள் பண்படுத்தப்பட்டதை மதிப்பிடுவது, பல்வேறு சமூக வடிவங்களை ஆதரிப்பது போன்றவற்றில் மாற்றுக்கருத்துக்களுக்கு இருந்த முக்கியமான பங்கை முற்றிலும் புறக்கணிப்பதாகவே இருக்கின்றன…
மதங்கள் ஒருபோதும் நிலையானவை அல்ல. சமூகங்கள் மாறிக் கொண்டே இருக்கின்றன. மத அடையாளங்கள் ஒருபோதும் தனித்துத் தோன்றுவதில்லை என்பதால், சமூகங்களுடன் பிணைக்கப்பட்டுள்ள மதங்களும் மாற்றம் அடைகின்றன. அந்த மாற்றங்கள் சமுதாயத்திற்கு உள்ளிருந்து அல்லது வெளியில் இருந்து ஏற்படுவதாக இருக்கலாம். அவ்வாறு ஏற்படுகின்ற மாற்றங்களில் சில மாற்றங்கள் பாரம்பரியம் என்றும், பிற மாற்றங்கள் பிறிதொன்றின் மீது ஏற்பட்ட எதிர்வினை என்றும் கருதப்படுகின்றன.
புராண மதம் தொடர்பாக சைவ தஷ்னானமிக்களும், வைணவ பைராகிகளும் மாற்றுக் கருத்து கொண்டிருந்தார்கள் என்றால், குர்ஆனிய மதத்துடன் பரேல்விஸ்களும் பரேலவிகளும், தியோபந்திகளும் தியோபாண்டுகளும் வேறுபாடு கொண்டவர்களாக இருந்தனர். எது தொடர்ந்து இருக்கிறது, எது மாற்றங்கள் அடைகிறது, ஏன் அவ்வாறு நடக்கிறது என்பதைத்தான் நாம் தேடிக் கொண்டிருக்கிறோம். நமது இந்தத் தேடுதல் நிரந்தரமானது’.
இந்தியத் துணைக் கண்டத்தில் மதம் குறித்து நமக்கிருக்கும் புரிதலைக் காண கடந்த காலத்து காலனித்துவ விளக்கங்களே உதவி வருகின்றன என்பதை நாம் அறிந்து கொள்ளும் வகையில் இந்தப் புத்தகம் மாற்றுக்கருத்துகள் குறித்த வரலாற்றை முன்வைக்கிறது. அதன் தொடர்ச்சியாக ஒரு துறவிக்கான தார்மீக மதிப்பின் அடிப்படையில் மகாத்மா காந்தியின் சத்தியாக்கிரகப் போராட்டத்திற்கு எதிராக மாற்றுக்கருத்தை முன்வைக்கும் நவீன வடிவமாக இந்தப் புத்தகம் ஆய்வு செய்கிறது. ஷாஹீன் பாகிற்குச் சென்று அங்கே நடைபெற்ற குடியுரிமை சட்டத் திருத்த எதிர்ப்பு போராட்டங்களுக்குத் தலைமை தாங்கிய பெண்களைக் கண்ட தாப்பரின் கருத்துக்களுடன் இந்தப் புத்தகம் நிறைவுறுகிறது.
அவர்களுடைய போராட்டம் குடியுரிமையுடன் தொடர்புடைய உரிமைகளுடன் தங்களை அடையாளப்படுத்திக் கொள்ளும் வகையிலே மதச்சார்பற்ற வெளிப்பாடாகவே இருந்தது. பல ஆண்டுகளுக்குப் பிறகு காலனித்துவத்திற்கு எதிரான தேசியவாதத்தின் வேர்களில் இருந்து கிளைத்த போராட்ட வடிவத்தைக் காண்பதாகவே நான் அப்போது உணர்ந்தேன். அந்தப் போராட்டம் கொண்டிருந்த அனைவரையும் உள்ளடக்கிய தன்மையில் தவறேதும் இருக்கவில்லை. அந்தப் போராட்டம் என்னை 1940களுக்கு, என்னுடைய இளமைக்காலத்தில் நடைபெற்ற காலனித்துவத்திற்கு எதிரான தேசியவாதப் போராட்டத்திற்கு அழைத்துச் சென்றது!’
இந்திய வரலாற்றில் மாற்றுக்கருத்துகளை நிலைநிறுத்துவது, கடந்த காலத்தைப் பற்றி நமக்கிருக்கும் புரிதலை நவீன அடையாளங்கள் எவ்வாறு விளக்குகின்றன என்பது குறித்தும், விடாது தொடர்ந்து எதிர்த்துப் போராட வேண்டும் என்று அவர் கருதுகின்ற தவறான கருத்துகள் எவை என்பது குறித்தும் தாப்பருடன் நான் உரையாடினேன்.
மாற்றுக்கருத்துகள் இந்தியாவிற்குத் தொடர்பில்லாதவை அல்ல, நமக்கு அந்நியமானவையல்ல, இந்திய வரலாற்றில் அவற்றிற்கான இடம் இருந்திருக்கிறது என்பதை அழுத்தமாகப் புத்தகத்தின் பல்வேறு இடங்களில் குறிப்பிட்டுள்ளீர்கள். அதுபோன்ற எண்ணம்தான் இந்தப் புத்தகத்தை எழுதுவதற்கு உங்களைத் தூண்டியதா?
