- முனைவர் இரா. மோகனா
சிறுகதை உலகில் தலித் கிறிஸ்துவ மக்களின் வாழ்க்கை வரலாற்றை விவரிக்கின்ற விதத்தில் சில சிறுகதைகள் உள்ளன. அவ்வகையில் ப்ரதிபா ஜெயச்சந்திரன் எழுதிய கரசேவை என்ற சிறுகதை தலித் கிறிஸ்துவ மக்களின் வாழ்க்கை வரலாற்றை சிறந்த முறையில் விளக்குகிறது. இந்நூல் வாசிப்பாளர் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்நூல் குறித்து முன்னுரை வழங்கிய தமிழ்ச்செல்வன் நூலாசிரியரைப் பற்றிக் குறிப்பிடுகின்றபொழுது ப்ரதிபா ஜெயச்சந்திரன் என்கிற பெயர் நீண்ட காலத்துக்குமுன் பிறந்து எனக்கு அறிமுகமாகி என் உடன் பயணித்து வருகிற பெயர்தான் என்றாலும் அப்பெயர்க்கு உரிய மனிதரை நான் அறிந்திருக்கவில்லை. அவர் எழுதிய எதையும் கோர்வையாக படித்திருக்கவில்லை என்று தன் தவற்றை எடுத்துக்கூறியதோடு ஆசிரியரைப் பற்றி மிக அழகாக அறிமுகப்படுத்தி இருக்கிறார் தமிழ்ச்செல்வன்.
இந்நூலில் மொத்தம் 14 சிறுகதைகள் இடம் பெற்றுள்ளன. கிருத்துவ மக்களின் வாழ்க்கைப் பரப்பில் நிகழுகின்ற நிகழ்வுகள், நடுத்தர வர்க்க வாழ்க்கையில் இருந்து எடுக்கப்பட்ட உளவியலைக் கூறுகின்ற சிறுகதைகள், தாழ்த்தப்பட்ட மக்களின் வாழ்க்கைப்பாடுகளைப் பேசுகின்ற சிறுகதைகள் போன்றவை இந்நூலில் அடங்கியுள்ளன. 144 பக்கங்களைக் கொண்ட இந்நூல் குறித்த செய்திகளைப் பின்வருமாறு காணலாம். இந்நூலின் முதல் கதையாகிய இடைவார்ப்பட்டை சமயன் என்ற கதை தாழ்த்தப்பட்ட மக்களின் வாழ்க்கைப்பாடுகளை மிக அழகாக படம் பிடித்து காட்டுகிறது. சிறுகதையின் சிறந்த கதாபாத்திரமாக சமயன் என்ற கதாபாத்திரம் உள்ளது. இவன் நக்கல் பேர்வழியாக வேறு படைக்கப்பட்டிருக்கிறான். கதாபாத்திரத்தை அறிமுகப்படுத்தும்பொழுது தாட்டியான ஆள், முறுக்கு மீசை, சின்னக் கருப்பு முகத்தில் குறும்புத்தனத்தை வெளிப்படுத்தும். தடையை தோளிலும் அரிவாளை இடுப்பிலும் தொங்க விட்டிருப்பார் என்று சிறப்பாக அறிமுகப்படுத்தியிருக்கிறார் ஆசிரியர். இந்த சமயனின் கடினமான உழைப்பைப் பற்றிக் கூறுகின்றபொழுது ஏறுவதற்கு வாட்டம் இல்லாமல் இருக்கின்ற பனை மட்டைகளை முதலில் கழித்துவிட்டு பன்னாடைகளைக் களைந்துவிட்டு, சரசரவென்று மரத்தில் ஏறி குருத்தோலைகளை வெட்டிப் போடுவதில் சமயன் கைதேர்ந்தவர். நீண்ட நேரம் வேலை செய்ததால் உடல் களைத்து கஞ்சிக்காக உட்கார்ந்தான் சமயன். தூரத்தில் அவன் மனைவி கஞ்சி எடுத்து வந்து கொண்டிருக்கிறாள் என்று சிறுகதையை ஒரு சிறுபடம் போலவே ஆசிரியர் படிப்பவரின் கண்முன் நிறுத்துகிறார். இவ்வாறு தாழ்த்தப்பட்ட மக்களின் வாழ்க்கைப்பாடுகளை பேசுகின்ற இன்னும் சில கதைகள் இந்நூலில் உள்ளன என்று சொல்லி ஒருநாள், முட்டாய் தாத்தா, எழவு சொல்லி கதைகளும் கிறிஸ்துவத்தில் இணையாத தாழ்த்தப்பட்ட மக்களின் வாழ்க்கைப்பாடுகளை பேசுவதாக எழுதியிருக்கிறார் ஆசிரியர். கதையில் செத்த