1.
பட்டி மன்றம் நடக்கிறது
கொரானா என்ற
அந்த ஒற்றைச் சொல்லின்
உரிமையாளர் யாரென்ற விவாதம்…
தலைப்பு
“குற்றச்சாட்டல்கள்”
தீர்ப்பு எப்பக்கம் தீர்வாகும்..?
நடுவர்களே இல்லாமல்
நடக்கும் விவாதங்களில்
அந்த ஒற்றைச் சொல்லின்
கோர தாக்குதல் பயம் மறந்து
சண்டைக் காட்சிகளின் விறுவிறுப்பு
சூடேற்றப்படுகிறது.
யாராயிருந்தால் என்ன
இழப்பு
மாந்தர்களுக்குத்தானே…!
2.
மேற்கே
வான் கடலில் சிவந்து மூழ்கும்
நெருப்புக் கோளம்.
கிழக்கே
கடல் தாங்கும் வானில்
நீளூம் வெள்ளிப் பாதையிடும்
பறவை குழாம்
மழைவான் நோக்கி
மனம் வரைய குறுக்கிடும்
கட்டாந்தரையான காடுகள்
தொடுமிடம் வான்.
3.
யவர் சுமையையோ
எவராலும் சுமக்க முடிவதில்லை
முயற்சிக்கலாம்
கை கொடுக்கலாம்
அவ்வளவே…!
சுமந்தவர் சுமந்தபடி
பார்த்தவர் பார்த்தபடி
நடந்தவர் நடந்தபடி
காலங்கள் நகர்ந்த வண்ணம்…
நபர்களும் இடங்களும்
மாறியபடி..!
4.
என் கவிதைகளில்
மாறி…மாறி,,,
‘ஆயா’… ‘அவ்வா’… எனப் பொதிய
உங்கள் மூளைகளை
கசக்கிப் பிழியாதீர்கள்.
நாங்கள் பாட்டிகளை
அம்மாயி.., அப்பாயி எனவும்
தாயை…. ‘ஆயி’ எனவும்
அழைத்து மகிழ்ந்த
மருத நில மாந்தர்கள்.
கால மாற்றத்தால்
‘ஆயி’… அம்மாவாகி வெகு காலமாயிற்று.
பாட்டிகள்
மனைவியின் உறவால்
ஆயாவாகிப் போனார்கள்.
மகன் கொண்ட உறவால்
அவ்வாவாகிப் போனார்கள்
நாங்கள் சாதி சிதைந்தவர்கள்..
முற்படுத்தப்பட்ட…
பிற்படுத்தப்பட்ட…
தாழ்த்தப்பட்ட…
இப்படிப்பட்ட பட்டவைகளில்
நிறைய உறவுகள் உண்டு.
வேறு மதத்தில் கூட
எல்லாம்
காதலால் கனிந்தவைகள்.
இந்த உறவுகளால் அறியப்பட்ட
பாசமும் நேசமும்
அன்பும் அரவணைப்பும்
பட்டறிவும் நிறைய நிறைய
இனிமேல் நீங்கள் முயற்சிக்கலாம்
துருவி துருவி
என்னை
என் அடையாளத்தை கண்டறிய…
5.
இரண்டு கொலைகள் செய்தேன் இன்று…
ஒன்று அட்டை
மற்றொன்று பல்லி…
விதவிதமாய் மறைமுகமாய்
மனிதர்கள் போலல்ல
நம்மை
நம் உழைப்பை
உறிஞ்ச்சித்தொலைக்க
கவனப் பிசகால்
கொஞ்சம் அசந்தாலும்
உடல் பற்றி உடனேயே
உறிஞ்சத் தொடங்கிவிடும் அட்டை
அதனால்
அதைக் கொன்றேன்….
அடுப்படியில் ஒரு பல்லி
குழந்தையைப்போல்
அங்குமிங்கும் நடமாடித் திரியும்..
உணவில் விழுந்து தொலைத்தால்…?
அச்சம் மேலோங்க
அதனால் அதையும் கொன்றேன்…
அச்சம் பல நேரங்களில்
நம்மை கோழையாக்கி விடும்…!
அச்சம் கொலையும் செய்யும்…!
6.
பசலைக் கொடி மேனியின்
அழகை அருகிருந்து
விழி விழுங்க மகிழ்வாய்
மேய்ந்து களித்ததுண்டா…?
வீட்டின் சுற்றுச் சுவரோர பசலை
வெளியேற வாய்ப்பதிகம்.
காலொரு பக்கம் தலையொரு பக்கம்
வேண்டாமென
வளைத்து வளைத்துக் கீழிறக்க
முயற்சியின் தோல்வியில்
மேல் நோக்கிய பயணமே…!
கொடியின் நுனிதான்
ஐம்புலன்களின் நிலையோ…?
கொடிகளைப் போலத்தான்
குழந்தைகளும்….
7.
யுத்தத்தின் இலக்கு
“வெற்றி” ஒன்று மட்டுமே…!
தொலைக்காட்சிகளில்
பட்டியலிடப்படுகின்றன
கொரோனா யுத்தத்தில்
மாய்ந்து விழும் மனிதர்களின்
எண்ணிக்கைகள்…
கண்டறியப்படும் எதிரிகள்
கொரில்லா யுத்தத்தில்
கண்ணறியா படையணிகள்
நிராயுதபாணியான மனிதர்களின்
எதிரில் வலம் வந்தவண்ணம்…
ஒலிம்பிக்கில் யார் முந்துவது
எனும் போட்டி போல்
விருப்பமின்றி ஒவ்வொரு நாடும்
முந்திக்கொண்டிருக்கிறார்கள்.
எதிரியை வீழ்த்த
ஆயுத தயாரிப்பில் ஆராய்ச்சிக்கூடங்கள்.
உலைக்களமானாலும்
ஆயுதங்கள் தயாராகவில்லை இன்னும்
‘நீயா…? நானா…?’
எனும் வியாபார நோக்கில்
மரண இழப்புகள் இரண்டாம் இடத்திற்கு…
மரணத்திலும்
கல்லா பெட்டி நிரப்ப
காய்கள் நகர்கின்றன….!