எஸ் வி வேணுகோபாலன்
தமிழ்க் கவிதைகளில் ஆர்வம் பற்றிக் கொண்டவுடன், அதுவரை இருந்ததை விடவும் கூடுதல் காதல், பள்ளிக்கூடத் தமிழ்ப் பாட நூல் செய்யுள்கள் மீது பரவத் தொடங்கியது. கம்பன், பாரதி, பாரதிதாசன், வாணிதாசன், நாமக்கல் கவிஞர், வீரமாமுனிவர் என்று யாரை வாசித்தாலும், எதுகை மோனை எப்படி பயின்று வந்திருக்கிறது என்கிற ரசனையில் உள்ளம் ஆழ்வதாயிற்று.
ஒன்பதாம் வகுப்பு தமிழாசிரியர் செஞ்சொற்கவிமணி பு மா ஜெயசெந்தில்நாதன் அவர்களோடு நிறைய உரையாடக் கிடைத்த வாய்ப்பு அருமையானது. திடீர் என்று ஒரு நாள், “நீ சின்ன காஞ்சீபுரம் வரதராஜ பெருமாள் கோயில் அருகே குடியிருப்பவன் தானே, நாலாயிர திவ்விய பிரபந்தம் நன்கறிந்த வைணவர் யாரிடமாவது போய், பகவத் கீதை குறித்த செய்தி எந்தப் பாசுரத்திலாவது வருகிறதா, கேட்டு வந்து சொல்” என்றார்.
என் பாட்டனார்,
கே சி ராஜகோபாலாச்சாரியார் அவர்களது மாணவரான டி டி கண்ணன் என்பவரை மட்டுமே அப்போது அந்தப் பகுதியில் அறிந்திருந்தேன். என் தாத்தா, வாலாஜாபாத் இந்து மத பாடசாலையின் புகழ் பெற்ற தலைமை ஆசிரியராகத் திகழ்ந்தவர். ஓய்வுக்காலத்தை ஆன்மீகமாகக் கழிக்க எண்ணி, காஞ்சிபுரம் வந்தவர், அடுத்த சில மாதங்களில் மறைந்துவிட்டார். அவர் பால் வாஞ்சை மிகுந்த சக ஆசிரியர் டி டி வரதாச்சாரி அவர்களது மகன் தான் டி டி கண்ணன். அவர் வீட்டுக்குச் சென்றதும், “வாம்மா குழந்தே…என்னடா வேணும்?” என்றார். கேள்வியைச் சொன்னதும், என்னைக் கட்டியணைத்து உச்சி மோந்து, “இந்த வயசுல எத்தனை ஞானம், எத்தனை ஞானம்?” என்று பாராட்டினார்.
‘அது என் கேள்வி அல்ல, ஆசிரியர் கேட்டுவரச் சொன்னது’ என்று தெரிவித்தேன். “ஆழ்வார்கள் பாடிய திவ்விய பிரபந்தத்தில் எங்கும் கீதை பற்றிய குறிப்புகள் வருவதில்லை, ஆனால், இராமானுச நூற்றந்தாதியில், ‘தேரினில் செப்பிய கீதையின் செம்மை’ என்று ஓரிடத்தில் வருகிறது, அதை அவரிடம் சொல்லிவிடு” என்று சொன்னார். (திருவரங்கத்து அமுதனார் படைத்த இந்த அந்தாதியும் சேர்த்துத் தான் நாலாயிரம் என்று சொல்லப்படுவதும் உண்டு. பல ஆண்டுகள் கழித்து, இதே கேள்வியோடு எழுத்தாளர் சுஜாதாவின் தேடல் குறித்த அலசல் ஒரு வார இதழில் வந்தபோது, என் அண்ணன் ரங்கராஜன் பிரதி எடுத்து எனக்கு அனுப்பி வைத்தார்).
