- ‘பாலம்’ சஹஸ்
- சந்திப்பு: பாலசரவணன்
வணக்கம். புத்தகம் பேசுது வழியே உங்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சி. பாலம் வாசகர் சந்திப்பு என்கிற அடையாளத்துடன் நீங்கள் கடந்த ஏழாண்டுகளாக வாரம் ஒரு முறை, இடைவெளி இன்றி நடத்தும் கூட்டங்கள் அனைவருக்கும் பிரமிப்பை உருவாக்கும் ஒன்று. அதே போல் தரமான நூல்கள் மட்டும் நிறைந்த ஒரு புத்தக விற்பனை நிலையத்தை பாலம் என்கிற பெயரில் கடந்த பதினைந்து ஆண்டுகளாக நடத்தி வருகிறீர்கள். நீங்கள் ஒரு சிறந்த வாசகர் என்பதும் தெரியும். பாலம் தி புக் மீட் தொடங்கிப் பதினைந்து ஆண்டுகள் ஆகின்றன. உங்களுக்கு ஒரு புத்தகக்கடை வைக்க வேண்டும் என்று ஏன் தோன்றியது? இதுவரையில் அதன் மூலம் பல ஏற்ற, இறக்கங்களைச் சந்தித்திருப்பீர்கள். பல புதிய வாசகர்களைச் சந்தித்திருப்பீர்கள். அந்த அனுபவங்களை எல்லாம். கூறுங்களேன்.
ஒரு புத்தகக் கடை துவங்க வேண்டும் என்பது எனது நீண்ட நாள் கனவு. நான்இன்சூரன்ஸ் துறையில் பணிபுரிந்த காலத்தில் அவ்வப்போது சில நல்ல புத்தகங்களை வருவித்துத் தோழர்களிடம் விற்பனை செய்வேன். ஆனால் என்னால் ஒரு கடையைத் தொடங்கி நடத்த முடியும் என்றுஅப்போது நினைக்கவில்லை நான் 2003ம் வருடம் என் பணியில் இருந்து விருப்ப ஓய்வு பெற்றேன். அன்றைய சூழலில் பொது இன்சூரன்ஸ் துறையில் தனியார் துறையை அனுமதிக்கும் அரசின் முடிவு தொடங்கியிருந்தது. தொடர்ந்து எனக்கு இருந்த மனநிலையில் புதிய சூழலில் பணியாற்றுவதில் சிரமங்கள் இருப்பதாக உணர்ந்தேன். குடும்பத்தில் அப்போது என் ஒருவனது வருமானம் தான் . அப்போது இன்சூரன்ஸ் துறை எங்களுக்கான ஒரு விருப்ப ஓய்வு திட்டத்தை அறிவித்திருந்தது. முதலில் பணியாற்றிய காலத்தைக் கணக்கிட்டு ஓர் ஓய்வூதியம் வழங்கப்படும் என்றும், அப்போது பெற்றுக் கொண்டிருந்த ஊதியம் நான்கு வருடங்களுக்கு ஒட்டுமொத்தமாக முன்கூட்டியே வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. என் இணையரும் சம்மதித்தார். பொதுவாக கணவன் ஒரு வேலையில் இருந்து ஓய்வு பெறுவதை யாரும் விரும்ப மாட்டார்கள். அதுவும், அது வீட்டில் குழந்தைகள் பள்ளியில் கல்வி பயின்று கொண்டிருந்த காலம்.
கட்சியிலும் ஆர்வத்துடன் அப்போது பணியாற்றிக் கொண்டிருந்தேன். இன்சூரன்ஸ் துறையில் முகவராக வேண்டும் என்ற எண்ணத்தில் ஆயுள் காப்பீட்டு நிறுவனம் நடத்தும் முகவர்களுக்கான பயிற்சி வகுப்பில் முதல் நாள் சென்று அமர்ந்தேன். சில மணி நேரங்களிலேயே வெளியே வந்துவிட்டேன். என்னால் இதையெல்லாம் செய்ய முடியும் என்ற மனநிலை இல்லை. 2004 ஆம் ஆண்டு இறுதியில் என்னைப்போலவே திரு பாலசுப்பிரமணியம் ஒரு புத்தகக் கடை நடத்த வேண்டும் என்று நினைக்கிறார் என நான் அறிந்தேன். இவர் எழுத்தாளர் தமிழ்ச்செல்வனின் இளைய சகோதரர். நான் அவரை அணுகினேன். அவர் இருவரும் சேர்ந்து நடத்தலாம் என்பதை மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்டார். இதன் பின்னணியில் தமிழ்ச்செல்வன் தந்த உற்சாகமான ஆதரவு இருந்தது. கடைக்கான பல்வேறு பெயர்களைப் பரிசீலனை செய்தபின் அவர் ஆலோசனையின் பேரில் பாலம் என்ற பெயரை இறுதி செய்தோம். நாங்கள் 2005 ஆம் ஆண்டு பிப்ரவரி 27ஆம் நாள் பாலம் புத்தக நிலையத்தைத் தொடங்கினோம். முதலில் தொடங்கிய கடை சற்றுச் சிறியது. ஆனால் இருபுறமும் கண்ணாடிகள் பதிக்கப்பட்டிருக்கும். வெளியிலிருந்து பார்க்கும் பொழுது புத்தகங்கள் அடுக்கப்பட்டிருப்பது தெரியும். துவக்க விழாவிற்குப் பல எழுத்தாளர்கள்,ஆளுமைகள் வந்திருந்தார்கள். குறிப்பாக பாரதி புத்தகாலயத்தின் சார்பில் தோழர் ஜி ராமகிருஷ்ணன், காவல்துறை உயர் அதிகாரியாக இருந்த திலகவதி, பவா செல்லத்துரை, கவிஞர் நா.முத்துக்குமார், ஆதவன் தீட்சண்யா ஆகியோர் கலந்து கொண்டார்கள். கடை செயல்படத் துவங்கியதும் வாசகர்கள் கொஞ்சம் கொஞ்சமாக வரத் துவங்கினார்கள். இதில் ஒன்றை முக்கியமாகக் குறிப்பிட வேண்டும். இந்த கடை தொடங்குவதற்குப் பின்னணியில் இருந்து எனக்கு ஊக்கமும் உற்சாகமும் கொடுத்தவர் பாரதி புத்தகாலயத்தின் தோழர் நாகராஜன். இன்றளவும் அவரது தோழமையும், அன்பும், அக்கறையும் தொடர்கின்றன. அது போல் தோழர் சிராஜின் தோழமையும், ஒத்துழைப்பும் சிறப்பானது. புத்தகங்களைக் கேட்டதும் மறுநாளே அனுப்பி வைப்பார். வேறு எந்தப் பதிப்பகங்கள் வெளியிடும் அரிய நூல்கள் குறித்தும் அவரைத்தான் கேட்போம். உடனே அது எந்தப் பதிப்பகம் என்று சொல்வதோடு முடிந்தால் வாங்கி அனுப்பியும் வைப்பார். பாலம் தி புக் மீட் என்ற பெயரோடு அது பாரதி புத்தகாலயத்தின் அங்கீகரிக்கப்பட்ட கிளையாகவே இன்றுவரை செயல்படுகிறது.
பாரதி புத்தகாலயம் வெளியிடும் நூல்களைத் தவிர இங்கு பல்வேறு முன்னணிப் பதிப்பகங்களின் நூல்கள், சிறுபதிப்பகங்களின் மிகச்சிறப்பான வெளியீடுகள், சிற்றிதழ்கள் ஆகியவை விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. கிட்டத்தட்ட கிளையின் துவக்கத்திலிருந்தே அதில் பணியாளராக செயல்பட்டு வரும் முருகன் பற்றிக் குறிப்பிடாமல் இருக்க முடியாது. பாலம் என்றாலே என்னை தெரிந்தவர்களை விட முருகனைத் தெரிந்தவர்கள்தான் அதிகம்.
எங்களுக்கும் பிற பதிப்பகங்களுக்கும் உள்ள உறவை இங்கு குறிப்பிட விரும்புகிறேன். அவர்களது நம்பிக்கையும், அன்பும் அதைத் தொடர்ந்து இணக்கமும் இருந்த காரணத்தினால்தான் ஒரு சிறப்பான புத்தக விற்பனை நிலையத்தை எங்களால் நடத்த முடிகிறது. எதை விற்பனைக்கு வைப்பது, எதை வைக்கக் கூடாது என்பதில் தெளிவாக இருக்கிறோம்.
இங்கே வரும் வாசகர்களின் தன்மை குறித்துக் கூற முடியுமா? மேலும் இது லாபகரமாக இயங்குகிறதா? இத்தனை ஆண்டுகளில் சில வித்யாசமான அனுபவங்கள் கிடைத்திருக்கும். இவற்றைப் பற்றியும் கூறுங்கள்.
இங்கு எத்தகைய நூல்கள் கிடைக்கும் என்பதை அறிந்தே வாசகர்கள் வருகிறார்கள். இளைஞர்கள், கல்லூரி மாணவர்கள் எனப் பலதரப்பட்ட வாசகர்கள் இங்கே வருகிறார்கள். எத்தகைய நூல்களை வாங்குவது எனப் பொருத்தமான நூல்களைப்பரிந்துரை
செய்வதுமுண்டு. சில வாசகர்கள் பொறுமையாக நேரத்தைச் செலவழித்துத் தங்களுக்குப் பிடித்த தரமான நூல்களை தேடித்தேடித் தேர்வு செய்வார்கள். அப்படிப்பட்ட மறக்க முடியாத ஒரு வாசகரைப் பற்றி நான் முகநூலில் எழுதியிருந்தேன். அதைச் சற்று சுருக்கமாகப் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்
மிக எளிமையான தோற்றத்துடன் இருந்த அவருக்கு வயது 70க்கு மேல் இருக்கலாம். அவர் பாலம் புத்தக நிலையத்தின் வெகு நாள் வாசகர். அவர் புளி மண்டி நடத்தி வந்தார். ஆனால் அவருக்குப் புத்தகங்கள் மீது தீவிர ஈடுபாடு. கடைக்கு வந்து புத்தகங்களை வெகு நேரம் அலசி ஆராய்ந்து நேர்த்தியுடன் நூல்களைத் தேர்வு செய்வார். தால்ஸ்தோய் , தஸ்தவேய்ஸ்கி, புதுமைப்பித்தன், சுந்தர ராமசாமி, இக்கால எழுத்தாளர் ஜோடி குரூஸ் வரை படித்து விடுவார். அவர் ஒரு சிறு விபத்தில் பாதிக்கப்பட்டு வீட்டில் ஒய்விலிருந்தார். அவரை சில நாட்கள் கழித்துத் தொடர்பு கொள்ள முயன்றேன். தொலைபேசியை எடுத்தவரிடம் அவர் இருக்கிறாரா எனக் கேட்டேன். இறந்து விட்டார் என்று பேசியவர் கூறினார். அதிர்ச்சியில் உறைந்தேன். எப்போது என்ற கேள்விக்கு இன்று காலை 11 மணி என்று பதில் வந்தது. மேலும் அதிர்ச்சி. சேலத்தில் உள்ள அவரது வீட்டிற்குச் சென்று மாலை அணிவித்து எனக்கும் அவருக்குமான உறவை அவரது உறவினர்களிடம் கூறினேன். ஒரு பெண்மணி அவருக்கு ஒரு புத்தகத்தை எடுத்து வந்து அஞ்சலி செலுத்தியிருக்கலாமே என்றார். அது சரிதான் எனத் தோன்றியது. யாரோ ஓர் உறவினர் மாடியில் உள்ள அவரது நூலகத்திலிருந்து ஒரு புத்தகத்தை எடுத்து வந்து அவரது கைகளுக்குள் வைக்கச் சொன்னார். மரணம் பிரித்த ஒரு வாசகரின் உறவு தந்த சோகம். கனத்த இதயத்துடன் வெளியில் வந்தேன்.
இன்னும் இதுபோலப் பல மிகச்சிறந்த வாசகர்களையும் பாலத்தின் வளர்ச்சியில் அக்கறை கொண்ட நண்பர்களையும் இழந்துவிட்டோம்.
அவர்களில் மிக முக்கியமானவர் தோழர். அசோகன். அவர் வந்தாலே அந்த இடம் களை கட்டிவிடும். அவரைத் தேடி மற்ற தோழர்களும் வந்து விடுவார்கள். அரசியல் விவாதங்கள் வெளித் திண்ணையில் பரபரப்பாக நடக்கும். அவர் ஓர் எழுத்தாளர். முற்போக்கு எழுத்தாளர் சங்கத்திலும் , மார்க்சிஸ்ட் கட்சியிலும் செயல்பட்டு வந்தார். தீக்கதிரில் தொடர்ந்துகட்டுரைகள் எழுதுவார். அத்துடன் ஒரு நல்ல வாசகர். அவரை இனங்கண்டு பாரதி புத்தகாலயத்திற்கு அறிமுகம் செய்து வைத்தேன். மிகக் குறைந்த காலத்தில் ஒரு நூலை மொழி பெயர்த்து விடுவார். அவர் மொழிபெயர்த்த அமெரிக்கப் பேரரசின் ரகசிய வரலாறு எனும் நூலுக்கு அவர் நல்லி குப்புசாமி அறக்கட்டளையின் பரிசு பெற்றார். அவரது அகால மரணம் இன்னும் நெஞ்சை விட்டு அகலவில்லை. இங்கு வரும் வாசகர்கள் குறித்து ஒரு முக்கியக் கருத்தைக் குறிப்பிட்டாக வேண்டும். அவர்கள் படித்த நூல்களை பாலம் வாசகர் சந்திப்பில் அறிமுகப்படுத்தச் செய்வது அவர்களுக்கு மிகுந்த தன்னம்பிக்கையும் , தயக்கமின்றிப் பொது வெளியில் கருத்துகளை முன் வைக்கக் கூடிய திறனையும் உருவாக்கியிருப்பது கண்கூடு.
இங்கு நிகழ்ந்த சில வித்தியாசமான சம்பவங்களைக் குறிப்பிட எண்ணுகிறேன். ஒரு முறை ஒருவர் கடையில் நூல்களைத் திருடிப் பிடிபட்டார். அவர் சில விலை கூடுதலான புத்தகங்களுடன் இம்முறை பிடிபட்டார். நாங்கள் விசாரித்ததில் இதுதான் முதல்முறை என்று திரும்பத் திரும்பக் கூறினார்.எங்களுக்கு அதில் நம்பிக்கை ஏற்படவில்லை எனவே போலீசில் புகார் செய்தோம். வழக்குப் பதிவு செய்யப்பட்டு, ஒரு பழைய புத்தகக் கடையிலிருந்து ஒரளவு புத்தகங்கள் மீட்கப்பட்டன. வழக்கு நடந்ததால் அவை போலீசார் வசம் சென்று விட்டன. நான் அவர்கள் அறிவுறுத்தலின் பேரில் வழக்கை வாபஸ் செய்து கொண்டபின் ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு புத்தகங்கள் கிடைத்தன.
இதே போல் இன்னோர் அனுபவம். ஒரு முறை நல்ல வெள்ளை வேட்டியும் சட்டையும் அணிந்த ஒருவர் புத்தகக் கடைக்கு வந்தார். அவர் மீதும் சந்தேகக் கண் இருந்தது. அவர் எடுத்த புத்தகங்களைப் பையில் மறைத்து வைத்திருந்தார். அவரிடமும் விசாரித்ததில் பலமுறை புத்தகங்களை எடுத்ததைக் கடைசியில் ஒத்துக் கொண்டார்.
இதுபோல் கடந்த மாதத்தில் ஒரு சம்பவம் நிகழ்ந்தது, இந்த முறை திருடியவர் ஒரு கௌரவமான பணியில் இருப்பவர். அவர் அடிக்கடி கடைக்கு வருவார். புத்தகங்கள் ஒன்று அல்லது இரண்டை மட்டும் குறைந்த விலையில் வாங்கிச் செல்வார். ஆனால் அவர் செலவழிக்கும் நேரம் கூடுதலாக இருக்கும். அவர் மீதும் சந்தேகம் இருந்தது. கடையில் இருக்கும் வெப் கேமராவில் இந்த முறை அவர் புத்தகங்களை எடுத்து மறைத்து வைப்பது பதிவாகிவிட்டது. அவரை விசாரித்ததில் பலமுறை அவர் புத்தகங்களை எடுத்துச் சென்றது தெரியவந்தது. அவர் திருடிய கணக்கின் அடிப்படையில் ஒரு தொகை கேட்டோம். அந்தத் தொகையைக் கொடுக்க ஒருவர் வந்தார்.
அவர் தன்னைப் பற்றி ஒரு கதையைக் கூறினார். தான் கல்லூரியில் படித்தபோது ஒரு விலை உயர்ந்த நூலைத் திருடி விட்டதாகவும், பிறகு கடவுள் அவரிடம் அதைத் தவறு என்று கூறியதால் எடுத்த இடத்திலேயே வைத்து விட்டேன் என்றார். இது எப்படி இருக்கிறது பாருங்கள். பிறகு ஒருதொகையைக் கொடுத்து விட்டு, திருடியவர் தான் திருடிய புத்தகத்தைக் காட்டி இதை நான் இப்போது எடுத்துக் கொள்ளலாமா என்று கேட்டார். வேண்டாம் இதைப் பார்த்தால் இங்கு நடந்த சம்பவம் தான் உங்களுக்கு நினைவுக்கு வரும்; எனவே வேறு ஏதாவது ஒரு புத்தகத்தை எடுத்துக் கொள்ளும்படிக் கூறினேன். அவர் மெல்லிய கோபத்துடன் வேண்டாம் என்று கூறி வந்திருந்தவரோடு வெளியேறினார். இந்தப் பதினைந்து ஆண்டுகளில் இதுபோல் சொல்வதற்கு ஏராளமானஅனுபவங்கள் உள்ளன.
பொதுவாக வாசகர் என்று சொன்னாலே அது பெரியவர்களை குறிக்கும் சொல்லாகத்தான் இந்தப்படுகிறது. ஆனால் குழந்தைகளும் வாசிக்க வேண்டிய தேவை இருக்கிறது. அந்தவகையில் ஆங்கிலத்தில் குழந்தைகள் வாசிக்கக்கூடிய நூல்கள் அதற்கென்றே சிறப்பாக வடிவமைக்கப்பட்டு ஏராளமாக வருகின்றன ஒரு புத்தகத்தை பார்த்தவுடன் அந்த குழந்தை படிக்கத் தூண்டும் வகையில் அதனுடைய வடிவமைப்பும் தயாரிப்பும் இருக்கிறது. தமிழில் இது போன்றுகுழந்தைகளைக் கவரும் நூல்களைத் தயாரித்தால் அதற்கு வரவேற்பிருக்காதா? ஒரு புத்தக விற்பனையாளராகவும், செயல்பாட்டாளராகவும் என்ன நினைக்கிறீர்கள்?