சேதி சொல்ல பல ஊர்களுக்குத் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவரை அனுப்பப்படுகின்ற பொழுது அங்கு அவர்களுக்கு கிடைக்கின்ற உணவு குறித்து சிறுகதையில் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு இடத்திலேயும் சொல்லப் போகும்பொழுது ஏதாவது சாப்பிட கொடுப்பார்கள். கல்யாணித் தேவர் வீட்டுக்குப் போனா வாசல்ல உட்கார வச்சு தோசை சுட்டுத் தருவார்கள். மத்த ஊருக்குள்ள எல்லாம் பண்ணையாளுக்கு வச்சிருக்கிற கேப்பைக் கூழும் கடிச்சிக்க உப்பும் பச்சை மிளகாயும் தருவாங்க. காரசாரமாக இறங்கும். பிணத்த எடுக்குறதுக்குள்ள ஊர் வந்து சேர்ந்து அனைவருக்கும் சொல்லியாச்சுன்னு சேதி தரணும் என்ற தகவல் நூலில் கூறப்பட்டுள்ளது. ஒரு நாள் என்ற கதையில் வேலாயி என்ற பெண்ணின் பசித்துன்பத்தை நம் கண்களில் நீர் வழியும் வகையில் சிறப்பாக சொல்லி சென்றுள்ளார் ஆசிரியர்.
வேலைக்குச் சென்ற தன் தாயைப் பார்ப்பதற்காக பொட்டக்காட்டுக்கு வெகு வேகமாக நடந்தாள் வேலாயி. நேரம் கடந்த காரணத்தினால் பசி அதிகமாக எடுத்தது. காட்டில் பகடை வீட்டுப் பையன்கள் கடலை பொறுக்கிக்கொண்டிருந்தார்கள். அதைக்கண்ட உடனே அங்கு மண்ணோடு கலந்து கிடந்த கடலைகளை வேலாயி புரட்டி எடுத்துக் கொண்டு இருக்கையில் அங்கு வந்த தேவர் பொண்டாட்டி, யாருடா அது என்று கேட்டுக்கொண்டே ஓடிவர, பயன்களும் தப்புக் கடலையுடன் தப்பி விட்டனர். ஆனால் வேலாயியோ துவரங்கட்டைகளை விட்டுவிட்டுப் போக முடியாததால் அங்கேயே நின்று விட்டாள். அவள் அருகில் வந்த தேவரின் மனைவி நீ பறய வீடு முனியம்மா பொண்ணா என்று கேட்க வேலாயி ஆம் என்றாள். உடனே முதுகில்பட்ட அடி சுரீர் என்று உரைத்தது. அவளிடமிருந்த கடலைகளை வாங்கி பெட்டிக்குள் போட்டுக்கொண்டு தேவரின் மனைவி சென்று விட்டாள். வேலாயிக்கு அழுகை முட்டிக்கொண்டு வந்தது. துவரங்கட்டைகளை அள்ளிக்கொண்டு வீட்டை நோக்கி நடந்தாள். மடியில் கனம் இருந்தது. ஆனால் மனமோ வலித்தது என்று ஒரு ஏழையின் பசித்துன்பத்தை சிறப்பாக நூலாசிரியர் சிறுகதையில் தந்துள்ளார்.முட்டாய் தாத்தா என்ற கதையிலும் ஏழையின் வாழ்க்கைப்போராட்டங்களைப் படம்போட்டு விளக்கியிருக்கிறார் ஆசிரியர். ஊருக்குள் சவ்வு முட்டாய் விற்ற குற்றத்திற்காகத் தாத்தா தாக்கப்படுவதைப் படிக்கின்ற அனைவரின் கண்களிலும் கண்ணீர் வருவது உறுதி. பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்தினாலே, சகோடி என்ற கதைகள் பின்தங்கிய சாதியக் கட்டமைப்பில் உள்ள மக்கள் அனுபவிக்கின்ற துன்பங்களைப் பேசுகின்றன. பிதா குமாரன் கதையிலோ ஞானம்பாள், தங்கராஜ், ஸ்டீபன், கிரேனாப் எனும் நான்கு கதாப்பாத்திரங்களுக்கு இடையில் நடைபெறுகின்ற அன்பு, தோழமை, காதல் போன்றவை சாதியால் எப்படி சீர் குலைந்து போகிறது என்பது மிக அழகாக விளக்கப்பட்டுள்ளது.
