- பொ.வேல்சாமி
‘சைவ சித்தாந்தம்’ என்பது ஒரு குறிப்பிட தகுந்த இடத்தை இந்தியாவின் சமய வரலாற்றில் தனக்கெனப் பெற்றுள்ளது. சித்தாந்த சைவம் (தமிழ்நாடு) வீரசைவம் (கர்நாடகம்) காஷ்மீர சைவம் ( காஷ்மீர் ) போன்ற பிரிவுகள் இன்றும் இந்தியாவில் சிறப்புற்று விளங்கி வருகின்றன. ‘சைவ சித்தாந்தம்’ என்பது தமிழ்நாட்டுக்கே உரிய தனித்துவமான சிந்தனை முறை என்று கடந்த காலங்களில் பலரும் கூறி வந்தனர். அப்படி கூறி வந்தவர்கள் தங்களுடைய புனித நூல்களாக பன்னிரு திருமுறைகளையும் பதினான்கு சாஸ்திர நூல்களையும் சைவ சித்தாந்த சமயம் சார்ந்த தத்துவங்களைக் கூறுகின்ற நூல்களையும் சில நூற்றாண்டுகளாகக் கூறி வருகின்றனர். இவ்வாறான குறிப்பிடதகுந்த வரலாற்றை தனக்கென தமிழ்நாட்டில் பெற்றுள்ள சைவ சித்தாந்த நூல்களுக்கான பதிப்பு வரலாறு என்பது இன்றுவரை முறையாகவும் முழுமையாகவும் எழுதப்படவில்லை என்பது வியப்பளிக்கின்றது. சில நூறு ஆண்டுகளாக பல சைவ ஆசிரியர்களாலும் தமிழ்நாட்டில் உள்ள சைவ மடங்களாலும் புனிதமாகவும் போற்றுதலுக்குரியதாகவும் பேசப்பட்டு வந்த சைவ சித்தாந்த நூல்களைப் பற்றி இன்றைய நிலையிலும் அத்துறை சார்ந்த சிறந்த அறிஞர்களும் தெளிவற்ற குழப்பமான கருத்துக்களை கூறி வந்துள்ளனர். இதற்கு ஒரு எடுத்துக்காட்டாக
சைவ சித்தாந்தத்தில் குறிப்பிடதகுந்த சிறந்த அறிஞரான பேராசிரியர் மு.அருணாசலம் அவர்களைக் குறிப்பிடலாம். தமிழ் இலக்கிய வரலாற்றை சிறந்தமுறையில் நூற்றாண்டுகளாகப் பகுத்து விரித்து எழுதியவர் இவர் என்பதை தமிழ் அறிஞர் உலகம் அறியும். சைவ சித்தாந்த சமாஜம் பதினான்கு சாத்திர நூல்களையும் பிழை நீக்கி உரைகளுடன் பதிப்பித்தபோது அந்த பதிப்பின் செம்மைக்குப் பாடுபட்டவர் என்று இவர் 1991 இல் வந்த அந்நூலின் முன்னுரையில் சிறப்பிக்கப்படுகிறார்.
இத்தகைய சிறப்பு வாய்ந்த பேராசிரியர் ‘உந்தி களிறு’ என்று தொடங்கி சைவ சித்தாந்தம் நூல்களைக் கூறுகின்ற வெண்பாவை மதுரை நாயகம்பிள்ளை 1866 இல் முதன்முதலில் குறிப்பிடுவதால் அந்த வெண்பா காலத்தால் 1866 க்கு முந்தியது அல்ல என்று கூறுகின்றார். ஆனால் 1836-37 இல் வெளிவந்த “ராட்லர் அகராதி‘ இல் இந்த வெண்பா சைவ சித்தாந்த நூல்கள் பதினான்கு என்பதற்கு எடுத்துக்காட்டாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. கூடுதலாக அப்பாடல்களில் உள்ள பதினான்கு நூல்களும் தனித்தனியாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதேபோன்று 1861 இல் ஆறுமுகநாவலர் வெளியிட்ட திருக்குறள் பரிமேலழகர் உரையுடன் கூடிய நூலில் குறள் எண்.348,359 இல் அடிக்குறிப்பாகப் சைவ சித்தாந்த சாத்திர நூல்கள் பதினான்கினுள் ஒன்று என்று குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே பேராசிரியர் அவர்கள் குறிப்பிடுவது தவறான செய்தி. இந்த வெண்பா பழமையான காலத்திலிருந்தே சைவ சித்தாந்திகள் மத்தியில் பாரம்பரியமாக வழங்கி வந்தது என்பதை மேற்குறிப்பிட்ட செய்திகள் நமக்கு விளக்குகின்றன. (1)
இதேபோன்று சித்தாந்த சாஸ்திர நூல்களில் ஒன்றான ‘உண்மைநெறி விளக்கம்’ என்ற நூலை ‘உமாபதி சிவாச்சாரியார்’ எழுதவில்லை. அந்த நூலின் ஆசிரியர் ‘சீர்காழி தத்துவநாதர்’ என்றும் 1934 சமாஜ பதிப்பிலும் 1942 தருமபுர பதிப்பிலும் குறிப்பிடப்பட்டுள்ளது கவனிக்கத்தக்கது. அத்துடன் ‘உண்மைநெறி விளக்கம்’ பதினான்கு சாத்திர நூல்களில் இணைக்கப்பட்டுள்ளது பொருந்தாது என்றும் ‘துகளறு போதம்’ என்ற நூல்தான் இணைக்கப்பட வேண்டும் என்ற கருத்தும் இருந்தது. அதன்படி தருமபுர ஆதினத்தார் 1942 இல் வெளியிட்ட சைவ சித்தாந்த சாத்திர நூல்களின் தொகுப்பில் ‘துகளறு போதம்’ சேர்க்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. (2)
