- ஸ்ரீதர் மணியன்
புளித்துப்போன சலிப்பூட்டுகிற செல்வந்தர்களின் இதயம் இன்பத்தை நாடுகிற வர்க்கம். பாசாங்கு இல்லாதது அடித்தட்டு மக்களின் யதார்த்தம். இதை நாம் வர்க்க வேறுபாடுகள் பற்றிய கேள்விகள் என்று ஏற்றுக் கொள்ள மறுத்தால், நாம் இதை உடல் சம்பந்தப்பட்டது என்றும் ஏற்றுக் கொள்ள முடியாது. மண்ட்டோ கண்டிப்பாக இந்த இரண்டு வர்க்கங்களுக்கிடையேயுள்ள முரண்பாட்டைப் பற்றித்தான் சிந்திக்கிறார். இந்த உலகம் முழுதும் வழிபடும் விக்கிரகங்களைப் போட்டு உடைக்கும் துணிச்சல் அவரிடமிருந்தது. நல்லது கெட்டது என அளந்து பார்க்கும் அளவு கோல்களை சுக்கு நூறாக்கியிருந்தார் மண்ட்டோ… (என் நண்பன் என் எதிரி என்ற பகுதியில் அவரது தோழியும் சக படைப்பாளியுமான இஸ்மத் சுக்தாய்)
மனித மனதின் அடுக்குகள் மர்மானவை. அவற்றில் மறைந்திருப்பதும், வெளிப்படுவதும் மாறுபாடுடையவை. அவை ஒன்று போலிருப்பது அரிது. .சொல்லால் வெளிப்படுவது வேறு. செயலால், நடத்தையால் வெளிப்படுவது வேறு. விலங்குகள் கூட்டமாக இருக்கும்போதும், தனித்திருக்கும்போதும் இயல்பினை மாற்றிக் கொள்வதில்லை. ஆனால், மனிதன் தனித்திருக்கும் சூழலில் பொதுவாகக் கண்ணியமான கனவானத் தோற்றம் கொள்கிறான். கூட்டமாகக் கூடும்போது பகுத்தறிவினை இழந்து உணர்வு வயப்படுவதுடன் வெறி கொண்டு தன்னிலை மறக்கிறான். யார் மீதோ, எதன் மீதோ காலங்காலமாய் அடக்கி, வைக்கப்பட்டிருந்த மிருகம் விழித்தெழுகிறது. அத்தகைய சூழலில் இனம், மொழி, மதம் என்ற பேதங்களற்று வாழத்துடிப்போர், அழிக்கத்துடிப்போர் என்ற இரண்டே இனங்கள் மட்டுமே உயிப்புடன் இயங்குகின்றன. வரலாற்றின் எண்ணற்ற பக்கங்கள் இதற்கான பல்வேறு நிகழ்வுகளைச் சான்றாகக் கொண்டுள்ளன. இத்தகைய மனிதனின் உணர்வுகளின் வெளிப்பாடுகளை தன் படைப்புகளில் அடியோட்டமாய்க் கொண்டே மண்ட்டோ வெளிப்படுகிறார். அவருடைய செயல்படவியலாத தன்னிரக்கம் கதைகளாய் உருக்கொள்கிறது. நிகழும் எதனையும் தடுக்கவியலாத அவலம் அவரை உலுக்கியெடுக்கிறது. தன் தவிப்புகளை, தன் வேதனைகளை, ஆற்றாமையினை அவர் அவல நகைச்சுவையோடு, அறச்சீற்றத்துடன் தனது படைப்புகளாக வெளிப்படுத்துகிறார். இருப்பின் ஸ்திரத்தன்மை சமூகக் காரணிகளால் கேள்விக்குரியதாக ஆக்கப்படும் நிலையினையே அவர் தனது எழுத்தாக்கினார். இந்துக்கள் கொல்லப்பட்டார்கள், முஸ்லீம்கள் கொல்லப்பட்டார்கள் எனக் கூறாதீர்கள். மக்கள் கொல்லப்பட்டனர் என்று கூறுங்கள் என்று சிதைவுற்றுப் போயிருந்த மனங்களிடையே தொலைந்து போன மனிதத்தை, மனிதனின் மாண்பினைக் கண்டறிய முயற்சித்தார். அதன் வெளிப்பாடாகவே ஒழுக்கம் பற்றிய விளக்கங்களையும், உன்னதம், உயர்ந்தது என்ற கூறுகளை கேள்விக்குள்ளாக்கினார். அவை குறித்து நிலவி வந்த கருத்துக்களை சிதைத்து நடைமுறை வாழ்வின் எதார்த்ததினை உள்ளவாறு காட்டினார்.