மாற்றுக்கருத்துகள் இந்தியர்களுக்கு மட்டுமானவையல்ல. பல இடங்களிலும் இருப்பதைப் போன்று இந்தியாவிலும் அவை இருக்கின்றன. மாற்றுக்கருத்துகள் அனைத்து சமூகங்களிலும், நாகரிகங்களிலும் கருத்துகள், கோட்பாடுகள், நடைமுறைகள், நம்பிக்கைகளுடன் தொடர்புடையவையாகவே இருந்து வந்திருக்கின்றன என்பதே நான் முன்வைக்கின்ற வாதமாக உள்ளது. மாற்றுக்கருத்துகள் குறித்த தெளிவான உணர்வு நிச்சயமாக அறிவைத் தேடுகின்ற, தத்துவார்த்தக் கலந்துரையாடல்களுடன் தொடர்புடைய செயல்பாடுகளுக்குள் இருக்கிறது. கடந்த காலங்களில் ஒரு வாதத்தை ஆதரிப்பவர் முன்வைக்கின்ற கருத்துக்களுடன் உடன்பாட்டிற்கு வருவதற்கு முன்பாக, மற்றவர்கள் கொண்டிருக்கும் பார்வைகள், கருத்துகளுடனான விசாரணைகளைக் கொண்டே இந்தியாவில் தத்துவார்த்தக் கலந்துரையாடல்கள் தொடங்கி நடந்தன.
பெரும்பாலான பண்டைய கலாச்சாரங்களின் சிறப்பியல்பாக இருந்து வந்த மாற்றுக்கருத்துகள் இந்தியக் கலாச்சாரத்திலும் இருந்துள்ளன. மாற்றுக்கருத்து என்பது பெரும்பாலும் ஐரோப்பியத் தத்துவத்துடன் இணைந்ததாகக் கருதப்பட்டு வருகிறது என்றாலும், அது காலனித்துவ காலகட்டத்தில் மேற்கிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட ஒன்றாக இந்தியாவில் இருக்கவில்லை. அனைத்து நாகரிகங்களிலும் சிந்தனை, நடத்தை ஆகியவற்றிற்கென்று இருந்து வந்திருக்கும் வழிகளைப் போலவே, இந்திய சிந்தனையிலும் மாற்றுக்கருத்து என்பது இருந்தே வந்துள்ளது. அறிவின் முன்னேற்றத்திற்கு அது மிகவும் முக்கியமான படியாக உள்ளது. நாம் வாழுகின்ற உலகத்தைப் பற்றி நமக்கு வழங்கப்பட்டிருக்கும் விளக்கங்களின் மீது நமக்கு நம்பிக்கை இல்லாதபோது அல்லது அதுகுறித்து கூடுதலான ஆர்வம் நம்மிடம் இருக்கும் போது, அந்த விளக்கங்களைக் கேள்விக்குள்ளாக்குவதைப் பொறுத்தவையாகவே அறிவைக் கண்டு கொள்வதற்காக இருக்கின்ற ஆய்வுகளும், கண்டுபிடிப்புகளும் இருக்கின்றன.
கடந்த காலத்திலிருந்து நிகழ்காலம் வரையிலும் நடந்திருக்கும் ஆய்வுகளில் மாற்றுக்கருத்துகள் குறித்த விழிப்புணர்வு, அவற்றின் பங்கு குறித்து போதுமான அளவிலே அங்கீகரிக்கப்படவில்லை என்றே எனக்குத் தோன்றுகிறது. நான் இதை என்னுடைய முந்தைய ஆய்வுகளிலும் குறிப்பிட்டிருக்கிறேன் என்றாலும், இன்று குறிப்பிடத்தக்கதாக இருந்து வருகின்ற மாற்றுக்கருத்துகளுக்கு முன்னோடியாக கடந்த காலத்தில் இருந்த பல்வேறு சிந்தனை, செயல்பாடுகளுக்குள் மாற்றுக்கருத்துகளுக்கு இருந்த முக்கியத்துவத்தை அங்கீகரிக்கும் வகையிலே எனது கருத்தை இந்த முறை வெளியிட நான் விரும்பினேன்.
பெரும்பாலும் அது வரலாற்றாசிரியர்களால் ஓரங்கட்டப்படுகின்ற பொருளாக இருக்கின்றது. கலாச்சாரத்தைப் பற்றி எழுதுபவர்களில் ஒரு சிலரைத் தவிர கிட்டத்தட்ட அவர்களும் இதைப் புறக்கணிக்கவே செய்திருக்கின்றனர். இந்திய கலாச்சாரத்தில் பிரகாசித்துக் கொண்டிருக்கின்ற சில அம்சங்கள் கேள்விக்குரிய தருணங்களிலிருந்து வந்தவையாகவே இருந்த போதிலும், அந்தக் கலாச்சாரம் மிகவும் சுமூகமான ஒன்றாகவே நம் முன்பாக வைக்கப்படுகிறது. உபநிஷத்துகள் கேள்விகளைக் கேட்கும் திறனுக்கான சிறந்த எடுத்துக்காட்டாக இருக்கின்றன.
இந்தியக் கலாச்சாரத்தை கட்டியமைப்பதில் மாற்றுக்கருத்துகள் ஏன் முக்கியத்துவம் பெறுகின்றன? வரலாற்றைப் பற்றிய பரந்த புரிதல் நம்மிடம் – நமது கல்வி நிலையங்களிலும்கூட – இருக்கவில்லை என்று நீங்கள் கருதுகிறீர்களா?
மாற்றுக்கருத்து என்பது பல்வேறு அம்சங்களைக் கொண்டது. அதன் ஒரு சில அம்சங்களை மட்டுமே, அதிலும் நான் விவாதத்திற்கு எடுத்துக் கொண்ட எடுத்துக்காட்டுகளில் உள்ள மிகச் சில மரபுகளை மட்டுமே நான் இங்கே வெளிப்படுத்தியிருக்கிறேன். நிறுவப்பட்டிருக்கும் அதிகாரத்தால் பராமரிக்கப்படும் விஷயங்களுக்கு இணையாகவும், அவற்றுடன் உரையாடுவதாகவும் இருப்பதால், மாற்றுக்கருத்து குறித்து முழுமையாக எழுதுவதற்குப் பல தொகுதிகள் கொண்ட புத்தகம் தேவைப்படலாம். ஆயினும், அது எவ்வாறு தோன்றுகிறது, ஏற்கனவே இருந்து வருகின்ற சிந்தனை, நடைமுறைகளுடன் உடன்படாத போது எழுகின்ற உரையாடலின் விளைவாக உருவாகும் படைப்பாற்றல், செயலற்றதாக மறைந்திருக்கும் கருத்துக்கள் போன்றவற்றை அது எவ்வாறு முன்னெடுத்துச் செல்கிறது என்பவற்றை ஒரு சில எடுத்துக்காட்டுகள் மூலமாகக் காட்டுவதே அந்தக் கட்டுரையை நான் எழுதுவதற்கான நோக்கமாக இருந்தது. நிகழ்காலத்தில் அது இன்னும் பலவற்றையும் வெளிப்படுத்துவதாக இருக்கிறது.
