நிகழ் அய்க்கண்
எர்னஸ்டோ சே குவேரா (1928 – 1967) மூலதனமும், சாம்ராஜியங்களும் ஏற்படுத்தியிருக்கிற உலகத்திற்கு எதிரான நிரந்தர கிளர்ச்சியாளர் ஆவார். பிறப்பால் அர்ஜெண்டினாவைச்சேர்ந்த அவர்,
ஒரு மருத்துவராகவும் பயிற்சி பெற்றிருந்தார். 1954 இல் குவாதமாலாவில் தங்கியிருந்த சமயத்தில்தான் மார்க்சியத்தை கற்றறிருந்தார். சி.ஐ.ஏ மற்றும் அதன் கூலிப்படையினர் அந்நாட்டு அரசுக்கு எதிராக இராணுவ சதியை மேற்கொண்ட சமயத்தில் அதனைப்பாதுகாத்திட வும், அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு எதிராகவும் ஆயுதமேந்தினார். பின்னர் அங்கிருந்து மெக்சிக்கோவிற்கு தப்பிச்சென்ற அவர் பிடல் கேஸ்ட்ரோவைச்சந்திக்கிறார். அதன்பின், கியூபாவின் புரட்சிக்கு தன் வாழ்நாளை அர்ப்பணித்திட முடிவு செய்து, கியூபாவின் படிஸ்டா சர்வாதிகார ஆட்சிக்கு எதிராக கொரில்லா யுத்தத்தைத் தொடங்கிட பிடல் கேஸ்ட்ரோவின் தலைமையில் சே மற்றும் 81 வீரர்கள் பயணமாகின்றனர்.1959 ஜனவரியில் கியூபா புரட்சி வெற்றி வாகை சூடுகிறது . புரட்சி அரசாங்கத்தில் நிலச்சீர்திருத்தம் – வங்கி – தொழில்துறை அமைச்சராக சே நியமிக்கப்பட்டு செயலாற்றுகிறார். அந்த சமயத்தில், ஐரோப்பா, ஆசியா, ஆப்ரிக்காக் கண்டங்களிலுள்ள நாடுகளில் அரசின் சார்பில் தூதரக அளவிலும், வர்த்தக ரீதியாகவும் பேச்சுவார்த்தைகள் மேற்கொள்கிறார். சோவியத் மற்றும் இதர சோசலிச நாடுகளுடன் நெருக்கமான கூட்டணி அமைத்துக்கொள்ள பன்முக அளவில் விவாதங்கள் நடத்தியிருக்கிறார். பல நாடுகளில் ஏகாதிபத்தியத்திற்கு எதிராக செயல்பட்டுவந்த புரட்சி முன்னணிகளுடன் ஒருங்கிணைந்து செயல்பட ரகசியமாகவும் தொடர்புகளை மேற்கொண்டிருந்தார். அவ்வாறு பொலிவியாவுக்கு ஒரு ரகசியப்பயணத்தை மேற்கொண்டு, அந்நாட்டு அரசுக்கு எதிராக ஆயுதமேந்திப் போராடும் சமயத்தில்தான் அதாவது, 1967 அக்டோபரில் இராணுவத்தினரால் கைதுசெய்யப்பட்டு பின்னர் சுட்டுக்கொல்லப்படுகிறார்.
புரட்சிகர பணிகளில் தன்னை முழுமையாக அர்ப்பணித்துக்கொண்ட சே யின் பங்களிப்புக்களை மதிப்பீடு செய்கையில் , அவை ஒன்று , சோசலிசத்தை மிகவும் ஒத்திசைவான முறையிலும் சீரான முறையிலும் கட்டியெழுப்புவதற்கான பாதையை தேந்தெடுப்பதற்காக இருக்கின்ற நிலைமைகளை ஆய்வு செய்தது. மற்றொன்று, கியூபாவில் நடைமுறைப்படுத்திய தன் அனுபவங்களின் மீதான அவருடைய பிரதிபலிப்புக்கள் பற்றியதாக இருக்கிறது.
