- எஸ் வி வேணுகோபாலன்
தமக்கை கீதா நிறைய வாசிப்பவள். படித்த புத்தகத்தையே திரும்பத் திரும்ப எப்படித்தான் படிக்கிறாளோ என்பார் அம்மா. அதே சுவட்டில் தங்கை ஆண்டாள். வாழ்க்கைப் புத்தகம் பல நேரம் மீள் வாசிப்பு தானே! உவப்பான விஷயங்களோ, கசப்பான தருணங்களோ மனம் திரும்பத் திரும்ப எடுத்து, ரசிகர்களின் பேராதரவுக்கிணங்க திரையிட்டுக் கொண்டுதான் இருக்கிறது. வாசிப்பின் ரசனையும் அப்படித்தான். சில, நின்று பேசிக் கொண்டே இருக்கும். சில, நழுவி அடுத்ததற்கு வழி விட்டு ஓரம் போய் நின்று, நம்மை நினைவு வைத்திருக்கிறாரா இந்த வாசகர் என்று பார்த்துக் கொண்டிருக்கும். புத்தகங்களை நேசிப்பது ஒரு சுபாவம். புத்தகங்களோடு பேசுவது ஓர் உளவியல் உலகம். புத்தகம் நம்மை கோபித்துக் கொள்ளுமோ, வருத்தத்தில் ஆழ்ந்துவிடுமோ என்று பார்த்துப் பார்த்து எடுத்து அதை வருடிக் கொடுத்து, மன்னிப்பு கேட்டு, வாசித்தபின் தாமும் ஆறுதல் பெற்று புத்தகத்தை அதனிடத்தில் கொண்டு வைப்பவர்கள் வணக்கத்திற்குரியவர்கள்.
அண்ணன் எஸ் வி ரங்கராஜன்தான் வேலூர் மாவட்ட நூலகத்தில் கொண்டு அமர்த்திப் படி என்று நாவில் ஆனா எழுதியவர். அருகே, கற்பகம் சிறப்பு அங்காடியில் பெல்லியப்பா கட்டிடத்தில் செய்தித்தாள்கள், ஏடுகள் வருவதுண்டு, அங்கே போய் நாளேடுகளை வாசிக்க வைப்பார். அப்போதெல்லாம் போட்டி போட்டுக்கொண்டு வாசிக்கும் கூட்டம். பின்னர், காஞ்சிபுரத்திற்கு பாட்டனார் இல்லத்தில் தங்கிப் படிக்கச் சென்றதும், ரங்கசாமி குளத்தருகே கிளை நூலகம். தெற்கு மாட வீதியில் பக்கத்து வீட்டுக்குக் குடி வந்தவர்கள் வாராந்தரி ‘ராணி’ எனும் ‘குடும்ப பத்திரிகை’ வாங்குவார்கள், விகடன், குமுதம் எப்படியெப்படியோ கைக்கு வந்துபோகும். திருப்பதிக்கு யாராவது அறிந்தவர்கள் தெரிந்தவர்கள் சென்று திரும்பியதும் லட்டு கொண்டு வந்து கொடுப்பது இல்லையா, அப்படியே, புத்தகங்களும் கொண்டு வந்து கொடுத்துவிட்டுப் போகும் இடமாக இருந்தது பாட்டி வீடு.
பெரிய எழுத்தில் சுதந்திர போராட்ட வீரர்கள் சிலரைப் பற்றிய புத்தகமே, தாத்தாவின் மர பீரோவிலிருந்து எடுத்த முதல் புத்தகம். பெயர் மறந்துவிட்டது. அந்த விடுதலை போராட்ட வீரர், இளவயதில் வேலைக்குச் சென்ற இடத்தில் அவரது உழைப்பைப் பாராட்டி ஊதியம் மூன்று மடங்கு உயர்த்தப்பட்டது என்ற வரியை, நூலாசிரியர் எழுதி இருந்த விதம் மிகவும் கவர்ந்தது. மூன்று மடங்கு என்றால் 90 ரூபாயா, இல்லை, முப்பது ரூபாயா, அதுவும் இல்லை, ஒன்பது ரூபாயா அது கூட இல்லை, அப்படியானால் எவ்வளவாக உயர்த்தப்பட்டது, மூன்று ரூபாய், அதாவது அதற்குமுன் அவர் வாங்கி வந்தது வெறும் ஒற்றை ரூபாய் சம்பளம்! இப்படியான விவரிப்பு, சிறுவர்களுக்கான எழுத்து மொழி ஈர்த்தது.