சைவ சித்தாந்த சாத்திர நூல்கள் பதினான்கின் மூலத்தையும் முதன்முதலில் 1866 இல் அச்சிட்டு வெளிபடுத்தியவர் மதுரை நாயகம்பிள்ளை என்று குறிப்பிடுவார்கள். ஆனால் இன்றுவரை அந்த நூற்களை எவரும் பார்க்கவில்லை என்றும் சொல்லி வந்தனர். 150 ஆண்டுகள் ஆன பின்னர் இப்பொழுது முதல்முதலாக ‘சிவஞானபோதம்’ ‘சிவஞானசித்தியார்’ ஆகிய நூல்களை உங்கள் பார்வைக்கு வைக்கும் வாய்ப்பு எனக்குக் கிட்டியது. (3) இந்த நூல்கள் வெளிவந்து சுமார் 6, 7 வருடங்கள் கழித்து இந்நூல்களுக்கான பழைய உரைகளுடனும் தன்னுடைய குறிப்புகளுடனும் கொ.சண்முகசுந்தர முதலியார் 1872, 1875, 1888, 1895 ஆகிய வருடங்களில் வெளியிட்டார். இந்த வெளியீடுகளில் இந்த நூல்களை வெளியிடுவதற்கான ஏட்டுச்சுவடிகளைக் கொடுத்தவர்கள் பெயர்களும் அந்தச் சுவடிகளின் தரமும் அவற்றை ஒப்பிட்டு இவர் திருத்திய குறிப்புகளைப் பற்றிய செய்திகளுடன் நூலாசிரியர் வரலாறு உரையாசிரியர்களின் வரலாறு அந்த உரைகளைப் பற்றிய சிறப்பு குறிப்புகள் போன்ற பல முக்கியமான செய்திகளைக் குறிப்பிட்டுள்ளார். இது தவிர சிவஞானபோத பேரூரை, சிவஞானபோதம் பாண்டிபெருமாள் விருத்தி, சிவஞானசித்தியார் அறுவர் உரை ( 2598 பக்கங்கள் ) சிவஞானசித்தியார் பரபக்கம், சித்தாந்த அஷ்டகம் என்ற பெயரில் உமாபதி சிவாச்சாரியார் எழுதிய ஏழு நூல்களின் தொகுதியாகவும் இந்த எட்டு நூல்களில் ஒன்றாகிய சிவப்பிரகாசத்தை மட்டும் பலராலும் பாராட்டப்பட்ட மதுரை சிவப்பிரகாசர் எழுதிய உரையுடன் தனியாகவும் வெளியிட்டுள்ளார். சைவ சித்தாந்த நூல்கள் அனைத்தையும் முதன்முதலாக (1872-1895)உரையுடன் வெளியிட்டவர் கொ.சண்முகசுந்தர முதலியார் என்பது குறிப்பிடத்தக்கது. (4)
1892, 1898 ஆகிய இரண்டு ஆண்டுகளில் சிவஞானபோதம், சிவஞானசித்தியார், சிவப்பிரகாசம் ஆகிய மூன்று நூல்களைத் தவிர்த்து மற்ற பதினோறு நூல்களை அந்நூல்களுக்கான பழைய உரைகளுடன் முருகேசமுதலியாரால் அச்சிடப்பட்டு வெளிவந்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. சில நூல்களுக்கு பதவுரையை இயற்றி கொடுத்தவர் என்று பூவை கல்யாணசுந்தர முதலியார் பெயரும் எல்லா நூல்களை பார்வையிட்டு கொடுத்தவர் என்று சுந்தரமூர்த்தி முதலியார் என்பவர் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனையடுத்து 1898 இல் சைவ சித்தாந்த நூல்கள் அனைத்தையும் அவற்றின் உரைகளுடன் ‘மெய்கண்ட சாத்திரம்’ என்ற பெயரில் பூவை கல்யாணசுந்தர முதலியார் அவர்களின் மாணாக்கர் வண்ணக்களஞ்சியம் காஞ்சி நாகலிங்கமுதலியார் வெளியிட்டார். அந்த நூலை வெளியிடுவதற்கு யார் யாரிடம் இருந்து ஏட்டுச்சுவடிகளைப் பெற்றார் என்ற குறிப்புடன் நூல்களின் பல பகுதிகளுக்கு தன்னால் எழுதப்பட்ட விளக்கக் குறிப்புகளும் சேர்க்கப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டுள்ளார். இவ்வாறு 1866 லிருந்து 1900 முடிவதற்குள் சைவ சித்தாந்த நூல்கள் அனைத்தும் அவற்றின் பழைய உரைகளுடன் வெளியிடப்பட்டு விட்டன என்பது குறிப்பிடதக்கது. இவற்றுள் சில நூல்கள் இலங்கையிலிருந்தும் வெளியிடப்பட்டுள்ளன. (5)