- நிகழ் அய்க்கண்
இந்நூலுக்கு சி. பி, எம் மத்தியக்குழு உறுப்பினர் தோழர். கே. வரதராஜன் அணிந்துரை வழங்கியுள்ளார். இவர் தனது அணிந்துரையில், இந்து மதவெறி சிறுபான்மை மதத்தினருக்கு எதிராகச்செயல்படுவது மட்டுமல்ல, இந்துமதத்தைச்சார்ந்த பெரும்பகுதி மக்களான மலைவாழ் மக்கள், தலித் மக்கள், மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்கள் கணிசமானவர்களுக்கு எதிராக ‘சாதிய ஆதிக்கத்திற்கும் வழி வகுத்திருக்கிறது’என்கிறார்.
இந்நூலின் ஆசிரியர்களான அ. அன்வர் உசேன் மற்றும் வெ. பத்மனாபன் தனது முன்னுரையில்,மோடி ஆட்சியானது, ஒருபுறம் மதவெறியும்,இன்னொருபுறம் நவீன தாரளாமயமும் ஒன்றிணைந்த இரட்டை அபாயமாக அமைந்துள்ளது. எனவே மதச்சார்பின்மைக்கான போராட்டம் நவீன தாராளமயத்தை எதிர்க்கின்ற போராட்டத்துடன் ஒன்றிணைக்கும் தேவையுள்ளது என்கின்றனர்.இந்தியாவின் மத்திய காலத்தில், ’இந்துக்கோவில்களை இசுலாமிய மன்னர்கள் திட்டமிட்டு மத அடிப்படையில் அழித்தனர்.இதற்குப்பதிலடிகொடுப்பது மட்டுமின்றி,அழிக்கப்பட்ட கோவில்கள் மீட்கப்படவேண்டும்’ என்பது சங்பரிவாரத்தின் ஒற்றைப் பிரச்சாரமாக இருந்துவருகிறது. இக்கூற்றினை மறுக்கும் விதமாக ஆங்கில எழுத்தாளர்கள் ‘ரிச்சர்ட் டேவிஸ்’ மற்றும் ‘ரிச்சர்ட் ஈட்டன்’ ஆகிய இருவரும் மத்திய கால இந்தியாவில் என்ன நடந்தது என்பதனை விளக்கி, இரு கட்டுரைகள் எழுதி வெளியிட்டுள்ளனர்.
‘கடந்தகால வரலாற்று நிகழ்வை மதிப்பீடு செய்யும் பொழுது, ஒரே ஒரு ஆவணத்தை மட்டும் வைத்து முடிவுகளுக்கு வரக்கூடாது. வேறு ஆவணங்கள் உள்ளனவா என்பதை ஆய்வு செய்யவேண்டும்.அப்படி வேறு ஆவணங்கள் இருக்குமனால், அவற்றினையும் ஆய்வு செய்ய வேண்டும். அதுவே பொருத்தமான அறிவியல் அணுகுமுறையாக இருக்கும்’ எனும் அடிப்படையில்தான் மேற்கூறிய ஆங்கில எழுத்தாளர்களின் கட்டுரையை ஆசிரியர்கள் நூலாக்கியுள்ளனர். ஒவ்வொரு தலைப்பின் கீழும் நூலாசிரியர்கள் கூறியுள்ள முக்கியக்கருத்துக்கள் மட்டும் சுருக்கித்தரப்பட்டுள்ளன. இந்தியாவின் மத்திய காலத்தில், மதப்பூசல்கள் வெறும் இந்து மதத்திற்கும், இசுலாமிய மதத்திற்கும் இடையே மட்டும் நடக்கவில்லை. இந்திய அளவிலும், தமிழக அளவிலும் பவுத்தம் – சமணம், சைவம் – வைணவம் ஆகியவற்றிற்கிடையே உக்கிரமான சச்சரவுகள் நடந்து, பல கோவில்கள் அழிக்கப்பட்டது மட்டுமின்றி, மாற்றவும் செய்யப்பட்டன என்கின்றனர்.
