பொ.வேல்சாமி
இருபதாம் நூற்றாண்டின் தொடக்க காலங்களில் ஆங்கிலம் கற்ற நடுத்தர வர்க்கம் இந்தியா முழுமையும் உருவாகிவிட்டது. ஆங்கிலத்தின் வழியாக உலகின் மற்ற நாடுகளில் நடக்கும் அரசியல், பொருளாதாரம், கலாச்சாரம், கல்வி, விஞ்ஞானம் போன்ற நவீன வாழ்வின் மாற்றங்களைப் படித்தறிந்தவர்களான அந்த நடுத்தர வர்க்கத்தினர் தங்கள் நாட்டு மக்கள் மத்தியிலும் அத்தகைய நவீன மாற்றங்களை உருவாக்க வேண்டும் என்ற எழுச்சியைப் பெற்றனர். அதன் விளைவாக இந்தியா சுதந்திரம் பெற வேண்டும் என்ற எழுச்சி ஏற்பட்டது. அதே நேரத்தில் ஆங்கில ஆட்சியாளர்களும் அவர்களுக்கு ஆதரவாகப் பேசும் படிப்பாளிகளும் சுதந்திரம் பெறுவதற்கான தகுதியை இந்தியர்கள் பெறவில்லை. இந்தியர்களுக்கு எப்படி ஆட்சி செய்வது என்ற கலை தெரியாது. கல்வி, கலாச்சாரம் போன்றவற்றில் இவர்களுக்கு போதுமான அறிவு இல்லை. விழிப்புணர்ச்சியும் இல்லை. எனவே இவர்கள் இன்னும் பல காலம் அடிமைகளாக இருப்பதற்குதான் தகுதியுடையவர்களே தவிர சுதந்திர மக்களாகத் தங்களை தகவமைத்துக் கொள்ளும் சக்தியற்றவர்கள் என்று பேசினார்கள். அந்நியர்களின் இத்தகைய ஏளனப் பேச்சுகளை எதிர்கொண்டதன் விளைவாக அந்தக் கருத்துக்களை மறுப்பதற்கு இந்திய கல்வியாளர்களில் பலர் செயல்படத் தொடங்கினர்.
இந்தியாவின் சிந்தனையாளர்கள் அரசியல் தளத்திலும் கலாச்சார தளத்திலும் செயல்பட தொடங்கிய காலத்தில் உண்மையில் இவர்கள் பின்தங்கியவர்களாத்தான் இருந்தார்கள். சுமார் 800 ஆண்டுகள் அடிமைகளாக வாழ்ந்து பழக்கப்பட்டவர்களுக்கு சுதந்திர சிந்தனை எப்படி ஏற்பட முடியும் என்ற கேள்வியும் இந்தியர்கள் முன் நின்றது.
அதற்கு பதில் சொல்வதற்கு, மிக முக்கியமான செயல் என்பது பத்திரிக்கைகள் நடத்துவது. அந்தப் பத்திரிக்கைகளில் தங்களுடைய பாரம்பரிய வரலாற்றை புகழ் மிக்கதாக எழுதிக் காட்டுவது. அதற்காக கடந்த காலங்களில் நம் நாட்டில் நிகழ்ந்து வந்து, அண்மையில் மறைந்து போகும் கதியில் இருந்த கலைச் செல்வங்களை மீட்டெடுப்பது, பாரம்பரியமான நம்முடைய அறிவுப் பாரம்பரியத்தை உலகிற்குப் பொருத்தமான வழியில் எடுத்துச் சொல்லுவது, பல்வேறு கலைகளிலும் அறிவியல் வளர்ச்சியிலும் தங்களுடைய முன்னோர்கள் செய்து பெற்ற வளர்ச்சியை எடுத்துக் காட்டுவது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு, அதன் வழியாகத் தங்களுக்கோர் அடையாளம் இருக்கின்றது அந்த அடையாளம் அந்நிய ஆட்சியாளர்களுக்கு முன்பிருந்தே உலகம் தெரிந்து கொண்ட விசயம்தான் என்று எழுதவும் பேசவும் தொடங்கினர். அப்படியான பல்வேறு செயல்களின் ஒரு விளைவாக தமிழ்நாட்டில் நவீன பத்திரிக்கைகள் நடத்துவது மட்டுல்லாது சங்க இலக்கியங்கள், பழந்தமிழ் இலக்கண நூல்கள் போன்றவற்றை ஏட்டுச்சுவடியிலிருந்து அச்சுக்கு கொண்டுவந்தனர். சிந்தனைத் தளத்தில் சைவ சித்தாந்தத்தை தமிழரின் தத்துவமாக காண்பிப்பதில் முனைப்புக் கொண்டு சித்தாந்த நூல்களை நல்ல விளக்கங்களுடன் பதிப்பிக்கத் தொடங்கினர்.
