- நிகழ் அய்க்கண்
குடியுரிமை என்ற சொல்லை நேற்றுவரை நாம் பெருமைக்குரியதாக நினைத்திருந்தோம்.ஆனால் இப்போது அச்சம் தருவனவாக மாறியிருக்கிறது. குடியுரிமைத்திருத்தச்சட்டம் ,தேசிய குடிமக்கள் பதிவேடு ,தேசிய மக்கள் தொகைப்பதிவேடு போன்ற சொற்களைக்கேட்டால், இந்திய மக்கள் நடுங்கும் நிலைக்கு ஆளாகியிருக்கிறார்கள் என்கிறார் இந்நூலுக்கு முன்னுரை எழுதியுள்ள ஜி.பி.இராமச்சந்திரன். இந்நூலில், குடியுரிமை மற்றும் குடியுரிமைச்சட்டங்கள், மதச்சார்பின்மை , கூட்டாட்சி, ஜனநாயகம் முத்தலாக் ,பற்றி ஆசிரியர் ஷிஜுகான் (கேரளா) கூறியுள்ள கருத்துக்கள் இங்கே தொகுத்து அளிக்கப்படுகிறது.இந்திய ஜனநாயகத்திற்கும் மதச்சார்பின்மைக்கும் பிரிக்க முடியாத உறவு உண்டு. நாடாளுமன்றத்தில் அறுதிப்பெரும்பான்மையைப் பயன்படுத்தி மக்களுக்கு விரோதமானச்சட்டங்களை இயற்றுவது ஜனநாயகத்தின் அழிவுக்கே வழிவகுக்கும். ஜனநாயகத்தில் ஆட்சியாளர்கள் தங்களது மேதாவித்தனத்தைப்பயன்படுத்தினால் மதச்சார்பின்மையின் எதிர்காலம் ஆபத்தில்தான் முடியும்.இந்தியக்குடியுரிமையில் மதத்தைப்புகுத்துவது என்பது அரசியல் அமைப்புச்சட்டத்திற்கு எதிரானது. இதுவரை மதத்தை வைத்து குடியுரிமை வழங்கப்படவில்லை . மதச்சார்பின்மை நாடு என்றால் அங்கே குடியுரிமைக்கு மதம் முக்கியமில்லை என்று விரிவான பொருள் உண்டு.குடியுரிமைத்திருத்தச்சட்டம் 2019 அரசியல் சட்டத்தின் விழுமியங்களைப் புறக்கணித்திருக்கிறது. மதச்சார்பற்ற நாடான இந்தியாவில் மதப்பாகுபாட்டைச் சங்பரிவாரத்தினர் திணிக்க முயல்கின்றனர். அதாவது,ஆப்கானிஸ்தான் ,பங்களாதேஷ் ,பாகிஸ்தான் ,முதலான நாடுகளிலிருந்து இந்தியாவிற்குள் வந்து குடியேறும்,இந்துக்கள்,கிறிஸ்தவர்கள் ,சீக்கியர்கள்,சமணர்கள் ,பார்சிகள் ,புத்த மதத்தினர் ஆகியோருக்கு குடியுரிமை வழங்கப்படும் என்றும் முஸ்லீம்களுக்கு மட்டும் குடியுரிமை இல்லை என்பதுதான் புதியச்சட்டத்திருத்தத்தின் சாரம்.
இந்திய அரசியலமைப்புச்சட்டம் பிரிவு 14 அனைத்து மக்களுக்கும் சம உரிமையளித்துள்ளது. இது உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் வாழும் அனைத்து இந்தியர்களுக்கும் பொருந்தும். இந்திய அரசியலமைப்புச்சட்டத்தின் இரண்டாம் பகுதியில் ஐந்து முதல் பதினொன்று வரையுள்ள பிரிவுகளில் குடியுரிமைப்பற்றிக்கூறப்பட்டுள்ளது. அதில் 1955 ஆம் ஆண்டு இயற்றப்பட்ட தேசியக்குடியுரிமைச்சட்டத்தின்படி,
• குடியுரிமை தொடர்பாக எந்த முடிவு எடுக்கவும் நாடாளுமன்றத்திற்கு அதிகாரமுண்டு. இந்தியாவில் பிறக்கும் குழந்தைகள் ,இந்தியரை மணந்த வெளிநாட்டினர் ,வெளிநாடுவாழ் இந்தியருக்குப்பிறக்கும் குழந்தைகள் ,இந்தியாவுடன் சேர்க்கும் பகுதியச்சேர்ந்த மக்கள் ஆகியோருக்கு குடியுரிமையுண்டு. இந்தியாவில் 12 ஆண்டுகள் நிலையாக வாழ்ந்து வருபவர் குரியுரிமைக்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர் என்கிறது. ஆனால், புதிய சட்டத்திருத்தமோ,முஸ்லீம்களைத்தவிர்த்த பிறருக்கு 5 ஆண்டுகள் போதுமென்கிறது.
