கல்வியாளர் பாவ்லோ பிரையரே நூற்றாண்டு ஆகும். ஒடுக்கப்பட்டோர் விடுதலைக்கான கல்வி முறையை மார்க்சிய நல் உலகிற்கு வழங்கிய பேராசானை நினைவு கொள்ளும் இத்தருணத்தில் அவரது விவாதிக்கும் விமர்சனப் பூர்வ வகுப்பறைகளின் தேவை உணரப்படுகிறது. கல்வி உரிமை எனும் நம் கடும் போராட்ட வெற்றியை களவாட மத்திய அரசு நமக்கு புதிய கல்விக் கொள்கை எனும் பெயரில் பெரும் சதியை அமுலாக்கி வருகிறது. அப்பாவி அடித்தள மக்களிடமிருந்து கல்வியை பிடுங்கிட துடிக்கிறது. வர்ணாசிரம குலக் கல்வி அமைப்பை மீண்டும் இம்மண்ணில் விதைத்திட முயற்சி நடக்கிறது. மாநில உரிமைகளை ஏற்கெனவே பல்வேறு துறைகளில் பரித்து மத்தியில் அதிகார குவிப்பை நடத்தி உள்ள நிலையில் பொதுப்பட்டியலில் உள்ள கல்வியை களவாடி மத்திய அதிகாரத்திற்கு உட்படுத்தி காவியமயமாக்கிடவும் விலை கொடுத்து வாங்கும் பணக்கார அடையாளமாக உயர்சாதி அடையாளமாக கல்வியை மாற்றிட துடிக்கிறது. 1934ல் இருந்து இந்தி-ஆதிக்கத்தை திணிப்பை தொடர்ந்து நம் தமிழ்நாட்டின் ஒவ்வொரு சந்ததியும் எதிர்த்து கடுமையாக போராடியே வருகிறது. என்றாலும் தற்போது பச்சிளம் குழந்தை இந்தியை கற்றிட வேண்டும் என ஒரு மொழி திணிப்பை பாராளுமன்றத்தில் கூட வைத்து பேசாமல் கொண்டு வந்திருக்கிறார்கள். இந்த சூழலில் தமிழ் மொழியை வேறோடு சாய்க்க மதவெறி சமஸ்கிருதத்தை ஒரு பாடமாக்கியும் இருக்கிறார்கள். அன்று அறுபதுகளில் இதே மாதிரி சதி நடைபெற்றபோது, பேரறிஞர் அண்ணாவும், தோழர் ஜீவாவும், தோழர் தொ.மு.சி. ரகுநாதனும், இன்னும் தி.ரு.வி.க.வில் இருந்து நடிகவேள் எம்.ஆர். ராதா வரை அன்று தமிழ் வாசிப்பை எப்படி எடுத்துச் சென்றார்கள் என்பதை நினைவு கூர்வோம். அவர்கள் யாவரும் இயக்கங்களால் பிரிந்து இருந்தாலும் தமிழுக்காக ஒன்றுபட்டார்கள். தமிழ் வாசிப்பை வெகுஜன இயக்கமாக்கினார்கள். சோவியத் இலக்கியங்களை தமிழில் வாசித்தவர்களே அதிகம்.
அன்று தோழர் மார்க்சும், லெனினும் மாவோ உட்பட பல்வேறு மாமனிதர்களின் முழு தொகுதிகளும் தமிழில் இறக்கப்பட்டது என்பதை மறக்க முடியுமா. பட்டிதொட்டி தோறும் பரவிய எழுச்சிமிகு நவீனத்துவ தமிழ்வாசிப்பு இருந்தவரை ஆங்கில மோகம்கூட நம்மை அண்டிடவில்லை. எனவே இன்றைய தேவை எழுச்சிமிகு தமிழ் வாசிப்பு. பட்டிதொட்டி தோறும் நமது நூல்களை கொண்டு செல்லும் ஒரு இயக்கம். நம் தமிழ் குழந்தைகளுக்கு வாசிப்பை அறிமுகம் செய்ய ஒவ்வொரு குழந்தைக்கும் ஒரு குட்டி நூலகம் நாம் புத்தகங்களை குழந்தைகளுக்கு பரிசளிக்கவும், அவர்களோடு தமிழில் தமிழ் நூல்கள் குறித்து உரையாடவும், கலாச்சார வாசிப்பு அடையாளத்தை உருவாக்கிட வேண்டும். ஆதிக்க வாதியின் அதிகார ஆயுதத்தை எதிர்க்க முதலில் நாம் ஒடுக்கப்படுகிறோம் என்பதை உணர வேண்டும். பிறகு அந்த நிலையை மாற்றிட கல்வியை கையில் எடுக்க வேண்டும் எனும் அறிஃர் பாவ்லோ பிரையரேவின் கூற்றுக்கிணங்க மக்கள் கல்வியின் மகத்தான பாதையாகவாசிப்பு இயக்கத்தை கட்டமைப்போம்.
அனைவருக்கும் நன்றி – ஆசிரியர் குழு.