19ம் நூற்றாண்டு முடிவடைவதற்கு முன்பே பதினான்கு சைவ சித்தாந்த நூல்களும் அந்த நூல்களுக்கு எழுதப்பட்ட பழமையான உரைகளுடன் அச்சில் வெளிவந்துவிட்டன. சென்ற மாத புத்தகம் பேசுது கட்டுரையில் இந்தச் செய்திகளைக் கொடுத்துள்ளேன். ஆனால் சிவஞான முனிவரால் 18ம் நூற்றாண்டில் தமிழில் எழுதப்பட்ட ஒரே பேருரையான சிவஞானபோதப் பேருரையை மட்டும் எவரும் பார்க்க முடியாத நிலை இருந்தது. இந்திய தத்துவ தரிசனங்களுடன் சைவ சித்தாந்த கொள்கைகளை ஒப்பி்ட்டு விளக்கியும் முரண்பாடான பகுதிகள் என்று கருதப்பட்ட செய்திகளை தன்னுடைய தர்க்கப் புலமையால் சரி என நிறுவி எழுதப்பட்டதும் தமிழிலும் வடமொழியிலும் சமய தத்துவத் துறையில் அன்றுவரை வழக்கத்தில் இருந்த பலவகையான நூல்களை மேற்கோள்காட்டி தன் கருத்துக்களை சிவஞான முனிவர் நிறுவியதால் அந்த நூல் அன்றைய சமய தத்துவ விவாதத்தில் புகழ்பெற்று நின்றது. ஐரோப்பிய வரலாற்றின் இடைக்காலங்களில் பைபிளை கிரேக்கம் இலத்தீன் தவிர மற்ற மொழிகளில் மொழிபெயர்க்கக் கூடாது என்று போப்பாண்டவர் தடுத்தது போல சில சைவ மடங்களின் தலைவர்கள் இந்த நூலை தடை செய்து வைத்திருந்தனர். இத்தகைய சூழ்நிலையில் இலங்கையைச் சேர்ந்த ‘சுவாமிநாத பண்டிதர்’ என்ற புகழ்பெற்ற சைவ அறிஞர் அரும்பாடுபட்டு இந்நூலின் ஏட்டுச்சுவடிகளை அச்சிடுவதற்காக தேடி அலைந்தார். அதற்காக மிகப் பெருந்தொகையை செலவிடவும் தயாராக இருந்தார். (1)
ஆனால் இவர் வாங்கி அச்சிடுவதற்கு ஆசைப்பட்ட அந்தச் சுவடியில் பல இடைச்செருகல்களும் விடுபடல்களும் நிறைந்திருந்திருந்தாக நண்பர்கள் பலர் கூறியதால் அந்தச் சுவடியை வாங்குவதைத் தவிர்த்து விட்டார்.(2) ஆனாலும் தமிழ்நாட்டிலும் இலங்கையிலும் பல இடங்களிலும் முயற்சி செய்து சிவஞானபோத பேருரையின் சில பகுதிகளை மட்டும் பெற்றார். முழுமையாகக் கிடைக்கவில்லை. கிடைத்தவரைக்கும் அச்சில் தந்துவிட வேண்டும் என்ற ஆவலில் கிடைக்காத பகுதிகளான முதல் சூத்திரத்திலிருந்து ஐந்தாம் சூத்திரம் வரைக்கும் சிவஞான போத சிற்றுரையை இணைத்து கிடைத்துள்ள ஆறாம் சூத்திரத்திலிருந்து பனிரெண்டாம் சூத்திரம் வரை அச்சிட்டு கி.பி.1906 (பராபவ வருடம்) ஆனிமாதம் வெளியிட்டார். அந்தக் காலத்திலேயே அடுத்த இரண்டு மாதங்களில் சுப்ரமணிய பி்ள்ளை என்ற ஒருவர் இந்த நூலை அப்படியே காப்பியடித்து வெளியிட்டார்.(3)
