கோவிட் நோய் தொற்றுக் காலம், உலகை அறிவியலின் பலத்தை உணர வைத்துள்ளதா? அது எந்த அளவிற்கு உணரப்படுகிறது?
கோவிட் நோய் தொற்றுக் கால துவக்கத்தில் சில உண்மைகள் பட்டவர்த்தனமாக வெளிப்பட்டன. ஒன்று நான் நன்றாக இருக்க வேண்டும் என்றால் மற்றவர்கள் நலமாக இருக்க வேண்டும். இரண்டு கோவிட் நோய் சிகிச்சைக்குத் தனியார் பல லட்ச ரூபாய் கொள்ளை விலைகுறித்து கூற தேவையில்லை. பொது சுகாதார கட்டமைப்பு மற்றும் அரசுத் துறை மருத்துவ வசதி இருந்தால் தான் இது போன்ற ஆபத்து காலங்களில் நமக்கு விடிவு பிறக்கும் என்ற எண்ணம் உயர்ந்தது. மூன்று கோவிட் போன்ற நோய்கள் பிடியிலிருந்து நாம் விடுவித்துக்கொள்ள அறிவியல் ஆய்வுகள் தான் தீர்வு என்பது தெளிவாகத் துலங்கியது. அறிவியல் பின்புலத்தின் அடிப்படையிலேயே தடுப்பூசி, சிகிச்சை மருந்து, எப்படி வைரஸ் பரவுகிறது என்பதை அறிவியல்பூர்வமாக அறிந்து அதற்க்கு ஏற்றச் சமூக தடுப்பு நடவடிக்கை எடுத்தல் போன்ற நடவடிக்கைகள் சாத்தியம் என்பது கண்கூடாகத் தெரிந்தது.
ஆனால் மறுபுறத்தில் கண்ணை மூடிகொண்டால் உலகம் இருண்டுவிடும் எனக் கருதிய இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன், தமது போதாமையை மறைக்க அறிவியல்மீதும் குறிப்பிட்ட நாட்டின் மீதும் வன்மத்தை கட்டவிழ்த்த டிரம்ப், இன்னமும் கொள்ளை நோய்குறித்து கவலையே கொள்ளதாத பிரசிலின் பிரதமர் என இருக்கத்தான் செய்தனர். லாபவெறி கண்களை மறைக்க எல்லையின்றி சுரண்டும் சந்தை பொருளாதார அமைப்பு ஒரே சமயத்தில் இரண்டுவித மனநிலைகளை தோற்றுவிக்கிறது. ஒன்று வகைவகையாகக் கிடைக்கும் நுகர்வுப்போருள்கள் ஏற்படுத்தும் போதை இரண்டு பொருளுற்பத்தி முறை ஏற்படுத்தும் இயற்கை சுற்றுசூழல் சமூக வாழ்வு சூழல் தனிமனித உளசூழல் சீரழிவு. இதன் தொடர்ச்சியாக அறிவியலுக்கு எதிரான மனநிலை எழும் சூழல் உருவாகிறது. எனவே கோவிட் நோய் நோயே அல்ல; மஞ்சள் கலந்து பாலை குடித்தால் போதும்; தடுப்பூசி ஒரு கார்பரேட் சதி என்பது போன்ற நகைப்புக்குரிய நிலைபாட்டுக்கு பலரை தள்ளியுள்ளது.
எனினும் கடந்தமுறை, நூறு ஆண்டுகளுக்கு முன்னால் இதே போன்ற, உள்ளபடியே இந்த வைரசை விட வீரியம் குறைந்த, ஸ்பானிஷ் ஃப்ளு வைரஸ் கொள்ளை நோய் பரவியபோது உலகம் முழுவதும் மூன்றில் ஒருவர் அதாவது 50 கோடி பேருக்கு நோய் கிருமி பரவியது. ஐந்து கோடி பேர் மரணம் அடைந்தனர். இந்த முறை கொரோனா வைரஸ் தாக்குதலை சமாளிக்க, மருத்துவ சிக்கிசைக்ளை சடுசடுவென தயார் செய்ய ஒரே ஆண்டில் தடுப்பூசி உருவாக அறிவியலே காரணம். மேலும் உலகம் முழுவதும் உள்ள விஞ்ஞானிகள் இணைந்து பணியாற்றியதும் அறிவியல் ஆய்வுகளைத் தனியுடமையாகக்யாகக் கருதாமல் பொது நன்மைக்கு என பொதுவே வைத்ததின் விளைவு தான் குறைவான நோய் தாக்குதல், குறைவான மரணம்.
