கி.பார்த்திபராஜா
சந்திப்பு: பா. இளமாறன்
ஒரு பேராசிரியராக, ஆய்வாளராக, நாடக ஆளுமையாகத் தனக்கான தனி இடத்தைத் தமிழ்ச்சமூகத்தில் நிலைநிறுத்தித் தொடர்ந்து இயங்கி வருபவர். ஆசிரியர் எப்படி இருக்கவேண்டும், எப்படி இயங்கவேண்டும் என்பதற்கான எடுத்துக்காட்டாய்த் திகழ்பவர். ஒரு ஆய்வாளராக இவர் இயங்கும் தளம் அனைத்திலும் தனித்த முத்திரை பதித்தவர். நாடகக்காரர் என்பது இவரின் செம்மாந்த அடையாளம். மரபான நாடக வடிவத்திலும் நவீன நாடகத்திலும் பலவகையான நாடகமுயற்சிகளின் வழி தடம்பதித்து வருபவர். பாரதியைத் தன்மூச்சாகவே கொண்டவர். முனைவர் கி.பார்த்திபராஜா என்னும் பெயரைச் சொல்லும்போதே பாரதியும் சேர்ந்து ஒலிப்பதாகவே நான் கருதுகிறேன். இதோ அவருடனான ஒரு நேர்காணல். – பா. இளமாறன்
தமிழ்ப் படிப்பை நீங்கள் தேர்ந்தெடுத்ததன் காரணம், அதன் பின்னணி குறித்துச் சொல்லுங்கள்?
பள்ளி மேல்நிலைக் கல்வியில் நான் ஒரு இயந்திரவியல் (மெஷினிஸ்ட்) மாணவன்தான். கல்லூரிக் கல்வி என்பது எனக்கு இரு நுழைவாயில்களைக் கொண்டதாக இருந்தது. ஒன்று பாலிடெக்னிக் படிப்பு; பிறிதொன்று பொறியியல் படிப்பு.பள்ளிக்காலத்தில்தான் எனக்கு அறிவொளி இயக்கம் அறிமுகமானது. எழுத்தறிவு இயக்கத்தில் முதியோர்களுக்குக் கற்பிக்கும் இளம் ஆசிரியனாக, தன்னார்வத் தொண்டனாக உள்ளே நுழைந்த என்னை, மிக விரைவிலேயே ‘வீதி நாடகக் கலைஞனாக’ வரவு வைத்துக் கொண்டது அறிவொளி இயக்கம். சிவகங்கை, இராமநாதபுரம், கோவை உள்ளிட்ட பல மாவட்டங்களுக்கு நாடகப் பயிற்சியாளராக நான் பயணப்பட்டபோது பனிரெண்டாம் வகுப்புப் படித்துக் கொண்டிருந்தேன். 12 முதல் 15 வரையிலான கலைஞர்களுக்கு 10 நாட்கள் நாடகப் பயிற்சிகள் தந்து, ஒரு குழுவாக உருவாக்கிப் பிறகு அவர்களோடு தொடர்ந்து 30 நாட்கள் பயணப்பட வேண்டும். இவ்வாறு பல மாவட்டங்களில் பணி செய்திருக்கிறேன்.
அதன் தொடர்ச்சியாக, கல்லூரிப் படிப்பை உதறிவிட்டு ஓராண்டு நாடகமாடிக் கொண்டிருந்தேன். நாடகப் பயணத்தின்போதும் இடைப்பட்ட ஓய்வு நாட்களின்போதும் நான் படித்த நூலகப் புத்தகங்கள், வாசிப்பின் மீது ஒருவிதமான ஈர்ப்பை ஏற்படுத்தியிருந்தன.தமிழில் பட்டப்படிப்பை முடித்துவிட்டுச் சட்டக்கல்லூரியில் சேர்ந்து சட்டம் பயின்று, ஒரு வழக்கறிஞராக வேண்டும் என்ற எண்ணத்தோடேயே நான் கல்லூரிப் படிப்பில் அடியெடுத்து வைத்தேன். நேரடியாகச் சட்டக் கல்லூரியில் சேராமல், தமிழ் படித்துப் பிறகு சட்டம் என்ற சுற்றல் வழி, எப்படி என் மனதில் விழுந்தது என்பது நினைவில் இல்லை. ஆனால் அந்த வழியைப் பற்றிக் கொண்டுதான் தமிழ் இலக்கியப் படிப்பில் சேர்ந்தேன். நான் பயில வந்த காலத்தில் தமிழ் இலக்கியப் படிப்பு என்பது, மாணவர்களின் கடைசிப் புகலிடமாக இருந்தது. வேறு பாடப்பிரிவுகள் எதுவுமே கிடைக்காத நிலையில் கட்டக்கடைசியாய்த் தேர்ந்தெடுப்பதே தமிழ்ப்படிப்பு என்பதாக இருந்தது. ஆனால், எனக்கோ என்னுடைய முதல் தெரிவாகவே தமிழ்ப்படிப்பு அமைந்திருந்தது. எனது வீட்டில் ஒரு பெரிய பஞ்சாயத்து நடத்தித்தான் தமிழ் இலக்கியப் படிப்பைத் தேர்ந்தெடுக்க வேண்டியிருந்தது. என்னுடைய அப்பா ஒரு அறிவியல் ஆசிரியர். எல்லா அரசுப் பள்ளி ஆசிரியர்களையும்போல, தன் பிள்ளைகளுக்கான இலக்காக, மருத்துவப் படிப்பையும் பொறியியல் படிப்பையும் தீர்மானித்துத் திணிக்கும் வர்க்கத்தின் பிரதிநிதிதான் அவர். ‘பொறியியல் படிக்கும் வாய்ப்பை உதறி, தமிழ் படிக்கிறேன் என்கிறதே இந்தக் கிறுக்கு’ என்றே அவர் என்னை மதிப்பிட்டார். உண்ணாநிலைப் போராட்டம், சத்தியாகிரகப் போராட்டம், தாய்மாமன் வழியாகப் பேச்சுவார்த்தை எனப் பல நிலைகளைக் கடந்துதான் ‘வேண்டா வெறுப்பாக’த் தமிழ்ப்படிக்க என்னை அனுமதித்தார் தந்தை. அப்போதும் கூட, ‘எக்கேடோ கெட்டுப்போ…’ என்று வாழ்த்துப்பா இசைத்தே என்னை இளங்கலை தமிழ் இலக்கியப்படிப்பில் சேர்த்துவிட்டார். இதுதான் நான் தமிழ்ப் படிப்பைத் தெரிவு செய்ததன் பின்னணி.
தமிழ்ப் படிப்பு உங்களுக்குள் நிகழ்த்திய மாற்றங்கள் என்ன?
வாசிப்புச் சுவை கண்டு உள்ளே நுழைந்தவன் தமிழைப் பற்றிக் கொள்ள வேண்டியதில்லை; அவனைத் தமிழ் பற்றிக் கொள்ளும் என்பதற்கு எனது கல்வியே சான்று. கல்லூரிப் படிப்பின் முதல்நாளே, பேராசிரியர் டாக்டர் பீ.மு.அபிபுல்லா (கவிஞர் அபி)வின் அன்பும் அரவணைப்பும் கிடைத்தது. எந்த அபி?
ஆம், மௌனத்தின் நாவுகள், அந்தர நடை, என்ற ஒன்று ஆகிய தொகுப்புகளின் மூலம் ‘இருண்மைக் கவிஞராக’ அறியப்படுகிறாரே அந்த அபிதான். அவரைப் பற்றிக் கொண்டுதான் நான் தமிழ் இலக்கியத் துறையில் படிக்கட்டுகளில் நீராட இறங்கினேன். பயத்தைத் தெளிவித்து, நீச்சல் கற்றுக் கொடுத்ததோடு, நீராடலை எவ்வாறு ருசிக்க வேண்டும் என்றும் கற்பித்தவர் அபிதான். சிங்கிஸ் ஐமாத்தவ்வின் ‘முதல் ஆசிரியர்’ நாவலில் வரும் துய்ஷேனைப் போன்றவர் அபி. ஓராண்டுதான் அவர் எனக்கு ஆசிரியராக அமைந்தார். ஆனால் அவர் ஒரு ஆசிரியராக என்னுள் செலுத்திய தாக்கத்தின் வீரியம் இன்னும் என் மனதில் இரத்தமும் சதையுமாய்த் தங்கியிருக்கிறது.
காரைக்குடி அழகப்பா அரசு கலைக்கல்லூரியில் நான் பயின்ற காலத்தில் இருந்த பேராசிரியர்கள் ஒவ்வொருவரும் ஒரு துறையில் வித்தகர்கள். பேரா.க.காந்தி போன்ற காத்திரமான ஆய்வாளர்களிலிருந்து பேரா.சுப.கதிரேசன் போன்ற பட்டிமன்ற பேச்சாளர்கள் வரை அங்கிருந்தார்கள். அவர்கள்தான் என்னைச் செதுக்கினார்கள். கவிதை, கட்டுரை, பேச்சு என அனைத்துப் போட்டிகளிலும் பரிசுகளைத் தட்டி வந்துகொண்டிருந்தேன். மாநில அளவிலான கட்டுரைப்போட்டியில் பரிசுபெற்று அகில இந்திய அளவிலான போட்டியிலும் வெற்றிபெற்று, அன்றைய இந்தியப் பிரதமர் மாண்புமிகு நரசிம்மராவ் அவர்களிடமிருந்து ‘சத்பவான’ விருதைப் பெற்றபோது நான் முதலாமாண்டு மாணவன். இந்திய மாணவர் சங்கம் (எஸ்.எஃப்.ஐ)யின் களச் செயல்பாட்டாளனாக உயிர்ப்போடு இயங்கிக் கொண்டிருந்த காலம் அது. சாதிய மேட்டிமைத்தனம் கரடுதட்டிப் போயிருந்த தென்னகப் பகுதியில், கல்வி வளாகங்களில் சாதியாதிக்கத்துக்கு எதிராக ஒடுக்கப்பட்டவர்களோடு உறுதியாகக் களத்தில் நிற்கக் கற்பித்து எங்களை வளர்த்தெடுத்தது எஸ்.எஃப்.ஐ. கல்லூரித் தேர்தலையொட்டி நடந்த கலவரத்தில், மண்டை பிளக்கப்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையிலிருந்த ஒரு ஒடுக்கப்பட்ட மாணவரை இரத்தம் வழிய வழிய மடியில் கிடத்திக்கொண்டு காரைக்குடியிலிருந்து மதுரை அரசு மருத்துவமனையில் கொண்டு வந்து சேர்த்தோம் நானும் சொர்ணம் என்னும் மற்றொரு நண்பரும். மூளையில் இரத்தம் உறைந்த நிலையில் ஆபத்தான அறுவைச் சிகிச்சையைத் தாண்டிப் பிறகு, கல்லூரி மாற்றலாகிப் போய்விட்ட அந்த மாணவர், இப்போது புதுக்கோட்டை அரசு கல்லூரியில் பேராசிரியர். இந்த கோவிட் – 19 காலத்தில் எப்படியோ எனது அலைபேசி எண்ணைப் பெற்று அவர் உரையாடினார். இடையில் 25 ஆண்டுக்காலம் உருண்டோடிவிட்டது. நெகிழ்ச்சியடைந்த அவரிடம் சொன்னேன். ‘இந்திய மாணவர் சங்கத்துக்கு (எஸ்.எஃப்.ஐ) நன்றி சொல்லுங்கள். அதுகூடத் தேவையில்லை; ஏனென்றால் அவ்வாறு ஒடுக்கப்படுவோருடன் உறுதியாகக் களத்தில் நிற்பது தன் கடமை என்று கருதுவது எஸ்.எஃப்.ஐ’ என்றேன். கல்வி, போட்டிகள், உரையரங்கங்கள், கருத்தரங்கங்கள், சிறுபத்திரிக்கைகள் என ஒரு காலூன்றி நின்ற வேளை, போராட்டம், மறியல், தடியடி, உண்டியல் வசூல் ஆகியவற்றிலும் மறு காலை அழுத்தமாக ஊன்றி நின்றேன்.
