- பா.ரா.சுப்பிரமணியன்
1983ஆம் ஆண்டு ஜெர்மனியில் (அப்போது மேற்கு ஜெர்மனி) கொலோன் பல்கலைக்கழகத்து இந்தியவியல் துறையில் 11 ஆண்டுகள் தமிழ் விரிவுரையாளராகப் பணியாற்றிவிட்டு மனைவி லலிதாவுடனும் ஒன்பது வயது மகன் அருணுடனும் தமிழகம் வந்துசேர்ந்தேன். அந்த ஆண்டின் இறுதியில் தஞ்சாவூர்த் தமிழ்ப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் வ.ஐ. சுப்பிரமணியம் பேரகராதித் திட்டத்தின் தலைமை ஆசிரியர் மு. அருணாசலத்தைச் சந்திக்கச் சொன்னார். சென்று சந்தித்தேன். அவர் என்னை மொழியியல் தொடர்பான பகுதிக்குப் பதிப்பாசிரியராகப் பணி நியமனம் செய்தார். சென்னைப் பல்கலை அகராதியைத் திருத்தும் அந்தத் திட்டத்தில் மிகுந்த ஈடுபாட்டுடன் உழைத்துவந்தேன்.
1986ஆம் ஆண்டின் தொடக்கத்தில் க்ரியா ராமகிருஷ்ணன் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்து மொழியியல் பேராசிரியரும் என் நண்பருமான குமாரசாமி ராஜாவை அழைத்துக்கொண்டு தஞ்சாவூர் வந்து என்னைச் சந்தித்தார். க்ரியா வெளியீட்டகம் தற்காலத் தமிழிற்கு அகராதி உருவாக்க விரும்புவதாகவும் அதற்குத் தலைமைப் பொறுப்பேற்று நடத்துவதற்கு என்னைக் கேட்கலாம் என்று அப்போது மைசூர் இந்திய மொழிகள் நடுவண் நிறுவனத்தில் துணை இயக்குநராக இருந்த முனைவர் இ.அண்ணாமலை தெரிவித்ததாகவும் அதற்காக என்னை அறிந்த குமாரசாமி ராஜாவை அழைத்துக்கொண்டு வந்ததாகவும் கூறினார். நான் என் குடும்பத்தைக் கலந்துகொண்டு என் முடிவை தெரிவிப்பதாகச் சொன்னேன். என் மனைவியிடமும் பேசினார். ஒரிரு மாதங்கள் கழித்து மீண்டும் தொடர்பு கொண்டு கேட்டார். துணைவேந்தர் வ.ஐ. சுப்பிரமணியத்தைச் சந்தித்து அவர் முடிவை அறிந்து சொல்வதாகச் சொன்னேன். வ.ஐ. சு. அவர்கள் கேரளப் பல்கலையில் இருந்தபோது எனது முனைவர் பட்ட ஆய்வின் நெறியாளர். அவர் கருத்தறிந்து முடிவெடுக்கலாம் என்று எண்ணினேன். அவரைச் சந்தித்து இந்த அழைப்பைப் பற்றித் தெரிவித்தேன். உனக்கு விருப்பம் என்றால் விலகல் கடிதத்தை அலுவலகத்தில் கொடுத்துவிடு என்று கூறிவிட்டு, வேறு கருத்து எதுவும் சொல்லாமல் விருட்டென்று எழுந்து உள்ளே போய்விட்டார். கனத்த நெஞ்சுடன் விலகல் கடிதத்தைக் கொடுத்துவிட்டு வந்தேன்.
