அறிஞர் லாரன்ஸ் கிராஸ் – தமிழில் ஆயிஷா இரா. நடராசன்
லாரன்ஸ் கிராஸ் (Lawrence Krauss) அரிசோனா பல்கலைக்கழக கோட்பாட்டு இயற்பியல் அறிஞர். ரிச்சர்டு டாக்கின்ஸுக்கு இணையாக பேசப்படும் மத-வாத எதிர்ப்பு அறிவியல் பிரச்சாரத்தின் மனிதநேய செயற்பாட்டாளர். மக்களுக்கான அறிவியல் புரிதல் (People Understanding of Science) என்று தனியாக ஒரு அமைப்பை நடத்தி வருபவர். ஏதுமற்றதில் இருந்து ஏதோ ஒன்றாக பிரபஞ்சம் உருவானது எப்படி (Universe From Nothing): Why there is something rather than Nothing) எனும் மிக பிரபலமான நூலின் ஆசிரியர். தி அட்லாண்டிக் இதழுக்கு அளித்த நேர்காணல். சந்திப்பு: ராஸ் ஆண்டர்சன், நன்றி: theatlantic.com.
தத்துவ இயலுக்கும் இயற்பியலுக்கமான உறவில் இருந்து தொடங்க விரும்புகிறேன்… தத்துவ ஞானத்தை இயற்பியல் கைவிட்டதாக சொல்லப்படுகிறதே… அது குறித்து உங்கள் நிலைப்பாடு என்ன?
லாரன்ஸ் கிராஸ்: பழைய ஆலன் ஜோக் மாதிரிதான். செயலில் இறங்க முடியாதவர்கள் ஆசிரியர்கள் ஆகிறார்கள். அதுவும் ஆக முடியாதவர்கள் உடற்பயிற்சி அளிப்பவராகிறார்கள். இயற்பியலின் வேகத்தை புரிந்து தெளிய இயலாத அல்லது அது தெளிந்ததால் கலக்கமுற்றவர்கள் தத்துவ ஞானத்தை நிரந்தரம் என்று போற்றுகிறார்கள். இயற்பியல் தன்னிச்சையான புதிய தேடல்கள் கொண்டது. இயற்கை தத்துவஞானம் எனும் ஆதி துறையில் இருந்து தானே பிரிந்து வந்தோம். இயற்பியலில் நேற்று இருந்தது இன்று மாறிவிட்டது. இன்று இருப்பது நாளை மாறிவிடப் போகிறது. தத்துவஞானம் பேசுகிறவர்கள்-மூடிய-முடிவானதென்று இறுகிப்போன பழைய மதவாத சித்தாந்தங்களை கைவிட முடியாதபோது உங்களை இயற்பியல் கைவிட்டது என்று சொல்வது பிதற்றல் வாதம்.
தத்துவஞானம் தனது மத அடிப்படைவாத வேர்களை கைவிட்டால் பிழைத்திருக்கும் அல்லது இயற்பியல் மட்டுமல்ல எல்லா துறைகளாலுமே அது கைவிடப்படும். நாம் பார்க்கத்தான் போகிறோம். நீட்ஸே,
ஹைடேக்கர், சார்த்தர் என்று தத்துவஞானத்திற்கு இறுதி வடிவம் கொடுத்த நவீனவாதிகள் அறிவியலின் நிழலில்தான் இளைப்பாறினார்கள்.
உங்கள் தற்போதைய நூல் பிரபஞ்சத்தின் பரிணாமவியலை பற்றி விரிவாக பேசுகிறது. தத்துவஞானம் 2000 வருடங்களாக அப்படியேதான் இருக்கிறது என்ற ஒரு அத்தியாயம் முழுதும் விவரித்துள்ளீர்கள். ஆனால் இன்றைய கணினி யுகம் செயற்கை நுண்ணறிவு இவையெல்லாம், அந்த கால தர்க்க-தத்துவஞான அடிப்படைகளின் மேல்தானே கட்டமைக்கப்பட்டது.
லாரன்ஸ் கிராஸ்: நான் ஏற்கனவே குறிப்பிட்டதுபோல இயற்கை தத்துவஞானம் என்பதில் இருந்துதான் இயற்பியல் எனும் தனிக்கிளை பிரிந்து வந்தது. அதேபோல கணினி இயலும் வந்தது என்று சொல்கிறேன். ஆனால் முற்றிலும் நான் எதிர்நிலையை எடுக்கவில்லை. நாங்கள் இயற்பியலாளர்கள் திறந்த மனதோடு தான் இருக்கிறோம். இயற்பியலாளர்கள் தேவையெனில் தத்துவஞானத்தில் நமக்கு பயன்படும் கூறுகளையும் பரிசீலிக்கிறார்கள். தவறு கிடையாது. ஆனால் அதன் இடத்தில் இருந்து தத்துவஞானம் என்பது தேவையான மாற்றம்மிக்க வளர்ச்சி நோக்கி அது நடைபோட முடியாத வண்ணம் மத அடிப்படைவாதம் அதை புதைகுழியில் தள்ளி இருக்கிறது. இன்று டிஜிட்டல் ஏசுவும் இன்ன பிற கிராஃபிக் கடவுள்களும் வந்துவிட்டதால் மதம் நவீன அறிவியல் ஆகிவிடாது. தத்துவஞானம் பகுத்தறிவின் திரட்டாக செயல்பட வேண்டும்.