பாதிரியார் போர்வையில் தன் உணர்வுகளை ஒருவன் எவ்வாறு மறைத்துக் கொண்டு நடக்கவேண்டும் என்பது சொல்லப்பட்டுள்ளது. எந்த ஒரு மனிதன் தனியாக ஒரு பெண்ணோடு இருக்க நேர்கிறபொழுதும் யோக்கியமாய் நடந்து கொள்கிறானோ அவனே பாக்கியவான். அவன் பரலோக ராஜ்ஜியத்தில் பிரவேசிக்க தகுதியுள்ளவன். ஆனால் அப்படி இராமல் காற்றுக்குப் பறக்கும் பதரைப் போல் தன் மனதும் மாமிசமும் விரும்பியபடி நடந்துகொள்பவர்கள் கர்த்தரைவிட்டு விலகிப் போகிறார்கள் என்ற தன் கருத்தை இக்கதையில் தந்துள்ளார் ஆசிரியர். ஸ்டீபன் கிரேனாப்புடன் கொண்டிருந்த நட்பு, பிரதர் ஆகிய காரணத்தினால் பறிபோனதை நுணுக்கமாக இக்கதையில் தரப்பட்டுள்ளது. ஓராண்டிற்குப் பின் கிரேனாப்பின் திருமண பத்திரிக்கையைப் பார்த்து ஸ்டீபன் தன் ஏமாற்றத்தை மறைத்து திருமணத்தில் கலந்துகொள்கிறான். அங்கே அவளும் அவனுக்காக சொல்வதற்காகப் பலச் செய்திகளைக் கண்களில் தேக்கி வைத்திருந்தாள் என்பதாக சிறுகதையை முடித்துள்ளார் ஆசிரியர். சகோடி என்ற கதையில் கிறித்துவத்தில் சேர்ந்தால் நன்மைகள் கிடைக்கும் என்று நம்பி சேர்ந்த ஒருவன் அங்கும் தன் சாதியால் பின்னுக்குப் தள்ளப்படுவதால் மீண்டும் இந்து மதத்திற்கு மாறுகிறான் என்பதாக கதை நகர்கிறது. இந்து சமயத்திற்கு வந்துவிட்டதால் அவனுடைய தந்தையை அங்குள்ள பாதிரிமார்கள் திட்டுகின்றனர். தந்தையோ மகனுக்கு நல்ல ஒரு உறுதுணையாக இருப்பதாக கதை முடிந்திருக்கிறது. இக்கதையில் அக்கால சாதிய வெளிப்பாடு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. சாதியில் பின்னுக்குத் தள்ளப்பட்டவர்கள் ஒரு டீ கடைக்குள் நுழைய அங்கிருந்த உள்ளூர்வாசிகள் அருவருப்போடு அவசர அவசரமாக வெளியேறினர். பத்து டீ ஆர்டர் செய்ய மூன்று மட்டுமே வந்தது. அதுவும் அவர்களுக்கென்று வைக்கப்பட்ட குவளைகளில் என்று அன்றைய சாதிய வெளிப்பாடு கதையில் பதிவாகியிருக்கிறது.
