யாத்திரை
மெளனத்தை
ஆமோதித்தலென்றும்
இமைத்தலை சம்மதமென்றும்
நம்ப வைத்தல்
எளிதாய் ஓர் நாளில்
அம்பலப்பட்டு விடும்…
.
நிலத்தை கொன்றுவிட்டால்
மனிதர்களை அடிமையாக்கி விடலாம்
என்பது பழைய கணக்கு…
.
அடிமையின்
ஜன்னல் கம்பிகளை வளைத்து
அறிவுக்கூடத்துக்குள்
குடியேறிவிட்ட குரல்கள்
கம்பிகளைவிட கனம் மிக்கவை…
.
வரப்புகளில் நடந்து செல்லும்
ஒற்றை உழவனின் முழக்கத்திலிருந்து
புறப்பட்ட எச்சரிக்கை
நிலத்தின் தடைகளை உடைத்து
ஏர் முனையின் கோபங்களால்
முற்றுகையிடுகிறது…
.
வயல் நிலங்களில்
குரல்வளை நெறித்து
குரலற்று புதைக்கப்பட்ட
நியாயத்தின் வார்த்தைகள்
ஓசைகளை பிரித்தெடுத்து
வனத்தையே உலுக்கும்
காட்டு யானையின் பிளிறல்களாய்
பாதைகளை நிறைக்கிறது…
.
இயற்கையாய்
இறந்து கிடக்கும் நிலத்தையும்
கொழு முனையின் வியர்வையில்
உயிர்ப்பித்துவிடும் வல்லமை
உழுபவனுக்கு மட்டுமே உரியது…
.
நிலம் குனிந்து உழைத்து
நிறைத்த தானியக்குதிர்களில்
எலிகளை அனுமதிக்க
எப்படி முடியும்…
இறகின் மென்மையை மட்டுமே
வெளிப்படுத்திய பறவைகள்
வேடனின் கண்ணியிலிருந்து
விடுவித்துக்கொள்ள
அலகின் பலத்தையும்
அறிந்துகொள்ளச் சொல்கிறது…
.
எலிகள் அபகரிக்கமுடியா
ஆதியின் களஞ்சியங்களை நோக்கி
அழைத்துச்செல்ல
கூன் விழுந்த முதுகுகளையும்
காலம்
ஏர் முனையின் யாத்திரையில்
நிமிர்த்தி நிறுத்தியிருக்கிறது.
தழும்புகள்
அருகாமை நாடுகளின்
தலையீடுகளுக்குப்பிறகு
ரத்தத்தில் தோய்ந்த
ஓயாத போர் முடிவுக்கு வந்தது…
பேரமைதிக்குபிறகு
ஈரங்காயாத புதை மேடுகளிலிருந்து
முளைத்தெழும் புற்கள்
கைவிட்டுச்சென்ற குடும்பத்தின்
ஆற்றாமைகளை
முனகல் ஒலிகளுடன்
வெளியேற்றுகிறது…
பறக்கும் சமாதானக்கொடிகளின்
பளிச்சென்ற வெண்மை
நேற்று குண்டுவீச்சில் சிதைந்த
குழந்தையின் முகத்தில்
நிலைக்குத்திய கண்களை
நினைவுறுத்துகின்றன…
போர் முடிவு ஒப்பந்தங்களுக்குப்பின்
பலம் குன்றிய தேசத்தின்
மீட்கமுடியா பேரழிவை
வெற்றியென்று அறிவித்துக்கொண்ட
எதிரி நாட்டின்
இராணுவமும்… மக்களும்
இரண்டொரு வாரங்களுக்கு
வீரர்களின் சாகசங்களை
வாகைசூடிய மகிழ்ச்சியை
ஆரவாரங்களோடு
கொண்டாடித் தீர்த்துவிட்டனர்…
நேற்றுவரை எதிரிகளாயிருந்தவர்கள்
எல்லைகளைத் திறந்து
நட்பு நாடென்று
கைகுலுக்கிக்கொண்டனர்…
வர்த்தக பரிமாற்றங்கள்
அயலுறவு புரிந்துணர்வுகள்
கையெழுத்தானபின்
தத்தம் வழியில்
தேசத்தின் கொடிகள்
புதிதாய் பறக்கத்தொடங்கி விட்டன…
யுத்தம் முடிந்து
நெடு நாட்களான பின்னும்
போர் விட்டுச்சென்ற
துன்பத்தின் தழும்புகளும்
காயத்தின் வலிகளும்
எல்லை வித்தியாசங்களின்றி
பறிகொடுத்த
இழப்பின் நினைவுகளை கிளறி
பற்கடிப்புகளுடன்
உதட்டுக்குள் கண்ணீரை
இறங்கச் செய்கின்றன…
போர் என்பது
பிணவறைகளையும்
கல்லறைகளயும் தவிர
வேறெதை உற்பத்தி
செய்துவிடப்போகிறதென்று
ஊனமுற்ற வீரனொருவன்
முணுமுணுப்பது
எதிரி நாட்டின்
எல்லைதாண்டி விழுகிறது…
இறகு
அடுத்தவர் அறியாதபடி
சந்தர்ப்பங்களுக்கேற்ப
எல்லோர் முகத்தையும்
அணிந்துகொள்கிறாய்…
விசேட ஒப்பனை அறைகளில்
அத்தனை முகங்களும்
உனக்குப் பொருந்தும்படியே
வடிவமைக்கப்படுகிறது…
இயல்பை மீறிய நடிப்பையே
உன் பிம்பங்களாக்குகிறாய்.