அது சரியான வாதமல்ல என்கிறார்களே. இன்றும்கூட தத்துவஞானம் புதிய பல துறைகளை தோற்றுவித்தபடி தானே உள்ளது?
லாரன்ஸ்கிராஸ்: தத்துவஞானிகள் அறிவியலை – துறைகளை சாதித்தார்களா? எங்கே யாரையாவது சொல்லுங்கள். ஆலன் டூரிங்கும் பால் நீயுமனும் இல்லையேல் கணினியியல் உண்டா? அவர்கள்…
பால் நியூமன் யார்? பெரண்டன்ட் ரஸல் வழிவந்தவர்தானே. பெரண்டன்ட் ரஸல் ஒரு தத்துவ வாதி அல்லவா!
லாரன்ஸ்கிராஸ்: அழகான கேள்வி. ஆனால் ரஸல் ஒரு கணித வாதி. தத்துவஞானத்தை பொறுத்தவரை இரு வகையாக நான் பிரிப்பேன். ஒருவகை அதன் சாரமே இறுதி என ஏற்று கொண்டமத அடிப்படை வாத கூட்டம். மற்றொரு வகை அதை கேள்விக்கு உட்படுத்தும் எதிர் வகை காரல்மார்க்ஸ் உட்பட. ரஸல் என்ன செய்தார்? அவர் கணித்தின் தத்துவார்த்த அடிப்படைகள் குறித்து எழுதினார். முற்றிலும் தவறாகப் போய்விடவில்லையா?
அந்த விஷயத்தில் ஜன்ஸ்டீன் உட்பட பலரும் தவறவில்லையா?
லாரன்ஸ் கிராஸ்: ஆனால் விஞ்ஞானிகள் தன் கூற்று தவறாகும்போது மகிழ்ச்சி அடைகிறார்கள். ஏனெனில் அங்கே மறு ஆய்வுக்கும் புதிய கண்டுபிடிப்பிற்கும் வழி பிறக்கிறது. கணிதவாதிகள் கணினித் துறைக்கு வித்திட்டதே உண்மை. நீங்கள் சொல்லும் தர்க்கம் தத்துவத்திடமிருந்து கணினிக்கு வரவில்லை அது கணிதவாதிகளிடம் இருந்து வந்தது. தர்க்கம் என்பதே மதவாத தத்துவ ஞானத்தை கேள்விக்கு உட்படுத்தி வந்ததுதான்.
இதே போன்ற பிரச்சனை கோட்பாட்டு இயற்பியலுக்கும் ஆய்வு முறை இயற்பியலுக்கும் இடையேயும் உள்ளதா? நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்?
லாரன்ஸ் கிராஸ்: சில சமயங்களில் அப்படியான மோதல்களை தவிர்க்க முடியவில்லை. இழை கோட்பாட்டிற்கும் துகளியல் வாதிகளுக்கும் நடந்து வரும் அடிப்படை மோதல்களைச் சொல்லலாம். ஒரு கோட்பாட்டு இயற்பியல்வாதியாக நான் எப்போதுமே நேரடி ஆய்வுகள் சார்ந்தே இயங்குவதை இறுதியானதாக ஏற்கிறேன். ஐன்ஸ்டீன் விதிவிலக்கு. ஆனால் அவரேகூட வானியல் பதிவுகளை வைத்து கோட்பாட்டை சரி பார்க்க வேண்டி இருந்தது. எப்போதும் பிரபஞ்சமே நம்மை திகைக்க வைக்கிறது. அதற்கு மாறாக எதுவும் இல்லை.
தங்களது புதிய நூல் யுனிவர்ஸ் பிரம்நத்திங் (ஏதுமற்றத்திலிருந்து பிரபஞ்சம் வரை) டார்வினின் பரிணாமவியலை பிரபஞ்சவியலுக்கு பொருத்தும் முயற்சி என்று ரிச்சர்டு டாக்கின்ஸ் சொல்லி இருக்கிறாரே?
