- பேரா கி. நாச்சிமுத்து
பேராசிரியை எம் ஏ சுசீலா அவர்கள் தடங்கள் என்ற தன் கல்விச் சாலை நாவலில் தான் முப்பத்தாறு ஆண்டுகாலம் மதுரை பாத்திமா கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியையாக இருந்த காலத்தில், தான் கண்ட கல்வி உலகை மையமிட்டுப் பெண்ணிய நோக்கில் ஒரு புனைவுலகத்தைப் படைத்து நம் கண்முன் நிறுத்துகிறார். இந்த நாவலில் சிந்து என்ற முக்கிய பெண் கதாபாத்திரமும் அவர் தோழி நந்தாவும் பரிமாறிக் கொள்ளும் மின்னஞ்சல் கடிதங்கள் மூலம் நடைபெறும் கடித உரையாடலாகக் கதை நகர்கிறது. இப்புதினம் ஒரு பெண்ணுலகம். பெண்ணியப் பார்வைகளின் கீற்றுக்களின் தொகுப்பு. இது புதினமாக இருந்தாலும் சிறுகதைகளின் தொகுப்பாகவும் தோன்றுகிறது. இத்தகைய உத்தியும் பழமையானதுதான். விடுவிக்க வேண்டிய வாழ்க்கைப் புதிர்களே கதைத் தொகுப்பாக அமையும் விக்கிரமாதித்தன் கதைகள் ,ஆயிரத்தொரு இரவுகள் போன்றவை நமக்கு ஏற்கெனவே தெரிந்தவைதான். மதுரை திருவிளையாடல் புராணம், பெரியபுராணம் போன்றவற்றில் பல தொடர்பற்ற கதைகளைச் சிவபக்தி போன்ற ஒரு கண்ணியில் இணைக்கின்ற இந்த உத்தி உள்ளது. மேலும் சீவகசிந்தாமணியில் சீவகன் மணந்த பல பெண்களின் கதைகளைப் பார்க்கிறோம். இன்னும் மணிமேகலையிலும் பல பெண்களின் கதைகள் உள்ளன. நீலகேசி, குண்டலகேசி போன்ற தமிழ்க் காப்பியங்களில் பெண் மையக் கதைகள் உள்ளன. நம் ஆசிரியை முன்பே தன் பெண்ணியச் சிறுகதைகளில் கண் முன்னே வாழும் பெண் பாத்திரங்களையும் சீதை, சிலப்பதிகாரத் தேவந்தி, பெரியபுராணச் சங்கிலியார் பரவையார், சடங்கவி சிவாச்சாரியார் மகள் போன்ற பழைய இலக்கியக் கதை மாந்தர்களையும் உயிரோடு படைத்துள்ளார்.
சிந்து ஆசிரியையின் மாற்று வேடம் என்பதை நாம் எளிதில் கண்டு கொள்ளுகிறோம். மிகவும் கூர்மையான அறிவும் தீவிரமான சமுக அக்கறையும் முற்போக்குக் கருத்துக்களும் கொண்ட பேராசிரியையான சிந்து தன்னோடு தொடர்புபட்ட பதினாறு பெண்களின் கதைகளைத் தன் பார்வையில் இடது சாரிக் கொள்கையுடன் அரசியல் செயற்பாட்டாளராகவும் விளங்கும் தன் தோழி நந்தாவோடு பகிர்ந்து கொள்கிறார்.இவர் இது மு.வ. எழுதிய அல்லி போன்ற அவர் நாவல்களில் கையாண்ட கடித உத்தியை நினைவூட்டுகிறது. தனிமொழியாக அமையும் நனவோடையை விட இது வேறொரு வகையில் இருவர் நடத்தும் எதிரெதிர் உரையாடலாக அமைந்து மாறுபட்ட உணர்ச்சிச் சுழிப்புகளுக்கு இடம்கொடுப்பது உளவியல் ரீதியாகப் பொருத்தமான ஓர் இலக்கிய உத்தியாகவே தோன்றுகிறது.வாசகர்களுக்கு ஒரு வழிகாட்டும்படியாக இதில் வரும் பதினாறுக்கும் மேற்பட்ட முக்கிய பெண்பாத்திரங்களின் கதைகளைச் சுருங்கக் குறிப்பிடலாம். மிகவும் ஆர்வத்தோடும் எழுச்சியோடும் இளமையில் காணப்பட்ட சித்ரா சந்தேகப் பேர்வழி. சந்திரனைத் திருமணம் செய்து கொண்டு குறையுடைய குழந்தையைப் பெற்றும் பேணி வளர்க்க முடியாது தன் உயிர்ப்பையும் வாழ்க்கையயும் தொலைத்தவள்.அவள் கதை துண்டு துண்டாகச் சொல்லப்படுகிறது.