• முறையான கடவுசீட்டோ அல்லது அவை காலாவதியாகிய பின்பும், பிற நாட்டினர் ஒருவர் நமது நாட்டில் தங்கியிருந்தால் அவர்கள் முறையற்று குடியேறியவர்கள் ஆவர். இவர்களைத்தண்டிக்கவும், நாடு கடத்தவும் அரசுக்கு அதிகாரம் உண்டு. 2019 ,டிசம்பர் 12 அன்று குடியுரிமைத்திருத்தச்சட்டம் 2019 நாடாளுமன்ற ஒப்புதலுடன் நடைமுறைக்கு வந்துள்ளது. 1955 குடியுரிமைச்சட்டம் இரண்டாம் பிரிவில், முதலாவது உட்பிரிவு ’பி’ பகுதியில் புதிய பகுதியைச்சேர்த்திருக்கிறார்கள். அதன்படி, ‘2014 டிசம்பர் 31 க்கு முன்பு, ஆப்கானிஸ்தான் ,பாகிஸ்தான்,பங்களாதேஷ் , முதலிய நாடுகளிலிருந்து இந்தியாவிற்கு வந்துள்ள இந்துக்கள்,சீக்கியர்கள் ,சமணர்கள் ,பார்சி ,கிறிஸ்தவர்கள்,புத்த மதத்தினர் ஆகியோருக்கு குடியுரிமை வழங்கப்படும்’
மதம் ,இனம் ,சாதி ,பால் , பிறந்த இடம் ஆகியவற்றின் பெயரால்,ஒரு குடிமகனிடம் பாகுபாடு காட்டக்கூடாது. அகதிகள் போன்றோரை மதத்தின் பெயரால் பிரிப்பது எவ்வளவு மட்டமான செயல் ! இது நாட்டைப்பிளப்பதற்கான முயற்சியாகும். அசாம் மாநிலத்தில் குடியேறியவர்களால், தங்களது வேலைவாய்ப்புக்களும் வேறு நலன்களும் பாதிக்கப்படுவதாகக்கருதி, அசாமில் குடியேறியவர்கள் மாநிலத்தைவிட்டு வெளியேறவேண்டும் என்று அங்குள்ள அனைத்து அசாம் மாணவர் சங்கத்தினர் போராடினார்கள். இதனால் போராட்டங்களும் தாக்குதல்களும் நடந்தன. இதனை கவனத்தில் கொண்டு ,1985 ஆம் ஆண்டு, பிரதமர் ராஜீவ் காந்தி, அரசிற்கும் அனைத்து மாணவர் சங்க அமைப்பினருக்கும் இடையே ஓர் உடன்படிக்கை ஏற்பட்டது. அதன் படி, 1971 மார்ச் 26 ஆம் தேதிக்கு முன்பு , இந்தியாவில் வாழ்ந்தவர்களும் அவர்களது வாரிசுகளும் மட்டுமே உண்மையில் குடியுரிமைக்குத்தகுதியானவர்கள். அவ்வாறு இல்லாதவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றது. 1951 ஆம் ஆண்டு மக்கள் தொகைக்கணக்கு அடிப்படையில்தான் குடிமக்கள் பதிவேடு அசாமில் நடைமுறையில் இருந்தது.