சேயின் சிந்தனைகள் சிலவற்றைப்பற்றி கூறும் போது,
w மனிதனின் அகநிலை மற்றும் அவனுடைய / அவளுடைய பொருளியல் வெளிப்பாடு அவர்களின் உணர்வுப்பூர்வமான செயல்களுக்கேற்ப மேம்படுத்தப்படுகின்றன
w புரட்சிகர மாற்றத்திற்கு, தொன்மையான முதலாளித்துவ சமூகத்தை மாற்றியமைத்து ஒரு புதிய சமூகத்திற்குத்தேவையான கட்டமைப்பு மாற்றங்களை மேற்கொள்ளக்கூடிய விதத்தில் கொண்டுவரவேண்டும்
w மனிதன் தன்னைத்தானே வடிவமைத்துக்கொண்டு, ஒட்டுமொத்தத்தையும் வடிவமைக்கவேண்டும் –
1959 கியூபா புரட்சிக்குப்பிறகிலிருந்து 1965 இல் கியூபாவைவிட்டு சே வெளியேறும் வரை, காங்கோ மற்றும் பொலிவியா மற்றும், சர்வதேச அளவிலான திட்டங்களை நிறைவேற்றுவதற்காக, தனது சிந்தனைகள் ஏராளமானவற்றை எழுதி வெளியிட்டார். அதிலும் குறிப்பாக, மூன்றாம் உலகநாடுகளில் சோசலிசத்தின் கட்டுமானம் குறித்த கருத்துக்களையும் முடிவுகளையும் வெளிப்படுத்துவதனை குறியாகக்கொண்டிருந்தார்.சுரண்டலுக்கு எதிராகவும், அனைத்து விதமாக ஆதிக்கங்களுக்கு எதிராகவும் போராடுபவராக, மாற்றங்களை முன்னெடுத்துச் செல்லக்கூடியவராக இருந்த சேயின் பேச்சுக்கள் – எழுத்துக்கள் – கருத்துக்கள் பெரும்பாலும் சோசலிசத்திற்கு மாறிச்செல்லும் இடைக்காலத்தில், மனிதகுல விடுதலை மற்றும் உய்வு என்னும் நிலையை எய்துவதற்காக, மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கைகள், கணிப்புகள் மற்றும் செயல்பாடுகளை வறையறுத்துள்ளன. 1965 பிப்ரவரியில் ஆப்ரிக்காவிலுள்ள அல்ஜியர்ஸ் நாட்டில் நடைபெற்ற ஆப்ரிக்க -ஆசிய ஒருங்கமைப்பின் இரண்டாவது பொருளாதார கருத்தரங்கில் முதலாளித்துவத்துடன் அவருக்கிருந்த மோதலையும் தேசிய விடுதலைக்காக பல்வேறு நாடுகளில் நடக்கும் போராட்டங்களுக்கு சோசலிஸ்ட் நாடுகள் ஆதரவு அளிக்க வேண்டியதன் அவசியத்தையும் பேசினார். அதே ஆண்டில் ஏப்ரலிலிருந்து நவம்பர் வரை, சே காங்கோவில் நடைபெற்ற விடுதலைக்கான போராட்டத்தில் பங்கேற்றார். அங்கு அவர் காங்கோ நாட்குறிப்பு; காங்கோவில் நடைபெற்ற புரட்சி யுத்தத்தின் அத்தியாயங்கள் எனும் தலைப்பில் ஒரு நூலை எழுதினார். அதில், தனக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவங்களை பகிர்ந்திருந்தார். சே யினது கியூபாவில் சோசலிசமும் மானுடமும் மற்றும் மூன்று கண்டங்களுக்குச் செய்தி; இரண்டு, மூன்று, பல வியட்நாம்களை உருவாக்குவோம் ‘ ஆகிய இரண்டு வரைவுச்செய்திகள் இந்நூலில் தொகுக்கப்பட்டுள்ளது. அவற்றில் கூறப்பட்டுள்ளதைச் சற்றுச் சுருக்கமாகக் காணலாம்.