வீட்டு வேலைகள் செய்து பிழைக்கும் சோலையம்மாவைக் குடிகாரக் கணவன் கொடூரமாகக் கொலை செய்யக் காரணம் வீண் சந்தேகம், பொறாமை. தொட்டாற் சிணுங்கியான வாணி முன் தான் பழகிய ஒரு சிறுவனோடு தன்னை இணைத்துப் பேசியதை அவமானமாகக் கருதித் தற்கொலை செய்து கொள்கிறாள். போராட்ட குணத்தைத் தொலைத்த இவள் கதை சோலையம்மா கதையின் நேர்மாறாய் நெஞ்சைத் தொடுகிறது. வறுமையின் இளமையில் மணம் செய்து கொண்ட கணவன் கொலைக்குற்றத்திற்குச் சிறை செல்லப் பின் பிறர் துணையினால் மேற்கல்வி கற்றுக் கவிஞராக வலம் வந்த முத்தரசி தனபாலன் வழிகாட்டியாய் அமைந்த தன் ஆசிரியரின் பாலியல் சுரண்டலுக்கு ஆட்பட்டுச் சட்டத்துக்கு இசையாத இரண்டாம் தாரமாக அவரோடு வாழ்ந்து பின் அறிவுச் சுரண்டலுக்கும் உள்ளாகி அவற்றிலிருந்து விடுபட்டுச் சுதந்திரப் பறவையாய் வாழ்க்கை நடத்தும் சாகசம் நம் கண்முன்னே கதையாய் விரிகிறது. இளம் பருவத்தில் அறிவார்ந்த நுண்ணுணர்வோடு வலம் வந்து கவிதையும் கட்டுரைகளும் எழுதி நம்பிக்கையூட்டிய செந்தாமரை குடும்பப் பெருமையைக் காக்கும் அப்பா-அம்மா பிள்ளையாய்ப் பெற்றோர் கைகாட்டிய தன்னை விட அறிவிற் குறைந்த கணவனைக் கைப்பிடித்தபோதும் அவள் நல்ல காலம் அவர் நல்லவராய் அமையத் தன் இலக்கிய வாழ்க்கையையும் உள்முகத்தேடல்களையும் விடாது நடத்திச் சராசரிப் பெண்ணாய்த் தன்னை வார்த்துக் கொள்கிற கதைக் கீற்று நம் கண்முன்னே உண்மை மாந்தர்களை நினைவுக்குக் கொண்டுவருகிறது. தன்னை வளர்த்து ஆதரவற்றோராய் நிற்கும் பெற்றோரைத் தாங்கிப் பிடிக்க முடியாத பெண் பிறவியாய் நின்று கணவனால் பல அல்லல்களை அனுபவித்துக் கணவனோடு போராட மறுத்துக் குடும்ப வன்முறையால் மர்மமான முறையில் ரமணி உயிரைவிடும்போது கணவனைக் காப்பாற்ற ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்த அபலைகளின் கதைகள் நினைவுக்கு வருகின்றன. வழக்கமான பெண்வார்ப்பாய்த் தன் வாழ்வைக் கணவன் பிள்ளை என இனிதே அமைத்துக் கொள்கிற மதிவதனி மாறன் கதை அவளைப் பொறுத்த அளவில் இன்பம் தருகிறது. தன் வாழ்வின் தொடக்கத்திலேயே கணவனைக் குவைத்தில் நடந்த விபத்தில் பலி கொடுத்துவிட்டுத் தனித்து நின்று வாழ்க்கையைப் போராடி வெல்லும் ஜமீலா கதை நமக்கு நன்கு தெரிந்ததுதான்.