புக்ஸ் ஃபார் சில்ரன் போன்ற பதிப்பகங்கள் மூலமாக நீங்கள் கூறிய வகையிலான ஒரு சிலபடக் கதைகள் அடங்கிய நூல்கள் உட்பட குழந்தைகளுக்கான ஏராளமான பல நூல்கள் வெளிவந்துள்ளன. நீங்கள் குறிப்பிட்ட ஆங்கில நூல்களின் வடிவ நேர்த்தி தமிழில் வெளிவரக்கூடிய நூல்களில் இல்லை என்பது உண்மைதான். ஆனால் ஆங்கில நூல்களைப் படிக்க கூடிய குழந்தைகள் எவர்? ஓரளவு வசதியான குடும்பப் பின்னணி கொண்டவர்கள். பெற்றோர்கள் அந்த குழந்தைகளுக்கு இத்தகைய நூல்களை வாங்கிக் கொடுக்க இயலும். தற்போது பொதுவாக இத்தகைய பெற்றோர்கள் தங்களின் குழந்தைகள் தமிழில் படிக்க வேண்டும் என்ற ஆர்வத்தைக் காட்டுவதில்லை. தமிழில் இருக்கும் புத்தகங்களைக் காட்டினால் ஆங்கிலத்தில் இல்லையா என்று கேட்கிறார்கள். மிகச் சிறப்பான வடிவமைப்புடன், அழகான தாள்களில் குழந்தைகளுக்கான நூல்களின் விலை இயல்பாகவே கூடுதலாக இருக்கும். எனவே இவை போன்ற நூல்களை தமிழில் கொண்டு வருவதில் சிரமங்கள் உள்ளன. பொதுவாகக் குழந்தைகள் வாசிக்க வேண்டும் என்றால் வீட்டில் பெற்றோர்களும் வாசிப்பவர்களாக இருக்க வேண்டும். அதற்கு மேலும் குழந்தைகளுக்கு நூல்களை வாங்கிக் கொடுப்பவர்களாக இருக்க வேண்டும். அப்படியே வாங்கிக் கொடுத்தாலும் குழந்தைகள் வாசிக்கும்ஆர்வத்தைத் தூண்ட வேண்டும். இப்படிப் பல பிரச்சனைகள் இருக்கின்றன.
குழந்தைகளை வாசிக்கத்தூண்டுவதற்கான முயற்சி ஒரு இயக்கமாகப் பள்ளிகளிலிருந்து தொடங்க வேண்டும் என்று நினைக்கிறேன். இவையெல்லாம் நூல் விற்பனையாளர் என்கிற என் அனுபவத்திலிருந்து கூறுபவை
நீங்கள் ஒரு சிறந்த வாசகர் என்பதும் தெரியும். கடந்த ஐந்து தசாப்தங்களுக்கும் மேலாக வாசிப்பு என்பது உங்களிடம் எவ்வகையிலான மாற்றங்களை உருவாக்கியுள்ளது. அது உங்களுக்கு எவ்வகையில் அர்த்தமுடையதாக இருக்கிறது?
நான் ஒரு சிறந்த வாசகனா என்பது தெரியாது. ஆனால் வழக்கமான முறையில் இருந்து சற்று மாறுபட்ட வாசகன் என்று வேண்டுமானால் கூறலாம். என்னைப் பொறுத்தவரையில் வாசிப்பு என்பது அக உலகம், புற உலகம் இவற்றுக்கிடையிலான இடைக் கணிப்பு எனலாம். நான் வாசிக்கும் நூல்கள் ஒவ்வொரு நாளும் எனது நேற்றைய புரிதலை இன்று மேலும் விசாலப்படுத்துகின்றன. அவை புதிய தேடல்களுக்கான வாசல்களை என்னுள் திறக்கின்றன. நான் அடிப்படையில் நாவல், சிறுகதை, வாழ்க்கை வரலாறு, அறிவியல், வரலாறு, பொருளியல், மானிடவியல் போன்று பலதரப்பட்ட நூல்களை தமிழிலும், ஆங்கிலத்திலும் வாசிக்கும் பழக்கமுடையவன்.
குறிப்பிட்ட ஒரு காலத்திற்குப் பின் நான் வாசித்த நூல்கள் சமூக நிகழ்வுகளை வாசிப்புடன் இணைத்துப் பார்க்க எனக்கு உதவியது எனலாம்.இங்கு சமீபத்தில் எனது வாசிப்பின் பின்புலத்தில் உருவான சிந்தனையின் தொடர்ச்சியாக உருவான எண்ணப் பதிவு ஒன்றை உதாரணமாகக் குறிப்பிட விரும்புகிறேன். கடந்த மார்ச் மாதம் நான்கு மணி நேர அவகாசம் மட்டும் கொடுத்து ஒரு முழு அடைப்பைப் பிரதமர் அறிவித்தார். நாடே முடங்கியது. கிட்டத்தட்ட அனைத்து வாகனங்களும் சாலைகளில் ஓடுவது நின்று போனது. பெருநகரங்களிலிருந்து புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் தாங்கள் வாழ்ந்த கிராமங்களை நோக்கி உணவின்றி, குடிக்க நீரின்றி சுட்டெரிக்கும் வெயிலில் ஆயிரக்கணக்கான கிலோமீட்டர்கள் நடந்தனர். இதில் இறந்தவர் ஏராளம். அனைத்து வாகனங்களும் ஓடாத நிலையில் பெருந்துயருடன் வெறுங்கால்களில் பயணித்த அந்தக் கூட்டத்தைத் துயரோடு தொலைக்காட்சியில் பார்த்துக் கொண்டிருந்தபோது திடீரென்று கடந்த கால வரலாற்றை நோக்கி எண்ணங்கள் தாவின. சக்கரங்கள் நினைவுக்கு வந்தன.
சக்கரங்கள் கண்டுபிடிக்கப்பட்டது ஒரு மிகப்பெரிய புரட்சி. மக்கள் குறுகிய கால இடைவெளியில் இடம் விட்டு இடம் பெயர அது வழிவகுத்தது . அதைக் கண்டு பிடித்தது யார்? தெரியாது. நெருப்பின் பயனைக் கண்டு பிடித்ததும், சக்கரங்களைக் கண்டு பிடித்ததும் வரலாற்றைப் புரட்டிப் போட்ட நிகழ்வுகளை படித்திருக்கிறேன். முதலில் மெசபடோமியாவில்தான் களிமண்ணால் பானை வனையச் சக்கரமும், நடுவில் நிலையான அச்சும் கண்டுபிடிக்கப்பட்டன. பின்னர்தான்,வாகனங்களில் ஓடும் வகையில் அவை பொருத்தப்பட்டன. மனித சமூகத்தின் அனைத்துக் கண்டுபிடிப்புகளும் உழைப்பினால் உருவானவைதான் என்பதும், அவற்றின் பயன்கள் சமூகத்திற்கே சொந்தமாக வேண்டும் என்கிறார் மார்க்ஸ்.
கோடிக்கணக்கான புலம் பெயர் தொழிலாளர்கள் நிறைந்த ஒரு ஜனநாயக நாட்டில் வரலாற்றுப் பின்னணியில், மனித உழைப்பில் உருவான இந்தச் சக்கரங்கள் பொருத்திய வாகனங்கள் மூலம் பயணம் செய்யும் வாய்ப்புகள் முற்றிலுமாக இந்த மக்களுக்கு மறுக்கப்பட்டதை மனது எண்ணிப் பார்த்தது. இது அரசின் தவறான ஓர் அராஜகமான முடிவு மட்டுமல்ல. அவர்களை வெறுங் கால்களுடன் வெகுதூரம் நடக்க வைத்தது லட்சக்கணக்கான உழைப்பாளி மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி. மனித உழைப்பில் உருவான சக்கரங்கள் தோன்றிய வரலாறு, கோவிட் கொள்ளை நோய், மக்களின் கொடுந்துயர் இவற்றுக்கிடையியலான தொடர்பு சட்டென இவ்வாறுதான் மனதில் மின்னலெனத் தோன்றி மறைந்தது. இது போலப் பலவற்றை ஒன்றுடன் ஒன்று அக்கணத்தில் இணைத்துப் பார்க்கும் பார்வையை வாசிப்புதான் உருவாக்குகிறது என்று நினைக்கிறேன்.
அடுத்ததாக ஒன்றைக் கூற விரும்புகிறேன். நாம் குழந்தைப் பருவத்தில் இருந்த போது நம் உடலில் இருந்த அந்தச் செல்கள் இப்போது இல்லை. ஆனால் நாம் அப்படியே இருக்கிறோம். எண்ணங்களும் அப்படித்தான். செல்களைப் போல வயது கூடக்கூட அவையும் மாறிக் கொண்டே இருக்கின்றன. அவ்வகையில் ஒரு வாசகருடைய வாசிப்பும் தொடக்கத்தில் இருப்பது போல் இல்லாமல் மாறிக்கொண்டே இருக்கிறது மாறிக் கொண்டிருக்கும் அவரது வாசிப்பின் தன்மையைப் பொறுத்து அவரது சமூகம் சார்ந்த மதிப்பீடுகளும், தன்னைப் பற்றிய மதிப்பீடுகளும், உலகப் பார்வையும் மாறுதல் அடைகின்றன. காலம் சிந்தனையில் அவரைப் புதிய மனிதராக அவர் அறியாமலேயே மாற்றிக் கொண்டே இருக்கிறது. எந்த ஒருவரும் தன்னைப் பாலிய காலச் சிறுமியாக அல்லது சிறுவனாக எப்போதும் உள்ளத்தால் பாவித்துக் கொள்ளும் அதே நேரம் சிந்தனையிலும், எண்ணத்திலும், அறிவிலும் தான் பால்ய கால மனிதர் அல்ல என்பதையும் உணர்ந்தே இருக்கிறார். இரு நிலையில் இருக்கும் உள்ளத்தின் இந்தப் பிரதிபலிப்பின் பின்னணியில் வாசிப்பு நிகழ்த்தும் ரசவாதத்தை முழுக்கவும் சொற்களில் விளக்குவது கடினம். நான் எனது வாசிப்பை இந்தப் பின்னணியில் தான் புரிந்து கொள்கிறேன்.
உங்களுடைய பள்ளி வாழ்க்கை சிறுவயது , பதின்ம வயது வாசிப்பு அனுபவங்கள் எத்தகையதாக இருந்தன?
எனக்கு நினைவு தெரிந்து பத்து வயதிற்குள்ளாக நான் சில இதழ்களையும், சில நூல்களையும் வாசிக்கத் தொடங்கி விட்டேன். எனக்குத் தெளிவாக நினைவில் இருப்பது ராஜாஜியின் சிறுகதைகளை வாசித்தது. அந்தக் கதைகள் தெளிவாக நினைவில்லாவிட்டாலும் அதில் வரும் சில சம்பவங்கள் மங்கலாக நினைவிலிருக்கின்றன. சமீபத்தில் தான் அதில் வாசித்த அவரது சபேசன் காப்பி எனும் கதையைப் படித்தேன். முன்பு படித்தது போல் இருந்தது. புதுமைப்பித்தனுடைய ஒரு சிறுகதையையும் படித்தது நினைவில் உள்ளது. கருப்பு முத்து என்கிற பெயராக இருக்கலாம். மொழிபெயர்ப்பு நாவல். அந்த நாவலை என்னுடைய பதினொன்று அல்லது பன்னிரண்டு வயதில் வாசித்த நினைவிருக்கிறது. அந்த நாவலில் கடலில் மூழ்கி அந்தக் கருப்பு முத்தை எடுத்தவனும், அவனது ஏழ்மையான குடும்பமும், அவனிடமிருந்து அதை எப்படியாவது பறித்து விட வேண்டும் என்று அவனைக் குதிரைகள் மீதமர்ந்து துரத்துகிற கொள்ளைக்காரர்களும் எனக்கு நினைவில் இருக்கிறார்கள். அந்தப் புத்தகம் எதுவென்று அறிய இன்னும் தேடிக் கொண்டிருக்கிறேன்.
பொதுவாக மாணவர்களுக்கு பள்ளிக்கு வெளியே வாசிப்பதற்கான கூடுதல் நேரம் கிடைத்தது என்று தான் கூற வேண்டும், தமிழ்வாணனின் கல்கண்டும், கண்ணன் என்ற சிறுவர் இதழ்களும் பிரபலம். நான் அவற்றை ஆர்வத்துடன் கிடைக்கும் போது படிப்பேன்.
என்னுடைய தந்தை மிகவும் கண்டிப்பானவர். ஆனாலும் நான் ஏதோ ஒரு வகையில் படிக்க வேண்டும்.அதாவது பள்ளிக்கு வெளியே சில விஷயங்களைப் படிப்பது நல்லது என்று நினைத்தாரோ என்னவோ எனக்கு மாதா மாதம் வெளிவரும் இந்திரஜால் காமிக்ஸ் புத்தகத்தை வாங்கிக் கொடுத்தார். அத்துடன் அம்புலிமாமாவும், பின்னால் ஆங்கிலத்தில் வந்த சந்த மாமாவும் வாங்கிக் கொடுத்தார். இந்திரஜால் காமிக்ஸ் பெரும்பாலும் வேதாளன் என்கிற சாசகம் செய்யும் பாத்திரத்தை முன்வைத்துதான் வரும். ஒரு வகையில் மாயவித்தைகள் தவிர்த்த சூப்பர் மேன் போன்ற பாத்திரம். சில சமயம் மாண்ட்ரக்ஸ் எனும் மந்திரவாதியும், பிளாஷ் கார்டன் எனும் கதாபாத்திரமும் உள்ள கதைகள் வரும். ஆனால் என்னைக் கவர்ந்தவை என்னவோ வேதாளன் கதைகள் தாம். அதில் வரும் சித்திரங்கள் காடுகளைப் பற்றி மனதிற்குள் ஒரு பிரமிப்பை உண்டாக்கும். அதே போல இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிக்கையில் டார்சான் கதை, தினத்தந்தி சிந்துபாத் போல தொடராக வரும். டார்சான் மலைப்பாம்பைத் தன் உடலிலிருந்து கத்தியால் அதன் வாயைக் கிழித்து அகற்றுவதும், முதலையின் வாயைக் கையால் கிழிக்கும் சாகசங்களும் சிலிர்ப்பையும், கிளர்ச்சியையும் உருவாக்கும். ஒரு வகையில் இவையெல்லாம் இயற்கை, காடுகள், வன உயிர்கள் மீதான ஈடுபாட்டை எனக்குள் உருவாக்கியதும், அது இன்று வரை தொடர அவையே ஒரு வகையில் தொடக்கம் என்பதும் உண்மை. ஆனால் இதன் நாயகர்கள் வெள்ளையர்களாகவே இருப்பதும், அதற்குப் பின் இருக்கும் இனவெறி அரசியலும் பின்னர்தான் தெரிந்தது. ஆனால் பிற்காலத்தில் இயற்கை வரலாறு குறித்த நூல்கள் மீதான ஆர்வத்தை அவை தூண்டின என்பதும் உண்மை.
என் பதின்ம வயதில் நான் படித்த இதழ்கள் பத்திரிகைகள் பற்றியும் குறிப்பிட வேண்டும் குறிப்பாக வீட்டில் விகடனும், கல்கியும், குமுதமும் வாங்குவார்கள். விகடனில் மணியனின் பயணக் கட்டுரைகள் வரும். அவற்றைப் படிப்பேன். வியட்நாம் போர் நடைபெற்ற காலம். அவர் வட வியட்நாம் வரை சென்று அமெரிக்கப் படைகளுக்கு ஆதரவாக எழுதியதாக நினைவு. மேலும் எந்த நாட்டிற்குப் போனாலும் அங்கு சாப்பிட்ட இட்லி, வடை, சாம்பார், மிளகாய்ப் பொடி, தயிர் சாதம் குறித்துத் தவறாமல் எழுதுவார். பரணீதரன் என்பவர் எழுதிய ஆன்மீகத் தொடரையும் வாசித்துள்ளேன். அத்துடன் ஜெயகாந்தன் கதைகளையும் படித்ததாக நினைவு.
குமுதத்தில் புஷ்பா தங்கதுரை, சுஜாதா கதைகளைப் படிப்பேன். பாக்கியம் ராமஸ்வாமியின் அப்புசாமி, சீதாப்பாட்டி கதைத் தொடரை ஆர்வத்துடன் படிப்பேன். குமுதத்தில் கங்கை எங்கே போகிறாள் நாவல் தொடர்கதையாக வந்தது. அதைத் தொடர்ந்து வாசித்திருக்கிறேன். இக்கால கட்டத்தில் கல்கியில் தொடராக வந்த பொன்னியின் செல்வனைப் பலரும் படித்தார்கள். ஆனால் ஏனோ நான் படிக்கவில்லை. கல்கி இதழில் ர.சு. நல்லபெருமாள் தொடர் ஒன்றை வாசித்தது நினைவில் இருக்கிறது. அதில் அவர் கம்யூனிஸ்டுகளைப் பற்றிக் குறிப்பிட்டிருப்பார். ஒருவன் மிகவும் நேர்மையும், தேசபக்தியும் மிக்கவன். அவன் கம்யூனிஸ்ட் கட்சியில் தன்னை இணைத்துக் கொள்வான். பின்னர் அவனுக்குக் கட்சியைப் பற்றிப் பயங்கரமான பல உண்மைகள் புலப்படும் என எழுதியிருப்பார். கட்சியிலிருந்து விடுவித்துக் கொண்டு வெளியே வர முயல்வான். அப்போது அவனைக் கொன்று விடுவார்கள். இதுதான் கம்யூனிஸ்டுகளைப் பற்றி என் மனதில் முதலில் விழுந்த சித்திரம். இது பின்னர் துக்ளக் போன்ற பத்திரிகைகளை வாசித்த போது இந்த எண்ணங்கள் வலுவடைந்தன. அப்போதே இந்த அனைத்து இதழ்களிலும் வரும் அரசியல் செய்திகள், சினிமா செய்திகள் ஆகியவற்றையும் படித்து விடுவேன். நான் எட்டாம் வகுப்புப் படிக்கும் போது ஓர் ஒவிய ஆசிரியர் சாண்டில்யனின் கடல்புறா கதையைச் சுவாரசியமாகச் சொல்வார். இதனால் குமுதம் பத்திரிக்கையில் சாண்டில்யன் கதைகளைப் படிக்கும் ஆர்வம் ஏற்பட்டது.
