- மயிலம் இளமுருகு
அனுபவங்களும் கவிதைகளும் அலாதியானவை. இதோ நம்மோடு சிலாகிக்கின்றன கவிஞர் முனைவர் வே.ஸ்ரீலதா அவர்களின் முதல் தொகுப்பு நூலான ‘இன்னும் தொடர வா’ என்னும் கவிதை நூல். சங்கப் பெண்பாற் புலவர்களின் உளவியலை ஆய்வு செய்த இவர் தன் உளம் சார்ந்த விடயங்களை இத்தொகுப்பு நூலில் பதிவு செய்துள்ளார். கவிஞர்கள் தான் எடுத்துக் கொள்ளும் பொருளை மனக்கண்முன் கொண்டுவந்து எழுதத் தொடங்குவர். கவிஞரோ தன் மனத்தையே கவிதையாகப் படைத்துள்ளார். இதுவரை நாவலாசிரியர், ஆய்வாளர் என்று மட்டுமே அறியப்பட்ட இவர் இத்தொகுப்பு நூல் மூலமாகக் கவிஞராகவும் உருவெடுத்துள்ளார். இதுவரை இரண்டு ஆய்வு நூல்கள் ஒரு குறுநாவல், ஒரு கட்டுரைத் தொகுப்பு என்பனவற்றை எழுதியுள்ளார்
தான் சொல்ல வந்த பொருளைக் கூற முற்படும்போது சொல் தேர்வு, கூறும் முறை என்பனவற்றைத் தேர்வு செய்த முறை அவரது கவித்திறனைக் காட்டுவதாக உள்ளது. சங்கக் கவிஞர்கள் சிலர் தன் வாழ்க்கையைக் கவிதையின்வழிக் கூறியுள்ளனர். தன் எண்ணங்களை அவர்கள் நெஞ்சோடும் தோழியோடும் சொல்வதாக அக்கவிதைகள் இருந்துள்ளன. அவர்களின் தொடர்ச்சியை இன்றைய கவிஞர்கள் முன்னெடுத்துத் தன் படைப்பில் எழுதி வருகின்றனர். அவர்களுள் தன் உள்ளக்கிடக்கையை முகம் சுளிக்காத சொற்களால் அழகாக எழுதியுள்ளார் கவிஞர் ஸ்ரீலதா. தன் கவிதை நூல் குறித்துப் பின்வருமாறு கூறியுள்ளார். ‘உணர்வுகள் என்னுள் விதைக்கப்பட்டதினால் விளைந்த வரிகள் இவை. என்னை உருவாக்கி, உணர்வோடு கலந்து, உயிராக எனக்குப் பின்புலமாக விளங்கும் ஆண்களின் (அப்பா, தலைவன், மகன்) அன்பியலை எழுத்து வடிவமாக்க நான் கொண்ட முனைப்பு இது’ என்று கூறியுள்ளார்.
148 பக்கம் கொண்ட இந்நூல் மூன்று பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. தன்னைப் பெற்றெடுத்து வளர்த்துத் தான் இந்த நிலைக்கு வரக் காரணமாக இருந்த தன் அப்பாவைக் குறித்து முதல் பகுதியில் பேசுகிறார். அப்பாவின் செயல்கள், அவரது சிறப்புகள் போன்றவற்றை இக்கவிதைகள் வெளிப்படுத்துகின்றன. இப்பகுதியில் அமைந்துள்ள முதல் கவிதையே அருமையாக உள்ளது. பொதுவாகப் பெண்களுக்கு அப்பாவின் மீது அளவு கடந்த அன்பு இருக்கும். ஆனால் இதனை இவருடைய எழுத்தில் படிக்கும் போது மனம் லயிக்கிறது நான் மீசை பிடித்து
விளையாடிய
முதல் ஆண்
அப்பா
என்று கூறியிருப்பது நம்மைச் சிறுபருவத்திற்கு அழைத்துச் செல்கிறது. இவருடைய கவிதைகள் சுருக்கமான சொல்லாடல்களாக இருக்கின்றன. ஆனால் படிப்பவரை நிறைய யோசிக்க வைக்கின்றன. குழந்தை பிறக்கும் போது பெற்றோர் ஆனந்தக் கண்ணீர் வடிப்பர். பெண் குழந்தை வளர வளரப் பெற்றோருக்குப் பொறுப்புகள் வந்துவிடுகின்றன. அப்படி வளர்த்த பெற்றோரின் அன்பை, பொறுப்பை அழகான சொற்களால் மரியாதை செய்கிறார் கவிஞர்.