சிவஞானபோதப் பேரூரை 1921 இல் தான் முழுமையாக அச்சில் வெளிவருகிறது. அந்த நூல் வெளிவந்ததைப் பற்றி அக்காலத்தில் ஒருவகையான கதை சொல்லப்பட்டது. ‘சிவஞான முனிவர்’ திருவாவடுதுறை ஆதீனத்தைச் சேர்ந்தவராக இருந்ததால் அவரால் எழுதப்பட்ட சிவஞானபோதப்பேருரையின் ஏட்டுச்சுவடிகள் திருவாவடுதுறை ஆதீனத்தில் பாதுகாக்கப்பட்டு வந்தது. ஆதீனம் சார்ந்தவர்கள் தவிர மற்றவர்கள் யாரும் இந்நூலை படிக்கக்கூடாது என்ற தடையும் இருந்ததாகத் தெரிகின்றது. அதே நேரத்தில் அக்காலத்தில் வாழ்ந்த சைவ அறிஞர்களில் பலர் இந்த நூலை எப்படியாவது படித்துவிட வேண்டும் என்று ஆவலுடன் இருந்துள்ளனர். இத்தகையவர்களின் வேண்டுகோளை ஏற்று ‘சூரியனார் கோவில்’ ஆதீன தலைவர் அந்த நூலை அச்சில் கொண்டுவர முயன்று வந்திருக்கிறார். அதற்காக திருவாவடுதுறை ஆதீன தலைவரிடம் தான் அந்த ஏட்டுச்சுவடியை படித்துவிட்டு தருவதாக வேண்டி கேட்டுக் கொண்டார். திருவாவடுதுறை தலைவரும் அந்த வேண்டுகோளை ஏற்று அந்த ஏட்டுச்சுவடியை தந்துள்ளார். சூரியனார் ஆதீன தலைவர் பல மாணவர்களை வைத்து அந்தச் சுவடியை தனித்தனியாகப் பிரித்து பிரதி எடுக்க ஆரம்பித்துவிட்டார். இந்தச் செய்தி எப்படியோ திருவாவடுதுறை தலைவருக்குத் தெரிந்து விட்டது. அதனால் கொதிப்படைந்த அவர் மாணவர்கள் எழுதிக் கொண்டிருந்த ஏடுகளைப் பிடுங்கிக் கொண்டு வந்துவிட்டதாகச் சொல்கிறார்கள். இருப்பினும் 99 விழுக்காட்டுப் பகுதிகளை சூரியனார் ஆதீனத்தினர் பிரதி செய்து விட்டனர். ஆறாம் சூத்திரத்தின் இறுதியில் ஒரு சிறு பகுதி மட்டும் விடுபட்டு போய் விட்டது. அந்த நூலை 1921 இல் அச்சிட்டு வெளியிட்டு விட்டார்கள்.(4) இந்தச் செய்தியை சைவ சித்தாந்த அறிஞர் சேக்கிழார் அடிப்பொடி தி.ந.ராமசந்திரன் ஐயா அவர்கள் தெரிவித்தார். ஆறாம்சூத்திரத்தில் விடுபட்டுபோன அந்தப் பகுதி இன்றுவரை நிறைவு செய்யப்படாமலேயே இருக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது.
வேதம் பசு, அந்தப் பசுவின் பால் ஆகமம் அதிலிருந்து உருவான நெய்தான் சைவ சித்தாந்தம் என்பதை சைவ சித்தாந்திகள் தங்கள் கொள்கையாகப் பாரம்பரியமாகக் கூறி வருகின்றனர். அதற்கு ஏற்றாற்போல சைவ சித்தாந்தத்தைப் பேசுகின்ற அடிப்படையான கலைச் சொற்கள் பெரும்பான்மையும் வடமொழிச் சொற்களாகத்தான் இருக்கின்றன. பதி, பசு, பாசம், அதீதம், கேவலம், சுத்தம், அத்துவாக்கள், கணபங்கவாதம், சமவாயம் இப்படியான பல சொற்கள் சைவ சித்தாந்ததின் அடிப்படைக் கொள்கைகளைச் சொல்வனவாக உள்ளன. தமிழ் மட்டும் அறிந்தவர்கள் சைவ சித்தாந்தத்தை படித்துப் புரிந்து கொள்வது என்பது முற்றிலும் இயலாத காரியம். சைவ மடங்களில் மட்டும் நடைமுறையில் இருந்த சித்தாந்த கல்வி இருபதாம் நூற்றாண்டின் ஆரம்ப காலங்களில் பொதுவெளிக்கு கொண்டுவரப்பட்டது. இத்தகைய புதிய சூழ்நிலையில் சைவ சித்தாந்த தத்துவத்தை பெரும்பாலனவர்கள் புரிந்து கொள்வதற்கு ஏதுவாக அந்தக் கலைச் சொற்களை