கி.பி.835 ல் இலங்கை மீது பாண்டிய மன்னன் சிறி மாறா சிறி வல்லபா படையெடுக்கிறான். அப்போது இலங்கையை முதல் சேனா மன்னன் என்பவன் ஆண்டுவந்தான். போரில் பாண்டிய மன்னன் வெற்றிபெற்று, அரச கருவூலத்திலிருந்த அனைத்து விலை மதிப்பற்ற பொருட்களையும் கைப்பற்றிக்கொண்டு நாடு திரும்புகிறான். கைப்பற்றியவற்றில், கி.பி. 8 நூற்றாண்டில், இரண்டாம் மகிந்தாவால் 60,000 செப்புக்காசுகள் கொண்டு தாயாரிக்கப்பட்டு அபயகிரி எனும் புத்த மடத்தில் நிறுவப்பட்டிருந்த புத்தர் சிலையும் ஒன்று. இலங்கையின் முதலாம் சேனா மன்னன் இறந்தபிறகு, அவனது மகன் இரண்டாம் சேனா மன்னனுக்கு புத்தர் சிலை கொள்ளையடிக்கப்பட்ட விபரம் தெரியவருகிறது. அச்சமயத்தில் மதுரையை ஆண்டுவந்த மன்னன் சிறிமாறா சிறி வல்லபாவை தோற்கடிக்க, படை உதவிகேட்டு மதுரையைச்சேர்ந்த இரண்டாம் வரகுணவர்மன் எனும் இளவரசன் இலங்கைக்கு வருகிறான். இரண்டாம் சேனாவும், இரண்டாம் வரகுணவர்மனும் சேர்ந்து படையெடுத்து மதுரையை ஆண்ட மன்னனைத்தோற்கடித்து புத்தர் சிலையை மீட்டு இலங்கைக்கு கொண்டுவருகிறான் சேனா. புத்தர் சிலை வெறும் சிலை மட்டுமல்ல. அது சிங்களவர்கள் ஆட்சி அதிகாரத்தின் அரசியல் அடையாளமாகும். இதுவே மதுரை மன்னன் மீது போர் தொடுக்க காரணமாயிற்று,
சோழ மன்னன் வீரராசேந்திரன் சாளுக்கிய மன்னனை தோற்கடித்து,அவனிடமிருந்து கைப்பற்றியது ஆவணமாக்கப்பட்டுள்ளது. அது என்னவெனில், ’எதிரியின் மனைவிகள்,குடும்பக்கருவூலம்,குடைகள்,வலம்புரிச்சங்கு,போர்முரசு,சாளுக்கியர்களின் கொடி,குதிரைப்படை,யானைப்படை,சிவப்புக்கற்களால் செய்யப்பட்ட வெற்றிக்கிரிடம் உள்ளிட்டவைகளாகும்.
‘இரதங்கள்,குதிரைகள்,அரச குடைகள்,சிம்மாசனங்கள்,செல்வம் ,தானியங்கள்,கால் நடைகள்,பெண்கள்,அனைத்துவிதமான பொருட்கள்,அனைத்து உலோகங்கள் அனைத்தும் எவன் வெல்கிறானோ அவனுக்குச்சொந்தம்’ (மனுஸ்மிருதி 7.96 ) இதில் விலை உயர்ந்த பொருட்களான,நிலம்,தங்கம்,வெள்ளி முதலியன மன்னனுக்குச்சொந்தம். பிற பொருட்கள் யாவும் எந்தப்போர் வீரன் கொள்ளையடிக்கிறானோ அவனுக்குச்சொந்தமாகும். மனு உருவாக்கிய இத்தகைய சட்டத்தையே மன்னர்கள் ஆரம்பத்தில் பின்பற்றியிருக்கின்றனர் . இதிலிருந்து தோற்ற மன்னர்களின் சொத்தை கொள்ளையடிப்பது என்பது அனுமதிக்கப்பட்டிருக்கிறது என்பதுதான்.போரில் தோற்ற மன்னனின் ஆடம்பரப்பொருட்கள் மட்டுமல்ல , மன்னனின் மனைவிகள் மற்றும் இதரப்பெண்கள்,தோற்ற மன்னனின் கடவுள்கள் கூட வெற்றிபெற்ற மன்னனால் கொள்ளையடிக்கப்பட்டன. இப்படி தோற்ற மன்னனின் கடவுளை கைப்பற்றி தன்னுடையதாக மாற்றுவதன் மூலம் இரு நோக்கங்கள் நிறைவேறுகின்றன. 1. தோற்ற மன்னனை அந்தக்கடவுள் கைவிட்டுவிட்டார். 2. இனி அந்த மன்னனுக்கும் கடவுளுக்கும் எந்தத்தொடர்புமில்லை.
