- ஆண்ட்ரியா கெஸ்
(இயற்பியல் நோபல் அறிஞர்) - ஆயிஷா இரா. நடராசன்
ஆண்ட்ரியா கெஸ் இயற்பியல் நோபல் பரிசு பெறும் நான்காவது பெண் எனும் பெருமையை பெற்றார். இயற்பியலுக்கான நோபல் 2020 அவரோடு ரோஜர் பென்ரோஸ் மற்றும் ரெயின் ஹார்ட் ஆகியோரோடு சேர்த்து கருந்துளைகள் குறித்த கண்டுப்பிடிப்பிற்காக வழங்கப்பட்டது. அமெரிக்காவில் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் இயற்பியல் பேராசிரியர். சாகிட்டேரியஸ்-A எனப்படும் கருந்துளை நட்சத்திரத்தை நம் பால்வெளியில் கண்டுபிடித்தவர். அதை புகைப்படமும் எடுத்தவர் உலகின் சிறந்த வானியலாளர்களில் ஒருவரான ஆண்ட்ரியா கெஸ் நோபல் டாட் ஆர்க் இணைய இதழுக்கு வழங்கிய நேர் காணல். பேட்டி கண்டவர் ஆடம் ஸ்மித்.
நோபல் பரிசு அறிவிப்பு உங்களுக்கு எப்போது தெரியும்?
ஆண்ட்ரியா கெஸ்: ஏற்கெனவே நோய் தொற்று காலம். அக்டோபர் ஆறாம் தேதி அதிகாலை 2 மணிக்கு கைபேசி அழைத்தபோது சற்றே பயமாக இருந்தது. ஆனால் நோபல் விஷயத்தை பற்றிய அறிவிப்பாக அது இருந்தபோது அதிர்ச்சி. கனவாக இருக்கலாமோ என்று கூட தோன்றியது.
சூப்பர் பிளாக் ஹோல் அதாவது அதீதமாய் பெருத்த கருந்துளைகள். அவை குறித்த உங்களது ஆராய்ச்சி பற்றி சொல்லுங்கள்.
ஆண்ட்ரியா கெஸ்: எனது ஆய்வுகள் 1992இல் தொடங்கின. அப்போதுதான் நான் கலிபோர்னிய தொழில்நுட்ப கல்வி உலக கழகத்தில் எனது முனைவர் பட்ட ஆய்வை முடித்திருந்தேன். ஹவாயில் கெக் வானியல் மையத்தின் அதி நவீன தொலைநோக்கி கெக் – II வை நாங்கள் பால்வெளி மண்டலத்தை ஆய்வு செய்யவே கட்டமைத்தோம். அதற்கு தகவமைப்பு ஒளியியல் எனும் பிரத்யேக ஆடி இயலை உருவாக்கி அதீத பெருக்க கருந்துளைகளை கண்டறிந்து பதிவு செய்ய பல ஆண்டுகள் கடுமையாக முயற்சி செய்து கொண்டிருந்தோம். அதில் என்னுடைய கண்டுபிடிப்பு நமது பால்வெளி மண்டல நட்சத்திரங்களின் சுற்று வேகத்தை கண்ணிற்கு புலப்படாத பிரமாண்ட ஆற்றல் ஒன்று கட்டுப்படுத்துகிறது. அந்த இருள் ஆற்றலை வழங்கி முழு நட்சத்திர கூட்டத்தையும் கட்டுக்குள் வைத்திருப்பது பால்வெளி மண்டலத்தின் மையமாக அமைந்துள்ள ஒரு பிரமாண்ட கருந்துளை.
நமது நட்சத்திரளில் – காலக்ஸியில் எத்தனை நட்சத்திரங்கள் உள்ளன. உங்களது கண்டுபிடிப்பை சற்றே விரிவுபடுத்துங்கள். ரோஜர் பென்ரோஸ் பங்களிப்பு என்ன?