அமெரிக்காவில் தீவிர வலது சாரிகளின் வீழ்ச்சிக்கு அங்கே அறிவியல் இயக்கங்கள் சயின்டிஃபிக் அமெரிக்கன் உட்பட அறிவியல் இதழ்கள் பெரும் பங்கு வகித்ததை பார்க்க முடிந்தது. ஜோ-பைடனின் வெற்றியை ஒரு அறிவியலாளர் என்கிற முறையில் எப்படி பார்க்கிறீர்கள்?
மிகவும் சிக்கலான பொதுமக்களுக்கு அதுவும் குறிப்பாக அடித்தட்டு மக்கள் வயதுமூப்பு அடைந்தவர்கள் ஏற்கனவே வேறு நோய்களில் அவதிப்படுபவர்களுக்கு மரணத்தை சம்பவிக்க கூடிய கொள்ளை நோய் பரவிய சமயத்தில் அமெரிக்க முன்னாள் அதிபர் ட்ரம்ப் செய்தது என்ன? முககவசம் அணிய தேவையில்லை என்று கூறினார்; கைகளைச் சோப்பு போட்டு கழிவினால் வைரஸ் அகன்றுவிடும் என்றால் சோப்பை கலந்து குடிக்கலாமே என்று ட்விட்டரில் செய்தி போட்டார் அவரது நாட்டின் மருத்துவ ஆலோசகரின் அறிவுரைகளைப் புறம்தள்ளினார். எதன் அடிப்படையில்? வலிந்தவர்கள் வாழட்டும்; நலிந்தவர்கள் நாசமாகப் போகட்டும் எனும் வலது சாரி கருத்து இதன் பின்னணியில் இல்லாமல் இல்லை. தமக்கு எல்லாம் தெரியும் எனும் மமதையும் காரணம் அல்லவா? பொது சமூக கொள்கைகளைப் பகுத்தறிவின் அடிப்படையில் உருவாக்குவது என்பதை நீக்கி நம்பிக்கையின் அடிப்படையில் கொள்கைகளை உருவாகும் போக்கு கண்டு தான் அறிவியள்ளளர்கள் கவலையடைந்தனர். இந்த பின்னணியில் பார்க்கும் போது ஜோ-பைடனின் வெற்றி ஆசுவாச பெருமூச்சுக்கு இடம் தருகிறது. எனினும் டிரம்ப் கொள்கைகள் முடிந்துவிட்டன எனக்கருத வேண்டாம். உலகளாவிய அளவில் பகுத்தறிவுக்கு எதிரான பண்பாட்டு போக்கின் ஒரு வடிவமே டிரம்ப். பகுத்தறிவு பிரசாரத்தை, அறிவியல் மனப்பான்மையை மேலும் வலுவாக பிரசாரம் செய்யவேண்டிய தருணம் இது.
விஞ்ஞான் பிரசார் நிறுவனத்தின் சார்பில் நடக்கும் அறிவியல் தொண்டுகளை பற்றி எமது வாசகர்களுக்கு சொல்லுங்கள்.
எளிய முறையில் அறிவியல் கருத்துகளையும் இந்திய அறிவியல் நிறுவங்கள் ஆய்வ்வாளர்கள் மேற்கொள்ளும் ஆய்வுகளைக் குறித்தும் அவரவர் மொழிகளில் எடுத்துச் செல்வதும் அவ்வாறு அறிவியல் பிரசார பணிகளில் பங்குக் கொள்பவர்களை ஊக்கம் தருவதும் தான் விஞ்ஞான் பிரசார் அமைப்பின் பணி.
எடுத்துக்காட்டாக அறிவியல் பலகை என்ற அமைப்பின் சார்பில் தமிழில் கொரோனா தொற்று காலத்தில் சுமார் 170 உரைகளை நடத்தியுள்ளோம்.