இந்திய, பாகிஸ்தான் பிரிவினையை அடிப்படையாகக் கொண்டே அவரது படைப்புகள் பெரும்பாலும் அமைந்தன. இந்தியர்கள், முஸ்லீம்கள் என அவர் மக்களை வேறுபட்டுக் கருதவில்லை. அத்தருணங்களில் நிகழ்த்தப்பட்ட, நடந்தேறிய வெறியாட்டங்களைக் கண்ணுற்ற அவர் மனித மனதின் ஆழங்களில் புதைந்திருக்கும் குரூரங்களை, வன்மத்தினை, மறை கோபத்தினை தனது படைப்புகளில் முதன்மையாக்கினார். எந்தப் பிரிவு மக்களையும் அவர் சாராது நடுநிலையாக, மனச்சான்றின் குரலுக்கொப்ப தனது படைப்புகளை உருவாக்கினார். அவலம், வேதனை, துயரம் என்பது மனித வர்க்கத்திற்குப் பொதுவானது. இவை மதம், இனம், மொழி, நிலம் என்ற கூறுகளுக்குள் அடங்காதது என்ற அவரது பார்வையினை அவரது கதைகளில் காணலாம். மனித குலத்தின் வாதையை அவர் தனது படைப்புகளாக்கினார். பிரிவினையை கருவாகக் கொண்டு பல எழுத்தாளர்கள் எண்ணற்ற படைப்புகளை உருவாக்கியுள்ளனர். இருப்பினும், சிறந்த படைப்புகளை உருவாக்கி மனதைத் தொடுவதற்காக அவர் எழுதவில்லை. மனிதர்களின் அகவியலை உள்ளதை உள்ளவாறே கூறியதால் அவை இயல்பாகவே ஆகச்சிறந்த படைப்புகளாக மிளிர்ந்தன.
அவமானம் கதை சுகந்தி எனும் பெண்ணின் கதை. பெண்களுக்கான தேர்வு என்ன என்பதனை ஆழ்ந்த பொருளில் விளக்கும் படைப்பு. அவர்களுக்கு எதனையும் தேர்ந்தெடுக்கும் உரிமை என்றுமே கொடுக்கப்படுவதில்லை என்ற குறியீட்டினை உணர்த்துகிறது. பாலியல் தொழிலாளிகளை இவர் தனது பிரதான கதை மாந்தர்களாக்கினார். அவர்களது கசக்கி எறியப்பட்ட உடல்களுக்குள் அவர்களது மனதினைக் கண்டெடுக்க முயற்சித்தார். சுகந்தியை வாடிக்கையாளனான ஒரு மனிதன் காரணம் கூறாது அவளை நிராகரித்துச் செல்கிறான். விலைமாதாக இருப்பினும் அவளது சுயமரியாதை கிளர்ந்தெழுகிறது. அவனைப் பலவாறாக சபிக்கிறாள். இதன் அடிப்படையான குறியீடு தனக்கான அங்கீகாரம் பெறப் போராடுதலே. தனக்கும் ஒரு வாழ்வு வேண்டும், தானும் கவனிக்கப்பட வேண்டும், தன் மீதும் நிபந்தனையும், வணிக நோக்கமுமற்ற அன்பு செலுத்தப்பட வேண்டும் என்ற தணியாத ஆசை அவளை உந்தித் தள்ளுகிறது. மண்ட்டோவின் கதை மாந்தர்கள் பெண்கள், குறிப்பாக விலைமாதுக்களாகவே இருப்பதற்கான காரணம் ஆழமானது. அழகும், இளமையும் நிலையற்றவை. சிறிது காலத்திற்குப் பிறகு அவையே அவர்களுக்கு எதிரிகளாகிவிடுகின்ற நடைமுறை அவலம் இவரை மிகவும் பாதித்திருக்கலாம். இத்தகைய தொழிலினை மேற்கொள்வோரின் முதுமைப் பருவம் எத்துணை கொடியதாக இருக்கும் என்பதனை மண்ட்டோவைப் போன்ற ஒரு கலைஞனைக் காட்டிலும் ஒருவரும் ஊகித்தறியவியலாது. அவர்களுக்கும் வாழ்வு குறித்த கனவுகளும், ஆசைகளும் உண்டு. அவர்களை கொழுத்த சதையிலான உருவம் என்று கருதி அவர்களிடம் நடந்து கொள்ளும் வாடிக்கையாளர்கள், அவர்களது தரகர்கள் என ஆண் வர்க்கத்தின் குரூரத்தினை மண்ட்டோவின் படைப்புகள் தோலுரித்துக் காட்டுகின்றன. சுகந்தியிடம் சுகத்தையும் அனுபவித்துவிட்டு, அவளிடமே பணத்தையும் தந்திரமாக அபகரித்துச் செல்லும் மாது போன்ற கதைமாந்தர்கள் எண்ணற்றோர். அவன் அரசு ஊழியனாக இருந்தும் இவ்வாறு நடந்து கொள்கிறான். ஆயினும், பக்கத்து அறைப் பெண்ணும், தனது சக தொழில் தோழியுமான ஒரு பெண்ணிற்கு உதவ நினைத்தும் இயலாத நிலையை நினைத்து வருத்தமுறும் ஒரு உயர்ந்த சக மனுசியாக வசந்தி இருக்கிறாள். இக்கதை குறித்து அவர் கூறும்போது, ‘விலைமாதர்கள் நமது சமூகத்தின் ஒரு பக்கமல்லவா? நான் ஏன் அவர்களைக் குறித்தும், அவர்களது அவலங்கள் குறித்தும் எழுதக்கூடாது? ஆண் வர்க்கம் அவர்களை எந்தக் குற்றவுணர்மின்றி உபயோகித்துக் கொள்ளும்போது அது குறித்து மாத்திரம் எழுதக்கூடாதென தடைவிதிப்பதும், வழக்குப் போடுவதும் என்ன நியாயம்‘? என்கிறார் அவரது மூன்று கதைகள் மீது வழக்கு நடந்தது.
