நிகழ் அய்க்கண்
பொதுவுடைமை இயக்கமுன்னோடியான சிந்தனைச்சிற்பி ம. சிங்காரவேலரின் பொதுவுடைமைச் சிந்தனைகள், புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் கவிதைகளில் எவ்வாறெல்லாம் வெளிப்பட்டுள்ளன என்பதை ஆய்ந்து விளக்குவதே இந்நூல். இந்நூலுக்குஅணிந்துரை வழங்கியுள்ள பேராசிரியர். நாகநாதன் கூறும்போது, இன்றைய காலச்சூழலில், திராவிட இயக்கக் கருத்துக்களும், பொதுவுடைமைக் கருத்துக்களும் கைகோர்த்துப் பயணம் மேற்கொள்ளவேண்டும் என்கிறார்.
இந்நூலுக்கு மதிப்புரை வழங்கியுள்ள பேராசிரியர் வீ. அரசு கூறும்போது, இடதுசாரி இயக்கமும், சுயமரியாதை இயக்கமும் ஒரேகண்ணோட்டத்தில் செயல்பட்ட இருவேறு அமைப்புக்கள் என்பதை இவ்விருவரது கருத்துக்களை ஒப்பிட்டுக் காட்டியதன் மூலம் நூலாசிரியர் செழுமை சேர்த்திருக்கிறார் என்கிறார். இந்நூலில், சிங்காரவேலர் மற்றும் பாரதிதாசனால் பதினோறு தலைப்புக்களின்கீழ் கூறப்பட்டுள்ள கருத்துக்கள் தொகுக்கப்பட்டுள்ளது. அவற்றில் , ஒவ்வொரு தலைப்பின் கீழும் பதிவுசெய்யப்பட்டுள்ள கருத்துக்கள் சிலவற்றை மட்டும் சுருக்கம் கருதி சுட்டிக்காட்டப்பட்டுள்ளது .
புதுஉலகம்
ம. சிங்காரவேலர் 01.05.1935 அன்று, தனது எழுபத்தைந்தாம் வயதில் சொந்தமாகத் தொடங்கிய இதழ்தான் ‘புதுஉலகம் ‘. இதற்குமுன்பாக, ஆங்கிலத்தில்’ இந்தியத்தொழிலாளர் -விவசாயி’ இதழையும், தமிழில் ‘தொழிலாளி’ இதழையும் (01.05.1923) வெளியிட்டார். மக்களிடையே மண்டிக்கிடக்கும் அவநம்பிக்கைகள், மூடநம்பிக்கைகள், சாதி, மதபேதங்கள், பொருளாதார ஏற்றத்தாழ்வுகள், இவற்றிலிருந்து முற்றிலும் நீங்கி, நம் சமூகம் ஒரு புது உலகைப்படைத்து விஞ்ஞான மனப்பான்மையுடன் கூடிய ,எல்லோருக்கும் வேண்டிய சமத்துவ வாழ்வைப் பின்பற்றவேண்டும் என்பது அவரது உட்கிடக்கை, அறிவியல் தொழில்நுட்பமும், தகவல் போக்குவரத்தும் வளர்ந்திராத அக்காலத்திலேயே பகுத்தறிவு, உடலியல், வானவியல், நிலவியல், உலகசமாதானம் குறித்து புதுஉலக இதழில் எழுதப்பட்டிருக்கிறது. சிங்காரவேலர் கூறும்போது, நமது சமூகவாழ்க்கை உயரவேண்டுமானால், மெய்ஞானமுறை இன்னதென்று தெரிந்துகொள்ளல் அவசியமாகும். மெய்ஞானமுறையைப் பெரும்பான்மை மக்களுக்குத் தெரிவிக்காமையால், அரசியல்துறையிலும், சமூகத்துறையிலும், தினசரிப்பழக்க ஒழுக்கங்களிலும், அறிவுடையாரும் தங்கள் பகுத்தறிவை உபயோகப்படுத்தாமல், மூடப்பழக்கவழக்கங்களுக்கும், மூடஎண்ணங்களுக்கும் ஆளாகின்றனர். இவ்விதழ் பற்றிய கருத்தாக பாரதிதாசன் கூறும்போது, இது ஒரு விஞ்ஞான இதழ் என்கிறார்.