கி.பி.1045ல் சோழமன்னன் இராஜதிராஜன் சாளுக்கிய மன்னன் சோமேஸ்வரனை போரில் தோற்கடித்துவிட்டு சாளுக்கிய தலைநகரான,கல்யாணிக்குள் நுழைந்து அந்நகரையே அழிக்கிறான்.கோவிலும் சேர்ந்து எரிகிறது.அப்பபோது,சாளுக்கியமன்னனின் கோவிலில் இருந்த கறுப்புக்கல்லாலான ஒரு ‘வாயிற்காப்போன்’ சிலையை 500 மைல்கள் கொண்டுவந்து தனது தலைநகரமான கங்கைகொண்ட சோழபுரத்தில் நிறுவினான்.
ஒருமன்னன் இன்னொரு தேசத்தின் மீது போர் தொடுத்து அங்குள்ள பொருட்களை அல்லது கடவுள் சிலைகளை கைப்பற்றுவது என்பது அனுமதிக்கப்பட்ட ஒருவகை போர் நியதியாகும். மன்னன் தான் கொள்ளையடித்த பொருட்களை தன்னை ஆதரிப்பவர்களிடையே ‘எவர் எதைப்பெறுவதற்குத்தகுதியானவரோ அதன் அடிப்படையில் பகிர்ந்தளிக்க வேண்டும் என்பதையும் கடவுள்கள்,அறிவாளர்கள்,ஆசிரமங்கள்,நீதிமான்கள்,பொதுவிழாக்களுக்கு பகிர்ந்தளிக்கலாம் என்கிறது மனுதர்மம். 9 ஆம் நூற்றாண்டில், இராஷ்ட்ரகூடா அரசனான மூன்றாவது கோவிந்தா தென்னிந்தியா மீது படையெடுத்து, இப்பகுதியில் வலுவான செல்வாக்கோடு ஆண்டு கொண்டிருந்த பல்லவர்களைத் தோற்கடித்தான். இதனால் மிகவும் பயந்துபோன சிங்கள அரசன் எட்டாவது அகபோதி,தனது கடவுள் சிலைகள் இரண்டை கோவிந்தா மன்னனுக்கு சமர்ப்பணம் செய்கிறான்.இதன் மூலம் தானும் கோவிந்தாவின் ஆளுமைக்கு உட்பட்டவன் எனும் செய்தியை அம்மன்னனுக்கு அறிவித்தான். இந்தியாவின் மத்திய காலத்தில், இசுலாமிய மன்னர்கள் பல ஆயிரக்கணக்காண இந்துக்கோவில்களை சிதைத்தனர் என சங்பரிவாரங்கள் நம்புவதற்குப்பின்னே 1849 ல் ரிச்சர்ட் எலியட், மற்றும் ஜான் டாவ்சனால், ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்ட பெர்ஷியா ஆவணங்களே முக்கிய ஆதாரமாக இருக்கின்றது.
பெர்ஷிய ஆவணங்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்ததின் நோக்கமே, ‘பிரிட்டிஷாரின் ஆட்சியை இந்தியர்கள் வரவேற்கவும்,இசுலாமிய மன்னர்களின் ஆட்சியை சிறுமைப்படுத்தவேண்டும்’ என்பதுதான். மேலும், இந்த ஆவணமானது, மதத்திற்கும் அரசுக்கும் இருந்த உறவு எத்தகையது. அதில் கோவில்கள் அல்லது மசூதிகள் எத்தகைய அடையாளத்தைக்கொண்டிருந்தன என்பதைப்பற்றி அறியாமலே, மிகைப்படுத்தப்பட்ட எலியட்டின் மொழிபெயர்ப்பு இசுலாமிய மன்னர்களைபற்றி மட்டுமல்ல, அனைத்து இசுலாமியர்களைப்பற்றியும் மிகவும் தவறான புரிதலை உண்டாக்கியது. கி.பி 1055 காலகட்டமானது, டெல்லியில் சுல்தான்கள் அரசு அமைக்க முயற்சித்த காலமது. அச்சமயத்தில்,மத்தியப்பிரதேச மாநிலம் ’தர்’ எனும் இடத்திற்கருகே சுஃபி பிரிவைச்சேர்ந்த இசுலாமியர்கள் சுத்தம் செய்து தொழுகை செய்துவருகின்றனர். அப்போது, இந்துக்கள் சிலர் ஆயுதங்களுடன் அங்கு வந்து இசுலாமியர்களைத்தாக்கி கொன்றுவிட்டு அவ்விடத்தில் இந்துக்கடவுள்களின் சிலையை வைத்து வழிபடுகின்றனர். சில நாட்கள் கழித்து, அப்துல்ஷா சங்கல் என்பவன் அங்கு படையுடன் வந்து கோவில்களில் இருந்த சிலைகளை அழித்துவிட்டு மீண்டும் மசூதியாக மாற்றுகிறான்.