அடுத்து வரும் ஹேமா உண்மையிலேயே ஒரு புரட்சிப் பெண். அழகும் ஆற்றலும் உள்ள அவள் முரளியை மணந்து நின்றபோது அவர்களை ஓர் இலட்சிய இணையராக உலகம் கண்டது. ஆனால் பெண்பிள்ளை (பொம்பிளைப்) பொறுக்கியான அவன் தன் மனைவியையே தன் முன்னேற்றத்திற்கு விட்டுக் கொடுக்க முயன்றபோது அந்த ஆபாசத் திருமணப்பிணைப்பிலிருந்தும் மகன் பாசப் பிணைப்பிலிருந்தும் வெளியேறி உயர்கல்வி கற்று ஆராய்ச்சியில் ஈடுபட்டு உலகம் புகழப் பிற நாட்டில் வெற்றிக் கொடி நாட்டிய வரலாறு தற்காலப் பெண்குலத்திற்கு முன்மாதிரி. ஐ.பி.எஸ்.அதிகாரியாக உயர்ந்த கனகா தன்னோடு பணியாற்றும் இன்னொரு ஐ.பி.எஸ்.அதிகாரியான ஒரிசாக்காரரை மணந்து இனிய வாழ்க்கை நடத்துகிற கதை சுருக்கமாகவே வந்து போகிறது.
மிகவும் சுறுசுறுப்பாய் விளையாட்டு வீராங்களை போன்றிருந்த மல்லிகா தினகரனை மணம் முடித்தபின் நடந்த விபத்தில் உடல் தளர்வுற்று நடைவண்டி வாழ்க்கைக்கு விதிக்கப்பட்டபோதும் அவளைக் குழந்தைபோல் அவள் கணவன் பார்த்துக் கொள்கிற தியாக வாழ்வு அரிதானதுதான்.
பிரான்சிஸ் ஸ்டெல்லா கிரேஸ் கதை சற்று மாறுபட்டது.இங்கே பெண் பாத்திரங்களுக்கு இடையே முன்னிலைப்படுத்தப்படும் ஒரே ஒரு ஆண் முக்கிய பாத்திரம் பிரான்சிஸ்.இவர் மனைவி ஸ்டெல்லா கிரேஸ் சிந்துவின் பழைய தோழி. ஸ்டெல்லா ஒரு கட்டத்தில் குடும்ப வாழ்வை விடச் சமுகப் பணியிலும் நூல்வெளியீட்டிலும் முனைப்புக் காட்டி நிற்கிறாள். இவர்கள் பெற்ற இரு பெண்களில் லீமா கன்யாஸ்திரியாக முயன்று அது ஒத்துவராது வெளியேறுகிறாள். இன்னொருத்தி லிஸ்ஸி அமெரிக்கா சென்று திருமணச் சடங்கின்றி ஆண்களுடன் வாழ்ந்து வாழ்க்கையை ஒத்திகை பார்த்துக் கொண்டிருக்கிறாள். கதை சொல்லி சிந்துவின் மாணவி சுஜாதாவின் அம்மா பத்மாவின் வாழ்க்கை இன்னொரு வகையில் வேறுபட்ட அனுபவக் கீற்று. தன் கணவன் தனக்கு நம்பிக்கைத் துரோகம் செய்தபோது தான் வளர்த்த தன் உடன் பிறவாச் சகோதரி சௌந்தராவை அவனுக்கு மணஞ்செய்து கொடுத்து ஒதுங்கிக் கொண்ட இறுமாப்பும் இறுக்கமும் அவளை வீரப் பெண்மணியாகக் காட்டுகின்றன.
சௌந்தராவோ வாழ்க்கை அலையில் பந்தாடப்பட்ட அப்பாவி-பாலைக் குடிக்க வைத்த பூனை.