தன்னம்பிக்கையையும் எதையும் எதிர்கொள்ளும் துணிச்சலையும் தமிழ்ப்படிப்பு எனக்குத் தந்தது என்றுதான் சொல்லத் தோன்றுகிறது.
ஒரு ஆய்வாளராக நீங்கள் செய்திருக்கக்கூடிய பணி உங்களுக்கு மனநிறைவு தந்துள்ளதா?
வீரசோழியத்தில் ஒரு அவையடக்கப் பாடல் இருக்கிறது. ‘அகத்தியன், தொல்காப்பியன் போன்ற வல்லூறுகளும் பெரும் பறவைகளும் பறந்த இந்த வானத்தில் நானும் ஒரு ஈயாகப் பறக்கிறேன்’ என்று சொல்கிறார் புத்தமித்திரர் என்னும் இலக்கணி.
பெரும் பெரும் அறிஞர்களாகிய வல்லூறுகளும் ராஜாளிப் பறவைகளும் மணிப்புறாக்களும் பறந்த இந்த ஆய்வு வானத்தில் சிறு ஈயாக நானும் பறந்துகொண்டிருக்கிறேன், அவ்வளவே.இலக்கிய விமர்சனத்துறை, நிகழ்த்துகலைத்துறை ஆய்வுகள், சமூகவியல் ஆய்வுகள் என சில துறைகளைத் தேர்ந்தெடுத்து இயங்கிக் கொண்டிருக்கிறேன். சமூக வரலாற்றில் தனிநபர்களின் வகிபாகத்தை மதிப்பீடு செய்யும் நோக்கிலான, ‘பாரதி – கடந்த நூற்றாண்டுக் கவிஞன் பற்றிய மதிப்பீடு’, தமிழ்நாட்டின் திராவிட மொழி அரசியலை விமர்சிக்கும், ‘தமிழ் மொழி அரசியல்’, இசை நாடகத் துறையில் அதன் செல்நெறியைத் தொகுத்துரைத்த ‘காயாத கானகத்தே..’ ஆகியவை தமிழ்கூறு நல்லுலகில் கவனம் பெற்ற என்னுடைய ஆய்வு நூல்கள்.
நிகழ்த்துகலைத்துறை சார்ந்த ஆய்வுகளை முன்னெடுத்துச் செல்கிற போதிலும், இலக்கியத் துறை சார்ந்த ஆய்வுகள் இப்போதும் எனது விருப்பத்துறைதான். தமிழ் ஆய்வுத்துறையின் எனது குறுக்கீடுகள், மார்க்சிய ஆய்வு நெறி சார்ந்தவை; எனது முன்னோடிகளான மார்க்சிய ஆய்வாளர்களின் தடம் பற்றியவை. இப்பயணத்தில் இன்னும் நெடுந்தூரம் நான் பயணப்பட வேண்டும். இப்பயணத்தில் நான் எடுத்து வைத்துள்ள சிற்றடிகளைத் திரும்பிப்பார்த்து ‘தன்னைத் தருக்குறும்’ மயக்கம் எனக்கு இல்லை. உண்மையில் தமிழாய்வுப் புலத்தில் மார்க்சிய கோட்பாட்டு வெளிச்சத்தில் ஆய்வுகளை முன்னெடுக்கும் இளைஞர்களை உற்சாகப்படுத்தவும் அவர்களோடு தத்துவார்த்த இணக்கத்தோடு இணைந்து பயணப்படவுமே நான் விழைகிறேன். நிச்சயம் பயணப்படுவேன்.
பாரதி மீது உங்களுக்கான பற்று எப்படி ஏற்பட்டது?
‘தமிழ் இலக்கியப் படிப்புக்கு என்னை அழைத்து வந்தவன் பாரதி’ என்று நான் சொல்வதுண்டு. முதன்முதலாக இந்த வாக்கியத்தை நான் சொன்னபோது இளநிலை மூன்றாமாண்டு மாணவன். ‘பாரதியார் கவிதைகள்’ நூல் என்னைப் போன்ற மாணவர்கள் வாங்கும் சக்திக்கு அப்பாற்பட்டதாக இருக்கும் என்று கருதி, முழுக்கவிதைகளையும் நூலகத்தில் அமர்ந்து ஒரு நோட்டுப்புத்தகம் முழுவதுமாக எழுதியிருக்கிறேன். அப்போது நான் பள்ளி மாணவன்.
பாரதி கவிதைகளை உரத்துப் படித்தல், பாரதி பாடல்களைப் பாடுதல் என அவனோடு நான் தொடர்ந்து பயணப்பட்டு வந்தேன். பாரதியோடு தொடர்புடைய, அவன் காலடிச் சுவடு பட்ட இடம் என்று அறியப்பட்ட அத்தனை இடங்களுக்கும் போயிருக்கிறேன். எட்டயபுரம், கடையம், புதுச்சேரி, காரைக்குடி, திருவல்லிக்கேணி, காசி, கல்கத்தா, கருங்கல் பாளையம், கடலூர் என பாரதியின் காலடி பட்ட அந்த இடங்களுக்குச் சென்றபோது நான் அடைந்த மனக் கிளர்ச்சியை எளிதில் சொல்லிவிட முடியாது. அந்த அனுபவங்களைத் தொகுத்து, ‘பாரதியின் அடிச்சுவட்டில்…’ என்னும் நூலினை இப்போது எழுதிக் கொண்டிருக்கிறேன்.
ஆய்வாளராக இருந்த போது பாரதியார் குறித்து நீங்கள் எழுதிய நூல் தமிழ்ச்சூழலில் ஏற்படுத்திய தாக்கம் என்ன?
எனது முதல் நூல் ‘பாரதி – கடந்த நூற்றாண்டுக் கவிஞன் பற்றிய மதிப்பீடு’. பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பி அவர்களின் அணிந்துரையோடு வெளிவந்தது. இப்போது நியூ செஞ்சுரி புத்தக நிறுவனம் இந்நூலை மறுபதிப்பு செய்து வெளியிட்டுள்ளது. பாரதியை இந்துத்துவச் சிமிழுக்குள் அடக்கும் அநீதிக்கு எதிரான ஒரு மார்க்சியக் குரலே எனது நூல். பாரதியிடம் சறுக்கல்கள் இல்லாமல் இல்லை; அச்சறுக்கல்களை அவனது சமகாலத்தின் இழுவிசையில் தாக்குப்பிடித்து அழுத்தமாகக் காலூன்றி நிற்கும் ஒருவனது சிறுசிறு தடுமாற்றங்களே. அத்தடுமாற்றங்களே அவனைப் புறந்தள்ளிவிடும் தரமன்று.
பாரதியை வாரிக் கொண்டுபோய்ப் பார்ப்பனியத்திடம் கொடுப்பதில் யாருக்கு லாபம்? பாரதியோடு பத்தாண்டுகள் வாழ்ந்த எம் தேசிய இனத்தின் பெருங்கவிஞன் மகாகவி பாரதிதாசன்தான் பாரதிக்கான கேடயம். பாரதியின் மறைவுக்குப் பிந்தைய அவதூறுகளை, வசவுகளை இந்த எஃகுக் கேடயமே தடுத்து வந்தது. புதிய கருத்தியல்களின் வெளிச்சத்தில் பாரதி போன்ற ஒரு பெருங்கவிஞனை விமர்சிக்கலாம்; மதிப்பிடலாம். ஆனால் காலவெளிக்கு வெளியே இழுத்துவந்து அவனைத் தூக்கில் போடுவது அநியாயம். மார்க்சியம் ‘வரலாற்று இயங்கியல் நோக்கில் அதன் அசைவியக்கத்தில் தனி நபர்களின் வகிபாகத்தை எவ்வாறு மதிப்பிடுவது’ என்பதற்கு மிகச் சரியான அளவுகோல். நான் அந்த அளவுகோலை வைத்துத்தான் அளந்தேன். எல்லா அளவீடுகளையும் தாண்டி, பாரதி என் இனத்தின் உழைக்கும் மக்களின் உற்ற தோழனாகவே நின்றான். அதைத்தான் இந்த நூலில் அடையாளப்படுத்தினேன்.