கடந்த காலத்திலிருந்து இன்றுவரையிலும் எந்தவொரு கலாச்சாரமும் ஒருபோதும் குறுகிய எல்லைக்குட்பட்ட இயக்கமாக இருந்திருக்க முடியாது என்பதாலும், அந்தக் கலாச்சாரத்தின் பகுதியாக இருந்தவர்கள் அது குறித்து கேள்விகளை எழுப்பியிருக்க மாட்டார்கள் என்பதாலும், அதன் வரலாற்றைப் புரிந்து கொள்வது முக்கியமாகிறது. வேத பிராமணியம் குறித்து சிரமணர்கள் எனும் பௌத்தர்கள், சமணர்கள், ஆசிவகர்கள் ஆகியோர் கேள்விகளை எழுப்பியபோது, அந்தக் கேள்விகளிலிருந்து வெளியான கருத்துகள் குறித்து நீண்ட காலத்திற்கு விவாதம் நடைபெற்றது. அசோக மௌரியாவின் கல்வெட்டுகளில் மட்டுமல்லாது, அந்தக் காலகட்டத்தில் எழுதப்பட்ட மகாபாரதத்தின் சில பிரிவுகளிலும் அது பிரதிபலித்துக் கொண்டிருக்கிறது.
இந்து மதம் எடுத்த அடுத்தடுத்த வடிவங்களில் சில பக்தி துறவிகளால் அது பற்றிய குறிப்புகள் அதிகமாக இருந்தன. பக்தி கவிஞர் ரவிதாஸ் கற்பனாவாதம் குறித்த தனது பார்வையை விவரிக்கும் போது, சாதி படிநிலைக்கு எந்த வகையிலும் உதவாத சமூக சமத்துவத்தைப் பற்றி பேசுகின்றார். அப்போது மாற்றுக்கருத்துகளுக்கு அவர் வடிவம் கொடுக்கிறார். சமுதாயத்தைக் கட்டுப்படுத்துபவர்களின் முன்னுரிமைகளைப் பற்றியும், அதைக் கேள்விக்கு உட்படுத்துபவர்களைப் பற்றியும் அது நமக்குச் சொல்கிறது. ஆனால் சமூக வரலாற்றைக் கற்பிப்பதில் இந்த அம்சங்களுக்கு இடம் கிடைக்கவில்லை. அவை சமுதாயத்தைப் பற்றி அவற்றில் இருக்கின்ற உள்ளார்ந்த கருத்துகள் மீது பகுப்பாய்வு ரீதியாக மிக அரிதாக கருத்து தெரிவிக்கப்பட்டுள்ள மத நூல்களாகவே இருக்கின்றன.
காலனித்துவ காலத்தில் இருந்த மாற்றுக்கருத்துகளுக்குச் செல்வதற்கு முன்னதாக, பண்டைய இந்தியா, இடைக்கால இந்தியாவில் இருந்த மத அமைப்புகளில் அவை எவ்வாறு இருந்தன என்பது குறித்து விளக்குகின்ற இந்தப் புத்தகம் பின்னர் அரசாங்கத்தின் மீதான விமர்சனங்களைத் தேசவிரோதம் என்று இப்போது முத்திரை குத்தப்படுவதைக் கோடிட்டுக் காட்டுகிறது. இந்திய வரலாற்றில் இருந்த அரசியல் மாற்றுக்கருத்துகளைத் திரும்பிப் பார்ப்பதற்குப் பதிலாக, நீங்கள் இந்தப் பாதையை ஏன் தேர்ந்தெடுத்தீர்கள்?
ஒரு சமூகம் வரலாற்றில் தன்னையே வெளிப்படுத்திக் கொள்கின்ற மரபுகள் மாறுகின்றன. ஒரு காலகட்டத்தில் இருந்தவை அடுத்த காலகட்டத்திற்கு ஒத்தவையாக இருப்பதில்லை. அதனாலேயே சிந்தனை குறித்த வரலாற்றை ஆய்வு செய்வது, எழுதுவது போன்ற செயல்பாடுகள் ஓரளவிற்கு அறிவார்ந்து ஆர்வமூட்டுபவையாக இருக்கின்றன. அதுவே சமூகம் தொடர்பான கருத்துகள், அவற்றின் பரஸ்பர தாக்கம் ஆகியவற்றை வெளிப்படையாகத் திறந்து காட்டவும் செய்கிறது. மிகவும் வெளிப்படையான காரணங்களுக்காகவே மதக் கருத்துகள் குறித்த மரபை நான் தேர்ந்தெடுத்துக் கொண்டேன்.