இந்தக் கேள்வி, பிற்காலத்தில் எனது தத்துவார்த்த வேட்கை, தேடல் வலுப்பட்ட தருணத்தில் முக்கியமான ஒன்றாக அமைந்தது. கீதை, ஒரு பிற்காலத்திய இலக்கியம், எனவே தான், ஆழ்வார்கள் அதைக் குறித்து எதுவும் சொல்லாது சென்றிருப்பது என்ற புரிதல் பின்னர் ஏற்பட்டது. அந்த வயதில், தமிழ் வாசிப்பு ஆர்வத்தில் பக்தி இலக்கியங்கள் பால் ஈர்ப்பு ஏற்பட இந்தக் கேள்வி அப்போது காரணமானது.
ஏற்கெனவே, சிறுவயதில் மார்கழி குளிர்ப்போர்வைக்குள் தாத்தா அரவணைத்துக்கொண்டு சொல்லிக் கொண்டிருந்த திருப்பாவை மீது இருந்த ஆர்வம் இப்போது விரிவடைய, சொல்லாட்சி, தமிழ் அழகியல் எல்லாம் அதில் ரசனைக்கு தீனி போட வைத்தது. கார் மேனி செங்கண், புள்ளும் சிலம்பின காண், போதரி கண்ணினாய், கீசு கீசு என்று எங்கும் ஆனைச்சாத்தன் கலந்து பேசின பேச்சரவம், எல்லே இளம் கிளியே, நென்னலே* வாய் நேர்ந்தான், மாரி மலை முழைஞ்சில், சிற்றஞ் சிறுகாலே வந்துன்னை….என்ற பட்டியல் பெரிதானது. (*நென்னலே என்பது, நெருநலே என்பதன் மரூஉ, நேற்றே என்று பொருள்)
தாத்தா விட்டுவிட்டுப் போயிருந்த திவ்விய பிரபந்த புத்தகம் மிகவும் வாசிக்கப்பட்டு, பழுப்பேறிய அட்டையும் தளர்ந்துபோன பக்கங்களுமாக இருக்க, அதன் வாசனை இன்னும் நினைவில் இருக்கிறது. மதுர கவி ஆழ்வாரின் ‘கண்ணி நுண் சிறுதாம்பினால்’ மிகவும் கவர்ந்தது. சின்னஞ்சிறிய மணிக்கயிற்றில் கண்ணனைக் கட்டிப் போட்டிருக்கிறாள், யசோதை. அதை எத்தனை அழகாகச் சொல்கிறது இந்தச் சொற்றொடர், அப்புறம், ‘கட்டுண்ணப் பண்ணிய பெருமாயன்’ என்று போகிறது பாசுரம். தன்னைக் கட்டிப் போட அவனே உட்படுத்திக் கொள்கிற அழகு. ‘வெண்ணெய் அளைந்த குணுங்கும் விளையாடு புழுதியும்’ படிந்திருக்கும் கண்ணனை எண்ணெய் தேய்த்துக் குளிக்க வைக்க, யசோதை படும் பாடு பற்றிய பெரியாழ்வார் பாசுரங்களை, கோயிலில் திருமஞ்சனம் (நீராட்டு) செய்கையில் பாடக் கேட்டு வாசித்த அனுபவங்கள்.
பாசுரங்கள் பாடுமுன் அந்தந்த ஆழ்வாரைப் பற்றிய புகழ்ச்சி சொல்லும் தனியன் என்று வரும் பாக்கள் சுவையாக இருக்கும். ”வேங்கடவற்கு என்னை விதி என்ற இம்மாற்றம் நாங்கடவா (நாம் கடவா) வண்ணமே நல்கு’ என்று சொல்லிவிட்டுத் தான் திருப்பாவை தொடங்குவார்கள் பிரபந்த கோஷ்டியினர். திருப்பாவை மொத்த பாசுரங்கள் முப்பது என்பதை, ஐயைந்தும் ஐந்தும் (5 x 5 + 5) என்று பிரித்துக் காட்டுகிற, ‘கோதை தமிழ் ஐயைந்தும் ஐந்தும் அறியாத மானிடரை வையம் சுமப்பதும் வம்பு’ என்று முடிகிற செய்யுள், திருப்பாவை முடித்தபின் வரும்.