தன் தலைவன் (கணவன்) எனச் சங்கப் பெண்பாற் புலவர்கள் கூறியது போன்றே இவரும் தலைவன் எனப் பதிவு செய்துள்ளார். இவ்வரிசையில் 96 கவிதைகள் அமைந்துள்ளன. இக்கவிதைகள் மூலம் கவிஞருக்கும் தலைவனுக்கும் இடையேயுள்ள காதல், தாம்பத்தியம் நம்பிக்கை, தனிமை, துன்பம், இன்பம், கோபம், தாபம் எனப் பலவற்றைத் தெரிந்து கொள்ள முடிகிறது. தன் தலைவன் ஆழ்ந்த காதலையும் நம்பிக்கையையும் இன்பத்தையும் கொடுப்பவராக இருப்பதைப் பல்வேறு கவிதைகளில் சிறப்பாகப் பதிவு செய்துள்ளார்.
திருமணம் முடிந்த பின்னர்த் தனக்கு ஏற்பட்ட உள்ளக்கிளர்சியைப் பின்வருமாறு கூறியுள்ளார்.
இன்பமும் கண்ணீரும்
எனைச் சூழ்ந்திருக்க
என் கைப்பிடித்து
இனி உனக்கானவன்
நான் என்றாய்
முதன்முதலாய்
இதயத் துடிப்பின்
ஓசை உணர்ந்தேன்
என் உயிருடன்
என்று சொல்வதின் உணர்வைப் படிப்பவர்கள் விளங்கிக் கொள்ள முடியும். தனக்கு எல்லாமுமாகத் தலைவன் இருக்கிறான் என்றும் ஆனால் சிலநேரங்களில் அவருடைய மௌனம் யோசிக்க வைப்பதாகவும் கூறி நம்மை யோசிக்க வைக்கிறார் கவிஞர். சில கவிதைகளைப் படிக்கும் போது வாய்விட்டுச் சிரிக்கவும் தோன்றுகின்றது. கவிஞர் அகத்துறை இலக்கணமான ’ நோக்குவ எல்லாம் அவையே போறல்’ என்பதைப் படித்தவராதலால் இவருக்குப் பார்க்கும் இடங்களில் எல்லாம் தன் தலைவனே தெரிவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
இவருடைய கவிதைகள் தொடக்கத்தில் இயல்பாக அமைகிறது. இறுதியில் அவர் கொடுக்கும் சொல் தேர்வு நமக்கு வியப்பதைத் தருவதாக உள்ளது. களவு காமம் படிப்பு சார்ந்த சொல்லாடல் இத்தொகுப்பில் காணப்படுகின்றன. உணர்வின் புணர்வின் உரசலை இத்தொகுப்பிலுள்ள சில கவிதைகள் நமக்குச் சொல்லிக் காட்டுகின்றன. சங்கப் பாடல்களில் உள்ள சில சொற்கள் தொடர்கள் இவரது கவிதைகளில் அதிகமாக இடம் பெற்றுள்ளன. யோசிக்கக் கூடஇடம் தராமல் குறிப்பால் உணர்ந்து தன் ஆசையை நிறைவேற்றும் தன் தலைவனின் அன்பை இதற்கு மேல் ஒருவர் எப்படிச் சொல்ல முடியும். இதோ
எனக்கான
தேவையை
எண்ணி முடிப்பதற்குள்
தேவையே
முடிந்திருக்கும்
உன்னால்
அனைத்தும் முடியும் என அவருடைய நம்பிக்கையைப் பின்வருமாறு கூறுகிறார்.