குடும்பத்தைக் காப்பாற்றிக் கைதூக்கிவிடத் திருமணமே செய்து கொள்ளாத கல்யாணி ,தனக்குப் பார்த்த மாப்பிள்ளையின் வண்டவாளம் தெரியவந்து திருமணம் நின்றுபோனதால் வாழ்க்கை முழுவதும் திருமணம் செய்து கொள்ளாமல் சிடுமூஞ்சிக் கன்னியாய் வாழ்வைக் கழித்துவிட்ட கலா. இவளைப் போல மனோ என்றொருத்தி கதை விரிவாக இல்லை.இப்படியும் சிலர் கதைகள்.அழகோடும் அறிவோடும் செல்வக் குடும்பத்தில் பிறந்து பெற்றோர் அமெரிக்கா வரை பார்த்த மணமகன்களை மறுதலித்துக் கன்னியாய் வாழ்ந்து உலகையே குடும்பமாய்க் கருதிச் சமுகப் பணியில் தன்னை வளர்த்துக் கொண்டு விருதுகள் பலவும் பெற்று அன்னை தெரசா போல் நிற்கிற நிருபமா. பெண்களின் இந்த வகை மாதிரிகளை நாம், சமுகத்தில் பார்க்கமுடியும்.ஆனால் பெண் கல்லூரியில் நான்கு பதிற்றாண்டுகள் கற்பித்த பேராசிரியைக்கு இவர்கள் எல்லாம் ஒரிடத்தில் கிடைப்பார்கள்.எனவே இவர்களை எல்லாம் கோத்து அவர் அமைக்கும் கதைகள் செயற்கையாய் இல்லை.இயல்பாக இருக்கிறார்கள்.இக்கதைகளை வெறும் நபர் சார் நிகழ்ச்சி வரலாற்றுக்கு (case history) மேற்பட்டுக் கதைப்பின்னல், உரையாடல்கள்,எடுத்துரைப்பு முறைகள், வருணனைகள் முதலியவற்றால் புனைவுகளாக மாற்றியிருக்கிறார் ஆசிரியை.இங்கே பல உண்மைக் கதைமாந்தர்களும் வெவ்வேறாக நடந்த நிகழ்ச்சிகளும் இணைந்து ஒரு புனைவுலகம் படைப்பாக்கம் பெற்றிருக்கிறது.
திருமதி எம்.ஏ.சுசீலா அவர்கள் முனைவர் பட்டம் பெற்ற தமிழ்ப் பேராசிரியர். யாதுமாகி (2014வம்சி புக்ஸ், திருவண்ணாமலை) என்ற நாவலின் ஆசிரியர். பருவங்கள் மாறும் (1985, நர்மதா வெளியீடு), சென்னை, புதிய பிரவேசங்கள் (1994 தழல் வெளியீடு), மதுரை, தடை ஓட்டங்கள் (2001 மீனாட்சி புத்தகநிலையம், மதுரை ) ,தேவந்தி (2011 வடக்கு வாசல் பதிப்பகம், புது தில்லி) என்ற சிறுகதைத் தொகுப்புகளின் ஆசிரியை. பியோதர் தஸ்தயெவ்ஸ்கியின் குற்றமும் தண்டனையும் புதினம் – ஆங்கில வழித் தமிழாக்கம் (2007 பாரதி புத்தக நிலையம், மதுரை), பியோதர் தஸ்தயெவ்ஸ்கியின் இடியட் புதினத்தின் மொழியாக்கம் (2010 பாரதி புத்தக நிலையம், மதுரை ), பியோதர் தஸ்தயெவ்ஸ்கியின் குறுங்கதைகளின் மொழிபெயர்ப்பு தஸ்தயெவ்ஸ்கி கதைகள், (2019 நற்றிணை பதிப்பகம், சென்னை) கவிஞனின் மனைவி மொழிபெயர்ப்புச் சிறுகதைகள் 2019 நற்றிணைப் பதிப்பகம் )போன்ற அரிய மொழிபெயர்ப்புகளைத் தமிழுக்குத் தந்தவர். விடுதலைக்கு முன் தமிழ் நாவல்களில் பெண்கள் (1996 உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம்) ,பெண் இலக்கியம்- வாசிப்பு (2001 மீனாட்சி புத்தக நிலையம், ) இலக்கிய இலக்குகள் (2004 மீனாட்சி புத்தக நிலையம்),தமிழ் இலக்கிய வெளியில், பெண்மொழியும் பெண்ணும் (2006 மீனாட்சி புத்தக நிலையம்) நவில்தொறும் (2019) போன்ற கட்டுரை நூல்களைப் படைத்தவர்.