ஆண்ட்ரியா கெஸ்: நமது பால்வெளி வளிமண்டலத்தில் மட்டுமே சுமார் ஐந்தாயிரம் நட்சத்திரங்கள் உள்ளன. ஐன்ஸ்டீனின் சார்பியல் கோட்பாடு கருந்துளைகளை ஏற்கவில்லை. ஆனால் ஐன்ஸ்டீன் இறந்து பத்தாண்டு கழித்து 1965 சர். ரோஜர் பென்ரோஸ் கருந்துளைகளின் தோற்றத்தை விவரித்ததோடு அதை சார்பியலோடு இணைத்து அதற்கான கணித வரையறையையும் வழங்கினார். கருந்துளைகள் இப்பிரபஞ்சத்திற்கு ஏற்படுத்தும் விளைவுகளை நாம் இன்னும் முழுமையாக ஆராய்ந்து முடிக்க வில்லை. நமது பால்வெளி மண்டலம் என்பது கோடிக்கணக்கான பிரபஞ்ச கேலக்சிகளில் ஒன்றுதான். அதில் மட்டுமே 4000-5000 நட்சத்திரங்கள் கருந்துளைகள் இருக்கின்றன. நம் புவியை விட நம் நட்சத்திரம் சூரியன் 1.3 மில்லியன் மடங்கு பெரியது. அதன் நிறை 1.989×1030 கிலோ. ஒரு நட்சத்திரமே அவ்வளவு பெரியதென்றால் 4000-5000 அது போன்ற நட்சத்திரங்கள் கொண்ட நம் பால்வெளி எவ்வளவு பெரிது. அப்படி என்றால் ரோஜர் பென்ரோஸின் கணித வரையறை எவ்வளவு பிரமாண்ட வேலை என்பது உங்களுக்கு விளங்கும்-ஐன்ஸ்டீன் இருந்தவரை இப்பிரபஞ்சம் நிரந்தரமான அளவு (ஸ்டாடிக்) கொண்டு அசையா பிரபஞ்சமாக அவரால் முன் மொழியப்பட்டது. அது இன்று விரிவடையும் பிரபஞ்சமாக நிரூபிக்கப்பட்டுள்ளது.
உங்களது அடுத்த முக்கிய கண்டுபிடிப்பு நம் பால் வளிமண்டல மைய-சுழற்சி அமைப்பு குறித்தது. அது பற்றி சொல்லுங்கள்.
ஆண்ட்ரியா கெஸ்: பத்து மில்லியன் நட்சத்திரங்களை குறித்த பலவகை புள்ளி விபரங்களை தேட வேண்டி இருந்தது. நட்சத்திரங்களுக்கு இடையிலான புழுதிச் சுழல் (Dust) நேரடியாக கண்டு ஆய்வு செய்ய இயலாது. அதி பெரிய சூப்பர் நோவட் கருந்துளைதான் மையம் என்பதன் சந்தேகம் பல ஆண்டுகளாகவே விஞ்ஞானிகள் மத்தியில் இருந்தது. ஸ்கர்பியோ எனும் (விருச்சிக) நட்சத்திர கூடுகையால் அதை தேடினார்கள். பிறகு சிரியஸ் அருகே தேடல். ஆனால் சாகிடேரியஸ் (தனுசு) நட்சத்திர கூடுகையின் அதீத-கருந்துளை தான் அதற்கான கரு என்பதைத்தான் நாங்கள் நிறுவினோம்.
ஆனால் அது குறித்த தேடல் எப்போது தொடங்கியது?