சித்தப்பா மகன் முரளி, கல்லூரி மாணவர். நிறைய வாசிப்பவர். அழகான கையெழுத்து. ஓவியமும் வரைவார். ஏர் இந்தியா மகாராஜா மீசையோடு நிற்கும் சிறு ஓவியத்தை பென்சில் கொண்டு சுவரில் வரைந்தது அழிந்து போயிருக்கும், மனத்தில் இன்னும் கலையாமல் மின்னுகிறது. எனது கவிதை எப்படி இருக்கிறது, படித்துவிட்டுச் சொல் என்று ஒரு நாள் நோட்டுப் புத்தகத்தை நீட்டினார். ஒன்பதாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன் நான் அப்போது. கையில் வாங்கி அசந்து போனேன், அதன் முதல் வரியிலேயே,
எய்த அம்பு திரும்பாது இளமை மீண்டும் வாராது என்று தொடங்கி மணிமணியாக பதினாறு வரிகளுக்கு ஓடியது அந்தக் காதல் கவிதை… எதுகையும் மோனையும் ரசித்துப் பாராட்டினேன்.
‘நீயும் இந்த மாதிரி எல்லாம் எழுதணும்’ என்றார் அண்ணன்.
அடுத்து ஒரே ஒரு நாள் கடந்திருக்காது. வீட்டில் ஒரு தீபாவளி மலர் கையில் தட்டுப்பட்டது. எடுத்து வைத்துப் புரட்டிக் கொண்டே போனால், அதிர்ச்சியோ அதிர்ச்சி, ‘எய்த அம்பு திரும்பாது, இளமை மீண்டும் வாராது. ‘ ஆஹா, அதற்குள் பத்திரிகையில் – அதுவும் மலரில் வந்துவிட்டதா…எப்படி எப்படி என்று எழுதியவர் பெயரைப் பார்த்தால் வேறு யார் பெயரோ இருந்தது. மேலும் அதிர்ச்சி.
மலரை எடுத்துக் கொண்டு வாசல் திண்ணையில் அமர்ந்திருந்த அண்ணனிடம் ஓடிச் சென்று, ‘இது யார் எழுதியது?’ என்று கேட்டேன். கொஞ்சமும் அசராமல், ‘என் கவிதை தான், அடடே, போட்டுட்டாங்களா, அதுக்குள்ளே, ரொம்ப சந்தோஷம்’ என்றார். ‘வேறு யார் பெயரோ இருக்கிறதே’ என்றதும், ‘அப்படியா, அட, பாவிங்களா, யாரையும் நம்பி கவிதை எழுத முடியல, திருடிட்டாங்க போலிருக்கு…இனிமே எழுதவே போறதில்ல’ என்று சொல்லிவிட்டு வேறு பக்கம் நகர்ந்து விட்டார் அண்ணன். அப்புறம் தான் தெரிந்தது, என்னைக் கிண்டல் செய்யவென்றே மலரில் இருந்த கவிதையை நோட்டில் எழுதி அவர் காட்டிய கை வரிசை அது என்று.
ஆனால், கவிதை பக்கம் வாசிப்பின் கவனத்தைத் திருப்பியது அது. வார, மாத இதழ்களில் கவிதைகள் பக்கமே பார்வை ஓடியது. 1970களில் குமுதம் இதழில் கண்ணதாசனும், விகடனில் வாலியும் எழுதிக் கொண்டிருந்தனர். எதுகை, மோனை, சந்தம் என்று யாப்பு இலக்கணத்தில் ஆர்வம் கூடிக் கொண்டிருந்த நேரம். குமுதம் இதழில் கண்ணதாசனின் விருத்தங்கள் வரவேற்றன. கேள்வனே கண்ண பிரானே என்ற அருமையான கவிதையின் முதல் வரிகள் ஒரு போதும் மறவாது ஒட்டிக்கொண்டது மனத்தில்.
பூவினைக் காடுகள் புன்னகைக் கோடுகள்
பொன்னிறப் புள்ளிமான் கூட்டம்
காவியப் பேடுகள் கண்மயர்க் கூடுகள்
காதலே என் மனத் தோட்டம்
நாவினால் மென்மொழி நாட்டுவாள் பைங்கிளி
நாடுவேன் நாடுவேன் நானே
பாவியென் நெஞ்சினைப் பற்றுமோர் பெண்மையைப்
பார்க்கிலேன் கண்ண பிரானே
கண்ணதாசனின் அறுசீர், எண்சீர் விருத்தங்கள் நூலகத்தில் வாசித்திருந்த எனக்கு இந்த ஏழு சீரின் சந்தமும், வாசிப்பு அனுபவமும் பெரிதும் ருசித்தது. இதே கவிதையில் இன்னோர் இடத்தில், ‘பார்த்தனும் பார்த்தனன் பாவியும் பார்த்தனன்’ என்ற வரியும் அபாரமாக வந்து விழுந்திருக்கும். அந்நாட்களில், எங்கள் அண்ணன்களின் கல்லூரித் தோழர் ஆனைக்கட்டி ரவி (ஆனைக்கட்டித் தெருவில் வசித்தவர் என்பதால் அந்தப் பெயர்!), கவிதைகளில் தோய்ந்து ரசிப்பதை அருகே பார்க்கவும், கவிதை ரசனை ஒரு பங்கு கூடிவிட்டது. கவிதை வரிகளை ரவி வாசிக்க வேண்டும், நாம் கேட்கவேண்டும்!