கடந்த காலத்திலிருந்தே மற்ற பொருட்கள் குறித்து இருந்த நூல்களை விட இந்த அம்சத்தை மையமாகக் கொண்ட நூல்கள் அதிகமாக இருந்து வந்திருப்பதால், நம்மால் போதுமான அளவிற்குத் தகவல்களைப் பெற முடிகிறது. நவீன காலத்திற்கு முந்தைய இந்தியாவில் சமூகம், அரசியல் தொடர்பான விளக்கக் கோட்பாடுகள் குறித்த நூல்கள் அதிகம் இருக்கவில்லை. தர்ம சாஸ்திரங்கள் குறித்த உரைகள் எழுதப்பட்டுள்ளன. அரசியல் பொருளாதாரம் குறித்து அதிகம் மேற்கோள் காட்டப்பட்ட நூலாக அர்த்தசாஸ்திரம் இருக்கிறது. அதில் உள்ள சில கருத்துகள் காரணங்களையும், தர்க்கத்தையும் கொண்டு விளக்கங்களைக் குறிப்பிடுவதாக இருக்கின்றன. ஆயினும் அது போன்ற விளக்கங்கள் அரசியல் பொருளாதாரம் குறித்த முக்கிய நூலாக இருந்து அதற்கான விளக்கத்தைத் தருகின்ற அந்த நூலில் இடையிடையே வருவதாகவே அமைந்திருக்கின்றன. ஆங்காங்கே மிகச்சிறிய அளவிலேயே இந்தப் பொருள் குறித்து அதில் விவாதிக்கப்பட்டுள்ளன.
இதுவே பல்வேறு நூல்களின் மூலமாக சமூக-அரசியல் மாற்றுக் கருத்துகளை ஆய்வு மேற்கொள்வதற்கான நிலையை வரலாற்றாசிரியர்களான நமக்கு ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது. இரண்டாவதாக, மதமும், சாதியும் நெருக்கமாகப் பிணைந்திருப்பதால், மத மரபுகளை ஆராய்வது ஓரளவிற்கு சமூக, அரசியல் பற்றிய ஆய்வுகளையும் ஒருங்கிணைப்பதாகவே இருக்கிறது. இத்தகைய பரிமாணங்கள் பெரும்பாலும் மாற்றுக்கருத்துகளுக்குள் தெளிவாக இருக்கின்றன.
கடந்த காலத்திய இரு துருவ இந்து-முஸ்லீம் என்ற கருத்தாக்கம் காலனித்துவ காலனிய காலகட்டத்தில் பரவலாக இருந்ததைக் கருத்தில் கொண்டு பார்க்கும் போது, காலனித்துவத்திற்குப் பிந்தைய அரசு மத தேசியவாதத்தைப் பல்லாண்டுகளாகத் தொடர்ந்து இறுகப் பற்றிக் கொண்டிருப்பது தவிர்க்க முடியாதது என்று நீங்கள் கருதுகிறீர்களா?
இல்லை. அது தவிர்க்கவே முடியாதது என்று நான் கருதவில்லை. அதை நாம் எதிர்பார்த்திருக்க வேண்டும் என்றே நான் நினைக்கிறேன். இந்தியா குறித்த காலனித்துவ புரிதலின் அடிப்படையிலான இரு நாடுகள் கோட்பாடு என்ற கொள்கையிலிருந்து நேரடியான கருத்தாக்கமாகவே இந்து தேசியவாதம் வெளி வந்திருக்கிறது. அது எதற்காக என்பதற்கான தொடர்பைக் காட்டியிருக்க வேண்டும்.
இந்துத்துவா என்பது கடந்த காலங்களில் துவங்கி இன்றளவிற்கும் பலர் வாதிட்டு வருவதைப் போல இந்து மதத்தைக் குறிக்கவில்லை. அவையிரண்டிற்கும் இடையிலான வேறுபாட்டை விளங்கிக் கொள்ள நமக்கு மாற்றுக்கருத்துகள் தேவைப்படுகின்றன. சுதந்திரத்திற்குப் பிறகு உருவான புதிய நாடுகள், சுதந்திரத்துடன் வந்த அடிப்படை வரலாற்று மாற்றத்தை புரிந்து கொள்ளவில்லை என்பதையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும்.
அரசியலமைப்பில் பொதிந்துள்ள குடிமக்கள் உரிமைகள், அரசின் கடமைகளை உள்ளடக்கிய தேசிய அரசு தோன்றியதையே நான் இங்கே குறிப்பிடுகிறேன். பெரும்பான்மை மதத்தைச் சேர்ந்தவர்களுக்கு முன்னுரிமை தருகின்ற, தங்களுடைய செல்வம், அந்தஸ்தின் மூலம் குடியுரிமை குறித்த உரிமைகளை உறுதிப்படுத்திக் கொள்ள முடிந்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கின்ற நாட்டை நோக்கி நாம் இப்போது நகர்ந்து கொண்டிருக்கிறோம். ஏற்கனவே அங்கேதான் நாம் இருக்கிறோம் என்றும் சிலர் கூறுவார்கள். எனவே ஒரு கட்டத்தில் நம்மிடம் வந்து சேர்ந்திருப்பவை முன்பே கணிக்கத்தக்கவையாகவே இருந்திருக்கின்றன.
எனது பதின்ம வயதின் இறுதிக் கட்டத்தில், சுதந்திரத்திற்குப் பிறகு இந்திய சமூகம் சுதந்திர தேசமாக எடுக்கப் போகும் வடிவம் குறித்து மிகுந்த ஆர்வத்துடன் நடத்தப்பட்ட விவாதங்களை நான் நினைவில் வைத்திருக்கிறேன். சமூக சமத்துவம், அனைவரும் வறுமையிலிருந்து விடுபடுவது குறித்த பார்வையாகவே அந்த விவாதங்கள் இருந்தன. நாம் அந்த இலக்கிலிருந்து இன்னும் வெகு தொலைவிலேயே இருக்கிறோம்.