அண்ணாமலை நகர், சிதம்பரம்
க்ரியா அகராதித் திட்டம் 1983 ஜூன் மாதம் சிதம்பரம் அண்ணாமலை நகரில் மொழியியல் பேராசிரியர் முருகையன் வீட்டு மாடியில் தொடங்கப்பட்டது. பேராசிரியர் குமாரசாமி ராஜாவுடன் கலந்து ஆலோசிக்க அண்ணாமலை நகரைத் தேர்ந்தெடுத்தோம். என் குடும்பம் தஞ்சாவூரில் இருந்ததால் திங்கள் முதல் வெள்ளி மதியம் வரை அண்ணாமலை நகரில் அலுவலகத்திலேயே தங்கியிருப்பேன். என்னுடன் அகராதிப் பணியில் உதவிசெய்வதற்காக் கோபி என்னும் கோபாலகிருஷ்ணன் உடன் இருந்தார். இவர் பிற்காலத்தில் சிறந்த எழுத்தாளராக உருவானார்.
ராமகிருஷ்ணன் (இனி ராம் என்று எப்போதும் போல் அழைக்கிறேன்) சில மாதங்களுக்கு முன்பே இத்திட்டத்தின் பரிசோதனை முயற்சியாக முனைவர் து. மூர்த்தி (பிற்காலத்தில் அலிகார் பல்கலையில் தமிழ்த் துறையில் பணியாற்றியவர்) உதவியுடன் சென்னைப் பல்கலைக்கழக அகராதியிலிருந்து (லெக்சிகன்) இக்காலத்தமிழிலும் வழங்கும் சொற்களை மஞ்சள் அட்டையில் எழுதத் தொடங்கியிருந்தார். அந்த வழிமுறையில் குறைபாடுகள் பல உண்டு. சொல் இருக்கும் ஆனால் அந்த அகராதி தந்திருக்கும் பொருள் இக்காலத்தில் இருக்காது; அல்லது அந்தப் பொருளிலிருந்து கிளைத்துவந்திருக்கும் பல பொருள்களை அதில் காண முடியாது. மேலும், தற்காலத் தமிழுக்கான அகராதி தற்காலத் தமிழை அடிப்படையாகக் கொண்டு உருவாக வேண்டுமே தவிரப் பல காலத்துச் சொற்களையும் முற்கால பொருளையும் கொண்டிருக்கும் வேறொரு அகராதியைப் பயன்படுத்திச் சமகாலப் தன்மையைப் பிரதிபலிக்க முடியாது. என் வாதத்தை ராம் ஏற்றுக்கொண்டார். தற்காலத் தமிழ் எது என்பதைக் கவனத்தில் கொண்டு அதற்கேற்ப நூல்களைத் தேர்வுசெய்து அவற்றிலிருந்து சொற்களையும் பொருளையும் தொகுக்க வேண்டும் என்று முடிவுசெய்தோம்.
சென்னை
1987ஆம் ஆண்டு அகராதித் திட்ட அலுவலகம் சென்னைக்கு வந்தது. முழுமையான அகராதிக் குழு அமையப்பெற்றது.
நாங்கள் எடுத்த முடிவிற்கேற்பப் பணித்திட்டங்களை வகுத்தேன். மூன்று குழுக்களாகப் பிரிக்கப்பட்டுப் பணி நடைபெறத் தொடங்கியது. முதல் குழுவினரின் பணி அகராதிக்குத் தேவை எனத் தீர்மானிக்கப்பட்ட நூல்களைப் படித்து அவற்றில் உயிரெழுத்துக்களில் தொடங்கும் சொற்களை ஒரு நிறத்திலும், மெய்யெழுத்துக்களில் ‘க’ முதல் ‘ந’ முடிய உள்ள சொற்களை மற்றொரு நிறத்திலும், ‘ப’ முதல் ‘வ’ முடிய உள்ள சொற்களை வேறொரு நிறத்திலும் அடிக்கோடிட வேண்டும். இவ்வாறு நூல்களைப் படித்துச் சொற்களை மூவகை வண்ணங்களில் வேறுபடுத்துவோர் நூல் வாசிப்போர் (Readers) ஆனார்கள். எதற்காக மூன்று நிறங்களில் சொற்கள் வேறுபடுத்திக் காட்டப்பட்டன என்று கூற வேண்டும்.