நாங்கள் வசித்த மேட்டூர் கெமிக்கல்ஸ் காலனி என்கிற குடியிருப்பில் அங்கிருக்கும் பணியாளர்களுக்காக ஸ்டாஃப் அசோசியேஷன் எனும் கிளப் இருந்தது. அங்கு இருக்கும் ரீடிங் ரூம் என அழைக்கப்படும் இடத்திற்கு மாலை நேரத்தில் சென்றால் நிறையப் பத்திரிக்கைகளை வாசிக்க முடியும். தினத்தந்தி, மாலைமுரசு ஆகியவை மூலம் உள்ளூர், வெளியூர் செய்திகள், அரசியல் செய்திகளை அறிந்து கொள்ள முடிந்தது. மேலும் அங்கு படிப்பதற்கு இல்லஸ்ட்ரேட்டட் வீக்லி, ஸ்பான், டைம், லைஃப் போன்ற பத்திரிக்கைகள் கிடைக்கும். இவற்றை எனக்கிருக்கும் அரைகுறை ஆங்கில அறிவுடன் புரட்டுவேன். இத்துடன் சினிமாவைப் பற்றிச் சில பத்திரிகைகள் வரும். குறிப்பாக ஸ்கிரீன் என்ற பத்திரிக்கை இந்தி சினிமா படங்களைப் பற்றி வரும். அந்தக் காலகட்டத்தில் இந்திப் படப் பாடல்கள் பிரபலம். அதன் வாயிலாக நடிகர்களும் நடிகைகளும் அறிமுகமானார்கள். எனவே தமிழ்ப் படங்களுடன் இந்திப் படங்களைப் பற்றியும் ஆர்வத்துடன் ரசனையோடு பார்ப்பேன். மேலும் ஸ்ரீதரின் சித்ராலயா, பேசும் படம், பொம்மை ஆகியவை படிக்கக் கிடைக்கும். இதில் வரும் கட்டுரைகள், செய்திகள் எனது சினிமா ஆர்வத்தை வளர்த்தன. எனது சினிமா ஈர்ப்பு ,மிக இளம் பருவத்திலேயே ஏனோ தெரியவில்லை என்னை சிவாஜி ரசிகனாக்கியது. அவ்வயதில் பலரையும் கவர்ந்த எம் ஜி ஆர் ஏனோ என்னைக் கவரவில்லை. அவரைப் பற்றி ஓர் எதிர்மறைப் பிம்பம் எதனாலோ எனக்குள் பதிந்து விட்டது. அப்போதிலிருந்து தீவிர சிவாஜி ரசிகனாகவே என் கல்லூரிக் காலம் வரை இருந்தேன். ராஜபார்ட் ரங்கதுரை திரைப்படத்தை நான்கு முறை பார்த்தேன் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன். என் அரசியல் சார்பும் சிவாஜியின் அரசியல் பின்னணியில் இருந்தது. அவர் எமர்ஜென்சியின் போது இந்திரா காங்கிரசில் சேர்ந்தது அவர் மீதான மதிப்பையும், மரியாதையையும் குறைத்து விட்டது. இது நான் கல்லூரியில் படிக்கும் போது நடந்தது. தி.மு.க மீதும் ஒரு வகை ஒவ்வாமை இருந்தது. இந்த வகையில்தான் எனது பதின்ம வயது மற்றும் அதைச் சற்றுத் தாண்டிய வாசிப்புப் பின்னணியும், அதையொட்டிய அரசியல் ஈடுபடும் இருந்தன. இன்று அவ்வயதினரின் வாசிப்புத் தன்மை எவ்வளவோ மாறி விட்டது. மத்தியதர வர்க்கக் குழந்தைகளும், மேலும் அதைத்தாண்டி வசதியான வீட்டுப் பிள்ளைகளும் தொலைக் காட்சியில் கார்ட்டூன் பார்க்கிறார்கள். சில சமயங்களில் கார்ட்டூன் புத்தகங்களை வாசிக்கிறார்கள். தமிழ் வழியில் படிக்கும் குழந்தைகள் கையிலும் பெற்றோரின் செல்பேசிகள் வந்து விட்டன. இந்தச் சூழலிலும் ஒரு சிலர் வாசிக்கிறார்கள். அதைப்பற்றித் தனியாகப் பிறகு பேசலாம் என்று நினைக்கிறேன்.
உங்களுடைய பள்ளிப் பருவத்தின் சிறுவயதின் வாசிப்பு அனுபவங்களையும், பதின்ம வயதின் வாசிப்பு அனுபவங்களையும் கூறினீர்கள். இறுதியில் உங்களுடைய பதின்ம வயது அரசியல் சாய்மானம் குறித்தும் கூறினீர்கள். கல்லூரியில் நீங்கள் அடியெடுத்து வைத்த காலத்தில் இவையெல்லாம் மாற்றத்திற்குள்ளாயினவா ?
உடனே மாற்றங்கள் நிகழவில்லை.நான் திருச்சி நேஷனல் கல்லூரியில் புகுமுக வகுப்பில் சேர்ந்தேன். நான் சேர்ந்த ஆண்டில் கல்லூரி நூறு நாட்களுக்கும் குறைவாகவே நடைபெற்றது. எனவே தமிழ் வழியில் கல்வி பயின்றுவிட்டு திடீரென்று ஆங்கிலத்தில் எல்லாப் பாடங்களையும் படிப்பது சற்றுச் சிரமமாக இருந்தது. எனவே அந்த ஆண்டு நான் புகுமுக வகுப்பில் தேர்ச்சி பெறவில்லை. அதன் பிறகு எங்களது வீடு அப்பொழுது சங்ககிரியில் இருந்ததால்நான் அங்கிருந்து தேர்வுகளை எழுதித் தேர்ச்சி பெற்றேன். இக்காலகட்டத்தில் வெங்கடேஷ் பாபு என்பவர் என்னுடைய நண்பனாக ஆனார். தற்சமயம் அவர் சங்ககிரியில் மருத்துவராக இருக்கிறார். அவர் எனக்குப் பல ஆங்கில நூல்களை அறிமுகப்படுத்தினார். அந்த நூல்களை எழுதிய எழுத்தாளர்களில் குறிப்பிடத்தக்கவர்கள் ஜேம்ஸ் ஹாட்லி சேஸ், ஹெரால்ட் ராபின்ஸ், டெஸ்மெண்ட் பேக்லி, ஆர்தர் ஹெய்லி ஆகியோர். முதல் இருவர் எனக்கு முன்பே அறிமுகம் ஆன எழுத்தாளர்கள். இவர்கள் எழுதிய நூல்களை எல்லாம் நான் அதிகம் படிப்பேன். அந்த நூல்கள் ஆங்கிலத்தைச் சற்றுச் சரளமாக வாசிக்க உதவின. பின்னர் வீட்டில் வழக்கம்போல் வரும் இதழ்களையும் வாசிப்பேன்
நான் என்னுடைய பட்டப்படிப்பை எங்கே தொடங்குவது என்பதில் சிக்கல் இருந்தது. காரணம் முதல் முறையே தேர்ச்சி பெறாத காரணத்தால் விரும்பிய கல்லூரிகளில் இடம் கிடைப்பது சிரமமாக இருந்தது. அப்போது மதுரைக் கல்லூரியில் சேரும் வாய்ப்புக் கிடைத்தது. அந்தக் கல்லூரியில் நான் சேர்ந்து விலங்கியல் படிக்க விரும்பினேன். ஆனால் என் எண்ணத்திற்கு மாறாக, கண்டிப்பான என் தந்தை நான் சமூகவியல் பாடத்தில் சேர்ந்து படிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். அதற்கு அவர் சொன்ன காரணம், நான் அதில் அதிக மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றுப் பின்னர் சட்டக்கல்லூரியில் சேர்ந்து படிக்கலாம் என்பது. அவர் விருப்பமே நிறைவேறியது. ஓரளவு வாசிப்பின் மீதும், அறிவு சார்ந்த சிந்தனை மீதும் ஆர்வம் ஏற்பட்ட எனக்கு அங்கு ஒரிருவர் தவிர இவற்றைப் பகிர்ந்து கொள்ள அதிகம் நண்பர்கள் கிடைக்கவில்லை. ஒருமுறை எதேச்சையாக மதுரை மீனாட்சியம்மன்கோயிலுக்குப் போயிருந்தேன். அங்கு கல்லூரிப் புகுமுக வகுப்பில் என்னுடன் படித்த நண்பர் ஸ்ரீதரைச் சந்தித்தது என்
வாழ்க்கையில் ஒரு முக்கியமான திருப்பம். அப்போது அவர் இந்திய மாணவர் சங்கத்தில் ஒரு தீவிர செயல்பாட்டாளர் ஆக இருந்தார் என்பதை அறிந்துகொண்டேன். சிபிஎம் கட்சியில் முழு நேர ஊழியராக மாறி தற்போது கட்சியின் மாநிலப் பொறுப்பில் இருக்கிறார். இன்றளவும் நாங்கள் மிக நெருக்கமான நண்பர்கள். அவரது அரசியல் நிலைபாடு அப்போது என்னிடம் எதிர்மறை எண்ணங்களை உருவாக்கினாலும் எங்கள் நட்பு தொடர்ந்தது. அவர் படித்தது வேறு கல்லூரி. வெளியில்தான் தங்கியிருந்தார். தங்கியிருந்த அறைகள் அவ்வப்போது மாறும். அடிக்கடி சென்று பேசிக் கொண்டிருப்பேன். எங்களிடையே கருத்து ரீதியான விவாதம் நடைபெறும்.
அந்த விவாதங்களின் தொடச்சியாக உங்களிடம் மாற்றங்கள் ஏதேனும் நிகழ்ந்ததா?
ஆம். சற்றுச் சிறு அளவில் தான்.எதிர்வாதம் செய்வதற்காகவே பல நூல்களையும் பத்திரிகைகளையும் தேடிப் படித்தேன். துக்ளக் பத்திரிகை எனக்கு மிகவும் உதவியாக இருந்தது. ஆனாலும் அவற்றில் என்னுடைய தேடல் திருப்திகரமாக இல்லை. ஒரு கட்டத்தில் வாழ்க்கையின் பொருளை ஆன்மீகத்தில் தேடினால் விடை கிடைக்கும் என்று சிந்திக்கத் தொடங்கினேன். அதனால் முதலில் கோபி கிருஷ்ணா போன்றவர்கள் எழுதிய யோகா, குண்டலினி போன்ற விஷயங்களை கூறும் நூல்களைப் படிக்க முயற்சித்தேன். தொடங்கினேன். என் அறையில் மிகப் பெரிய கடவுள் படங்களை வைத்தேன். பின்னர் விவேகானந்தர்,ஜே.கிருஷ்ணமூர்த்தி என்று வேறு தளத்தில் என் வாசிப்பு தொடர்ந்தது, இந்த நேரத்தில் நான் படித்த மூன்று ஆண்டுகளில் நண்பன் ஸ்ரீதரும், கிருஷ்ணகுமாரும், ராஜனும், பாலுவும், மதியும், அம்பரீஷனும் வருவார்கள். பெரும்பாலும் இவர்கள் இடதுசாரிக் கருத்துகளை முன்வைப்பவர்கள். அது புதுக்கவிதைகளின் காலம்; எனவே பல்வேறு புதுக்கவிதைகளும் அவர்கள் பேச்சில் வலம் வரும். நான் இவற்றை எல்லாம் மெளனமாகக் கவனித்துக் கொண்டிருப்பேன். அரசியல் பேசும் போது மட்டும் நான் அதில் என்னுடைய கருத்துகளை முன் வைப்பேன்.பாரதி கிருஷ்ணகுமார் அப்போது பழைய காங்கிரஸ் ஆதரவாளராக இருந்தார். அப்போதே சுந்தர ராமசாமியின் புளிய மரத்தின் கதையை மிகவும் ரசிக்கத்தக்க முறையில் சொல்வார். கடுமையான இந்திரா காங்கிரஸ் எதிர்ப்பாக எனது அரசியல் நிலைபாடு இருந்தது. அது எமர்ஜென்சி அமுலில் இருந்த காலம்.என் எண்ணம் பூராவும் எமர்ஜென்சிக்கு எதிராக இருந்தது. இயல்பாகவே கம்யூனிஸ்டுகளும் எமர்ஜென்சியை எதிர்த்தார்கள். அந்தவகையில் தோழர்களோடு ஏதோ ஒரு வகையில் எனக்கு மேலும் நெருக்கம் ஏற்பட்டது. ஜெயகாந்தன் எழுத்துகள் குறித்து விமர்சன பூர்வமான அறிமுகம் கிடைத்தது. எமர்ஜென்சி முடிந்த காலத்தில் தேர்தல் அறிவிக்கப்பட்டது. மதுரைத் தொகுதியில் தோழர் பி.ராமமூர்த்தி கூட்டணி வேட்பாளராப் போட்டியிட்டார்.
அரிவாள் சுத்தியல் சின்னம் என் வாழ்வின் ஒரு பகுதியாக மாறப்போவது அப்போது எனக்குத் தெரியாது. இரவு நேரத்தில் பொதுக்கூட்டங்களுக்குச் செல்வோம். பொதுக்கூட்டங்களில் பாரதி கிருஷ்ணகுமார் அவருக்கே உரிய எழுச்சியுரை நிகழ்த்திக் கூட்டத்தைக் கவர்ந்திழுப்பார். கூட்டம் ஆரவாரிக்கும். நாங்களெல்லாம் ராமமூர்த்தி வெற்றிபெறுவார் என்று நம்பிக்கொண்டு இருந்தோம். ஆனால் அவர் தோல்வியடைந்தார். ஆனால் நள்ளிரவில் தேர்தல் முடிவுகளை எங்களுடைய விடுதியில் இருந்து கேட்டுக் கொண்டிருந்த போது இந்திராவும் அவர் மகன் சஞ்சயும் தோல்வி அடைந்த செய்தி தேனாகக் காதில் பாய்ந்து எங்களை குதூகலத்தில் ஆழ்த்தியது. தொடர்ந்து நான் ஜனதாக்கட்சி ஆதரவாளனாகவே என் கல்லூரிக் காலம் முடியும் வரை நீடித்தேன். ஆனால் என் அரசியலில் ஒரு இடதுசாரி சார்பு இருந்தது. பின்னர் என் தந்தையின் விருப்பப்படி நான் சென்னை சட்டக் கல்லூரியில் சேர்ந்தேன்.
சட்டக் கல்லூரியில் சேர்ந்த பிறகு உங்கள் அனுபவங்கள் எவ்வாறு இருந்தன?
என் தந்தையின் விருப்பப்படி நான் சென்னை சட்டக் கல்லூரியில் சேர்ந்து அங்கு ஆறு மாதங்களே ஆன நிலையில், எனக்கு யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனத்தில் ஒரு வேலை வாய்ப்பு என்னுடைய தாத்தா மூலமாக வந்தது. அத்துடன் சட்டக் கல்லூரியில் என் அனுபவம் முடிந்தது. எனக்கு வேலை கிடைக்கப் போவதை நான் ஒரு பொன்னான வாய்ப்பாகக் கருதினேன. சுதந்திரமான செயல்பாட்டை விரும்பிய நான் என் தந்தையின் கட்டுப்பாட்டிலிருந்து எப்படியாவது விடுபடவேண்டும் என்று நினைத்தேன். எனவே எனது தந்தையின் விருப்பங்களை மீறி நான் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் சேர்ந்தேன். அவருக்கு அது பேரிடியாக அமைந்தது. அவருக்கும் எனக்கும் ஏற்பட்ட மன மனமுறிவும், பிரிவும் கிட்டத்தட்ட இருபது ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்தது. நான் சிறுவயதிலேயே தாயை இழந்தேன். அதன் பிறகு என் தாய் வீட்டிற்கும் அவருக்குமான உறவை முற்றிலுமாக முறித்துக் கொண்டார். நானும் அவர்களுடன் உறவு வைத்துக் கொள்ளக் கூடாது என்பது அவர் கட்டளை. என் பாட்டனார் மூலம் இந்த வேலையை நான் பெற்றதுதான் அவரது கோபத்திற்கு அடிப்படைக் காரணம்.
நீங்கள் ஒரு வேலைக்குப் போன பிறகும் உங்கள் பழைய நண்பர்களுடன் தொடர்பில் இருந்தீர்களா?
ஆம். என்னுடைய நண்பர்களின் தொடர்பு குறிப்பாக ஸ்ரீதரோடும், வேறு சிலரோடும் நீடித்தது. தொடர்ந்து நாங்கள் கருத்துகளை விவாதித்துக் கொண்டிருந்தோம். கடிதங்கள் எழுதிக் கொண்டோம். அன்றைக்கு இந்திய மாணவர் சங்கத்தில் இருந்த ராஜன், எனக்கு ஏற்கனவே மதுரைக் கல்லூரியில் அறிமுகமானவர். சக நண்பர்களோடு அவரும் இந்த விவாதங்களில் இணைந்தார். அவர் அப்போது கட்சியின் முழு நேர ஊழியர். அவர் முன்வைத்த அறிவியல் கருத்துகள் என்னை மிகவும் கவர்ந்தன. அவர் சில நூல்களை எனக்குப் படிக்கக் கொடுத்தார்.அவையெல்லாம் பெரிய அளவிற்கு தாக்கத்தை உருவாக்கவில்லை. பிறகு ஒரு வகையில் எனது அனைத்துவிதமான தேடல்களையும் பூர்த்தி செய்யும் விதமாக ஒரு நூல் எனக்கு கிடைத்தது. அது இயக்கவியல் பொருள்முதல்வாதமும் வரலாற்றுப் பொருள்முதல்வாதமும் -ஒரு தொடக்க நூல் என்கிற சற்று வாசிக்கக் கடினமான புத்தகம் . அது சோவியத் யூனியனில் 1978 ஆம் வருடம் அச்சிட்டு வெளியிடப்பட்டது. அதில் தத்துவத்தின் அனைத்து பிரச்சினைகளும் அறிவியல் பின்புலத்தில் மிகவும் ஆழமாக விளக்கப்பட்டிருந்தது. தத்துவத்தின் அடிப்படையில் உண்மையைத் தேடிய என் மனதில் என்னென்ன கேள்விகள் உதித்ததோ அந்தக் கேள்விகளுக்கெல்லாம் அதில் தெளிவு கிடைத்தது. அதுவரையில் எனக்கு இருந்த ஆன்மீக சிந்தனைகளுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக இருந்தது. அந்த நூலை முழுமையாகப் படித்து முடித்த பிறகு எனது நம்பிக்கைகளைக் கேள்விக்குள்ளாக்கியது. இறை மறுப்பு எனக்குள் வேர்விடத் தொடங்கியது. முதலில் அதையெல்லாம் ஏற்றுக்கொள்ள மறுத்த மனம் கொஞ்சம் கொஞ்சமாக அதை ஏற்றுக்கொண்டது.
பின்னர் 1980இல் நான் என்னை மார்க்சிஸ்ட் கட்சியில் இணைத்துக் கொண்டேன் தொடர்ந்து எனது வாசிப்பு விரிந்தது. பல்வேறு இலக்கிய நூல்களை வாசிக்கத் தொடங்கினேன். ஜெயகாந்தனுடைய சிறுகதைகளையும் விரும்பிப் படிப்பேன். மாக்சிம் கார்க்கியின் தாய் எனக்கு வாசிக்க கிடைத்தது. செகாவ் சிறுகதைகள் என்னைக் கவர்ந்தன. அதுபோல என்னுடைய சிந்தனைகளுக்கு மையமாக ராகுல்ஜியின் வால்கா முதல் கங்கை வரை அமைந்தது. இதுதவிர அன்றைய காலகட்டத்தில் தோழர்களிடம் பல்வேறு நூல்களைப் பெற்று வாசிக்கத் தொடங்கினேன். ஒரு முறை மதுரைக்குச் சென்ற போது அங்கிருந்த தீக்கதிர் அலுவலகத்துக்குச் சென்று ஏராளமான நூல்களை வாங்கி வந்தேன். அத்துடன் ஆங்கிலத்தில் தோழர் இ.எம் . எஸ் எழுதிய தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுரைகள் அடங்கிய நூலை தோழர் ராஜன் எனக்குப் படிக்கக் கொடுத்தார். அத்துடன் கட்சி வெளியிடக்கூடிய பிரசுரங்கள் அனைத்தையும் வாசித்தேன். இவை என் அரசியல் உணர்வையும், அறிவையும் மேலும் விரிவாக்கியது. அடிப்படை மார்க்சிய நூல்களையும் வாசிக்கத் துவங்கினேன்.