அந்த
இதயக் கருவறை என்னை
முன்னூறு இல்லை
மூச்சு உள்ளவரை
சுமக்கும் கணம் உணராமல்
என்கிறார்.
இதில் உள்ள பல கவிதைகள் சிலேடை, குறியீடு, படிமம் போன்றவற்றைக் கொண்டனவாக இருக்கின்றன. இந்நூலின் வழி கவிஞர் தலைவர் இருவருக்கும் இடையேயான ஆழ்ந்த காதலைச் சொல்வதாக உள்ளன. ஓதற் பிரிவு, பொருள்வயிற் பிரிவு, தூதிற் பிரிவு என நம் இலக்கணங்கள் தலைவனின் பிரிவைச் சொல்கின்றன. அதேபோன்று கவிஞர் காத்திருப்பதால் தன் ஏக்கத்தைக் கவிதையாக வடித்துள்ளார். இத்தொகுப்பிலுள்ள கவிதைகள் பூடகமான சொல்லாடல்கள், எளிமையான சொல்லாடல்கள், அணுக்கமான சொல்லாடல்கள் எனப் பல நிலைகளைக் கூறுவனவாக இக்கவிதைகள் நம்முள் பயணம் செய்கின்றன.
சில கவிதைகள் நம் உணர்வுகளை உரசிப் பார்க்கின்றன. கவிஞர் தன் வாழ்க்கையைத் திறந்து வைக்கின்ற கவிதைகளும் இடம்பெற்றுள்ளன. வாழ்க்கையை விருதாகத் தந்த தன் தலைவனுக்கு அன்பை முன்மொழியும் விதம் அருமை. ஆசைகளை நவீனச் சொற்கள் கொண்டு வெளிப்படுத்தும் விதம் புதுமையானதாக உள்ளது. இவ்வாறு தன் இன்ப வாழ்க்கையை வேண்டிய இடத்தில் எல்லாம் சொல்லிச் செல்கிறார் கவிஞர். சில கவிதைகள் எதிர்மறையாகவும் உள்ளன. அதனைத் தவிர்த்திருக்கலாம்.
இனி நாளைவரைக்
காத்திரு
சாம்பலைக்
கரைப்பதற்கு
உதிரன் என்ற தலைப்பில் கவிஞர் 16 கவிதைகளை எழுதியுள்ளார். தன்னிலிருந்து பிறந்த மழலை குறித்த நினைவுச்சாரலை ஏற்படுத்திச் செல்கிறது இப்பகுதியில் உள்ள கவிதைகள். அழுகை கூட அழகானது எனக் குறிப்பிட்டுள்ளார். தாய்மையின் உச்சத்தை உணர்த்துகின்றன கவிஞரது கவிகள்.
நின் சிரம் முகர்ந்து
முத்தமிட்ட நாள்
முகர்தலின் முனைப்பை
நான் உணர்ந்த நாள் (பக்கம் 134)
பெற்றோர்கள் குழந்தையிடம் தோற்று இன்பம் காண்பார்கள். அதனையும் கவிஞர் தன் படைப்பில் வெளிப்படுத்தியுள்ளார். குழந்தையோடு குழந்தையாகக் கவிஞர் மாறிப் போய் உள்ளார்.
கட்டி அணைத்து
உன் கரம் பிணைத்திட
அணைப்பின்
அனுசரிப்பில்
சிலநேரம்
மறக்கிறேன்
யார் தாய்
யார் சேய்
என்று (பக்கம் 136)
இவரது தாய்மையின் ஆழத்தை இக்கவிதைகள் வெளிப்படுத்துகின்றன. ஒரு கவிதை குழந்தையின் மென்மையான ஸ்பரிசம் கூட ஆயுதம் ஆவதைப் பகர்கின்றன. உயிர் மெய் என்னும் கவிதை அழகாக உள்ளது. உயிரோடென்ன/ என் மெய்யோடும்/ கலந்தவன் நீ (பக்கம் 143) என்று பதிவு செய்துள்ளார். இவரது கவிதைப்பூக்கள் மேலும் மலரட்டும் என வாழ்த்துகிறேன்.