விகடனில் வாலியின் கவிதை ஒன்று ‘ஞானம்’ என்ற தலைப்பில் வந்திருந்தது. தான் கூவுவதால்தான் பொழுது விடிகிறது என்று நினைத்துக் கொள்ளும் கர்வமிக்க சேவல் ஒன்று, நாளை கூவப்போவது இல்லை என்று அறிவிக்குமாம், மறுநாள் காலை கீழ் வானம் சிவக்க ஆரம்பித்ததும் வெட்கத்தை விட்டுக் கூவுமாம். அதே போல், நாய் ஒன்று, ‘இனிமேல் குப்பைத் தொட்டியில் விழும் எச்சில் இலைகளைத் தீண்டுவது இல்லை என்று சொல்லுமாம்’. ஆனால், அதன் பக்கத்தில் பந்தியில் இட்ட இலைகள் வந்து விழுந்ததும் ஓடுமாம் வெட்கம் விட்டு. அதற்கு அடுத்த கட்டம் தான் கவிதையின் உச்சம், எல்லோர்க்கும் வந்துவிடாது ஞானம் என்பது. முக்கிய வரிகளை மட்டும் பார்த்தாலே கவிதையின் அழகும் சந்தமும் பிடிபட்டு விடும். குக்குடம் தன் கூவலினால், / கீழ்த் திசையில் செங்கதிராம் / பொற்குடம் திறந்ததெனத் துள்ளும் – வாய் / பொத்தியினி நிற்பதாகச் சொல்லும் / வான் செக்கரென வண்ணமுறச் / செங்கதிரோன் வந்துவிட்டால் / வெட்கம் விட்டு வாய் வலிக்கக் கூவும்- அந்த / வேளையிலே ஞானம் வந்து மேவும் !
இது சேவல் பற்றியது. நாய் பற்றிய வரிகளும் அருமையாக இருக்கும். கடைசி பகுதியின் வரிகள் இவை:
குக்குடம் போல் சில பேரும் / குக்கலைப் போல் பல பேரும் / மிக்கவுண்டு மாநிலத்தில் பாரும் – இந்த / மக்களுக்கு ஞானமெது கூறும் – மனப் / பக்குவம் அடைந்தவர்க்கும் / பற்றறுத்த பேர்களுக்கும் / தக்கபடி உதிப்பது ஞானம் – வீண் / தர்க்கங்கள் புரிவது ஈனம் !
இப்படி கவிதைகளில் ஓடிய நாட்டத்தால், கவிதை கவிதை என்று எழுதித் தள்ளுவதும், வாசித்து ரசிப்பதுமாகக் கடந்து கொண்டிருந்தன நாட்கள். எஸ் எஸ் எல் சி தேர்வு முடிந்த கோடை காலத்தில் வேலூருக்குச் சென்றிருந்த போது, மிகவும் தற்செயலாக, இலக்கிய கூட்டம் ஒன்றில் நுழைந்தவன், வாகீச கலாநிதி
கி. வா. ஜகந்நாதன் அவர்கள் சிறப்புரை என்று பார்த்ததும் அமர்ந்து கேட்டேன். கம்ப ராமாயணச் செய்யுள்களில் நாட்டம் அதிகரிக்க வைத்த பேருரை அது.
கூட்டம் முடிந்ததும் அவரிடம் நேரே சென்று வணக்கம் செலுத்தி, “கலைமகள் இதழில் ஒன்றிரண்டு கவிதைகள் தான் போடுகிறீர்கள், ஏன் நிறைய வெளியிட்டால் தான் என்ன?” என்று கேட்டேன். ஒரு நிமிடம் என்னை உற்றுப் பார்த்து, அன்போடு என் தோளைத் தொட்டு, “இந்த மாதிரி வாசகர் எல்லோரும் கேட்டால், முழுக்க முழுக்க கவிதைகளே போடலாம். ஒன்றிரண்டு போட்டாலே, கவிதையா என்று அடுத்த பக்கம் திருப்பிடறாங்களே, என்ன செய்யலாம், சொல்லுங்க” என்று சிரித்தார். கதைகள் வாசிப்பு அதற்குப் பிறகு கூடத் தொடங்கியதற்கு அந்த சந்திப்பு காரணமா என்று தெரியவில்லை. ஆனால், கவிதை வாசிப்பை நிறுத்தவில்லை. வானம் விரிந்து தெரியத் தொடங்கியது. சிறகுகள் அனுமதித்த வரை பறந்ததில் எத்தனை எத்தனை நயமான வாசிப்பு அனுபவம்.