ஆதரவையும் எதிர்ப்பையும் ஒருங்கே சம்பாதித்த நூல் அது. தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் (தமுஎகச) 2003 ஆம் ஆண்டில் மதிமாறனின் ‘பாரதி’ய ஜனதா பார்ட்டி, கி.பார்த்திபராஜாவின் ‘பாரதி – கடந்த நூற்றாண்டுக் கவிஞன் பற்றிய மதிப்பீடு’, பாரதி புத்திரனின் ‘தம்பி நான் ஏது செய்வேனடா’, ந.ரவீந்திரனின் ‘பாரதியின் மெய்ஞ்ஞானம்’ ஆகிய நான்கு நூல்களுக்குமான ஒரு விமர்சனக்கூட்டத்தைத் திருவல்லிக்கேணி பாரதியார் இல்லத்தில் நடத்தியது. கலை இலக்கியப் பெருமன்றம் தோழர் மணிமுடி அவர்களின் முன்முயற்சியால், ‘பார்த்திபராஜாவும் மதிமாறனும்’ என்ற தலைப்பிலேயே ஒரு விமர்சன அரங்கை நடத்தியது. இடதுசாரி அரங்குக்கு வெளியே இருப்பவர்களால் நாங்கள் ‘பாரதி பைத்தியங்கள்’ என்று நாங்கள் வசைபாடப்பட்டோம். இவையெல்லாம் இந்நூலின் தாக்கங்கள்.
உங்களின் நாடகப் பயணம் குறித்துச் சொல்லுங்கள்?
‘கண்ணில் ஊறும் தண்ணீர் மண்ணில் ஊறாத’ கருவக்காட்டு பூமி எனது சொந்த ஊராகிய இராமநாநபுரம் மாவட்டம், திருவாடானை வட்டம், பெருவாக்கோட்டை. வறண்டுபோன என் நிலத்தைத் தன் இசை மழையால் நனைத்தார்கள் தவத்திரு சங்கரதாஸ் சுவாமிகளின் அடியொற்றிய இசை நாடகக் கலைஞர்கள்.
அவர்கள் மீதான ஈர்ப்புத்தான் என்னை நாடகக் களத்திற்குக் கொண்டு வந்தது. அறிவொளி இயக்கத்தின் வீதி நாடகம் வழியாக, கல்லூரிப் படிப்பை ஓராண்டு உதறித்தள்ளும் அளவுக்கு நாடகம் என்னைத் தன் சுழியோட்டத்தில் சிக்கவைத்திருந்தது. சென்னைப் பல்கலைக்கழக முதுகலைப்படிப்பில் எனது பேராசிரியர் வீ.அரசு அவர்களின் வழியாக, அ.மங்கை அவர்களுடைய நாடகங்களில் நடிகராகவும் உதவி நெறியாளுனராகவும் பணி புரிந்தேன். நான் செய்த ஒரு கள ஆய்வுப் பதிவை அடிப்படையாகக் கொண்டு, ‘வெள்ளாவி’ என்ற நாடகத்தை இயக்கினார் பேராசிரியர் அ.மங்கை. பிரசன்னா ராமசாமி, ஞாநி ஆகியோரின் பல நாடகத் தயாரிப்புகளில் பங்கேற்கும் வாய்ப்புக் கிடைத்ததை இப்போதும் நெகிழ்ச்சியோடு நினைத்துப் பார்க்கிறேன். என் நாடகப் பயணத்தைத் தொடர்ந்து உறுதிப்படுத்தியவர்கள் அவர்கள். தேசிய நாடகப் பள்ளியின் நடிப்புப் பயிற்சிப்பட்டறை, நாடக எழுத்துப் பயிற்சிப்பட்டறை, புரிசை தெருக்கூத்துப் பயிற்சி, இசை நாடகங்களோடு உறவாடல் என மரபு, நவீனம் இரண்டிலும் பயணப்படும் வாய்ப்பினைப் பெற்றேன்.பேராசிரியர் சே.இராமானுஜம், கே.ஏ.குணசேகரன், பேரா.இரா.ராஜூ, பேரா.வ.ஆறுமுகம், கே.எஸ்.கருணாபிரசாத், ச.முருகபூபதி ஆகியோரோடு பணி செய்யக் கிடைத்த வாய்ப்பு இன்னும் நாடகக்களத்தில் என்னைச் செதுக்கிக் கொள்ள உதவியது. நான் பணி செய்யக்கூடிய திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரியில் ‘மாற்று நாடக இயக்கம்’ என்ற அமைப்பை உருவாக்கிக் கடந்த பதினேழு ஆண்டுகளாக நாடகத் தயாரிப்புகள், நாடக அளிக்கைகள், பயிற்சிப்பட்டறைகள், நாடக விழாக்கள் என்று செயல்பட்டு வருகிறேன்.பல நூற்றுக்கணக்கான மாணவர்களுக்கு நாடகப் பயிற்சியளித்து வருகிறது எமது அமைப்பு. தமிழகம் முழுவதிலிருந்தும் மாணவர்கள் உற்சாகத்தோடு பங்கேற்கிறார்கள். இருபதுக்கும் மேற்பட்ட முழுநீள நாடகங்களை நெறியாளுகை செய்திருக்கிறேன். மொழியாக்க நாடகங்கள், தமிழ்த் தழுவல்கள், நேரடித் தமிழ்ப் படைப்புகள் இவற்றோடு நான் எழுதிய நாடகங்களும் இவற்றுள் அடக்கம்.
உங்கள் நாடகப் பயணம் இங்கு ஏற்படுத்திய அசைவியக்கம் என்ன?
நான் எழுதிய ‘நெடும்பயணம்’ உள்ளிட்ட சில நாடகங்கள், சில கல்லூரிகளின் பாடத்திட்டத்தில் இடம்பெற்றிருக்கிறது. கேரள அரசின் கல்லூரிப் பாடத்திட்டத்தில் எனது ‘திறக்கப்பட்ட புதிய வாசல்கள்’ என்னும் நாடகக் கட்டுரைத் தொகுப்பு வைக்கப்பட்டிருக்கிறது.
கல்லூரிக்கு வெளியே செயல்படுவதற்காக களமாக ‘நாடக சாலை’ என்ற அமைப்பை உருவாக்கி, என்னிடம் நாடகம் பயின்ற மாணவர்கள், நண்பர்களோடு செயல்பட்டு வருகிறேன். திருப்பத்தூரை மையமாகக் கொண்ட நாடக இயக்கத்துக்காக, இரண்டு ஏக்கர் பரப்பளவிளான நாடக நிலத்தில் சிறு கட்டிடத்தோடு பயிற்சிகளைத் தொடர்ந்து வருகிறோம். சிறிய பயிற்சி அரங்கம், நிகழ்த்தரங்கம் ஆகியவை எமது கனவு. வருங்காலத்தில் அது சாத்தியமாகும் என்பது எனது நம்பிக்கை.‘வளாக அரங்கு’ என்னும் கருத்துருவத்தில் திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரியின் செயல்பாடுகள் முக்கியமானவை. ஒரு கல்வி நிறுவனத்தின் வளாகத்தில் ஆசிரியர்களும் மாணவர்களும் இணைந்து செயல்படும் ஒரு களமாக எமது நாடகக் களம் இருக்கிறது. இங்கு ஆசிரியர்-மாணவர்-நிர்வாகம் என்ற அதிகாரப் படிநிலை தகர்த்தெறியப்பட்டு ஒரு ஜனநாயக நடவடிக்கையாக நாடகம் மலர்கிறது. மாணவர்கள், எமது ஊர்ப் பொதுமக்கள் என்று மட்டுமல்லாமல், தமிழகம் மட்டுமல்லாமல் தமிழ்கூறு நல்லுலகத்தின் பிற பகுதிகளுக்கும் நாடகத்தோடு பயணப்படுகிறது எமது குழு. மும்பை, திருவனந்தபுரம், டெல்லி மட்டுமல்லாது இலண்டன் போன்ற உலக நாடுகளுக்கும் தமிழ் நாடகங்களைக் கொண்டு சென்றிருக்கிறோம்.
நாடகக் களத்தை நீங்கள் எந்த நோக்கத்திற்காகத் தொடர்ந்து முன்னெடுக்கவேண்டும் என்று நினைக்கிறீர்கள்?
கலைகள், மனித சமூகத்தின் கூட்டுப் பிணைப்பை இன்னும் உறுதிப்படுத்துவன; மனிதாயப் பண்புகளை கிளர்த்தி, மேல்தளத்திற்குக் கொண்டு வருவன; தன்னையும் தன்னைச் சுற்றியுள்ள புறவுலகையும் உணர்வுப்பூர்வமாக உள்வாங்கிக் கொள்ளுவதற்குத் துணை செய்வன.
இந்த அடிப்படைகளைக் கலைகளில் ஒன்றாகிய நாடகமும் செய்கிறது என்பதே அதில் நான் தொடர்ந்து ஈடுபடக் காரணம். ஒரு தேசிய இனத்தின் அடையாளமாகத் திகழ்வன மொழி, கலை, இலக்கியம் ஆகியன. எனது தமிழ்தேசிய இனத்தின் மிக முக்கியமான அடையாளங்கள் எமது நிகழ்த்துகலைகள். அவற்றுக்கு நீண்ட நெடிய கால வரலாற்றுச் செழுமை உண்டு. ‘கூத்து’ என்ற சொல் குறைந்தபட்சம் மூவாயிரம் ஆண்டுப் பழமை உடையது. நிகழ்த்து கலைகளைப் பொறுத்தவரை சொல் என்பது வெறும் சொல்லன்று; அது செயல். இன்றைய கூத்தனின் காலில் கட்டப்பட்ட சலங்கையின் ஒலிகள், மூவாயிரம் ஆண்டுகளாக என் மண்ணில் நிலம் தோயத்தோய ஆடிய கலைஞனின் வழியாக, எம் மண்ணுக்குள் விதைக்கப்பட்டவை. முகவீணை, மத்தளம், ஆர்மோனியம், தாளம் ஆகிய கருவிகளின் கூட்டோசை, கூத்தனின் குரலோசை, அவனது காலடி அடவுகள் வழியாக நான் மூவாயிரமாண்டு என் மரபு வழியில் நடை பயிலுகிறேன். இன்றைக்கு நான் தேர்ந்தெடுத்துள்ள நவீன நாடகம் என்னும் வடிவம், என் மரபிலிருந்து வாரிக்கொண்டுவரப்பட்ட வளத்தின் திரட்சி என்பதை நான் உறுதியாக நம்புகிறேன். எனது கலைகள் எனக்கு வழங்கிய அனுபவங்களை, உற்சாகத்தை, குதூகலத்தை, மென்னுணர்வுகளை எனது சக மனிதனுக்குக் கடத்துவது என்னுடைய கடமை. அந்தக் கடமையின்பாற்பட்டே நான் கலைஞனாக ஆடுகளத்தில் நிற்கிறேன். என் நாடக முன்னோடிகளும் தன் வாழ்நாளெல்லாம் இக்கடமையை முன்னிறுத்தி இயங்கினார்கள். அவர்களுடைய இயக்கத்தின் உந்துவிசைத் தொடர்ச்சிதான் நான். அந்தத் தொடர்ச்சியின் பல்வேறு அசைவியக்கம்தான் எனது சமகாலக் கலைஞர்கள்.
