‘க்ரியா’ ராமகிருஷ்ணன்
- ஆதி
‘க்ரியா’ வெளியிட்ட புத்தகங்கள் குறித்து கல்லூரிக் காலத்திலேயே அறிந்திருந்திருந்தேன். என்னுடைய பேராசிரியர் க. பூரணச்சந்திரன், அவருடைய நண்பர் பேராசிரியர் எஸ். ஆல்பர்ட் ஆகியோர் மூலமாக ‘க்ரியா’ பற்றிக் கேள்விப்பட்டிருந்தேன்.
ந. முத்துசாமியின் ‘சுவரொட்டிகள்’, கிரிஷ் கர்னாட்டின் ‘துக்ளக்’, பாதல் சர்க்காரின் ‘மீதி சரித்திரம்’, குட்டி இளவரசன், சூரியனின் கடைசி கிரணத்திலிருந்து முதல் கிரணம் வரை, ‘க்ரியா அகராதி’ முதல் பதிப்பு ஆகியவற்றின் மூலமாக இளம் வயதிலேயே ‘க்ரியா’ பற்றிய ஒரு நன்மதிப்பு மனதில் உருவாகியிருந்தது. அதன்பிறகு தமிழ் பதிப்புச் சூழலில் எந்த வகையிலும் தவிர்த்துவிட முடியாத புத்தகங்களை வெளியிட்ட ‘க்ரியா’ வின் நூல்களை தொடர்ந்து கவனித்துவந்த வண்ணம் இருந்தேன்.
‘க்ரியா’ வெளியிட்ட குறிப்பிடத்தக்க எழுத்தாளர்கள்: சுந்தர ராமசாமி, அசோகமித்திரன், அம்பை, சா. கந்தசாமி, ந. முத்துசாமி, ஜி. நாகராஜன், எஸ்.வி. ராஜதுரை, ஐராவதம் மகாதேவன், எஸ். தியடோர் பாஸ்கரன், தங்க. ஜெயராமன், இராஜேந்திரசோழன், சார்வாகன், எஸ். சம்பத், சி. மணி, திலிப்குமார், இமையம், ந. பிச்சமூர்த்தி, மௌனி, ஆல்பெர் காம்யு, ழான் போல் சார்த்ர், ஃப்ரான்ஸ் காஃப்கா, ஸீக்ஃபிரீட் லென்ஸ், அந்துவான் எக்சுபரி, ஒமர் கய்யாம், ழாக் ப்ரெவர், தாவோ தேஜிங், ரே பிராட்பரி, விக்தோர் ஹ்யூகோ… (பிரெஞ்சு, ஜெர்மன் மொழிகளில் இருந்து நேரடி மொழிபெயர்ப்புகள் ‘க்ரியா’ மூலமாகவே தமிழுக்குக் கிடைத்தன.)
‘க்ரியா’ என்ற பெயரைக் கேட்டவுடன் பல எழுத்தாளர்கள் அடுத்த வார்த்தையே பேச மாட்டார்கள். அதற்குக் காரணம், புத்தகங்களின் உள்ளடக்கத் தரத்திலும் எடிட்டிங்கிலும் ‘க்ரியா’ நிறுவனத்தில் காட்டப்படும் உறுதி. உண்மையில் இந்த கறார்தன்மைதான் ‘க்ரியா’ புத்தகங்களை பேச வைக்கிறது, நிலைத்திருக்கச் செய்கிறது. ஆனால், புத்தகங்களை ஒரு கலைப்படைப்பாக உருவாக்குவதற்கு மெனக்கெடவோ, வெளிக்கொண்டுவரவோ அத்தகைய பொறுமையும் துணிச்சலும் நம்மிடம் இல்லை. பெரும்பாலான பதிப்பகங்களும் சமூகமும் புத்தகங்களை வெறும் பண்டங்களாக நினைப்பதும் இந்தப் போக்குக்குக் காரணம்.
பல குறிப்பிடத்தகுந்த புத்தகங்கள் ஒரு மனிதரின் வாழ்நாளைக் காட்டிலும் அதிக ஆயுசு கொண்டவை. அவை கலைப்படைப்புகளைப் போல் தனி மனிதரிடத்திலும் சமூகத்திலும் பெரும் தாக்கம் செலுத்துகின்றன. இந்தப் புரிதலுடனே ‘க்ரியா’ புத்தகங்கள் வெளியாகிவந்தன.