அப்போது சேலம் மாவட்டத்தில் இருக்கும் மேட்டூர் என்னுடைய பணியிடமாக அமைந்தது. என் பணி நிலை காரணமாக அப்போது அரசியலில் வெளிப்படையாகச் செயல்பட இயலாத நிலையும் இருந்தது. அங்கு என் போன்றவர்களை வைத்து ஒரு கட்சிக்கிளை அமைக்கப்பட்டு அதில் நான் செயலாளராக தேர்வு செய்யப்பட்டேன். அந்தக் கிளையில் நடக்கக் கூடிய விவாதங்கள் என்பது மிகவும் ஆழமானதாக இருக்கும். நாங்கள் வாசித்த நூல்கள் அங்கே விவாதிக்கப்படும். பல தத்துவார்த்த பிரச்சனைகள் கூட விவாதத்திற்கு வரும். நான் கட்சிக்கு வந்த பிறகு என்னுடன் இளவயதில் பழகிய தியாகு என்ற நண்பனும் கட்சியில் இணைந்தான். நாங்கள் இருவரும் பல்வேறு நூல்களை சேலத்தில் உள்ள நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் சென்று வாங்கி வருவோம். பிறகு அவன் டெல்லியில் வேலை கிடைத்துச் சென்று விட்டான். அங்கிருந்து பல நூல்களையும், ஆங்கில ஆவணங்களையும் கொண்டு வருவான். அவையெல்லாம் அப்பொழுது எங்களுக்கு ஒரு பெறற்கரிய பொக்கிஷமாக இருக்கும். இக்கால கட்டத்தில் தீக்கதிர் பத்திரிகையில் தோழர் பி. ராமமூர்த்தி அவர்களின் ஒரு கட்டுரைத் தொடர் வந்தது. அது மிகப்பெரிய தொடராக நீண்டது. அந்தக் கட்டுரைத் தொடர் தமிழகத்தின் திராவிட அரசியலை விடுதலைப் போராட்டத்தின் பின்னணியில் விரிவாக அலசியது. சுதந்திரப் போராட்டம் , அப்போது இந்திய அளவிலும், தமிழக அளவிலும் நடைபெற்ற நிகழ்வுகள், பின்னர் முதல் மாகாணத் தேர்தலில் கம்யூனிஸ்ட்களின் வெற்றி, அதன்பின் எழுந்த மாற்றங்கள் இவற்றையெல்லாம் பதிவு செய்தது. அதுமட்டுமல்லாமல் கடந்த கால இந்திய வரலாற்றைப் பேசியது. பிராமணியத்தை அம்பலப்படுத்தியது. அவரது வாழ்க்கை வரலாற்றின் சில பகுதிகள் மீது வெளிச்சமிட்டது. நீதிக்கட்சியின் வர்க்கச் சார்பை அது பகுப்பாய்வு செய்தது. பின்னர் நீதிக் கட்சிக்கும் பெரியார் தலைமையிலான திராவிட இயக்கத்திற்குமான வேறுபாடுகளை விளக்கியது. அதன் பின்னர் திமுக உருவானது பற்றியெல்லாம் விமர்சனபூர்வமாக அலசியது. அதில் அண்ணாவின் ஆரிய மாயை என்கிற நூலும் பணத்தோட்டம் என்கிற நூலும் மிகவும் ஆக்கபூர்வமாக விமர்சிக்கப்பட்டன.
நான் அந்தக் கட்டுரைகளை பைண்ட் செய்து வைத்திருந்தேன். பின்னர் பழனியப்பா பிரதர்ஸ் பதிப்பகம் ஆரிய மாயையா? திராவிட மாயையா? விடுதலைப் போரும் திராவிட இயக்கமும் என்கிற தலைப்பில் இந்த நூலை வெளியிட்டது. இதற்குப் பிறகு வீரமணி அவர்கள் இதை விமர்சித்து ஒரு நூல் எழுதினார். இந்த நூலில் இருக்கும் அவர் நினைவில் இருந்து எழுதப்பட்ட சில காலம் குறித்த தகவல் பிழைகள் மட்டும் பூதாகரமாகச் சித்தரிக்கப்பட்டு நூல் சுட்டிக் காட்டிய திராவிட இயக்க வர்க்கப் பின்னணி விவாதிக்கப்படாமல் புறக்கணிக்கப்பட்டது. நூல் வந்த பிறகு அது கட்சியில் பரவலான வரவேற்பைப் பெற்றது.
இங்கு சேலத்தில் அப்போது இருந்த தோழர் நெல்லைச் செல்வனைப் பற்றிக் குறிப்பிட வேண்டும் .அவரது இயற்பெயர் முத்துகிருஷ்ணன் நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த அவர் சேலம் சௌடேஸ்வரி கல்லூரியில் இயற்பியல் ஆசிரியராக பணிபுரிந்து வந்தார். அவர் தீக்கதிரில் தொடர்ந்து விண்ணும் மண்ணும், மண்ணும் மனிதனும் என்கிற தலைப்புகளில் அறிவியல் சார்ந்த தத்துவார்த்தக் கட்டுரைகளை எழுதி வந்தார். அவரிடம் பேசும்போது இயக்கம் குறித்து, கோட்பாடுகள் குறித்தெல்லாம் புதிய வெளிச்சங்கள் கிடைக்கும். அவரும் சில நூல்களை வாசிக்கக் கொடுத்தார். ஒரு முறை சென்னை சென்று வந்தபோது ஜார்ஜ் தாம்சனின் கேப்பிட்டல் அண்ட் ஆஃப்டர், மார்க்ஸ் டு மாவோ ஆகிய நூல்களை வாங்கி வந்து கொடுத்தார். ஆனால் கெடு வாய்ப்பாக இளவயதில் புற்றுநோய்க்குப் பலியானார். அவரது மரணம் எங்களுக்குப் பேரிழப்பாக அமைந்தது.
மேட்டூரில் சேலம் கேம்ப் என்கிற பகுதிக்கு அடிக்கடி செல்வேன். அது தொழிலாளர்கள் நிறைந்த குடியிருப்புப் பகுதி. அவர்கள் மேட்டூர் டெக்ஸ்டைல் மில்லில் பணிபுரிபவர்கள். அங்கு என்னுடன் பள்ளியில் படித்த ஒரு சில நண்பர்கள் ஏற்கனவே இருந்தார்கள். அப்போது தாலுகா கமிட்டியின் செயலாளர் தோழர் எம்.ராஜகோபலன் மூலம் அங்கிருக்கும் சில தோழர்களின் அறிமுகம் கிடைத்தது. தொடர்ந்து நான் அங்கு சென்று பல புதிய நண்பர்களைச் சந்தித்து கட்சியின் அரசியல் கோட்பாடுகளை அவர்களோடு பேசுவேன். அவர்களை கட்சிக்கு கொண்டு வர முயற்சிப்பேன். எனக்கு ஓரளவு வெற்றியும் கிடைத்தது. கட்சிப் பிரசுரங்களை ஒரு ஜோல்னா பையில் போட்டுக் கொண்டு அவர்களிடையே விற்பனை செய்தேன். அங்கே கிடைத்த அனுபவங்கள் தொழிலாளர்களின் வாழ்க்கைப் பிரச்சனைகள் குறித்த ஒரு புரிதலை எனக்கு கொடுத்தது.
உங்களது திருமணம், குடும்ப வாழ்க்கை, அதற்குப் பிறகான செயல்பாடுகள் குறித்துக் கூற முடியுமா?
எனக்கும் , சசிகலாவுக்கும் 1984ல் டிசம்பரில் திருமணம் நடைபெற்றது. அவர் அப்போது திருச்சியில் ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றி வந்தார். ஒரே இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் என்ற முறையில் நான் தான் என் விருப்பத்தை அவரிடம் முதலில் தெரிவித்தேன். இரு வீட்டார் சம்மதத்துடன் அதிகச் சடங்குகள் இன்றி திருச்சிக்கு அருகில் உள்ள குணசீலம் கோவிலில் திருமணம் நடைபெற்றது. தற்போது எங்களுக்கு இளம்வயதில் மகன், மருமகள், மகள் இருக்கின்றனர். திருமணமாகி மேட்டூரில் ஒரு வாடகை வீட்டிற்கு குடிபுகுந்தோம். அதுவரை நான் வேறு இடங்களில் சேமித்து வைத்திருந்த புத்தகங்களை எல்லாம் வீட்டிற்கு கொண்டு வந்தபோது எங்களுக்கு ஏற்பட்ட மகிழ்ச்சிக்கு அளவேயில்லை. அந்த நூல்கள் தேடித் தேடிச் சேர்த்தவை. திருமணத்திற்குப் பின்னும் எங்களது இயக்கம் சார்ந்த செயல்பாடுகள் தொடர்ந்தன. அவர் ஜனநாயக மாதர் சங்கத்தின் மாவட்டப் பொறுப்பில் இருந்து செயல்பட்டு வந்தார். நான் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தில் சில ஆண்டுகள் செயல்பட்டேன். பின்னர் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தில் செயல்படத் துவங்கினேன். 1987ல் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது ஒரு லாரி மோதியதில் பலத்த காயம் ஏற்பட்டு எனக்கும் பின்னால் அமர்ந்து வந்த நண்பருக்கும் வலது கால் எலும்புகள் முறிந்தன.
சேலத்தில் மருத்துவ மனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றோம். எனது சிகிச்சை காலத்தில் கிட்டதட்ட இரண்டு மாதம் ஓய்வு எடுக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. அப்போது படித்த பல புத்தகங்களில் ஒரு நூலைப் பற்றிக் குறிப்பிட்டாக வேண்டும். கார்ல் சேகன் எழுதிய காஸ்மாஸ் என்ற நூலை வாங்கி வாசித்தேன். அந்த நூல் எனக்குக் கோள்கள், நட்சத்திரங்கள், பால்வெளி மண்டலம்,பிரபஞ்சத்தின் முதல் வெடிப்பு இவை பற்றியெல்லாம் பிரமிக்கத்தக்க முறையில் விளக்கியது. மேலும் அந்த நூல் கலிலியோ,கோபர்நிகஸ்.டைகோப்ராஹி, நியூட்டன் போன்ற விஞ்ஞானிகளின் வரலாற்றை லானியல் வரலாற்றோடு இணைத்துக் கூறும். தற்போது என்னிடம் இருக்கும் பிரதி ஒன்றை மீண்டும் வாசிக்க எண்ணியுள்ளேன். இந்த நூல் தான் அறிவியல் இயக்கத்தில் ஒரு கருத்தாளராக மாற எனக்கு முதல் படி அமைத்துக் கொடுத்தது. அறிவியல் இயக்கம் முதன்முதலாக ஐந்து நூல்களை வெளியிட்டன. அவை இயற்கை சமுதாயம் விஞ்ஞானம், மனிதன் மகத்தானவன், பிரமிடுகளின் நாட்டினிலே, சிந்துவின் கதை, ஹாலியிலே வானுலா ஆகியவை. சென்னை புக்ஸ் சார்பில் பாலாஜி வெளியிட்டார். அன்றைக்கு ஐந்து தலைப்புகளில் ஸ்லைடு படங்கள் உருவாக்கப்பட்டு அவற்றை அதற்குரிய ஒரு ப்ரொஜக்டர் மூலமாக படக்காட்சியாகக் காண்பிப்பது ஒரு குறிப்பிடத்தக்க நடவடிக்கையாக இருந்தது. பவர் பாயிண்ட் திரையிடல் எல்லாம் இல்லாத காலம். ஸ்லைடு படக்காட்சியுரைகளை வெவ்வேறு இடங்களில் தொடர்ந்து நடத்தி வந்தோம். அதில் கிடைத்த அனுபவங்கள் மென்மேலும் புதிய நூல்களைத் தேடி வாசிக்கத் தூண்டின. இதைத் தொடர்ந்து சோவியத் யூனியன் வெளியிட்ட நூல்கள் என்சிபிஎச் மூலமாக வாசிக்கக் கிடைத்தன. அதில் பல அறிவியல் நூல்களும் அடக்கம். ஒருபுறம் இதுபோன்ற அறிவியல் நூல்கள், வரலாற்று நூல்கள்,இலக்கிய நூல்கள், மறுபுறம் கட்சியின் தத்துவார்த்த நூல்கள் என்று பரவலான வகையில் அமைந்த வாசிப்புக் கிடைத்தது.
அறிவியல் இயக்கத்தின் உங்கள் துவக்க கால செயல்பாடுகளை கூறினீர்கள். அதற்குப் பின் உங்கள் செயல்பாடுகள் எவ்வாறு அமைந்தன? இந்தக் கேள்வியை ஏன் கேட்கிறேன் என்றால் எண்பதுகளின் இறுதிப் பகுதிதான் சோசலிச அமைப்பு பெரும் பின்னடைவுகளுடன் வீழ்ச்சியடைந்தது. அப்போது உங்கள் மனநிலையும் செயல்பாடுகளும் எவ்வாறு அமைந்தன?
அதற்கு முன் சில விஷயங்களைக் குறிப்பிட விரும்புகிறேன். எண்பதுகளின் இறுதியில் கட்சி எனக்குப் புதிய பொறுப்புகளைக் கொடுத்தது. குறிப்பாக மாவட்ட அளவில் பணியாற்றும் பொறுப்பு கொடுக்கப்பட்டது. அதன் அடிப்படையில் மாவட்டத்தின் பல இடங்களில், மார்க்சியத்தின் அடிப்படைக் கோட்பாடுகளையும், தத்துவத்தையும்,கட்சியின் வரலாற்றையும், மனித குல வரலாற்றையும் ஆசிரியராகச் சென்று வகுப்பு எடுத்து வந்தேன். இதனால் எனக்கு மேலும் பல நூல்களை தேடிப் படிப்பதற்கான தேவை எழுந்தது. தொடர்ந்து பகுப்புகள் நடத்துவதற்குச் சென்று வந்த நான் பல்வேறு தலைவர்கள் நடத்தும் வகுப்புகளிலும், பேரவைக் கூட்டங்களிலும் கலந்து கொள்வேன். அப்போது சோசலிசம் குறித்தும்,சோவியத் யூனியன் குறித்தும் அவர்கள் கூறுவது மிகவும் உற்சாகம் ஊட்டுவதாக இருக்கும். எண்பதுகளின் துவக்கத்தில் சோசலிசத்திற்கான எதிர்ப்பு போலந்து நாட்டில்தான் துவங்கியது.
கட்சி வகுப்புகளில் சமூக அமைப்புகளைப் பற்றிக் கூறும்போது புராதனப் பொதுவுடமைச் சமூகம், அடிமைச் சமூகம், நில உடமைச் சமூகம், முதலாளித்துவ சமூகம், சோசலிசமூகம், இறுதியாகக் கம்யூனிசம் என்று வரிசைப்படுத்திக் கூறுவார்கள். எனவே முன்னேறிய ஒரு சோசலிச சமூகம் எக்காரணத்தைக் கொண்டும் முதலாளித்துவத்திற்குத் திரும்பாது என்று கூறுவார்கள். மேலும் சோவியத் சமூகம் எந்தக் குறைகளுமற்ற மிகவும் திருப்திதரக் கூடிய பல்வேறு தேசிய இனங்களின் ஒற்றுமை மிகுந்த ஒரு ஒன்றியமாகத் தோன்றியது. ஆனால்நிகழ்ந்ததோ வேறு. முதலில் கிழக்கு ஜெர்மனியின் பெர்லின் சுவர் 1989ல் உடைக்கப்பட்டது. சோசலிசத்தின் மீது விழுந்த முதல் அடி அதுதான். தொடர்ந்து கிழக்கு ஐரோப்பாவின் ஒவ்வொரு நாடாக அங்கிருக்கும் அரசுகள் வீழ்ந்து சோசலிச முகாம் வரலாற்றின் மிகப்பெரிய சரிவுகளைச் சந்தித்தது. 1991ல் சோவியத் யூனியன் சிதறியது. இது மாபெரும் வீழ்ச்சி . கடந்த நூற்றாண்டில் உலகின் வரலாற்றுப் போக்கில் பெரும் மாற்றங்களை உருவாக்கிய சோவியத் யூனியனுக்கு எதிரான ஒரு பெரும் நிகழ்வு. இதெல்லாம் கம்யூனிஸ்டாக இருந்த எனக்கு மனதளவில் மிகப் பெரிய பாதிப்புகளை உருவாக்கியது. பல நாட்கள் இது குறித்து சிந்தித்து யாரிடமும் எதுவும் பேசாமல் நாட்கள் கழிந்தது. தொடர்ந்து கட்சி பல விளக்கங்களை கொடுத்தது . இந்த விளக்கங்களில் சில சற்றுத் தெம்பைக் கொடுத்தனவாயினும் முழுமையாக மனச்சோர்விலிருந்து வெளிவந்ததாகக் கூறமுடியாது. அதுவரைக்கும் நான் படித்தவை பலவும் கேள்விக்குள்ளாயின. எனவே தொடர்ந்து சோசலிசத்தின் வீழ்ச்சி குறித்து சிந்திக்கத் தொடங்கினேன். சில மார்க்சிய அறிஞர்களின் கட்டுரைகளில் விளக்கம் தேடினேன்.
ஆனால் இந்தக் கட்டத்திலும் மார்க்சியத்தின் மீது எனக்கு இருந்த அசைக்க முடியாத நம்பிக்கையும் , இயக்கத்தின் மீதான பிடிப்பும் சற்றும் தளரவில்லை இதுதான் அப்போது நான் இருந்த நிலை. இச்சூழலில் 2000 ம் ஆண்டில் நான் மொழி பெயர்த்து சவுத் விஷனால் வெளியிடப்பட்ட அய்ஜாஸ் அகமதின் கட்டுரைகள் எனக்கு சோசலிசத்தின் சாதனைகள் குறித்துஅளித்தன. அதில் ஓரிடத்தில் அவர் கூறும்போது மேற்கு ஐரோப்பாவில் வளர்ந்துவரும் கம்யூனிஸ்ட் கட்சிகளைப் பின்னுக்குத் தள்ள பல நாடுகள் சேமநல அரசுகளாக தங்களை மாற்றிக் கொண்டன. தொழிலாளர்களுக்கான ஊதியம் உயர்ந்தது. பணிச்சூழல் மாறியது. ஒரு வகையில் சோசலிசத்தால் பலனடைந்தவர்கள் அங்குள்ள தொழிலாளர்கள்தான் என்று கூறுகிறார்.
நான் மூன்று முறை ஐரோப்பாவின் சில நாடுகளுக்குச் சென்றிருந்த போது பார்த்தவற்றை இத்தோடு ஒப்பிட விரும்புகிறேன். அங்குள்ள அரசுகள் இதுவரையில் அங்கு பல நாடுகள் சேமநல அரசுகள் என்பதிலிருந்து முழுமையாக மாறவில்லை. தொழிலாளர்கள் குறைந்த நேரமே வேலை செய்கிறார்கள். ஒப்பீட்டளவில் மக்கள் மகிழ்ச்சியுடன் வாழ்கிறார்கள். குழந்தைகளின் கல்வி சிறப்பாக உள்ளது. அரசுகள் கல்விக்காக அதிகம் செலவிடுகின்றன. இன்னும் இது போன்ற பலவும் முதலாளித்துவ மேற்கு ஐரோப்பிய நாடுகளின் மக்களுக்கு ஒரு வகையில் “கம்யூனிசம் எனும் பூதம்” அளித்த பலன்கள்.