நாடார் இளைஞர்களுக்குத் தரப்படுகின்ற மதிப்பு சொல்லப்பட்டிருக்கிறது. சாதிவெறியும் சிறுகதையில் எழுதப்பட்டிருக்கிறது. காலத்திற்குத் தகுந்தாற்போல மதமாற்றம் புரிந்ததன் காரணமாக வேலை கிடைச்சு உருப்படியாக சம்பாதிப்பதாகவும் பொண்டாட்டி பிள்ளைகளோடு மகிழ்ச்சியாக வாழ்வதாகவும் அவனைத் தேடி வந்த பிரதர் இன்றும் அதே நிலையில் இருப்பதையும் ஆசிரியர் மிகச்சிறப்பாக இச்சிறுகதையில் சொல்லியிருக்கிறார். சாதி என்பது நாம் போடும் சட்டையாக மட்டுமே இருக்க வேண்டும் தேவை இல்லாதபொழுது அந்தச் சட்டையைக் கழற்றிவிட வேண்டும் என்பது இச்சிறுகதையின் வழி நமக்குப் புலனாகிறது.ஒரு கன்னிகை கர்ப்பவதியாகி என்கின்ற சிறுகதை ஒரு குறுநாவலாக இந்நூலில் இடம் பெற்றிருக்கிறது. இச்சிறுதையை மிகச் சிறந்த சிறுகதை என்று வாசகர்களுக்குப் பரிந்துரை செய்யலாம். கிறிஸ்துவின் இரத்தத்தால் கழுவி சுத்திகரிக்கப்பட்ட நாம் அனைவரும் பரிசுத்த ஜாதியில் இருக்கிறபடியால் அவர்களைப் போல் நாம் பேசக் கூடாது என்று ஜாதி உணர்வோடு தேவசகாயம் வாதிடுகின்றபொழுது, சகோதரி லீதியாள் சாதியத்தைச் சபைக்குள் நிலைநாட்டுவதும் பின்பு அவளுடைய ஆதிக்கமே கதை முழுவதும் இருப்பதாகவும் சிறுகதையை அமைந்துள்ளது. தேவசகாயத்திற்குப் பின்பு வருகிற தீமோத்தேயு தலித்தாக இருப்பதால் சோத்துக்குக்கூட லீதியாளின் கண் பார்வைக்காக காத்துக் கிடக்கின்ற அவலம் இந்தச் சிறுகதையில் இடம்பெற்றிருக்கிறது. ஞானஸ்நானம் பெறுவதற்கு முன்னால் ஒரு தலித் சேரியில் உண்டி வில்லோடு திரிந்தவன் தீமோத்தேயு. இவனுடைய பெயர் பெரியசாமி. இப்பொழுது தன் சாதியை ஒழித்துக்கட்ட மதம்மாறி இருக்கிறான். இவன் சபையிலிருந்து நீக்கப்பட்டு ஊர் திரும்பி அங்கேயும் குற்ற மனதுடனே இறைப்பணியை தொடர்வதாகவும் லீதியாள் வேத வசனத்தை வாசிப்பவளாக மட்டுமே இல்லாமல் சமயத்தைப் போதிக்கின்றவளாகவும் இந்தக் கதாபாத்திரத்தை ஆசிரியர் படைத்திருக்கின்றார்.
பெண்ணாக இருந்தாலும் அவளுக்குள்ளும் ஜாதி இருக்கிறது என்பதை திட்டவட்டமாக இந்தக் கதை நமக்குத் தெரியப்படுத்துகிறது. இது ஒரு மனிதனின் வாழ்க்கை அனுபவத்தை மிக அழகாக எடுத்துக் காட்டுவதாக அமைந்திருக்கிறது. அடுத்ததாக கரசேவை என்கின்ற கதை கைலாயம் போனாலும் இந்தச் சாதி தொடர்ந்துதான் வருகிறது என்பது அங்கதச் சுவையை மையப்படுத்தியதாக அமைந்திருக்கிறது. கைலாயத்தில் நடக்கும் வேத வகுப்பில் ஒருவர் பேசும் பேச்சு அவருடைய ஜாதியைக் குறிப்பதாக இருந்த, இருக்கின்ற சூழலை ஆசிரியர் சுட்டியிருக்கிறார். முருகனுக்கு ஆறு தலைகள் ஏன் என்பதற்கான புதிய வாசிப்பாக இந்தப்பகுதி அமைந்திருக்கிறது. இடையிடையே தொழில்நுட்ப கருத்துகளையும் இணைத்திருப்பது அருமை.