வியக்க வைத்தவர்
‘க்ரியா’ ராமகிருஷ்ணனுடன் எனக்கு நெருக்கமான பழக்கமெல்லாம் இல்லை. ஒரு சில முறை அவருடைய அலுவலகத்திலும் சென்னை புத்தகக் காட்சியில் கூடுதலாக சில முறையும் சந்தித்துப் பேசியிருக்கிறேன். ஒரு ஆளுமையை எட்ட நின்று வியந்து பார்க்கும் ஒரு சிறுவனாகவே நான் இருந்தேன்.
புத்தகத் தயாரிப்பிலும் எடிட்டிங்கிலும் திட்டவட்டமாக இருக்கும் ‘க்ரியா’ ராமகிருஷ்ணன், மனிதர்களை மிகுந்த அன்புடன் நடத்துபவர். வாசகராகவும் படைப்பாளியாகவும் அவரிடம் இயல்பாக பேச முடியும், அனைவரையும் மதிக்கக்கூடிய மனிதர். நம்முடைய சிறிய கட்டுரை பிடித்திருந்தாலும், உடனே அழைத்துப் பாராட்டுவார். தொடர்ந்து அதேபோல் எழுத ஊக்கப்படுத்துவார். நம் துறை சார்ந்து உலக விஷயங்களை அவர் கவனத்துக்கு வரும்போது, அதை மின்னஞ்சலில் அனுப்புவார்.
2012இல் ‘க்ரியா’ பறவைகள் வழிகாட்டிக் கையேட்டை உருவாக்கும் பணி சார்ந்து சில கருத்துகளை ‘க்ரியா’ குழுவினருடன் பகிர்ந்துகொள்ளும் வாய்ப்பு கவிஞர் ஆசை, காட்டுயிர் ஆராய்ச்சியாளர் ப. ஜெகநாதன் மூலம் கிடைத்தது. அப்போது ‘க்ரியா’ நிறுவனம் கடைப்பிடிக்கும் எடிட்டிங் நடைமுறைகள் குறித்துத் தெரிந்துகொள்ள வாய்ப்பு கிடைத்தது.
‘க்ரியா’வின் எடிட்டிங் நடைமுறையில் கடைப்பிடிக்கப்படும் முக்கிய அம்சம் நூலாசிரியர் அல்லது மொழிபெயர்ப்பாளர், ‘க்ரியா’ ராமகிருஷணன், ‘க்ரியா’ உதவி ஆசிரியர், வாய்ப்பிருந்தால் துறை சார்ந்த விற்பன்னர் ஆகியோர் ஒன்றாக உட்கார்ந்து புத்தகத்தை சத்தமாக வாசித்து திருத்தங்களை மேற்கொள்வது. ஒரு புத்தகத்தில் இத்தனை உழைப்பு செலுத்தப்படும்போது, அது எப்படி சாதாரண நூலாக வெளிவரும்?
இந்த இடத்தில் இன்னொரு விஷயத்தையும் சுட்டிக்காட்ட வேண்டும். தமிழ்ப் பதிப்பகங்களில் எழுத்தாளருக்கு உரிமத்தொகை கொடுப்பதே அபூர்வம். அப்படியிருக்கும்போது, பதிப்பகத்தில் பணிபுரிபவர்களின் சம்பள நிலை குறித்துத் தனியாகச் சொல்லத் தேவையில்லை. இந்தப் பின்னணியில் ஒரு புத்தகத்தை உருவாக்குவதில் பெரும் உழைப்பைச் செலுத்தும் ராமகிருஷ்ணன், தன் ஊழியர்களுக்கு கௌரவமான சம்பளத்தை வழங்குவதிலும் என்றைக்கும் சமரசம் செய்துகொண்டதில்லை. பண்பாடு, சமூக மேம்பாடு
‘க்ரியா’ ராமகிருஷ்ணனை ‘க்ரியா’ என்ற புத்தகப் பதிப்பு நிறுவனத்துடன் சுருக்கிவிட முடியாது. அவர் சிறந்த பதிப்பாளர், எடிட்டர் என்றுதான் இந்தத் தலைமுறையினர் பலரும் நினைக்கிறார்கள். அவர் சிறந்த எழுத்தாளரும்கூட, தன் ஆற்றல் முழுவதையும் பதிப்பிப்பதிலும் எடிட்டிங்கிலும் காட்டிவிட்டதால், அவருடைய எழுத்துத் திறமையை நம்மால் முழுமையாக உணர முடியாமல் போய்விட்டது.