என் மகன் ஜெர்மனியில் குடியிருந்த அடுக்கு மாடிக்குயிருப்புக்கு எதிர் வீட்டில் சுமார் எழுபது வயதுப் பெண்மணி குடியிருந்தார். வீட்டில் இருப்பவர்கள் அவரிடம் பேசிக் கொண்டிருந்த போது அவர் கிழக்கு ஜெர்மனியில் வசித்தவர் என்பது தெரிந்தது. அவருடைய தந்தை அக்காலத்தில் எழுதப்படிக்கத் தெரியாதவர் என்றும், தான் ஒரு சோசலிசநாட்டில் வாழ்ந்ததாலேயே முனைவர் பட்டம் பெற்று வேலை செய்ய முடிந்தது என்று கூறினார். கட்டாயமாக ஒரு மாதம் விடுமுறை அளிக்கப்பட்டு கிழக்கு ஐரோப்பிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் செய்ய ஏற்பாடு செய்வார்கள் என்றும் கூறியிருக்கிறார். இந்த நேரத்தில் நாங்கள் சுற்றுப் பயணமாக முன்னாள் யூகோஸ்லாவிய நாட்டிலிருந்து பிரிந்த ஒரு நாடான ஸ்லோவினியாவின் தலைநகர் லூப்லியானா சென்றிருந்ததைப் பற்றிக் குறிப்பிட விரும்புகிறேன்.
ஒரிடத்தில் அங்கு பணியிலிருந்து ஓய்வு பெற்ற இரு பெண் ஆசிரியர்களைச் சந்தித்தோம். அவர்களிடம் பேசிக் கொண்டிருந்தோம். அப்போது இதற்கு முந்தைய சோசலிச ஆட்சியைப் பற்றிக் கேட்டோம். யூகோஸ்லாவியாவில் சோசலிசம் சிறப்பாகவே இருந்தது என்றும் மாற்றம் வந்தால் பாலும் தேனும் ஓடும் என்றார்கள். ஆனால் இப்போது எங்கள் பணமெல்லாம் டான்யூப் நதியில் ஜெர்மனிக்கு அடித்துக் கொண்டு போகிறது என்றனர். ஒரு டாக்சி ஓட்டுநரும் முந்தைய ஆட்சியே சிறப்பாக இருந்தது என்றார். அங்கு நாங்கள் ஒரு புத்தகக்கடைக்குச் சென்றோம். அங்கிருக்கும் ஏராளமான நூல்கள் அப்போது ஆங்கிலத்தில்
வெளிவந்தவை. ஸ்லோவினிய மொழியில் மொழிபெயர்க்கப்பட்டவை. மூன்று லட்சத்திற்கும் குறைவான மக்கள் தொகை கொண்ட ஓர் ஊரில் அவ்வளவு பெரிய புத்தகக்கடை. புகழ் பெற்ற எழுத்தாளர் ஜிஜேக் பிறந்து வாழும் ஊரல்லவா? ம்…. எங்கேயோ வந்து விட்டேன்.
அதன் பிறகு என்ன நிகழ்ந்தது?
வழக்கமான வாசிப்புகளும், ஏற்கனவே அறிவியல் அரங்கிலும், அரசியல் அரங்கிலுமான என்பணிகள் தொடர்ந்தன. இங்கு தொண்ணூறுகளின் தொடக்கத்தில் தொடங்கப்பட்ட அறிவொளி இயக்கத்தின் செயல்பாடுகள் பற்றிக் கூற வேண்டும். இதுஅறிவியல் இயக்கத்தின் முன் முயற்சியால் தொடங்கப்பட்ட இயக்கம். அரசின் ஆதரவுடன் பல மாவட்டங்களில் முழு எழுத்தறிவை மக்களிடம் கொண்டு செல்லும் நோக்கத்துடன் அறிவொளி இயக்கம் செயல்பட்டது. அறிவொளித் தொண்டர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு பயிற்சிகள் அளிக்கப்பட்டன. இத்தகைய பயிற்சி முகாம்களில் நானும் மற்ற தோழர்களும் பயிற்சியாளர்களாக பங்கெடுத்தோம். அவற்றில் கருத்துரைகள், பாடல்கள், நாடகப் பயிற்சிகள் நடைபெறும். என்னுடன் எனது இணையரும் ஆர்வத்துடன் பங்கேற்றார். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற, கலை நிகழ்ச்சிக்கான தயாரிப்புகள், கலைப் பயணங்கள் ஆகியவற்றில் எங்களை இணைத்துக் கொண்டோம். அப்போது அறிவொளியில் மிகச்சிறந்த எழுத்தாளர்களின் படைப்புகள் மிக எளிமையாக மறுஆக்கம் செய்யப்பட்டு மக்களிடம் சிறுநூல்கள் வடிவில் கொண்டு செல்லப்பட்டன. சேலம் மாவட்டத்தில் இவற்றை ஆயிரக்கணக்கில் மக்களிடம் கொண்டு சென்றோம்.
மக்களிடம் புத்தகங்களைக் கொண்டு சேர்க்கும் பணியில் கிடைத்த அனுபவங்களைப் பின்னர் புத்தகங்களை ஏதேனும் ஓரிடத்தில் வைத்து விற்பனை செய்யும் இயக்கமாகத் தொடங்கினோம். குறிப்பாக சேலம் மத்திய பேருந்து நிலையத்தில் விற்பனை நடைபெறும். அப்போது மக்கள் ஆர்வத்துடன் புத்தகங்களை வாங்கிச் செல்வார்கள். பிறகு கடைக்கு வந்த வாசகர்கள் சிலர் அதைக் குறிப்பிட்டிருக்கிறார்கள்.
நீங்கள் கட்சி நடத்தும் வகுப்புகளுக்கு ஆசிரியராகச் செல்வதாகக் குறிப்பிட்டிருந்தீர்கள். ஓர் ஆசிரியர் என்பவர் வாசிப்பவராகவும், மாணவர்களையும் வாசிக்கச் செய்பவராக இருக்க வேண்டும். இருவரும் கற்றுக் கொள்பவர்களே. இது அரசியல் பள்ளிக்கும் பொருந்தும். இதில் உங்கள் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ள முடியுமா?
செயல்பாட்டையும், தத்துவத்தையும் ஒன்றிலிருந்து பிரிக்க முடியாது என்கிறது மார்க்சியம். களத்தில் செயல்படும் தோழர்கள் பலர் வகுப்புகளில் கலந்து கொள்ள வருகிறார்கள். ஆசிரியர் அவர்களிடம் ஏதோ ஒரு குறிப்பிட்ட பொருளில் பேசுகிறார் அவர்களுக்கு தங்களின் செயல்பாடுகளோடு இது ஏதோ ஒரு வகையில் பொருந்தும் வகையில் இருந்தால்தான் அந்த வகுப்பு பயன்படும் மற்றபடி எவ்வளவு சுவாரசியமாக பேசினாலும் ஒரு கதை கேட்கின்ற உணர்வைத்தான் தரும் என்பது என் தனிப்பட்ட அனுபவம். கடந்த முப்பது ஆண்டுகளுக்கு மேலாக நூற்றுக்கணக்கான வகுப்புகளுக்குச் சென்றிருக்கிறேன். என் அனுபவத்தில் இன்னும் செயல்பாட்டையும் தத்துவத்தையும் ஓர் அரசியல் வகுப்பில் இணைக்க வேண்டிய தேவை இருக்கிறது என்றே நினைக்கிறேன். ஒரு குறிப்பிட்ட பகுதியில் இருந்து வரக்கூடிய தோழர்களிடம் பேசக்கூடிய ஆசிரியர் அந்த குறிப்பிட்ட பகுதிகளைப் பற்றிய தகவல்களோடு வர வேண்டும். அப்பொழுதுதான் தான் கூறும் கருத்துகளை அவர்களின் வாழ்க்கை நடைமுறைகளோடு ஒருங்கிணைக்க முடியும். மேலும் வகுப்பில் கூறப்பட்ட கருத்துகளை வந்திருப்பவர்கள் அவர்கள் செயலாற்றும் இடத்திற்குச் சென்று பொருத்திப் பார்த்து மீண்டும் வந்து வகுப்பில் விவாதிக்கும் ஒரு முறை உருவாக்கப்படுதல் நல்லது. அதுவே செயல்பாட்டையும் தத்துவத்தையும் இணைக்கும் முறை என்னைப் பொறுத்தவரையில் ஏராளமான வகுப்புகளுக்குச் சென்று வந்த வகையில் நான் ஏராளமான நூல்களை வாசிக்கும் தேவை ஏற்பட்டது. அதன்மூலம் எனக்கு கிடைத்த அறிவை என்னால் இயன்ற அளவுக்கு வகுப்புகளில் பயன்படுத்தியிருக்கிறேன். நானும் தோழர்களிடம் கற்றுக் கொண்டிருக்கிறேன். ஆனால் தற்போது அரசியல் கல்வி முறையில் மாற்றத்திற்கான தேவை இருக்கிறது என்றே கருதுகிறேன். இதெல்லாம் நடைமுறை சாத்தியமா என்ற கேள்வி எழலாம்; முயற்சி செய்தால் நிச்சயம் சாத்தியமாகும்.
புத்தக வாசிப்பைப் பொறுத்த வரையில் இடதுசாரி நூல்களை வெளியிடும் பதிப்பகங்கள் முன்பை விட அதிகம். இது ஒரு வகையில் தோழர்கள் வாசிக்க நூல்களை வாங்குவதால்தானே சாத்தியமாகி இருக்கிறது? ஆனால் நூல்களின் எண்ணிக்கை அனைத்தையும் தோழர்கள் வாங்குவதில் சிரமத்தை ஏற்படுத்தி இருக்கிறது. அதனால் படிப்பகங்கள் மூலம் இந்த நூல்களை வாங்கிச் சென்று அங்கே கூட்டாகப் படிப்பதற்கு வாய்ப்புகளை உருவாக்க வேண்டிய தேவை இருக்கிறது. ஆனால் புத்தகங்களை வாங்குவதோடு பணி முடிந்து விடுவதில்லை. இந்தப் புத்தகங்கள் சென்று சேரும் இடத்தில் அவற்றை வாசிப்பதும் விவாதிப்பதுமான மிக முக்கியமான அந்தப் பணியை இயக்கம் முன்னெடுக்கவேண்டும்.
அறிவியல் இயக்கத்தில் நீங்கள் ஒரு குறிப்பிடத்தக்க கருத்தாளர் என்பது தெரியும். அதில் குறிப்பாக பரிணாமம் சார்ந்த உங்கள் கருத்துரைகள் குறிப்பிடத்தக்கவை.இதற்குப் பிரத்யேகமான காரணங்கள் இருக்கின்றனவா?
சிறுவயதிலிருந்தே எனக்கு இயற்கை மீதும் உயிரினங்கள் மீதும் அளவற்ற ஆர்வம். அதனால்தான் விலங்கியல் படிக்க விரும்பினேன். இப்பொழுதும் நேரம் கிடைத்தால் குடும்பத்துடன் ஏதேனும் ஒரு வனப் பகுதிக்குச் செல்வது வழக்கம். இயற்கை மீது கொண்ட இந்த ஆர்வம், அதை உற்று நோக்கத் தொடங்கியது. இந்த இயற்கை எவ்வாறு தோன்றியது,உயிரினங்கள் எவ்வாறு தோன்றின என்ற கேள்வி எனக்குள் பல காலமாக இருந்து வந்தது. அதை பரிணாமக் கோட்பாட்டை மேலும் மேலும் படித்துப் புரிந்து கொண்டால்தான் அறிந்து கொள்ள முடியும் என்று நினைத்தேன். எனவே இது குறித்து ஏராளமான நூல்களை வாங்கி வாசிக்கத் துவங்கினேன். இன்னும் வாசிக்க வைத்திருக்கிறேன். இந்த உலகில் மனிதர்களாகிய நாம் எப்படி வந்தோம் எங்கிருந்து வந்தோம் இந்தக் கேள்விகளுக்கெல்லாம் விடைகள் தேடும்ஒரு முயற்சி எனக்குள் இருந்தது . அந்த ஆர்வத்தால்தான் பல இடங்களில் நான் கற்றவற்றை பேசத் தொடங்கினேன். எனவே நான் இதைப்பற்றி மிக அதிகமான விளக்க உரை ஆற்றும் ஒரு கருத்தாளராக படிப்படியாக மாறினேன். கட்சி அமைப்புகளிலும் அதன் மற்ற அரங்கங்களிலும் என்னை இந்தக் குறிப்பிட்ட தலைப்பில் வகுப்பு நடத்துவதற்கு அழைப்பார்கள். அறிவியலில் மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டே இருக்கும். இந்த மாற்றங்களை எல்லாம் நான் தொடர்ந்து கவனித்து வந்தேன். அவற்றைப் பற்றி தொடர்ந்து வாசித்தேன். அதனால்தான் பாரதி புத்தகாலயம் வெளியிட்ட எங்கெல்ஸ் எழுதிய மனிதக்குரங்கிலிருந்து மனிதன் தோன்றிய இடைநிலைப் படியில் உழைப்பின் பாத்திரம் என்கிற நூலுக்கு ஒரு முன்னுரை எழுத முடிந்தது. மேலும்நிகழ்ந்துள்ள சில மாற்றங்கள் இன்றைக்கு அந்த முன்னுரையை இன்னும் சற்று மேம்படுத்த வேண்டிய தேவையை உருவாக்கி இருக்கின்றன.
இப்போது உங்களிடம் ஒரு கேள்வி : நீங்கள் ஒரு நூலுக்கு முன்னுரை எழுதியதாகக் கூறினீர்கள்.ஆனால் இவ்வளவு வாசிப்பு உள்ள நீங்கள் ஏன் அதிகம் எழுதுவதில்லை?
இது ஒரு நல்ல கேள்விதான். நான் தொடக்கத்தில் மார்க்சிஸ்ட் பத்திரிகையில் சில கட்டுரைகள் எழுதியுள்ளேன். பின்னர் சில சிற்றிதழ்களிலும் எழுதியுள்ளேன். இரண்டாயிரத்தில் வெளியிடப்பட்ட புரட்சிகளின் நூற்றாண்டு என்கிற நூலை மொழி பெயர்த்ததைக் குறிப்பிட்டுள்ளேன். அதுபோல சமீபத்தில் கூட தமிழ் இந்துவில் இரண்டு அறிவியல் கட்டுரைகள் எழுதியுள்ளேன். இந்தக் கோவிட் காலத்தில் ஒரு சிறு கதை கூட எழுதினேன். சில தோழர்களுக்கும் அனுப்பி வைத்தேன். சில சிறிய விமர்சனங்களுடன் நன்றாக இருப்பதாகக் கூறினார்கள். இவையெல்லாம் போதுமா என்று கேட்டால் நிச்சயமாகப் போதாது என்று தெரியும். என்னைப் பொறுத்தவரையில் எனக்கு வாசிப்பதிலும் வாசிப்பதைப் பகிர்ந்து கொள்வதிலும் இருக்கிற விருப்பம் எழுதுவதில் வருவதில்லை. இது ஒருவகையில் சோம்பேறித்தனமாகவும் இருக்கக்கூடும். ஆனாலும் எனக்கு எழுதுவதற்கு ஒரு பணியை கொடுத்தால்நிச்சயமாக அதைச் செய்து விடுவேன். அந்த வகையில்தான் புத்தகம் பேசுது இதழுக்கும் கூட சில கட்டுரைகளை நான் எழுதியிருக்கிறேன்.
எந்த ஒரு தீவிர வாசகருக்கும் மனதில் குறிப்பிடத்தக்க அளவில் தாக்கங்களையும், வாசிப்பில் புதிய கோணங்களையும் உருவாக்கிய நூல்கள் இருக்கும். அப்படிப்பட்ட நூல்களை நீங்கள் கூற முடியுமா?
கடந்த பத்தாண்டுகளின் வாசிப்பில் நான் பல நூல்களை வாசித்ததுண்டு. அதில் என்னை உணர்வுபூர்வமாக மிகவும் பாதித்த நூல் ஒன்றைக் குறிப்பிட வேண்டுமென்றால் மேரி கேப்ரியல் எழுதிய லவ் அண்ட் கேப்பிட்டல் என்னும் நூலைக் கூறலாம். இந்த நூல் மார்க்ஸ், ஜென்னி ஆகியோரது குடும்பத்தைச் சுற்றி பின்னப்பட்ட ஒரு நூல். அது வெறும் குடும்ப உறவுகளை மையப்படுத்தி எழுதப்பட்ட நூல்மட்டுமல்ல. மார்க்சுக்கும், எங்கெல்சுக்குமான உறவு, அவர்கள் இணைந்து செய்த புரட்சிகரமான Iஅரசியல் நடவடிக்கைகள், எழுதிய நூல்கள் ஆகியவற்றின் வரலாற்றுப் பின்னணியை விவரிக்கிறது. அத்துடன் முக்கியமாக மார்க்ஸின் முக்கியமான நூலான மூலதனத்தை அவர் எழுதிய அவரது கடுமையான உழைப்பின் வரலாற்றை எடுத்துக்கூறுகிறது. மார்க்ஸ் குடும்பத்தின் வறுமை, அதனால் நிகழ்ந்த சோகங்கள் ஆகியவற்றை ஒரு சோகமான விவரிப்புடன் ஒரு நாவலைப் போல, நேரில் பார்ப்பது போல எழுதியுள்ளார் மேரி கேப்ரியல். இதைப் படித்து முடித்த பின் மார்க்ஸ் குடும்பத்தில் நானும் ஒருவனாக ஐக்கியமாகி விட்டேன். நூல் 2011இல் வெளிவந்தது. 2012ல் ஆமெரிக்கா சென்றிருந்த ஒரு தோழர் வாங்கி வந்து கொடுத்த போது நிதானமாகப் படிக்கத் தொடங்கினேன். 2013ல் என் மகனும், மருமகளும் அவர்கள் தங்கியிருந்த பாரீசுக்கு அழைத்த போது என் மகளுடன் சென்றிருந்தேன். பாரீஸ் நகரை சுற்றிப் பார்த்த நேரம் போக, விட்ட இடத்திலிருந்து மீண்டும் படிக்கத் தொடங்கினேன். அப்போது எனக்கு ஒரு வித்தியாசமான அனுபவம் நிகழ்ந்தது.
பாரீசில் உலகப் புகழ்பெற்ற லூர் எனும் அருங்காட்சியகம் உள்ளது. அதன் அருகில் டூலரிஸ் என்று அழைக்கப்படும் ஒரு பூங்கா உள்ளது. அங்கிருந்த நாட்களில் வீட்டிற்கு அருகில் இருந்த அந்தப் பூங்காவில் சென்று இந்த நூலை வாசிப்பது எனக்கு மகிழ்ச்சிகரமான அனுபவமாக இருந்தது. அங்கு நான் ஒரு நாள் வாசிக்கத் தொடங்கியபோது பாரீசில் இரண்டாவது அகிலம் தொடங்கிய பகுதியைப் படித்துக்கொண்டிருந்தேன். அந்த அகிலம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. பிரெஞ்சுப் புரட்சியை குறிக்கும் நூற்றாண்டைக் குறிக்கும் ஆண்டில் அது நடைபெற்ற ஜுலை 14ம் நாள் அகிலம் தொடங்கியது. அந்த மாநாட்டிற்கு வழிகாட்டிய எங்கெல்ஸ் சில காரணங்களால் கலந்துகொள்ளவில்லை. மாநாட்டின் நடவடிக்கைகளை லண்டனில் இருந்து கேட்டறிந்து கொண்டிருந்தார். அந்த மாநாடு மிகப்பெரும் வெற்றியைப் பெற்றது. அதே நாளில்தான் உலகப் புகழ்பெற்ற ஈஃபில் டவர் நிர்மாணிக்கப்பட்டது.