ஆண்ட்ரியா கெஸ்: நான் இத்தாலிய தந்தைக்கும் ஜெர்மானிய தாய்க்கும் பிறந்தவள். இருவருமே அமெரிக்காவிற்கு இடம் பெயர்ந்த பிரஜைகள். என் வாழ்வின் முதல் காதல் இயற்பியல் அல்ல. நாஸா நிலவுக்கு விண்கலங்களை அனுப்பிக் கொண்டிருந்த காலத்தில் நான் சிக்காக்கோ ஆய்வக பள்ளியில் படித்துக் கொண்டிருந்தேன். நான் நிலாவில் கால் பதிக்கும் முதல் பெண் ஆக வேண்டும் என விண்வெளி வீராங்கனை ஆகத் துடித்தேன். என் தாய் அதற்கு முழு ஆதரவாக இருந்தார். ஆனால் என் கல்லூரி நட்களில் என்னை கவர்ந்த பெண் ஆளுமையாக என் வேதியியல் பேராசிரியை என்னை பதப்படுத்தினார். கணிதம் கற்றுக் கொண்டிருந்த எனக்கு இயற்பியலுக்கு மாறிக் கொள்ள அவர் கொடுத்த புத்தகங்கள் கிரியா ஊக்கியாக இருந்தன. மசாசுசெட்ஸ் தொழில்நுட்ப கல்லூரியில் இயற்பியலில் பட்டம் பெற்றபோதே நான் அந்த 1987இல் வானியலுக்கு வந்துவிட்டேன். ஏனெனில் நான் ஆடி இயலின் நவீன அம்சங்களை செய்முறைகளால் கற்றேன். ஒரு தொலைநோக்கியின் அதி நவீன செயல்பாடு பற்றிய நுணுக்கங்களுக்கான ஆய்வாக முனைவர் பட்டம் அமைந்தது.
உங்களுடைய பிரதியாக்க-வான்பட தொழில்நுட்பம் (Imaging Techniques) அதி நவீன அதிசயம் என்கிறார்களே.
ஆண்ட்ரியா கெஸ்: தனியாக நான் மட்டுமே ஏதும் செய்துவிட முடியாது. இது ஒரு குழு பங்களிப்பு. நான் அவர்களது தலைமை வானியல் கணக்கீட்டு நபர் அவ்வளவே. ஒரு வித்தியாசம் என்னவென்றால் அந்த கெக் தொலைநோக்கியை (Keck Telescope) சொல்லலாம். மவுனா கியட் மலைசிகரம். ஹவாய் தீவுகள். எங்களது கட்டுப்பாட்டில் இரண்டு தொலைநோக்கிகள் இருக்கின்றன. 1993 மற்றும் 1996இல் நாங்கள் கட்டமைத்தவை. உலகிலேயே மிகப் பெரிய தொலைநோக்கிகள் அவை. அதற்கான நிதி உதவி ஹாவார்டு பிரைட்டன் கெக்-எண்ணெய் தொழிலதிபர். 1996இல் அவர் இறந்துபோகும்போது 70 மில்லியன் டாலர் இந்தத் திட்டத்திற்கு வழங்கியது குறிப்பிடத் தகுந்த மைல்கல். இதில் ஸெரோடர் வகை கண்ணாடி செராமிக். 7.5 சென்டிமீட்டர் தடிமனோடு செய்து தந்தது ஜெர்மனியின் செச்சாட் ஏ.ஜி. அதைவிட முக்கியமான விஷயம் தொலைநோக்கியை நீங்கள் பார்வை கோண நகர்த்தல் (Adjustments) உலகின் ஏனைய தொலைநோக்கிகளை விட அபார அமைப்பாக திட்டமிட்டோம். அதாவது ஆடி முன்பின் நகர்த்தலை நான்கு நானோ மீட்டர்களைவிட துல்லியமாக செய்யலாம். இதனால் புவியில் இருந்து வான்நோக்கும் தொலைநோக்கிகளிலேயே அதி துல்லியம் என பெயரெடுத்தோம். 300 டன் எடை கொண்ட சுவற்றை கணினி ரீதியில் வான் தொலைநோக்கியான ஹபுள் தொலைநோக்கியோடு இணைத்தது எங்களது அசுர சாதனை. அதற்காக நாஸா முன் வந்தபோது கலிபோர்னிய பல்கலைக்கழகமும் செக் பவுண்டேஷனும் 140 மில்லியன் டாலர் அடுத்து செலவிட முன் வந்தது. ஒருவகை அதிர்ஷ்டம் என்றும் சொல்லலாம். நாங்கள் ஒரு கருந்துளையே மையம் என்பதை அப்போதே ஏறக்குறைய அடைந்திருந்தோம். ஆனால் தொழில்நுட்ப ரீதியில் அதை ஒளிப்பட உத்திக்கு உட்படுத்த ஈவண்ட் ஹாரிசன் தொலைநோக்கி செயல் திட்டத்தில் இணைந்தோம்.