இயேசுபெருமான்
இயேசுவைக் குறித்து சிங்காரவேலர் குடியரசு இதழில் (07.05.1923) எழுதியுள்ள கட்டுரையில், மாந்தநேயத்தின் சிகரம்தான் பொதுவுடைமையர். பொதுவுடைமைக் கொள்கை அறிவியல் தொழில்நுட்பம் வளர்ந்தகாலத்தில் தோன்றியது .அதனால் மனிதசமூதாயத்திற்கான மாந்தநேயத்தை அதுஅறிவியல் அடிப்படையில் விளக்கியது. அறிவியல்வளராத, அல்லது அறிவியல் இன்னதென்று தெரியாதகாலத்திலும் மாந்தநேயம் சிலரிடம் வெளிப்பட்டது என்கிறார். சிங்காரவேலரின் இக்கட்டுரை குடியரசு இதழின் தொடர்வாசகரான பாரதிதாசனுக்கும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. அவரும் இயேசுநாதர் பற்றி தனது கவிதைகள் வழியாககூறும்போது, கொடும்மக்களை நன்மக்களாக ஆக்கவந்தவர் என்றும் , எல்லா மக்களையும் சமம் என்றும், அப்பெருமான்கோயிலை அன்புதேயும் இல்லம் எனவும் கூறுகிறார்
குவெட்டாபூகம்பம்
ஆப்கானிஸ்தானுக்கும், பலுச்சிஸ்தானுக்கும் இடையேயுள்ள குவெட்டா எனும் ஊரில் 31.05.1935 அதிகாலை 04.30 மணிக்கு பூகம்பம் ஏற்பட்டு இருபதாயிரத்திற்கு மேற்பட்ட மக்கள் இறந்திருக்கின்றனர் இப்பூகம்பம் குறித்து புதுஉலக இதழில் சிங்காரவேலர் எழுதியகட்டுரையில் கூறும்போது, மக்களுக்கும் மக்களால் உண்டாக்கப்பட்ட பொருள்களுக்கும், மக்களுக்குத் தாழ்வான உயிர்களுக்கும் நடந்த நாசத்தைக் கருதுகிறோமே ஒழிய, பிரபஞ்சத்தில் இத்தியாதி நிகழ்வுகளைக் குறித்து, இவைகளின் காரண – காரியங்களைச் சிந்திப்பதில்லை. விஞ்ஞானிகள்தான் இவ்வித நிகழ்ச்சிகள் குறித்து சிந்தித்து வருகின்றனர் என்கிறார். குவெட்டாபூகம்பம் குறித்து பாரதிதாசனும் ‘குவெட்டாவில் கூட்டக் கொலை‘ எனும் தலைப்பில் ஒருகவிதை எழுதியுள்ளார். அக்கவிதையானது இயற்கையின் பேராற்றலையும், நமது போதாமையையும் வெளிப்படுத்துவது மட்டுமின்றி, பூகம்பம் ஏற்படவிருப்பத்தை, இயற்கை நமக்கு முன்னறிவிப்பு செய்வதில்லை. இயற்கை தனது சுண்டுவிரலை அசைத்தால், இந்தப்பூமியே துண்டுபடும் என்கிறார்.
தமிழ்க்கல்வியும் இந்திஎதிர்ப்பும்
அனைத்துக் கல்வியையும் தாய்மொழியிலேயே கற்பிக்கவேண்டும் என்பதில் சிங்காரவேலர் உறுதியாக இருந்தவர். அதற்காக எழுதியும், பேசியும்வந்தவர். தமிழ்நாட்டு சமதர்மவாதிகளாகிய நாங்கள் எங்கள் தமிழ்நாட்டில் தமிழ்பாஷையில் இன்றி, மற்றஎந்த அந்நியபாஷையையும், எங்கள்நாட்டு அரசியலை ஏற்கமாட்டோம் என்கிறார். பாரதிதாசனும், உலகத்தில் தோன்றியமுதல் ஆதிமனிதர் தமிழர்என்றும், அவர்பேசியமொழியே தமிழ்என்றும், எல்லாமொழிகளுக்கும் மூலம் தமிழேஎன்றும், அதுவே உலகமொழி என்றும் கூறுகிறார். அதுமட்டுமல்லாது, பண்டையமன்னர்கள் சங்கத்தை ஏற்படுத்தி அந்நாளிலேயே தமிழை வளர்த்துள்ளனர் என்கிறார்.