தமிழகத்தில் எண்பதுகளின் இறுதியில்தான் கணினி அறிமுகமாயிற்று. எனவே சொற்கள் அனைத்தும் துண்டுத்தாள்களில் எழுதி அகரவரிசைப்படுத்தப்பட வேண்டும். அகராதிக்கு முதலில் உயிரெழுத்துக்களில் தொடங்கும் சொற்கள் தேவை. நூல்களில் உயிரெழுத்துக்களில் தொடங்கும் சொற்கள் ஒரு நிறத்தில் அடிக்கோடிடப்பட்டிருப்பதால் அந்தச் சொற்களை இரண்டாவது குழுவினர் துண்டுத்தாள்களில் எழுத வேண்டும். துண்டுத்தாளில் சொல் மட்டும் அல்ல அந்தச் சொல்லின் பொருளை வெளிப்படுத்தும் அளவிற்கான வாக்கியத்துடன் எழுத வேண்டும்.
இவ்வாறு எழுதப்பட்ட துண்டுத்தாள்கள் மூன்றாவது குழுவினர்க்கு வந்து சேரும். இவர்கள் சொல்லிற்குப் பொருள் அல்லது விளக்கம் தரும் பணியை மேற்கொள்வார்கள். தெரியாத சொல்லிற்கு தெரிந்த சொல்லைப் பொருளாகத் தருவதும் தெரிந்த சொல்லிற்கு விளக்கம் அல்லது வரையறை தருவதும் இவர்கள் பணி.
மூன்றாவது குழுவினரிடமிருந்து அவை என் பார்வைக்கு வரும். சொல்லின் பொருளையும் விளக்கத்தையும் வரையறையையும் சரிபார்ப்பதும், ஒரு சொல்லிற்குப் பல பொருள் இருந்தால் அந்தப் பொருள்களைச் சில குறிப்பிட்ட முறையில் வரிசைப்படுத்துவதும், சொல் எந்த இலக்கண வகையைச் சேர்ந்தது அந்த இலக்கண வகைக்குத் தகுந்தபடி பொருள் தரப்பட்டிருக்கிறதா என்பதைச் சரிபார்ப்பதும் என் பணியாகும்.
இந்த முறையில் சரிபார்க்கப்பட்ட 50 அல்லது 60 சொற்கள் தட்டச்சுசெய்யப்படும்; ‘கார்பன்’ தாள் வைக்கப்பட்டு 6 படிகள் எடுக்கப்படும். பின்னர் அவை கட்டியான மேலட்டை வைத்துத் தைக்கப்பட்டு எங்கள் வல்லுநர் குழுவிற்கு அனுப்பபடும். அவர்கள் தங்கள் கருத்தை எழுதி அனுப்பிவைப்பார்கள். அவர்களுடைய கருத்துக்களைப் படித்துப்பார்த்துத் தேவையானவற்றை ஏற்றுத் திருத்தங்கள் செய்யப்படும். அவ்வப்போது கூட்டப்படும் வல்லுநர் குழுக் கூட்டத்தில் சிக்கல் நிறைந்த சொற்களும் மொழியின் இக்கால இலக்கண விதிகளும் விவாதிக்கப்படும். இந்த வல்லுநர் குழுக் கூட்ட விவாதங்களை ராம் ஒலிப்பதிவு செய்துவைத்திருந்தார் என்பதையும் நான் அறிவேன்.
தற்காலத் தமிழ் அகராதி இரு மொழி அகராதி என்பதால் தமிழ்த் தொடர்பான பணிகள் முடிந்த சொற்களுக்கு நாங்கள் அமைத்திருந்த ஆங்கில வல்லுநர் குழுவினரோடு ஒன்றாக இருந்து ஆங்கிலப் பொருளை முடிவுசெய்வோம். அவர்களோடு நானும் ராமும் உடன் இருப்போம்; ஆங்கிலப்பொருளும் முடிவுசெய்யப்பட்டவுடன் அகராதிச் சொல் பதிவுகள் நிறைவடையும். அச்சு வேலைகள் ராமின் முழு பொறுப்பில் இருந்தன.