பெண்கள் சார்ந்த சமூகச்செயல்பாடுகளின் பங்களிப்புக்களுக்காக, ஸ்தீரீ ரத்னா (2002),சிறந்த பெண்மணி(2004), சிறுகதைக்காக, தில்லித் தமிழ்ச் சங்கத்தின் அமரர் சுஜாதா விருது (2013) [1], அசடன் மொழியாக்கத்துக்கு மூன்று விருதுகள் போன்றவற்றைப் பெற்றவர்.
அவர் படைப்புப் பட்டறையில் இருந்து வெளிவருகிற தடங்கள் நாவலைக் கல்விச் சாலைப் புதினங்கள் (காம்பஸ் நாவல்கள்) என்ற வகையில் அடக்கலாம். அதாவது பல்கலைக்கழகம் முதலிய உயர்கல்வி நிறுவனங்களை மையமிட்ட புதின உலகம் இவற்றில் இருக்கும். இங்கு கதைமாந்தர்களாக உலவும் ஆசிரியர்கள் மாணவர்கள் முதலியவர்களின் கதைகள் இவற்றில் இடம்பெறும். குறிப்பாக ஆராய்ச்சி என்ற பெயரில் நடக்கும் போலித்தனங்கள், பெண் ஆசிரியர்கள் மாணவிகள் எதிர்கொள்ளும் காதல், பாலியல் அத்துமீறல்கள் போன்றவற்றைப் பற்றிய கதைகள் நையாண்டியும் நகைச்சுவையுமாகப் புதினப்படுத்தப்பட்டிருக்கும். டேவிட் லாட்ஜ் என்ற மொழியியல் பேராசிரியரின் சிறிய உலகம் போன்ற புதினங்கள் இவ்வகையைச் சார்ந்தவை. தமிழில் மு.வ. ,கு.இராஜவேலு போன்ற பேராசிரியர்கள் எழுதிய பல நாவல்களில் கல்லூரி செல்லும் விடலைப் பருவ மாணவர்கள் கதைகள் கதைப் பொருளாகியிருக்கும். பிரபஞ்சன் காகித மனிதர்கள் என்ற நாவல் தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழகத்தில் பேரா.வ.ஐ.சுப்பிரமணியம் துணைவேந்தராக இருந்த காலத்தில் அவரை மையமிட்டு ஒரு நாவல் எழுதியிருக்கிறார். இயற்பியல் பேராசிரியராகவும் துணைவேந்தராகவும் இருந்த பேரா.ப.க.பொன்னுசாமி எழுதிய விளக்குத் தூண்கள் என்ற புதினமும் கல்விச் சாலை நாவலே.,சாகித்திய அகாதமி இளம் எழுத்தாளர் பரிசு பெற்ற வீரபாண்டியனின் பருக்கை (2015), தமிழவனின் ஆடிப்பாவை போல என்ற புதினம் (2017),ஆ.ஈஸ்வரனின் மகிஷாசுரன் (2017),திலீப் குமாரின் நாற்கரம் (2019),
இன்னும் கன்னடமொழியில் தமிழ்ப் பேராசிரியரைக் கேலி செய்ய எழுந்த நாவல் ஒன்றுண்டு. இன்னும் வாழும் எழுத்தாளர்களின் நிழல்களை உலவ விட்டு எழுத்துலக பம்மாத்துக்களைப் படம் பிடிக்கும் நீல பத்மனாபனின் தேரோடும் வீதியும் இங்கு நினைவுக்கு வருகிறது. இது இந்த வகையில் சேராது என்றாலும் எழுத்துலக பற்றிய நாவல் என்ற நிலையில் அதன் பார்வையும் பாங்கும் கல்விச் சாலை நாவலை ஒத்தவையே. இந்தப் புதினம் இரண்டு தளத்தில் இயங்குகிறது.ஒன்று இங்கு வரும் பெண்பாத்திரங்களின் கதைத் துணுக்குகளின் கோவை . இங்கே கதைநிகழ்ச்சிகள் வருணனைகள் உரையாடல்கள் என்று கதைகள் எடுத்துரைக்கப்படும் புனைவு நிலை . இதில் ஆவணப்படுத்தல் தன்மையை விடப் புனைவு நிலை தூக்கலாக அமைந்து கதைத் தன்மையை மிகுவிக்கிறது. இன்னொன்று சிந்து நந்தா கடித உரையாடல்களில் தெறிக்கும் அறிவுத் தள அலசல்கள். அவை சிலவேளை புலனாய்வு முடிகளின் ஆவண அறிக்கைகள் போலத் தென்பட்டாலும் அவை இந்த நாவலின் எடுத்துரைப்பு விதானத்துக்கு ஒத்ததாகவே பொருந்துகின்றன. அவற்றில் வெளிப்படும் அறிவு ரீதியான பகுப்பாய்வு முடிவுகள் பெண்ணியப் பார்வையின் விளக்கவுரைகளாக அமைகின்றன. இந்த நாவலின் சிறப்புகள் என்னவென்று கேட்டால் பலவற்றையும் சுட்டிக் காட்டமுடியும்.