‘தண்டாகோஷ்‘ கதை ஆபாசமானது என்று வழக்குப் பதியப் பெற்று ஒரு வழக்கு நடந்தது. ஓர் ஆணுக்கும், பெண்ணுக்கும் நடைபெறும் வார்த்தையாடல்களே அதன் அடிப்படை.. இருப்பினும், அது அத்தகைய கோணத்தில் பார்க்கப்படவும், வாசிக்கப்படவுமில்லை. அதில் விரவிக்கிடந்த பாலியல் சொற்கள் மட்டுமே அவர்கள் கண்ணுக்குத் தெரிந்தது விநோதமானது. ஆறு கொலைகளை எவ்வித குற்றவுணர்வுமின்றி ஐஷர் செய்கிறான். அதனால் அவன் பாதிக்கப்படுவதில்லை. ஆயினும், தான் அனுபவிக்க விரும்பிய பெண் உயிரற்ற சடலமாகக் கிடந்த அதிர்ச்சியில் தன் ஆண்மையை இழக்கிறான். மிக்க நுண்ணிய உளவியல் கூறினை அடிப்படையாகக் கொண்ட இப்படைப்பு. மனிதனின் மற்றொரு பக்கத்தினை உணர்த்துவது. ஒரு படைப்பின் பரிமாணத்தினையே உணரவியலாத அளவிற்கு சட்டமும், சமூகமும் புரையோடிப் போயிருந்த அவலத்தின் உச்சமது. அவர் இந்தியாவில் மூன்று முறையும், பாகிஸ்தானில் மூன்று முறையும் நீதிமன்றத்தின் முன்பாக நிறுத்தப்பட்டார்.
சாந்தி என்னும் கதையும் குறிப்பிடத்தக்கது. வாழ்வில் ஏமாற்றப்பட்ட ஒரு பெண்ணான சாந்தி தானிழந்த ஏதோ ஒன்றினைத் தன் வாழ்வில் தேடிக் கொண்டிருக்கிறாள். அவளது வாடிக்கையாளனாக வரும் மக்பூல் அவளோடு நட்பாகப் பழகவே விரும்புகிறான். அது சாந்திக்கு வியப்பினை உண்டாக்குகிறது. அவன் தன்னுடன் அவளது நேரத்தினைச் செலவிட்டதற்காக பணம் தர முற்படும்போது, சாந்தி தன்னிடம் இருக்கும் நூறு ரூபாய்த் தாள்களை தரையெங்கும் வீசி எறிகிறாள். தான் தேடுவது பணமல்ல என்று உணர்த்தும் அவள் எண்ணற்ற பெண்களின் பிரதியாக, பிரிதிநிதியாக வெளிப்படுகிறாள். மண்ட்டோவின் சிறந்த கதைகளுள் இதுவும் ஒன்று. அவரது திற, தண்டாகோஷ் ஆகிய படைப்புகள் எண்ணற்றோரால் விவாதிக்கப்பட்டு, சிலாகிக்கப்பட்டு, பாராட்டப்பட்டுவிட்டதால் அக்கதைகள் இங்கு கவனமாகத் தவிர்க்கப்பட்டுள்ளன. அவரது கதைகள் ஒவ்வொன்றிலும் வாழ்வும், உயிரும் கலந்துறைகின்றன.