இதனை அறிந்த பராமரமன்னன் இராஜா போஜா இசுலாமிற்கு மதம் மாறுகிறான். சில வருடங்களில் அப்துல்ஷா சங்கல் மரணமடைந்து போகவே, அவனுக்கும் அங்கு சமாதி எழுப்பப்படுகிறது. சில காலங்களுக்குப்பிறகு டெல்லியிலிருந்து அங்கு வந்த முகமது கில்ஜி தர்காவும், சமாதியும் பராமரிக்கப்படாததைக்கண்டு, அவ்விடத்தில் புதிதாக தர்காவையும், மசூதியையும் கட்டினான். இவ்வளவு விபரங்களும் பிரச்சனை ஏற்பட்டு, 400 வருடங்களுக்குப்பிறகே, அதாவது 1455ல்தான் பெர்ஷிய மொழியில் ஆவணப்படுத்தப்பட்டிருக்கிறது. உண்மை நிலவரம் இப்படியிருக்க, இந்துத்துவ வரலாற்றாசிரியர் கோயல் தனது நூலில் ‘1455 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட குறிப்பின்படி, ஒரு கோவில் இருந்ததாகவும் அது இடிக்கப்பட்டு இந்த தர்கா கட்டப்பட்டது’ என்கிறார்.
இந்தியாவில் சுல்தான்களின் ஆட்சி 1192 வாக்கில்தான் ஏற்பட்டது. இவர்களுக்குப்பின்னால், 16 ம் நூற்றாண்டில் தான் முகலாயர்களின் ஆட்சி ஏற்படுகிறது. இவர்கள் ஆதரித்தது அனைத்து மதங்களையும் ஆதரிக்கத்தயங்காத சுஃபி பிரிவு இசுலாம் ஆகும். இவர்கள் எதிரி மன்னனுடன் போரிடும்போது மன்னனுக்குச்சொந்தமான கோவில்களை மட்டுமே அழித்தனர். எதிரி மன்னர்களின் கோவில்களை அழிப்பது சுல்தான் அல்லது முகலாயர்கள் உருவாக்கிய அணுகுமுறையல்ல. மாறாக,அவர்களின் வருகைக்குமுன் இந்துமன்னர்களால் நடைமுறைப்படுத்தப்பட்டதுதான்.இந்தியாவில் இசுலாமிய அரசுகளை நிறுவிய சுல்தான் -முகலாய அரசுகள் மூன்று முக்கிய அம்சங்களில் கஜினிவாடி சுல்தான்களிடமிருந்து வேறுபட்டிருந்தனர். அது என்னவெனில், 1. கஜினிவாடி சுல்தான்கள் சன்னிப்பிரிவு இசுலாமியர். பின்னாளில் வந்த சுல்தான்கள் – முகலாயர்கள் சுஃபி பிரிவு இசுலாமியர்கள். 2. கஜினிவாடி சுல்தான்கள் செல்வங்களைக் கொள்ளையடிக்கவும், சன்னி பிரிவு இசுலாமை நிறுவவும், கோவில்களை அழிக்கவும் செய்தனர். ஆனால் பின்னால் வந்த சுல்தான்கள் – முகலாயர்கள் போரில் தோற்ற மன்னனின் அரசியல், அடையாளமாக உள்ள கோவிலை மட்டுமே அழித்தனர். 3. கஜினிவாடி இசுலாமியர்கள் அரசினை நிறுவவில்லை. மாறாக பின்னால் வந்த சுல்தான் – முகலாயர்கள் இங்கே அரசை நிறுவினர்.
போரின் போது, கோவில்களை அழிப்பதும், கொள்ளையடிப்பதும் இந்து மன்னர்களின் வேலையாக இருந்துள்ளது. 11 ஆம் நூற்றாண்டில், காஷ்மீரை ஆண்ட ஹர்ஷா எனும் மன்னன் கோவில்களை கொள்ளையடிப்பதற்கும் அழிப்பதற்கும் என தனியாக ஒரு அமைச்சரையே நியமித்திருக்கிறான். இவையெல்லாம் இசுலாமியர்கள் துருக்கியர்கள் இந்தியாவிற்கு வரும் முன்னரே இந்துமன்னர்களால் தொடர்ச்சியாக நடத்தப்பட்டதுதான். கடவுள், கோவில், அரசன், நிலம் ஆகியவற்றிற்கிடையே ஒரு நூதனமான பிணைப்பு இருந்தது. கடவுள் கோவிலில் சிலை வடிவில் இருக்கிறார். ஆகவே கோவிலும் கோவிலுக்குள் இருக்கும் கடவுளும் அரசனின் அரசியல் அதிகாரத்தை பறைசாற்றும் ஒரு வலிமையான அடையாளச்சின்னமாகும். கோவிலும் அந்தக்கடவுளும் இருக்கும்வரை அரசின் அதிகாரம் செல்லுபடியாகிறது.