மனிதகுல வரலாற்றில் வர்க்கம் தோன்றிப் பிளவுபட்டபோதே நிகழ்த்துகலைகளும் வர்க்க அடிப்படையில் பிளவுபட்டன. தமிழ் மரபில் ‘வேத்தியல், பொதுவியல்’ என்ற சொற்பதம் இதையே சுட்டுகிறது. உழைக்கும் மக்களின் கலைகளை அவர்களின் விடுதலைக்கான ஆயுதமாக ஏந்துவது என்பதே எமது அரங்கச் செயல்பாட்டின் அடிப்படை நோக்கம். ‘மக்களின் உழைப்பையெல்லாம் மறைத்து வைத்த ஒருசிலர், பொக்கிஷங்களில் கிடந்து புரளுவோர், உழைப்பவனின் பங்கைக் கொடுக்க மறுப்போர்…’ முதுகு சொறிவதற்கான கருவியாக எனது அரங்கத்தைத் தாரை வார்க்க நான் ஒருபோதும் சம்மதிக்க மாட்டேன்; எவ்வளவு பலகீனப்பட்டிருப்பினும், பித்தவெடிப்புகளால் விரிவுற்ற சேற்றுப்புண்கள் முளைத்த உழைக்கும் மக்களின் கால்களுக்குச் செருப்பாக்கவே எண்ணுவேன். இந்தப் புரிதலோடுதான் எமது நாடகப் பயணம் நீள்கிறது.
இன்றைய மாணவத் தலைமுறைக்கு நாடகங்கள் குறித்த புரிதல் எவ்வாறு இருக்கிறது. உங்கள் நேரடி அனுபவத்திலிருந்து இதைச் சொல்லலாம்.
‘விதை ஒன்று போட, சுரை ஒன்றா முளைக்கும்?’ என்று ஒரு சொலவடை தமிழில் உண்டு. கடந்த இருபது, இருபத்தைந்து ஆண்டுகளாக என்ன விதைத்தோமோ அதுவே இன்றைய எம் மாணவர்களிடம், இளைஞர்களிடம் விளைச்சலாக விளைந்து சரிகிறது. நடிகன் என்றாலே சினிமா நடிகன்தான்; கவிஞன் என்றாலே திரைப்படப் பாடலாசிரியன்தான்; இயக்குநன் என்றாலே சினிமா இயக்குநன்தான் என்று பொதுப்புத்தியில் பதியப்பட்டுவிட்ட காலப்பகுதி இது. இதில், தெருக்கூத்து, இசை நாடகம். நாட்டார் நிகழ்த்து கலைகள், நவீன நாடகம் எல்லாம் சிற்றோடை அல்ல; மெல்லிய நீர்க் கசிவுதான். இதனை நீங்கள் ‘சிறு நீர்க் கசிவு’ என்று புரிந்துகொண்டாலும் தவறில்லை. உண்மையும் அதுதான்.
நான் முன்பு சொன்ன கலைகளோடு நம் சமூகம் கொண்டிருக்கும் உறவுநிலை எத்தகையது? நாட்டார் நிகழ்த்துகலைகள், இன்னும் மண்சார்ந்த வழிபாட்டு முறைகளோடும் சடங்குகளோடும், கேளிக்கைகளோடும் பிணந்து கிடக்கின்றன. அதனால் ஏதோ கொஞ்சமாவது உயிர் பிழைத்துக் கிடக்கின்றன. நம்மூர் ஆன்மீகமும் பக்தியும் வழிபாடும் ‘கார்ப்பரேட்’ மயமாகி வரும் சூழலில் எளிய கலைகளுக்கு என்ன இடம்?
தன் மரபிலிருந்தும் தன் வேரிலிருந்தும் வேரடி மண்ணிலிருந்தும் அந்நியப்பட்டிருக்கும் எமது இளைஞர்களுக்கும் மாணவர்களுக்கும் இந்த நிகழ்த்துகலைகள் குறித்த புரிதல் என்னவாக இருக்கும்? ‘கிளு கிளு’ அம்சங்கள் மட்டுமே அவர்களின் கவனத்தை ஈர்ப்பதாக இருக்கிறது. பலரும் குற்றம்சாட்டுகிற நாட்டார் கலைகளில் பாலியல் சுவை ‘தூக்கலு’க்குப் பார்வையாளர்களின் புறக்கணிப்பு மனோபாவமே காரணம் எனப் பகிரங்கமாகக் குற்றம் சாட்டுகிறேன். பாலியல் சுவைத்தூக்கல் குற்றத்தைக் கலைஞர்களின் மீது சுமத்துவது அபாண்டம். ‘ஊருக்கு இளைத்தவன் பிள்ளையார் கோயில் ஆண்டி’ என்பதைப்போல. தமிழ்ச் சமூகம் சந்தித்துள்ள இந்தச் சரிவு என்பது மிகச் சாதாரணமானது அல்ல; இதைக்குறித்த மிகவும் ஆழமான ஆய்வுகள் வேண்டும். நவீன வளர்ச்சிகளை ஏற்பதற்கும், கார்ப்பரேட் மயமாகி மரபைக் கைகழுவுதல் என்பதற்கும் இடையிலான பருண்மையான மற்றும் நுண்மையான அம்சங்கள் ஆய்ந்து வெளிப்படுத்தப்பட வேண்டும். நமது கல்வியும் பண்பாடும் அடைந்துள்ள பண்பு ரீதியான மாற்றத்தின் வெளிப்பாடுகளே, இன்றைய இளைய தலைமுறைக்கும் நிகழ்த்துகலைகளுக்குமான தலைமுறை இடைவெளி. இவை இட்டு நிரப்பப்பட வேண்டும்.
கல்வித்துறையில் மேற்கொள்ளப்படும் ஆக்கப்பூர்வமான மாறுதல்களில் நிகழ்த்து கலைகளுக்கு உரிய இடம் வழங்கப்பட வேண்டும். நாம் இப்படி மாற்றுகளைக் குறித்துச் சிந்தித்துக் கொண்டிருக்கும் வேளையில், ‘கொடுத்தவனே எடுத்துக் கொண்டாண்டி மானே…’ என்கிற கதையாக ‘புதிய தேசியக் கல்விக் கொள்கை’ என்ற பெயரில் இருப்பதும் பறிபோகும் அவலம் அரங்கேறிக் கொண்டிருக்கிறது. கடந்த இருபது ஆண்டுகளாக மாணவர்கள், இளைஞர்கள் மத்தியில் நாடகப் பணிகளைச் செய்பவன் என்கிற முறையில் சொல்கிறேன்… இக்கலைகளில் ஈடுபடும் தயக்கத்தைத் தகர்த்து அவர்களைக் கொண்டுவந்து ஈடுபடுத்தியபோது, அதில் திளைத்து அவர்கள் அடையும் மகிழ்ச்சி அலாதியானதாக இருந்தது. அவர்கள் அதில் தன்னைக் கண்டடைந்தார்கள்; வாழ்க்கையின் நுட்பங்களை உணர்ந்தார்கள்; உறுதி பெற்றார்கள். இதைப் பரிசோதனை முயற்சியை எமது நாடகச் செயல்பாட்டாளர்களில் பலர் செய்து பார்த்திருக்கிறோம். இதனைப் பொதுமைப்படுத்துவதற்கான எண்ணத்தோடுதான் ‘கல்வியில் நாடகம்’ குறித்து, அரசுத்துறையோடும் தனியார் கல்வி நிறுவனங்களோடும் உரையாடிக் கொண்டிருக்கிறோம். கலைச் செயல்பாடுகளில் நம் மாணவர்களின் ஊடாட்டம், அவர்களைச் செயலூக்கமிக்கவர்களாக உருமாற்றும் என்பதை உறுதிபடச் சொல்லலாம். அதற்கான ஒரு பெரிய இயக்கம் நமது பண்பாட்டு அமைப்புகளின் வழியாகவும் கல்வித்துறை வழியாகவும் தொடங்கப்பட வேண்டும்.
உங்களுடைய இசைநாடக ஈடுபாடு, இசைநாடகம் பற்றிய ஆய்வுநூல் ‘காயாத கானகத்தே…’ உருவான விதம் பற்றிச் சொல்லுங்கள்…
தவத்திரு சங்கரதாஸ் சுவாமிகளால் திருத்தி அமைக்கப்பட்டு புத்தொளி பாய்ச்சப்பட்ட நாடகமே இசைநாடகம் என்னும் தனித்த நாடக வடிவம். தமிழகத்தின் தென் பகுதியாகிய திருச்சி முதல் திருநெல்வேலி வரையிலான பகுதிகளில் இன்னும் திருவிழாக்களில் கட்டாயம் இடம்பெறும் நிகழ்கலை வடிவமாக அது இருக்கிறது. சிறு வயதிலிருந்து நான் பார்த்த வள்ளி திருமணம், அரிச்சந்திர மயான காண்டம், பவளக்கொடி, தூக்குத் தூக்கி, பாமா விஜயம், வீரபாண்டிய கட்டபொம்மன், ஞான சவுந்தரி, புனித அருளானந்தர் ஆகிய நாடகங்களின் வழி அதன் மீது ஒரு ஈர்ப்பு ஏற்பட்டிருந்தது. எங்கள் கரிசல்காட்டு, கருவக்காட்டுப் பூமியின் கதாநாயகர்கள் இசைநாடகத்தின் ராஜபார்ட்டுகள்தான்; கதாநாயகிகள் இந்நாடகத்தில் பங்குபெறும் ஸ்திரீ பார்ட்டுகள்தான். சென்னைப் பல்கலைக்கழகத்தில் முதுகலைப் படிப்பில் சேரும்வரை நான் இந்நாடகவடிவத்தின் பார்வையாளன் மட்டுமே. சென்னைப் பல்கலைக்கழகத்தில் எங்களுக்கு மூத்தவர்கள், ஆய்வாளர்களில் ஒரு பெரும்பட்டாளம் தெருக்கூத்தைப் பற்றிய ஆய்வில் தோய்ந்திருந்தது. அவர்களோடு தெருக்கூத்துப் பார்க்க வடமாவட்டப் பகுதிகளுக்கு அலைந்து திரிந்தபோதுதான், நம் பகுதியின் இசைநாடகம் பற்றியும் எழுதலாமே என்று எனக்குத் தோன்றியது. முதலாமாண்டு கோடை விடுமுறையில் ஊருக்குத் திரும்பிய நான், அடுத்தநாளே காரைக்குடி இசைநாடக சங்கத்தின் வாயிலில் கால் பதித்தேன். எந்தத் திட்டமும் இல்லை; இசை நாடகத்தை முழுமையாகப் பார்ப்பது; அனைத்துக் கலைஞர்களின் நடிப்பையும் உற்று நோக்குவது, அவர்களோடு உரையாடுவது என்ற ஒரு வரையறுக்கப்படாத திட்டத்தோடுதான் பணியைத் தொடங்கினேன். இரண்டுமாதங்கள் முழுவதுமாக அவர்களோடு சுற்றி அலைந்துவிட்டுச் சென்னை புறப்பட்டபோதுதான், இசைநாடகம் பற்றி எழுதுவதற்கு இந்த அடிப்படைப் பணிகள் மட்டும் போதாது என்று தோன்றியது.