கடவுளின் கடமையைச் செய்தல் எனும் சிறுகதை மிக ஆச்சர்யத்தினை மட்டுமன்றி அதிர்ச்சியினை அளிக்கும் கதையாகிறது. இவ்வாறு கூட ஒரு மனிதன் சிந்திக்க இயலுமா? சாதாரண மக்களை எங்ஙனம் தியாகிகளாக்குவது என்று அதன் கதாபாத்திரம் விவரிக்கிறது. சாமானியர்களின் நிலை, அவர்களது உயிருக்கான மதிப்பு, அதன் விலை என்னவாக இருக்க முடியுமென்பது அக்கதையில் தெளிவாக புலப்படுகிறது. மிக்க மாறுபட்ட வாதங்களைத் தன்ளுள் அடக்கிய கதை. இத்தகைய விளிம்பு நிலை மனிதர்கள் குறித்து வெளிப்படையாகவும், துணிவுடனும் படைப்புகளை உருவாக்கிய மற்றுமொரு மகத்தான மலையாள ஆளுமை ‘பேப்பூர் சுல்தான்‘ என்ற அடைமொழியைக் கொண்டிருந்த வைக்கம் முஹம்மது பஷீர். அவரும் கவனிப்பாரற்றுக் கிடந்த பல மனிதவர்க்கங்களின் வாழ்வினை எழுத்தாக்கினார். சொற்சித்திரங்கள் பகுதியில் மண்ட்டோவின் எழுத்தாற்றல் உச்சம் தொடுவதைக் காணலாம். சொற்களில், சில வரிகளில் அவரது சின்னஞ்சிறிய கதைகளைக் காணலாம். குறுங்கதைகள் என்றுகூட அவற்றினை வகைப்படுத்திட இயலாது. ஆங்கிலத்தில் ‘நேநோ‘ என்று கூறுவது போல் அவற்றை வகைப்படுத்தலாம்.. ஹைகூ கவிதைகள் உண்டு. ஹைகூ கதைகளை பல்லாண்டுகளுக்கு முன்னரே படைத்த சாதனையாளர் மண்ட்டோ. காத்திரமும், வீச்சுமிக்க ஆழமான பொருள் கொண்டவை அவை. பல நூறு வார்த்தைகளில் கூறவேண்டியவற்றை சில வரிகளில், வாக்கியங்கள்கூட அல்ல தெறிக்கவிட்டுச் செல்கிறார் அவர். அதனை வாசிக்கும் தருணத்தில் வாசகன் ஸ்தம்பித்து நிற்கிறான். அவனுள்ளான குற்ற உணர்வு அவனை அப்போது துளைத்தெடுப்பதும் உண்மை. ஓய்வு நேரம், துணிச்சலான செயல், எச்சரிக்கை, பிடிவாதம், விட்டுக் கொடுத்தல், பிழை ஆகிய கதைகள் ஆகச்சிறந்த எடுத்துக்காட்டுகளாகின்றன. பிரிவினையின் அவலம், கொடுமை, அல்லாடல்கள் மண்ட்டோவின் சொற்களால் காட்சிப்படிமமாகின்றன. ஒரு திரைப்படத்தின் காட்சி எத்தகைய வீச்சினைக் கொண்டதாக இருக்குமோ, அதனைக் காட்டிலும் வாசகனுக்கு பன்மடங்கு தாக்கத்தினை உண்டாக்கும் கதைகளாக சொற்சித்திரங்கள் பகுதி உள்ளது.
தான் பிறந்து, வளர்ந்து வாழ்ந்த இந்தியத் துணைக் கண்டத்தின் பிரிவினை அவரைத் தாங்கவொண்ணா துயரக்குள்ளாக்கியது. தனது மிகத் துல்லியமான வாழ்விடம் குறித்த உறுதியற்ற அவரது இருப்புநிலை அவரை மதுப்பழக்கத்திற்குள் தள்ளிச் சென்றது. தனது நண்பர்களை, தொடர்புகளை துண்டித்துக் கொண்டு வேறிடம் செல்ல நேரிட்டது அவரால் தாளவியலாததாயிற்று. அவரது டோபா டேக்சிங் மண்ட்டோவைத் தவிர வேறு யாராக இருந்திடவியலும்? அவரது உணர்வாக, உடலாக பம்பாய் நகரம் இருந்தது. இந்திய நாடு இருந்தது. சூழலால் லாகூர் அவரது இருப்பிடமாகப்பட்டது இந்தியாவிற்கும் திரும்பவியலாது, லாகூரிலும் பொருந்தி வாழ்ந்திட இயலாது அவர் தத்தளித்தார். தன்னையே டோபா டேக் சிங்காக உருவகப்படுத்திக் கொண்டு வாழ்வில் ‘அடையாளமற்ற மண்ணில்‘ மறைந்து போனார்.
அவரது கதைகள் மனிதனின் மனவிகாரங்களைக் குறித்துப் பேசின ஆனால், அங்கிள் சாமிற்கு கடிதங்கள் பகுதி முற்றிலும் மாறுபட்டு அமெரிக்காவின் மலினமான அரசியல் உத்திகளைக் குறித்தே பேசுகிறது.1951 – 1954 கால இடைவெளியில் ஒன்பது கடிதங்களை அவர் எழுதினார். அக்கடிதங்கள் அனைத்திலும் அவல நகைச்சுவை படிந்து கிடப்பதனை நாம் உணரமுடியும். அமெரிக்க ஆதிக்கத்தினை, அன்றாட வாழ்வின் நடைமுறைகளில் தலையிடும் அளவில் அது வாழ்வின் தவிர்க்கவியலாத அளவிற்கு அவலமாய் மாறிப் போனதை தன் ‘அங்கிள் சாமிற்கு கடிதங்கள்‘ என்ற பகுதியில் காண முடிகிறது. சாதாரண களிமண் உருண்டைகளில் தொடங்கி நவீன ஆயுதங்கள் வரை அவரது பகடி தொடருகிறது. விசாரணைக் கமிஷன்கள் என்னும் மகத்தான கண்துடைப்பு நாடகங்கள் குறித்தும் அவர் தனது கருத்தினை ஒரு நூற்றாண்டிற்கு முன்னரே பதிவாக்கியுள்ளார்.