திருப்பாவையில் ஏற்பட்ட சுவாரசியம் ஒரு தொடர் கதை. அது கல்லூரியில் மதிப்புமிக்க தமிழ் ஆசிரியர் வேணுகோபாலன் அவர்கள், ஏலோர் எம்பாவாய்’ என்கிற கடைசி சொற்களை நீக்கிவிட்டுப் பார்த்தால், திருப்பாவை முப்பதும் வெண்பா இலக்கணத்தில் வந்திருக்கும், நாள்,மலர், காசு, பிறப்பு என்னும் வாய்பாடுகளில் ஒன்றைக் கொண்டு முடியும் என்று விளக்கும்போது இன்னும் சுவையாகி விட்டிருந்தது.
பின்னாளில், ஆய்வாளர் ஆ சிவசுப்பிரமணியன் அவர்களது தமிழகத்தில் அடிமை முறை எனும் முக்கியமான நூல் (காலச்சுவடு வெளியீடு), தோழர் மயிலை பாலு அவர்கள் நூல் அறிமுகம் செய்யக் கொடுக்கையில் வாசிக்கும்போது, திருப்பாவையிலிருந்தும், தேவாரத்திலிருந்தும் எல்லாம் மேற்கோள்கள் காட்டி, அடிமை முறையை, நூலாசிரியர் நிறுவி இருக்கக் கண்டேன். திருப்பாவையில் வரும், ‘குற்றேவல் எங்களைக் கொள்ளாமல் போகாது’, ‘உமக்கே நாம் ஆட்செய்வோம்’ போன்ற இடங்கள், அடிமை முறையில் நிலவிய சமூகம் உருவாக்கிக் கொடுத்த சொல்லாட்சி என்று எடுத்துக் காட்டி விளக்கி இருந்தார் பேராசிரியர் சிவசு.
காஞ்சிபுரம் கிளை நூலகத்தில், கவிதைக்காகத் தேடித் தேடி வாசித்த பருவ இதழ்களில் காஞ்சி என்ற ஒன்று கண்ணில் பட்டது. வார இதழாக வந்து கொண்டிருந்தது என்று நினைவு. 1க்கு 5 என்கிற காகித அளவில் அச்சாகிக் கொண்டிருந்தது என்பதாகக் கூட மங்கலான ஞாபகம். அறிஞர் அண்ணா நிறுவிய அந்த இதழின் அலுவலகம், நான் எட்டாவது படித்த பச்சையப்பன் நடுநிலைப் பள்ளிக்கு மிக அருகில் இருந்தது, அன்றாடம், உயர்நிலைப் பள்ளிக்கு நடந்து செல்லும் சாலையில் ஒரு பத்திரிகை அலுவலகத்தைப் பார்ப்பதே பரவசம் ஊட்டியது, இப்போதும் தொடர்கிறது.
காஞ்சி இதழில் எப்படியும் கவிதை எழுதி விட வேண்டும் என்ற தாகம், கவிஞர் கண்ணதாசன் அவர்களது, ‘பூவினைக் காடுகள் புன்னகைக் கோடுகள்’ படித்ததும் தோன்றிவிட்டது. அதே போல் ஒரு காதல் கவிதை. அதே எழுசீர் விருத்தம்.
கொட்டிடும் மேளங்கள் கொஞ்சிடும் கீதங்கள்
கொல்லனின் பொன்னணி மேனி
பொட்டிடும் தோழிகள் பண்ணிடும் கேலிகள்
பைந்நிறப் பொன்மயிலோ நீ
என்று எழுதி, ஒரு நாள் பள்ளியிலிருந்து திரும்பி வருகையில் உள்ளே போய்ப் பார்த்துக் கையில் கொடுத்துவிட்டுப் போய்விட்டேன்.
