- ஸ்ரீநிவாஸ் பிரபு
வாழ்க்கையின் நிகழ்வுகளை உணர்வுகளுடன் படம்பிடித்துக் காட்டும் வல்லமை சிறுகதைகளுக்கே உரித்தான ஒன்று. வாழ்வின் வசீகரம் வார்த்தைகளைச் சார்ந்ததாகவே இருக்கிறது. நல்ல வார்த்தைகள் மனதை மெருகேற்றுவதாகவும், தீய வார்த்தைகள் வடுக்களை விதைப்பதாகவும் இருப்பதைப் பார்க்கும் போது, வார்த்தைகளின் வசீகரத்தை புரிந்து கொள்ள முடியும்.
வாழ்வியல் பதிவுகளை மொழியில் சிறுகதைகளாக எடுத்துச் சொல்கையில், அதை சற்றும் சிதைக்காமல், சிறு சிறு உணர்ச்சி வேறுபாடுகளையும் கூர்மையாக்கி கண்டடையத்தருவது வாசிப்பின் இனிமையை உயர்த்திக் காட்டுவதாகவே இருக்கும். அப்படியான இனிமையை மொழியின் சொல்லாடல் அழகை, ஓப்புமைகளை, மனித வாழ்வியலின் மென்மையை இருபது கதைகளின் வழியாக அழகாகச் சொல்கிறது ‘வரும் போது நான் என்ன சொல்வது?‘ என்ற சிறுகதைத் தொகுப்பு. மூல மொழியான மலையாளத்தில் எஸ்.வி.வேணுகோபான் நாயர் எழுதிய கதைகளை தமிழில் சிதம்பரம் இரவிச்சந்திரன் மொழிபெயர்த்துத் தந்திருக்கிறார். எஸ்.வி.வேணுகோபன் நாயரின் கதைகள் மேலோட்டமான பார்வைக்கு நையாண்டித்தனமாகவும், ஆழ்ந்து வாசிக்கும் போது உள்ளார்த்தமான அர்த்தங்களைத் தரக்கூடியதாகவும் இருக்கும். இந்தத் தொகுப்பிலும் அப்படியே. இந்த மொழிபெயர்ப்புத் தொகுப்பை சேலம், வாசகன் பதிப்பகம் வெளியிட்டிருக்கிறது. மொழிபெயர்ப்பாளர் இரவிச்சந்திரன் பார்வைத்திறனற்றவராக இருந்த போதும், அக்குறையை ஒதுக்கித்தள்ளி, அவரது அகக்கண் வழியாக மொழிபெயர்ப்பை செய்யும் முயற்சி பாராட்டக்கூடியதாக இருக்கிறது.
எல்லா சிறுகதைகளுமே குளுமையின் சில்லிப்புடன், மனதை மயிலிறகால் வருடும் சுகத்தையும், மெல்லிய நீரோட்டத்தினின்றும், உள்ளங்கை நிறைய நீரை அள்ளி அருந்திய ஆசுவாசத்தையும் தருகிறது. முதல் கதையும், தொகுப்பின் தலைப்புக்கதையுமான ‘வரும் போது நான் என்ன சொல்வது..?‘சிறுகதையில், சில கற்பனைகள் நம்மை முழுமையாக நம்பக்கூடிய நிலைக்குக் கொண்டு நிறுத்தும் என்பதை அழகாகச் சொல்கிறார். சுசித்ரா தான் மனதில் பதிந்து வைத்தருக்கும் சமீரணனின் முகத்தை நிஜத்தில் காண பிராயத்தனப்படுகிறாள். திருமண வயதில் இருக்கும் அவளை பெண் பார்க்க வருபவரிடத்தில் எல்லாம் தன் மன முகத்தைத் தேடி அலைகிறாள். ஒரு கட்டத்தில் அவளுக்கு திருமணம் ஏற்பாடாகிறது. திருமண வேலைகளுக்கு நடுவில் சுழலில் பட்ட தளிர் இலையைப் போல உழலும் போதும், முதலிரவில் வேட்டையாடிவிட்டு வந்து சேர்ந்த தேவனைப் போல் தூங்கிக் கொண்டிருக்கும் கணவனைப் பார்க்கும் போதும், அவளுக்கள் தோன்றி மறைகிறது கதைத் தலைப்பு.மொழிபெயர்ப்பின் உரிமையை எடுத்துக் கொண்டு வரம்பு மீறாமல், சிறுகதை இலக்கணத்துடனும், வசிகர பாய்ச்சலுடனும் மனதைக் கவரும் விதத்தில் இருக்கிறது கதைகள்.