இந்த அகராதித் திட்டத்தில் பணிசெய்தவர்கள், வல்லுநர் குழுவில் இடம்பெற்றிருந்தவர்கள், அகராதியின் இறுதிக் கட்டத்தில் கணினியில் முழு அகராதியையும் பதிவிட உதவியவர்கள் அனைவரையும், முதல் பதிப்பில் அச்சிட்ட பக்கங்களின் ஒளிப்படமெடுத்து, கீழே தந்திருக்கிறேன். 15875 சொற்களைக் கொண்ட இந்த முதல் பதிப்பு அகராதி 1992ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. ராம் அகராதியை மட்டும் அல்ல அவரின் வெளியீடுகள் எதையும் பெரிய விழாவாகக் கொண்டாடுவதில்லை. எங்கள் ஐந்தாண்டு கடும் உழைப்பினால் உருவாகிய அகராதி மிக அடக்கமாக வெளியிடப்பட்டது.
முதல் பதிப்பு வெளிவந்து 29 ஆண்டுகள் கழிந்துவிட்டன. இந்த நேரத்தில் முதல் பதிப்பில் என்னுடன் பணிசெய்த அனைவரையும் நன்றியுடனும் நேசத்துடனும் நினைத்துக்கொள்கிறேன். ஐந்தாண்டு காலம் அகராதிதான் என்னை ஆட்கொண்டிருந்தது. அதனால் என் மனைவிக்கும் மகனுக்கும் தர வேண்டிய கவனிப்பைத் தராமல் இருந்துவிட்டேனோ என்னும் நினைப்பு இப்போது எழுகிறது. என் சகப் பணியாளர்களை எண்பது வயதை தொட்டுவிட்ட நான் மனமார வாழ்த்துகிறேன்.
அகராதியின் மூன்றாம் பதிப்பையும் வெளியிட்டு மரணத்தைத் தழுவிக்கொண்டார், ராம். அவரால் நான் குடும்பத்துடன் சென்னைக்கு வந்தேன்; அந்த நிகழ்வை நானும் என் மனைவி லலிதாவும் இன்றளவும் நினைத்துக்கொள்கிறோம்.
மூன்றாம் பதிப்பு வெளிவந்துவிட்ட பின் முதல் பதிப்பை நினைவு கூர்பவர்கள் மிகக் குறைவாகத்தான் இருப்பார்கள். என் நினைவிலிருந்து அகராதி உருவாக்க நினைவுகளும் நிகழ்ச்சிகளும் நீங்கிவிடும் முன் இதை எழுதுகிறேன். ராமின் நினைவு என்னிடம் இருக்கும், பதிப்பு நிகழ்ச்சிகள் சிறிதுசிறிதாக அகன்று செல்கின்றன. அண்மைக்காலத்தில் தமிழ்மொழிக்கான அகராதி , அதுவும் என்னைச் சுற்றி எழுந்த அகராதி ஒன்றின் தொடக்க வரலாலாற்றை மிகச் சுருக்கமாக இங்குப் பதிவுசெய்திருக்கிறேன். இந்த அகராதிக்குப் பின் நான் மரபுத்தொடர் அகராதி (அடையாளம் வெளியீடு ), சொற்சேர்க்கை அகராதி (பாரதி புத்தகாலயம்) உட்பட வேறு சில நோக்கு நூல்களையும் மொழி அறக்கட்டளையில் உருவாக்கி வெளியிட்டிருந்தாலும் 1992இல் க்ரியா அகராதி முதல் பதிப்பிற்குத் தலைமையேற்று வெளியிட்டபோது நான் அடைந்த உள்ளக் கிளர்ச்சியை மறக்க முடியாது.
அகராதிக் குழு (முதல் பதிப்பில் உள்ளபடி)