‘நான் சிந்திக்கிறேன் அதனால் உயிர்த்திருக்கிறேன்’ என்றார் ரேனே டெஸ்கார்ட்டஸ். ‘நான் வாசிக்கிறேன் அதனால்தான் சிந்திக்கிறேன்’ என்றார் ஆஸ்கார் வைல்டு. தன் கோட் பாக்கெட்டின் எண்ணிக்கையை ஆறாக்கினாராம் பிடல் கேஸ்ட்ரோ. ஒரே சமயத்தில் ஆறு புத்தகங்களை மற்றவர் அறியாமல் உடன் அழைத்து சென்று வாசிப்பே வாழ்வாக ஆக்கிக் கொண்டாராம் அந்த போராளி. எனவே புத்தக வாசிப்பு வெறும் செயல்பாடு அல்ல. ஒருவகை கலகநெறி. ஆனால் அதை ஒரு கஷ்டமான வேலைபோல அணுக வைக்கும் ஒருவித சதியை நம் கல்வியும் சமூகமும் பின்னிவிட்டது. வாசிப்பு ஒரு சமூகத்தை என்ன செய்யும் என்று அறிந்தே – வாசிப்பு மனிதனை ஊடக அடிமையாக அதிகார வர்க்கம் மாற்றுகிறது. வாசிப்பும் தேடலும் விடைபெற்றதால் சாதாரண பிரஜைக்கு உண்மை நடப்பு விளங்குவதே இல்லை… அது தனக்கு தெரியவில்லை என்பதே அவர்களுக்கு தெரியாது என்கிறார் நோம் சாம்ஸ்கி, அதனால்தான் நாம் திரும்பத் திரும்ப வாசிப்பு இயக்கங்களையே அலை அலையாக உருவாக்குகிறோம். பேரறிஞர் ஏங்கெல்ஸின் 200 வருட நிகழ்வாய் அவரது நூல்கள் குறித்த ஒரு ஆன்லைன் சிவப்பு புத்தக வாசிப்பு நடத்தியதில் நம்பிக்கை துளிர்விட்டதை தோழர்கள் பலர் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளனர். அறிவியல், அரசியல், வரலாறு, தத்துவம் இவைகளின் கூட்டமைப்பே இன்றைய பாசிச மத… வாத கார்பரேட் அதிகார பயங்கரவாதத்திற்கு எதிரான மக்கள் கேடயமாக உதவும் என்பது சமீபத்திய வரலாற்று அறிஞர் ரோமிலாதப்பாரின் கருத்து. இலக்கிய சிந்தனை, சமூக கலாச்சார புரிதல், வரலாற்று மறு வாசிப்பு, விழிப்புணர்வு, சுய சிந்தனை உட்பட யாவற்றையும் மக்களிடமிருந்து பிடுங்கிக் கொண்டு போதை மதத்தையும் பீதி. உணர்ச்சி அரசியலையும் தர துடிக்கிறது அதிகாரம். நாம் அவை அனைத்தையும் மக்களிடம் கொண்டு செல்ல புத்தக இயக்கங்களை நடத்துவது கடமை ஆகிறது. வரும் 2021 புத்தாண்டு பிறக்கும் இரவில் மீண்டும் ஒரு புத்தக விடியலை நோக்கி நடைபோடுவோம். குழந்தைகளுக்கு புத்தகப் புதையலை பரிசாக தருவோம். அறிவியல் அறிவாற்றலை புத்தக பூங்கொத்துகளாக்கி அவர்களுக்கு புத்தாண்டு பரிசாய் தருவோம். அறிஞர்கள் வாசகர்கள் என எழுச்சிமிகு ஆளுமைகளை ஒன்று திரட்டி வாசிப்பு புத்தாண்டாய் வரும் ஆண்டை மிளிரச் செய்வோம். புத்தக புத்தாண்டை நோக்கி நடைபோடுவோம்.
-ஆசிரியர் குழு
previous post