‘யுனெஸ்கோ கூரியர்’ வெளியிட்ட உலக அளவிலான தமிழ்நாடு சிறப்பிதழில் தமிழ்ப் பண்பாடு, சமூகம் பற்றிய இரண்டு கட்டுரைகளை ராமகிருஷ்ணன் எழுதியிருக்கிறார். இது தவிர ‘கசடதபற’ இதழில் கதைகளை எழுதியிருக்கிறார். அந்தக் கதைகள் குறிப்பிடத்தக்கவை என அம்பை உட்பட பல எழுத்தாளர்கள் சுட்டிக்காட்டியிருக்கிறார்கள். தமிழில் இருந்து ஆங்கிலத்துக்குச் சென்ற நூல்களை மொழிபெயர்ப்பதிலும் செப்பம் செய்வதிலும் பெரும் பங்களித்திருக்கிறார். அதேபோல் தமிழிலும் ஆங்கிலத்திலும் வெளியான நூற்றுக்கணக்கான புத்தகங்களை பலருக்கு எடிட் செய்து கொடுத்திருக்கிறார். இது குறித்து நூல்களில் சம்பந்தப்பட்டவர்கள் அதைக் குறிப்பிட்டிருந்தாலும், இந்தப் பணிகளைப் பற்றி ராமகிருஷ்ணன் எங்கும் பிரலாபித்துக்கொண்டது கிடையாது.
ஒரு வாழும் மொழிக்கு, மக்களிடையே புழங்குவதன் காரணமாக உயிர்த்திருக்கும் மொழிக்கு தற்கால அகராதி அவசியம். ‘க்ரியா’ அகராதி முதல் பதிப்பு வந்தபோது தனித்தமிழ்வாதிகள் அதைக் கடுமையாக விமர்சித்தார்கள். ஆனால், தெற்காசிய மொழிகளில் தமிழில் மட்டும், அதுவும் ‘க்ரியா’ நிறுவனத்தால் மட்டும் மூன்றாம் முறையாகத் திருத்தி விரிவாக்கப்பட்ட அகராதி வெளியாகியுள்ளது மிகப் பெரிய சாதனை என டேவிட் ஷுல்மன் உள்ளிட்ட உலக அறிஞர்கள் பாராட்டுகிறார்கள். அந்த அகராதி மூன்று முறை விரிவாக்கப்பட்டு வெளியாவதற்கு ‘க்ரியா’ ராமகிருஷ்ணனே முதன்மைக் காரணம்.
ரோஜா முத்தையா இறந்த பிறகு அவருடைய நூலகத்தை சிகாகோ பல்கலைக்கழகம் வாங்கியிருந்தது. அதற்கான முன்முயற்சி எடுத்தவர்களில் ஒருவர் ராமகிருஷ்ணன். அவருடைய புத்தகச் சேகரிப்பை அமெரிக்கா கொண்டு செல்லவும் திட்டமிடப்பட்டிருந்தது. தமிழ் புத்தகச் சேகரிப்பு தமிழர்களுக்குப் பயன்படும் வகையில், அவர்கள் அணுகக்கூடிய வகையில் இருக்க வேண்டுமே ஒழிய, அமெரிக்கா கொண்டுசெல்வதால் அந்த சேகரிப்பின் மூலம் அடைய நினைக்கும் பலன் கிடைக்காமலே போய்விடும் என்பதை ராமகிருஷ்ணன் சுட்டிக்காட்டினார். இதன் காரணமாகவே ரோஜா முத்தையா நூலகம் தரமணியில் அமைந்தது. ரோஜா முத்தையா நூலகம் தவிர்க்க முடியாத ஒன்றாக இன்றைக்கு இருக்கிறது. அதனுடன் இணைந்து எழுத்தாளர்கள், சமூகச் செயற்பாட்டாளர்கள் தொடர்ச்சியாகப் பணிபுரிந்துவருகிறார்கள். ஆனால், அந்த நூலகம் இங்கேயே அமைவதற்குக் காரணமான ராமகிருஷ்ணனின் பங்கை நாம் உணர்ந்திருக்கிறோமா?
