கே.சச்சிதானந்தன்
தமிழில்: ரவிக்குமார்
எழுபதுக்கும் எழுபத்தைந்துக்கும்
இடையில் இருக்கிறது
ஒரு கரிய பிரதேசம் :
ஞாபகத்தைப்போல அகலமாக,
மரணத்தைப்போல ஆழமாக.
அங்கே
சிக்கிக்கொண்டவர்களுக்கு
இல்லை மீட்சி.
அவர்கள் ஒன்று சிறு பிராயம்
என்னும் புதர்களுக்குள்
அலையவேண்டும் அல்லது
இயலாமையில் தலைகுப்புற
விழவேண்டும்
எழுபதுக்கும் எழுபத்தைந்துக்கும்
இடையில் இருப்பவர்கள்
இளைஞர்களைப்போல
நடந்துகொண்டால்
கவனமாயிருங்கள் : அவர்கள்
இளைஞர்கள்தான்
அவர்கள் நேசிக்கமுடியும்,
இசைக்கேற்ப நடனமாட முடியும்,
தேவையெனில் ஒரு யுத்தத்தை,
புரட்சியை நடத்தமுடியும்.
சொல்லப்போனால் அவர்கள்
செத்துப்போனவர்களல்ல,
பெரும்பாலான
இளைஞர்களைப்போல
எழுபதுக்கும் எழுபத்தைந்துக்கும்
இடையில் இருப்போர்
மனக்குழப்பத்தால் பாதிக்கப்பட்டிருக்கலாம்: சில
நேரம் குதிரைமீது போக
விரும்பலாம்,
சிலசமயம் சமுத்திரங்களின்மீது,
மலைகளின்மீது பறக்க
விழையலாம்,
கழுகின்மீதேறி பாலைவனத்தில்
அலையலாம்,
அங்கு இல்லாத தண்ணீரைத்
தேடலாம்,ஆடையின்றி மழையில்
நனையவும், யாருமே எழுதாத
கவிதையை வாசிக்கவும்
விரும்பலாம்.
வரலாறு அதன் தடத்தைத் தேடி
திரும்பி நடப்பதுபோல
நினைத்துக்கொள்கிற காலமும்
உண்டு, வாய்விட்டு அழவும்,
அலறவும் வேண்டுமென
உணர்வதுமுண்டு.
எழுபதுக்கும் எழுபத்தைந்துக்கும்
இடையில் உள்ள தனிமை ஒரு
பழுப்பு, அதிகாலைக் கனவு,
பழைய ‘ஆல்பம்’களில் இருக்கும்
நட்பு.
அவர்கள் சிரிக்கும்போது சூரிய
ஒளி கிராமத்தின் சந்துகளில்
ஒளிந்துகொள்ளும்.அவர்களது
வியர்வை எள்ளு பூவைப்போல
மென்மையானதாக மணக்கும்,
அவர்கள் நடப்பது சாவரியின்
அவரோகணம், சந்தம் நிறைந்த
பேச்சில் கமகங்கள்
கொட்டிக்கிடக்கும்
இவை எல்லாமே
ஆண்களைப்பற்றி மட்டுமே
இருக்கிறதே என நீங்கள்
வியப்புறலாம்.
ஆமாம், எழுபதுக்கும்
எழுபத்தைந்துக்கும் இடையிலான
காலத்தைப் பெண்கள்
கடப்பதில்லை, நம் கண்களுக்குப்
புலப்படாமல்,
சொர்க்கத்தைப்போல
மணம்வீசியபடி, தேவதைகளின்
பாதங்களால்
அன்பெனும் வானவில்லில்
சறுக்கிச் செல்கிறார்கள்.
அது அரளிப்பூக்களின் புன்னகை,
ரட்சிப்புக்கான ஒரு அழைப்பு.