- ஸ்ரீநிவாஸ் பிரபு
இயற்கையில் கரைந்து
பச்சையம் போர்த்திய கானகத்துள்
பறந்து கொண்டிருக்கின்றன
வண்ணத்துப் பூச்சிகளும், வெட்டுக்கிளிகளும்.
இறகுகளின் படபடப்பில்
அடங்காமல் நீண்டு
துடிக்துக்கொண்டே இருக்கிறது மென்மனம்.
மகரந்தங்களுக்கு மத்தியிலான தேனின் ருசி
ஆசீர்வாதமாய் சாந்தப்படுத்துகிறது.
அமைதி ததும்பும் தருணத்தில்
இதயத்தினின்றும் ரீங்காரமிடும் பாடல்
இனிமையானதென்று சிலாகிக்கிறார்கள்
மனதின் அடுக்குகளில் உரைந்திருப்பவை
அதனினினும் இனிமையானதென்று
புரிந்து கொள்வதே இல்லை.
பார்வை பயணப்படும் தூரம் வரை
பச்சைக் கம்பளமாய் விரித்திட்ட பாதைதனில்
ஏகாந்தமாய் பயணித்து
உள்ளுக்குள் ஒளிரும் சந்தர்ப்பங்கள்
எப்போதாவதுதான் வாய்க்கிறது.
வண்ணத்துப்பூச்சி, வெட்டுக்கிளிகளின் மொழிகள்
வேறு வேறானாலும்
வாழ்க்கை என்றென்றும்
எதிர்பார்ப்பதும், பரிசளிப்பதும்
அறியாமையிலிருந்து அனுபவத்திற்கு நகர்த்தும்
பயணங்களைத்தான்