சிதம்பரம் இரவிச்சந்திரன்
ஏழு வடகிழக்கு இந்திய மாநிலங்களின் தலைமையகமாகக் கருதப்படும் அஸ்ஸாம் மாநிலத்தில், கௌஹாத்தி லோக்ப்ரிய கோபிநாத் போர்டொலொய் விமானநிலயத்தில் (Lokpriya Gopinath Bordorloi International airport LGBI) அழையா விருந்தாளியாக உள்ளே நுழையும் குள்ளநரிகளைக் கூண்டு வைத்துப் பிடித்து மறுவாழ்வு தரும் திட்டம் ஒன்று தொடங்கப்பட உள்ளது.
அஸ்ஸாம் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறையால் இதற்கான செயல்திட்டக்குழு அமைக்கப்பட்டுள்லளது. இத்திட்டத்தின் கீழ் விமானநிலைய வளாகத்திற்குள் நுழையும் குள்ளநரிகள் கூண்டு வைத்துப் பிடிக்கப்பட்டு 100 கி.மீ தூரம் தள்ளி வனங்களுக்குள் பாதுகாப்பாக விடப்படும் என்று இக்குழுவின் தலைவர், தலைமை வன அதிகாரி ஹெம்கண்ட்டா டாலுக்டார் (Hemkanta Taluktar) கூறியுள்ளார்.
இதுவரை இந்த விமானநிலையத்தில் இதனால் விபத்துகள் குறிப்பாக விமானங்கள் தரையிறங்கும்போதும், கிளம்பும்போதும் ஏற்படவில்லை என்றாலும், ஒரு தற்காப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவே இந்தத் திட்டம் மேற்கொள்ளப்படுவதாக விமானநிலைய தலைமை இயக்குனர் ரெமேஷ்குமார் கூறியுள்ளார்.
விமானநிலையத்தின் சுற்றுச்சுவர் உள்ளூரில் கிடைக்கும் மூங்கில்களால் கட்டப்பட்டுள்ளது. சமீபத்தில் 500 ஏக்கர் பரப்பளவில் விரிவாக்கம் செய்யப்பட்ட இந்த விமானநிலையம் வடகிழக்கு மாநிலங்களில் உள்ள விமானநிலையங்களில் மிகப்பெரியது. வனவிலங்குகள் விமானநிலையங்களுக்குள் அழையா விருந்தாளிகளாக நுழைவது இந்தியாவின் மற்ற இடங்களிலும் நடைபெறுகிறது.
டெல்லி விமானநிலையத்தில் நீலான்கள் (Nilgai antilope), கல்கத்தா நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் சர்வதேச விமானநிலையத்தில் குள்ளநரிகள், அகமதாபாத்தில் குரங்குகள், மைசூரில் மயில்கள், டெஹ்ராடூனில் காட்டுப்பூனைகள் போன்றவை இதே போல் விமானநிலயங்களுக்குள் வந்துசெல்கின்றன. குள்ளநரிகள் வாழ்வதற்கு உகந்த இடமாக இந்த விமானநிலையம் இருப்பதில் வியப்பில்லை என்று இந்திய வன உயிரின அறக்கட்டளையை (Wildlife Trust of India WTI) சேர்ந்த மருத்துவ அறிஞர் பாஸ்கர் சௌத்ரி கூறியுள்ளார்.
விமானநிலையத்திற்கு அருகில் நீர்வளம், ஈரமானப் புல்வெளிகள், தேவையான முயல்கள், குழி முயல்கள் (hares, மோல்கள் (moles) போன்ற சிறுவிலங்கு இரைகள் கிடைப்பதால், குள்ளநரிகள் இங்கு வாழ்வதற்கேற்ற சூழ்நிலை உள்ளது. மேலும், இந்த விமானநிலையம் ரானி, ஜலக்பாரி (Rani, Jalukbari) ஆகிய இரண்டு காப்பு வனங்களுக்கு அருகில் அமைந்துள்ளது.
இந்தியக் குள்ளநரிகள் (Indian jackle canis aereus) 1972 வனவிலங்குகள் பாதுகாப்புச் சட்டத்தின் பிரிவு இரண்டின்படி பாதுகாக்கப்பட்ட விலங்குகள். இவை கானிஸ் ஏரியஸ் (canis aereus)வகையைச் சேர்ந்த தெற்காசியப் பகுதியில் காணப்படும் குள்ளநரி, ஓநாய் குடும்பத்தைச் சேர்ந்த அரிய வகை விலங்குகள். அதனால், இவற்றைக் கொல்வது சட்டப்படி குற்றம்.
எனவே, இவை கூண்டு வைத்துப் பிடித்து விடப்படுகின்றன. குள்ளநரிகளை பொறி வைத்துப் பிடித்து பாதுகாப்புடன் வேறு இடத்தில் விடுவதற்கான வழிமுறைகள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்தத் திட்டத்தில் வனத்துறை, கால்நடைத்துறை நிபுணர்கள், வனவிலங்குநல ஆர்வலர்கள், தன்னார்வத் தொண்டர்கள் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
குள்ளநரி புத்திக்கூர்மை உள்ள விலங்கு என்பதால், இவற்றைக் கூண்டு வைத்துப் பிடிப்பது சுலபமான செயல் இல்லை.
சுற்றுச்சுவர் வலுவாக அமைக்கப்பட்டிருந்தாலும், இவை குழி பறித்து அதன் வழியாக வெளியில் இருந்து உள்ளே நுழைகின்றன. கூண்டு வைத்துப் பிடிக்கும் திட்டத்தின் வெற்றியைப் பொறுத்து வருங்காலத்தில், சூரிய மின்வேலி அமைக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.
கூண்டுகள் 1.40 மீ நீளம், 0.60 மீ அகலம், 0.80 மீ உயரம் உள்ளவை. பிடிக்கப்படும் விலங்குகள் அதிகநேரம் கூண்டிற்குள் அடைத்துவைக்கப்படாமல், உடனடியாக பாதுகாப்பான வேறு இடத்திற்கு மாற்றப்படவேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. சிறிய கூண்டிற்குள் அதிகநேரம் அவற்றை வைத்திருப்பது அவற்றிற்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால், மறுவாழ்வு மையங்களுக்கு பிடிக்கப்பட்ட தினத்தன்றே மாலையில் கொண்டுபோய் விடப்படவேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.
தகுந்த வாகனத்தில், வெய்யில் இல்லாத மாலைப்பொழுதில் குள்ளநரிகள் கொண்டு செல்லப்படவேண்டும் என்றும் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. இந்தக் கூண்டுகள் விமானநிலையத்தின் முக்கிய இடங்களில் வைக்கப்படவுள்ளது. இதுபோன்ற ஒரு சவாலை முன்பு சந்தித்ததில்லை. அதனால், இந்தத் திட்டம் எந்த அளவிற்கு வெற்றியடையும் என்பது கேள்விக்குறியாக உள்ளது.
இத்திட்டத்தின் வெற்றியைப் பொறுத்திருந்தே பார்க்கவேண்டும் என்று வனவிலங்கு அறிஞர்கள் கருதுகின்றனர். வயல்களை அழித்து வீடு கட்டிக் குடியிருக்கும் மனிதன் வனங்களை அழித்து உருவாக்கும் நவீன விமானநிலையங்களே இதற்குக் காரணம் என்று சூழல் ஆர்வலர்கள் கூறுகின்றனர்.
l