உயர்நிலையில் இருந்த முஸ்லீம்கள் உள்ளிட்டு இடைக்கால வடஇந்தியாவில் கிருஷ்ண பக்தி எழுச்சி ஏன் ஏற்பட்டது என்பது போன்ற கடந்த காலம் குறித்த சில வெளிப்படையான கேள்விகளை நீங்கள் குறிப்பிட்டிருக்கிறீர்கள். இது எந்த அளவுக்கு நமக்கு இன்று முக்கியம் என்று நினைக்கிறீர்கள்? இதனை நன்கு புரிந்து கொள்வது – குறிப்பாக அடையாளங்களைப் பயன்படுத்தி கடந்த காலத்தை நாம் எவ்வாறு புரிந்து கொள்ளப் போகிறோம்? புரிந்து கொள்ள வேண்டும்? என்பது பற்றி – நமக்கு என்ன சொல்லித் தரும் என்று நீங்கள் கருதுகிறீர்கள்?
நிகழ்காலத்தைக் கடந்த காலத்தின் மீது திணிக்கக் கூடாது என்பதை நாம் கற்றுக் கொள்ள வேண்டும். அத்துடன் கடந்த காலம் தன்னைப் பல்வேறு கால கட்டங்களில் எவ்வாறு பார்த்துக் கொண்டது என்பதையும் நாம் அடையாளம் காண வேண்டும். நான் ஓர் எடுத்துக்காட்டை இங்கே தருகிறேன். மிகப்பெரிய இடைக்காலச் சமுதாயத்தைப் பற்றிப் பேசும் போது, முஸ்லீம்கள் இதைச் செய்தார்கள், இந்துக்கள் இதைச் செய்தார்கள் என்று பொதுமைப்படுத்தல்களைச் செய்து, அதன் மூலம் முஸ்லீம்கள், இந்துக்கள் குறித்த சில தீர்மானமான முடிவுகளுக்கு நாம் வந்து சேர்கிறோம்.
சமூகங்களை அடையாளப்படுத்துவதில் நமது மூதாதையர்கள் நம்மை விட மிகவும் துல்லியமாக இருந்தனர். யவனர்கள், ஷாகாக்கள், துருஷ்காக்கள், சூபிக்கள் போன்றவர்களின் வாழ்க்கை முறைகளை மனதில் கொண்டு அவர்களைப் பற்றி குறிப்பிடும் வேளையில் சில சமயங்களில் மட்டுமே மிகக் குறைவாகவே அவர்களை முஸ்லீம்கள் என்று மூதாதையர்கள் குறிப்பிட்டனர். அதேபோன்று சைவர்கள், வைணவர்கள், ஷக்தாக்கள், நாத்திகர்கள் என்று குறிப்பிட்ட போது, அதேபோன்ற குறியீடுகளை மனதில் வைத்து அவர்களை இந்துக்கள் என்று மூதாதையர்கள் குறிப்பிடவில்லை. இந்து என்ற வார்த்தை மிகவும் தாமதமாகவே பயன்பாட்டுக்கு வந்ததும் காரணமாக இருக்கலாம்.
பெரிய கடமைப்பிற்குள் உள்ள சமூகங்கள் பல்வேறு வழிகளில் செயல்படுகின்றன என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். மக்களை நாம் எவ்வாறு புரிந்துகொள்கிறோம் என்பதை அந்தப் பன்முகத்தன்மைதான் வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. முஸ்லீம்கள் அனைவருமே கிருஷ்ண பக்தர்களாக மாறி விடவில்லை. ஒரு சிலர் மட்டுமே மாறியிருந்தனர். அவ்வாறு மாறியவர்களில் சிலர் உயர் இடத்தில் இருந்தவர்களாகவும், மற்றவர்கள் தாழ்ந்த சாதியினராகவும் இருந்தனர். மரபுவழி நடைமுறையின் மீது மாற்றுக் கருத்து கொண்டிருந்தவர்கள் பிராமணர்களிடமிருந்து மட்டுமல்லாது முல்லாக்கள், காஜிகளிடமிருந்தும் விலகி இருந்தார்கள் என்பதை நான் இங்கே குறிப்பிட்டுச் சொல்கிறேன்.
அத்தகைய கிருஷ்ண பக்தர்களின் கவிதைகள் இந்துஸ்தானி கிளாசிக்கல் செவ்வியல் இசைத் தொகுப்பின் ஒருபகுதியாக இன்று பாடப்படும்போது, மிகச் சிலரே அதன் பரிமாணத்தையும், சமகால நுணுக்கங்களையும் அறிந்திருக்கிறார்கள். அவை குறித்து நாம் பேசுவதில்லை. மிகச் சிறிய அளவிலே இருந்த போதிலும் எழுச்சியின் ஒரு பகுதியாக அவர்கள் இருந்தது, எழுச்சியைக் காட்டிலும் அதிகமான ஏதோவொன்று மதத்தில் இருந்ததையும், அது சமூகத்தைப் பல்வேறு வழிகளில் எவ்வாறு பாதித்தது என்பதை நாம் கண்டறிய வேண்டும் என்பதையே உணர்த்துகின்றது.
உங்கள் புத்தகத்தை வாசித்தபோது இன்றைய ஆளும் பெரும்பான்மை அரசு தம் எதிரிகளை (லிபரல்கள், தாராளவாத மேல்தட்டு மக்கள், மேற்கத்திய சக்திகள், இஸ்லாம்) எந்த அளவுக்குக் கடந்த காலக் கருத்து மாறுபாடுகளின் இலக்கணத்தைக் கையாண்டு எதிர்க்கிறது என்பதையும் மோடியை எப்படி ஒரு முற்றும் துறந்தவராக உயர்த்திப் பிடிக்கிறது என்பதையும் உணரமுடிந்தது. அனைத்தையும் நிராகரித்திருக்கும் துறவியாக மோடியைக் கருதுகின்ற இந்திய ஆளும் பெரும்பான்மை, கற்பனையாக அல்லது வேறு வகையில் தாராளவாத மேல்தட்டு மக்கள், சூழ்நிலையரசு, மேற்கத்திய சக்திகள், இஸ்லாம் என்று பலரையும் தங்களுடைய எதிரிகளாகக் கருதுவதோடு, கடந்த காலத்தில் மாற்றுக்கருத்து குறித்து இருந்த இலக்கணத்தை எந்த அளவிற்குப் பயன்படுத்திக் கொண்டது என்பதே இந்தப் புத்தகத்தைப் படிக்கும் போது எனக்குள் தோன்றியது. நீங்கள் சுட்டிக்காட்டும் அதே இந்தியப் பொதுமக்களிடையே மரபை வலதுசாரிகள் பயன்படுத்திக்கொள்வதாக நினைக்கிறீர்களா?
