- ஸ்ரீதர் மணியன்
சமகால அரசியல் சூழலில் இது போன்ற கதைத் தொகுப்புகள் நூறு வரவேண்டும். காஃபிர் என்ற சொல்லாடல் இன்றைய அரசியல், சமூகச்சூழலில் மாறுபட்ட பொருளில் கொள்ளப்படுகிறது. (கீரனூர் ஜாகீர்ராஜாவின் முன்னுரையில்)
ஒரு படைப்பினை உருவாக்குவதைக் காட்டிலும் சக படைப்பாளிகளின் படைப்புகளைத் தொகுத்து நூலாக்குவது எளிதான பணியன்று. அஃது ஓர் சவாலான செயலாகிறது. அதனை சாத்தியமாக்கிட பரந்த வாசிப்பனுபவம், படைப்பாளிகளின் சிறுகதைகள், நாவல்கள் என அவை குறித்த தெளிவு, அவற்றில் தனக்குப் பிடித்தது மாத்திரமன்றி சிறந்தவற்றை தெரிவு செய்தல் என பல கூறுகள் அவசியமாகின்றன. இத்தகைய பணியினை ஒரு குறிப்பிட்ட தலைப்பினைத் தேர்ந்தெடுத்துக் கொண்டு அற்புதமான ஆளுமைகளின் படைப்புகளைத் தொகுத்தளித்திருக்கிறார் கீரனூர் ஜாகீர்ராஜா.
பெருங்கவியில் தொடங்கி ச.சுப்பாராவ் வரை சிறுகதைகள் இந்நூலில் அடங்கியுள்ளன. இசுலாமியரல்லாத படைப்பாளிகள் இசுலாமிய சமுதாயம் குறித்து எழுதிய 17 கதைகள் இதில் அடங்கியுள்ளன. இசுலாமிய சமுதாய மக்கள் குறித்த சிறுகதைகளும், நாவல்களும் கடந்த தலைமுறையில் அதிகம் உருவாகவில்லை. அச்சூழல் தற்போது மாற்றம் பெற்றுள்ளது. ஒவ்வொரு படைப்பும் தனக்கேனயான கலை அழகுடன் மிளிர்கிறது.
பாரதியாரின் படைப்பு தனித்துவம் கொண்டது. இசுலாமிய. பெண்கள் அணியும் ஆடை குறித்த விவாதம் அக்கதையில் பேசப்படுகிறது. அதில் தான் செய்த பிழையினை ஒப்புக்கொண்டு பாரதியார் அதனைப் பின்ணினைப்பாக அளிக்கிறார். கதையாகவும், கட்டுரையாகவும் இரு பரிமாணங்களைக் கொண்டு இப்படைப்பு உண்டாக்கப்பட்டுள்ளது. காலம் பற்றிய குறிப்பொன்று கதையின் ஓரிடத்தில் உள்ளது. அதனை கவனத்தில் கொண்டு வாசித்தால் சற்றேறரக்குறைய நூறு ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்ட கதையாகிறது. அத்தருணத்தில் நிலவிய சூழல் குறித்த தெளிவானதொரு சித்திரத்தினை வாசகனுக்கு அது அளிக்கிறது. இன்றுள்ள சூழலில் இவ்வாறு விவாதிப்பதற்கும், எழுதுவதற்குமான சாத்தியங்கள் குறித்தும் பலத்த சிந்தனையினை எழுப்புகிறது.
பாயம்மா சிறுகதை ஓர் ஏழைத்தாயின் மனோபாவத்தினை அழகுற சித்தரிக்கிறது. பிரபஞ்சனின் தனித்துவமிக்க நடையழகினை இதில் வாசகர்கள் காணலாம். மனச்சான்றும், நேர்மையும் கொண்ட மனிதர்களை படைப்பில் காண்பது நெகிழ்ச்சியினையும் அளிக்கிறது. கடை முதலாளியின் முடிவும் மிகச்சிறப்பானதாக படைக்கப்பட்டுள்ளதுடன் வறுமையும், நேர்மையும் ஒட்டிப்பிறந்தவை என்ற கருத்துரு நிறுவப்படுகிறது.
கு.ப.ராவின் படைப்பு மிக்க ஆழமானது. நேசம் கொள்வதென்பது மனித வர்க்கத்தின் நடைமுறைக் கூறுகளைக் கடந்தது. இன்று இத்தகைய மனங்களும், மணங்களும் இயல்பாகிவிட்டிருந்தாலும், இச்சிறுகதை எழுதப்பட்ட காலத்தினை கருத்தில் கொண்டே இதனை வாசிக்கவேண்டும். அவரது சிறந்த படைப்புகளில் இதுவும் ஒன்று.
யார் அழகு என இரு சிறுவர்களிடம் தொடங்கும் விளையாட்டான சண்டையே அசோகமித்திரனின் அழகு சிறுகதை. அவரது வழமையான எளிய சிக்கனமான சொல்லாடல்களும், ஹைதராபாத்தின் களமும் கொண்ட கதையாகிறது. அழகு ,என்பதன் நடைமுறைப் பரிமாணத்தினை அசோகமித்திரன் அழகுறக் கூறுகிறார். ,
விகாசம் என்னும் சிறுகதை மனித முயற்சி, ஆற்றலுக்கு உடல் ஊனம் தடையாகாது என்ற உயரிய கருதத்தினை நிறுவுகிறது. வாசிக்கும்போது மனத்திற்கு இதமளிக்கும் சிறுகதையாக இது திகழ்கிறது. ராவுத்தர் பார்வையற்றவர் என்பது நேரடியாகக் கூறப்படுவதில்லை. சுந்தரராமசாமியின் சிறந்த கதைகளில் இதுவும் அடங்கும். இச்சிறுகதை ஆங்கிலத்தில் Reflowering என்னும் தலைப்பில் தமிழ்நாட்டுப் பாடநூல் கழகத்தால் மொழியாக்கம் மேநிலைக்கல்வி மாணாக்கர்களுக்கு பாடதிட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளது. ஆங்கிலமொழியாக்கமும் மிகச்சிறப்பாக உயிரோட்டத்துடன் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப வளர்ச்சி எத்தகைய உயரத்தினை எட்டினாலும் உயிரும், உணர்வுமாக உலவும் மனித மனத்தின் ஆற்றலுக்கு மாற்றாகாது என்பதும் இதில் நிறுவப்படுகிறது.