5வது கடிதத்தில் அமெரிக்கா அணு ஆயுதங்களை உருவாக்குவது குறித்து எழுதும்போது, ‘அங்கிள், நீங்கள் உலகத்தில் அமைதியினை நிலைநாட்டுவதற்காகவே இவற்றை தயாரிப்பதாகக் கேள்விப்பட்டேன். ஆனால், எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்பது கடவுளுக்குத்தான் வெளிச்சம். எனக்குத் தெரிய வேண்டியதெல்லாம் நிலையான அமைதியை நிலைநாட்டுவதற்காக இந்தப் பூமியின் முகத்திலிருந்து எத்தனை நாடுகள் அகற்றப்படவேண்டும் என்பதே’, இவ்வாறான வாக்கியங்களால் இப்பகுதி முழுதும் நிரம்பிக் கிடக்கிறது. எளிய வாசகனுக்கு அது நகைச்சுவை. ஆனால், கருத்தூன்றி வாசிப்பவருக்கு இது அவலத்தினையும், வேதனையினையும், எதேச்சாதிகாரத்தின் மீளவியலாத எதார்த்ததினையும் அழுத்தமாகப் பதிவாக்குகிறது தங்களது நாட்டின் தனித்தன்மையும், அதற்கேவுரிய கலாச்சார அடையாளங்களும் பேணப்பட வேண்டும், காப்பற்றப்பட வேண்டும் என்ற அக்கறையும், ஆதங்கமும் இக்கட்டுரைகளின் தொனியாக ஒலிப்பதனை நாம் உணரமுடியும். தனது அரசியல் சட்டத்தின் வாயிலாக தனது குடிமக்களுக்கு ஏழு அடிப்படை சுதந்திரம், உரிமைகளை அளித்திருந்தாலும், தான் ஆதிக்கம் செலுத்தும் நாடுகளில் அதனைப் பின்பற்றுகிறதா? என்ற கேள்வியைத் தனது அனைத்து கடிதங்களிலும் எழுப்புகிறார் மண்ட்டோ. ‘அங்கிள், பொய் சொல்வதனை ஒரு கலையாகவே மாற்றிவிட்டீர்கள், அது உங்களுக்கு மிவும் சாத்தியமானது,’ என்னும் வாக்கியங்கள் அவரது தார்மீகக் கோபத்தின் வெளிப்பாடாக இடம் பெற்றுள்ளதனைக் காணலாம். ருஷ்யா பற்றிய அமெரிக்காவின் நிலையையும் அவர் மிக்க அங்கதத்துடன் பதிவாக்குகிறார். ‘சுதந்திரமான இந்தியாவை நீங்கள் விரும்புவதற்கு காரணம் இதுதான். போலந்து, செக்கோஸ்லாவாகியா, கொரியா போன்ற நாடுகளில் அது செய்வதைப் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள். அந்த சிவப்புப் பேரரசு, அதனுடைய அரிவாள் சுத்தியலோடு எங்கே இந்தியா மீது பாய்ந்துவிடுமோ என்று அச்சம் கொள்கிறீர்கள். இந்தியா ஒருவேளை அதனுடைய சுதந்திரத்தினை இழக்க நேரிட்டால் அது மிகப்பெரிய துயரமாவதோடு, உங்கள் முதுகுத்தண்டு நடுங்கிக் கொண்டிருப்பதையும் என்னால் பார்க்க முடிகிறது‘, என்று பகடி செய்கிறார். இன்றுவரை அந்நிலை மாற்றம் பெறாது சமகால சூழலுக்கேற்றாற்போல் வெவ்வேறு முகங்களுடன், பொருத்தமான தருக்கங்களை முன்வைத்து வியட்நாம், கொரியா, ஈரானில் தொடங்கி ஆப்கானிஸ்தான் வரை ‘அமைதி, சமத்துவம், ஜனநாயகம், பொருளாதார உதவி‘ என்ற முகக்கசவங்களை அணிந்து கொண்டு அமெரிக்கா ‘தொண்டாற்றி‘ வருவதனைக் காணலாம். மக்களாட்சியின் மாண்புகளை நிலைநிறுத்துவதற்கு எனக்கூறியவாறே சாமானியர்களை வதைத்தெடுக்கும் காட்சிகளை புவியெங்கும் காணலாம். இத்தகைய இப்போக்கு என்றும் மாறாது என தனது தீர்க்கதரிசனத்தில் கண்டு அன்றே எச்சரித்தவர் மண்டோ. இவ்வாறு அங்கிள் சாமுக்கு கடிதங்கள் பகுதி மண்ட்டோவின் அரசியல் நிலைப்பாட்டினை தெளிவாக வாசகனுக்கு எடுத்துரைக்கிறது.
