ஸ்ரீநிவாஸ் பிரபு
நடையில் வேகமின்றி
ஒவ்வொரு அடியையும்
கவனத்துடனும், நிதானத்துடனும் எடுத்து வைத்து,
காற்றில் அசையும் நாணலாய்
மெல்ல நடக்கிறது
பறவை ஒன்று.
துறவியின் நடையாய்
பூக்களைப் பார்த்த பரவசத்தோடு
நடப்பதை நிறுத்தி
நடப்பதை ரசிக்கிறது
புன்னகை ஏந்திய குழந்தை ஒன்று
மேக வடிவங்களைக் கலைக்கும் காற்றாய்
இழுத்துச் செல்லப்படுகையில்,
திரும்பித் திரும்பி பார்த்தபடி போகும்
குழந்தையின் பிஞ்சுக் காலடிச்சுவடுகள்
மெல்ல மெல்ல
சென்று சேர்கிறது
மீள முடியாது பெரியவர்கள் உலகத்திற்குள்!!