இன்றைக்குத் தமிழ் நவீன நாடகத்தின் அடையாளமாக நிலைபெற்றுவிட்ட ‘கூத்துப்பட்டறை’ உருவாவதற்கும் ராமகிருஷ்ணன் காரணமாக இருந்திருக்கிறார். தமிழ் சினிமா நடிகர்கள், அவர்கள் பெற்ற பயிற்சிகளால் கூத்துப் பட்டறைக்கு வெளிச்சம் கிடைத்திருக்கிறது. ஆனால், கூத்துப்பட்டறை’ உருவானதில் ராமகிருஷ்ணனின் பங்கு பற்றி பொதுவாக யாருக்கும் தெரியாது.
தமிழ் மொழிநடை, மொழியை மேம்படுத்தும் பணிகளுக்காக ‘மொழி அறக்கட்டளை’ உருவாக்கப்பட்டது. ‘தமிழ் நடைக் கையேடு’ என்கிற நூலை அந்த அறக்கட்டளை வெளியிட்டுள்ளது. அந்த அறக்கட்டளையின் உருவாக்கத்திலும் ராமகிருஷ்ணனின் பங்கு இருந்தது. இப்படித் தமிழ் மொழி, பண்பாடு, சமூகம் ஆகியவற்றை பாதுகாப்பதற்கான பல அமைப்புகள் உருவாவதில் ராமகிருஷ்ணன் முக்கியப் பங்களித்திருந்தார்.
நாமும் காரணம்!
‘க்ரியா’ புத்தகங்களைத் தாண்டி, இத்தனை பணிகளைச் செய்திருந்தும் எந்த இடத்திலும் இவற்றைப் பற்றியெல்லாம் ராமகிருஷ்ணன் தானாக முன்வந்து பதிவுசெய்துகொண்டதோ தம்பட்டம் அடித்துக்கொண்டதோ கிடையாது. சில ஆண்டுகளுக்கு முன் ஆங்கில விக்கிபீடியா பக்கத்தில் பதிவேற்றுவதற்காக அவரைப் பற்றிய தகவல்களை நண்பர் ஒருவர் அவரிடம் கேட்டபோது, ‘அதெல்லாம் இப்போது எதற்கு, வேண்டாமே’ என்று மறுத்திருந்தார் ராமகிருஷ்ணன்.
அவருடைய பணிகள் மீது குறையைக் கண்டறிய முடியாத நிலையில், போர்டு அறக்கட்டளையிடம் நிதியுதவி பெற்றார் என்பது போன்ற பலவீனமான குற்றச்சாட்டுகளை சிலர் முன்வைக்கக்கூடும். தமிழ், பண்பாடு, சமூகம் சார்ந்து செயல்படும் ஒருவருக்கு இந்த சமூகமோ அரசோ உதவாது. அப்படிப்பட்ட பணியைத் தேர்ந்தெடுத்தது அவருடைய குற்றம் என்பது போன்ற அணுகுமுறையே பொதுவாக இருக்கிறது. எந்த நிதி வசதியும் இல்லாமல் ஒரு பெரும் வேலையையோ ஆராய்ச்சியையோ ஒருவர் எந்தக் காலத்திலும் செய்துவிட முடியாது. இந்தப் பின்னணியில் பல்கலைக்கழகங்கள், அரசு அமைப்புகள், மத்திய – மாநில அரசுகள் தொடர்ச்சியாக உதவ முன்வராத நிலையில், ஒருவர் வேலை செய்வது எப்படி சாத்தியம்? அப்படியே பார்த்தாலும், என்ன வேலையை நகர்த்திவிட முடியும்? (இத்தனைக்கும் அரசியல் களத்தில் தமிழை மையப்படுத்திப் பேசிய திராவிடக் கட்சிகளே, கடந்த 50 ஆண்டுகளாக தமிழகத்தில் ஆட்சியில் இருந்துவருகின்றன)
புத்தகத் தயாரிப்பிலும் தனிப்பட்ட முறையிலும் திட்டவட்டமான கோட்பாடுகளைக் கடைப்பிடித்த ‘க்ரியா’ ராமகிருஷ்ணனின் நேர்மை பொறுக்கமாட்டாமல், பல பதிப்பாளர்களும் எழுத்தாளர்களும் அவர் மீது புழுதி வாரித் தூற்றுவதை ஒரு வேலையாகவே நீண்ட காலம் செய்துவருகிறார்கள். அதை மௌனமாகப் பார்த்துக்கொண்டிருப்பதன் மூலம், அவர் மீது வலிந்து சுமத்தப்படும் இழுக்குக்கு நாமும் பல நேரம் காரணமாக இருக்கிறோம்.