இந்த மாநாட்டில்தான் மே தினம் உலகத் தொழிலாளர் தினமாக அறிவிக்கப்பட்டு 1890 மே 1 முதல் மே தினமாகக் கொண்டாடப்பட வேண்டும் என்று அறைகூவல் விடுக்கப்பட்டது. இத்தகைய வரலாற்றுப் பின்னணியை நான் வாசித்துக் கொண்டிருந்த அக் கணத்தில் நான் அமர்ந்திருந்த இடத்திலிருந்து சற்றே அருகில் இருந்த காரே டு நோட் என்கிற இடத்தில்தான் வரலாற்றுப் புகழ் பெற்ற அந்த அகிலம் நடைபெற்றுள்ளது எனக்குள் ஒரு சிலிர்ப்பை உருவாக்கியது. அந்த காரேடுநோட் தமிழர்கள் குறிப்பாக இலங்கைத் தமிழர்கள் மிகவும் அதிகமாக வசிக்கும் பகுதியாக இப்போது மாறிவிட்டது. அங்கு பல கடைகளின்அறிவிப்புப்பலகைகளில்தமிழ்ப்பெயர்கள்இருப்பதைப் பார்க்க முடிந்தது.
தற்செயலாக நடைபெற்ற சம்பவம் என்றாலும் அது இன்றும் மறக்க முடியாத அனுபவம். இந்த நூலைச் சுற்றி எனது வாசிப்பு அனுபவங்கள் மேன்மேலும் விரிவடைந்தன என்றுதான் சொல்ல வேண்டும். மார்க்சின் பல்வேறு படைப்புகளை நான் அக் காலத்தில் அவர் வாழ்ந்த வாழ்க்கையின் வரலாற்றுச் சூழலில் பார்க்கத் தொடங்கினேன். புத்தகம் பேசுது இதழில் பாரதி புத்தகாலயம் வெளியிட்ட ஒரு தொகுதியிலிருந்து 1852ல் மார்க்ஸ் எழுதிய “லுயீ போனபார்ட்டின் பதினெட்டாம் புரூமேர்” என்ற நூலை அறிமுகம் செய்து எழுதினேன். அந்த நூல் எழுதப்பட்ட பின்னணியை இந்த நூலில் தேடினேன். மோஹ்ர் என்று அவரது வீட்டில் குழந்தைகள் உட்பட அனைவராலும் அழைக்கப்படும் மார்க்ஸ் முதுகில் அவரது மகன் யானையைப் போல் தவழச் சொல்லி சவாரி செய்வான். இப்படிக் குழந்தைகளுடன் விளையாடிக்கொண்டே மற்றொருபுறம் இந்த நூலை எழுதியிருக்கிறார் மார்க்ஸ். இந்த நூலைத் தொடர்ந்து மார்க்சின் மூன்றாவது மகளான எலனார் மார்க்சின் வாழ்க்கை வரலாற்று நூலையும் வாசித்தேன். மார்க்சின் மூலதனத்தின் மூன்றாவது பகுதியை உருவாக்குவதில் கடும் உழைப்பை செலுத்தியவர் எலனார். மார்க்ஸ் தன்னுடைய மகள்களைப் பற்றி கூறும் பொழுது முதல் மகளான ஜெனிசன் என்னைப் போன்றவள். ஆனால் என் மூன்றாவது மகளான டஸ்ஸி நானேதான் என்று கூறுவார். டஸ்ஸி என்பது குடும்பத்தில் அவரது செல்லப் பெயர். அவரது நெருங்கிய நண்பர் பெர்னார்ட் ஷா. எலனாரின் மரணம் ஒரு மாபெரும் சோகம். அவரது கணவன் ஏவ்லினின் மோசமான நடவடிக்கைகளும் துரோகமும் அவரது தற்கொலையில் முடிந்தது. அவரது மரணத்தில் ஏவ்லின் சந்தேகமும் இருந்தது.இரண்டாவது மருமகன் லஃபார்கேயும், மகள் லாராவும் அதேபோன்று தற்கொலை செய்து கொண்டனர். அவர்களது மிகப் பெரிய இறுதி ஊர்வலத்தில் லெனின் கலந்து கொண்டார். முதல் மகள் ஜெனிசன் மார்க்ஸ் வாழ்ந்த காலத்திலேயே புற்றுநோயால் மரணம் அடைந்தார். ஏற்கனவே ஒருவருக்கொருவர் அளவற்ற காதல் கொண்ட மனைவி ஜென்னியின் மரணமும், மகளின் மரணமும் மார்க்சை அவரது இறுதி முடிவை நோக்கித் தள்ளின. மார்க்சின் மூன்று மகள்களும் மிகத் துன்பமான இறுதி முடிவை எட்டினர். பாலம் வாசகர் சந்திப்பில் மார்க்ஸ் 200ஐ முன்னிட்டு 2018ல் இந்த நூலை அறிமுகம் செய்தேன். அதில் ஒரு காட்சி.
1883 மார்ச் 13ம் நாள் வழக்கம் போல் எங்கெல்ஸ்குடையைஆட்டியபடிமார்க்சின் வீட்டிற்கு அவரோடு அளவளாச் செல்கிறார். மார்க்சின் வீட்டில் அவரைக் கவனித்துக் கொள்ளும் ஹெலன் டெமூத் கதவைத் திறந்து எங்கெல்சை வரவேற்கிறார். இருவரும் மார்க்சின் அறைக்குச் செல்கிறார்கள். புத்தகத்தின் இந்தப் பகுதியைப் பற்றிக் கூறவருகையில் நானும் அந்த அறைக்குள் இருப்பதாக உணர்ந்து அந்தக் காட்சியை தத்ரூபமாக என் மனக்கண்ணில் பார்த்தேன். மார்க்ஸ் அவரது நாற்காலியில்உட்கார்ந்தநிலையிலேயே தனது இறுதி மூச்சைநிறுத்தியிருந்தார். கண்களில் பொங்கும்நீரோடு, தொண்டை அடைத்தது. பேச முடியவில்லை. யாரோ குடிக்கத் தண்ணீர் கொடுத்தார்கள்.தன் நிலைக்கு வரச் சில நிமிடங்கள் ஆயிற்று.
இந்த நூல் மேலும் பல நூல்களைத் தேடச் செய்தது எங்கெல்ஸ் இருநூறாவது நூற்றாண்டு விழாவை முன்னிட்டு அவருடைய வாழ்க்கை வரலாற்றை விளக்கும் மார்க்ஸ்’ஸ் ஜெனரல்,மிஸஸ் எங்கெல்ஸ் ஆகிய நூல்களைப் படிப்பதற்காக வைத்திருக்கிறேன்
நான் என் இணையருடன் 2014ல் ஐரோப்பியப் பயணம் மேற்கொண்டபோது பிரஸ்ஸல்ஸ் நகருக்குச் சென்றிருந்தோம். அந்நகரின் முக்கியமான சதுக்கத்தில் ஹோட்டல் ஸ்வான் இருக்கிறது. அங்கு அணி கிளர்ப் பலகையில் மார்க்ஸ் அங்கு வந்து சென்றதைப் பதித்திருக்கிறார்கள். எனக்கு அந்தச் சதுக்கத்தில் 1848ல் மார்க்சும் எங்கெல்சும் இங்கேதான் உலாவியபடி கம்யூனிஸ்ட் அறிக்கை குறித்து விவாதித்திருப்பார்களோ என்று தோன்றியது. பிரஸ்ஸல்ஸ் நகரில் இருந்துதான் அவர்கள் அந்த அறிக்கையைத் தயாரித்தார்கள். அதுபோல மார்க்ஸ் பிறந்த நகரம் ட்ரயருக்குச் சென்றிருந்தோம். அங்கு மார்க்சுக்கு ஓர் அருங்காட்சியகம் அவர் பிறந்த வீட்டிலேயே நிறுவப்பட்டிருக்கிறது. பல்வேறு மொழிகளில் வெளியிடப்பட்ட கம்யூனிஸ்ட் அறிக்கைகள் சில இந்திய மொழிகள் உட்படஅங்கு காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன.
அதில் இடம்பெற்றிருந்ததுமகிழ்ச்சியளித்தது. மார்க்ஸின் உண்மையான கையெழுத்தில் அவரது எழுத்துகள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. பகுதி பகுதியாக மார்க்ஸின் வரலாறு குறிக்கப்பட்டிருந்தது. அவர் இளம்வயதில் தவழ்ந்து விளையாடிய இடங்களைப் பார்க்க முடிந்தது. அவரது ட்ரயர் நகர இளமைக் காலம் குறித்த மேரி கேப்ரியலின் விவரிப்புகள் மனதில் வந்து போயின.
ஐரோப்பாவின் பல்வேறு இடங்களுக்குப் பயணம் செய்தபோது அந்த இடங்கள் ஏதோ ஒரு வகையில் இந்த நூலுடன் என்னைத் தொடர்பு படுத்தின. அப்போதைய கிழக்கு ஜெர்மனி பெர்லினில் மார்க்ஸ், எங்கல்சுக்கு நிறுவப்பட்ட பிரம்மாண்டமான சிலைகளோடு, அங்கு பொது மக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்த இடிக்கப்பட்ட சுவரின் மிச்சம் மீதிகளையும் பார்த்தோம். இப்படி ஏதோ ஒரு வகையில் மார்க்ஸ் வாழ்ந்த காலத்திலும் அதற்குப் பிந்தைய காலத்திலும் மார்க்சுடன் தொடர்புபடுத்திக் கொள்ள முடிந்தது.
பிராக் நகரில் நாங்கள் இருந்த நேரம் 1968ல் வார்சா ஒப்பந்தப் படைகள் அங்கு னுழைந்து செக்கோஸ்லோவோகியாவின் இடதுசாரி ஜனநாயக அரசை அகற்றி மக்கள் விருப்பத்திற்கு மாறாக வேறோர் அரசை நிறுவியதை நினைவு கூரும் ஏதோ ஒரு நிகழ்ச்சி . 1969 ஜேன் பெலாஷ் என்கிற ஒரு மாணவன் இதைக் கண்டித்து தனக்குத்தானே தீ வைத்துக் கொண்டு இறந்தான்.அவன் நினைவாக தியாக தீபம் ஏற்றியுள்ளார்கள். பல இடங்களில் நினைவகம் அமைத்துள்ளார்கள். புகைப்படக் கண்காட்சி நடத்துகிறார்கள். பழைய அமைப்பை நையாண்டி செய்து திரைப்படங்களைத் திரையிடுகிறார்கள். மார்க்சின் கோட்பாடுகள் உருவான வரலாற்றையும், கனவுகளையும், பின்னர் அவரது கோட்பாட்டை முன்வைத்து உருவான சோசலிச சமூகத்தையும்,
தற்காலிகமாக அதன் சிதைவுகளையும் எண்ணிப் பார்த்தேன். மனம் காரணங்களை அசை போடத் தொடங்கியது.
இதைப்போல இதற்கு முந்தைய பத்தாண்டுகளில் என்னுடைய வாசிப்பை விரிவாக்கிய நூல் என்று நான் முக்கியமாக ஒரு நூலைக் குறிப்பிட வேண்டுமென்றால் முதலில் ஆங்கிலத்தில் வாசித்த ஜேரட்
டயமண்ட் எழுதிய கன்ஸ் ஜேர்ம்ஸ் அண்ட் ஸ்டீல் என்கிற நூல்.ஆங்கிலத்தில் இது வெளிவந்தபோது மார்க்சிஸ்ட் இதழில் இந்த நூலை நான் அறிமுகம் செய்து எழுதினேன். பின்னால் ப்ரவாஹனால் மொழிபெயர்க்கப்பட்டு அந்த நூல் வெளிவந்தது. அந்த நூலை மொழிபெயர்க்கலாம் எனப் பரிந்துரை செய்ததில் எனக்கும் ஒரு சிறு பங்கு இருக்கிறது. அந்த வகையில் அந்த நூலைத் தொடர்ந்து நான் மானிடவியல், வரலாறு ,பரிணாமக் கோட்பாடு, மரபணுவியல், நிலவியல் என்று பல்துறை சார்ந்த நூல்களை ஆங்கிலத்தில் தேடிப் பிடித்துப் படிக்கத் துவங்கினேன். எனது வாசிப்பு புதிய தளத்தில் விரிவடைந்தது இக்கால கட்டத்தில்தான்.
இதுபோல எண்பதுகளின் துவக்கத்தில் எனது வாசிப்பை விரிவாக்கக் காரணமாக அமைந்த ஒரு நூலை நான் குறிப்பிட வேண்டும் என்றால் அது ராகுலசாங்கிருத்யாயன் எழுதிய வால்கா முதல் கங்கை வரை எனக் கூறுவேன். அந்த நூலைத் திரும்பத் திரும்ப வாசித்திருக்கிறேன். அது மார்க்சிய அடிப்படையில் வரலாற்றுப் புரிதலை மிக எளிமையாக விளக்கும் ஒரு நூல். இன்றளவும் பொருத்தப்பாடுடையது. குடும்பம், தனிச்சொத்து, அரசு என்கிற எங்கெல்ஸ் எழுதிய நூலை அடிப்படையாக வைத்து எழுதப்பட்ட அந்த நூலின் பின்னணியில் நான் வரலாற்றுப் பொருள் முதல்வாத அடிப்படையில் அமைந்தபல்வேறு நூல்களைப் படிக்கத் தொடங்கினேன். மேலும் பல மார்க்சிய நூல்களையும், கட்சி ஆவணங்களையும் தீவிரமாக வாசிக்கத் தொடங்கினேன். இதைப் பற்றி ஏற்கனவே குறிப்பிட்டுள்ளேன்.
தற்போது இந்தக் கோவிட் காலத்தில் நான் வாசித்த சில நூல்களைக் குறிப்பிட வேண்டுமென்றால் பொருளாதாரம் குறித்துத் தந்தை மகளுக்கு எழுதிய கடிதம் என்கிற வருஃபாகிஸ் யானிஸ் எழுதிய, எஸ். வி. ராஜதுரை அவர்களால் மொழிபெயர்க்கப்பட்ட பொருளாதாரம் பற்றி என் மகளுக்கு அளித்த விளக்கம் எனும் நூல், இமயத்தின் வாழ்க வாழ்க எனும் குறுநாவல்.
பி எஸ் கிருஷ்ணன் நீண்டபேட்டியில் வெளிவந்துள்ள சமூக நீதிக்கான போராட்டம் எனும் நூல் ஆகியவற்றைக் கூறலாம்.
ஆங்கிலத்தில் டி எம் கிருஷ்ணாவின் செபஸ்டியன் அண்ட் சன்ஸ் வீரராகவன் எழுதிய ஹாஃப் எ டே கேஸ்ட், இண்டிகா (விரைவில் பாரதி புத்தகாலயம் தமிழில் வெளியிடவிருக்கிறது), ஹவ் டு ஆர்க்யூ வித் எ ரேசிஸ்ட் ஆகியவற்றைக் கூறலாம். இந்த ஆண்டில் நான் படித்த புத்தகங்களில் முற்றிலும் மாறுபட்டது ஐரீன் பெப்பர்பெர்க் என்பவர் எழுதிய “அலெக்ஸ் அண்ட் மீ” என்கிற நூல். இதில் அலெக்ஸ் என்பது ஒரு சாம்பல் நிற ஆப்பிரிக்கக் கிளி. நூலின் ஆசிரியர் அந்த கிளியைப் பல ஆண்டுகள் ஆய்வுசெய்த ஆராய்ச்சியாளர். இவர்களுக்கு இடையே உள்ள உறவை உணர்ச்சிப்பூர்வமாக நூலில் ஐரீன் முன்வைக்கிறார். பறவைகளுக்கும் நம்மை போலச் சிந்திக்கும் திறனும், தன் உணர்வும் இருக்கிறதா என்பதை ஆய்வு செய்கிறார் ஐrரீன். அலெக்ஸ் ஒரு ஆறு வயதுக் குழந்தைக்குரிய அறிவுடன் செயல்படுகிறது என்பதை ஆதாரங்களுடன் முன் வைக்கிறார். அலெக்ஸ் இறந்தபோது அந்தச் செய்தியை அப்போது பத்திரிகைகளிலும் தொலைக்காட்சியிலும் பார்த்த நினைவு எனக்கு இருக்கிறது. பலரும் அலெக்ஸின் மரணத்தை மிக முக்கியமாக அன்று குறிப்பிட்டதை ஒரு செய்தியாக கடந்து சென்று விட்டேன். இன்று,அது ஒரு முக்கியமான நிகழ்வு என்பதை இந்த நூல் உணர்த்தியது. அலெக்ஸ்ஒரு கிளி என்று எளிதாகக் கடந்து போக முடியாது. விலங்குகளுக்கு உள்ள உணர்வுகள், எண்ணங்கள், சிந்தனைகள் ஆகியவை குறித்த ஆய்வுகள் முக்கியம் என்பதை அலெக்ஸ் உணர்த்திச் சென்றது.
உங்கள் மீது தாக்கங்களைச் செலுத்திய சில நூல்களைப் பற்றிக் குறிப்பிட்டீர்கள். உங்களுடைய வாசிப்பு முறை எத்தகையதாக இருக்கிறது?
நான்துவக்கத்திலிருந்தே.பலவகைமாதிரி நூல்களை வாசிப்பவன். ஆங்கிலத்தில் சொல்வது போல, என்னை ஜாக் ஆஃப் ஆல், மாஸ்டர் ஆஃப் நன் எனலாம்.என்ன செய்வது? இந்த மாதிரிப் பலதையும் படிக்கத்தான் மனம் விரும்புகிறது.
புத்தகங்கள் மட்டுமல்ல, நாளிதழ்களையும், சில வார மாத இதழ்களையும், சிற்றிதழ்களையும் வாசிக்கும் பழக்கம் உடையவன். ஒரு புத்தகம் கொடுக்கும் தாக்கத்தை விட ஒரு கட்டுரை கொடுக்கும் தாக்கம் சில நேரங்களில் அதிகமாக இருப்பதுண்டு.
இன்று கடையிலும், வீட்டிலும் ஏராளமான நூல்கள்நிறைந்து கிடக்கின்றன. போதாதற்கு மின்நூல் வாசிப்பிற்குக் கிண்டில், கைபேசி இருக்கிறது. இவற்றிலும் படிக்க நூல்களும், கட்டுரைகளும் நிறைந்து கிடக்கின்றன. மேலும் அமேசான் ஆடிபிள் செயலி மூலம் கேட்பதற்கு ஆங்கில நூல்கள். கேட்கும் நூல்களின் வசதி என்னவென்றால் காலையில் காய்கறிகளை நறுக்கும் போதோ, சமைக்கும் போதோ புத்தகங்களைக் கேட்க முடியும்.