போருக்குப்பிறகு, கோவில்கள் பிரச்சனையில் இசுலாமிய சுல்தான்கள் இந்திய மண்ணில் காலம்காலமாக என்ன பாரம்பரியம் கடைபிடிக்கப்பட்டதோ அதனையே பின்பற்றினர். கோவிலை இடிப்பது இசுலாத்திற்கு எதிரானது என்பதால், கோவில்கள் பாதுக்காக்கப்பட்டன. பல சமயங்களில் புதிய கோவில்கள் கட்டவும் அனுமதிக்கப்பட்டன. துக்ளக் சுல்தானின் இசுலாமிய சட்ட விளக்கப்படி, இசுலாமிய ஆட்சியில் ’ஜிஸ்யா’எனும் வரி கட்டுபவர்கள் எவர் ஒருவரும் கோவில்களைக் கட்டிக்கொள்ளலாம் என்பது நடைமுறையாக இருந்தது. கப்பம் கட்டும் மன்னர், போருக்கு முன்போ அல்லது பின்போ இசுலாமிய மன்னனிடம் சரணடைந்தால்,அவனது கோவில் அழிக்கப்படுவது இல்லை. சரணடைந்து கப்பம் செலுத்தும் மன்னன் பிற்காலத்தில் மன்னனுக்கு எதிராகத்திரும்பினால் கப்பம் கட்டுபவன் தண்டிக்கப்படுவது மட்டுமின்றி அவனது கோவிலும் தண்டனைக்குள்ளாகி அழிக்கப்பட்டன.
மத்திய காலத்தில், போரில் தோற்ற மன்னர்களின் கோவில்களை இந்து மன்னர்கள் அழித்தது போலவோ, அல்லது இசுலாமிய மன்னர்கள் கோவில்களை அழித்ததுபோலவோ மசூதிகள் அழிக்கப்படவில்லை. காரணம் சில குறிப்பிட்ட கோவில்கள் இந்து மன்னர்களின் ஆன்மீகச்சின்னம் மட்டுமல்ல, அவர்களின் ஆட்சியதிகாரத்தின் அரசியல் சின்னமாகவும் விளங்கின. அதே சமயத்தில், மசூதி என்பது அரசியல் சின்னமாக இருந்திருக்கவில்லை. மசூதி ஆன்மீகச்சின்னமாக விளங்கியது. மத்தியகால மன்னர்களிடையே குறிப்பாக கஜினி படையெடுப்புக்குப்பிறகு நடந்தபோர்கள் அனைத்தும் இசுலாமிய-இந்து மன்னர்களுக்குமிடையேதான் நடந்தது என சங்பரிவாரத்தினர் கூறுகின்றனர். அப்படிக்கூறிட முடியாது.அந்த காலகட்டத்தில் நடந்த போர்கள் மதத்தின் காரணத்தைவிட அரசியல் காரணங்களுக்காவே நடந்துள்ளன. இதற்கு மத முலாம் பூசுவது பொருத்தமாக இருக்காது. பெர்ஷிய துருக்கிய ஆவணங்களில் உள்ள பதிவுகள் கோவில் இடிப்புக்கள் பற்றி விளக்கமாகப்பேசுகின்றன. ஆனால், இசுலாமிய மன்னர்கள் நடைமுறைப்படுத்திய இந்து அரசியல் அல்லது ஆன்மீகச்செயல்களைப்பற்றி குறிப்பிடுவது இல்லை. உதாரணத்திற்கு, கங்கையின் புனிதத்தன்மையை போற்றிய இசுலாமிய மன்னர்களும் உண்டு. அதேபோல, விஜயநகர மன்னர்களும், சுல்தான் ஆட்சி நடைமுறைகளை பின்பற்றவும் செய்திருக்கின்றனர்.