மனம் ஒருபுறம் வேலிதாண்டிப் பாய்கிற போது வெளிப்படும் செயல்கள் எப்போதும் எல்லை மீறிவதாய் இருக்கக்கூடியவை என்பதை அழகாக உணர்த்துகிறது வன்னியம் கதை. திருடர்கள் நிறைந்த மலைப்பாதையில் வழிதவறி நடக்கும் இருவரை ஒரு காட்டுவாசி வழிகாட்டி அழைத்துப் போகிறான். அவன் அவர்களை தன் வீட்டிற்கு அருகில் அழைத்துச் செல்லும் போது, தாக்குதலுக்கு ஆளாகிறான். தாக்கியவன் விலகிப் போக, தாக்கப்பட்டவன் காயத்துடன் எழுந்து புரியாமல் பார்க்கிறான். அவன் வைத்திருந்த பையில் வீட்டுக்கு வாங்கி வந்த அரிசி மாவு இருக்கிறது. அதைத்தருவதற்கு அவன் ஆயத்தமாக இருந்த போது தாக்கப்பட்டது புரிந்து மற்றவன் உதவுகிறான். அந்த வலியுடன் எழுந்து சரியான பாதையை காட்டுகிறான். மறுமுறை அவசியம் வரவேண்டும் என்று கேட்டுக் கொள்கிறான். சிறிது தள்ளி காத்திருந்த தாக்கியவன் ஆர்வமாக ‘அந்தப் பைக்குள்ள என்ன வெச்சிருந்தான் அரிவாளா? மலப்புறம் கத்தியா, என்று வினவுகிறான். மற்றவன் பேசாமல் நடக்கிறான். மனிதர்களையும், அவர்களது மன வெளிப்பாடுகளையும் புரிந்து கொள்வது சாதாரணமானதல்ல என்பதை தெளிவாக உணர்த்துகிறது கதை
சரசாவின் மகன் உன்னி. சரசாவிற்கு திருமண வாழ்க்கையில் ஏற்பட்ட கசப்பு, கணவனைப்பிரிந்து வாழும் நிலைக்கு தள்ளிவிடுகிறது. இருபத்தி ஐந்து வருடங்கள் கழித்து உன்னி வீட்டில் இல்லாத நாளன்று அவள் கணவன் ஒரு வழிப்போக்கனாக அவள் வீட்டிற்கு வருகிறான். நல்ல கோடை மழை. இரவு அவள் வீட்டு திண்ணையிலேயே கணவன் படுத்துக் கொள்கிறான். சரசாவிற்குள் அலை அலையாக சிந்தனை. வாசலில் கிடக்கும் கணவன் குறித்தே யோசித்திருக்கிறாள். தன் கணவனைக்குறித்து உன்னி என்ன நினைப்பான் என்றே இரவைக் கழிக்கிறாள். விடிய விடிய கதவைத்திறக்காமல் இருப்பவள் அதிகாலைதான் திறக்கிறாள். வாசலில் ஊருக்குச் சென்று வந்த உன்னி படுத்துக்கிடக்கிறான். வாழ்நாள் முழுவதும் தன்னைப் புரிந்து கொள்ளாமல், பிறராலும் புரிந்து கொள்ளப்படாது வாழ்ந்து மறையும் மனிதர்களும், அவர்கள் ஏற்படுத்தும் பாதிப்புகளையும் யதார்த்தமாகப் படம் பிடித்துக் காட்டுகிறது கோடை மழை கதை.வாழ்க்கையில் சில மனிதர்கள் எப்போதும் புதிரானவர்களாகவே இருக்கிறார்கள். பல நேரங்களில் நாம் கேட்பதும், நடப்பதும் வேறு வேறாகவும், உணர்வதும், உண்மையும் வேறு வேறாகவும் இருக்கிறது என்பதை அருமையாகச் சொல்கிறது சௌகந்தியம் சிறுகதை. மனிதர்களின் முகம் ஒவ்வொருவருக்கும் வேறுபடுவதைச் சொல்கிறது கதை, கணவனை இழந்து வாழும் கல்யாணி அக்காவுடனாக உறவு ஒரு புதிர் முடிச்சு. கீழே விழுந்து அடிபட்டபோது கல்யாணி அக்கா உதவியதும், அதற்காக வீட்டாரிடம் அடிபட்டதும், பிறகொரு நாள் இரவு சினிமா பார்த்துவிட்டு வந்த போது அந்த இரவு அவள் வீட்டில் உறங்கி வந்ததும், ஞாபகத்திற்கு வருகிறது. கல்யாணி படுத்த படுக்கையாக இருக்கிறாள். அவளுக்கு என்று யாரும் இல்லை. அவள் அருகில் சென்று அழைக்க அசைவற்று இருக்கிறாள். அக்கா என்பதற்கு பதிலாக அம்மா என்று அழைக்க விழி அசைத்துப் பார்க்கிறாள். கண்ணீர் துளிகள் தேங்க அவள் உயிர்பிரிகிறது. கல்யாணி அக்காவுக்கு என்று தனியாக இருக்கும் வாசணை எட்டிப் பார்க்கிறது.