மருந்து உற்பத்தி முதல் தடுப்பூசி தயரிப்பு வரை; கொரோனா வைரஸ் மாற்றுருவம் பெறுவதை கண்காணிப்பது முதல் விலை குறைவான சோதனை கருவி தயார் செய்வது வரை என இந்தியா ஆய்வு நிறுவனங்கள் மேற்கொண்ட ஆய்வு பணிகளை குறித்து விளக்கி கூறினோம். எளிய முறையில் வைரஸ், அத எப்படி தொற்று செய்கிறது, எப்படி பல்கி பெருகி கடும் நோயை ஏற்படுத்துகிறது, நோய் தடுப்பாற்றல் மண்டலம் எப்படி வேலை செய்கிறது, மருந்து சிகிச்சை எப்படி பலன் தரும் போன்ற அறிவியல் செய்திகளை உடனுக்குடன் எளிய முறையில் விளக்கிக் கூறினோம். பத்திரிகையாளர்கள் சந்திப்புமூலம் அறிவியல் செய்திகளை விளக்கிகூறி ஊடகங்கள் செம்மையாக அறிவியல் கருத்துக்களை வெளிப்படுத்த உதவி செய்துள்ளோம்.
இந்தியாவில் வளர்ந்து வரும் அறிவியல் மற்றும் எளிய முறையில் சுவையான அறிவியல் கருத்துக்களை அறிய https://www.indiascience.in/ எனும் வலைத்தளம் மூலம் OTT அறிவியல் தொலைக்காட்சி சானலை காணுமாறு வேண்டுகிறேன்.
தமிழ் தொலைக் காட்சி சேனல்களில் மருத்துவ நிகழ்ச்சித் தவிர அறிவியலுக்கு பெரிய முக்கியத்துவம் தரப்படுவது இல்லையே.
மருத்துவம் அல்லது ராக்கெட் ஏவப்பட்டால் அது குறித்த நிகழ்வுகள் மட்டுமே தொலைகாட்சியில் உள்ளது பெரிதும் வருத்தத்துக்குரியது. ஊடகம் எல்லாம் வணிகமான நிலையில் இது எதிர்பார்க்க தக்கது தான். எனினும் மேலை நாடுகளில் ஊடகங்களில் அறிவியலுக்கு என இடம் உள்ளது. இந்தியாவில் ஸ்பொன்சர் கிடைப்பது எளிதல்ல. என்றாலும் தமிழாக தொலைக்காட்சி ஊடகங்களும் அறிவியல் நிகழ்சிகளை நடத்த முன்வரவேண்டும்.
இந்தியாவில் அறிவியல் என்றாலே இஸ்ரோ (ராக்கெட்) அல்லது டி.ஆர்.டி. (ஏவுகணை) என்பதுபோல உள்ளதே. நேனோ தொழில் நுட்பம், மரபியல் போன்றவற்றில் நமது லேட்டஸ்ட் சாதனைகளை பற்றி…
பொதுவே நமது செல்களைச் சென்று அடையும் நுண்ணிய ரத்த நாளங்கள் மூலமாகத் தான் வைரஸ் போன்ற நுண்கிருமிகள் தொற்று ஏற்படுத்திய ஒரு செல்லிருந்து மற்றொரு செல்லுக்குப் பரவி கிருமி தொற்று நோய் ஏற்படுத்துகிறது. உயிரிகளின் மூளை மிக முக்கிய அமைப்பு. எனவே பரிணாமத்தில் குருதி-மூளை வேலி (blood-brain barrier) என்னும் அமைப்பு உருவாகியுள்ளது. இது ஒரு வடிகட்டி போலச் செயல்படும். ரத்தத்தில் உள்ள வேறுசில பொருள்கள் மட்டுமே இந்த வடிகட்டி மூலம் மூளை செல்களுக்குள் செல்ல முடியும். இந்த அமைப்பின் காரணமாக மூளை தொற்று நோய் நுண்ணுயிரிகளில் இருந்து பெரும்பாலும் பாதுகாக்கப் படுகிறது. ஆனால் தப்பித்தவறி மூளையை தாக்கும் மலேரியா போன்ற தொற்றும் நோய் ஏற்பட்டுவிட்டால் அவற்றை சமாளிபப்தும் வெகு சிரமம். ஊசி மருந்து மாத்திரை மூலம் உடலுக்குள் செல்லும் மருந்து பொருள்கள் எதுவும் குருதி-மூளை வேலியை கடந்து மூளை செல்களுக்குள் செல்ல முடியாது. அல்சைமர் போன்ற மூளையை தாக்கும் நோய்களுக்கு மருந்தை கொண்டு சேர்ப்பது எப்படி என்பது ஒரு சவால்.