அடுத்ததாக அரவணைப்பு, வெயில்காற்று போன்ற கதைகள் இடம்பெற்றிருக்கின்றன. வெயில்காற்று என்ற கதையில் பாலேந்திரன், ராமச்சந்திரன் இருவரும் நண்பர்கள். தமக்குள் யாருக்கு வேலை கிடைத்தாலும் நமக்குள் விசயத்தை பரிமாறிக் கொள்ள வேண்டும் என்று சொல்லி இருவரும் பிரிகின்றனர். சிறிது நாட்கள் கழித்து தலைமை அலுவலகம் சென்றபொழுது அங்கு பாலேந்திரன் வேலை செய்வதும் ஏதோ ஒரு வேலையில் மும்முரமாக இருப்பதையும் ராமச்சந்திரன் அறிகிறான். அங்கிருந்த பியூனிடம் அவன் பாலேந்திரன்தான் என்பதை உறுதிப்படுத்திக் கொண்டு அவனைச் சந்திக்காமலேயே திரும்பி விடுகின்றான். தனக்கு வேலை கிடைத்ததை ராமச்சந்திரன் கூறாததைப் போல பாலேந்திரனும் இருப்பதை இக்கதையில் கூறப்பட்டுள்ளது. கால மாற்றங்களும் பிறர் பொறாமைப் படக்கூடாது என்கின்ற எண்ணமும் அவர்களுடைய நட்பையே கரையச் செய்துள்ள செய்தியை இச்சிறுகதை அழகாகப் படம் பிடித்துக் காட்டுகிறது. சலிப்பு என்ற சிறுகதையில் மனிதர்களின் மனவியலை வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல மென்மையாக சொல்லியிருக்கிறார். மறைமலையடிகளின் யோகநித்திரை என்ற புத்தகத்தை வாசித்துக் கொண்டிருந்த அவனின் மனமோ பூங்கொடியின் அம்மாவின் உருவத்தில் நிலை கொண்டது என்று இரண்டே வரிகளில் கதையின் மையக்கருத்தை அழகாகச் சொல்லிச் சென்றிருக்கிறார் ஆசிரியர். உணர்வுகளுக்கு முன்னால் எவ்வளவுதான் மனங்களை கட்டுப்பாட்டில் வைத்தாலும் மனமாகிய குதிரை விசிலடித்து பறப்பது இயற்கை என்பதை இக்கதை உணர்த்தியுள்ளது.
அரவணைப்பு என்ற கதையில் தன் தந்தைக்குப் பணம் தேவை என்பதை எவ்வாறு கணவனிடம் கூற முடியும் என மனைவி மறைக்க, அதை உணர்ந்து கொண்ட கணவன் ஏன் இந்த விஷயத்தைக் கூறாது மறைத்து விட்டாய் உனக்கு என்னிடம் கூற தோன்றவில்லை போலும் என்று சிறிது தாழ்மையான குரலில் சொல்கிறான். மனைவியோ ஏன் இப்படியெல்லாம் பேசுறீங்க நான்தான் உங்களைச் சரியா புரிஞ்சுக்கல. முதல்ல உங்க அப்பாவுக்கு பணத்தை அனுப்பி வையுங்கள் என்று சொல்ல கணவனும் அது இருக்கட்டும் தேவைக்கு அதிகமாகத்தான் நான் லோன் போட்டிருக்கேன். நம்ம செலவுக்கு வைத்துக் கொண்டு மீதியை உன் அப்பாவிற்கு அனுப்பி வைக்கலாம் என்று சொல்ல, மனைவியோ முழுமையாக கணவனின் அடைக்கலமாவதாக கதையை அழகாக முடிக்கப்பட்டுள்ளது. தலித் மக்களின் வாழ்க்கையைத் தன்மையாக தம்முடைய சிறுகதைகளில் சொல்லிச் சென்ற பிரதிபா ஜெயச்சந்திரன் அவர்களுக்கு மனமார்ந்த பாராட்டுகள். இந்நூலை நன்முறையில் பதிப்பித்த பாரதி புத்தகாலயத்திற்கு வாழ்த்துகள்.