அப்படி இருப்பதாக நீங்கள் கண்ட அந்தப் பாரம்பரியத்தை வலதுசாரிகள் பயன்படுத்துகின்றனர் என்று நீங்கள் கருதுகிறீர்களா?
இல்லை. நான் குறிப்பிடும் விதத்தில் அந்தப் பாரம்பரியத்தின் பரிமாணங்களை வலதுசாரிகள் அறிந்திருப்பதாக நான் நினைக்கவில்லை. எனவே அதை அவர்கள் பயன்படுத்த முயன்றதாகக் கருதவில்லை. இன்றைக்கு நன்கு வரையறுக்கப்பட்ட மதச்சார்பற்ற வலதுசாரி அமைப்பு இந்தியப் பொதுவாழ்வில் காணப்படவில்லை. மதம்சார்ந்த வலதுசாரிகளாக இருக்கின்ற, பெரும்பாலும் இந்துத்துவாவை ஆதரிப்பவர்கள் நான் குறிப்பிடுகின்ற துறவு நிலைக்குச் சற்றும் பொருந்தாதவர்களாகவே இருக்கின்றனர். அதை துறவுக் கொள்கையுடன் குழப்பிக் கொள்ளவே அவர்கள் முனைகிறார்கள். அவை இரண்டிற்கும் இடையில் உள்ள வேறுபாட்டைக் காட்டுகின்ற வகையிலேயே என்னுடைய புத்தகத்தில் நான் விவாதங்களை முன்வைத்திருக்கிறேன்.
மற்ற எவற்றையும்விட அரசியல் கட்சிகளில் உறுப்பினர்களாக இருக்கின்ற யோகிகள், சாதுக்கள் போன்றவர்களுடைய அரசியல் கட்சிக்கான செயல்பாடுகளிலேயே மக்களின் கவனம் செலுத்தப்படுவதால், துறவறத்திற்கான அடையாளங்களை அரசியலுடன் அடிக்கடி இணைக்கின்ற அவர்களுடைய அரசியல் பங்கு முக்கியமானதாகி விடுகிறது. இந்து அமைப்புகளின் தலைவர்களிடம் உள்ள அரசியல் என்பது துறவிகளுக்கான பாரம்பரியத்திற்கு அப்பாற்பட்டதாகவே இருக்கிறது. அனைத்தையும் துறந்த ஒருவர் தன்னைச் சமுதாயத்திற்கு வெளியில் அல்லது அதன் எல்லைக்கோட்டிலேயே நிறுத்திக் கொள்ள வேண்டும். ஆனால் அந்த அமைப்புகளைச் சார்ந்த எவரும் அவ்வாறு செய்வதில்லை அல்லது அவ்வாறு செய்வதைக் கருத்தில் கூடக் கொள்வதில்லை. தீவிரமான சமூகப் பாத்திரத்தை வகிக்கும் போது, ஏற்றுக்கொள்ளப்பட வேண்டியது அவருடைய தார்மீக அதிகாரமே தவிர, அரசியல் அல்லது நிர்வாக அதிகாரம் அல்ல. துறவிக்கான அந்த தார்மீக அதிகாரம் காந்தியிடம் இருந்ததாலேயே, அவர் ஏற்றுக் கொண்டிருந்த மாற்றுக்கருத்துகள் செயல்திறன் கொண்டவையாக இருந்தன.
சகிப்புத்தன்மையைக் குறிக்கின்ற வகையில் இந்தியர்கள் அனைவரின் சமத்துவத்தை ஏற்றுக் கொள்வதில் உறுதியற்றவர்களாகவும், மாற்றுக்கருத்துகள் கொண்டவர்களுக்கு எதிராக நிகழ்த்தப்படும் வன்முறையிலிருந்து விலகிச் செல்லாதவர்களாகவும் இருக்கின்ற வலதுசாரிகள் நான் குறிப்பிடுகின்ற பாரம்பரியத்தைப் பின்பற்றுவதில்லை. நான் குறிப்பிட்டுள்ள மாற்றுக்கருத்து என்ற பாரம்பரியத்தில் ‘மற்றவர்கள்’ என்று கருதப்படுபவர்களைச் சுட்டுக் கொல்ல வேண்டும் என்று எவரொருவரும் கோர மாட்டார்கள்.
இந்தியாவைப் பொறுத்தவரை, மாற்றுக்கருத்துகள் மிகவும் அரிதாகவே கலவரமாக மாறியுள்ளன என்பதை நீங்கள் சுட்டிக் காட்டியுள்ளீர்கள். அது ஏன் என்று நீங்கள் அப்படி கருதுகிறீர்கள்? அது குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு திரண்ட அளவுக்கு பணமதிப்பு நீக்க நடடிவடிக்கைக்கு எதிர்ப்புகள் ஏன் திரளவில்லை என்பதையும் இது நமக்குச் சொல்கிறதா?
எதிரான போராட்டங்களுக்கு எதிர்வினையாக இருந்த பெரிய அளவிலான கலவரங்களை பணமதிப்பு நீக்கத்தின் போது நம்மால் காண முடியவில்லை என்பதை நமக்குச் சொல்கின்றதா?