பிறகு ஏறத்தாழ எட்டு ஆண்டுகள் இசைநாடக வெளியில் தொடர்ச்சியாக குறுக்கும் நெடுக்குமாக அலைந்து திரிந்த பிறகுதான்… சில கட்டுரைகளை எழுதத் தொடங்கினேன். ஓசூரிலிருந்து தோழர் ஆதவன் தீட்சண்யா அப்போது ‘புதுவிசை’ இதழைக் கொண்டு வந்த நேரம். ‘நாடகம் பற்றி ஒரு தொடர் எழுதுங்களேன்’ என்று ஒரு வாய்ப்புத் தந்தார். நான் எழுதினேன். அதற்குக் கிடைத்த பின்னூட்டங்கள் என்னை உற்சாகப்படுத்தின. பிறகு இன்னும் சில கட்டுரைகளையும் எழுதி இணைத்து, ‘காயாத கானகத்தே…’ என்னும் தலைப்பிலான நூலினைக் கொண்டு வந்தேன். இசை நாடகவெளியினூடாக ஒரு பயணம்’ என்றே இந்நூலை நான் குறிப்பிட்டிருந்தேன். சங்கரதாஸ் சுவாமிகள், பம்மல் சம்பந்தனார், பாலாமணி அம்மாள், விசுவநாத தாஸ், டி.எம்.காதர் பாட்சா, கே.பி.சுந்தராம்பாள் உள்ளிட்ட அக்காலத்திய கலைஞர்களோடு, பொன்னமராவதி ஆறுமுகம், இடைச்சியூரணி முருகேசன், மன்னார்குடி காமராஜ், புதுக்கோட்டை இளையராஜா உள்ளிட்ட சமகாலத்து இசைநாடகத்தின் மகத்தான கலைஞர்களைக் குறித்த கட்டுரைகள் இந்நூலில் இடம்பெற்றிருந்தன. இந்நூல் அதுவரை முன்பு வெளிப்படுத்தப்படாத, அதிகம் அறியப்படாத இசை நாடகவெளியின் மிக முக்கியமான தகவல்களைக் கொண்டிருந்ததாகவும் வாசிக்கச் சுவையான நடையில் எழுதப்பட்டிருப்பதாகவும் பலர் பாராட்டினர். நாடகவியலாளர் பிரளயன், பேராசிரியர் மு.ராமசாமி, திரைக்கலைஞர் நாசர், பேராசிரியர் ச.மாடசாமி உள்ளிட்ட பலர் இந்நூலை பாராட்டியுரைத்தார்கள். எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் ‘அந்த ஆண்டில் வெளிவந்த குறிப்பிடத்தக்க நூல்களில் காயாத கானகத்தே…யும் ஒன்று’ என ஒரு நேர்காணலில் குறிப்பிட்டிருந்தார்.
இந்நூல் உருவாக்கக் காலத்தில் அக்கலைஞர்களோடு ஏற்பட்ட உறவு, இன்றும் உயிர்ப்போடு நீடிக்கிறது. காரைக்குடி இசை நாடக சங்கத்தில் உறுப்பினராகவும் புரவலராகவும் தொடர்கிறேன்.‘காயாத கானகத்தே…’ நூலின் மறுபதிப்பு விரைவிலேயே வெளிவர இருக்கிறது. இந்நூலின் இரண்டாம்பாகமும் தயாராகிவிட்டது. இரண்டும் ஒன்றாகவே வெளியிடப்படவிருக்கின்றன.
கல்லூரிப் பேராசிரியராகப் பணியிலிருக்கும்போதே தெருக்கூத்தையும் முறையாகக் கற்று ஆடினீர்கள் அல்லவா? அந்த அனுபவம் எப்படி இருந்தது?
மிக மிகச் சுவையான அனுபவம் அது.. தெருக்கூத்து என்றால் என்னவென்றே அறியப்படாத தமிழகத்தின் தென் பகுதியிலிருந்து வந்திருந்தாலும், பல்கலைக்கழக நாட்களிலேயே தெருக்கூத்தைக் கண்டு அதில் ஈர்க்கப்பட்டேன்.பல்கலையில் பயிலும் நாட்களிலேயே புரிசை கலைமாமணி கண்ணப்பத் தம்பிரான் அவர்களின் கூத்தினைப் பலமுறை கண்டிருக்கிறேன். தம்பிரான் அவர்களிடம் மரியாதை கலந்த அச்ச உணர்வே மிகுந்திருந்தது எனக்கு. கல்லூரியில் உதவிப் பேராசிரியராகப் பணியேற்ற பிறகு, பிரபஞ்சனின் ‘முட்டை’ நாடகத்தை நிகழ்த்தினேன். இரண்டாவது நாடகமாக எஸ்.எம்.ஏ.ராமின் ஆபுத்திரன் கதையைத் தொடர்ந்து மூன்று நாட்கள் நிகழ்த்தும்போது முதல்நாளில் தம்பிரானின் மரணச்செய்தி வந்து சேர்ந்தது. அவருக்கு அஞ்சலி செலுத்தி நாடக நிகழ்வைத் தொடங்கினேன். பிறகு, கண்ணப்பத் தம்பிரானின் புதல்வர், கலைமாமணி டாக்டர் புரிசை சம்பந்தத் தம்பிரானிடம் தெருக்கூத்துப் பயின்றேன். மூன்று மாதங்கள் புரிசையில் பயிற்சி நடந்தது. அடிப்படைப் பயிற்சிகளை நிறைவு செய்து ‘அனுமன் தூது’ தெருக்கூத்தை புரிசையில் அரங்கேற்றினோம். இக்கூத்து நிகழ்வில் ‘அனுமனாக’ வேடங்கட்டிக் கூத்தாடினேன் நான். தேசிய நாடகப் பள்ளி உள்ளிட்ட நிறுவனங்களிடமிருந்தும் நவீன நாடக விற்பன்னர்களிடமிருந்தும் நான் பெற்ற நடிப்புப் பயிற்சிகள் யாவும் தெருக்கூத்துப் பயிற்சிக்கு முன் ஈடுகொடுக்க முடியவில்லை. கூத்தர்களின் வன்மையையும் மேதமையையும் நான் தரிசித்து வியந்தேன் என்றுதான் சொல்ல வேண்டும். சுறுசுறுவென அடித்து நகர்த்தினார் என் ஆசிரியர் தம்பிரான் அவர்கள்.
புரிசையில் அரங்கேற்றம் என்றபோதே, மனதில் அச்சம் எழுந்தது. கொஞ்சம் நடுக்கமாகக்கூட இருந்தது. புரிசைப் பார்வையாளர்கள் ஏறத்தாழ ஐந்தாறு தலைமுறையாகக் கூத்துப் பார்ப்பவர்கள். தெருக்கூத்தின் பாடல்கள் அத்துப்படியான பார்வையாளர்கள் அவர்களில் மிகுதி.
சரியாக அடவுகள் போட்டு ஆடாத கூத்தனை, ‘என்ன ஆட்டம் ஆடுறான்… செத்த ஆட்டம்…’ என்று ஏசுவதை நானே நேரில் பார்த்திருக்கிறேன். அப்படிப்பட்ட பார்வையாளர்களின் மத்தியில் அரங்கேறுவது என்றால் சும்மாவா?
ஒருவழியாய்ச் சமாளித்து மூன்றரை மணிநேரத் தெருக்கூத்தை ஆடி முடித்தேன். மறுநாள் புரிசைப் பெரியவர்கள் சிலர் எங்கள் வாத்தியாரிடம் சொன்னார்களாம், ‘அனுமன் ஆடின பையன் நல்லாவே ஆடினான்’ என்று. எனது ‘நெடும்பயணம்’ என்னும் நாடகத்தில் ஜவ்வாதுமலை நெல்லிவாசல் நாட்டுப் பகுதியின் கூத்தைப் பயன்படுத்தியிருக்கிறேன். தற்போது ஜவ்வாதுமலையின் புங்கம்பட்டு நாடு, சின்னவட்டானூரைச் சேர்ந்த ஒரு தெருக்கூத்துக் குழுவோடு இணைந்து சில பணிகளை முன்னெடுத்து வருகிறேன்.
பேராசிரியர் கா.சிவத்தம்பி அவர்களோடு உங்களுக்கு இருந்த ஆசிரியர் மாணவர் உறவு குறித்துச் சொல்லலாம்.