லாரன்ஸ் கிராஸ்: ஏதுமற்றதிலிருந்து ஏதாவது ஒன்று உருவாக முடியும் என்பதை இயற்பியல் தெளிவின்றி நிரூபித்துள்ளது. இந்த வெற்றிடம் ஒரு குவாண்ட வெற்றிடம். இது எதிலிருந்து வந்தது…. அது எதிலிருந்து வந்தது. கடைசியில் ஏதோ ஒன்று. அதை உருவாக்கியது யார் என்று மதவாத தத்துவ வாதிகள் கேட்கிறார்கள். இது காலங்காலமாக இருக்கும் கேள்வி. இந்தக் கேள்விக்கு இன்று இயற்பியலிடம் பதில் இருக்கிறது என்பதையும், அது என்ன பதில் என்பதையும் என் புத்தகம் நிறுவுகிறது. ரிச்சர்டு டாக்கின்ஸ் என் நூலுக்கு பின்னுரை எழுதினார். டார்வினின் உயிரிகளின் தோற்றம் நூலுக்கு இணையான இயற்பியல் படைப்பு என்று சொன்னரே ஒழிய… டார்வின் கோட்பாட்டை பிரபஞ்சவியலுக்கு புகுத்தும் முயற்சி என்று அவர் எங்கேயும் சொன்னதாக எனக்குத் தெரியவில்லை. பிரபஞ்சம் தன்னைத்தானே உருவாக்கிக்கொள்ள முடியும். குவாண்ட வெற்றிடத்தை புரிந்துகொண்டால் ஏதுமற்றதில் இருந்து இப்பிரபஞ்சம் உருவாகி இருப்பதை நாம் நிரூபிக்க முடியும்.
வெற்றிடத்தில் துகள்கள் உருவாவதை இயற்பியலாளர்கள் நிரூபித்துள்ளதாக சொல்கிறீர்களா? அல்லது இன்னும் ஆழமான கருத்தியலா?
லாரன்ஸ் கிராஸ்: ஆழமான கருத்தியல், துகள்கள் ஒன்றுமற்ற இடத்திலிருந்து உருவாகும் என்று நான் நிரூபித்ததாக சொல்வது அபத்தம். நாம் உண்மையை பேச வேண்டும். ஆனால் அதைவிட அதிகமாக மேலும் ஆழமாக நான் அறிவியல் ரீதியில் விவரித்து இருக்கிறேன். நத்திங் (Nothing) எனும் வெற்றிடம் நிலைத்தன்மை அற்ற பல பொது விதிகள் தோற்றுப் போகிற ஆர்வத்தை தூண்டும் இடம். வெற்றிடம் என்பது வேதியியல், உயிரியல், இயற்பியல் என் பொறியியல் என யாவற்றுக்கும் தனித்தனியே வேறுபடுகிறது. குவாண்ட ஈர்புவிசையும் குவாண்ட வெற்றிடமும் பற்றிய விவாதம் என்பது பெரு வெடிப்புக்கும் முந்தைய ஏதுமற்ற பிரபஞ்சத்தின் அடிப்படையில் இருந்து இன்று விரிந்து வரும் பிரபஞ்சத்தின் இருள் ஆற்றல் வரை பரிணாமம் அடைய ஒன்றிலிருந்து ஒன்றாக உருவாகி வந்திருப்பதன் நிரூபணம் தான் புத்தகம். இன்று நமக்கு கிடைத்திருக்கும்பல புதிய கண்டுபிடிப்புகளை பயன்படுத்தி இருக்கிறேன்.
இப்பிரபஞ்சத்தின் ஆற்றல்-அடர்த்தி வெற்றிடங்களின் ஆற்றலோடு தொடர்புடையது என்பது உங்களது 1995ஆம் வருடத்திய கோட்பாடு, கரும் பொருள் (Dark Matter) மற்றும் கரும் ஆற்றல் (Dark Energy) பற்றிய நிலைப்பாடு இன்று மாறி இருக்கிறதா.
லாரன்ஸ் கிராஸ்: கரும் ஆற்றல் குறித்து நமக்கு இயற்பியல் முழுமையாகவே விவரிக்கும் காலம் வரும். 1998இல் எனது ஆற்றல் – அடர்த்தி கரும் கோட்பாடு நிரூபிக்கப்பட்டது. பிரபஞ்சத்தின் தொடக்க பொழுதுகளில் இருந்த கரும் ஆற்றல் குவாண்ட வெற்றிடத்தோடு எவ்வகையால் வினை ஆற்றி இருக்கும் என்பதை வைத்து பிரபஞ்சம் உருவான மாதிரி (Model) ஒன்றை நான் 2012இல் முன் வைத்திருக்கிறேன். நம் பிரபஞ்சத்தில் இன்று நட்சத்திரக் கூட்டங்கள், கோள்கள், துணைக்கோள்கள் இவைகளை விட கரும் வெளியே அதிகம். கடந்த ஐம்பது ஆண்டுகளில் இந்த கரும் ஆற்றல் கரும் பொருள் குறித்து நடந்திருக்கும் திருப்புமுனை கண்டுபிடிப்புகளைத் தான் என் புத்தகம் விவரிக்கிறது.