வழக்கமாக மிகை உணர்ச்சி மயமான கதைகளை எழுதும் பெண் எழுத்தாளர்களிலிருந்து விலகி வாழ்வின் சிக்கல்களை அறிவு சார்ந்த தளத்தில் எழுதும் பெண் எழுத்தாளர்கள் தமிழில் குறைவு. அவர்களில் ஒருவராக இந்நாவலாசிரியை நம் முன் காட்சி தருவது மாறுபட்டதாக இருக்கிறது. விழித்துக் கொண்ட பெண்ணெழுத்தின் பிரதிநிதியாக இவரைப் பார்க்கமுடிகிறது.
பெண் கல்வி வளர்ந்து பெண்ணுக்கு அறிவுக் கண் தோன்றி வரும் தமிழ்ச் சூழலில் பெண்கள் உண்மையில் விழித்துக் கொள்கிறார்களா என்ற கேள்வி இவருடைய புனைவில் இடம்பெறும் இரண்டு முக்கியப் பெண் அறிவாளிகள் அடிக்கடி கேட்டுக் கொள்கிறார்கள். பெண்ணுக்குத் திருமணத்திற்கு வெளியில் வாழ்க்கை இல்லையா? பெண்ணுக்கு ஆண் இன்றி வாழ்க்கை இல்லையா? அல்லது எல்லாமே இந்த இரண்டுக்குள் அடங்கி விடுகிறதா?
உண்மையில் பெண்கல்வி பெண்ணியத்தை வளர்க்கிறதா என்பது ஒரு விடை கிடைக்காத கேள்வியாகவே எஞ்சுகிறது.சனாதனத்தின் மயக்கத்திலும் மரபின் கிடுக்கிப் பிடியிலும் அகப்பட்டுக் கொண்டு அல்லாடும் தமிழ்ச் சமுகம் குறிப்பாகப் பெண் சமுகம் பாரதி பெரியார் வழியில் பயணம் செய்ய இயலாது தள்ளாடுவதாகவே தோன்றுகிறது.அப்படியாயின் பெண்ணை விடுதலை செய்ய இந்தக் கல்விக்கு மேலே நாம் என்ன செய்ய வேண்டும் ? பெண்ணிடம் உள்ளொளிந்து நிற்கும் சுயசிந்தனை ஆற்றலை இந்தக் கல்வியால் வளர்க்க முடியாமல் செய்யும் சமுதாய பண்பாட்டு அரசியல் காரணங்கள் எவை? இதற்கெல்லாம் இவர் கதைகளை நாம் ஊன்றிப் படிக்கும் போது விடைகள் கிடைக்கின்றன.இவை இந்த நாவல் சொல்லும் நீதித்தீர்ப்புகள்.அதாவது பெண் தானாகச் சிந்தித்துத் தன்னை வெளிப்படுத்தத் தன் வழியில் போராடுவதைத் தவிர வேறு வழியில்லை. வழக்கமான பெண் கல்லூரிகளில் நடக்கும் பெண் வம்புகளுக்கு அப்பால் அவர்கள் தொழிற் சங்க ஈடுபாடு மட்டுமே அரசியல் வெளிப்பாடாக உள்ளது.இடது சாரி அரசியல் சித்தாந்தங்களைப் பேசும் நந்தா அவற்றை எங்கு கற்றுக் கொண்டார் என்பது பற்றி அறிந்து கொள்ள இயலவில்லை.அதற்கும் மேலே பெண்கல்லூரிகளில் பயிலும் பெண்களுக்கு சமகால அரசியல் சித்தாந்த விழிப்புணர்ச்சி இல்லை போலும்.ஒரு வேளை இரு பாலர் நிறுவனமாக இருந்தால் இது இன்னும் கூர்மைப்பட்டிருக்குமா? மேலும் இருபாலர் நிறுவனமாக இருக்கும்போது ஆணும் பெண்ணும் காதல் வயப்படும் கதைமாதிரிகள் பல கிடைக்குமோ? பாலியல் சீண்டல்கள் ,சுரண்டல்கள்,வக்கிரங்கள் வளாகக் கதைகளாக வந்திருக்குமோ?