அது 2009இல் தொடங்கியது அல்லவா?
ஆண்ட்ரியா கெஸ்: சர்வதேச புராஜெக்ட் மொத்தம் பத்தொன்பது பல்கலைக்கழகங்கள். ஜெர்மனியின் மாக்ஸ் பிளாஸ்க் சொசைட்டி உட்பட உலகெங்கும் இருந்து 117 அறிவியல் கல்வியக அமைப்புகள். நெதர்லாந்து ஜப்பான், சீனா உட்பட 12 நாடுகள். சாகிடேரியஸ் (தனுசு) நட்சத்திர கூட்டத்தினுள்-கருந்துளைதான் நமது பால்வெளி மண்டலத்தின் மைய இயக்க காரணி என்பதன்மீதான் எமது கணிப்பும் கணக்கெடுக்கும் துல்லிய நிரூபணம் பெற்றது.
இயற்பியலில் நோபல் பரிசு பெறும் நான்காவது பெண்மணி நீங்கள். இனிவரும் பல சந்ததிகளுக்கு நீங்கள் முன் உதாரணமாக காட்டப்படுவீர்கள். அது குறித்து உங்கள் உணர்வுகளை பதிவு செய்ய முடியுமா?
ஆண்ட்ரியா கெஸ்: முதலில் நான் நமக்கெல்லாம் வழிகாட்டியான மேரி ஸ்லொடொவ்ஸ்கரி கியூரியிடம் இருந்து தொடங்க விரும்புவேன். பெண்கள் பள்ளி-கல்லூரிகளுக்குள் அனுமதிக்கப்படாத காலத்தில் அடிமைவாதத்திற்கு எதிராக போராட்டமே வாழ்க்கையாக ஆய்வுக்கூடத்திலேயே தன்னை அர்ப்பணித்த லட்சிய மாந்தர் என்றால் உலகின் முதல் வீராங்கனை அவர்தான். அவரது வேகத்தோடு ஒப்பிட்டால் இன்று உலகில் நடப்பது எதுவுமே சாதனை கிடையாது. 1901இல் எங்களுக்கான முதல் வெற்றி. பிறகு 1963இல் ஜெர்மனியில் பிறந்த அமெரிக்காவில் வாழ்ந்த அணுவியலின் மேதை மரியா கோபர்ட் மேயர். அவரது ஃபோட்டான்-ஷெல் கோட்பாட்டு கண்டுபிடிப்பு ஜெர்மனியின் காட்டிஞ்சனில் தொடங்கி அமெரிக்க ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தில் முடிந்தது. எத்தனையோ இருட்டடிப்புகள். தனது கணவர் ஒரு பேராசிரியர் என்பதால் 1930களில் ஒரு பல்கலை கழகத்தில் நுழைய அவர் எப்படி போராட வேண்டி இருந்தது. இரட்டை பீட்டாக்கள் குறித்த ஆய்வுக் கட்டுரை 1935லேயே ஏற்கப்பட்டிருந்தால் முன்கூட்டியே நோபல் பெற்றிருப்பார். எல்லா இயற்பியல் அலகுகளுமே ஆண் விஞ்ஞானிகளின் பெயர்தான். இப்போது இரட்டை ஃபோட்டான குறுக்கு வெட்டு அலகுக்கு ஜி.