மூன்று கண்டங்களுக்கான செய்தி
1967 ஏப்ரல் 16 அன்று ஹவானாவில் ஆப்ரிக்கா – ஆசியா – லத்தின் அமெரிக்கா மக்களின் ஒருமைப்பாட்டு ஸ்தாபனம் எனும் அமைப்பின் சார்பாக வெளியிடப்பட்ட சேயின் செய்தியின் வரைவுதான் இந்த மூன்று கண்டங்களுக்கான செய்தியாகும்.
உலகப்போர் இல்லாமல் கழிந்த இந்த 21 ஆண்டுகளிலும் கூட உலகின் பல பகுதிகளில் வன்முறை நிகழ்வுகளுடனும், திடீர் மாற்றங்களுடனும், மிகவும் அதிக அளவில் மோதல்கள் நடந்திருப்பது போலவே தோன்றுகிறது. எனினும், இத்தகைய சமாதான காலத்தில் ஏற்பட்டுள்ள வறுமை, சீரழிவு, பல்வேறு துறைகளில் மனித குலத்தின் மீது சுரண்டல் அதிகரித்துக்கொண்டிருப்பது குறித்து ஆய்ந்திடாமலேயே அமைதிக்காக நாம் அனைவரும் போராடத்தயாராக இருக்கிறோம். இரண்டாம் உலகப்போரில் ஜப்பான் சரணடைந்ததற்குப்பிறகு பல்வேறு நாடுகளிலும், அந்தந்தப்பகுதியில் பல்வேறு மோதல்களும் ஏற்பட்டன. மதிப்பிழந்த ஐ.நா.கொடியின் கீழ், அமெரிக்காவின் இராணுவத்தின் கீழ், டஜன் கணக்கான நாடுகள் சேர்ந்து பலவித ஆயுதங்கள் – பாக்டீரியாவியல் – இரசாயனப்போர் ஆயுதங்கள் கொண்டு, கொரியா மீது போர் தொடுத்தது. இதனால், கொரியாவின் வட பகுதி மோசமான அழிவுக்கும், தென் பகுதி பீரங்கிப்படைதாக்குதலுக்கும் உள்ளானது. மறுபக்கத்தில், கொரிய இராணுவமும் அந்நாட்டு மக்களும், மக்கள் சீன படைகளுடனும், சோவியத் இராணுவத்தின் உபகரணங்களுடனும் மற்றும் அவர்களது அறிவுரைகளின்படியும் போராடினர்.வியட்நாமிலிருந்த தேசபக்த சக்திகள் அநேகமாக மூன்று ஏகாதிபத்திய நாடுகளான அமெரிக்கா -பிரான்ஸ் – ஜப்பானுக்கு எதிராக போராடின. 1954 இல் டியன் பியன் பூ வின் மோசமான தோல்விக்குப்பின்னர், வியட்நாமை இரண்டு தனித்தனி மண்டலங்களாகப்பிரித்து, ஜெனிவாவில் ஓர் ஒப்பந்தம் கையெழுத்தானது. அதன்படி வியட்நாமை யார் ஆள்வது என்பது தொடர்பாகவும், எப்படி இந்த நாட்டை ஒருங்கிணைப்பது என்பது தொடர்பாகவும் 18 மாத காலத்திற்குள் தேர்தல் நடத்தப்படவேண்டும் என்று அந்த ஒப்பந்தத்தில் கூறப்பட்டிருந்தது.