அது எத்தனை ஆண்டுகள் ஆனாலும் விடாமல் தொடர்ந்து கொண்டிருக்கிறது. உடம்பிலும், ஆன்மாவிலும் புரண்டிருந்த வாசனையை கழுவிவிடுவது சாத்தியமில்லை என்ற எண்ணத்துடன் நிறைகிறது கதை.
ஏழைகளின் வாழ்வில் ஏற்படும் இடர்பாடுகளையும், தேவைகளைச் சமாளிக்கச் சாமான்ய மனிதர்கள் படும் பாடுகளையும் தெளிவாகச் சொல்கிறது சிறை பிடிக்கப்பட்ட அனிருத்தன் கதை. மனைவியின் ஆபரேஷனுக்காக வாங்கிய பணத்தைத் திருப்பித்தர செக்யூரிட்டியாக பணியாற்றும் ரிட்டயர்டு லான்ஸ்நாயக அனிருத்தனின் வாழ்வியல் நிகழ்வுதான் கதை. ஒரு இயந்திரமாய் பணியாற்றும் போக்கும், அதனுள் இருக்கும் மன அவஸ்தைகளும் கலங்கச் செய்கிறது. ஊனிலும், உறக்கத்திலும் ஒரு இன்பத்தையும் காணாமல் சூன்யத்தை வெறிக்கும் வாழ்வியல் சித்திரம் கலங்கடிக்கும் யதார்த்தம்.
ஒவ்வொரு சிறுகதையை படிக்கும் போதும், கதைகளில் உலவும் கதாபாத்திரங்கள் எதிர் கொள்ளும் உணர்வுகளையும், அனுபவங்களையும் படிப்பவர்களுக்கு கடத்துகிறது. இதன் காரணமாகவே படிப்பது சிறுகதை என்ற உணர்வு மறைந்து யாரோ அருகிலிருந்து சொல்வதைக் கேட்பது போன்ற உணர்வே எழுந்து அடங்குகிறது கதைகளையும், கதாபாத்திரங்களையும் படிப்பவர்கள் தங்கள் கற்பனைக்கு ஏற்றவாறு ஊகமாக மனதில் உருவங்களை உருவகித்துக் கொள்ளவும், உறுதுணையாக இருந்திடவும்,சிறுகதைகளுக்கு அழகு சேர்க்கிறது ஜனாப் ஜமாலின் ஓவியங்கள்.சிறுகதைகள் மனிதர்களது மனங்களுக்குள் பல சிந்தனைகளைத் தருபவை. பல கதைகள் நமது வாழ்க்கையோடும், நமக்குத் தெரிந்தவர்கள் வாழ்க்கையோடும் ஒன்றிப் போவதை வாசிக்கும் போது உணர முடிகிறது. கதை மாந்தர்களை யதார்த்தத்துடன் வெளிப்படுத்திக் காட்டுவதுதான் கதாசிரியரின் பலம். அதை அருமையாக மொழிபெயர்ப்பு என்று எண்ண முடியாத வகையில் காட்டுகிறது தொகுப்பு. மலையாளமும், தமிழும் இலக்கியச்சோலையில் இணைந்து சித்திரங்களாய் சிந்தனையில் உலவுகிறது