முளைக்கத் துவங்கியதிலிருந்தே
பயிர்களின் தேவைகளை
கேள்விகளாய் அனுப்புகிறது நிலம்
பருவத்துக்கேற்ப
பதில்களை அனுப்பி வைக்கிறான்
விவசாயி…
அறுவடை நாளில்
புரிந்துணர்வின்படி
தானியங்களின் இடப்பெயர்வுக்கு
இருவரும் சம்மதிக்கிறார்கள்
களம் நிறைத்து
அடுக்கப்படும் மூட்டைகள்
அங்கலாய்ப்புடன் முனகுகின்றன…
தாய் வீட்டிலேயே தங்கிவிட நினைக்கும்
மகளின் மனமாய்
விலை பேசும் தரகனின்
தந்திரம் அறிந்து
தானியங்கள் குமைகின்றன…
கணக்கு வழக்கு ஒழுங்கு செய்து
உழைப்பின் லாபம்
முதிர்ந்த கதிரின் பூரிப்பை
வீடெங்கும் பூசுகிறது…
அடுத்தடுத்த போகத்துக்கும்
இதே விளைச்சல் காணவேண்டுமென
பத்திரப்படுத்திய விதைகள்
குதிருக்குள் குழந்தையாய் உறங்குகின்றன…
விதைப்புக்கு தேதி குறித்த நேரத்தில்
வேறொன்றை பயிர் செய்ய
கார்ப்பரேட் உத்தரவொன்று
கால் முளைத்து வரப்போகிறதென்றும்
கண்ணுக்குத்தெரியாத கண்ணிகளால்
நிலம் வளைக்கப்படப்போவதாகவும்
ஆராய்ச்சி மணி அடிக்கப்படுகிறது…
மரபு சிதைந்தவைகளின்
வேர்ப்பிடிப்பில்
நிலம் சிதைவதற்குள்
முடிவொன்றை எட்டிவிடவேண்டுமென்று
சேற்றுப்பாதங்கள் உதறி
தலை நகரம் நோக்கி
நடக்கத்தொடங்கிவிட்டார்கள்
விவசாயிகள்…
வெற்றியுடன் திரும்பும் நாளை
எதிர்நோக்கும்
மக்களோடு மக்களாய்
மண்ணுக்குள்ளே காத்திருக்கின்றன
மண்புழுக்கள்…
previous post