ஒப்பந்தத்தை தொடர்ந்துவந்த மாதங்களில், புரட்சிப்படையினரின் முகாமில் நம்பிக்கை ஒளி உயர்ந்திருந்தது. அமெரிக்கா தனக்கு தலையாட்டுபவர்களை ஆட்சியில் அமர்த்தக்கூடிய நிலை வரும்வரை, ஒப்பந்தத்தில் கூறியுள்ளபடி தேர்தல் நடைபெறாது என்பதை தேசபக்தர்கள் உணர்ந்தனர். இதற்கிடையே தெற்கு வியட்நாமில் போராட்டம் வெடித்தது. இச்சமயத்தில் அமெரிக்கா ஐந்து லட்சம் சிப்பாய்களை வியட்நாமிற்கு அனுப்பி சண்டையிட்டு வந்தது. அமெரிக்காவானது, ஒருபக்கம் தென் வியட்நாமில் சண்டையை நிறுத்துவதற்கு முயற்சியை மேற்கொண்டுவந்தது. மற்றொருபக்கம் வான்படைகளுடன் சேர்ந்துகொண்டு வட வியட்நாமினை அழித்தொழிக்கும் நோக்கத்துடன் தாக்குதல்களையும் மேற்கொண்டு வந்தன. சோசலிச நாடுகள் யுத்த தளவாடங்களைக் கொடுத்து உதவியதன் காரணமாக, வியட்நாமின் பீரங்கி எதிர்ப்புப் படையானது 1700 க்கும் மேற்பட்ட அமெரிக்காவின் விமானங்களைச் சுட்டு வீழ்த்தின. இச்சமயத்தில் வருத்தத்துடன் கூற வேண்டிய யதார்த்த நிலையென்னவென்றால், அமெரிக்கத்தொழில் நுட்பங்களுடன் ஏவப்பட்ட அனைத்து வகை தாக்குதல்களையும் எதிர்த்து வியட்நாம் தன்னந்தனியே போராடியது என்பதுதான்.போரில், வியட்நாம் மக்கள் தனித்து விடப்பட்ட நிலைமையை ஆய்வு செய்யும்போது, மனித குலத்தின் நியாயமற்ற தருணத்தைக்கண்டு வேதனையுடன்தான் கடந்திருக்கிறோம். இது தொடர்பாக சரியான வரையறைக்கு வராது, வியட்நாமை சோசலிச உலகத்தின் மீற முடியாத ஓர் அங்கம் என்று பிற சோசலிச நாடுகள் கருதத்தயங்கியதுடன், உலக அளவில் நடைபெறும் ஓரு யுத்தத்தின் இடர்களை ஏற்றுக்கொள்வதிலிருந்து, நழுவிச்சென்று ஓடியவர்களும் குற்றவாளிகள்தான். அனைத்து ஏகாதிபத்திய நாடுகளும் தங்கள் வர்த்தகத்தை ஏகபோகமாகக்கொண்டு செல்வதற்கு அவை கொலை செய்வதை மிகவும் செளகரியமான வர்த்தக முறையாகக் கருதுகின்றன. வியட்நாமின் அசாதாரண வீரர்களிடம் பாதுகாப்பு ஆயுதங்கள் எப்போதும் போதுமான அளவிற்கு இருந்ததில்லை. அவர்களிடம் நாட்டின் மீதான அன்பு, சமூகத்தின் மீதான நேசம், மற்றும் துணிச்சல் மட்டுமே இருந்தது. இந்தச்சமயத்தில், உலகில் சுரண்டப்படும் ஆசிய -ஆப்ரிக்கா -தென் அமெரிக்க கண்டங்களைச்சேர்ந்த மக்களாகிய நாம், வியட்நாம் மீது கவனத்தைச் செலுத்தி, தங்களுக்கான படிப்பினையைக் கற்றுக்கொள்ள வேண்டும்.