கி.பி 1206ல் கோரி முகமது இங்கு ஆட்சியமைத்தபோது, பெண்கடவுள் லட்சுமி உருவம் பொறித்த நாணயத்தை வெளியிட்டான். தைமூர் எனும் இசுலாமிய மன்னனை எதிர்த்துப்போரிட்ட முகமது ஷா மன்னனுக்குப்பின்னே துணை நின்ற, பல இராஜபுத்திர குடும்பங்கள் தங்கள் உயிரை இழந்திருக்கின்றன. இதேபோல, அக்பரின் மகனுக்கு தன் மகளை திருமணம் செய்து தர விருப்பம் கொண்ட இந்து மன்னனும் இருந்திருக்கிறான். திப்பு சுல்தான் எப்போதும் சாதி மதம் பாராமல் திறமைக்கு ஏற்ற பதவி அளித்திருக்கிறான். இவையெல்லாம் இந்து-இசுலாம் மத ஒற்றுமையை பறைசாற்றிய நிகழ்வுகளாகும். சோமநாதர் கோவிலில் கஜினி முகமது அதன் விக்கிரகங்களை அழித்ததும், அக்கோவிலானது 11 ஆம் நூற்றாண்டிலிருந்து 17 ஆம் நூற்றாண்டுவரை திருப்பத்திரும்பக் கொள்ளையடிக்கப்பட்டதாகவும், கூறி இதனை இந்து மதத்திற்கு நேர்ந்த மிகப்பெரிய அவமானமாக சங்பரிவார்கள் கருதுகின்றனர். ஆனால், ஜைன மத ஆவணங்களிலோ, கஜினி சோமநாதர் கோவிலைத்தாக்கியது என்பது அன்றைய ஜைன சமூகத்தவரால் வெறுக்கத்தக்க நடவடிக்கையாகப் பார்க்கப்படவில்லை. மாறாக அவர்களது அழுத்தம் என்பது தங்களது மதம் சைவத்தைவிட உயர்ந்தது என்பதை நிலை நாட்டுவதிலேயே இருந்தது. 12 ஆம் நூற்றாண்டில், மற்றுமொரு ஜைன ஆவணமோ, ரக்சாசாக்கள், தயிதாக்கள், அசுரர்கள் ஆகிய உள்ளூர் அரசர்கள் கோவில்களை அழிப்பதும், பிராமணர்களையும், ரிஷிகளையும் துன்புறுத்திக் கொண்டிருந்ததாகவும், சாளுக்கிய மன்னன் இதனை எதிர்த்துப்போரிட்டன் என்கிறது. பாரதிய வித்யாபவன் கல்வி நிறுவனங்களை உருவாக்கிய கே.எம்.முன்ஷி எழுதிய ‘ஜெய் சோமநாத்’ எனும் குஜராத்தி நாவல்தான் இசுலாமியர்களுக்கு எதிராக ஆழமான பகைமையை இந்துக்கள் மத்தியில் உருவாக்கியது. கி.பி 3 ஆம் நூற்றாண்டுகளில் தமிழகத்தில் பவுத்தம், சமணம், மற்றும் சைவம், வைணவம் இவற்றிற்கிடையே போட்டியும், முரண்களும் நிலவின. சைவமும்-வைணவமும் பவுத்தம்- சமணத்திற்கு எதிராக கடும் வன்முறையை ஏவின. கி.பி 5 ஆம் நுற்றாண்டுகளில் பவுத்தம் வீழ்ச்சியடைந்து சமணம் செல்வாக்கு பெற்றது. அப்போது பல பவுத்தக்கோவில்கள் சமணக்கோவில்களாக மாறின. பிறகு சமணமும் விழ்ச்சியடைந்து சைவமும் – வைணவமும் எழுச்சிபெற்றன. இந்தியா முழுக்க இதுபோன்ற மாற்றங்கள் அக்காலத்தில் நிகழ்ந்தன.
இந்தியாவில் பன்மைக்கலாச்சாரத்தை ஒருமுகக்கலாச்சாரமாக மாற்றிட கடுமையான முயற்சிகள் நடக்கின்றன. குறிப்பாக மோடி அரசில் இந்த முயற்சிகள் பன்மடங்கு அதிகரித்துள்ளது. இந்த அரசானது ஒருபக்கம் தாராளமயக்கொள்கைகளை தீவிரமாக அமல்படுத்துகிறது. மறுபக்கம் பெரும்பான்மை மதவெறிக்கு பாதுகாவலனாக நடந்துகொள்கிறது. ’மதச்சார்பின்மை’யை காக்க புதிய உத்திகளும் வடிவங்களும் தேவைப்படுகின்றன.