ஹாண்ட்ஸ் ஃப்ரீ இயர் ஃபோன்களைக் காதில்பொருத்திக் கொண்டு நான் உடற்பயிற்சியும் செய்வதுண்டு. அதில் சில நூல்களை சமீபத்தில் கேட்டேன். ரிச்சர்ட் டாக்கின்ஸ் எழுதியுள்ள “அவுட் குரோயிங் காட்” என்கிற நூல். இதில் இறை மறுப்பை, மத நம்பிக்கைகளைக் கேள்விகளுக்குட்படுத்துகிறார். அதுபோல அமேசான் ஆடிபிள் ஏராளமான நூல்களை உலகின் தலைசிறந்த அறிஞர்களைப் பேச வைத்து வெளியிட்டுள்ளது. அவை என்னிடம் உள்ளன. பிரான்சிஸ் ஃபுகு யோகமாவின் “ஐடென்டிட்டி” . இது நியோலிபரலிசத்தின் தோல்வியைப் பேசுகிறது . இவரே 30 வருடங்களுக்கு முன்பு சோவியத் யூனியனின் மாபெரும் வீழ்ச்சிக்குப் பிறகு சோசலிசம் தகர்ந்தது எனவும், முதலாளித்துவம்தான் உலகின் இறுதியான நிரந்தரச் சமூகம் எனவும் கூறும் “தி எண்ட் ஆஃப் தி வேர்ல்ட் ” என்கிற ஒரு நூலை எழுதியவர். முதலாளித்துவ உலகில் பெரும் வரவேற்பைப் பெற்றது அந்த நூல். ஆனால் இப்போது எழுதியுள்ள ஐடென்டிட்டி முதலாளித்துவத்தின் அப்பட்டமான தோல்விகளைக்கடுமையாக விமர்சிக்கிறது. உலகை மாற்றிய 36 புத்தகங்கள் என்பது பற்றிய ஆங்கில நூலையும் கேட்டுக்கொண்டிருக்கிறேன். சிலர் ஆடிபிளைத் தொடர்ந்து கவனிக்க முடியவில்லை என்கிறார்கள். அதே போல் கிண்டில் படிப்பது புத்தகங்களைத் தொட்டுப் புரட்டிப் படிக்கும் அனுபவத்தைக் கொடுப்பதில்லை என்றும் சிலர் கூறுகிறார்கள். ஆனால் புத்தகங்கள் வாங்கிக் குவிக்கும் நண்பர்கள் சிலர் வீட்டில் இடப்பற்றாக்குறை காரணமாக மின்நூல் வாசிப்புக்கு மாறிக்
கொண்டிருக்கிறார்கள். என் அனுபவத்தில் வாசிப்பிற்கு ஒரு பெரிய தடை சமூக ஊடகங்கள். வாசிப்பை நோக்கமாகக் கொண்டவர்கள் இதில் அதிக நேரத்தைச் செலவிடாமல் இருப்பது நல்லது.
கடந்தகாலம் போல் ஒரு புத்தகத்தை முழுமையாக ஒரே மூச்சில் படித்து முடிக்க முடியவில்லை. புத்தகங்கள் சேமிப்பில் அதிகம் இருப்பதால் மனம் ஒவ்வொரு சமயத்திலும் மாறுகின்ற சூழல், மன நிலை ஆகியவற்றுக்கு ஏற்ப வெவ்வேறு நூல்களை நாடுகிறது. ஒரே நேரத்தில் பல புத்தகங்களைப் படிக்கும் பழக்கம் எனக்குண்டு. ஆனாலும் அதில் ஒன்று அல்லது இரண்டு புத்தகங்களை முழுமையாக வாசித்து விடுவேன். என்னைப் போன்ற பலருக்கும் இதே அனுபவம்தான் என்று கேள்விப்படுகிறேன்.
சமீபத்தில் நேவல் ரவிகாந்த் என்பவர் எழுதிய ஒரு கட்டுரையைப் படித்தேன். அது என்ன கூறுகிறது என்றால் ஒரு புத்தகத்தை நாம் படிக்கும் போது முழுமையாகப் படித்து முடித்த பின்னர் தான் அடுத்த புத்தகத்தைப் படிக்க வேண்டும் என நினைக்க வேண்டியதில்லை என்கிறது. பொதுவாக வாசகர்கள் ஒரு புத்தகத்தை முழுமையாகப் படிக்க முடியாமல் ஒரு விதக் குற்ற உணர்ச்சிக்கு ஆளாகி அடுத்த புத்தகத்தை வாசிக்க எடுக்கத் தயங்குகிறார்கள். அது தேவையில்லை என்கிறார் கட்டுரையாளர் நேவல் ரவிகாந்த். ஒரே நேரத்தில் பல புத்தகங்களைப் படிக்கப் பரிந்துரைக்கிறார். ஐம்பது புத்தகங்கள் வரை கூடப் படிக்கலாம் என்கிறார். அதில் ஏதாவது ஒரு புத்தகம் படிக்கப் பிடிக்கவில்லை என்றால் அதை மூடி வைத்துவிட்டு அடுத்த புத்தகம் ஒன்றை எடுத்துப் படிக்கச் சொல்கிறார். என்னைப் பொறுத்தவரையில் நான் அரைகுறையாகப் படித்த புத்தகங்கள் ஏராளம். உண்மையில் அவற்றிலிருந்து கற்றதும், பெற்றதும் ஏராளம். இக்கட்டுரையாளர் எனக்கு மேலும் மிகுந்த உற்சாகத்தையும், நம்பிக்கையையும் அளித்துள்ளார். தற்போது குற்ற உணர்ச்சி இல்லாமல் பல நூல்களை ஒரே நேரத்தில் புரட்டியபடி , அதே நேரம் சில நூல்களை ஆழ்ந்து படிக்க முடிகிறது.அது மிகுந்த பலனை அளிக்கிறது. ரவிகாந்தின் இக் கட்டுரை ஒரு புத்தகத்தை விடச் சில நேரங்களில் ஒரு கட்டுரை அதிக பாதிப்பை ஏற்படுத்தும் என நான் ஏற்கனவே குறிப்பிட்டதற்கு உதாரணம். அதே நேரம் தீவிர ஆழ்ந்த வாசிப்பை நான் குறைத்து மதிப்பிடவில்லை. ஒரு சில புத்தகங்களைத் திரும்பத் திரும்ப முழுதுமாக வாசிக்க வேண்டிய தேவையும் இருக்கிறது.
இப்போது இந்தப் பேட்டியின் மையமான கேள்விக்கு வருவோம். இதுவரை நீங்கள் கூறிய கருத்துகள் எல்லாம் பாலம் வாசகர் சந்திப்பு உருவாக நீங்கள் எப்படியானவராக, எத்தகைய வாசகராக, செயல்பாட்டாளராக இருந்தீர்கள் என்பதைப் பற்றியது. இதுவரையில் நீங்கள் ஏழு ஆண்டுகளுக்கு மேல் ஒரு வாரம் கூட இடைவெளியின்றி 370க்கும் மேலான கூட்டங்களை நடத்தி விட்டீர்கள். தமிழகம் முழுக்கவும் இந்த வாசகர் சந்திப்பு மிகப் பிரபலமடைந்த ஒன்றாக இருக்கிறது. இதை எப்படித் தொடர்ச்சியாக நடத்த முடிகிறது? இதில் நிகழ்ந்த சில முக்கிய நிகழ்வுகளைக் கூறுங்களேன்.
பாலம் வாசகர் சந்திப்பு துவங்கப்பட்டது ஒரு வித்தியாசமான கதை. பாலம் விற்பனை நிலையத்திற்கு அடுத்தாற்போல் சுமார் 50 அல்லது 60 பேர் அமரக் கூடிய நிழல் தரும் அளவிற்கு ஒரு புன்னை மரமிருக்கிறது. அங்கே தொடக்கத்தில் சில நண்பர்கள் மட்டும் கலந்து பேசக்கூடிய, இலக்கிய நூல்களை அறிமுகம் செய்யும் கூட்டங்களை நடத்தினால் என்ன என்று என் இணையர் எனக்கு ஆலோசனை கொடுத்தார். முதலில் சில நண்பர்கள் மட்டும் பங்கேற்கும் ஒரு சில கூட்டங்களை மாலையில் நடத்தினோம். பின்னர் இந்தக் கூட்டங்களை வாராவாரம் திட்டமிட்டு நடத்தினால் என்ன என்று தோன்றியது. ஒரு சில நண்பர்கள் பல இடங்களில் செய்த முயற்சிகள் வெற்றி பெறவில்லை என்று கூறினார்கள். ஆனால் பல நண்பர்கள் இந்த முயற்சிக்கு ஊக்கமளித்தனர். முதல் நிகழ்ச்சிக்குத் தியடோர் பாஸ்கரன் அவர்களை அழைத்தோம். அவர் எங்களது விற்பனை நிலையத்தின் பங்குதாரர் பாலசுப்பிரமணியம் அவர்கள் மகனின் இல்லத் திருமணத்திற்கு வந்திருந்தார். நிகழ்ச்சியில் அவர் உற்சாகமாகக் கலந்து கொண்டார். முதல் கூட்டம் சிறப்பாக அமைந்தது.
பின்னர் நடைபெற்ற கூட்டங்களில் வாசகர்கள் பல நூல்களை அறிமுகப்படுத்தினார்கள். பல்வேறு ஆளுமைகள் பங்கேற்ற ஒரு நீண்ட பட்டியல் பாலம் வாசகர் சந்திப்பிற்கு உண்டு. எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன்,
ச.தமிழ்ச்செல்வன், ஆதவன் தீட்சண்யா,
ஆயிஷா.இரா.நடராசன், அ.வெண்ணிலா, இமையம், பவா செல்லத்துரை, ஷைலஜா, சுகிர்தராணி, பி.ஏ.கிருஷ்ணன், கமலாலயன், விட்டல்ராவ், பிரின்ஸ் கஜேந்திர பாபு.
த.வி.வெங்கடேஸ்வரன், பாவண்ணன்,
பெருமாள் முருகன், சோ.தர்மன், நஞ்சுண்டன், சூழலியலாளர்கள் ஜனகராஜ், ஜெகநாதன், ஆகியோரும் அரசியல்தலைவர்கள்
ஜி.ராமகிருஷ்ணன், ரவிக்குமார் ஆகியோர் தவிரப் பலர் பங்கேற்றுளனர்.
நான் 2014ம் ஆண்டு மூன்று மாத காலம் என் மகன் அழைத்ததன் பேரில் என் இணையருடன் ஜெர்மனி சென்றிருந்தேன். அப்போதும் கூட்டங்களைத் திட்டமிட்டு நண்பர்கள் சிறப்பாக நடத்தினார்கள்.
மிக அதிகமான வாசகர்கள் ஆர்வத்துன் பங்கேற்ற ஒரு சிறப்பான நிகழ்வைக் குறிப்பிட வேண்டும் என்று நினைக்கிறேன். வாசகர் சந்திப்பின் நூற்றி ஐம்பதாவது கூட்டத்தில் எழுத்தாளர் எஸ் ராமகிருஷ்ணன் பங்கேற்றுத் தஸ்தயேவ்ஸ்கியின் குற்றமும் தண்டனையும் நாவல் வெளிவந்த நூற்றி ஐம்பதாவது ஆண்டை முன்னிட்டு உரை நிகழ்த்தினார். அங்கு வந்தவர்களில் அந்த நாவலைப் படித்தவர்கள் நிச்சயம் மிகக் குறைவு. ஆனால் தனி மேடையுடன் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அந்தப் பெரிய கூட்டத்தில் சற்றும் அசையாமல் சுமார் ஒன்றே முக்கால் மணி நேரத்திற்கு மேல் நிகழ்த்தப்பட்ட அவரது உரையை வாசகர்கள் அசையாமல், கலையாமல் ரசித்துக் கேட்டது ஆச்சரியப்படத்தக்க,வித்யாசமான அனுபவம். இப்பொழுதும் யூடியூப் சேனலில் அவரது அந்த உரை காணக் கிடைக்கிறது. இதுவரை சுமார் ஒன்றரை லட்சம் பேர் பார்த்திருக்கிறார்கள். வாசகர் சந்திப்பின் முந்நூறாவது கூட்டத்தில் மணியன் பிள்ளை கலந்து கொண்டது மிகவும் ஒரு வித்யாசமான அனுபவம். காலச்சுவடு பதிப்பகம் அவரது வாழ்க்கை வரலாற்றைச் சுயசரிதையாக வெளியிட்டுள்ளது. திருடன் மணியன்பிள்ளை என்கிற அந்த நூல் இன்னும் தொடர்ந்து வாசகர்களின் வரவேற்பைப் பெற்ற நூலாக உள்ளது. மணியன்பிள்ளை நேரில் வந்து வாசகர் சந்திப்பில் தன்னுடைய கடந்தகால வாழ்க்கை அனுபவங்களைத் திறந்த மனதுடன் பகிர்ந்து கொண்டது உண்மையிலேயே மனம் நெகிழத்தக்கதாக அமைந்தது. அவருடைய புத்தகம் மூலம் அவரை வாசித்ததைக் காட்டிலும் அவரே நேரில் வந்து பேசியதைக் கேட்டது புதிய அனுபவம்
வாசகர்கள் குறித்து ஒரு முக்கியக் கருத்தைக் குறிப்பிட்டாக வேண்டும். அவர்கள் படித்த நூல்களை அறிமுகப்படுத்தச் செய்வது அவர்களுக்கு மிகுந்த தன்னம்பிக்கையும் , தயக்கமின்றிப் பொது வெளியில் கருத்துகளை முன் வைக்கக் கூடிய திறனையும் உருவாக்கியிருப்பது மிகையல்ல. இந்நிகழ்வுகளில் பங்கேற்ற பல இளைஞர்கள் இதனால் உத்வேகம் பெற்றுள்ளார்கள். இதன் மூலம் அரசியல், சமூகப் பிரச்சனைகளில் ஏற்பட்ட ஆர்வம் காரணத்தால் அந்தத் திசையில் பயணிக்கத் தொடங்கியிருக்கிறார்கள். இதனால் உத்வேகம் அடைந்த சேலம் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தைச் சேர்ந்த தோழர்கள் ஒவ்வொரு சனிக்கிழமை இரவும் 10 மணிக்கு மேல் இதுவரையில்சுமார் 125 கூட்டங்களை நடத்தி இருக்கிறார்கள். வேறு சில இடங்களிலும் இதன் தாக்கம் இருக்கக் கூடும். தற்சமயம் கோவிட் -19 காலத்தில் இக் கூட்டங்களைத் தொடர்ந்து நடத்த முடியாமல் போனது ஒரு குறை. இருந்தபோதிலும் அந்தக் குறை நேரலை மூலமாக கூட்டங்கள் நடத்துவதன் மூலம் சரி செய்யப்ட்டுள்ளது.. இதுவரையில் சுமார் 30 கூட்டங்கள் நேரலையில் நடத்தி விட்டோம் .அதில் குறிப்பாக ஆழி செந்தில்நாதன், பெருமாள்முருகன், பொன்வண்ணன், ஹரி பரந்தாமன், டி எம் கிருஷ்ணா, எஸ் வி ராஜதுரை, ஆ.கோபண்ணா ஆகியோரைக் குறிப்பிட்டுச் சொல்லலாம். இக் கூட்டங்கள் அனைத்தும் பாரதி யூ ட்யூப் சேனலில் மறு ஒளிபரப்பு செய்யப்படுகின்றன.
இதில் அதுவரை நான் அறியாத எஸ் வி ராஜதுரை அவர்களுடன் தொலைபேசி வழியாக மட்டுமே எனக்கு கிடைத்த நெருக்கத்தை நான் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
அவர் அதற்கு முன் எனக்கு அறிமுகமில்லாதவர். யானிஸ் என்னும் பொருளாதார அறிஞர் எழுதிய நூலை அவர் “பொருளாதாரம் குறித்துத் தந்தை மகளுக்கு அளித்த விளக்கம் ” எனும் தலைப்பில் மொழியாக்கம் செய்திருக்கிறார் என்பது தெரியும். இந்த நூலைக் க்ரியா பதிப்பகம் வெளியிட்டுள்ளது. அவரிடம் இந்த நூலை நேரலையில் அறிமுகப் படுத்தக்கேட்ட போது இசைந்தார். அவரது நேரலை உரை மிகச் சிறப்பாக அமைந்தது. அதன் பிறகு அவருடன் தொடர்ந்து பேசுவேன். எங்கள் உறவு நெருக்கமாக அமைந்தது. அவர் எனக்கு அறிமுகப்படுத்தும் யூ ட்யூப் இசை சார்ந்த லிங்க்குகளும், படித்த நூல்களும் என்னைப் பிரமிக்கச் செய்கின்றன. அவர் வாசித்த இலக்கிய நூல்கள் குறித்து அவர் பேசும் போது எனக்குள் ஏற்படும் ஏக்கத்தைத் தவிர்க்க முடியவில்லை. அறியப்படாத அவரது ஆளுமையின் மற்றொரு புறம் இன்னும் பதிவு செய்யப்படவில்லை. இன்னும் இது போலப் பல அனுபவங்களைக் கூற முடியும்.
இக் கூட்டங்களைத் தொடர்ந்து நடத்த வாசகர்கள் கொடுக்கும் ஆதரவு அபரிமிதமானது. அவர்கள் செய்யும் பொருளுதவி செலவினங்களில் ஒரு பகுதியை ஈடுகட்டியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அது போல் அவர்கள் தொடர்ந்து காட்டி வரும் ஆர்வமும் அக்கறையும் அபரிமிதமானது.
பாலம் வாசகர் சந்திப்புக் கூட்டங்களில் கலந்து கொள்பவர்களின் எண்ணிக்கை ஏற்ற இறக்கங்களுடன் இருக்கும். ஆனால் ஒற்றைப்படை எண்ணிக்கையுடன் எப்போதும் நடைபெற்றதில்லை. அதன் 300வது கூட்டம் வரை சராசரிக் கணக்கெடுத்தோம். சராசரியாக 42 பேர் கலந்து கொண்டிருக்கிறார்கள். எங்களைப் பொறுத்தவரையில் இது ஒரு நல்ல எண்ணிக்கைதான்.
இத்துடன் இந்தப் பாலம் வாசகர் சந்திப்பிற்கு அடிப்படையான பாலம் பற்றியும் சில கருத்துகளைக் கூற விரும்புகிறேன்.
பாலம் ஒரு புத்தகக்கடை என்கிற வகையில் இதுவரையில் கடை லாபகரமாக இயங்கவில்லை என்பதே உண்மை. கணிசமான தொகையை இதற்காகச் செலவிட்டிருக்கிறேன். எனக்கென்று சில புத்தகங்களை எடுத்து வந்து படிப்பதைத் தவிர வேறு எதுவும் எடுத்துக் கொள்ள முடிந்ததில்லை. என் பின்னால் என் குடும்பத்தினர் மிகுந்த உற்சாகத்துடன், உறுதியுடன் நிற்கின்றனர். ஒரு நெருக்கடி ஏற்பட்ட போது சில தோழர்கள் மனமுவந்து உதவினார்கள். ஆயினும் இந்தப் பதினைந்து ஆண்டுகளில் இழந்ததை விடப் பெற்றவைதான் அதிகம்.
பாலம் புத்தக நிலையம் தொடங்கி அதனுடைய பதினைந்தாவது ஆண்டு நிறைவு நிகழ்ச்சியில் எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வன் கூறியதை இங்கு குறிப்பிட விரும்புகிறேன். ” “பாலம் என்பது ஒரு புத்தக விற்பனை நிலையம் அல்ல, அது ஓர் இயக்கம் ” என்று குறிப்பிட்டார். கேட்க மனதிற்கு நிறைவாக இருந்தது.