உலகசமாதானம்
உலகில் ஒருநூற்றாண்டில் இருபோர்கள் நடந்துள்ளன. மனிதகுல வரலாற்றில் எந்தக்காலத்திலும் நிகழாத எண்ணற்ற உயிரிழப்பும், அளவற்ற பொருட்சேதமும் இவற்றினால் மட்டுமே நிகழ்ந்துள்ளன . இதுபற்றி சிங்காரவேலர் தனது கட்டுரையின்வாயிலாகக்கூறும் போது, மதங்களாலும் தத்துவஞானங்களாலும் உலகப்போர் நிகழாமல் இருக்காது. ஆயுத அபிவிருத்தியாலும் உலகச்சண்டை நில்லாது. யுத்தங்களுக்கும், கலகங்களுக்கும், சண்டைகளுக்கும், போருக்குமான மனப்பான்மையைத் தனியுடைமை வளர்த்துவருகிறது எனவும், தனியுடைமையின் கொடூரங்களைப் பற்றி மேலும் கூறும்போது, பிறநாடுகளின் இயற்கை வளங்களைச் சுரண்டுவதற்கும், தம்நாடுகளின் உற்பத்திப்பொருட்களைப் பிறநாடுகளில் சந்தைப்படுத்துவதற்கும் ,நிதிமூலதனத்தை பிறநாடுகளில் குவித்து அதன்வழிச் சுரண்டுவதற்கும் முதலில் நேசக்கரம் நீட்டும். தடைஏற்படின் போர்தொடுக்கும் . இதுவே தனியுடைமை முதலாளித்துவத்தின் தனிவழியாகும் .அதாவது, ஒன்று சுரண்டும்வழி, மற்றொன்று கொள்ளையடிக்கும் வழியாகும் என்கிறார். சிங்காரவேலரின் இந்த எழுத்துக்கள் பாரதிதாசனிடமும் வெளிப்படுவதைக் காணமுடிகிறது. அதாவது,
புதியதோர் உலகம் செய்வோம் – கெட்ட
போரிடும்உலகத்தைவேரோடுசாய்ப்போம்
பொதுஉடைமைக் கொள்கை திசையெட்டும்சேர்ப்போம்- என்கிறார்.
அறிவியல்நோக்கு
தமிழகத்தில் அறிவியல் சிந்தனைகளையும், அறிவியல் மனப்பான்மையையும் பரப்ப பெருமுயற்சிஎடுத்தவர்களில் முதல் முன்னோடி சிங்காரவேலரே ஆவார். அதுபற்றி கூறும்போது, நம்மக்கள் சமய இலக்கியங்களில் காட்டுகின்ற ஆர்வத்தை ஈடுபாட்டை விஞ்ஞான நூல்களில் காட்டாததால், அவர்கள் புதுமையை ஏற்கத் தயங்குகிறார்கள். இந்தத் தயக்கத்தை இயலாமையை போக்க வேண்டுமென்றால், நிலநூல், உயிர்நூல், வானநூல், போன்றவற்றின் சிந்தனைகளைப் பரப்பி, சாதிப்பக்தி, மதப்பக்தி, போன்றவற்றை நீக்கவேண்டும். மூடப்பக்தியும், சாதிப்பக்தியும் இருப்பதற்கு – நிலைப்பதற்கு மதப்பக்தியே முக்கியகாரணமாகும் என்கிறார். இவரைப்பற்றி பேரறிஞர் அண்ணா கூறும்போது, இந்தியாவிலேயே விஞ்ஞான அறிவுக்கலை சம்பந்தமாகவும், பொதுஉடமை சம்பந்தமாகவும் அதிகம்படித்து புரிந்துகொண்டு, அந்த அறிவைக்கொண்டு மற்றவர்களுக்கும் அவை புரியும்படியாகச் செய்த பெருமைக்குரிய இடத்தில் முன்வரிசையில், முதலிடம் அவருக்கே அளித்தாக வேண்டும் என்கிறார். பாரதிதாசனின் கவிதைகளை இச்சமயத்தில் இதனோடு ஒப்பீடு செய்துபார்க்கும் போது,
மதஓடத்திலேறியமாந்தரே – பலி
பீடத்தில் சாய்ந்தீரே !
