இந்தக் கவிதையை
யாருக்காக எழுதியிருக்கிறேன்
என்பதை முதலில்
நீங்கள் புரிந்துகொள்ளவேண்டும்.
இதில் நீங்கள் கவனிக்க வேண்டிய
விஷயம் என்னவென்றால்,
எந்த யாரைப் போன்றவர்கள் என்பதைத்தான்.
வாழ்வில் எனக்கு எதிர்ப்பட்ட
நிறைய யாரோக்கள் இருக்கிறார்கள்.
யாரோக்கள் என்னும் பட்டியலில்
பட்டியல் இனத்தவர்கள்,
பிற்பட்டவர்கள்,
பிற்படுத்தப்பட்டவர்கள், பின்தங்கியவர்கள்,
மிகவும் பின் தங்கியவர்கள்,
முன்தங்கியவர்கள், முற்படுத்தப்பட்டோர்,
முற்பட்டோர் என்று பலவகையாக
யாரோக்களை வகை பிரித்திருக்கிறேன்.
இந்த வகைபிரித்தலிலும் முக்கியமாக ஒன்றை
நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும் –
நீங்கள் நினைக்கிறாற்போல இங்கு குறிப்பிடப்படும்
யாரோக்கள்
சாதி தொடர்பானவர்கள் அல்ல;
ஏனெனில் அது உங்கள்
கடவுளைப்போலவே கற்பிதம்தான்
வெள்ளை கறுப்பு என்று தோலின்
நிறத்தாலும் அல்ல
மன்னர்கள் மடியில்
அமர்ந்து சீராட்டப்பட்டவர்களுமல்ல
வாழவந்த இடத்தோரின்
வாழ்க்கையைப் பிடுங்குபவரும் அல்ல
தோளில் பிறந்தவர்களும் அல்ல
வயிறு கால் தலையிலுமல்ல
மாறாக மனிதவாசனை வீசும் யோனியில்
மட்டுமே பிறந்தவர்கள்
இந்த யாரோக்கள் அறிவில், அறிவுத்தெளிவில்
அப்படிப்பட்ட வகை மாதிரியானவர்கள்.
இந்த வகையில் அறிவில் நீங்கள் முற்பட்டோராக
அதாவது எல்லோரையும் ஓர் நிரையில்
பார்க்கத் தெரிந்தவர்களாக
இருக்கும் பட்சத்தில் தொடர்ந்து படிக்கலாம்;
இதென்ன பெரிய லஜ்ஜையாக இருக்கிறதே
என நினைத்துப் பாதியிலேயே
நிறுத்திவிட்டீர்கள் என்றால்
உங்களை நீங்களே முற்பட்ட அறிவாளி
என்று நிலைநிறுத்தத்
திராணியற்றவராக நான்
உங்களைப்பற்றி எண்ணிக்கொள்ள
வாய்ப்பு உண்டு என்பது உங்களுக்கே தெரியும்.
நீங்கள் முற்பட்டவராக இருக்கும் பட்சத்தில்,
உங்களுக்கு மனசாட்சியும்,
தோலில் கொஞ்சம் சுரணையும்
இருக்கிறதென்று நிச்சயமாக
நம்புவதற்கு இடமுண்டு.
உங்களுடைய மிகைமனம் சொல்லுகிறபடி
நீங்கள் உங்களை முற்பட்டவராக
உங்களைக்குறித்து நீங்கள் அறிந்தும்
நம்பிக்கொண்டும் இருக்கின்ற காரணத்தினால்,
நீங்கள் தொடர்ந்து படிக்க முற்படுகிறீர்கள்
என்பதை ஒருவாறு யூகித்துக்கொண்டு
மேற்கொண்டு தொடர்கிறேன்,
உங்களைப்போலவே.
இப்போது நீங்கள் ஒரு சவாலுக்குள்
இப்படிச் சிக்கிக்கொண்டதாக நினைக்க வேண்டாம்.
சிக்கிக்கொள்ளுதல் என்றெல்லாம்
ஒன்றும் இல்லை.
வாழ்வின் ஒரு அங்கமாகப் பார்க்கலாம் அல்லவா?
என்னோடு மேற்கொண்டு வருவதாக
முடிவு செய்து விட்டீர்கள் என்று நினைக்கிறேன்.
வாழ்த்துக்கள்!
நீங்கள் இப்போது செய்ய
வேண்டியது என்னவென்றால்
ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக யாரையெல்லாம்
உங்கள் கால்களுக்குக் கீழ்
போட்டு மிதித்துக்கொண்டிருந்தீர்களோ
அவர்கள் கால்களுக்குக் கீழே போய்
பத்திரமாய்ப் பதுங்கிக் கொள்ளுங்கள்
அது உங்களுக்குப் பாதுகாப்பானது.
அந்தக் கால்களின் தீட்சை உன்னதமானது
உங்களை விடுவிக்கவல்லது
உங்களுக்கு உண்மையான
விடுதலையைக் கற்றுக்கொடுப்பது
அந்தக் கால்களின் கரடுகள் உங்கள் வாழ்க்கையில்
கனிவைக் கற்றுக் கொடுக்கும்
சக்கர வாழ்வில் கீழ் மேலாகும் மேல் கீழாகும்
இப்போது உங்கள் தலையில்
கால் வைத்திருப்பவர்களை
தெய்வமாக வணங்குங்கள்
ஒருவேளை உங்கள் பாவங்கள் கழுவப்படலாம்
அதிகமாக வேண்டாம்
ஒரு ஐநூறு ஆண்டுகள் அப்படியே இருங்கள்
உங்கள் மற்றும் உங்கள்
முன்னோர்களின் ஜென்மம்
சாபல்யம் அடைகையில்
உங்களுக்குப் புரியும் முக்தியும் மோட்சமும்
இப்படிச் சாந்தி செய்வதில்தான் உண்டென்று.
ஓம் சாந்தி!
ஓம் சாந்தி!