ஆனால் அது ‘தோற்றம்’ எனும் ஒரு சொல் மூலம்… அதாவது இப்பிரபஞ்சத்தின் தோற்றம் குறித்த நூலாக மாறுகிறது. அல்லவா
லாரன்ஸ் கிராஸ்: ஆனால் அது புத்தகத்திற்குள் நுழைவதற்கான ஈர்ப்பு மட்டுமே நான் பல பிரஞ்சங்கள் (Multi Verse) பற்றி விரிவாக விவரித்து விவாதித்து இருக்கிறேன். காஸ்மோகோனி இன்றைய பல் பிரபஞ்சவியல் மூலம் இந்த நம் பிரபஞ்சம் சூழ்நிலை குவாண்ட வெற்றிடத்திலிருந்து வெளி என்ற ஒன்றே
இல்லாத, வெளி விசை ஏதும் இன்றியே, சுய பரிணாமம் அடையும் இயற்பியல் கோட்பாடும் சாத்தியமே என்று நிறுவி இருக்கிறேன். ஒற்றை புள்ளி (Singularity) என்பது காலமோ வெளியோ எல்லையோ எத்தகைய அளவீடோ இல்லாத குவாண்ட நிலையாக இன்றைய இயற்பியலால் அணுகப்படுகிறது. ஸ்டீபன் ஹாக்கிங், சீன் கரோல் போன்றவர்கள் தற்கால கருந்துளைகளை ஆய்வு செய்வதன் மூலம்… தோற்றம் குறித்த கருத்துகளை ஆய்வு செய்வதன் மூலம்… தோற்றம் குறித்த கருத்துக்களை உருவாக்கும் முனைப்பில் செயல்பட்டுள்ளனர்.
அறிவியல் நிகழ்வுகளில் மாபெரும் விவாதங்களை நடத்தும் நீங்கள் எப்போதும் அறிவியலை- மதவாதிகள் நம்பிக்கை வாதிகளை விமர்சிக்கவே பயன்படுத்துகிறீர்களே.
லாரன்ஸ் கிராஸ்: அறிவியலின் நோக்கமே சமூக விழிப்புணர்வுதான். உணர்ச்சியை தூண்டிவிட்டு பாகுபாடுகளை ஆழப்படுத்தி மக்களை வஞ்சிக்கும் மத அடிப்படைவாதம் அறிவியலின் உணர்ச்சியையும் தொழில்நுட்பத்தையும் தனக்காக வளைத்து ஏமாற்றுவதை வெளிச்சத்திற்கு கொண்டு வருவது முக்கியம் அல்லவா. அதை ரிச்சர்டு டாக்கின்ஸ் உட்பட நாங்கள் சிலர் பகிரங்கமாக சொல்கிறோம். பாலியல் குற்றச்சாட்டிலிருந்து அனைத்தையும் வாரி வீசுகிறார்கள். எங்களைப் போன்றவர்களின் குரலை அவர்கள் எப்படியாவது முடக்குகிறார்கள். அவர்களது ஆதரவு அரசுகளையும் உருவாக்குகிறார்கள்.
அறிவியல் புரட்சிகளால் ஆனது.வருங்காலத்தில் எத்தகைய புரட்சிகளை எதிர்பார்க்கிறீர்கள்.
லாரன்ஸ் கிராஸ்: எதையும் முன் அனுமானிப்பது தத்துவம் போலவே இருக்கும். பல கேள்விகள் உள்ளன. உதாரணமாக இந்தப் பிரபஞ்சத்தில் மூன்று சந்ததி அடிப்படை துகள்கள் இருப்பது ஏன் என்று துகளியல் விளக்க வேண்டும். எலக்ட்ரானைவிட புரோட்டான் இரண்டாயிரம் மடங்கு எடை மிகுந்ததாக ஏன் இருக்கிறது? நான்கு அடிப்படை விசைகள் ஏன்? பிரபஞ்சத்தின் ஆரம்ப திடீர் விரிவு (inflation) ஏன்? என்பன உட்பட ஒவ்வொன்றை நாம் அடைவதும் புரச்சியே. அப்போது நம் கண்களுக்கு புலப்படாத பல் பிரபஞ்சங்கள் நமக்கு புலனாகத் தொடங்கும். அந்த ஒரு கால கட்டம் எங்கோ தொலைவில் இல்லை. l