எளிய தமிழில் மாற்ற வேண்டிய வரலாற்றுத் தேவை தமிழகத்திலும் இலங்கையிலும் உருவானது. எனவே சிவஞானபோதம், சிவஞானசித்தியார், சிவப்பிரகாசம் போன்ற சித்தாந்த நூல்களையும் இந்நூல்களுக்கு எழுதப்பட்டிருந்த புகழ்பெற்ற உரைகளையும் விளக்கங்களுடன் வெளியிடும் முயற்சியை சைவ சித்தாந்திகள் மேற்கொண்டனர். அவர்களுள் சிறப்பாக குறிப்பிடத்தக்கவர்களுள் தமிழகத்தைச் சேர்ந்த பொ.முத்தையா பிள்ளை (5) ஆவர். சிவஞான முனிவரால் ‘சிவஞானசித்தியார் சுபக்கத்திற்கு’ எழுதபட்ட உரைக்கு 1914 இல் பொ.முத்தையா பிள்ளை சில விளக்கங்களைக் கொடுத்து வெளியிடுகின்றார். பின்னர் அந்த விளக்கங்களும் போதுமானதாக இல்லை என்று அவர் கருதியதால், 1926 இல் முதல்பதிப்பை விட 173 பக்கங்கள் கூடுதலாக தன்னால் எழுதப்பட்ட விளக்கங்களுடன் இரண்டாம் பதிப்பை வெளியிடுகின்றார்.(6) இதேபோன்று 1918 இல் சிவஞானபோதச் சிற்றுரையை பலரும் எளிதில் புரிந்து கொள்ளவேண்டும் என்ற கருத்தில் ஒரு எளிமையான விளக்கத்தை முதன்முதலில் எழுதி வெளியிடுகின்றார்.(7)
இதே காலக்கட்டத்தையொட்டி இலங்கையில் புகழ்பெற்ற வழக்கறிஞராகவும் நீதிபதியாகவும் பணியாற்றிய ‘திருவிளங்கம்’ என்ற சைவ அறிஞர் சிவஞான சித்தியார் சுபக்கத்திற்கும் சிவப்பிரகாசத்திற்கும் புத்துரை எழுதி வெளியிடுகின்றார்.(8) (8A) இவர் எழுதிய இந்த நூல்களுக்கான புத்துரைகள் 21ம் நூற்றாண்டாகிய இன்றைய காலக்கட்டத்திலும் சைவ உலகில் புகழ்பெற்றதாக அனைவராலும் படிக்கப்பட்டு வருகின்றது. 1931 இல் இலங்கையில் கிறிஸ்தவ பாதிரியாராக இருந்த முருகேசு போதகர் என்பவர் சிவஞான சித்தியாரை உரைநடையில் எழுதுகின்றார். இந்த உரைநடை நூல் இன்றைய காலத்திலும் கூட சைவர்களால் போற்றி வாசிக்கப்படுகிறது. (9)
இந்தக் காலகட்டத்தையடுத்து திருநெல்வேலி சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகமும் சைவ சித்தாந்த மகா சமாஜமும் (இன்றைய காலத்தில் சைவ சித்தாந்த பெருமன்றம் என்று அழைக்கப்படுகிறது) சைவ சித்தாந்த நூல்களை திருத்தப் பதிப்புகளாக வெளியிட்டதைக் குறிப்பிட வேண்டும். இருப்பினும் அந்நூல்கள் முழுமையாகத் திருத்தம் பெறவில்லை என்பதை 1942 இல் தருமபுரம் ஆதீனத்தால் வெளியிடப்பட்ட(10) ‘மெய்கண்ட சாத்திரம்’ (மூலம் மட்டும்) நூலில் ம.பாலசுப்பிரமணியன் முதலியார் (சைவ சித்தாந்த மகா சமாஜத்தின் செயலாளர்) எழுதியுள்ள முன்னுரையால் நாம் புரிந்து கொள்கிறோம்.(11) இதில் இன்னும் சுவையான விசயம் இதே புத்தகத்தை சுமார் 15 ஆண்டுகள் கழித்து மறுபதிப்பாக அதே தருமபுரம் ஆதீனம் வெளியிட்ட போது மீண்டும் பழைய பிழைகள் பல நிறைந்த பதிப்பாக இருந்தது.
