பொ.வேல்சாமி
இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும் இருபத்தொன்றாம் நூற்றாண்டின் முற்பகுதியிலும் வெளிவந்துள்ள பழந்தமிழ் இலக்கியங்கள் சார்ந்த நூல்களின் பதிப்புக்கள் தமிழாசிரியர்களையும் தமிழ்ப் பேராசிரியர்களையும் முட்டாள்களாக நினைத்துக் கொண்டு தவறுகளும் பிழைகளும் நிறைந்ததாக வெளியிடப்பட்டுள்ளன. எடுத்துக்காட்டாகச் சொல்லவேண்டுமென்றால் வை.மு.கோபால கிருஷ்ணமாச்சாரியாரால் அருமையாக வெளியிடப்பட்ட கம்பராமாயணம் மற்றும் திருக்குறள் பதிப்புக்களும், தமிழ்ப் புத்தகாலயத்தால் வெளியிடப்பட்ட வால்காவிலிருந்து கங்கை வரை என்ற புகழ்பெற்ற நூலும், திருப்பனந்தாள் காசி மடத்தால் வெளியிடப்பட்ட “திருக்குறள் உரைக்கொத்து”ம் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தால் வெளியிடப்பட்ட தமிழறிஞர் அவ்வை துரைசாமிப்பிள்ளையின் உரையுடன் கூடிய ஐங்குறுநூறு நூலையும் குறிப்பிடலாம். இவைபோன்ற பல நூல்கள் தமிழ்ப் பதிப்பு வரலாற்றில் இன்றும் உலா வருகின்றன. அத்தகைய நூல்களைப் பற்றிய ஒரு விவாதத்தைத் தொடங்குவது வருங்காலத்தில் பழந்தமிழ் நூல்கள் செம்மையாக வெளிவருவதற்கு உதவியாக இருக்கும் என்ற எண்ணத்தில் இந்தக் கட்டுரை எழுதப்படுகின்றது.
உலகின் பல்வேறு நாடுகளிலும் உள்ள பல்கலைக் கழகங்களாலும் பதிப்பாளர்களாலும் பல புகழ்பெற்ற நூல்கள் வெளியிடப்பட்டுள்ளன. அத்தகைய நூல்கள் பலமுறை மறுபதிப்பாக வெளியிடப்பட்டும் உள்ளன. அப்படி அந்த நூல்களை மறுபதிப்பாக வெளியிடுபவர்கள் காலத்தின் மாற்றத்தால் புதிய பதிப்பில் சில பகுதிகளை இணைத்தும் சில பகுதிகளை நீக்கியும் வெளியிடும் மரபு உள்ளது. எடுத்துக்காட்டாக ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் வெளியிட்ட, வரலாற்று அறிஞர் வின்சென்ட் ஸ்மித்தால் எழுதப்பட்ட, புகழ்பெற்ற நூலான இந்திய வரலாறு பலமுறை மறுபதிப்புகளாக வெளிவந்துள்ளது. அவ்வாறு வெளிவந்த மறுபதிப்புகளில் காலமாற்றத்தால் இந்திய வரலாற்றுக்குக் கிடைத்த புதிய தரவுகளை தகுதியான பேராசிரியர்கள் இணைத்து வெளியிட்டுள்ளனர். அப்படி வந்த அந்த நூல் தமிழ்நாடு அரசாங்கத்தின் தமிழ் வெளியீட்டுக் கழகத்தால் தமிழ்மொழியிலும் மொழிபெயர்க்கப்பட்டு நான்கு பாகங்களாக (1A,1B,1C,1D) வெளியிடப்பட்டுள்ளது.
அந்த நூலின் ஒவ்வொரு பாகத்திலும் நூலாசிரியர் பெயரும் அந்தப் பாகத்தில் புதிய மாற்றங்களைச் செய்த பேராசிரியர்களின் பெயரும் தனித்தனியாக நூலின் முகப்புப் பக்கத்தில் இடம்பெற்றுள்ளதை இதில் இணைக்கப்பட்ட படங்களில் நீங்கள் காணலாம். முதல்பாகத்தில் மிகப் புகழ்பெற்ற வரலாற்று அறிஞர் சர் மார்டிமர் வீலரும் உலக புகழ்பெற்ற வியத்தகு இந்தியா நூலின் ஆசிரியர் ஏ.எல்.பாஷாம் அவர்கள் பெயரும் இடம்பெற்றுள்ளதை காணலாம். அடுத்தடுத்த பாகங்களில் பெர்சிவல் ஸ்பியர், ஜே.பி.ஹாரிசன் போன்ற பேராசிரியர்களின் பெயர்கள் மூல நூலாசிரியரான வின்சென்ட் ஸ்மித் பெயருக்கு அடுத்தடுத்து இடம்பெற்றுள்ளதை காண முடிகிறது. இதுதான் உலகத்தின் பல நாடுகளில் உள்ள பதிப்பாளர்கள், பல்கலைக் கழகத்தார்களின் மரபாக உள்ளது. இந்த மரபை மீறி செயல்படுவதற்கு உலக நாடுகளில் எத்தகைய பல்கலைக் கழகத்தையும் அந்தந்த நாடுகளின் கல்வியாளர்கள் விடமாட்டார்கள் என்பதை நாம் அறிந்துதான் இருக்கிறோம். தமிழ்நாட்டில் உள்ள கல்விச்சூழல் இத்தகைய உலக பதிப்புமுறைக்கு மாறாக உள்ளதைக் காணமுடிகின்றது. இப்படியான நூல்கள் வெளியிடப்பட்டதற்காக இதுவரை யாரும் வெட்கப்பட்டதாகவோ வேதனைப்பட்டதாகவோ பதிவுகள் ஏதும் அதிகமாக இல்லை. பேராசிரியர் வையாபுரிபிள்ளை போன்ற சிலர் அவர்கள் சார்ந்த துறைகளில் இத்தகைய போக்கை விமர்சித்துள்ள சில குறிப்புகள் உண்டு. ஆனால் தமிழ் அறிவுலகம் அதனை பொருட்படுத்தியதாகத் தெரியவில்லை.