இந்தப்பட்டியலை புதுப்பிக்க வேண்டி ’அசாம் பப்ளிக் ஒர்க்கர்ஸ்’ எனும் அமைப்பினர் 2009 ஆம் ஆண்டு உச்சநீதிமன்றத்தை அணுகினர். 2013 ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றமும் புதிய பட்டியலைத்தயாரிக்கும்படி ஆலோசனை கூறியது. அதன்படி ,1200 கோடி செலவழித்து பட்டியலும் தயாரிக்கப்பட்டது. தற்போது ,19.5 லட்சம் பேர் பதிவேட்டிலிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். குடியுரிமை மறுக்கப்பட்டவர்களில் பெருபாலானோர் 1971 ஆம் ஆண்டு கிழக்குப்பாகிஸ்தானில் போர் நடந்தபோது அங்கிருந்து இடம் பெயர்ந்தவர்களாவர். குடியுரிமைப் பதிவேட்டைப்பற்றி ஐ.நா. எச்சரித்துள்ளது. யாரும் நாடற்றவர்கள் இல்லை என்பதை இந்தியா உறுதிப்படுத்தவேண்டும் என்று கூறியுள்ளது. ஐ.நாவின் அகதிகள் விவகாரத்துறை தலைவர் பிலிப்போ கிராண்டி கூறும்போது, ‘குடியுரிமை இல்லாத ஒரு பெரும் மக்கள் பகுதியை உருவாக்குவது உலக அளவில் பின் விளைவை உருவாக்கும். அகதிகள் பிரச்சனைகளைத்தீர்க்க ஐ.நா. எடுக்கும் முடிவுகளுக்கு எதிராக ,இந்தியாவின் அணுகுமுறை இருக்கக்கூடாது.
குடியுரிமைப்பதிவேட்டை பி.ஜெ.பி அரசு கடுமையாகப்பின்பற்ற நினைப்பது அவர்களது சிறுபான்மையினர் மீது கொண்டுள்ள வெறுப்பே காரணம்’ தேசிய குடியுரிமைச்சட்டத்திற்கும் ,தேசியக்குடியுரிமைப்பதிவேட்டிற்கும் இடையில் உறவு உள்ளது. குடியுரிமைப்பதிவேட்டை அசாமில் நடைமுறைப்படுத்திய போது 19 லட்சத்திற்கும் அதிகமானவர்கள் குடியுரிமையை இழந்திருக்கிறார்கள்.இதில் இந்துக்கள் ,இஸ்லாமியர்கள், மற்றும் இதர மதத்தினரும் உண்டு. ஆனால் புதிய குடியுரிமைச்சட்டத்தின் படி, இஸ்லாமியர் நீங்களாக பிறருக்கு மட்டும் குடியுரிமைக்கிடைக்கும். இஸ்லாமியர்களை வெளியேற்றுவதுதான் அவர்களது இறுதி நோக்கம். அங்கிகாரமில்லாமல் இந்தியாவில் குடியேறியவர்களைக்கண்டறியும் நோக்கில் ,குடியுரிமைப்பதிவேட்டைத்தயாரிக்கவேண்டும் என்கிற நோக்கில் 2003 ஆம் ஆண்டு, தேசிய ஜனநாயகக்கூட்டணி அரசானது , குடியுரிமைச்சட்டத்தின் ஒரு பகுதியாக ,மக்கள் தொகைப்பதிவேட்டை நடைமுறைப்படுத்தவேண்டும் என்று முடிவு செய்தது. இவர்களது நோக்கம் என்னவெனில், குடியுரிமைச்சட்டத்தின் ஒரு பகுதியாக தேசியக்குடியுரிமைப்பதிவேட்டைத் தயாரிக்க,தேசிய மக்கள் தொகைப்பதிவேடும் ,மாநில குடியுரிமைப்பதிவேடும் அமையவேண்டும் என்பதுதான். உலகம் முழுதும் அகதிகளின் நிலை பரிதாபகரமானதாகும். 2011 சிரியாவில் நடந்த உள்நாட்டுப்போருக்குப்பின், 40 லட்சம் பேர் நாட்டைவிட்டு வெளியேறி ஐரோப்பிய நாடுகளில் குடியேறியுள்ளனர், மியான்மரில் 1982 ஆண்டின் குடியுரிமைச்சட்டத்தின் படி, சிறுபான்மையின ரோஹிங்கியோக்களுக்கு குடியுரிமை மறுக்கப்பட்டது. இதனால் , 1996 ல் அவர்களில் 4 லட்சம் பேர் பங்களாதேஷுக்கும், கிட்டத்தட்ட 40,000 பேர் இந்தியாவிற்கும் வந்தனர். 1995 ல் திபெத்திலிருந்தும். 1971 பங்களா தேஷ் போரின் போதும் ஏராளமான அகதிகள் இந்தியாவிற்கும் வந்துள்ளனர். இதே போன்று பாகிஸ்தானிலிருந்து இந்துக்கள் , அகமதியா இஸ்லாமியர்கள் உட்பட ,நேபாளத்திலிருந்து நேபாளிகள் , இலங்கையில் நடந்த போரின்போது குடியேறிய தமிழ் அகதிகள் ஆகியோர் இந்தியாவிற்குள் குடியேறியுள்ளனர். அகதிகளிலும் கூட புதிய குடியுரிமைச்சட்டத்தின்படி இஸ்லாமியர்களையும் தமிழர்களையும் பிரித்தறிந்து ஒதுக்குவது என்பது அநீதிமிக்கதாகும்!