பல திரைப்படங்கள் அவரைக் குறித்து வெளியாகி உள்ளன. நந்திதா தாஸின் இயக்கத்தில் 2018ஆம் ஆண்டு வெளியான படம் குறிப்பிடத்தக்கது. மண்ட்டோ எனும் தனி மனிதன் வாழ்ந்த முறையை அது ஆழமாகச் சித்தரிக்கிறது. அவரது சமகால படைப்பாளியான இஸ்மத் சுக்தாய் அதில் அவருடன் பயணிக்கிறார். மண்ட்டோவின் ஐந்து கதைகளும் அதில் தொட்டுக்காட்டப்ட்டுள்ளன. பொருளாழமிக்க, கூர்மையான வாக்கியங்கள் வசனங்களாகச் சேர்க்கப்பட்டுள்ளன. மண்ட்டோவின் சிதைவு அதில் படிப்படியாகச் சித்தரிக்கப்படுகிறது. குடும்பத்தோடும் ஒன்றவியலாது, நண்பர்களோடும், சமுதாயத்துடனும் இணங்கி வாழவியலாது தத்தளிக்கும் கலைஞனை மிக அற்புதமாக உருவாக்கியுள்ளார் நந்திதா தாஸ். கேன்ஸ் படவிழாவில் அதன் முன்னோடிக் காட்சியும், அதற்கான திரைமுகப்பு விளம்பரமும் அறிமுகம் செய்யப்பட்டது. பல விருதுகளை பெற்றதொரு சிறந்ததொரு திரைப்படம். அசோக்குமார், ஷியாம் போன்ற அன்றைய பல்வேறு திரையுலகப் பிரபலங்கள் அவரது உற்ற தோழர்களாக இருந்தனர். பல திரைப்படங்களுக்கு அவர் வசனங்களும், கதைகளும் உண்டாக்கித் தந்தாலும் அவற்றின் அபத்தங்கள் குறித்தும் அவர் சாடியுள்ளார். ஒரு கதாநாயகன் எவ்வாறு நல்லவனாகவும், வில்லன் என்பவன் எப்போதும் கெட்டவனாகவும் இருக்க முடியும்? இதைக்காட்டிலும் நகைப்புக்குரியது எதுவுமிருக்க இயலாது. மேலும், படத்தின் இறுதியில் அவன் திடீரெனத் திருந்தி நல்லவனாகிவிடுவதும் ஏற்றுக் கொள்ளவியலாதது என்று ஒரு கட்டுரையில் அவர் கூறுகிறார். ஏறக்குறைய 80ஆண்டுகளுக்கு முன்பாக ‘இந்திய சினிமா என்ன செய்ய வேண்டும்‘ என்ற தலைப்பிட்டு உருது மொழியில் அவர் எழுதிய கட்டுரை குறிப்பிடத்தக்கது. பத்து பக்கங்கள் வரை கொண்ட அக்கட்டுரையினை ஆகார் பட்டேல் என்பவர் ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்துள்ளார். அதனை ‘உயிர் எழுத்து‘ இதழ் 2014ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் வெளியிட்டது. வடகரை ரவிச்சந்திரன் அதனைத் தமிழாக்கம் செய்திருந்தார். மண்ட்டோவின் வாழ்வில் திரைத்துறை தவிர்க்கவியலாத ஓர் அங்கமாக இருந்தது.
அவரது சமகால படைப்பாளியும், அவரது நெருங்கிய தோழியுமான இஸ்மத் சுக்தாய் மண்ட்டோ குறித்து எழுதியுள்ள பகுதி மிக்க சுவாரசியத்துடன் மண்ட்டோவின் மாறுபட்ட அதே தருணத்தில் மிக எதார்த்தமாக மண்ட்டோ என்ற கலைஞனின் உருவத்தினை புலப்படுத்துகிறது. அவர்களிருவரும் எப்போதும் விவாதம் செய்கிறவர்களாகவும், சண்டையிட்டுக் கொள்பவர்களாகவும் இருக்கின்றனர். சுக்தாய் தானறிந்த தனது நண்பனின் பிறிதொரு முகத்தினை ஆழமாகத் தொட்டுக் காட்டியுள்ளார். மண்ட்டோவை ஒரு கோழை என்றும், அதே தருணத்தில் அன்பும், அக்கறையும் கொண்ட சிறந்த நண்பன் என்றும் கூறுகிறார். பொதுவாக, பெண்களின் கையறு நிலை அவற்றில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. சுக்தாய் அப்படத்தில் வேடிக்கையாகக் கூறுவார். மண்ட்டோ கிளேர் தெருவிற்குள் போனால் கதையோடுதான் திரும்புவான் என்று. அவ்வளவிற்கு உணர்வுவயப்பட்ட நிலையில், அதீதமான, உன்மத்தம் கொண்டவராக அவரது இயல்பிருந்தது. கலைஞன் எனப்படுபவனின் இயல்பு இதுவாகவே இருந்திட முடியும். அவனை தன் எழுத்திலிருந்தோ, கலையிலிருந்தோ பிரித்தறிந்திட இயலாது. மனமும், சிந்தனையும், செயலும் ஒன்றுபடும் நிலையில் அவன் வெளியாகிறான். இத்தகைய உணர்வு வயப்பட்ட நிலை அவனை வாழ்நாளைக் குறுக்கிவிடுகிறது .மண்ட்டோவும் இதற்கு விலக்கானவரல்ல. மிகச்சிறிய வாழ்நாளினையே அவர் கொண்டிருந்தார். நாற்பத்தி இரண்டு ஆண்டுகளே அவர் உயிர்வாழ்ந்தார்.