பழந்தமிழ் நூல் உரையாசிரியர்களில் புகழ்பெற்றவர் வை.மு.கோபால கிருஷ்ணமாச்சாரியார் என்பதை தமிழ் அறிவுலகம் நன்கு அறியும். இவர் பெயரைச் சொன்னவுடன் உடனடியாக இரண்டு நூல்கள் நம் நினைவுக்கு வரும். ஒன்று திருக்குறள் பரிமேலழகர் உரைக்கான விளக்கம். மற்றொன்று கம்பராமாயணத்திற்கான உரை. இந்த இரண்டு நூல்களின் உரையாசிரியராக இன்றைய காலத்தில் வெளியிடப்பட்டுள்ள பதிப்புகளில் வை.மு.கோபால கிருஷ்ணமாச்சாரியார் பெயர் மட்டுமே இடம்பெற்றுள்ளது. உண்மையில் இந்த நூல்களின் பெரும்பகுதிக்கு உரை எழுதியவர்கள் வை.மு.சடகோப ராமானுச்சாரியாரும் சே.கிருஷ்ணமாச்சாரியாரும் என்பதை வை.மு.கோவே தான் எழுதிய முன்னுரையில் குறிப்பிட்டுள்ளார். பழைய பதிப்புகளின் முதல் பக்கத்திலும் உரையாசிரியர்களாக சடகோப ராமானுஜாச்சாரியாரும் கிருஷ்ணமாச்சாரியாரும் குறிப்பிடப்பட்டு பதிப்பாசிரியராக வை.மு.கோ பெயர் இடம்பெற்றுள்ளதை காண முடிகின்றது. இப்பொழுது உள்ள நூல்களில் முன்னிருவர் பெயர்களையும் காணவில்லை. (2A,2B,2C,2D,2E) வை.மு.கோ பெயர் மட்டுமே காணப்படுகிறது. இதன் விளைவாக கடந்த பல ஆண்டுகளாக பல்கலைக் கழக மாணவர்கள் இந்த நூல்களை ஆய்வு செய்யும் போது இந்நூல்களின் உரையாசிரியர் வை.மு,கோ மட்டும்தான் என்று கருதி வந்து செயல்பட்டுள்ளனர். இவர்களுக்கு வழிகாட்டிகளாகத் திகழ்ந்த பேராசிரியர்களும் இதே கருத்தைக் கொண்டிருந்தனர். இதன் விளைவாக ஒருவர் எழுதிய உரைக்குப் பதிலாக இன்னொருவர் உரை எழுதியதாக ஆய்வை நிகழ்த்தியவருக்கு பட்டங்களும் வழங்கப்பட்டதாகவும் செய்திகள் உண்டு.
பல்கலைக் கழகங்கள்தான் இப்படியென்றால் பாரம்பரியமான மடங்களும் இதே மடமையைச் செய்துள்ளன. குறிப்பாக திருப்பனந்தாள் காசிமடத்திலிருந்து 1957,1958.1960 ஆகிய ஆண்டுகளில் திருக்குறளுக்கு பல உரையாசிரியர்களும் எழுதிய உரைகளை திருக்குறள் உரைக்கொத்து என்ற பெயரில் மூன்று பாகங்களாக சிறப்பாக வெளியிட்டனர். இந்த நூல்களின் வெளியீட்டிற்கு பதிப்பாசிரியராக பட்டுசாமி ஓதுவார் என்ற புலவரும் பிற குறிப்புகளையும் ஆங்கில மொழிபெயர்ப்பையும் இணைத்துக் கொடுத்தவராகப் பேராசிரியர் கே.எம்.வேங்கடராமையாவும் குறிப்பிடப்பட்டள்ளனர். இப்பொழுது கிடைக்கும் மறுபதிப்புகளில் இவர்களுடைய பெயர்கள் நீக்கப்பட்டுள்ளது. (3A,3B,3C) ஆனால் இவர்களால் முறைப்படுத்தப்பட்ட நூலின் அமைப்பு என்பது அப்படியே உள்ளது. பதிப்பாசிரியர் பெயரும் பிற பெயர்களும் மாறிவிட்டன. இத்தகைய செயலை எந்த வகையான பதிப்பு நேர்மை என்று நாம் ஏற்றுக்கொள்ள முடியும்?