இந்தக் கேள்விக்கு பொருத்தமாகத் தோன்றுகின்ற பதில்களை மட்டுமே என்னால் கூற முடியும். அடிப்படையில் மக்கள்தொகை குறைவாக இருந்து, வேறு நிலம் இருப்பதால் கலவரம் செய்வதை விட, அந்த அரசாங்கத்தின் அதிகார எல்லைக்கு வெளியே அருகில் உள்ள பகுதிக்கு குடிபெயர்ந்து சென்று விடுவதில் பிரச்சனை குறைவாக இருக்கும் என்று ஒருவேளை கருதப்பட்டிருக்கலாம். முந்தைய காலம் குடியானவர்களுக்கும், அரசாங்கத்திற்கும் இடையில் மிகக் குறைவானவர்களே இருந்த காலமாக இருந்தது. இடைக்காலத்தில் அது மாறியிருப்பதாகவே தோன்றுகிறது. அதே தர்க்கத்தின் அடிப்படையில் பார்க்கும் போது, அதிக மக்கள்தொகை குடியானவர்களுக்கு மிகுந்த அழுத்தத்தைக் கொடுக்கும். இடையில் அதிக எண்ணிக்கையிலானவர்கள் இருந்திருப்பார்கள். மேலும் வளமான நிலத்தில் அதிக ஆக்கிரமிப்பு இருந்திருக்கும். பெரும்பாலான சந்தர்ப்பங்களில் குடியானவர்கள் உண்மையில் இடம்பெயர்ந்தார்களா, அல்லது இடம்பெயர்வதை அச்சுறுத்தலாகப் பயன்படுத்தினார்களா என்பது தெரியவில்லை என்று எனது சக ஊழியர் ஒருவர் கேள்வியெழுப்பினார். குடியானவர்களிடமும், சில நேரங்களில் நகர்ப்புற கைவினைஞர்களிடமும் இருந்த அதிருப்தி குறித்து அவ்வப்போது குறிப்பிடப்பட்டுள்ளது.
அதிருப்தி அவ்வப்போது தன்னிச்சையான சீற்றங்களுக்கான வழியை வகுத்துத் தருகிறது. ஆனால் அமைப்பு, தலைமை, நிதி, வன்முறையைப் பயன்படுத்துவதற்குத் தயாராக இருக்கின்ற நிலை போன்றவை அந்தச் சீற்றங்கள் கலவரமாக மாறுவதற்குத் தேவைப்படுகின்றன. சமூக, பொருளாதார சமத்துவத்திற்கான மாறான அமைப்பைப் பரப்புவது கலவரத்தை ஊக்குவிக்கும் சக்தியாக இருக்கும். இங்கிலாந்தில் நடைபெற்ற குடியானவர்கள் போராட்டம் போன்ற வரலாற்று நிகழ்வுகளில் ஆரம்ப உரையாடலுக்கான கோரிக்கை புறக்கணிக்கப்பட்டது. விளைவாக அந்தப் போராட்டம் கலவரமாக மாறுவது ஊக்குவிக்கப்பட்டது. இந்தியாவில் பணமதிப்பு நீக்கம் குறித்த சமீபத்திய எதிர்ப்பு வெறுமனே அதிருப்தி என்ற அளவிலேயே நின்று விட்டது.
கடந்த காலத்தில் இந்தியாவில் இருந்த மாற்றுக்கருத்துகள் குறித்த நமது புரிதலில் அடிக்கடி எதிர்கொள்கின்ற தவறான கண்ணோட்டம் என்று நீங்கள் எதைக் கருதுகிறீர்கள்?
எனது தலைமுறை வரலாற்றாசிரியர்கள் குறிப்பாக இரண்டு போக்குகளுக்கு எதிராகச் செயலாற்றவேண்டிய நிர்பந்தத்துக்கு ஆளாகியிருக்கிறார்கள். இந்த இரண்டும் கடந்த சில ஆண்டுகளில் மீண்டும் தலைதூக்கியிருக்கின்றன. முதலாவது, இந்திய வரலாற்றைப் பெரும்பான்மை சமூகத்தின் வரலாறாக மாற்ற வேண்டும் என்று வலியுறுத்தும் போக்கு. இரண்டாவது, வரலாற்றாய்வில் பல்வேறு ஆதாரங்களில் இருந்து புதிய தகவல்கள் மற்றும் விவரங்களைச் சேகரிப்பதையும், பகுப்பாய்விற்கான புதிய முறைகளை இணைப்பதையும் எதிர்ப்பது.
இரண்டு விஷயங்கள் எனது தலைமுறை வரலாற்றாசிரியர்கள் எதிர்கொள்ள முயன்றவையாக, கடந்த சில ஆண்டுகளில் புத்துயிர் பெற்றிருப்பவையாக இருப்பதை ஒரு வரலாற்றாசிரியராக என்னால் கூற முடியும். ஒன்று பெரும்பாலும் இந்திய வரலாற்றைப் பெரும்பான்மை சமூகத்தின் வரலாறாக மாற்ற வேண்டும் என்ற வலியுறுத்தல்; இரண்டாவதாக வரலாற்றாய்வில் பல்வேறு ஆதாரங்களில் இருந்து புதிய தகவல்கள் மற்றும் விவரங்களைச் சேகரிப்பதையும், பகுப்பாய்விற்கான புதிய முறைகளை இணைப்பதையும் தொடர்ந்து நீக்குவது. வரலாறு குறித்த தீவிர ஆய்வுகளுக்குத் தேவைப்படுகின்ற அறிவுசார் தேவைகள் விலக்கி வைக்கப்படுவதால், வரலாறு நிச்சயமற்ற கதைகளாகி விடுகிறது. எடுத்துக்காட்டாகச் சொல்வதென்றால், நிரூபிக்கும் வகையிலான எந்தவொரு விளக்கத்தையும் தராமல் முஸ்லீம்களுக்கும், இந்துக்களுக்கும் இடையிலான மதவிரோதத்தின் அடிப்படையிலேயே இடைக்கால வரலாற்றின் பெரும்பாலான நிகழ்வுகள் விளக்கப்பட்டுள்ளன.