பாரிக் அலி என்ற உருது படைப்பாளியே சூதாட்டத்தில் ஈடுபட்டு பொழுதினை வீணாக்கிக் கொண்டிருந்த அவரை படைப்புலகிற்கு இழுத்து வந்தவர். அவரை திரைப்படங்களுக்கு விமர்சனமும் எழுத வைத்தார். அவரது முதல் விமர்சனத்தினை படித்த பாரிக் அலி ‘மண்ட்டோ என்னும் சிறுகதை எழுத்தாளனின் மேதமையை இது வெளிப்படுத்துகிறது‘ எனப் புகழ்ந்தார். உருது முற்போக்கு எழுத்தாளர்கள் அமைப்பில் அவர் இணைந்திருந்தாலும் அவரது ஒரு கேள்வி சிந்தனைக்குரியது. முற்போக்கு எழுத்தாளர் அமைப்பில் இருந்தால் மட்டுமே ஒரு எழுத்தாளர் முற்போக்கு சிந்தனை கொண்டவன் என எவ்வாறு கருத முடியும்? என்ற வினாவினை அவர் தொடர்ந்து எழுப்பிவந்தார். மனிதன் எதற்காக மது அருந்துகிறான் என அவரது நண்பன் வினவும் போது, மனச்சான்றினை கொல்வதற்காக அன்றி வேறெதற்காக இருந்திட முடியும்? என்று மண்ட்டோ பதிலளிக்கிறார். மனிதனின் உடலிலிருந்து மதம் என்ற அடையாளம் கொண்ட சதைத் துணுக்குகளை உரித்தெடுத்த பின் எலும்புகளையும் இந்தியன் என்றும், பாகிஸ்தானி என்று வகைப்படுத்திட இயலுமா? இவ்வாறான கேள்விகள் அவரைத் துளைத்தெடுத்தன. சமூகத்தின் காட்டுமிராண்டித்தனத்தின் போக்குகள் அவரை உன்மத்த நிலைக்குள்ளாக்கின. மதம், இனம் என்ற கூறுகளைக் கொண்டு உடல்களை இலக்காகக் கொண்டு உயிர்களை வதைப்படுத்தும் செயல்களை அவரால் சகித்துக் கொள்ள இயலவில்லை. இவையே அவரை மதுப்பழக்கத்திற்கு அடிமையாக்கின. மனப்பிறழ்வும் தொடர்ந்தது. மண்ட்டோ அதன் பிடியிலிருந்து மீளவியலவில்லை. சமூகத்திற்காக தன் குடும்பத்தை, தன் வாழ்வினைப் பணயமாக வைத்துச் சூதாடித் தன்னை இழந்த ஒரு கலைஞனாகிறான் மண்ட்டோ.ஒரு கலைஞனின் அகத் தோற்றத்தினை, உணர்வுக் கலவைகளை, மனச்சான்றின் எதிரொலியினை மண்ட்டோ பிரதிபலிக்கிறார். கலைஞன் தான் வாழும் காலத்தின் குரல், பிம்பம். தான் வாழ்ந்த காலத்திற்கு தன் படைப்புகளை சாட்சியாக்கி மறைந்து போகிறான். அவனது வாழ்வு குறித்த பிரக்ஞை அவனைச் சுற்றி நடக்கும் சம்பவங்களில், நிகழ்வுகளில், கரைந்து போகிறது. தன் மனச்சான்றின் குரலை அழிக்கமுடியாது மறுகிச் சாகிறான். தான் உள்வாங்கியதைக் கலவையாக்கித் தன்னையே ஒப்புக்கொடுத்து வெளிப்படுத்தும் உன்னதமான பொருளாக உருமாற்றம் பெற்று நித்தியமாய் வாசிப்பு என்னும் உன்னதமான கலை உள்ளவரை அவன் இலக்கிய தளத்தில் உயிர் பெற்று உலவிடுவான். வாழுங்காலத்தில் அவரை அலைக்கழித்த அரசும், சமூகமும் மண்ட்டோவின் மரணத்திற்குப் பின் அவருக்கு விருது அளித்ததுடன், உருது இலக்கியத்தின் மகத்தான ஆளுமை என்று கொண்டாடுவது நகைமுரண். Men of Letters என்ற வரிசையில் மண்ட்டோவின் உருவம் பொறித்த அஞ்சல் தலையும் வெளியிடப்பட்டு சிறப்பு செய்யப்ட்டது.