இந்தியாவில் ஒவ்வொரு நாளும் அதிகரித்துவரும் தாக்குதல்கள், படுகொலைகள் ஆகியவற்றிற்கு எதிராக வெளிநாட்டு அமைப்புக்கள் பலவும் எச்சரித்துள்ளன. இஸ்லாமியர்களும் ,தலித்துக்களும் குறிவைத்து சூறையாடப்படுகிறார்கள். ‘மதச்சார்பின்மை வெற்றி பெறுவதைப்பற்றிப் பெரும்பான்மை என்ன நினைக்கிறது என்பது முக்கியமல்ல. சிறுபான்மை என்ன நினைக்கிறது என்றுதான் பார்க்க வேண்டும்’ என்றார் நேரு. அதன்படி சமத்துவத்தை உறுதிப்படுத்தியும் பாகுபாட்டிலிருந்தும் கலாச்சார வேறுபாடுகளை அங்கிகரித்தும் சிறுபான்மையினருக்கு தன்னம்பிக்கை ஊட்டுவதும்தான் நாட்டின் பொறுப்பு மிகுந்த செயலாகும்.. இந்திய விடுதலைப்போராட்டத்திலும், கிலாபாத் இயக்கத்திலும் நிலவிய இந்து – இஸ்லாமியர் ஒற்றுமை குறிப்பிடத்தக்கதாகும். ஆனால், தொழிலிலும், அரசுப்பணிகளிலும் ,சமுதாய நடவடிக்கைகளிலும் இஸ்லாமியர்களின் போதிய பிரதிநிதித்துவமின்றி பலவித நெருக்கடிகளை சந்தித்து வருகின்றனர். சட்டசபை, நாடாளுமன்றம் -அதிகார அமைப்பு – நீதித்துறைகளில் இஸ்லாமியர்களின் பிரதிநிதித்துவம் குறைந்து கொண்டே வருகிறது. இதே போன்று கல்வியிலும் – வேலைவாய்ப்புகளிலும் மிகக்குறைந்த அளவே இருக்கின்றனர். இதனால் பொருளாதார அளவில் மிகவும் பின்தங்கிய நிலையிலேயே வாழ்ந்து வருகின்றனர். இவர்களுக்கான நிதி ஒதுக்கீடு அளவும் குறைந்து வருவது மட்டுமின்றி , மக்கள் நலத்திட்டங்களும் கூட இம்மக்களை எட்டுவதற்கு சிரமப்படுகிறது.