எம் (கேரிபடிட் மேயர்) யூனிட் என்று அலகு பெயரிடப்படுவதுவரை வெற்றி. கெனடாவின் டோனா ஸ்டிரிக்லாந்து 2018இல் நோபல் பெற்றார். லேசர்-ஆய்வக வேலைகள் மிக மிக கடினமானவை. அணுக் கதிர் வீச்சின் ஆபத்தான வீரியத்தை லேசரின் புதிய கிரிப்பில்டு பல்ஸ் உருப்பெருக்கம் எனும் டோனா ஸ்டிரிக் லாந்து தொழில்நுட்பம் கொண்டு சில நிமிடங்களில் குறைத்து அழித்து விட முடியும் என்பது நவீன இயற்பியல் புவிப் பாதுகாப்பு சாதனைகளில் ஒன்று. அவர்களைப்போல பல பெண் விஞ்ஞானிகள் பலவாறு தங்கள் கண்டுபிடிப்புகள் மூலம் பெரிய எழுச்சிகளை விதைக்கும் சாதனையாளர்களாகி உள்ளனர். ஒரு சிலரே அங்கீகரிக்கப்படுகிறார்கள்.
அறிவியலில் பெண்கள் இன்னமும் அதிக அளவில் அங்கீகரிக்கப்பட வேண்டும் என்பதையே உங்கள் கருத்தாக பதிவு செய்யலாமா.
ஆண்ட்ரியா கெஸ்: 2020ஆம் வருட நோபல் அறிவிப்புகளில் கணிசமான தவிர்க்கவே முடியாத இடத்தை பெண்கள் பெற்றுள்ளனர். இருப்பினும் ஒரு ஐன்ஸ்டீனுக்கும், ஹாக்கின்சுக்கும் தரப்படும் ஆதரவு, முக்கியத்துவம் ஒரு மேரிக் கியூரிக்கும் ஒரு கேதரீன் ஜான்சனுக்கும் தரப்படுவது இல்லையே. பெண்கள் அறிவியலில் புவிப்பாதுகாப்பு கண்டுபிடிப்பு தீர்வுகளை அதிகம் தந்தவர்கள் என்பதை மறுக்க முடியுமா? நாம் அறிவியலில் பன்முக திறன்களை போற்றி ஆதரிக்க வேண்டும். இளம்பெண்கள் பலரை அறிவியலில் நுழைத்து ஊக்கப்படுத்தும் வாய்ப்பை இந்த நோபல் பரிசு எனக்கு கொடுத்திருக்கிறது. வேறுபட்ட சமூக கலாச்சார பாலிய இன மனிதர்களை ஒரு வேலையில் முனைப்போடு ஈடுபட வைக்க அறிவியல் முடியும்.
பெண்கள் அறிவியலுக்குள் நுழையும் போது சமூக மாற்றம் ஏற்படும்.
அடுத்தது என்ன?
ஆண்ட்ரியா கெஸ்: பிரபஞ்சத்தை பார்க்கும் விதத்தை புதிய தொழில்நுட்பம் புதிய கோணம் ஒன்றை ஏற்படுத்தி பன்மடங்கு வேகப்படுத்தி இருக்கிறது. அது ஒரு மன எழுச்சி தரும் வேலை. ஒரு தொலைநோக்கி வழியே நாம் பார்ப்பது 26000 வருடங்களுக்கு முன் உருவான ஒளி இத்தனை வருட வரலாறு கடந்து நம் தொலைநோக்கியை அது அமைத்துள்ளது என்பதே உத்வேகம் தரும் விஷயம். அதை மேலும் மேலும் செழுமைபடுத்தும் வேலை. அதைவிட வேறெந்த முனைப்பும் இப்போது இல்லை.