இரண்டு நாட்களாக
சிதறிக் கிடக்கின்றன
ரத்தக் கரைகளுடன் சில
வார்த்தைகள்.
ஹாலில் கொஞ்சம்
படுக்கையறையில் கொஞ்சம்
சமயலறையில் கொஞ்சம்
உன் மருந்தை நானும்
என் மருந்தை நீயும்
பத்திரமாக உள்ளே வைத்து
சாவியை சுயநினைவோடு
தொலைத்துவிட்டோம்.
இப்போது
உனக்கும் எனக்கும் மத்தியில்
ஒரு தடித்த மௌனம்
கால் நீட்டி சாவகாசமாக
படுத்துள்ளது.
புறமுதுகைக் காட்டுவது
புறநானூறில் மன்னிக்க முடியாத
குற்றமாக இருக்கலாம்
அகநானூறில் அப்படியல்ல.
அறிவேன் நான்.
நினைவின் அடுக்குகளில்
சொறுகி வைத்திருந்த
காரணங்களை வேறு
காணவில்லை.
சரி போகட்டும்.
அதனால் என்ன
விட்டத்தைக் காலவரையின்றி
வெறித்துக்கொண்டிருக்கலாம்.
இப்போது எங்களை ஏளனமாகப்
பார்த்துவிட்டுப் பொறுமை
இழந்து கொண்டிருக்கும்
அந்த சுவர்பல்லிக்குத்
தெரியவேண்டியதெல்லாம்
யார் உதட்டில் ஒளிந்துள்ளது
சண்டையை முடித்து வைக்கும்
அந்த அரை இன்ச் புன்னகை.
previous post