மூடத்தனத்தை முடிக்கும் மதத்தைநிர்
மூலப்படுத்தக் கைஓங்குவீர் -பலி
பீடத்தை விட்டினி நீங்குவீர் – செல்வ
நாடுநமக்கென்று வாங்குவீர் என்கிறார் .
கடவுள்மறுப்பு
சிங்காரவேலர் எப்படி பொதுஉடைமை இயக்கத்தின் முன்னோடியோ, அப்படியே கடவுள் மறுப்பின், நாத்திகக் கொள்கையின் முன்னோடியும் ஆவார். கடவுள்மறுப்பை ,நாத்திகக் கொள்கையை மேலைநாட்டு விஞ்ஞானக் கொள்கைகளிலிருந்தும், மார்க்சிய தளத்திலிருந்து விளக்கியும் – விமர்சனம் செய்தும்எழுதிவந்தவர்ஆவார். அவற்றில், நம் சமுதாயத்தில் கடவுள் எனுங்கருத்து எப்படித்தோன்றியது குறித்தும், கடவுளால் உலகம் உருவாக்கப்படவில்லை என்பது குறித்தும், அறிவியல் ஆதாரங்களுடன் அவர்ஆணித்தரமாக விளக்கியுள்ளார். அதேபோல, மதத்தைப்பற்றிக் கூறும்போது, மதங்களால் மாண்ட உயிர்களையும் அழிந்த நாடுகளையும்தான் காட்டமுடியும். அதாவது, வதைபட்டோர் ரத்தமே, ஆலயங்களின் அஸ்திவாரம் என்றபழமொழி உண்டு ; இதைத்தான் கடவுள் நன்மையென்று ஆஸ்திகர் கூறலாம். மதங்களால் நேர்ந்த கொடுமைகள், கொலைகள், நாசங்கள் யாவும், இடி; மின்னல், புயல் பஞ்சங்களால் நேரிடவில்லையென்றால், கடவுள் பெயரால் நேர்ந்த கொடுமைகளை மறப்பதெப்படி? என்கிறார். பாரதிதாசனும் இதேகருத்தினை எதிரொலிக்கும் விதமாக கவிதைகளின்மூலம் வெளிப்படுத்துகிறார். அதாவது, மதத்தை வேரோடு ஒழிக்கவேண்டுமென்றால், குழந்தைப்பருவத்திலேயே நாத்திகக் கொள்கையை ஊட்டியாக வேண்டும் என்கிறார்.
தாழ்த்தப்பட்டோர் மேம்பாடு
நமதுநாட்டில் மூன்று முதன்மையான தீமைகள் பரவியுள்ளதைக் காணலாம். இம்மூன்று தீமைகளும் இந்தியதேசம் முழுமையும் குடிகொண்டிருக்கின்றன. அவைகள் மதபேதம், சாதிபேதம், பொருளாதார பேதமாகும். இந்திய தேசத்தில்மாத்திரம் இம்மூன்றும் நிலைபெற்றுள்ளன. ஆதலின் இந்தியத்தேசத்தில் பொருளாதார பேதத்தை மாத்திரம் போக்குவது போதாது. இந்தியதேசத்தில் பொருளாதார வித்தியாசம் ஒழிவதோடு சாதிமத வித்தியாசங்களும் ஒழியவேண்டியது மிக அவசியமாகும் என்கிறார்சிங்காரவேலர். மேற்காணும் குறிப்பிற்கு ஏற்றாற் போன்று பாரதிதாசனும் தீண்டாமையின் இழிவை, ஆபத்தை சரியாகச் சுட்டிக்காட்டுவதுடன், அதனை வேரோடு ஒழிப்பதற்கு என்னவழி என்பதையும் கவிதைகளின்வழி அறிவிக்கிறார்.