மார்க்சிய அறிஞர் ஜார்ஜ் தாம்சனின் மாணவராகிய பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பி, சென்னை உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்திற்கு வருகைதரு பேராசிரியராகப் பணிசெய்ய வந்தபோது, அவருக்கு உதவியாளராகப் பணிபுரியும் பேறுபெற்றேன். பேரா.வீ.அரசு அவர்களும் முனைவர் இராமர் இளங்கோ ஐயா அவர்களும் இந்த வாய்ப்பினை எனக்கு ஏற்படுத்தித் தந்தார்கள். பேராசிரியர் சொல்லச் சொல்ல எழுதும்பணிதான் எனக்கு. ஆனால் விரைவிலேயே அவருடைய அன்பைப் பெற்று அவருடைய ‘பெறா மகனாக’ ஆகிப் போனேன். கனத்த சரீரத்தோடு அவர் மல்லுக்கட்டிக் கொண்டிருந்தபோதும், அந்தச் சரீரத்தில் பல நோய்களோடு அவர் போராடிக் கொண்டிருந்த போதும், இடையறாது படித்துக் கொண்டிருந்தார். தமிழில் வரும் புதிய படைப்புகளையும் ஆய்வுகளையும் உடனுக்குடன் படித்துவிடும் தாகம் கொண்டிருந்தார். அதனால் எப்போதும் அவர் தற்காலத்துக்கான ஆய்வாளராகவே இருந்தார். நடக்க இயலாமல் சர்க்கர நாற்காலியில் அமர்ந்து பயணப்பட வேண்டிய நிலையில், சென்னை விமான நிலையத்தில், கொழும்பு விமானத்தின் படிக்கட்டுவரை சென்று வழியனுப்பும் சலுகையை நான் பெற்றிருந்தேன். விமான நிலைய அதிகாரிகளோடு பேசி, அவரைப் பார்த்து, இவரைப் பார்த்துக் கடைசியில் அனுமதி பெற்றுவிடுவேன். ஒவ்வொரு பயணத்திலும் இதைப் பேராசிரியர் தனது சர்க்கர நாற்காலியில் அமர்ந்தபடி பார்த்து ரசித்துக் கொண்டிருப்பார். அனுமதிக்கப்பட்ட அளவுக்கு மேல் பல ஆயிரக்கணக்கான ரூபாய் கட்டணம் செலுத்தி, நூல்களை அவர் இங்கிருந்து கொண்டு செல்வார்.
கட்டுரைகளை அவர் சொல்லச் சொல்ல நான் எழுதுவேன். தனது ஆய்வுக் கட்டுரைகளில் அவர் கொண்டு நிறுத்தும் தர்க்கம் வியப்பளிக்கும். மார்க்சிய முறையியலை மிகவும் நுட்பமாகப் பயன்படுத்தும் திறன் அவரிடம் இருந்தது; அதனால்தான் சங்க இலக்கியங்களின் மீதும் அவர் புதிய வெளிச்சங்களைப் பாய்ச்ச முடிந்தது. சாராம்சத்தில் மார்க்சியத்தை மறுக்கும் புதிய கோட்பாடுகளையும் அவர் ஆழக் கற்றிருந்தார். அவற்றின்மீது அவர் ஒவ்வாமை கொண்டிருக்கவில்லை. புதிய கோட்பாடுகளின் விமர்சனத்தை, எவ்வாறு மார்க்சியத்தைச் செழுமைப்படுத்திக்கொள்ளப் பயன்படுத்தமுடியும் என்பதிலேயே அவர் கருத்தாயிருந்தார். இத்தன்மையால் அவர் இருதரப்பாரின் வசவுகளையும் சுமக்க வேண்டியவரானார்.
எழுதும் தருணங்களில் சற்றே இடைநிறுத்தி, உரையாடுவார். அவருடைய கருத்தை மறுத்துரைக்க வாய்ப்பளிப்பார்; மறுத்துரைக்க உற்சாகப்படுத்துவார். தன் தரப்பு நியாயங்களை வலியுறுத்துவார்; சிற்சில வேளைகளில் தனது கருத்துக்களை மீள வாசித்துச் செம்மைப் படுத்துவார். கட்டுரையின் இறுதியில் ‘இக்கட்டுரையாக்கத்தின்போது விவாதித்துக் கருத்துப் பங்களிப்பைச் செய்த ஆய்வாளர் கி.பார்த்திபராஜாவுக்கு நன்றி’ என்று என்னையே எழுதப் பணிப்பார். கூச்சத்தோடு தயங்கி மறுக்கிற வேளைகளில், ‘இதுதானடாப்பா நீங்க தமிழ்நாட்டுல விடுற பிழை.. ஒருத்தனோட கருத்துப் பங்களிப்பை அங்கீகரிக்கனுமடாப்பா… எழுதடா…’ என்று அதட்டுவார். ஒரு மார்க்சிய ஆய்வாளன் எவ்வாறு மார்க்சிய அறிஞனாக மாறுவான் என்பதற்குப் பேராசிரியர் கா.சிவத்தம்பி அவர்களே சான்று. அவர்களிடம் உதவியாளராகப் பணிசெய்யக் கிடைத்த வாய்ப்பை எனது வாழ்வின் பெரும்பேறுகளில் ஒன்றாகவே நான் கருதுகிறேன்.
சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ் இலக்கியத்துறை உங்கள் வாழ்வில் ஏற்படுத்திய தாக்கம், மாற்றம் என்ன?
தமிழகத்தின் தென் மாவட்டமாகிய இராமநாதபுரத்திலிருந்து சென்னைக்கு வந்த என் எல்லைகளை விரிவாக்கியது சென்னைப் பல்கலைக்கழக தமிழ் இலக்கியத்துறை. பேராசிரியர் பொற்கோ அவர்களிடமும் பேராசிரியர் வீ.அரசு அவர்களிடமும் தமிழ் பயிலக் கிடைத்தது நல்வாய்ப்பு. செய்யுள்களைக் காதால் கேட்ட மாத்திரத்திலேயே எங்கு ‘தளை தட்டுகிறது’ என்று சொல்லும் மரபுத்தமிழறிஞர் பொற்கோ. கடினமான கோட்பாடுகளையும் எளிமையாகப் புரிய வைப்பவர்.
பேராசிரியர் வீ.அரசு, ஒரு சராசரிப் பேராசிரியர் அல்லர். முதுகலை முதலாமாண்டு மாணவனிடம் ரொமிலா தாப்பரையும் இர்ஃபான் ஹபீப்பையும் நோம் சாம்ஸ்கியையும் எஸ்.வி.ஆரையும் அறிமுகப்படுத்துவார். தமிழ்ச் சமூக வரலாறு குறித்த அவருடைய வகுப்பறை விரிவுரைகள் இரண்டு மணி நேரங்களையும் கடந்து நீளும் சுவையுடையவை. வகுப்பறைக்கு வெளியே, மெரினாவின் கடற்கரை மணலில் அவர் எங்களுக்கு அறிமுகப்படுத்திய இலக்கியங்கள் ஏராளம். ‘கங்கு’ என்ற இலக்கிய அமைப்பாகவும் அது பின்னாளில் விரிவடைந்தது.
மாணவர்களோடு இணைந்து பல பணிகளை அவர் முன்னெடுத்தார். எங்கள் வகுப்பு மாணவர்களோடு அவர் இணைந்து உருவாக்கிய ‘வாய்மொழி வரலாறு’, ‘நாட்டார் சாமிகள்’ இரண்டும் மிக முக்கியமான நூல்கள். பேராசிரியர் சு.சண்முகசுந்தரம் தனது ‘தன்னனானே’, ‘காவ்யா’ பதிப்பகங்களில் வழியாக அவற்றை வெளியிட்டிருக்கிறார். நான் ஆய்வு மாணவராகச் சேர்ந்த தருணத்தில் துறைக்குப் பேராசிரியராக வந்திணைந்தார் முனைவர் ய.மணிகண்டன். எனது வாழ்வில் மிக நெருக்கடியான தருணங்களில் ஆறுதலாக நின்றவர். தனது இலக்கைத் தவிர, இங்கும் அங்கும் பிசகாத கூர்மையான பார்வை கொண்டவர். இலக்கியத்துறை மாணவர்களின் மிகப்பெரும் உத்வேகமாக இன்றும் திகழ்பவர். பல்கலைக்கழக தமிழ் இலக்கியத்துறை எங்களுக்கு வழங்கிய சுதந்திரம் விரிவானது. அங்குக் கட்டி உருளாத குறையாக விவாதங்கள் அரங்கேறும். அவற்றுக்கெல்லாம் திறந்த மனதுடன் இடமளித்தார்கள் எங்கள் ஆசிரியர்கள். அவ்வாறான ஒரு விவாதத்தின் விளைச்சல்தான் எனது முதல் நூலாகிய ‘பாரதி கடந்த நூற்றாண்டுக் கவிஞன் பற்றிய மதிப்பீடு’.
உங்கள் குடும்பம் குறித்துச் சொல்லுங்கள்? இந்தக் கேள்வி உங்கள் குடும்பத்தின் தனித்துவத்தின் மீதான கேள்வியாகவே முன்வைக்கிறேன்.
எனது பெற்றோர் ஆசிரியர்கள். கண்டிப்பும் கறார்த்தனமும் உள்ள சராசரி ஆசிரியர் குடும்பம் என்னுடையது. எனது தந்தையார் சி.கிருஷ்ணன் ஓர் இடைநிலை ஆசிரியர். அறிவியல் பாடங்களில் ஆர்வமுடையவர். என்னை நாத்திகனாக்கிய கடவுள் நம்பிக்கையாளர் அவர்.
வட தமிழகத்தின் இடதுசாரி இயக்கச் செயல்பாட்டாளர்களாகிய பொ.வே.இராமானுஜம், பொ.வே.பக்தவச்சலம் ஆகியோரின் தம்பியாகிய பொ.வே.ஆனந்தகிருஷ்ணன் மகளாகிய ம.ஆ.சிநேகா அவர்கள் எனது வாழ்விணையர். சாதி, மதம் அற்றவராகத் தனது பெற்றோரால் வளர்க்கப்பட்டவர். இடதுசாரித் தோழர்களின் உறவே அவர்களது சமூக உறவாக இருந்தது. தாலி மறுப்பு, சடங்கு மறுப்புத் திருமணமாகவே எங்கள் இணையேற்புவிழாவைப் பாவலர் இன்குலாப் தலைமையேற்று நடத்தி வைத்தார். எங்கள் குழந்தைகளையும் சாதி, மதம் அற்று வளர்ப்பது என்று முடிவுசெய்தோம். ஆதிரை நஸ்ரீன், ஆதிலா ஐரின், ஆரிஃபா ஜெசி என மூன்று குழந்தைகள். பௌத்த, இஸ்லாமிய கிறித்தவ பெயர்கள் இவை. தமிழ் அடையாளத்தைவிட, ஒடுக்கப்பட்டவர்களின் அடையாளத்தை எம் பெயர்களில் ஏந்துவதே இன்றைய தேவை என்று நாங்கள் கருதினோம். அந்த அடிப்படையிலேய குழந்தைகளுக்கும் பெயர்களை இட்டோம்.