‘ஒரு பெண்ணைக் கணவன் தலாக் சொல்ல அனுமதிப்பது தெய்வத்திற்கு மிகவும் வெறுப்பான விஷயம்’ என்று இஸ்லாம் கூறுகிறது. ‘ஒருத்தியை மொழி (தலாக் ) சொல்லும் போது தெய்வத்தின் சன்னதி நடுங்கும்’ என்று இஸ்லாம் கூறுகிறது. பெண்களுக்கு மிகவும் எதிரானச்சட்டம் முத்தலாக் ஆகும். பல இஸ்லாமிய நாடுகளிலும் இது கைவிடப்பட்டுள்ளது. திருமண உறவு முறிவு சட்டப்படி அமையவேண்டும் என்பது எல்லோரும் ஏற்றுக்கொண்ட கொள்கையாகும். 2018 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 23 ல் உச்ச நீதிமன்றமானது முத்தலாக்கிற்கு தடை விதித்தது. ஏற்கனவே இங்கு நடைமுறையில் இருந்த இஸ்லாமிய சிறப்புத்திருமணச்சட்டத்தின்படி, விவாகரத்து சாத்தியமானதுதான்.சமாதானப்பேச்சும்,அதற்கான முயற்சிகளும் தோற்றுப்போனால் மட்டுமே விவாகரத்து செய்ய முடியும் என்றிருந்தது. தற்போதைய சட்டத்தின் பிரிவு 4-ன் படி , திருமண உறவை முறித்தால் ,இஸ்லாமிய ஆண்களுக்கு மூன்று ஆண்டுகள் வரை சிறைத்தண்டனைக்கிடைக்கும். பிரிவு 5-ன் படி முத்தலாக்கிற்கு உட்பட்ட பெண்ணின் கணவன் ஜீவனாம்சம் தர வேண்டும் என்கிறது. அதுமட்டுமின்றி, சிறைத்தண்டனை அனுபவிக்கும் நபர், அதே காலத்தில் ஜீவனாம்சமும் தரவேண்டும் எனவும் கூறுகிறது. திருமணமும், திருமண முறிவும் அனைத்து மதத்தினரிடமும் நிகழ்கிறது.ஆனால், ஒரு குறிப்பிட்ட மதத்தினரை மட்டும் குறிவைத்துச்சட்டம் இயற்றுவது என்பது பாகுபாடுடைய செயலாகும். அரியானா மாநிலத்தில், பல்லப்கடி எனும் ஊருக்கருகில் வாழ்ந்துவந்தவர் ஜுனைத், இவர் டெல்லியிலிருந்து ஊருக்கு இரயிலில் திரும்பிக்கொண்டிருந்த போது, மாட்டுக்கறி வைத்திருந்ததாகக்கூறி சங்பரிவாரக்கும்பலால் தாக்கப்பட்டு, பின்னர் இரயிலிருந்து தூக்கி வீசி கொலை செய்யப்படுகிறார் : ராஜஸ்தானில் வாழும் பெஹலூகான் என்பவர் ஒருபால் வியாபாரி. இவர் பசுமாடு ஒன்றை வாங்கி வரும்போது ,பசுவைக்கடத்துவதாகக்கூறி, அடித்துக்கொள்கின்றனர் : உத்திரப்பிரதேசத்தில் தாத்திரி எனும் இடத்தில் முகமது அக்லாக் என்பவரது வீட்டில் மாட்டுக்கறி இருந்ததாகக்கூறி அவரைக்கொலை செய்கின்றனர் : இப்படியாக நீள்கிறது மதரீதியான கொலைப் பட்டியல். வேற்றுமையில் ஒற்றுமை என்பதுதான் புதிய ஜனநாயகத்தின் வலிமை.
இந்திய ஒரு மதச்சார்பற்ற நாடு என்பதால்,அதற்கு அதிகாரப்பூர்வ மதமோ,புனித நூலோ கிடையாது. ஆனால், ஒரு குறிப்பிட்ட மதத்தைச்சேர்ந்தவர் என்பதால் பாகுபாடு பார்ப்பது அவமானமாகும். இந்தியாவில் , இஸ்லாம் ,மற்றும் தலித்,பழங்குடியினர்களின் மக்கள் தொகையானது நாட்டின் மொத்த மக்கள் தொகையில் 39% சதவிகிதமாகும். சில ஆண்டுகளுக்கு முன்னால் எடுத்த கணக்கின்படி இஸ்லாம் ,தலித் ,பழங்குடியினர்கள் விசாரணைக்கைதிகளாக சிறைகளில் கணிசமானோர் வாடுகின்றனர். இவர்கள் தொடர்ந்து சிறையில் அடைபட்டு இருப்பதற்கான காரணங்களை ஆய்ந்து பார்ப்பது அவசியம். ‘நாட்டில் மதவெறி அதிகரிப்பது ஜனநாயகத்திற்கு ஆபத்து’. காஷ்மீரில் கல்வா என்னுமிடத்தில் எட்டுவயது சிறுமி சங்பரிவாரங்களுடன் தொடர்புடையவர்களால் கற்பழித்து கொலை செய்யப்படுகிறாள். சென்னை ஐ.ஐ.டி மாணவி பாத்திமா லத்திப் தற்கொலை செய்து கொள்கிறாள், இப்படியெல்லாம் நடப்பதற்குக்காரணம் , பெண்கள் ஒரு குறிப்பிட்ட சாதி , மதத்தினராக இருப்பதுதான். போதிய பாதுகாப்பு எதுவும் இன்றி, இப்பெண்கள் சந்திக்கும் எதிர்ப்பு ,பரிகாசம் ,தனிமைப்படுத்தல் ,பாலியல் தாக்குதல்கள் ,ஒதுக்கிவைத்தல் ,உரிய அங்கிகாரம் அளிக்காமை யாவும் ஜனநாயக தேசத்தில் மிகக் கொடுமையானதாகும். பெரும்பான்மை சிறுபான்மை என்ற சிந்தனை வளர்ந்து இந்தியப்பிரிவினையில் முடிந்தது என்றாலும், சு தந்திர இந்தியா மதச்சார்பற்ற குடியரசாகி உலகத்தின் முன்னால் தலை நிமிர்ந்து நிற்கிறது.