ஆக காலனித்துவ ஆட்சியின் கடைசி கட்டத்தில் கேள்வி எழுப்பத் தொடங்கி, புறந்தள்ளிய இந்திய வரலாறு குறித்த காலனித்துவ விளக்கத்திற்கே நாம் மீண்டும் வந்து சேர்ந்திருக்கிறோம். தற்போது பொதுவாக ஊக்குவிக்கப்பட்டு வரும் அறிவுசார்தன்மைக்கு எதிரான தன்மையானது கேள்விகளை எழுப்புவதைப் பலவீனப்படுத்துவதோடு, நம்மைச் சிந்தனை எதுவுமற்றவர்களாக்கி விடுவதிலேயே முடியும். கடந்த ஐம்பதாண்டுகளில் பலவிதமான புதிய சிந்தனை முறைகள் மூலம் வரலாற்றாசிரியர்கள் வழங்கியுள்ள வளமான, மாறுபட்ட, சிக்கலான, அதிநவீன விளக்கங்களை அறிவார்ந்த முறையில் பேணிப் பராமரிக்க வேண்டிய அவசியம் இப்போது ஏற்பட்டுள்ளது. மேலும் இவ்வாறான விளக்கம் வரலாறு குறித்த எழுத்துக்களுடன் மட்டும் நின்று விடவில்லை. மற்ற நாடுகளில் இதுபோன்ற சூழ்நிலைகளில் என்ன நடந்தது என்பதை நாம் அனைவரும் நன்கு அறிந்திருக்கிறோம்.
உங்களுடைய புத்தகத்தை வாசித்த பிறகு இந்த விஷயம் குறித்து ஆர்வம் கொள்கின்ற ஒருவருக்கு நீங்கள் பரிந்துரைக்கக்கூடிய மூன்று புத்தகங்கள் எவையாக இருக்கும்?
மூன்று புத்தகங்கள் என்பது மிகவும் குறைவு. உபநிடதங்கள், சாக்ரடீஸிடமிருந்து தொடங்கி அங்கிருந்து நிறைய வாசிக்கவேண்டியிருக்கிறது. தொடர்ந்து வாசிப்பதற்கான புத்தகங்களை நான் அவர்களுக்குப் பரிந்துரைக்க விரும்புகிறேன். ஆனால் வரலாற்றில் நாம் பயணிக்கும் போது, இவற்றில் எந்த புத்தகங்கள் அல்லது எந்த சிந்தனையாளர்கள் மாற்றுக்கருத்துக்களைத் தெளிவாக வெளிப்படுத்துகின்ற கேள்விகளைக் கேட்பதில் கவனம் செலுத்தியுள்ளனர் என்பதை அறிந்து கொள்வது மட்டுமே போதுமானதாக இருக்கும் என்று நான் நினைக்கவில்லை. வெளிப்படையாகவும், மறைமுகமாகவும் பல்வேறு நூல்களில் அது வெளிப்படுத்தப்பட்டுள்ளது. என்னுடைய புத்தகத்தின் ஒவ்வொரு பகுதியிலும், அதனோடு தொடர்புடைய நான் கலந்தாலோசித்த பெரும்பாலான படைப்புகளின் பட்டியலை இணைத்திருக்கிறேன். மாற்றுக்கருத்துகள் எவ்வாறு உருவாகின்றன என்பதையும், அவை ஏன் உலகின் பல பகுதிகளிலும் சமகால சிந்தனைகள், செயல்பாடுகளுக்கான மையமாக இருக்கின்றன என்பதையும் புரிந்து கொள்வது மிகவும் முக்கியம். அதைப் புரிந்துகொள்ளும் வகையில் இருக்கின்ற, இந்த விஷயத்தை வித்தியாசமாக அணுகுகின்ற, தன்னுடைய சொந்த வழியில் நம்மைச் சிந்திக்கத் தூண்டுகின்ற பல்வேறு புத்தகங்களை என்னால் பரிந்துரைக்க முடியும்.
எட்வர்ட் சயீத் எழுதிய ‘Representations of the Intellectual’ என்ற புத்தகத்திலிருந்து வாசிப்பைத் தொடங்கலாம். ஆனாலும் அந்தப் புத்தகத்தை மாற்றுக் கருத்துக்களின் இருப்பை விளக்குவதற்காகப் பரிந்துரைக்கவில்லை என்பதையும் சேர்த்தே நான் சொல்ல விரும்புகிறேன். அந்தப் புத்தகம் இன்றைக்கு நாம் நன்கு அறிந்து வைத்துள்ள மரபை பரவலாக உள்ளடக்கியதாக இருந்தாலும், அதனுடன் தொடர்புள்ள பகுதிகளை மட்டுமல்லாது தொடர்பில்லாத பகுதிகளையும் அறிந்து கொள்ள உதவுவதாக இருக்கும்.
ஹன்னா ஆரெண்ட் எழுதியுள்ள ‘The Origins of Totalitarianism’ குறிப்பாக நாஜி ஜெர்மனி, சோவியத் ரஷ்யா என்ற இரண்டு சமூகங்களில் மாற்றுக்கருத்துகள் ஏன் அனுமதிக்கப்படவில்லை என்பது குறித்து அலசுகிறது. பல்வேறு செயல்பாடுகளுடன் மாற்றுக் கருத்தை வெளிப்படுத்துவதையும் இணைத்து எழுதப்பட்ட ஆர்வத்தைத் தூண்டுகின்ற வகையிலான பல ஆய்வுகள் ஃபிரான்ஸ் ஃபனான், பெர்டோல்ட் ப்ரெக்ட், டாரியோ ஃபோ ஆகியோரின் எழுத்துக்களில் இருக்கின்றன.
https://amp.scroll.in/article/977026/interview-romila-thapar-on-the-history-of-dissent-and-how-it-shaped-hinduism-and-india
நன்றி: ஸ்க்ரோல் இணைய இதழ்
தமிழில்: தா.சந்திரகுரு
previous post