எனது இணையர் சிநேகா அவர்கள் வழக்கறிஞர். ஒன்பதாண்டுகாலப் போராட்டத்தின் விளைவாக, ‘சாதி மதம் அற்றவர் என்ற அரசுச் சான்றிதழ் பெற்ற முதல் இந்தியர்’. ‘சாதி குறிப்பிட்ட சான்றிதழோ, சாதி குறிப்பிடாத சான்றிதழோ முக்கியமில்லை; அதையும் தாண்டி, நாம் என்னமாதிரியான வாழ்க்கை வாழுகிறோம் என்பதே முக்கியமானது’ என்பார். சாதி, மதத்தை உதறித் தள்ளிய ஆயிரக்கணக்கான தோழர்களின் வழித்தோன்றலே நான் என்பார் அவர். ‘சான்றிதழ் சாதியை ஒழித்துவிடாது; தொடர்ந்த சமூக மாற்றமே அதைச் சாத்தியமாக்கும்’ என்ற எண்ணத்தில் தொடர்ந்து இயங்கும் களச் செயல்பாட்டாளர்.
எளிய, பகிர்ந்துண்ணும் கூட்டு வாழ்க்கை. அரசியல் விவாதம், பாட்டு, ஆட்டம்என கொண்டாடிக் களிக்கும் கூத்தாடிக் குடும்பம் என்னுடைய குடும்பம்.
ஆய்வுப்பயணத்திலும் நாடகப்பயணத்திலும் உங்கள் மீது அதிக தாக்கம் செலுத்தியவர்கள் என்று நீங்கள் யாரையெல்லாம் குறிப்பிட வேண்டுமென்று நினைக்கிறீர்கள்?
க.கைலாசபதி, கா.சிவத்தம்பி, கோ.கேசவன் ஆகியோர் என் ஆய்வுகளின் முன்னோடிகள். மார்க்சியத்தை தமிழியல் ஆய்வில் எவ்வாறு பொருத்தி ஆய்வது என்பதை நான் இவர்களிடமிருந்தே கற்றேன். இம்மூவரில் நான் கலாநிதி கைலாசபதி அவர்களைச் சந்தித்ததில்லை; நூல்களின் வழியாகவே எனக்கு ஆசான் ஆனவர் அவர். கோ.கேசவன் அவர்களைப் பல்கலைக்கழக வளாகத்தில் சந்தித்திருக்கிறேன்; அதிகம் உரையாடியதில்லை. அவருடைய மறைவுக்குப் பிறகு, அவர்தம் ஆய்வுப்பங்களிப்பை மதிப்பிடும் வகையில் நானும் ஜெ.முனுசாமி, கங்காதரன் ஆகிய தோழர்கள் ஒரு ஆய்வுக் கருத்தரங்கையும் நடத்தினோம். அப்போது சென்னையில் சில ஆய்வாளர்களை ஒன்றிணைத்துப் ‘படிப்பு வட்டம்’ என்ற பெயரில் சில நிகழ்வுகளை முன்னெடுத்தோம். அ.மங்கை, பிரசன்னா ராமசாமி, ஞாநி ஆகியோர் நாடக ஆசான்களாக நான் வரித்துக் கொண்டவர்கள். இன்றுவரை நாடகக் கலைஞனாக நான் தொடர்வதில் இவர்களின் பங்களிப்பு மிகுதி. இவர்களில் மறைந்த ஞாநி அவர்களோடு நான் கடுமையாகச் சண்டை போட்டிருக்கிறேன். கருத்துநிலைச் சண்டையின் உச்சத்தில் அவருடைய நாடகத்தில் நடிக்கவும் மறுத்திருக்கிறேன். சண்டைபோடுபவனை ஆட்டோ பிடித்து அழைத்துக் கொண்டுபோய், தன் வீட்டில் சோறுபோட்டுத் தங்க வைத்துச் சண்டையைத் தொடருவார் ஞாநி. எந்தக் கருத்துச் சண்டையையும் திறந்த மனத்தோடு உரையாடும் பண்பை வலியுறுத்திய மிகச்சிறந்த ஜனநாயகவாதி ஞாநி அவர்கள்.
படைப்பிலக்கியத் திறனாய்வுகளில் மார்க்சியத் திறனாய்வாளர்கள் பெரும்பட்டாளமே இயங்கிய காலம் ஒன்றுண்டு. இப்போது என்ன நிலை?
உண்மைதான். தொ.மு.சி.ரகுநாதன், நா.வானமாமலை, க.கைலாசபதி, கா.சிவத்தம்பி, எம்.ஏ.நுஃமான், அ.மார்க்ஸ், தி.சு.நடராசன், ஆ.சிவசுப்பிரபமணியன் எஸ்.தோதாத்ரி உள்ளிட்ட நா.வா.ஆய்வுக்குழுவினர், ஜே.கிருஷ்ணமூர்த்தி இலக்கிய வெளிவட்டம் என்ற பெரும்படையினர் திறனாய்வுத்துறையில் இயங்கிய காலம் அது. எதிர்க்களத்திலும் மென்மையான போக்குடைய க.நா.சுப்பிரமணியம் முதல் மட்டையடி அடிக்கும் வெங்கட்சாமிநாதன் வரை தீவிரமாக இயங்கினார்கள். அதனால் திறனாய்வுக்களம் போராட்டக்களமாகவும் இருந்தது. அந்த உக்கிரத்தைத் தாங்கிய எழுத்துக்கள் வெளிவந்தன.
இன்று படைப்பிலக்கியத்துறையில் இடதுசாரிப் படைப்பாளிகள் மிகவும் நுட்மான படைப்புகளை, ஆக்கங்களைத் தந்து கொண்டிருக்கிறார்கள். ஆனால், பொதுத்தளத்தில் திறனாய்வு என்பது வழவழா கொழகொழா என்று ஆகியிருக்கிறது. கருத்தியல் அடிப்படையில் படைப்புகளைக் கறாராக மதிப்பிடும் போக்கு, சற்றே முனை மழுங்கியிருக்கிறது. ஆகவே படைப்பிலக்கியத் திறனாய்வில் மார்க்சியத் திறனாய்வாளர்கள் சற்று ஓய்ந்திருப்பது உண்மைதான். மார்க்சியக் கருத்துநிலை நின்று படைப்புகளைத் திறனாயும் புதிய இளந்தலைமுறை திறனாய்வாளர்களுக்கு இங்கு வறட்சி நிலவுகிறது. இது கருத்தியல் தளத்தில் ஏற்பட்டுள்ள திகைப்பு, ஊசலாட்டம் ஆகியவற்றின் வெளிப்பாடுதான். ஆனால் சமூகத்தில் பிரிவினை என்பது பல்வேறு தளங்களில் வெளிப்படத் தொடங்கியிருக்கின்றன; அவை கூர்மையாகவும் அடையாளப்படத் தொடங்கியிருக்கின்றன.
மதப் பெரும்பான்மைவாதமும் சாதிய ஆதிக்கவாதமும் ஏதோ ஒரு புள்ளியில் கைகோர்த்துக் கொண்டுள்ளன. உதிரிகளாக இருந்த சமூக அடுக்குகள் ஒன்றிணையத் தொடங்கி, அவற்றை எதிர்கொள்ள வேண்டிய காலப்பகுதியாக இக்காலகட்டம் இருக்கிறது. எனவே இனி இந்த முரண்பாடுகள் திறனாய்வுத்துறையில் வெளிப்பட்டேயாக வேண்டிய வரலாற்றுக்கட்டத்தில் நிற்கிறோம். இளந்தலைமுறை மார்க்சியத் திறனாய்வாளர்களுக்கான தேவையை அப்போது இன்னும் நெருக்கமாக நாம் உணருவோம். தேவைகள், அவர்களை உற்பத்தி செய்யும். அதற்கான அடிப்படைகளை உருவாக்குவதும் அவற்றை உயிர்ப்போடு தக்கவைப்பதும் மார்க்சியக் கருத்துநிலைச் செயல்பாட்டாளர்களின் கடமையுமாகும்.
இன்றைய இளந்தலைமுறையினரின் ஆய்வுகளில் அரசியல் கூர்மைப்பாடு மங்கியிருக்கிறதா? கருத்துநிலைசார் ஆய்வாளராக இந்தப் போக்கிற்கான காரணிகளென எவற்றைக் கருதுகிறீர்கள்?
இன்றைய இளந்தலைமுறை ஆய்வாளர்களின் களம் முன்னைவிட விரிவானதாக இருக்கிறது. அவர்கள் கவனம் கொள்ளும் துறைகளும் வியாபகம் கொண்டிருக்கின்றன. அவர்களின் ஆய்வுகளில் அரசியல் கூர்மைப்பாடு மங்கியிருப்பதாக நான் கருதவில்லை. அவை வேறு வடிவங்களில் வெளிப்படுகின்றன என்றே நினைக்கிறேன். ஆரியம்Xதிராவிடம், மதப் பெரும்பான்மைவாதம்Xமதச்சார்பின்மை, சாதி ஆதிக்கவாதம்Xசாதி ஒழிப்பு அரசியல், வைதீக நோக்கிலான பெண் ஒடுக்குமுறைக் கருத்தியல்Xபெண் விடுதலைக் கருத்தியல் என இக்களங்களில் இளம்தலைமுறை ஆய்வாளர்கள் காத்திரமான முன்னெடுப்புகளைச் செய்துகொண்டுதானிருக்கிறார்கள். இந்த ஆய்வுகளை, திராவிட மற்றும் மார்க்சியக் கருத்துநிலைகளின் தொடர்ச்சி என்றே நான் கருதுகிறேன்.