சுதந்திரத்திற்கு முன்பான காலத்திலிருந்தே இந்துத்துவ வெறியர்கள் இஸ்லாமியர்களுக்கு எதிராக பிரச்சாரத்தை மேற்கொண்டு வந்தனர். அப்படியான பிரச்சாரம் விஷம்போல் பரவி, 1992 டிசம்பர் 6 ல், 450 வருட பழமையான பாபர் மசூதி இடிக்கப்பட்டு ,தேசத்தின் மதச்சார்பின்மை கேள்விக்குள்ளாக்கப்படுகிறது. இது தொடர்பான வழக்கு ஒன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணையில் இருந்துவந்து., இறுதியாக ,2019 ல் இராமர் பிறந்த இடம் அயோத்தி என மக்கள் நம்புவதால் அந்த இடம் இந்துக்களுக்கு வழங்கப்படுகிறது என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளிக்கிறது. அதே போல ஜம்மு-காஷ்மீரை பிரித்தது மட்டுமின்றி காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவு 370 ஐயும் ரத்தும் செய்துவிட்டது. வடகிழக்கு மாநிலங்களுக்கு மட்டும் சிறப்பு அந்தஸ்து நீடிக்கும் போது காஷ்மீருக்கு மட்டும் ரத்து செய்தது பாகுபாடான செயலாகும்.
விடுதலைக்காக மக்கள் நடத்திய போராட்டமே இந்திய தேசியத்திற்கு அடிப்படையாகும். சாதி ,மதம் ,இனம் ,மொழி ,போன்ற வேற்றுமைகளைக்கடந்து அனைவரும் ஒன்றுபட்டு நின்ற இயக்கம் சுதந்திரப்போராட்டம் ஆகும். பல பிரிவுகளையுடைய மக்களை ஒன்றாய் அணிதிரட்டியது சுதந்திரம் என்ற கனவுதான். இதற்கு எதிராக சிலர் இந்தியாவை மதம் சார்ந்த நாடாக முயற்சி செய்கிறார்கள். இவர்களது செயல்பாட்டினை விமர்சித்தால் தேசத்துரோகிகள் என்கின்றனர். மாநிலங்களின் உரிமையைப்பறிப்பதும், மக்கள் ஒற்றுமையை சிதைக்கும் சட்டங்களை இயற்றுவதும் கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும். அது மத்திய -மாநில அரசின் உறவுகளைப்பாதிக்கும். மேலும், நாடாளுமன்றத்தில் வெளிப்படையான விவாதங்களுக்கு இடமளிக்காமலும், நாடாளுமன்ற குழுக்களின் ஆய்வுக்கு உட்படுத்தாமலும், தனக்குள்ள பெரும்பான்மையை பயன்படுத்தி மக்களை ஒடுக்க கறுப்புச்சட்டங்களை இயற்றுவதும் ஜனநாயகத்திற்கு நேர் எதிரானதாகும். ‘எல்லா மதத்தினரையும் ஏற்றுக்கொள்ளும் போது மதச்சார்பபற்ற நிலைக்கு ஒரு நாடு உயரும். ஏதாவது ஒரு மதப்பகுதியினருக்கு கட்டுப்பாடும் வேறுபகுதியினருக்கு குடியுரிமை வழங்கவும் நினைத்தால், அது மதச்சார்பற்ற குணத்தை இழந்துவிடும்.அது நாட்டை அழிவை நோக்கி இட்டுச்செல்லும்’. -பினராயி விஜயன்