புகழ்பெற்ற தமிழறிஞர் அவ்வை துரைசாமிப் பிள்ளை அவர்கள் எட்டுத்தொகை நூல்களில் ஒன்றான ஐங்குறுநூற்றுக்கு மிக அருமையான விளக்கவுரை எழுதியுள்ளார். 1903 ம் ஆண்டு தமிழ்த்தாத்தா உ.வே.சா அவர்களால் இந்நூலுக்கான சுருக்கமான குறிப்புரையுடன் முதன்முதலாக அச்சிட்டு வெளியிடப்பட்டது. குறிப்பிட்ட அளவு தமிழறிவு கொண்டவர்கள் கூட அந்தக் குறிப்புரையை மட்டும் கொண்டு நூலின் பாடல்களைப் புரிந்து கொள்வது என்பது மிகவும் கடினமானது என்று கருதப்பட்டது. இத்தகைய சூழலில் உரைவேந்தர் துரைசாமி பிள்ளையின் உரையை அண்ணாமலைப் பல்கலைக் கழகம் 1957, 1958 இல் மூன்று பாகங்களாக வெளியிட்டது. அதில் மூன்றாம் பாகத்தில் அருஞ்சொல் அகரநிரல் என்ற ஒரு பகுதியும் அரும்பொருள் அகரநிரல் என்ற மற்றொரு பகுதியும் சேர்ந்து மொத்தம் 232 பக்கங்களுக்கான ஆராய்ச்சிகளுக்கான செய்திகளைக் கொடுத்திருப்பார். இந்தப் பகுதிகளை அந்தப் பல்கலைக்கழகமே தன்னுடைய அடுத்த பதிப்பில் (1978) நீக்கிவிட்டது. அண்மையில் தமிழ்மண் பதிப்பகம் அதே நூலை வெளியிட்டுள்ளது. அந்த நூலிலும் 232 பக்கங்கள் நீக்கப்பட்டுள்ளன என்பது கவனிக்கத்தக்கது. (4A,4B)
இந்த நூல்களைப் பற்றிய இத்தகைய தகவல்கள் தமிழ்த் துறையைச் சார்ந்ததாக இருக்கின்றன. அதே நேரத்தில் தமிழ் அறிவுஜீவிகளால் பெரிதும் மதித்துப்போற்றபட்ட ராகுல்ஜீயின் புகழ்பெற்றதும் பலமுறை பதிப்பிக்கப்பட்டதுமான நூலாகிய வால்காவிலிருந்து கங்கை வரை யின் முதல்பதிப்பில் இந்த நூலின் மொழிபெயர்ப்பாளர்காக கண.முத்தையாவும் ஞானகுருபரன் என்று இருவருடைய பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. ஆனால் அடுத்தவந்த பதிப்புகளில் ஞானகுருபரன் பெயர் இடம்பெறவில்லை. இதன் விளைவாக அந்த நூலை மொழிபெயர்த்தவர் கண.முத்தையாதான் என்று இன்றுவரை பலரும் நம்பி கொண்டுள்ளனர். இத்தகைய நம்பிக்கை நியாயமானதுதானா…? (5)
தொல்காப்பிய அகத்திணையியல் உரைவளம் என்ற நூலை 1975 இல் மதுரை பல்கலைக் கழகம் வெளியிட்டுள்ளது. இதேநூலை 1993 இல் இரண்டாம் பதிப்பாக அதே பல்கலைக் கழகம் வெளியிட்டுள்ளது. முதல் பதிப்பின் பதிப்பாசிரியர்கள் என்று பேராசிரியர் டாக்டர் முத்துச்சண்முகன், டாக்டர் தா.வே.வீராசாமி ஆகியோர் குறிப்பிடப்பட்டுள்ளனர். இந்த இரு பேராசிரியர்களாலும் எழுதப்பட்ட முன்னுரையும் இடம்பெற்றுள்ளது. 1993 இல் வெளிவந்த இரண்டாம் பதிப்பில் இவ்விரு பேராசிரியர்கள் பெயரும் இடம்பெறவில்லை. அதே நேரத்தில் இவர்களால் எழுதப்பட்ட முன்னுரை அப்படியே காப்பியடிக்கப்பட்டு டாக்டர்.அ.விநாயகமூர்த்தி என்பவர் பெயரில் வெளியிடப்பட்டுள்ளது. (6A,6B) என்னே பல்கலைக் கழகத்தின் பதிப்பு நேர்மை…?