கார்பன் அணுக்களால் ஆன குளுகோஸ் குருதி-மூளை வேலியைக் கடக்கும். தேன் தடவி கசப்பு மருந்தைத் தருவது போலக் குளுகோஸ்க்குள் பொதிந்து மருந்தை அனுப்பினால் அது மூளை செல்களைச் சென்று அடைய முடியும். நானோ தொழில்நுட்பத்தில் குளுகோஸ் மூலக்கூறுகளினால் கட்டப்பட்ட கார்பன் நானோ கோளத்தை உருவாக்கி அதன் நடுவே மருந்து மூலக்கூறை நானோ மருந்துகளைத் தயர்த்தி ஆய்வு செய்து வருகிறார்கள். பெங்களூரில் உள்ள ஜவஹர்லால் நேரு மேம்பட்ட அறிவியல் ஆய்வுக்கான மையத்தை [Jawaharlal Nehru Centre for Advanced Scientific Research -JNCASR] சார்ந்த விஞ்ஞானிகள் இதில் சாதனை செய்துள்ளனர். அல்சைமர் நோய்க்குத் தரப்படும் மருந்து மூலக்கூறு அடங்கிய குளுக்கோஸினால் ஆன கார்பன் நானோ கோளத்தை உருவாக்கி அதனை எலியில் பரிசோதனை செய்து பார்த்துள்ளனர். அதில் வெற்றியும் கண்டுள்ளனர். உடல் உறுப்புகளில் ஆகக்குறைவாகக் கிருமி தாக்கம் அடைவது மூளைதான் என்றாலும் நோய் ஏற்பட்டால் சிகிச்சை அளிப்பதும் கடினம். நானோ மருந்துவம் வழிகாட்டும். இந்த ஆய்வுகளில் பல இந்திய ஆய்வு நிறுவனங்கள் ஈடுபட்டு வருகின்றன.
ATGC என்கிற நான்கு வேதி எழுத்துக்களை கொண்டு தான் உயிர் புத்தகம் எனும் ஜீனோம் எழுதப்பட்டுள்ளது. இந்த நான்கு வேதிப் பொருள்கள் வெவ்வேறு வகையில் கோர்த்து கட்டப்படும் போது டிஎன்ஏ எனும் மரபணு தொகுதி உருவாகிறது. MAT CAT BAT என ஆங்கில எழுத்துகள் இணையும் போது வார்த்தை உருவாவது போல ATGC எனும் ஜினோம் எழுத்துக்கள் மூன்று மூன்று சேரும்போது அவை புரதங்களில் உள்ள அமினோ அமிலங்களை குறிக்கும், மரபணு தொகுதியில் உள்ள எழுத்துக்கள் மொத்தமும் சேர்ந்து அமினோ அமில மாலை அதாவது புரதம் உருவாகும்.