தீண்டாமை என்னுமொருபேய் – இந்தக்
தேசத்தினில் மாத்திரமே திரியக்கண்டோம் -எனில்
ஈண்டு பிறநாட்டில் இருப்போர் -செவிக்
கேறியதும் இச்செயலை காறியுமிழ்வார்…
பெண் முன்னேற்றம்
சிங்காரவேலர் பெண்உரிமை, பெண்முன்னேற்றம் குறித்து ஆழ்ந்து சிந்தித்தவர். நம் சமுதாய மூடப்பழக்கவழக்கத்தாலும், ஆண்ஆதிக்கத்தாலும், பெண்கல்விக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது எனவும் பெண்மக்கள் எல்லாநிலைகளிலும் முன்னேற வேண்டுமானால், சமத்துவமாக வாழவேண்டுமானால், அவர்களுக்கு எல்லாநிலைகளிலும் கல்வியைப் பாய்ச்சிடவேண்டும் என்கிறார். கல்வியின் அவசியத்தை பாரதிதாசனும்கூட கீழ்கண்டவாறு வலியுறுத்திக்கூறுகிறார்.
கற்க எவரும் எக்குறை நேரினும்
நிற்காது கற்க ; நிறைவாழ் வென்பது
கற்கும் விழுக்காடு காணும் பெண்கள்
கற்க ஆடவ கற்க; கல்லார்
முதியராயினும் முயல்க கல்வியில்
தொழிலாளர் நலன்
சிங்காரவேலரின் பொதுப்பணிகளில் தொழிற்சங்கப்பணி முக்கியமானது .இவர் தொழிலாளர்களுக்கு அரசியல் பார்வையையும், வர்க்கஉணர்வையும் ஊட்டுபவராக விளங்கினார். தொழிற்சங்கதலைவர்களுக்கு வர்க்கநோக்கம் கொண்ட அரசியல்பார்வையின் அவசியத்தை உணர்ந்து, ‘லேபர்கெஜட் ஆப்ஹிந்துஸ்தான் ‘எனும் ஆங்கில மாதஇதழையும், தமிழில் ‘தொழிலாளி ‘ எனும் மாதஇதழையும் 1923 மேமாதம் கொண்டுவந்தவர். இவர் தொழிலாளர்களைப்பற்றிக் கூறும்போது நிலத்தில் இருந்து கிடைக்கும்நெல்லும், சுரங்கத்தில்இருந்து எடுக்கப்படும் உலோகவர்க்கங்களும் தொழிலாளரைப் பொறுத்தவரையே! ரயிவேக்களும், நீராவிக்கப்பல்களும், தொழிலாளர் முயற்சியிலேயே ஓடுகின்றன. உலகத்தில் உற்பத்தியாகும் எல்லாப்பொருட்களும் தொழிலாளர்களையே பொறுத்திருக்கின்றன என்கிறார். பாரதிதாசனும் சிங்காரவேலரின் கருத்தையொட்டியே தனதுகவிதைகளில் கூறியுள்ளார். அதாவது, நீர், நிலம், காற்றுவெளி, ஆகியன நிலைப்பதற்கு இங்கு அவற்றிற்கு ஆதாரப்பொருள் தந்தவை தொழிலாளர்களின் உழைக்கும் கரங்களே என்கிறார்.
பொதுஉடமைச்சிந்தனைகள்
சிங்காரவேலர் இந்தியாவின் பொதுஉடமை இயக்கத்தின் முன்னோடி. இந்தியாவில் பொதுஉடைமை இயக்கம் அமைப்புமுறையில் தோற்றுவிப்பதற்கு முன்னரே, அவர்அச்சிந்தனைகளைக் குறித்து எழுதியும் பேசியும் வந்தார்.
மதமூடநம்பிக்கைகளையும், மற்றசடங்குகளையும் ஒழிக்க மார்க்சியமே ஏற்றது. காரணம் மார்க்சியம் பகுத்தறிவை விஞ்ஞான அடிப்படையில் விளக்குவதுதான் இயங்கியல் தத்துவஞானம் என்பர். இதுஉலகு, உயிர், பிரபஞ்சம், மனிதத்தோற்றம், ஆகியவற்றை விஞ்ஞான அடிப்படையில் விரித்துக்காட்டுவது, இதனைக் கற்றால் எல்லா மூடநம்பிக்கையும் கடவுள் நம்பிக்கையும் சுவடுஇல்லாமல் பறந்துவிடும் என்கிறார். இதேபோன்று, பாரதிதாசனும் தனது கவிதையில்
சாதிமதபேதங்கள் மூடவழக்கங்கள்
தாங்கி நடைபெற்று வரும்சண்டை உலகிதனை
உதைஎனில் துரும்புபோல் அலக்கழிப்போம்; பின்னர்
ஒழித்திடுவோம் ; புதியதோர் உலகம் செய்வோம்.