ஏகாதிபத்தியங்கள், யுத்தத்தை மேற்கொள்வோம் என மிரட்டி, மனித குலத்தைப்பயமுறுத்தி பணியவைக்க முயற்சிப்பதால், இதற்கு புத்திசாலித்தனமான எதிர்வினை என்பது யுத்தத்திற்கு அஞ்சாது இருப்பதேயாகும். உலக நிலைமை மிகவும் சிக்கலாக இருக்கிறது. விடுதலைக்கான போராட்டம் புரதான ஐரோப்பாவின் சில நாடுகளில் இன்னமும் மேற்கொள்ளப்படவில்லை. காரணம், அவை முதலாளித்துவத்தின் முரண்பாடுகளை உணர முடியாத அளவிற்குத்தான் வளர்ச்சியடைந்திருக்கின்றன. அவர்களுடைய பிரச்சனைகளும், பொருளாதார ரீதியாக பின் தங்கியுள்ள நமது பிரச்சனைகளும் வேறுவேறு.ஏகாதிபத்தியத்தின் சுரண்டல், தென்அமெரிக்கா, ஆசியா மற்றும் ஆப்ரிக்கா நாடுகளையே உள்ளடக்கியிருக்கிறது. ஐ.நா மன்றமும் திறனற்றதாக இருக்கிறது. அனைத்து தென் அமெரிக்க நாடுகளின் இராணுவமும் தங்கள் சொந்த மக்களையே நசுக்குவதற்குத்தயாராக இருக்கின்றன. உண்மையில், சர்வதேச அளவில் குற்றம் மற்றும் சதிவேலைகள் திட்டமிடப்பட்டிருக்கின்றன. ஆசியாவிலுள்ள, பல்வேறு ஐரோப்பிய காலனி நாடுகளில் ஆட்சியாளர்களுக்கு எதிராக நடைபெற்ற விடுதலைப்போராட்டங்கள் கிட்டத்தட்ட அவற்றின் பரிணாம வளர்ச்சியில் முற்போக்கு அரசாங்கங்கள் அமைவதற்கு இட்டுச்சென்றுள்ளன. தென்அமெரிக்கா -ஆசிய நாடுகளில் நவீன காலனிய ஆட்சியாளர்களைத்தூக்கி எறிவதற்கான போராட்டமும், பொருளாதார விஷயங்களில் புதிய நடவடிக்கைகளை ஜப்பான் மூலமாகவும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
ஏகாதிபத்திய வாதிகள், தென்கொரியா, ஜப்பான், தைவான், தென் வியட்நாம் மற்றும் தாய்லாந்து மூலமாக சீனாவைச்சுற்றி வளைத்திருக்கின்றனர். மக்கள் சீனம் இராணுவ ரீதியாகச் சுற்றி வளைக்கப்பட்டிருப்பது மற்றும் இத்தகைய பெரிய சந்தைகளில் ஊடுருவ முயற்சித்திருப்பது ஆகிய இரட்டை நிலைமைகளும் கவனத்தில் எடுத்துக்கொள்ளப்படவேண்டியவைகளாகும். மத்தியக்கிழக்கு நாடுகள், பூகோள ரீதியாக ஆசியக்கண்டத்தை சேர்ந்தவை என்ற போதிலும், அவைகள் தங்களுக்குள்ளாகவே சொந்த முரண்பாடுகளைப் பெற்றிருக்கின்றன. ஆப்ரிக்கா, அநேகமாக நவீன காலனியாதிக்கப் படையெடுப்புக்கு நல்லதொரு நிலப்பகுதியாகவே இருந்திருக்கிறது. ஆப்ரிக்காவின் சமூக மற்றும் அரசியல் பரிணாம வளர்ச்சியை ஆராயும் போது அந்தக்கண்டத்தில் புரட்சியை எதிர்பார்க்க முடியாது. சுருக்கமாகக்கூறின், மேற்கூறப்பட்ட மூன்று கண்டங்களிலும் எகாதிபத்திய வாதிகளால், சுரண்டப்படும் வடிவமும், அளவும் கூட அநேகமாக சுரண்டுபவர்களுக்கும் சுரண்டப்படுபவர்களுக்கும் இடையே ஒரே மாதிரிதான் இருக்கிறது.
வியட்நாம் பாதையே மக்களால் பின்பற்றப்படவேண்டிய பாதையாகும். இதுவே நம் தென் அமெரிக்க நாடுகளில் பின்பற்றப்படவேண்டிய பாதையாகும். இதில் உள்ள அனுகூலம் என்ன வெனில், ஆயுதக்குழுக்கள் தங்களுக்குள் ஒருங்கிணைப்புக் கவுன்சில்களை ஏற்படுத்திக்கொண்டு, அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் கூலிப்படையினரைச் சங்கடத்துக்குள்ளாக்கிட முடியும், இதன் மூலம் தங்கள் புரட்சிகரமான வெற்றியை விரைவுபடுத்திட முடியும். ஏகாதிபத்தியம் ஓர் உலக அமைப்பு முறை என்பதையும், முதலாளித்துவத்தின் கடைசிக்கட்டம் என்பதையும் , அதனை உலக அளவில் மோதல்களை உருவாக்குவதன் மூலம் தோற்கடிக்கப்படவேண்டும் என்பதை எப்போதும் நினைவில் நிறுத்திக்கொள்ள வேண்டும்.