கதைப்பின்னலிலும் கதை கூறும் முறையிலும் சுசீலா அவர்கள் தன் முதல் நாவலான யாதுமாகியில் போலப் புதுமைகள் புகுத்தியிருப்பதைப் போல அவர் எடுத்துரைப்பு முறையில் வருணனைகளைப் பொருத்தமாக அமைத்திருக்கிறார். பிரம்புப் பின்னல் போட்ட ஒற்றை சோஃபாவில் உட்கார்ந்தபடி ,கல்லூரியின் வெளிவாசல் வரை,பந்திப் பாயை உதறி விரித்துப் போட்டது போல ஒரே சீராக நீண்டு கிடக்கும் பாதையை வேடிக்கை பார்க்க ஆரம்பிக்கிறேன்‘. சிறிது தூரத்தில் வெளிச்சப் புள்ளியாக மெஸ் கண்ணில் பட்டது.அதன் வெளிப்புறத்தில் முடிச்சு முடிச்சாகக் கூடி அரட்டையடிக்கும் தோழிகளும் கூட.வார்த்தைகள் ஊதி உடைத்த பலூன் கிழிசல்கள் கல்லூரியின் மூலை முடுக்குகளைக் கூட நிறைத்திருந்தன.‘நாவலின் மொழி நடையில் கதைமாந்தர் உரையாடல் அவர்களுக்கேற்ப இயல்பான பேச்சு நடைக் கூறுகளோடு அமைய , கதை சொல்லிகள் நடை அவர்களுக்கே உரிய அறிவுத் தளத்தில் இறுக்கமாக அமைகிறது.
இந்நாவல் கல்லூரி உலகைப் பின்னணியாகக் கொண்டு படித்த பெண்களை மையமிட்டிருந்தாலும் அவர்களின் பல்வேறு சமுதாயப் பிரிவுகளிலிருந்தும் கதை மாந்தர்களை ஆசிரியை தேர்வு செய்திருப்பது அவரது சமத்துவ சமுதாயப் பார்வையை வெளிப்படுத்துகிறது.
மதுரை, பெண்ணாக இருந்து அரசாண்ட மீனாட்சியின் மண். அந்த மண்ணிலிருந்து எழுந்த இந்த நாவலில் அவள் வாழ்வின் தத்துவமும் வரலாறும் வழிபாடும் அருவமாகவும் உருவமாகவும் பின் புலமாகப் பதிவாகியிருப்பது இயல்பாக நடந்தது போல உள்ளது. அது தரும் செய்தி நம்பிக்கையோடு காத்திருக்கவும், மாற்றங்கள் வந்தே தீரும் என்பதே.
எனவே சுசீலா அவர்களின் தடம் புதிய பாதைகளை வகுக்கட்டும் என்று கூறி அதை வரவேற்போம்.இன்னும் இது போன்ற பல படைப்புகளை அவரிடமிருந்து எதிர்பார்ப்போம். வாழ்த்துக்கள்.