திருவாவடுதுறை ஆதீனத்தார் சைவ சித்தாந்த நூல்கள் அனைத்துக்கும் எழுதப்பட்ட பல்வேறு பழைய உரைகளுடன் சுமார் 30 ஆண்டுகளுக்கு மேல் (1950 தொடக்கம் 1970 ) செம்மையான பதிப்புகளாக வெளியிட்டு இலவசமாக வழங்கி வந்தனர். இந்த நூல்களில் பெரும்பாலனவற்றை பதிப்பித்த பதிப்பாசிரியர் த.ச.மீனாட்சி சுந்தரம் பிள்ளை என்ற சைவ அறிஞர் ஆவார். இவருடைய சைவ சித்தாந்த நூற்பதிப்புகள் அனைத்தும் விரிவான முன்னுரைகளைப் பெற்றிருக்கும். அந்த முன்னுரைகள் உ.வே.சா தன்னுடைய பதிப்புகளுக்கு எழுதியுள்ள முன்னுரைகள் போன்று சிறப்பாக அமைந்திருக்கும். ஒரு எடுத்துக்காட்டாக ‘சிவஞான சித்தியார் பரபக்கத்திற்கு’ இவர் எழுதியுள்ள 180 பக்கங்களை கொண்ட முன்னுரையுடன் கூடிய விளக்கங்களையும் குறிப்பிடலாம்.(12) இதே ஆதீனம் மற்றொரு சைவ அறிஞர் தே.ஆ.ஸ்ரீநிவாஸாசாரியாரைக் கொண்டு சைவ சித்தாந்த நூல்களில் பலவற்றை உரைநடையில் சிறப்பான விளக்கம் கொடுத்து வெளியிட்டுள்ளது.(13) த.ச.மீனாட்சிசுந்தரம் பிள்ளை, தே.ஆ.ஸ்ரீநிவாஸாசாரியர் போன்றவர்களின் மிக அருமையான, சைவ சித்தாந்த தத்துவத்தை விளக்குவதில் சிறப்பான நூல்கள் இன்றைய காலத்தில் பெரும்பாலும் கிடைப்பதில்லை என்பது சைவ உலகத்திற்கு மிகப் பெரிய இழப்பாகும். இதே காலகட்டத்தில் சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தால் வெளியிடப்பட்ட சிவஞானபோத சிற்றுரை, சிவப்பிரகாசம் (மதுரை சிவப்பிரகாசர் உரை), இருபா இருபது, உண்மை விளக்கம் ஆகிய நூல்களுக்கு சைவ அறிஞர் ப.இராமநாதபிள்ளை எழுதியுள்ள விளக்கங்கள் மிகவும் சிறப்பானவை.(14)(14A) சைவ சித்தாந்தம் பற்றிய அறிமுகம் இல்லாதவர்கள் கூட அந்த நூல்களைப் படித்துப் புரிந்துகொள்ளவதற்கு இவருடைய விளக்கங்கள் மிகச் சிறப்பாக துணைபுரிவனவாகும். 21ம் நூற்றாண்டில் சைவ சித்தாந்த நூல்களுக்கு விளக்கம் எழுதியவர்களில் திருநெல்வேலியைச் சேர்ந்த அறிஞர் சி.சு.மணி அவர்களை மிகச் சிறப்பானவர் என்று குறிப்பிட வேண்டும். (15) எடுத்துக்காட்டாக பல்லாண்டுகாலமாக சைவ சித்தாந்த நூல்களை முறையாகப் படித்து வருபவர்களுக்குக் கூட சிவஞானபோத பேரூரையைப் புரிந்துகொள்வது கடினமான செயல் என்பதை சைவ உலகம் நன்கு அறியும். அறிஞர் சி.சு.மணி அவர்கள் சிவஞான போத பேருரைக்கு எழுதிய விளக்கம் கையில் இருந்தால் மாணவர்களுக்குக் கூட அந்த நூலை எவர் துணையுமின்றி படித்துப் புரிந்து கொள்ள முடியும்.
இந்த வரலாறு ஒரு சுருக்கமான அறிமுகத்தான் எழுதப்பட்டது. விரிவாக எழுதினால் ஒரு பெரிய நூலாக விரிவடைவதற்கான ஏராளமான பல்வேறு செய்திகள் உள்ளன. ஆர்வமுள்ளவர்களை மேலும் படிக்கத் தூண்டுவதற்கு இந்தக் கட்டுரை உதவியாக இருக்கும்.
l