செல்பிரிதல் போது அந்தச் செல்லில் இருக்கும் டிஎன்ஏவும் படி எடுத்து இரண்டு பிரதிகள் தயார் ஆகும். புதிதாகப் பிறக்கும் இரண்டு செல்களில் ஒவ்வொன்றிலும் இந்தப் பிரதிகள் சென்று செல் பூர்த்தி அடையும். இவ்வாறு செல் பிரிதல் பொது டிஎன்ஏ பிரதி எடுக்கப்படும்போது பிழைகள் ஏற்படக்கூடும். “கல் கொண்டுவா” என்பதை “கள் கொண்டுவா” என தவறாக நகல் எழுதிவிட்டால் அர்த்தமே மாறிப்போய்விடும் அல்லவா? புத்தகம் பிரசுரிக்கும்போது மெய்ப்பு திருத்துபவர் இதுபோன்ற எழுத்துப்பிழைகளை திருத்தி செப்பம் செய்வார். அதுபோல செல்களில் உள்ள RAD51 எனும் ஒருவகை புரதம் புதிதாக படி எடுக்கப்படும் டிஎன்ஏ மரபணு தொடரை மெய்ப்பு பார்த்து திருத்தம் செய்கிறது எனக்கண்டுபிடித்துள்ளனர் பெங்களூரில் உள்ள இந்திய அறிவியல் நிறுவன (Indian Institute of Science) விஞ்ஞானிகள். மேலும் இந்த மெய்ப்பு பார்க்கும் புரதத்தில் குளறுபடி ஏற்படும்போது பிழையான டிஎன்ஏ பிரதிகள் உருவாகிவிடுறது. பிழையான டிஎன்ஏ நகல் கொண்ட செல்கள் கான்சர் செல்களாக மாறுகின்றன. டியுமர் ஏற்படுகிறது. குறிப்பாக மார்பக புற்றுநோய் மற்றும் கருப்பை புற்றுநோய்யோடு இந்த புரதம் தொடர்புடையது எனக் கண்டுபிடித்துள்ளார்கள்.ராக்கெட் ஏவுகணைகள் ஜிவ்வென்று வானில் பறப்பது வேடிக்கை காட்சியாக அமைவதால் அவை செய்தியாகப் பார்க்கப்பட்டு ஊடகங்கள் பெரிது படுத்துகின்றன. ஆனால் கண்களுக்குத் தெரியாமல் இந்திய ஆய்வு நிறுவனங்களில் மிக அற்புதமான பல ஆய்வுகள் நடந்த வண்ணம் உள்ளன. ஊடங்கள் இவை குறித்தும் பேச முன்வரவேண்டும்.
பல்கலைக் கழக முனைவர் பட்ட அறிவியல் ஆய்வுகளில் பெரிய முன்னேற்றம் இல்லையே.. உலக நாடுகளோடு ஒப்பிடும்போது ஆய்வு- கட்டுரைகளை வெளியிடுவதில் நாம் முன்னேற என்ன செய்ய வேண்டும்.
ஒவ்வொரு ஆரம்ப மற்றும் நடுநிலை கல்வி மாணவ மாணவியருக்கு நார்வே சராசரி ஒரு டாலர் செலவு செய்தால் இந்தியாவில் இது வெறும் 0.07 டாலர். கொலம்பியா வியத்நாம் போன்ற நாடுகளை விட இது மோசம். பல்கலைகழக ஆய்வுக்கு தலைக்கு சராசரி ஒரு டாலர் வீதம் சிங்கப்பூர் செலவு செய்தால் இந்தியாவில் வெறும் 0.03 டாலர். நமது உயர்கல்வி முதலீடு பிரேசில் தென் ஆப்ரிக்கா வை விட குறைவு. தலைக்கு ஒரு டாலர் வீதம் அறிவியல் ஆய்வுக்கு தென் கொரியா செலவு செய்தால் இந்தியாவில் இது வெறும் 0.23 டாலர். சில புள்ளியில் தகவல்களை பார்க்கலாம். நியுஸிலாந்தில் ஆயிரம் மக்கள்தொகைக்கு ஒருவர் அறிவியலில் உயர்கல்வி பெற்றவர்; இந்தியாவில் இது வெறும் 0.84. ஆயிரம் மக்கள் தொகைக்கு ஒருவர் பின்லாந்தில் ஆய்வாளர்; இந்தியாவில் இது வெறும் 0.02! பள்ளிக்கல்வி, உயர்கல்வி மற்றும் ஆய்வில் இந்தியாவில் போதுமான முதலீடு இல்லை என்று தான் கூற வேண்டும். நிதி மனிதவளம் இரண்டும் போதிய அளவு முதலீடு செய்யவில்லை என்றால் போதிய ஆழத்தில் ஆய்வுகள் எதிர்பார்க்க முடியாது.
மேலே விவரித்த கட்டமைப்பு போதாமை தான் மிகமுக்கிய காரணம் என்றாலும் ஏன் எதற்கு என கேள்வியை கேட்கும் அறிவியல் மனப்பான்மை கலாச்சாரமும் போதிய அளவில் இல்லை. ஆயிரம் வருடங்களுக்கு முன்பு எழுதிவைத்ததை அப்படியே ஏற்றுக்கொள்வது; பெரியவர்கள் கூறினார்கள் என ஏற்றுக்கொள்வது எனும் அறிவியலற்ற போக்கும் பெரும் தடை.