கைத்தட்டல்களின் இடைவெளியில்
கைக்குட்டையால்
கண்மூடி முகம் துடைக்கும்போது மட்டும்
உன் முகம் உன்னையே
உனக்கு அறிமுகம் செய்கிறது
வரவேற்பறைகளும்
விருந்து மண்டபங்களும்
உன்னை ஆரத்தழுவுகின்றன
நீ…
புறாக்களை நேசிப்பதாய் சொல்கிறாய்
புறாக்களின் மென்மையை
சிறகுகளின் வலிமையை
எல்லை தாண்டிய கூர்மையை
நிறைய கதைகள் சொல்லி
நீங்களும் புறாவும் ஒன்றுதானென்று
கூட்டத்திடம் உருகி வழிகிறாய்…
ஆரவாரங்களுக்கிடையே
உனக்கு கையளிக்கப்பட்ட புறாவை
கருணையுடன் வருடி
ஆகாயம் நோக்கி பறக்கவிட்டு
விருந்து மண்டபத்துக்குள் நுழைகிறாய்
உனக்கென தனிக்கவனத்துடன்
பறிமாறபட்ட இறைச்சியில்
தொடைக்கறியின் கனம் சற்று
சூம்பியிருப்பதற்கு
நான் தீண்டியது இதுவல்லவென்று
கோபத்தில் முகம் சிவக்கிறாய்..
உன் பார்வை திரும்பும்
சமையல் கூடத்திலிருந்து
ஜன்னலின் வழியே பறந்து
கூட்டத்தில் கலக்கிறது
சற்றுமுன் நீ பறக்கவிட்ட புறாவின்
இறைந்துகிடக்கும்
இறகிலொன்று…!
ஊசிகளின் மெளனம்
மிகச்சாதுர்யமாய்
அவர்களுக்கெதிரான பொய்கள்
நகர்த்தப்படுகிறது…
பேரமைதியின் மெளனத்தை
அவர்கள்
வார்த்தைகளாய் சேமிக்கிறார்கள்…
பதில்களற்று குரல்வளைக்குள்
பதுங்கிய அமைதியை
அச்சமென்றெண்ணி
அவர்களின் பாதைகளில்
மேலும் விரிக்கப்படுகிறது
வஞ்சகத்தின் வலைகள்
அவர்களோ மெளனத்தை
முன்பைவிட கூடுதலாய் இறுக்குகிறார்கள்…
பொய்களின் காற்றடைத்து
நிறங்கள் சூடிய பலூன்களில்
அவர்களைப்பற்றிய அவதூறுகளை
அடர்ந்த வண்ணத்தில் எழுதி
தீர்ப்பளிப்பவர்கள் செல்லும்
பாதைகளில் தவழ விடுகிறார்கள்…
மிதக்கும் பலூன்களின் வாசகங்கள்
நீதிமான்களின் சமவெளிகளை நிறைக்கிறது…
விசாரணையின் நாளில்
அவர்களின் இறுகிய உதடுகள்
கிளிஞ்சல்களைப்போல் திறக்கின்றன…
இதுவரையில்
ஊசிகளாய் கூர்தீட்டி வைத்த
மௌனத்தின் வார்த்தைகளை
நியாயத்தின் வனாந்திரத்தில் தூவுகிறார்கள்…
அவர்களின் உடைபட்ட மெளனத்தால்
சிதறும் சொற்களின்
கூர்நுனி பட்டு
வெடிக்கத்தொடங்கும்
ஒவ்வொரு பலூன்களிலிருந்தும்
சத்தமாய் வெளிப்படத்தொடங்குகிறது
இதுவரை
அடைத்து வைத்திருந்த பொய்கள்…
அச்சத்தின் குறியீடுகள்
அவர்கள்
உன்னுடைய உதடுகளால்தான்
சிரித்துக்கொண்டிருக்கிறார்கள்…
நீதான்
வேறொருவரின் கண்களால்
அவர்களின் சிரிப்பை
அதிசயமாய்
பார்த்துக்கொண்டிருக்கிறாய்…
பொலிவிழந்து
வாழ்வின் முகத்தில்
துன்பத்தின் வடுக்களாய்
படிந்திருக்கும்
அம்மைத்தழும்புகளை
நீ நம்பிக்கொண்டிருக்கும் வரை
அவை…
அழகிய கன்னக்குழிகளென்றே
அவர்களால் உனக்கு
போதனை செய்யப்படும்…
அவர்களின் வெற்றிகளனைத்தும்
நீ கண்மூடிய சமயத்தில்
களவாடப்பட்ட தந்திரங்கள்….
விலங்குகளைப்போல்
முன்கூட்டியே
ஒரு பூகம்பத்தை
உணர்ந்திடும் திறனறிய
உன்னால் முடியாதென்றால்
அவர்களாலும்
முடியவே முடியாதென்பதை
புரிந்துகொள்…
ஆனாலும்
…