தமிழகக் கல்விப்புலங்களின் அயர்ச்சி தரும் போக்கு, பணி வாய்ப்புகள் பெரும்பாலும் வியாபாரத்தன்மை கொண்டிக்கும் இழிநிலை, அதனைச் சூழ்ந்தெழும் நம்பிக்கை வறட்சி இவற்றையும் தாண்டி பல ஆய்வாளர்கள் காத்திரமாகச் செயல்படுகிறார்கள். பா.ஆனந்தகுமார், இரா.காமராசு, டி.தருமராஜன் ஆகியோரது ஆய்வுப்பணிகளைத் தொடரும் வகையில் ஸ்டாலின் ராஜாங்கம், பா.ரவிக்குமார், ப.சரவணன், பா.ஜெய்கணேஷ், ஏர் மகாராசன், இரா.ஜவஹர் எனப் பலர் தனது ஆய்வுகளை முன்னெடுத்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்.
கீழடி, சிவகளை அகழ்வாய்வுகள் தந்த உத்வேகம் அளப்பரியது. தொல்லியல் ஆய்வுகளில் தமிழகத்தின் பலபகுதிகளிலுமுள்ள கல்விப்புலம் சார்ந்த / சாராத இளந்தலைமுறையினர் தன்னெழுச்சியோடு ஈடுபட்டு வருகிறார்கள். அவற்றை ஒருகுடையின்கீழ் ஒருங்கிணைக்க வேண்டிய தேவை இருக்கிறது. அதனை தமிழியல் வரலாற்றோடு பொருத்தி ஆய்வு முடிவுகளை நோக்கி நகர்த்த வேண்டிய கடமையும் நமக்கிருக்கிறது.
இளம் ஆய்வாளர்களை ஒருங்கிணைத்து, ஆய்வு முறையியல் மற்றும் நெறிமுறைகள் சார்ந்த பயிற்சிகளை வழங்குவது பற்றிப் பேராசிரியர் ந.முருகேசபாண்டியன் அவர்களோடு விவாதித்திருக்கிறோம். மூத்த ஆய்வாளர்களின் அனுபவச் செழுமையை அடுத்த தலைமுறைக்குக் கடத்த வேண்டியிருக்கிறது. சடங்குப் பூர்வமாக அன்றி உள்ளெழுச்சியோடு நடைபெறும் இப்பரிமாற்றம் அடுத்த பத்தாண்டுகளில் தமிழியல் ஆய்வுகளில் இளம்தலைமுறை ஆய்வாளர்களை ஆய்வுக்களத்தில் முன்னிறுத்தும் என்பது எனது நம்பிக்கை. அப்பணியை விரைந்து முன்னெடுக்க வேண்டுமென்று நினைக்கிறேன்.
நீங்கள் பணிசெய்யும் கல்லூரி உங்களுக்கான வளர்ச்சியில் எவ்வாறெல்லாம் துணைநின்றுள்ளது?
தொன்போஸ்கோ கல்வி முறையைப் பின்பற்றும் சலேசியர்கள் எமது கல்லூரி நிர்வாகிகளாகிய கிறித்தவப் பாதிரியார்கள். மிகப் பரந்த மனம் உடையோர். சமூக மாற்றத்தில் கல்வியை ஒரு கருவியாகக் கொள்ள முடியும் என்ற நம்பிக்கையுடையோர். எனது ஆய்வு, அரங்கச் செயல்பாட்டுக்கு முழு ஒத்துழைப்பும் அவர்களுடையது. அதற்காக நான் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன். இப்படியான களம் எளிதில் அமைந்துவிடுவதில்லை. களமாடுவது நானாக இருந்தாலும், என் மீது நம்பிக்கை வைத்து அக்களத்தையும் தந்து களமாடுவதற்காக சுதந்திரத்தையும் அளித்தது எனது கல்லூரி.
கொரோனாவிற்குப் பிறகு உங்களின் இடைவிடாத பணி எல்லோரையும் கவர்ந்தது. நெருக்கடியான சூழலிலும் நீங்கள் இப்படித்தான் இருக்கவேண்டும் என்று நினைக்கிறீர்களா?
நாடகம் என்பது இச்சமூகத்தோடு உறவாடுவதற்கான ஒரு ஊடகம்தான். அந்தப் புரிதலோடுதான் நான் தொடர்ச்சியாக இயங்கிக் கொண்டிருக்கிறேன். ஊர் முடக்கம் வந்தபோது, நாடகம் குறித்தும், ஆய்வுகள் குறித்தும் உரையாடுவது என்ற எனது முயற்சிக்குப் பெரும் வரவேற்பு இருந்தது. ஏறத்தாழ 40 நூல்களை மிக விரிவாக நான் அறிமுகப்படுத்தியிருக்கிறேன். கிறிஸ்டோபர் கால்டுவெல், ஜார்ஜ் தாம்சன், நொபுரு கரோஷிமா, ரொமிலா தாப்பர், இர்ஃபான் ஹபீப், தேவி பிரசாத் சட்டோபாத்தியாய உள்ளிட்ட ஆய்வாளர்களில் தொடங்கி, தொ.பரமசிவன், ஆ.சிவசுப்பிரமணியன், சீ.பக்தவச்சலபாரதி, ஆர்.பாலகிருஷ்ணன் உள்ளிட்ட ஏராளமானோரின் நூல்களை அறிமுகம் செய்தேன்.
‘சிந்துவெளிப் பண்பாட்டின் திராவிட அடித்தளம்’ நூலின் அறிமுகம் இணையவழியில் ஒளிபரப்பாகி முடிந்த அடுத்த நிமிடம் ஒடிசாவிலிருந்து அழைத்தார் ஆர்.பாலகிருஷ்ணன் அவர்கள். ‘இந்நூல் வெளிவந்த இத்தனை ஆண்டுகளில் பலபேர் இந்த நூல் குறித்துப் பேசியிருக்கிறார்கள். அதில் மிகச்சிறந்த உரை உங்களுடையதுதான்’ என்று பாராட்டினார். இலங்கையிலிருந்து பேரா.சண்முகலிங்கன், பேரா.சி.மௌனகுரு உள்ளிட்ட பலர், பல நாடுகளிலிருந்து அழைத்துப் பாராட்டினார்கள். சில நூலாசிரியர்களின் பிள்ளைகள், இந்த உரையைக் கேட்டு நெகிழ்ந்து தனது தந்தையர்க்கு எழுதிய கடிதங்களையும் வாசிக்க நேர்ந்தது நெகிழ்ச்சியான தருணம். இன்னும் தரமானதாக, தொழினுட்ப நேர்த்தியோடு தொடருவது பற்றி ஆலோசித்துக் கொண்டிருக்கிறேன். தொடருவேன்.
நாடக ஆசிரியர், பேராசிரியர் இந்த இரண்டில் உங்களுக்கு அதிக மனநிறைவு தந்தது எது?
வகுப்பறையில் மாணவர்களே என் லட்சணத்தை எனக்குக் காட்டும் கண்ணாடிகள். அவர்களின் விழிகளில் நான் என்னைத் தரிசனம் செய்கிறேன். என் அழகையும் என் அவலட்சணத்தையும் தரிசிக்கிறேன். நாடக அரங்கில் நான் மனத்தடைகளற்று இயல்பாக இருக்கிறேன்; வாழ்க்கையின் தரிசனங்களைப் பெறுகிறேன். வகுப்பறையையும் ஒரு நிகழ்த்துகளமாகக் கருதும் ஓர் ஆசிரியன் என்ற முறையில் ‘நாடகக் கலைஞன்’ என்பதே என் மனதுக்கு நிறைவு தரும் வாழ்க்கைப் பாத்திரம்.
இடதுசாரி அரசியல் சிந்தனை உங்களுக்குச் சொல்லித்தந்தது என்ன?
மார்க்சியக் கருத்துநிலையின் அடிப்படைகளை ஏற்று மாணவர் அமைப்புக்குள்ளே வந்தவன் நான். இந்த உலகைப் புரிந்து கொள்வதற்கு மட்டுமல்ல, இந்த உலகை மாற்றுவதில் எனக்கான பொறுப்புணர்வையும் இந்த அரசியல் எனக்குள்ளே விதைத்திருக்கிறது. இச்சமூகத்தின் ஒவ்வொரு அசைவும் அரசியலே என்பதையும் ஒன்றை ஒன்று வீழ்த்தும் இரண்டு வர்க்கங்களின் இடையறாத போராட்டங்களின் மேல் வடிவத்தைத்தான் நாம் பார்த்துக்கொண்டிருக்கிறோம்; அதன்மீதுதான் நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோம் என்ற புரிதலை இடதுசாரி அரசியல் எனக்குக் கற்பித்திருக்கிறது. இந்தப் போராட்டத்தின் நுண்ணிய வடிங்களை உள்வாங்கிக்கொள்ளவும் அதில் சார்புநிலை எடுத்து உறுதியாக நிற்கவும் அது கற்பித்திருக்கிறது என்று கருதுகிறேன்.
தமிழ் படிக்க நினைப்பவர்களுக்கு நீங்கள் சொல்ல விரும்புவது என்ன?
தமிழ் மரபின் வேர்களைப் படியுங்கள்; இலக்கணம், இலக்கியம் என்பவை அவற்றின் காய்கள், கனிகள் அவ்வளவே. தமிழின் வளமான புலமை மரபின் நம்பிக்கை கண்ணி நீங்கள். நம் செயல்பாடு மொழி சார்ந்தது மட்டுமன்று; இந்த மொழியோடு வாழுகிற மக்கள் சார்ந்ததும் ஆகும். அதனால், மக்களைப் படியுங்கள்; மக்களுக்காகப் படியுங்கள். தமிழை முன்னிறுத்தும் அறத்தை முன்னிறுத்தும் சமூகக்களத்தை உருவாக்க வேண்டிய பொறுப்பும் நம்மைச் சார்ந்தததே; அந்தக் களத்தை உருவாக்கும் முன்னணிச் செயல்பாட்டாளர்களாகத் தமிழ்படித்தோர் திகழ வேண்டும் என்பதே வரலாற்றுத் தேவை. இதயத்தின் பலகணிகளைத் திறந்து வையுங்கள்.
உலகின் பன்மொழிச் சிந்தனைகள் தென்றலாய், புயலாய் உள் நுழையட்டும். வலிமை மிக்க சுடராய் இருங்கள். பாரதி சொல்வான், தனது வசன கவிதையில், ‘காற்று மெலிய தீயை அவித்துவிடுவான்; வலிய தீயை வளர்ப்பான். அவன் தோழமை நன்று; அவனை நித்தமும் வாழ்த்துகின்றோம்’. வேறென்ன சொல்ல?