தமிழில் அறிவியல் நூல்களின் வரவு தற்போது எப்படி உள்ளது. இது குறித்த உங்களது ஆலோசனை என்ன?
1980களில் அறிவியல் இயக்கம் தனது பணியை துவங்கிய நிலையை ஒப்பிட்டால் இன்று பெரும் முன்னேற்றம் காணமுடிகிறது. தொலைக்காட்சி போதுமான அளவு ஆர்வம் காட்டவில்லை என்றாலும் அச்சு ஊடகத்தில் அறிவியல் செய்திகளை பிரசுரிப்பது அதிகரித்து வருகிறது. தமிழில் அறிவியலை எழுதும் இளம் எழுத்தாளர்கள் உருவாகி வருகின்றனர். ஆய்வாளர்கள் சிலரும் கூட தமிழில் எழுதும் நிலை ஏற்பட்டுள்ளது.
எனினும் அடிப்படை அறிவியலைத் தான் பெரும்பாலும் இந்த அறிவியல் நூல்கள் பேசுகின்றன. நவீன வளர்சிகளை ஆழமாக விவரிக்கும் நூல்கள் குறைவு. ஆங்கிலம் மலையாளம் வங்கம் போன்ற மொழிகளில் உடனுக்குடன் இது போன்ற நூல்கள் வெளிவருகின்றன. இந்தத் திசையில் செல்வது அவசியம். அதுபோலப் பதின்ம பருவ இளைஞர்களுக்கு நூல்களும் குறைவு. சிறார் இலக்கியம் பொதுமக்களுக்கான இலக்கியம் இரண்டும் பதின்ம பருவத்துக்குப் பொருந்தாது. இந்தத் தரப்பினர் குறித்தும் கூடுதல் கவனம் தேவை.
பள்ளி- கல்லூரிகளில் செயற்கை நுண்ணறிவு கொண்டு இணைய வகுப்புகள் நடத்தப்படுவதை எப்படிப் பார்க்கிறீர்கள். அது சமூகத்தில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.
எப்படி இணைய புரட்சி ஏற்பட்டதோ அதுபோல உலகெங்கும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப புரட்சி ஏற்பட துவங்கியுள்ளது. எனவே பள்ளி பருவம் முதலே செயற்கை நுண்ணறிவு, பெருந்தரவு (big-data) கையாளல் போன்ற விழங்கள் மீது அறிமுகம் செய்வது அவசியம் தான். ஆரம்ப கல்வியே ஆட்டம் கண்டுள்ள நிலையில் இதுவெல்லாம் அவசியமா என ஒதுக்கினால் நமக்குத் தான் நஷ்டம். எல்லா தொழில்நுட்பங்களும் சமூகத்தில் நன்மை பயக்கும் தாக்கமும் தீமை பயக்கும் தாக்கமும் ஏற்படுத்தும். செயற்கை நுண்ணறிவுவின் சமூகவியல் குறித்த ஆய்வுகளும் உள்ளன. இவைகளை கணக்கில் கொண்டு அறிவியல் இயக்கங்கள், ஆசிரியர் இயக்கங்கள், கல்வி சிந்தனையாளர்கள் இதன் மீது ஆழ்ந்த கவனம் செலுத்தவேண்டிய அவசியம் உள்ளது. நமது நாட்டுக்கும் தமிழ்நாட்டு சூழலுக்கும் பொருத்தும்படியான முறையில் செயற்கை நுண்ணறிவு கல்வியை வடிவமைப்பதில் இவை உதவும். அடுத்த சில பத்தாண்டுகளில் இந்த துறை சமூகத்தின் பல்வேறு அம்சங்களைத் தாக்கம் செய்யும்.
இந்திய கோவிட் தடுப்பூசிகள் பாதுகாப்பானவையா. தடுப்பூசி சாதனைகளைவிட அவற்றின் அரசியல் பிரச்சாரம் தூக்கலாக இருக்கிறதே.