கியூபாவில் சோசலிசமும் மானுடமும்
1953 ஜூலை 26 ந் தேதி கியூபப்புரட்சி நடவடிக்கைகள் தொடங்கி,1959 ஜனவரியில் நிறைவடைந்தன. அங்கே, கொரில்லா முன்னணிப்படை போராட்ட முறையானது, இரு பிரத்தியோகமான சூழல்களில் வளர்த்தெடுக்கப்பட்டது. அதாவத, 1. கொரில்லாக்கள் மக்களை அணிதிரட்டும் சக்தியாக, புரட்சிகர உணர்வை ஊட்டக்கக்கூடிய பொறியாக, ஆர்வத்தை ஏற்படுத்தக்கூடியவர்களாக இருந்தனர் வெற்றிக்குத்தேவையான அகநிலை நிலைமைகளை உருவாக்கும், வினையூக்கி ஏஜண்டுகளாகச் செயல்பட்டதாகும். இந்தக்காலத்தில் நடைபெற்ற போராட்டங்களில், போராளிகள் அனைவரும், அதிகளவில் இருந்த ஆபத்துக்களை எதிர்கொண்டு, வேறெந்த சிந்தனையுமின்றி, கடைமையாற்றினார்கள். போராளிகளின் அணுகு முறையானது, போராளிகள் புரட்சி லட்சியத்திற்காக முழுமையான அர்ப்பணிப்பு உணர்வுடன் கூடிய செயல்பாட்டினை நம் வரலாற்றின் அனைத்துத் தருணங்களிலும் திரும்பத்திரும்ப வழங்கிட வேண்டும். அடுத்து, தினசரி வாழ்க்கையில் இத்தகைய வீரதீர மனப்பாங்கை நிலைத்திருக்கச்செய்வதற்கான வழிமுறையைக்காண வேண்டியது, கோட்பாட்டு நிலையில், நமது அடிப்படைக் கடமைகளில் ஒன்றாகும்.
பிடல் காஸ்ட்ரோ 1959 இல் பிரதமராக பதவியேற்கிறார். புரட்சிக்குப்பிறகான காலத்தில் அவர் மக்களின் நம்பிக்கையைப்பெற, மக்களின் விருப்பங்கள், நாட்டங்களின் முழுப்பொருளை விளங்கிக்கொண்டதும், வாக்குறுதிகளை நிறைவேற்ற மேற்கொண்ட முறையான போராட்டங்களும்தான் துல்லியமான காரணங்கள். பிடலுக்கும் மக்களுக்குமான உறவு என்பது , இரு இசைக்கருவிகள் ஒன்றோடொன்று உரையாடி, அவற்றின் அதிர்வுகள் இணைந்து செயல்பட்டு புதிய ஒலிகளை உருவாக்குவது போன்றது . வெகு மக்களுடனான உறவு மேலும் சிறப்பாக கட்டமைக்கப்பட, தொடர்புகள் தேவையாகும்.