பேட்டியின் இறுதிப் பகுதிக்கு வந்து விடலாம் என்று நினைக்கிறேன். இது உலகையே ஒரு சிறிய வைரஸ் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கும் காலம். இதுவரை உலகம் சந்திக்காத புதிய வகைப் பிரச்சனைகளை கடந்த ஏழு மாதங்களாகச் சந்தித்து வருகிறோம். இந்தச் சூழலில் ஒரு வாசகராக நீங்கள் என்ன கூற விரும்புகிறீர்கள்?
உண்மையிலேயே இது ஒரு பயங்கரமான சூழல்தான். மனிதர்களுக்கிடையிலான சமூக உறவுகள் துண்டிக்கப்பட்டு இருக்கின்றன. பொருளாதாரத் தேக்கம் கோடிக்கணக்கான மக்களுக்கு வேலை வாய்ப்புகள் பறிபோய், வாழ்வாதாரங்களையே கேள்விக்குள்ளாகியுள்ள இந்தச் சூழலில் நான் ஒரு வாசகராக மேலும் என்ன கூறி விடமுடியும் என்று தெரியவில்லை. ஆனால் சில கருத்துகளை மட்டும் கூற முடியும். இந்தக் கோவிட் பிரச்சனை உருவாவதற்கு முன்பே கிரேடா துன்ர்பக் என்கிற சிறுமி இந்த உலகை மாசுபடுத்தி ஒரு மோசமான உலகை எங்களிடம் விட்டுச்செல்ல உங்களுக்கு என்ன உரிமை இருக்கிறது என்று நம்மைப் பார்த்துக் கேட்டாள் மேலும்.” நாம் நமது எதிர்காலம் குறித்துப் பேசுகிறோம். அவர்கள் தங்கள் நிகழ்காலத்தைப் பற்றிப் பேசிக் கொண்டிருக்கிறார்கள்” என்று அழுத்தம் திருத்தமாகக் கூறினாள் அச்சிறுமி. எத்தன பேர் செவிகளில் இது விழுந்தது என்று தெரியாது. ஆனால் நிச்சயமாக உலகத் தலைவர்கள் காதுகளில் விழுந்திருக்கும். இந்த உலகின் வெப்பநிலை அடுத்த சில பத்தாண்டுகளில் ஒரு டிகிரி உயர்வதற்கான வாய்ப்பு இருப்பதாக விஞ்ஞானிகள் பலர் திரும்பத் திரும்ப கூறுகிறார்கள். ஆனால் இந்த உலகின் இயற்கை வளங்களை அதிகம் அழித்து உலகை மாசுபடுத்தி கொண்டிருக்கிற நாடுகளில் முதன்மையான அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் இதைச் சட்டை செய்யவில்லை. பருவநிலை மாற்றம் என்பதே ஒரு மோசடி என்று பேசுகிறார்.
சமீபத்தில் அமெரிக்காவில் இருக்கும் ஒரு மருத்துவரின் பேட்டியைப் படித்தேன் அவர் இந்த உலகம் இன்னும் அதிகமான பல கொள்ளை நோய்களைச் சந்திக்க வேண்டி இருக்கும் என்று கூறியிருக்கிறார் ஏற்கனவே அமிதவ் கோஷ் என்கிறஇந்திய ஆங்கில எழுத்தாளர் கிரேட் டிரேஞ்மெண்ட் என்கிற பருவநிலை மாற்றம் குறித்த நூலை எழுதி இருக்கிறார். இவர் புகழ் பெற்ற நாவலாசிரியர். நம் எழுத்தாளர்கள் இதைப் பற்றி எல்லாம் யோசித்துப் பார்க்கிறார்களா? எனக்குத் தெரிந்து ஒரு நாவலோ, சிறுகதையோ, கவிதையோ பருவநிலை மாற்றம் குறித்துப் படைக்கப்பட்டதாகத் தெரியவில்லை. நமது எழுத்தாளர்களின் படைப்புகளில் இந்த அபாயம் எதிரொலிக்க வேண்டாமா? மக்களிடம் இந்தக் கருத்தைக் கொண்டு செல்லும் கடமை ஊடகங்களுக்கும் பத்திரிகைகளுக்கும், படைப்புகளுக்கும் இல்லையா?அடுத்த சில பத்தாண்டுகளில் பூமியின் வெப்பநிலை உயர்ந்து கடல் மட்டம் உயர்ந்தால் வங்களாதேசம் மூழ்கிப் போய் கோடிக் கணக்கான பருவநிலை மாற்ற அகதிகள் இந்தியாவுக்குள் தஞ்சம் புகுவார்கள் என்பது எத்தனை பேருக்கு தெரியும்? சென்னையும் மும்பையும் திருவனந்தபுரமும் கல்கத்தாவும் மூழ்கிவிடும் அபாயம் இல்லை என்று எத்தனை பேர் கூறமுடியும்? எனவே முதலில் நீங்கள் கேட்ட கேள்விக்கு நான் சொல்ல விரும்புவது கோவிட் ஒரு எச்சரிக்கை மணி. நாம் விழித்துக் கொள்ள வேண்டும். இதைப்பற்றி நான் இதற்கு முன்பு எழுதியிருந்த கட்டுரையிலிருந்து சில அறிவியல் கருத்துகளை மட்டும் கூறி இந்தப் பேட்டியை நிறைவு செய்ய விரும்புகிறேன்.”பதினெட்டு, பத்தொன்பதாம் நூற்றாண்டுகளில் பெரியம்மைத் தொற்றால் இறந்தவர்கள் ரஷ்யாவின் சைபீரியப் பகுதியில் புதைக்கப்பட்டிருக்கிறார்கள். 1890-ம் ஆண்டில் இந்த வைரஸ் சைபீரியப் பகுதி மக்களை மிகப்பெரிய அளவில் தாக்கியது. இதில் ஒரு நகரத்தில் மட்டும் நாற்பது சதவீத மக்கள் மாண்டுபோனார்கள். அவர்களுடைய சடலங்கள் நிலத்தடி உறைபனிப் பகுதியின் மேல்புறத்தில் உள்ள கல்லறைகளில் புதைக்கப்பட்டன. இந்தப் பகுதி கொல்யாமா எனும் இடத்தின் நதிக்கரையில் அமைந்துள்ளது.
நூற்றி இருபது ஆண்டுகளுக்குப் பின் கொல்யாமாவில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் அதன் நதிக்கரைகள் உடைந்தன. 1990ஆம் ஆண்டு அந்தப் பகுதியில் சில சடலங்கள் கண்டெடுக்கப்பட்டன. அவற்றில் பெரியம்மை நோய்த் தாக்குதலால் ஏற்பட்ட அம்மை வடுக்கள் காணப்பட்டன. ஆனால் அந்தச் சடலங்களில் பெரியம்மைக்குக் காரணமான வைரஸ் வகைகள் கிடைக்கவில்லை என்றபோதிலும், அவற்றில் அந்த வைரஸ் வகைகளின் டி.என்.ஏ. மூலக்கூறின் சில பகுதிகள் கிடைத்துள்ளன. இதேபோல் சுமார் 75 ஆண்டுகளுக்கு முன் பனிப்பகுதிக் கலைமான் ஒன்று இறந்துபோனது. பின்னர் உறைந்துபோன அதன் உடல் கிடைத்தது. அது இறந்ததற்கு ஆந்த்ராக்ஸ் வைரஸ் காரணம் என உடற்கூறு ஆய்வில் தெரியவந்துள்ளது. அதன்மூலம் அந்தப் பகுதி நீரிலும் நிலத்திலும் வைரஸ் பரவியது. பிறகு அங்கே வளர்ந்துள்ள புற்களிலும் வைரஸ் பரவியது. இந்தப் புற்களை மேய்ந்த சுமார் 2,000 கலைமான்கள் ஆந்த்ராக்ஸ் நோயால் பாதிக்கப்பட்டு இறந்தன. ஒரு சில மனிதர்களும் இதனால் பாதிக்கப்பட்டு இறந்து போனார்கள்.இதுபோல் ஏராளமான வைரஸ் வகைகள் நிலத்தடி உறைபனியில் உறைந்து கிடக்க வாய்ப்புள்ளதாக அறிவியலாளர்கள் கருதுகிறார்கள். மேலும் ஆர்க்டிக் பகுதியில் அந்த பெர்மாஃப்ராஸ்ட் எனும் நிலப்பகுதியின் பனி, இப்போது பூமியின் வெப்பநிலை உயர்ந்து வரும் காரணத்தால் உருகிக்கொண்டிருக்கிறது. இது மேலும் உருகும்போது வெளிவரும் மீத்தேன் வாயுவும், இறந்துபோன உயிரினங்களின் புதைபடிவங்களிலிருந்து வெளிவரும் கரியமில வாயுவும் பூமியை மேலும் சூடாக்கும். ஒருபுறம் பெரியம்மை உள்ளிட்ட உயிர்க்கொல்லிக் கிருமிகள், மற்றொருபுறம் உயர்ந்துவரும் பூமியின் வெப்பநிலை.
உண்மையில் இவை அச்சத்தையும் பீதியையும் ஏற்படுத்தும் பயங்கரமான அம்சங்கள்தான். அஞ்சுவது அஞ்சாமை பேதமை. உறைபனியில் உறைந்து கிடப்பதைப் போன்று கிடக்கும் நம் உலக சமூகம் என்றைக்கு விழித்துக்கொள்ளும்?”
புதிய புத்தகம் பேசுது நேர்காணலில் கடந்த ஐம்பது ஆண்டுகாலத்திற்கும் மேலான வாசிப்பு அனுபவம், இயக்கச் செயல்பாடுகள், தொடர் வாசகர் வட்ட முன்னெடுப்பு ஆகியவற்றை உற்சாகமாக புத்தகம் பேசுது வாசகர்களுக்குப் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி.
என் அனுபவங்களைப் பதிவு செய்ய வாய்ப்புத் தந்தமைக்கு உங்களுக்கும், புத்தகம் பேசுது இதழுக்கும் நன்றி.
3 comments
சகஸ் அவர்களுடன் புன்னை மரத்தடியில் ஒரு விரிவாக உரையாடிய அனுபவம்.
ஆயுள் காப்பீட்டு ஊழியர் , அறிவியல் இயக்கம் ,அரசியல் செயல்பாட்டாளர் ஆக பல தளங்கள் இருந்தாலும் முதன்மையான வாசகர் என்பதையே பெருமிதமாக முன்வைக்கிறார் சகஸ்.
பாலம் புத்தக கடையும் , நூல் அறிமுக நிகழ்ச்சிகளும் முன்னுதாரணம் இல்லாத பெரும் சாதனைகள். அவரை முன்மாதிரியாகக் கொண்டு இந்த இயக்கம் பல இடங்களில் தொடங்கப்பட வேண்டும். மிகச்சிறந்த விரிவான பேட்டி .புத்தகம் பேசுது இதழுக்கும் சகஸ் சாருக்கும் நன்றி.
புன்னைமர நிழலில்…
ஒரு புதிய சகாப்தம்!
2020 நவம்பர் புத்தகம் பேசு இதழில் “புன்னைமர நிழல் விரிக்கும் புத்தகவாசம்” நேர்காணல் மிக நேர்த்தி. கொஞ்சம் நீண்டதுதான். பொறுமையாக ஒருமுறைக்கு இருமுறை படித்தேன். படிக்க படிக்க புதுப்புது கோணங்களில் இந்த நேர்காணல் அமைந்திருப்பது சிறப்பு. தோழர் சகஸ் அவர்களின் மலரும் நினைவுகளில் மிக நெருக்கம் நிறைந்த பகுதிகளைப் பகிர்ந்து உள்ளது காண கிடைக்காத அரிய பொக்கிஷமாக அமைந்துவிட்டது இந்த நேர்காணல்.
இது பத்தோடு பதினொன்றாக இருந்திடாமல், அல்லது அவரது வாழ்க்கை வரலாற்றை மட்டும் பகரும் நேர்காணலாக அமையாமல், ஒரு மார்க்சீய வகுப்பில் அமர்ந்ததைப்போல் ஒரு உணர்வை ஏற்படுத்திவிட்டது! ஆம், அனைவருக்கும் ஏற்படுத்தும் என்றும் நம்புகிறேன். ஆம், நேர்காணலாளர் பாலசரவணனின் கேள்வியும், அதற்கு இயைந்த இதர அம்சங்களையும் கலந்து கருத்துமிக்க வகுப்பாகவே இந்த நேர்காணல் அமைந்துவிட்டது என்றால் மிகையல்ல.
வாசகனாக பயணத்தை துவங்கி, மார்க்சீய ஆசானாக மாறியவரின் வரலாற்றை வாசிக்கிறபோது, மனசு கர்வம் கொள்கிறது. காரணம், அவரோடு சகாவாக எண்பதுகளில் இருந்து பயணிப்போரில் நானும் ஒருவன்.
அன்றைய காலத்தில் அவரின் புல்லட் பைக்கில் அமர்ந்து கொண்டு, மேட்டூர் கொளத்தூர் ஒன்றிய கிராமங்களில் மாலைநேர கூட்டங்களுக்கு சென்று வந்தது முதல் அனைத்தும் என் நினைவிலும் வந்து நிழலாடுகிறது.
அந்த விபத்து நிகழும்முன் கம்பீரமான அவர் உருவமும், ஓமக்குச்சியான என் உருவமும் கிராமங்களில் கட்சி மற்றும் வாலிபர் சங்க பணிகளுக்காக அவரின் புல்லட்டில் பின்னமர்ந்து செல்லும்போது கிடைத்த அந்த கெத்து இருக்கிறதே… அதை வர்ணிக்க வார்த்தைகள் ஏது? மேட்டூர் வட்டம் முழுவதும் கட்சியும், வெகுஜன அமைப்புகளும் இருக்கும் கிராமங்களில் எங்களின் பயணம் தினசரி இருந்தே இருக்கும். ஒருதுளி சோர்வுமின்றி வந்திடுவார். அவரின் அந்த உற்சாகம், அமைப்பு பணிகளில் விபத்துக்கு பிறகும்சரி, இன்றுவரையும் சரி, ஏறக்குறைய 40 ஆண்டுகளாக குன்றாமல் இருப்பது ஒரு அதிசயமே.
ஜெர்மனி போன்ற அய்ரோப்பா நாடுகளில் அவரின் சுற்றுபயணம், அவர் வாழ்வின் ஒரு அரியநல்வாய்ப்புதான். அது, அவரின் வாழ்வின் பெரும்பேராக அமைந்ததை… அப்போது அவரின் மனம் பூரிப்படைந்ததை… அச்சமயம் பயண கட்டுரையாக நமக்கு கிடைக்காமல், தற்போது இந்த நேர்காணல் வழியே உணர்வுபூர்வமான நேர்காணலாக அமைந்தது, நமக்கு ஒரு அரிய நல்வாய்ப்பே.
15 ஆண்டுகள், 300க்கும் மேற்பட்ட வாராந்திர அமர்வுகள், பல்துறை வித்தகர்களைக் கொண்டு நூல் அறிமுகமும், கருத்து பரிமாற்றமும், கலந்துரையாடலும் எல்லாம் அனேகமாக தமிழகத்தில் இதுதான் துவக்கமாக இருக்கும். உண்மையில் இதுஒரு வரலாற்று சாதனையே. அதை நிகழ்த்திய தோழர் சகஸ் பாராட்டுக்கு உரியவரே.
புத்தகம் பேசுவது இதழில் அவரின் நேர்காணல் இடம்பெற்றிருப்பது மிகுந்த சிறப்புக்குரியது. ஆம், புத்தகம் பேசுது இதழ்களில் நூற்றுக்கணக்கான ஆளுமைகளின் நேர்காணல் வந்திருக்கிறது. ஆனால், வாசகனாக இருந்து ஒரு புத்தக நிலையம் நடத்தி, அதன் வாயிலாக வாசகர்களை பல்விதமான திறன்மிக்கவர்களாக வளர்க்க, வளர்த்த அவர் செலுத்திய, செலுத்தி வரும் கவனமும், உழைப்பும் கொடுத்துவரும் ஒரு மார்க்சீய ஆசான் நேர்காணல் வருவது பெருமைக்குரியது.
ஆம், தோழர் ச.தமிழ்செல்வன் கூறியதைப்போன்று தனிமனிதனாக நின்று, மாபெரும் இயக்கத்தை இந்திய தேசத்திற்கே முன்மாதிரியாக, முன்நின்று நடத்திவரும் சாதனையாளரின் நேர்காணல் புத்தகம் பேசுது இதழில் வந்திருப்பது அவரின் ஓய்வறியா உழைப்பிற்கு ஒரு மணிமகுடம் என்றால் அதுமிகையல்ல. அதற்காக புத்தகம் பேசுது நிர்வாகத்தை எவ்வளவு பாராட்டினாலும் தகும். புன்னைமர நிழலில் ஒரு புதிய சகாப்தத்தை ஏற்படுத்திவரும் பாலம் புத்தகநிலையம் மற்றும் தோழர் சகஸ் பணிசிறக்கட்டும்; மென்மேலும் செழிக்கட்டும்.
“பாலம் புத்தக நிலையம் பாரதி புத்தகாலயம் கிளையாக செயல்பட்டுக் கொண்டிருந்த போதிலும், நம் தோழர்களின் வருகைதான் குறிப்பிடும்படி அமையவில்லை” என்று அவர் என்னிடம் அடிக்கடி கூறுவார். அதுதான் என்நெஞ்சில் நெருஞ்சி முள்ளாக குத்திக்கொண்டே இருக்கிறது. இனியாவது இக்குறை அகலுமேயானால், அதுவே மகிழ்ச்சி. வாழ்த்துக்கள்..!
-தாரைப்பிதா… 18.11.2020
மிகவும் சிறப்பான நேர்காணல். புத்தகங்களும் வாசிப்பும் ஒரு மனிதனின் வாழ்க்கையில் எந்த அளவு முக்கியம் என்பதை மிக சிறப்பாக எடுத்துக் காட்டும் நேர்காணல். சேலம் பாலம் வாசகர் சந்திப்பில் பங்கு பெற எனக்கு வாய்ப்பு கிட்டியுள்ளது. பிரபலங்கள் தவிர எண்ணற்ற இளைஞர்கள் இங்கு புத்தகங்களை அறிமுகப்படுத்தி சிறப்பாக புதுவேகம் பெற்று உள்ளதை நேரில் காண முடிந்துள்ளது. மிக விரிவான ஆழமான வாசிப்பு அனுபவத்தால் திரு சகஸ் அவர்கள் அடைந்துள்ள ஆற்றலும் அனுபவமும் அவருடன் விவாதிக்க கருத்துக்களை பரிமாறிக் கொள்ள வாய்ப்பு கிடைத்தவர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்வார்கள். திரு சகஸ் அவர்கள் அவர்களுக்குள்ள ஆழ்ந்த வாசிப்பு அனுபவத்தின் அடிப்படையில் ஏன் எழுதுவதில்லை என்ற கேள்வி பலமுறை அவரிடம் கேட்டுள்ளேன். அவர் பேசுவதை எழுத்து வடிவம் ஆக்கினால் போதுமே என்று தான் தோன்றும். பாதம் சேலத்தின் பெருமை. வாசிப்பை நேசிக்கும் அனைவருக்குமான திரு சகஸ் அவர்களின் சேவை தொடரட்டும்.