பாரத் பையோடெக் தயரிக்கும் கோவக்சின் இந்திய ஆய்வு நிறுவனமான தேசிய வைரஸ் ஆய்வு நிறுவனம் பதம் செய்து தந்த கொரோனா வைரஸ் கொண்டு தயாரிக்கப்படுகிறது. இதில் பயன்படுத்தப்படும் துணையூக்கி (adjuvant) வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யபப்டுகிறது. சீரம் இன்ஸ்டிடியுட் தயாரிக்கும் கோவிட்ஷீல்டு அஸ்ட்ராஜென்ன நிறுவனம் தயரிக்கும் அதே தடுபூசிதான். ஆக்ஸ்போர்ட் பல்கலைகழக ஆராய்ச்சியாளர்கள் உருவாகிய தடுப்பூசி தான் இது. மேலும் ரஷ்யாவின் ஸ்புட்னிக் தடுப்பூசியும் அந்த நாட்டின் ஆய்வு நிறுவனம் உருவாக்கிய தடுப்பூசி. கடிலா நிறுவனம் தயரிக்கும் சைடுகோவி தடுப்பூசி மூன்றாம் கட்ட மனித மருத்துவ பரிசோதனையில் உள்ளது. இது இந்திய உயிரிதொழில்நுட்ப துறை உதவியோடு தயாரிக்கப்படுகிறது. இவை எல்லாம் சோதனை குடுவை ஆய்வு, விலங்குகள்மீது ஆய்வு முடிக்கப்பட்டு மனித பரிசோதனைக்கு எடுத்துக்கொள்ளப்ட்டன. இவை அனைத்தும் முதல் இரண்டு கட்ட மனித மருத்துவ பரிசோதனைகளை வெற்றிகரமாக கடந்துள்ளன. எனவே தீவிர ஆபத்து இல்லை; போதியளவு தடுப்பாற்றல் திறனைத் தூண்டுகிறது என்பது நிரூபணம் ஆகியுள்ளது. எனினும் மூன்றாம் கட்டம் நடந்தபின்னர் தான் அதன் செயல்திறன் தெளிவாகத் தெரியும். வரைமுறைப்படி மூன்றாம் கட்ட ஆய்வின் அடிப்படையில் தான் ஒப்புதல் தரவேண்டும் என விஞ்ஞானிகள் கூறுகின்றனர். எனவே தடுப்பூசிகள் பாதுகாப்பு குறித்து பெரும் கவலை இல்லை; அவற்றின் செயல்திறன் குறித்து தான் சர்ச்சை. கோவிட்ஷீல்டு ஸ்புட்னிக் முதலியவற்றின் மூன்றாம் கட்ட ஆய்வு வேறு பல நாடுகளில் நடத்தப்பட்டு அதன் தரவுகள் வெளிவந்துள்ளன. கோவிட்ஷீல்டு சுமார் 75 சதவிகித செயல்திறனும் ஸ்புட்னிக் 92 சதவிகித செயல்திறனும் கொண்டவை என இந்த ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
பிப்ரவரி 2 வரை உலகெங்கும் சுமார் 7 கோடி பேருக்கு ஒரு டோஸ்வாது தடுப்பூசி தரப்பட்டுள்ளது. இஸ்ரேலில் பாதிக்கு பாதி பேருக்கு முதல் டோஸ் தரப்பட்டு விட்டது. இவ்வளவு பேருக்கு உலகெங்கும் தடுப்பூசி தரப்பட்டும் தடுப்பூசி தூண்டும் ஆபத்து பக்கவிளைவு ஏதுமில்லை என்பதையும் கவனத்தில் கொள்ளவேண்டும். வரைமுறைகளைப் பின்பற்ற வேண்டும் எனக் குரல் கொடுப்பது அவசியம்; அதே சமயத்தில் தடுப்பூசிக்கு எதிரான மனநிலையை தோற்றுவிக்கக்கூடாது என்பதிலும் கவனம் தேவை. கூடுதல் மனிதர்களிடம் பரவி கூடுதல் நாட்கள் தொற்று இருந்தால் கொரோனா வைரஸ் ஆபத்தான புது அவதாரம் எடுக்க வாய்ப்பு உருவாகும். விரைவாகப் பெரும் அளவில் தடுப்பூசி தருவதன் மூலமே இதைக் கட்டுப்படுத்த முடியும். பெருமளவில் தொற்று ஏற்பட்ட பிரேசில் நகரில் புதிய வடிவம் தலைவிரித்து இரண்டாம் அலையாக பரவுவது கவனத்தில் கொள்ள வேண்டும்.
previous post