1-
தண்ணீரின் ஞாபகங்களை
மீன்கொத்திகளிடம்
கேட்டுக்கொண்டிருந்த
பொழுதில் நீ வந்தாய்
மணலின் மறதி குறித்து ஆராய்வதாய்
சொல்லிக்கொண்டாய்
தாகம் என்றது மரம்
விக்கலில்
திணறிக்கொண்டிருந்தது வயல்
புழுக்கம் தாளாமல்
பெருமூச்செறிந்தது குளம்
முன்பொரு காலத்தில் நதி
இருந்தது என்றது மீன்கொத்தி
நீராடிக் களித்தபொழுதுகளை
நினைவுகூர முடியாமல்
தடுமாறியது மணல்
ஆம்பல் அலர்ந்திருந்த
காலத்தை எண்ணி
அழுதோம்
கழுகாக மாறுகிறது
மீன்கொத்தி
பாறையாய் இறுகுகிறது மணல்
2
நடமாட்டமில்லாத
தொன்மையான கோயில்
மழைக்கு ஒதுங்கியபோதுதான்
பார்த்தேன்
கருவறையின் இருள் கடந்து
என்னவொரு லாவண்யம்
என்னவொரு தீட்சண்யம்
உன் கோயிலே
என் குடியிருப்பாய் ஆயிற்று
கால நேரக் கணக்கில்லா
பூஜை.
எத்தனை மலர்கள்
எத்தனை மாலைகள்
பேய்ச்சிக்கு நிறைவில்லை
பித்தனுக்கும் அலுக்கவில்லை
என்றோ பிடித்தமழை
இன்னும் ஓயவில்லை