கடந்த காலத்தின் எச்சங்கள், நிகழ்காலத்தில் ஒருவரது தன்னுணர்வுக்கு கடத்திவரப்படும். அவற்றை அழிக்க தொடர்ச்சியான உழைப்புத்தேவை. இதற்கான செயல்முறை இருபக்கங்களைக்கொண்டது. ஒருபக்கம், சமூகம் நேரடியாக மற்றும் மறைமுகமான கல்வி மூலம் செயல்படும். மறுபுறம் தனிநபர் தனது உளமாற சுய – கல்வி செயல் முறையில், தன்னை ஈடுபடுத்திக்கொள்வார். உருவாகிவரும் புதிய சமுதாயமானது, கடந்த காலத்துடன் கடுமையாக போட்டியிட்டாக வேண்டும். சரக்கு உற்பத்திதான் முதலாளித்துவ சமுதாயத்தின் உயிர்ச்சொல். அது இருக்கும்வரை, அதன் தாக்கம் உற்பத்தி அமைப்பிலும் அதன் தொடர்ச்சியாக தன்னுணர்விலும் இருந்துகொண்டுதான் இருக்கும். பொதுவுடமையை கட்டியெழுப்பும் நாம் , புதிய பொருள்சார் அடித்தளத்தை உருவாக்கவும் ,புதிய மனிதனை உருவாக்குவதும் இன்றியமையாதது. அதனால்தான் ,வெகுமக்களை அணிதிரட்ட சரியான கருவியைத் தேர்ந்தெடுப்பது அவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்ததாகிறது. இந்தக்கருவியின் பண்பு ,நன்னெறி சார்ந்ததாக இருக்க வேண்டும். அதே நேரத்தில் ,பொருள் சார் ஊக்கத்தின் ,குறிப்பாக சமூகப்பண்புடன் கூடிய, சரியான அளவில் பயன்பாடும் புறக்கணிக்கப்படக்கூடாது.
புரட்சி அமைப்பாக்கப்படுவது இன்னமும் எய்தப்படவில்லை. நாம் ஒரு புதிய அமைப்புக்காக ஆய்வு செய்து கொண்டிருக்கிறோம். அந்த அமைப்பு, அரசாங்கத்திற்கும், சமூகத்திற்கும் இடையே சோசலிசத்தை கட்டியெழுப்புவதற்கு ஏதுவான முறையில் இருக்கும். சோசலிசக்காட்டுமானத்திற்கு புதிய மனிதனின் கல்வி உருவாக்கமும் மற்றும் தொழில் நுட்ப வளர்ச்சியும் இரு தூண்களாகும். இவ்விரண்டு தூண்கள் தொடர்பாக இன்னும் ஆய்வு செய்ய வேண்டியிருக்கிறது.
தனிநபர் உணர்வையும் கூட்டுச்செயல்பாடுகளையும் ஆழப்படுத்தவேண்டியது இன்னமும் அவசியமாகும். இதனை அனைத்து மேலாண்மை மற்றும் உற்பத்திக்கட்டமைப்புகளிலும் மேற்கொள்ள வேண்டியிருக்கிறது. உற்பத்திச்சாதனங்கள் சமூகத்திற்கே சொந்தம். எந்திரம் கடமையாற்றும் இடத்தில் மட்டுமே இருக்கும். ஒவ்வொருவருக்கும் தன் உழைப்புச்சக்தியை உழைப்பு என்ற வடிவத்தில் எவரொருவருக்கும் சரண் செய்திடும் விதத்தில் இருப்பதாக இனிமேல் அமைந்திடாது. உழைப்பு என்பது இனிமேல் பொதுவாழ்க்கையில் தன் பங்களிப்பு என்கிற விதத்தில் அமைந்திருக்கும்.
ஒரு தனி நபரை மிகவும் உளப்பூர்வமாக செல்வந்தனாகவும் ,அதிக அளவில் பொறுப்புணர்வு மிக்கவனாகவும் மாற்றி முழுமையான தனிநபராக உணர வைப்பதே முக்கியமாகும். புரட்சி மக்களால் தான் மேற்கொள்ளப்படுகிறது. ஆனாலும் ,தனிநபர்கள் புரட்சிகர உணர்வை நாள்தோறும் கூர்மைப்படுத்திக்கொண்டே இருக்க வேண்டும். உண்மையான புரட்சியாளர் அன்பின் மிகுதியால்தான் வழிநடத்தப்படுகிறார். ஒரு நேர்மையான புரட்சியாளரை இத்தகு குணம் இன்றி பார்க்கமுடியாது. தொழிலாளி வர்க்க சர்வதேசியம் என்பது ஒரு கடமை என்று கூறக்கூடிய அதே சமயத்தில், அது ஒரு புரட்சிகர அவசியமுமாகும். இந்தத்திசைவழியில்தான் நாம் மக்களை கற்பித்திட வேண்டும்.