அவரது முதல் சிறுகதைத் தொகுப்பு அவரது 24ஆம் வயதில் வெளிவந்தது. ஒரு பெருங்கதை, இருநூற்றைம்பது கதைகள், வானொலி நாடகங்கள், திரைப்பட விமர்சனங்கள், கட்டுரைகள் என அவரது படைப்புத்தளம் பரந்திருந்தது. மண்ட்டோ பற்றிய விமர்சனங்களும், கட்டுரைகளும் காலத்திற்கேற்றாற் போல் வடிவங்கொண்டு உருவாகிக் கொண்டுதானிருக்கும். அக்கலைஞன் குறித்து தன்னுடைய பார்வையினைப் பதிவு செய்திட விரும்பாத படைப்பாளியைக் காண்பது அரிது. தன் கருத்தின், பார்வையின் பங்களிப்பு இலக்கிய தளத்தில் உலவிடுவதை அவன் விரும்புவான். ராமாநுஜன், ஜமாலன் ஆகியோரது குறிப்புகள் ஆகச்சிறந்தவையாக பதிவு கொண்டுள்ளன. இத்தொகுப்பின் இறுதியில் அவை இடம் பெற்றுள்ளன. மண்ட்டோவை எவ்விதமாக அணுகிட வேண்டும், எவ்விதமாக பார்க்க, வாசிக்க வேண்டும் என்பதற்கு அவை சிறந்த வழிகாட்டிகளாக இருப்பதை உணரலாம். அவற்றை முதலில் வாசித்தபின் நூலிற்குள் செல்லுதல் நூல் குறித்த ஒரு முழுமையான, நிறைவான பரிமாணத்தினை வாசகனுக்கு அளிக்கும். தோழர் ராமாநுஜனின் மொழியாக்கம் குறிப்பிடத்தக்கது. மண்ட்டோவின் உணர்வுகளை, (வாக்கியங்களையோ, சொற்களையோ அல்ல) சிதைவடையாது தமிழுலகிற்கு கொடையாக்கி அளித்திருக்கிறார். படைப்புகளை மொழியாக்கம் செய்வதே ஒரு கலை. இருப்பினும், மண்ட்டோ போன்ற அதீத உணர்வுக்காட்பட்ட, உன்மத்த நிலையில் வடிக்கப்பட்ட உணர்வெழுச்சிகளை மொழியாக்கம் செய்வது எளிதான பணியன்று. அதற்கு ஓர் அர்ப்பணிப்பு உணர்வும், உள்ளார்ந்த ஈடுபாடும் தேவை. அத்தகைய ஓரு ஈடுபாடே இந்தத் தொகுப்பு உருவாகிட காரணியாகிறது. இவ்வரிய பணிக்காக தமிழ் வாசகர்கள் அவருக்கு தனிப்பட்ட நன்றியறிதலைத் தெரிவிக்க கடமைப்பட்டவர்கள் என்பது உறுதி. கூடுதலாக, 2013ஆம் ஆண்டு த.மு.எ.க சார்பில் மண்ட்டோவின் நூற்றாண்டு நிறைவினையொட்டி பாரதி புத்தகாலயம் அவமானம் என்ற தலைப்பிட்டு குறுநூலாக விலையின்றி மாநாட்டுப் பிரதிநிதிகளுக்கு வழங்கியது. இச்சிறு தொகுப்பு மண்ட்டோவின் நான்கு கதைகள், ஏழு சிறு மற்றும் குறுங்கதைகள், அமெரிக்க அரசுக்கு எழுதிய ஒரு கடிதம், மண்ட்டோவின் எதிர்வினை என்ற சிறுபகுதி ஆகியவற்றை அடக்கிய நூலாக இருந்தது. அங்கிள் சாமிற்கு கடிதங்கள் என்னும் அவரது ஒன்பது கடிதங்கள் மட்டும் அடங்கிய சிறு தொகுப்பினை புலம் வெளியிட்டது.
‘சாதத் ஹசன் மரிப்பான், மண்ட்டோவிற்கு மரணமில்லை‘ இவை அவரது பொருள்மிக்க சொற்கள். இவையும் காலம் கடந்து ஒலிப்பது போல் அவரது படைப்புகளும் நித்தியமானவை. அவை மனித குலம் வாசிக்கத் தெரிந்த, முடிந்த காலம் வரை பேசப்படும், வாசிக்கப்படும், விவாதிக்கப்படும். இப்பிரிவினைத் தருணங்களை எண்ணற்றோர் பதிவு செய்திருக்கலாம். காலவெள்ளத்தின் போக்கில் நாடுகள் உருவாவதும், எவ்லைக் கோடுகள் மாற்றியமைக்கப்படுவதும் தவிர்த்திட இயலாதவை. ஆயினும், மனித நேயமும், மாண்பும் பேணப்பட வேண்டியவை. அவை மாறிடவேண்டிய அவசியங்களோ, நிர்பந்தங்களோ ஏதுமில்லை. இவ்வாறான மனிதத்தை நடுநிலையோடு வலியுறுத்துவதில் மண்ட்டோ மற்றோரிடமிருந்து வேறுபடுகிறார். பாரதி புத்தகாலயத்தின் பெருமை மிக்க குறிப்பிடத்தக்க வெளியீடான இத்தொகுப்பு ஒவ்வொரு வாசகனின் சேகரிப்பிலும் வளரும் தலைமுறையினருக்காக சேகரிக்கப்பட வேண்டிய அரிய நூலாகிறது.