ஹசர் தினார் சிறுகதை ராமகிருஷ்ணனின் கற்பனை வளத்திற்கு சிறந்த எடுத்துக்காட்டகவும், அவரை சிறந்த கதை சொல்லியாகவும் மீண்டும் உறுதிப்படுத்துகிறது. தன் வீரத்தினால், உத்வேகத்தால், தன் பெயரினை மாற்றியே தீரவேண்டும் என்ற ஓர் அடிமையின் வேட்கை, உந்துதல் அவனை பேரரசனாக்குகிறது. கிளி பார்வையற்றதாயிருந்தாலும் அவனை வழங்கு பெயரிலேயே விளிக்கிறது. ஆகக்கூற்றாக ஹசர் மன்னனாக கிளியும் காரணமாகிறது. வரலாறு மாலிக் கபூர் என்னும் வீரனைக் குறித்துக் கூறும் தரவுகளுக்கு மாற்றாக அவனது அகவுலகில் கனன்று கொண்டிருப்பவற்றை சிறப்பான கதையாக்கியிருக்கிறார் ராமகிருஷ்ணன்.
பேராசிரியர் தக்கியின் ஆடு சிறுகதை ஏறத்தாழ உண்மை நிகழ்வானது. சென்னையில் பணியிலிருந்த தருணத்தில் விட்டல்ராவின் அறைக்கு அடுத்த அறையில் தங்கியிருந்த நண்பரான புதுக்கல்லூரிப் பேராசிரியர் அப்துல்ரஹீம் குறித்த கதை. இது குறித்த விட்டல்ராவின் பதிவினை அவரது ‘வாழ்வின் சில உன்னதங்கள்‘ (நர்மதா வெளியீடு) என்ற நூலில் காணலாம். பேராசிரியரை அப்பகுதியில் எவருக்குமே தெரியாத நிலையில் அவர் வளர்த்தும் ஆடு அவருக்கு அடையாளத்தினை முகவரியினை அளிக்கிறது .மெலிதான அங்கதம் கதையில் ஊடாடி வருதல் அருமை. கதையிறுதியில் மீண்டும் பேராசிரியர் தனது முகவரியினை இழந்து விடுவாரோ என்ற வினா தொக்கி நிற்கிறது.
தஞ்சை பிரகாஷின் சிறுகதையும் குறிப்பிடத்தக்கதாகும் காத்திரமிக்க வீச்சினை உடைய அவரும் அதிகம் அறியப்படாது, கொண்டாடப்படாத ஓர் ஆளுமை. அவரது கதை காட்டாற்று வெள்ளத்தின் இயல்புடன் வாசகனை படைப்பிற்குள் இழுத்துச் சென்று முழ்கடிக்கிறது. அவரது களம் வழமையான தஞ்சையைச் சுற்றியே நிகழ்கிறது. வாசகர்கள் வாசித்துணர வேண்டிய பெருங்கதை. ஆண், பெண் உணர்வுகளை வடித்தெடுக்கும் சிறப்பான படைப்பு.
நூல் விமர்சனக் கட்டுரையில் ஒரு பெருங்கதை குறித்து எழுதுவது பெருவெளியும், வீச்சும் கொண்டது. அதில் அடங்கியுள்ள பல்வேறு கூறுகள் இத்தகைய வாய்ப்புகளை கட்டுரையாளருக்கு அளிக்கின்றன. சிறுகதை விமர்சனங்கள் குறு வடிவிலேயே அளிக்கப்பட்டால் மட்டுமே வாசகருக்குரிய பங்கு அதில் கிடைக்கும். இத்தொகுப்பினை ஊன்றி வாசிக்கும் வாசகன் கடந்த தலைமுறை படைப்பாளிகளின் எழுத்திற்கும், இத்தலைமுறை எழுத்தாளர்களின் படைப்பிற்கும் ஒரு பெரும் மாறுபாட்டினை உணரலாம். சிறுபான்மையினர் குறித்த அச்ச உணர்வு, அல்லது அவர்களுக்கான வெகுசன மக்களிடையே நிலவும் ஒரு பொது மனநிலை, ஆளும் வர்க்கத்தின் நடவடிக்கைகள் குறித்த பதிவுகளை இத்தலைமுறை எழுத்தாளர்கள் பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. பயம், ஒன்றுபடுதல் ஆகிய சிறுகதைகளை எடுத்துக்காட்டாகக் குறிப்பிடலாம். இதுவே சமகால சூழல் குறித்த பதிவுகள் கொண்ட கதைகள். தொகுப்பாசிரியரே பல படைப்புகளை இக்கருத்துகளின் அடிப்பைடையில் எழுதியிருப்பினும் தொகுப்பின் தன்மைக்கும், தேர்வுக்கும் ஏற்றார் போல் அவை தவிர்க்கப்பட்டுள்ளன. எதிர் வெளியீடாக வந்துள்ள இந்நூல் சிறந்த ஆளுமைகளின் படைப்புகளை உள்ளடக்கியது என்பதனை நிச்சயம் குறிப்பிட்டாக வேண்டும்.