இரண்டு வாரங்கள், நூலகத்தில் பரபரப்போடு திருப்பிப் பார்த்தால் கவிதை வந்திராது, மூன்றாவது வாரம், நேரே அலுவலகம் போய், ஏன் எனது கவிதை போடவில்லை, திருப்பிக் கொடுத்து விடுங்கள் என்று கேட்க, அங்கே இருந்தவர், ‘ஏன் தம்பி, என்ன படிக்கிறீங்க?” என்றார். ஒன்பதாம் வகுப்பு. “அந்தக் கவிதை, நீங்க எழுதியதா, உங்க அக்கா, அண்ணன் யாராவது எழுதியதா?” என்று கேட்டார்.
சுர்ரென்று சீறியது சினம்.
“இப்போதே இங்கேயே இன்னொரு கவிதை எழுதிக் காட்டவா, என்ன பொருளில் வேண்டும் சொல்லுங்கள்” என்றேன். “தம்பி, கோபப்படாதீங்க, அச்சில் ஏத்தியாச்சு, இந்த வாரம் உறுதியாக வந்திரும்” என்று சிரித்தார். அடுத்த வாரம், அந்த வழியில் செல்கையில், அவரே பார்த்து அழைத்து, இரண்டு பிரதிகள் கையில் தந்தார், அச்சில் பெயர் (சுகந்தன் என்ற புனைபெயர்) பார்த்த முதல் இன்ப அதிர்ச்சி தருணம்.
நூலகத்தில், காஞ்சி மட்டுமல்ல, கவிதைக்காகத் தேடி வாசித்த வார, மாத இதழ்களில் கவிதைகளின் தன்மை, அரசியல் கருத்தோட்டம், நாத்திக வாதம் எல்லாம் உள்ளே கலகத்தை இன்னொரு பக்கம் ஏற்படுத்திக் கொண்டிருந்ததும், வாசிப்பில் உற்று கவனிக்காமலே நடந்து கொண்டிருந்த வேதியியல் மாற்றம்.
21 வயது கல்லூரி மாணவி ஆர்யா, இந்த இளம் வயதில், திருவனந்தபுரம் மாநகராட்சி மேயர் பொறுப்பில் அமர இருப்பவர், சிறந்த புத்தக வாசகர் என்ற தகவல், அவரைப்பற்றி ஆங்கில இந்து நாளிதழில் வாசித்த கட்டுரையில் நழுவ விடக் கூடாத முக்கியமான வாக்கியமாகப் பட்டது. வங்கியில் உடன் பணியாற்றிய சி நாராயணராவ், அசுர வாசகர், வாசிப்பைப் பற்றிய மேற்கோள்கள் ஒருமுறை கேட்டதும், அருவி போல் கொட்டினார். அதில் முத்தான ஒன்று, புகழ் பெற்ற எழுத்தாளர் காஃப்கா குறிப்பிட்டது: “நாம் படித்துக் கொண்டிருக்கும் ஒரு புத்தகம் ஓங்கி மண்டையில் அடித்தாற்போல் நம்மை அதிர வைக்கவில்லை என்றால், அதை எதற்குப் படிப்பானேன், நம்முள் உறைந்திருக்கும் கடலுக்கான கோடரி போல் இருக்க வேண்டும் ஒரு புத்தகம்”
வாசிப்பின் பயணத்தில், அப்படி உள்ளே கலகம் நிகழ்த்திய கதைகள், கவிதைகள், கட்டுரைகள் தட்டுப்பட்டுக் கொண்டே இருக்கத்தான் செய்கின்றன. திரும்பிப் பார்க்கையில் வியக்க வைக்கும் வாய்ப்புகள் வழங்கிய வாசிப்புக்கு வந்தனம் செய்யாமல் எப்படி?
(தொடரும் ரசனை….) l